நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர். தாலாட்டுப் பாடல்கள் என்ற தொகுதி தாயன்பின் வெளிப்பாடான தாலாட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 19 பக்கங்களில் கைக்கு அடக்கமான நூலாக காணப்படுகின்றது. 2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள்; தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்தவர். பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், ஒரு தாய் தன் பிள்ளைகளைத் தாலாட்டும் பாடல்களாக தனது தொகுதியை வெளியிட்டிருப்பது சிறப்பம்சமாகும். இத்தொகுதியை வெளியிட்ட பதிப்பகத்தார் ஷஇனிய ராகம், சுவை நயம் மற்றும் கருத்தாழமிக்க இவை தாயன்பில் ஒரு இன்ப அதிர்வை ஏற்படுத்தும். பிஞ்சு மனங்களில் பூரிப்பையும் கொண்டு வரும்| என்கின்றனர். கிராமிய மணம் கமழும் இந்தப் பாடல்கள் குழந்தைகளை ஆசிர்வதிப்பதாகவும், நற்செயல்களை விதைக்க கற்றுக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றன.
சில குழந்தைகள் எந்நேரமும் அழுத வண்ணமே இருப்பார்கள். பால் குடிக்கவும் மாட்டார்கள். தூங்கவும் மாட்டார்கள். அதை மையப்படுத்தி முதல் பாடலான (பக்கம் 01) தாலாட்டு இப்படி தொடங்கியிருக்கிறது.
தாலாட்டுது உன்னை
தாலாட்டுது
அமுதூட்டும் கை உன்னை
தாலாட்டுது
உறக்கமின்றி
அழுது நீயும் அடம்பிடிக்காதே!
இரக்கமின்றி தொல்லை எனக்கு
தந்து நில்லாதே!
இரக்கத்தோடு உறங்கிடுவாய் (பக்கம் 02) என்ற பாடல் அழகிய உவமானங்களைக் கொண்டுள்ளது. வாசிப்பதற்கு இனிமையாக காணப்படுகின்றது. கண்ணுறங்கும் நேரத்தில் களிப்பாக தூங்குவதற்காக ஒரு தாய் தன் செல்லக் குழந்தைக்கு பாடும் தாலாட்டு இது..
பாசமுள்ள பைங்கிளியே
பாடிவரும் வெண்புறாவே
ஆசை கொண்ட அருந்தவமே
என்னருகில் கண் துயில்வாய்!
மனங் கவர்ந்த மாங்கனியே
மகிழ்வு தரும் பூ மணியே
இணங்கி வந்த தாய் மடியில்
இரக்கத்தோடு உறங்கிடுவாய்!
பாசம் பொங்குது என்ற பாடல் (பக்கம் 05) வரிகள் ஓசை நயத்துடன் காணப்படுகின்றது. வாசிக்க இனிமை தரும் இந்த வரிகள் குழந்தையின் குறும்புத் தனத்தை ஞாபகப்படுத்துகின்றது.
தாலாட்டும் பிள்ளை ஒன்று
தாயின் முகம் பார்க்குது!
பாலூட்டு என்று சொல்லி
பாசம் பொங்க கேட்குது!
அன்னை மடி மீதினிலே
அன்பொழுக இருக்குது
கண்ணை மூடி துயில் கொண்டு
கலக்கமின்றி உறங்குது!
சுகம் காண தூங்கிடடி என்ற தாலாட்டுப் பாடல் (பக்கம் 07) நாம் குழந்தைகளாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தை மனதில் விதைக்கின்றது. தாய் தனது மகளுக்கு பாடும் அழகிய பாடலாக இது காணப்படுகின்து.
எந்தன் மடி அன்பு மடி - நீ
எனக்கு செல்வமடி
உந்தன் கண்ணிரண்டில் தூக்கமடி
கவலையெல்லாம் போகுமடி
கண்ணுறுங்கும் நேரமடி யுன்
கலக்கமெல்லாம் தீருமடி
என் மடியும் உனக்காக
என்றைக்குமே இருக்குமடி!
இவ்வாறு அழகிய பாடல்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம் வாசிப்போரைக் கவரும். ஆசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!
நூலின் பெயர் - தாலாட்டுப் பாடல்
நூலாசிரியர் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
வெளியீடு - பாத்திமா ருஷ்தா பதிப்பகம்
மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
www.poemrizna.blogspot.com
www.storyrizna.blogspot.com
www.vimarsanamrizna.blogspot.com