மிகவும் மகிழ்ச்சியான தருணம். நலவியல்துறை அதிலும் மனநலம் பற்றிய நூல் பற்றி குறிப்பு எழுதுவது. அதுவும் கடமையுணர்வும், நற்பண்புகளும், சமூக அக்கறையும் கொண்ட மருத்துவரான டொக்டர்.எஸ்.சிவதாஸ் அவர்களது நூல். நான்கு பதிப்புகள் கண்டு 5000 பிரதிகளுக்கு மேல் இந்த நூல் விற்பனையாகியிருப்பது மிகவும் பெருமைப்படக் கூடிய விடயமாகும். 500 பிரதிகள் அடித்தும் விற்க முடியாமல் பலரது நூல்கள் வீட்டு அலுமாரிகளை நிரப்பி கரையான அரித்து அழிந்து கொண்டிருக்கும் சூழலில் இது பெரிய சாதனை எனலாம். இந்த மனநல நூலுக்கான தேவை எவ்வளவு அவசியமாக எமது சமூகச் சூழலில் இருக்கிறது என்பதையும் நாம் உணர முடிகிறது. நானும் ஒரு மருத்துவராக இருப்பதுடன், நலவியல் எழுத்துத்துறையில் கடந்த 3 தசாப்தங்களாக இயங்கிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த நூலின் வரவு எனது மகிழ்ச்சியை பன்மடங்காக அதிகரிக்கிறது. இதற்குக் காரணம் இங்கு நலவியல் துறையில் எழுதுபவர்கள் குறைவு. அதுவும் அதற்கான தகுதி கொண்ட மருத்துவர்கள் எழுதுவது குறைவு. மருத்துவத்துடன் தொடர்பேயற்ற யார்யாரோ மருத்துவக் கட்டுரைகளை எழுதி பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பத்திரிகை ஆசிரியர்களை குறை கூறமுடியாது. மருத்துவர்கள் எழுதவதற்கு முன்வருவதில்லை. வேலைப்பளு என்பார்கள்.
இலங்கையில் நலவியல் எழுத்திற்கு நீண்ட வரலாறு உள்ளது. ஈழத்து தமிழ் மருத்துவ நூல் வெளியீடு என்பது நீண்ட பாரம்பரியம் கொண்டது. அதில் மேலைத் தேய மருத்துவத் துறை சார்ந்த நூல்கள் டொக்டர் கிறீனின் காலத்திலிருந்து ஆரம்பிக்கின்றன. இந் நூல்கள் இரண்டு வகையானவை. மருத்துவர்களுக்கும், தாதியர்களுக்குமான பாடப் புத்தகங்களை டாக்டர் கிறீனும் பின்னர் பேராசிரியர் சின்னத்தம்பியும் எழுதி வெளியிட்டார்கள். இது முதல் வகை.
இரண்டாவது வகை பொதுமக்களுக்கானது. அவர்களுக்கு நோய்கள் பற்றியும் அவற்றைத் தடுக்கும் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளிபதற்காக எழுதப்படுபவையாகும். இதற்கும் முன்னோடி டொக்டர் கிறீன் அவர்களேயாகும்.
அவர்களைத் தொடர்ந்து டொக்டர் இராசரத்தினம், பேராசிரியர் நந்தி, பேராசிரியர் சிவராஜா, டொக்டர்களான நாகநாதன். எம்.கே.முருகானந்தன், சுகுமார், பத்மலோஜினி, சீர்மாறன், சிவயோகன் போன்ற பலரும் நலவியல் துறை சார்ந்த நூல்களை எழுதியுள்ளார்கள். இப்பொழுது டொக்டர்களான இந்திரகுமார், நஜிமுதீன், இந்திரஜித் மற்றும் ச.முருகானந்தன் போன்ற பலரும் எழுதி வருகிறார்கள். இருந்தபோதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு மருத்துவர்கள் எழுதுவது குறைவாகவே இருக்கிறது.
இருந்தபோதும் மருத்துவத்துறையில் சுகாதார ஆலோசகர்களாக் பணியாற்றிய திரு.கா.வைத்தீஸ்வரன், கோபாலமூர்த்தி, திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்றவர்களும் நலவியல் இலக்கியத்திற்கு பங்களித்துள்ளார்கள் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.
இத்தகைய சூழலில் டொக்டர்.எஸ்.சிவதாஸ் அவர்கள் தனது கடுமையான மருத்துவ சமூகப் பணிகளுக்கிடையில் இந்த நூலை எழுதியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நேரமில்லை எனச் சாட்டுச் சொல்லிக் கொண்டிருக்காமல் இத்தகைய அரிய நூலை எமது சமூகத்திற்குத் தந்திருக்கிறார். காலத்தின் தேவையை இந்த நூல் பூர்த்தி செய்கிறது எனலாம்.
அது என்ன காலத்தின் தேவை?
எமது சமூகம் கடந்த 30 ஆண்டுகளாக சந்தித்த அவலங்களுக்கு கணக்கேயில்லை. யுத்தம் எம்மைத் தின்று தீர்த்தது. எமது வீடுகளில், எமது கிராமங்களில் எமது பிரதேசங்களில் சுதந்திரமாக வாழ முடியவில்லை. குண்டு வீச்சுகளும், ஷெல் அடிகளும் துப்பாக்கி வேட்டுகளும் எம்மைத் தினமும் துரத்தின. வீடுகளை இழந்தனர் பலர். கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம். குடிக்க நீரில்லை. உண்ண உணவில்லை. வெளிகளிலும் மரங்களிலின் கீழும் தஞ்சம் தேடினார். குண்டுகளும் ஷெல்களும் அங்கும் வந்தன. மரணம் விடாமல் துரத்தியது.
அங்கங்களை இழந்தனர் பலர். உறவுகளை இழந்தனர் இன்னமும் பலர். கண்ணெதிரே சூடுபட்டு விழுந்த உறவுகளை கைவிட்டு ஓட வேண்டிய நிலை. ஓரிடத்தில் தப்பி மற்றோரிடத்தில் வீழ்ந்தனர். காயமுற்றவரைக் காப்பாற்ற முடியவில்லை. உயிருக்காக போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு மருத்துவ உதவி பெற்றுக் கொடுக்க முடியாத னையறு நிலை. இறந்த உறவினர்களது உடலுக்கு அருகிருந்து கதறியழ முடியாது தம்முயிர் காக்க மீண்டும் ஓடினர். மனமாற முடியாது. மாண்டு விழுந்தவர்களின் இறுதிக் கிரிகைகளைச் செய்ய முடியாது மனம் பேதலித்தனர்.
இங்கு கூடியுள்ள நீங்களும் நாங்களும் கூட பல அவலங்களை அனுபவித்தவர்கள்தான். ஆனால் தீவிரத்தில் குறைவிருக்கலாம். பலர் அதிலிருந்து தப்பித்து வந்து தம்ளவில் ஓரளவு அமையான வாழ்வு வாழ்கின்றனர்.
ஆனால் எத்தனை ஆயிரம் உயிர்கள் இன்னமும் அந்த மண்ணில் அடைந்து கிடக்கின்றன. அந்த வேதனைகளைச் சுமந்து திரிகின்றன. பிறந்த மண்ணை விட்டுப் பிரிய மனமின்றி, தமது உறவுகள் புதையுண்ட மண்ணில் காலூன்றி நிற்கிறார்கள். இழப்புகளின் சோகத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். அந்த இழப்புக்களின் சுமைகளைச் சுமக்க முடியாது சுமந்து துன்புறகிறார்கள். அவர்களது துயர் துடைக்க வேண்டாமா? அவர்கள் சுமைகளை இறக்க வேண்டாமா. அவர்கள் மனத்தில் நம்பிக்கை விதைகளை விதைக்க வேண்டாமா? புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டாமா?
நூலசிரியருக்கு அந்த ஏக்கம் ஏற்பட்டிருக்கிறது.. 'இந்தக் குட்டித் தீவில்இன முரண்பாடுகளால் ஏற்பட்டுள்ள மூர்க்கமான போரின் காரணமாக எமது சந்ததியினருக்கு ஏற்படப் போகிற குறுகிய நீண்டகால பாதிப்புகள் பலப்பல. இனி வரும் சந்ததிகள் சில தசாப்த காலங்களுக்கு விழுமியங்களை இழந்துவிட்ட, வன்முறை நிரம்பிய சமூக அமைப்பிற்குள் வாழப்போகின்றன என்பது அச்சமூட்டும் இன்றைய யதார்த்தம்' என்கிறார்.
அதை மாற்றுவதற்கான ஒரு முயற்சிதான் இந்த நூலாக இருக்கிறது. அதனால்தான் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறது என்றேன்.
மக்களின் மனக் காயங்களைக் கிளறி அவற்றில் நச்சு எண்ணங்களை விதைத்து சீழ்ப்பிடித்து நிணம் சிந்த வைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அரசியலாளர்களும், பிற தேசங்களிலிருந்து நீலிக் கண்ணீர் வடிப்பவர்களும் இதில் முக்கியமானவர்கள். அவர்களைப் பொறுத்த வரையில் இந்தப் புண்கள் ஆறக் கூடாது. வடுக்கள் தீவிரமாகி தொடர்ந்து வலி தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அதில் அவர்கள் குளிர் காய்வார்கள்
ஆனால் சமூக அக்கறையும் மக்கள் நலத்தில் உளமார்ந்த அக்கறையும் கொண்ட மருத்துவர்களின் நோக்கம் வேறானது. நொந்து போன உள்ளங்களை ஆற்ற வேண்டும், பழைய நினைவுகளிலிருந்து அவர்களை மீட்க வேண்டும். பழையபடி இயல்பான வாழ்விற்கு அவர்களை திரும்பச் செய்ய வேண்டும். அதற்கான பணியை இந்த நூல் ஆரம்பித்து வைக்கிறது.
இந் நூல் ஒரு ஏட்டுச் சுரைக்காய் அல்ல. பாடப் புத்தகங்களிலும், கருத்தரங்குளிலும் கற்றிந்தவற்றை ஜீரணிக்காது வாந்தியெடுக்கும் நூல் அல்ல. உயிரச்சம் நிலவிய சூழல்களையும் கருத்தில் கொள்ளாது, அந்த மக்களிடையே நேரடியாகக் களத்தில் இறங்கி பணியாற்றிய அனுபவங்களிருந்து பெற்ற பாடங்கள் இவை. அவர்களுக்கு தேவையான அளவு, புரிகின்ற உதாரணங்களுடன், இலகுவான முறையில் அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழிநடையில் சிவதாஸ் சொல்லியிருக்கிறார்.
எமது சமூகத்தின் நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள், கலை பண்பாட்டுக் கோலங்கள், சமூக விழுமியங்கள் போன்றவற்றை உள்வாங்கி அவற்றின் அத்திவாரத்தில் மக்களின் உளப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் கட்டி எழுப்பப்படுகிறது. இது ஆசிரியரின் அனுபவ விரிவையும் சுயசிந்தனை ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. ஒரு உதாரணம். இளம் ப்pள்ளைகள் உள் ஒரு முகாமிற்கு மருந்துகளுடன் செல்கிறார். அவர்களுடன் பேசுகிறார். ஆவர்களும் மனம் விட்டுப் பேசிகிறார்கள். அவர்களுக்குத் தேவையானது மருந்துகள் அல்ல. அவர்கள் தமது மனப்பாரங்களை இறக்கி வைக்க ஒரு வெளி வேண்டும் என்பதை உணர்கிறார். வெள்ளைத் தாள்களும் தூரிகைகளும் வண்ண ஓவியங்களாக மாற அவர்களது துயர் மருந்துகள் இன்றி அடங்கிப் போனது.
இந்த நூல் எதைப் பேசுகிறது? எமது சமூகத்திற்கு நேர்ந்த இரு அவலங்கள் பற்றியும் அதனால் ஏற்பட்ட நெருக்கீடுகள், பாதிப்புகள் பற்றியும் அவற்றிலிருந்து மீளும் வழிகள் பற்றிச் சொல்கிறது. ஒன்று சுனாமி மற்றது போர். சுனாமி ஒரு குறுகிய நேரத்தில் எதிர்பாராத விதமாக வந்து தாக்கி அதன் பலனாக நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தியது. போர் நீண்ட காலமாக எமது வாழ்வின் ஒரு அங்கம் போலத் தொடர்ந்து நாளாந்தம் தொடர் அழிவுகளைத் தந்தது.
ஓன்று எதிர்பார்க்காதது. இயற்கையானது. மற்றது சுமத்தப்பட்டது. தொடர்கதையாகத் தொடர்ந்தது. இவற்றின் பாதிப்புகளை ஒன்று நோக்கியும், பிரித்தும் வேறுபடுத்தியும் ஆராய்கிறது இந்நூல். அதனால் பாதிகப்பட்வர்களுக்கான பரிகாரங்களை முன்நோக்கு இன்றி திறந்த மனத்துடன் பேசுகிறது.
நூல் பாகங்களாகப் பிரிகப்படவில்லை. இருந்தபோதும் அவை எனக்கு இரண்டு பாகங்களாகத் தெரிகின்றன.
எமது சமூகத்திற்கு ஏற்பட்ட நெருக்கீடுகள் பற்றிய பரந்த பார்வையை சில கட்டுரைகள் கொடுக்கின்றன. இதனை முதற் பாகம் எனக் கொள்ளலாம்.
ஆனால் இவை 'கண்ணீரைத் துடைத்திட வேண்டாமோ?' 'என்னுரை' எனவும், 'உங்களுடன் என்னுடைய நாட்குறிப்பின் சில பக்கங்கள்' வேறு ஆடைகள் போர்த்தி நின்றபடி நூலின் களத்தை சுட்டிக் காட்டுகின்றன. 'உங்களுடன் என்னுடைய நாட்குறிப்பின் சில பக்கங்கள்' என்பதில் ஆடி அமாவாசைத் துயர் தீர்த்தல், ஆழிப்பேரலை நினைவு மீட்டல், ஆழிப்பேரலையின் நூறாவது நாள் ஆகிய கட்டுரைகள் அடங்குகின்றன. இந்த முதற் பாகத்தைப் அனுபவத்திப் படிக்காமல் இரண்டாவது பாகத்திற்குள் நுழைவது சிரமமாயிருக்கும்.
இரண்டாவது பாகமானது சுனாமி, போர் ஆகிய அவலங்களால் ஏற்பட்ட நெருக்கீட்டை, அறிமுகம் என்ற அத்தியாத்துடன் ஆரம்பித்து உளப்பேரதிர்வு, சிக்கலான அவசர நிலை, மனநலமும் சமூக ஆதரவும், நெருக்கீட்டினை எதிர்கொள்ளல், எனப் பேசுகிறது.
நெருக்கீட்டினாலும், இழப்புகளாலும் மக்கள் பாதிப்புற்று எத்தகைய உள நோய்களுக்கு ஆளானார்கள் என்பதை தீவிர நெருக்கீட்டு எதிர்த் தாக்கம், நெருக்கீட்டிற்கு பிற்பட்ட மனவடு நோய், இழவிரக்கம், மெய்ப்பாடு, பதகளிப்பு, மனச்;சோர்வு, ஆகிய கட்டுரைகளில் காணலாம்.
இவற்றை எதிர் கொள்வது எப்படி என்பதை சிறுவர்களைப் பராபரித்தல், உதவும் வழி முறைகள், உளவளத் துணை, அரங்கச் செயற்பாடு, சாந்த வழி முறைகள் என்ற தலைப்புகளில் சொல்கிறார்.
மிக அழகான மொழில் நூல் சொல்லப்பட்டிருக்கிறது. நூலாசிரியரில் உறைந்திருக்கும் கவியுள்ளம் பல வசனங்களில் அற்புதமாக வெளிப்படுகிறது. சுனாமி வந்து தாக்கியது பற்றிச் சொல்வது ஒரு நல்ல உதாரணம். 'கரையில் நுரை தள்ளி சதா முனகிடும் கடலலைகள் வெகுண்டெழுந்தது. எங்கள் கடல் சார்ந்த பூமிமீது பேயுருக் கொண்டன.... நிர்க்கதிக்கு உள்ளானோம். எவ்வளவு அழகான சொற்களில் சொல்லியிருக்கிறார்.
பல நல்ல தமிழ்ச் சொற்களை ஆங்காங்கே இயல்பாகத் தெளித்துச் சென்றுள்ளார். நபுதாரர் என்ற சொல்லை நாம் பயன்படுத்துவது குறைவு. போர் பல ஆண்களைக் காவு கொண்டது. பெண்களை விதவையாக்கியது. ஆனால் சுனாமியானது பெண்களை அள்ளிச் சென்று ஆண்களை நபுதாரர்களானார்கள் என்று சொல்கிறார்.
நூல் முழுவதும் எமது மக்களது துயரங்களுக்கான தீர்வுகள் மேலை நாட்டு நூல்களிலிருந்து இறக்குமதியாகக் கூடாது. எமது கலை பண்பாட்டு பாரம்பரியங்களிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சொல்லப்பட்டிருக்கிறது. அதை வெறும் வாய்சொல்லாகப் பேசிக் கொண்டிருக்காது செயலில் காட்டியதை பல சம்பவங்கள் ஊடாக காணக் கிடைக்கிறது. ஆடி அமாவாசை தினத்தை அனுஸ்டிப்பதன் மூலமும் தீபத்தை எற்றியும் தங்கள் மனக்காயங்களை ஆற்றும் உத்தியை செயற்படுத்தியது நல்ல விடயமாகும்.........
பல ஆழமான விடயங்களை அவர் தனது அனுபவத்தில் கண்ட உதாரணங்கள் ஊடாக விளக்குவது மிகச் சிறந்த எழுத்து முறையாக்கம் என எண்ணுகிறேன். புகைப்படங்கள் பொருத்தமான இடங்களில் இடம் பெறுகின்றன. கலையுணர்ச்சியுடன் எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவ்வாறு பாராட்ட முடியாது மனம் அலைக்கழிகிறது. ஏனெனில் அவை ஒவ்வொன்றும் சோகக் கதைகளைப் பேசி நிற்கின்றன. இருந்தபோதும் நம்பிக்கை வரட்சியைக் கடத்துபவையல்ல. இழந்த வாழ்விலிருந்து விலகி, நம்பிக்கையோடு புது அத்தியாத்தை எழுத முற்படுபவையாக இருப்பது குறிப்படத்தக்கது.
புதிய பதிப்பின் அட்டைப்படத்தில் ஒரு இளம் பெண் சைக்கிளில் முன்நோக்கிச் செல்கிறாள். அவளுடன் முன் பாரில் ஒன்று பின் கரியரில் ஒன்று என இரு குழந்தைகளைச் சுமந்து செல்கிறது சைக்கிள். உற்றுப் பார்த்தால் அவளது வெற்றியில் திருநீறு பூசப்பட்டிருக்கிறது. குங்குமப் பொட்டில்லை. இந்த நூல் சொல்லும் செய்தியை விளக்க இதைவிட சிறப்பான புகைப்படம் இருக்க முடியாது.
ஆம் போர் எமது வாலிபர்களை விழுங்கிவிட்டது. விழுங்கப்பட்ட அவர்களில் பலர் பிள்ளைகள், கணவன், தந்தை, குடும்பத்தைக் காக்கும் குடும்பத் தலைவர்கள் எனப் பல விதமானவர்களாக இருந்தார்கள். வீழ்ந்த அவர்களது பொறுப்புகள் இப்பொழுது இந்தப் பெண்களில் சுமத்தப்பட்டிருக்கின்றன. அவர்களில் பலரும் கண்ணீர் விட்டுக் கதறி மூலைக்குள் முடங்கிவிடவில்லை. நம்பிக்கையோடு தமது பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். இதற்கு இந்த நூலும் நூலசிரியரின் களச் செயற்பாடுகளும் உதவியிருப்பதை உணர முடிகிறது.
இதேபோல 3ம் பதிப்பின் அடடைப் படத்திலும் ஒரு பெண் தனது குழந்தைகளுடன் இருக்கிறாள். அவர்களுக்காகச் சமையல் செய்து கொண்டிருக்கிறாள். அங்கும் கணவன் இல்லை. பெண்கள் தங்கள் வகிபாகங்களை மாற்றும் அளவிற்கு துணிந்திருக்கிறார்கள். இவை இந்த நூலின் உள்ளடக்கத்தைப் போலவே சமூகத்திற்கு நம்பிக்கையை ஊட்டுவனவாக இருப்பது மகிழ்சியாக இருக்கிறது.
வழமைக்குத் திரும்புவதை நூலசிரியர் பல இடங்களில் வலியுறுத்துகிறார். மிக இயல்பான நடைமுறைச் சாத்தியமான முறையாகத் தோன்றியது. முகாம்களுக்கும், வாட்டுகளுக்குள்ளும் அடைத்து வைக்காது அவர்களை இயல்பு வாழ்விற்கு தூண்டுவது எவ்வளவு முக்கியமானது என்பதை தோரணம் கட்டும் நிகழ்வை உதாரணம் காட்டிச் சொன்னது சிறப்பாக இருந்தது.
அதேபோல முற்றிலும் புதிய அந்நியமான இடத்தில் குடியமர்த்தும்போது அவர்களுக்கான சமூக ஆதரவு இல்லாதல் போவது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் நூல் ஊடாக உணர முடிந்தது.
நலமுடன் என்ற நூலின் தலைப்பே அருமையானது. அனைத்தையும் இழந்து ஏதிலிகளாக இருக்கும் மக்கள் எப்படி நலமுடன் இருக்க முடியும் என்று ஏங்காமல் அவர்களும் நலத்துடன் வாழ வேண்டும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை நூலின் தலைப்பு கொடுக்கிறது. (நீரிழிவுடன் நலமே வாழுங்கள் என நான் ஒரு நூலுக்குத் தலைப்பிட்டபோது எழுந்த விமர்சனங்கள் நிழலாடுகின்றன)
நூலின் இறுதியாக ஒரு கவிதையுடன் நிறைவுறுகிறது. மிக அருமையான கவிதை. குறியீட்டுப் பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது.
சுழன்றடித்த காட்டில் சிக்கி
தலைகீழாக வீழ்ந்தது பட்டம்.
துள்ளிச் சென்று மீட்டெடுத்தனர்
பள்ளிச் சிறார்கள்
காற்றுக்கு எதிராய் தூக்கி இழுத்து
மீள முயன்றனர்.. மீள முயன்றனர் ..
உயர எழுந்து
வட்டமடித்து நூலறுந்து
குத்துக் கரணமிட்டு
கொடியில் சிக்கியது பட்டம்.
நூல்கட்டையை மீளக் கொணர்ந்தனர்
இன்னொரு நாளில்
புதிய காற்றாடி காற்றைக் கிழித்து
மீளவும் எழும் என நம்பினர்.
இந்தக் கவிதையின் பொருள்தான் இந்த நூல் விட்டுச் செல்கின்ற ஒட்டுமொத்தமான அடிப்படைச் செய்தி என்பதில் சந்தேகம் இல்லை. இது மூன்றாம் பதிப்பிலிருந்த கவிதை. புதிய பதிப்பில் இக்கவிiயைக் காணவில்லை.
ஆனால் இந்தப் புதிய பதிப்பின் முதற் பக்கத்தில் ஒரு ஓவியம் இடம் பெற்றுள்ளது. இடம் பெயர்ந்த ஒரு சிறுமியால் வரையப்பட்ட ஓவியம் அதுவாகும். இந்த ஒவியத்தில் ஒரு கோழி தனது சிறகுகளை விரித்து தனது குஞ்ஞகளுக்கு அதற்குள் அடைக்கலம் கொடுத்துப் பாதுகாக்கிறது.
யாரிடமிருந்து பாதுகாக்கிறது?
கொடூரம் மிக்க இரு காட்டு விலங்குகளின் வால்கள் குறியீடாகக் காட்டப்படுள்ளன.
ஆம் எம் காட்டிலிருந்தும் அயற் காட்டிலிருமிருந்தும் வந்த விலங்குளின் வால்கள்தான் அவை. அவர்களால் காவு கொள்ளப்பட்ட ஆயிரக்காணக்கான இளம் பிராயத்தினரிரை அந்த ஓவியம் நினைவூட்டுகிறது. தம் குஞ்சுகளை அவற்றிலிருந்து பாதுகாக்க முடியாது பறிகொடுத்த தாய்மார் சிந்திய கண்ணீருக்கு அளவேயில்லை. ஆற்றுவாரும் தேற்றுவவரும் இன்றி கண்ணீர்க கடலில் திணறிக் கொண்டிருக்கின்றன அந்தத் தாயுள்ளங்கள்.
நோயைக் குணமாற்றும் ஆற்றல் நோயாளிகளிடமே இருக்கிறது அதற்கான வளங்கள் நோயாளிகளிடமே இருக்கின்றன என்பதைக் கற்றுத் தந்தார் என டொக்கர் சிவதாஸ் பற்றி டொக்டர் உமாகரன் ஓரிடத்தில் சொன்னார். உண்மையில் அதற்கான அடையாளங்களை நாம் நூல் முழவதும் காணக் கூடியதாக இருக்கிறது. அந்த ஆற்றலை; மனோவியல் ரீதியாக மக்களுக்கு இந்த நூல் முயல்கிறது.
இழப்புகளும் சோகங்களும் எமது சமூகத்தை மீளமுடியா புதைகுழியில் விட்டுச் சென்றது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது. ஆனால் அதுவே வாழ்வின் இறுதி அத்தியாயம் அல்ல. இன்னுமொரு புதிய வாழ்வு, சுபிட்சமும், மகிழ்ச்சியும் கொண்ட வாழ்வு எமக்காக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை பட்டம் இழந்த அந்தச் சிறார்களிடம் இருப்பதுபோல எமது சமூகத்திடமும் விதைக்கப்பட வேண்டும் துளிர் விட்டு வளர வேண்டும்.
அதற்கான முதற் கல்லை அசைக்கும் பணியை டொக்டர் சிவதாஸ் அவர்கள் ஆரம்பித்திருக்கிறார். அதற்கு அந்தச் சமூகத்தின் ஆதரவும் ஓத்துழைப்பும் கிடைத்திருப்பதை அவரது நூலினூடாக உணர்கிறோம். ஆனால் அந்தப் பணி அவருக்கானது மட்டுமல்ல. எங்கள் ஒவ்வொருவருக்குமானது. நாம் ஒவ்வொருவரும் எமது சமூகத்தின் நலத்திற்கு எதிரான தடைக்கற்களை அகற்ற உறுதுணையாக இருந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். தனிபட்ட மனிதர்களாக மட்டுமின்றி குழுக்களாகவும் சமூகமாகவும் பணியாற்றி களம் இறங்க வேண்டும். எம்சமூகத்தின் துயர் துடைக்க பல்கரங்கள் இணைந்த பெருவலுவுடன் எழவேண்டும். அதைத்தான் நூலசிரியர் வலியுறுத்துகிறார்.
Glossary இணைப்பது அவசியம்
உப தலையங்கங்கள் இடப்பட்டிருந்தால் வாசிப்பிற்கு இலகுவாக இருக்கும்
அவரது கனவுகள் நிறைவேற வேண்டும். அவரது பணிகள் சிறக்க வேண்டும். அவர் யாசிக்கும் மனநலம் நிறைந்த சமூகம் இங்கு உருவாக வேண்டும். அதில் அவர் மனம் நிறைய வேண்டும் என வாழ்த்துகிறேன். மேலும் பல நூல்கள் அவர் தருவது எமது சமூகத்தின் தேவையாக இருக்கிறது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.