உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
உனக்கான பாடல் என்ற கவிதைத் தொகுதி சரா பதிப்பகத்தினூடாக கவிஞர் எஸ். ரபீக் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 60 பக்கங்களை உள்ளடக்கி அழகிய அட்டைப் படத்துடன் இத்தொகுதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலி மற்றும் பிறை எப். எம். ஆகியவற்றில் அறிவிப்பாளராகக் கடமையாற்றும் இந்த நூலாசிரியர் ஏற்கனவே அவளில்லாத குளிர், எழுத மறந்த கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இத்தொகுதியில் காதல் கவிதைகளே முழுவதுமாய் இடம்பிடித்துள்ளன. மறைந்த வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் ஷஷஇலங்கை மணித் திருநாட்டின் இளம் கவிஞர்களில் ஒருவர் எஸ். ரபீக். ஆனால் நாடறிந்தவர். கடலில் முத்துக் குளிப்பது சுகம். அந்த சுகத்தை இவரின் கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. புதுமையும், மென்மையும் இணைந்து நிற்கும் இவரது கவிதைகளை ரசித்து மகிழ்ந்தவள் நான். புதுக் கவிதையின் தாத்தா மு. மேத்தாவுக்கே பிடித்திருக்கிறது இவரது கவிதைகள்|| என்கிறார்.

கவிஞர் நிந்தவூர் ஷிப்லியின் தற்கொலைக் குறிப்பு என்ற கவிதைத் தொகுதி இந்தியாவின் பிளின்ட் பதிப்பகத்தினரால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இவர் 2002 இல் சொட்டும் மலர்கள், 2006 இல் விடியலின் விலாசம், 2008 இல் நிழல் தேடும் கால்கள் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டவர். 77 பக்கங்களில் வெளிந்துள்ள இந்த நூலானது போர்ச் சூழல் கால கவிதைகளால் நிறைந்திருக்கிறது. யுத்தம் விழுங்கிய அத்தனை அப்பாவி உயிர்களுக்காகவுமே இந்த நூலைக் கவிஞர் சமர்ப்பணம் செய்துள்ளார். பதிப்பாளர் உரையில் ஜாபர் ஷாதிக் அவர்கள் எத்தகைய வீரனும் வெல்ல முடியாத ஒன்றான மரணத்தின் கடைசி நுனிவரை சென்று யாரும் அனுபவித்துவிடாத ஒன்றை அனுபவித்திருப்பாரோ என்கிறளவு நினைக்க வைக்கிறது ஷிப்லியின் வரிகள் என்று குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சேவியர் ஈழம், தமிழன் எனும் வார்த்தைகள் அரசியலுக்காக வெட்டப்படும் சதுரங்கக் காய்கள் எனும் நிலையில் தமிழக (இந்தியா) வீதிகள் வியூகங்கள் வகுத்துக்கொண்டிருக்கின்றன. அந்த வீதியின் அறைகளில் இருந்துகொண்டு ஷிப்லியின் கவிதைப் பக்கங்களை புரட்டப் புரட்ட விரல்களின் நுனிகளிலும் உணர முடிகிறது வழியும் குருதியின் பிசுபிசுப்பை. துயரத்தின் தெருக்களின் வழியாக அலைந்து திரியும் ஒரு பிரமை பிடித்தவனின் மனநிலைக்குள் என்னை இறக்கி வைத்தது ஷிப்லியின் கவிதைத் தொகுப்பு என்றால் அதில் எள்ளளவும் மிகையில்லை என்கிறார். அதே போல் ராஜகவி றாஹிலும் விழிகளில் குருதி வடிய வைக்கும் கவிதைகள் என்ற தனது கருத்தை துள்ளியமாக பதியவைத்துள்ளார். இதே பாணியிலான கருத்தை ஆணியடித்தாற் போல வெற்றி வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் ஏ.ஆர்.வீ. லோஷன் அவர்களும் முன்வைத்துள்ளார்.
கிழக்கு மாகாணம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் கவிஞர் சதாசிவம் மதன் தனது கன்னிப் படைப்பாக உயிரோவியம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். கவிஞன் என்ற காலாண்டுச் சஞ்சிகையின் ஆசிரியரே இந்த நூலாசிரியராவார். அழகான அட்டைப் படத்துடன் 61 பக்கங்களில் அன்னை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்தக் கவிதைத் தொகுதியானது பொதுவானவை, இயற்கை, பாவம், காதல், நட்பு, கற்பனை ஆகிய ஆறு தலைப்புக்களில் 47 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. யுத்தத்தில் உறவிழந்த உறவுகளுக்கே சதாசிவம் மதன் தனது இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார். இந்த நூலுக்கான அணிந்துரையை கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த செ. யோகராசாவும், ஆசியுரையை அன்புறு சிந்தையன் சிவயோகச் செல்வன் த. சாம்பசிவம் அவர்களும் வழங்கியுள்ளார்கள். செ. யோகராசா அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
- Translation of Subrabharathimanian’s Tamil Novel CHAYATHIRAI by P.Raja. Pub: B.R.Publishing Corporation [ A Division of BRPC (India) ltd. 4222/1, Ansari Road, Darya Ganj, New Delhi-110002. Ed; Ppxiv+196; Price : Rs.200. -
மலரா என்ற புனைப் பெயரைக் கொண்ட திருமதி. புஷ்பலதா லோகநாதன் கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்தவர். வைத்தியரான இவர் புதிய இலைகளால் ஆதல் என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியீடு செய்துள்ளார். இந்தக் கவிதைத் தொகுதி மூலம் ஈழத்துப் பெண் கவிஞர் வரிசையில் தனக்கென்றொரு காத்திரமான இடத்தைப் பிடித்துக்கொள்கிறார். தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் 108 பக்கங்களில் இந்த நூல் வெளிவந்துள்ளது. பொதுவாக தனது தகப்பனின் அதிகாரத்திலோ, சகோதரர்களின் அடக்கு முறையிலோ அல்லது கைப்பிடித்த கணவனின் கட்டுப்பாட்டிலோ சிக்கிக்கொள்ளாமல் அன்பான குடும்பத்தில் அரவணைப்புடன் வாழ்ந்த பெண்களுக்கே மென்மை இழையோடும் கவிதைகளையும், ஆண்களின் பெருமைகளைச் சொல்லும் படைப்புக்களையும் எழுத முடிகிறது. அந்த வகையில் மலராவும் அடக்குமுறைகளுக்கு அகப்படாமல் ஆனந்தமாக வாழ்ந்த காரணத்தால் முழுக்க முழுக்க பெண்மையின் மென்மையான உணர்வுகளைத் துல்லியமாக இத்தொகுப்பில் பிரதிபலித்திருக்கிறார். உமா வரதராஜன் தனதுரையில் எத்தனை காலந்தான் ஒரு குயில் தன் குரலை ஒளித்துக்கொண்டிருக்கும்? உரிய காலந் தப்பி மலராவின் கவிதைகள் இப்போது வெளியாகின்றன. உரத்த குரல் எவற்றிலுமில்லை. காதோரம் அவை கிசுகிசுக்கின்றன. காற்று இழுத்து வந்து நம் முகத்தில் சேர்க்கின்ற பூமழைத் தூறல்கள் அவை என்று குறிப்பிடுகிறார்.
மொழி பெயர்ப்புத் துறையில் ஈடுபடுவது என்பது எல்லோராலும் செய்யக் கூடிய காரியமன்னு. அதற்கு பாரியதொரு அறிவு இருக்க வேண்டும். அந்த வகையில் துணிச்சலாக இந்த நிலம் எனது என்ற காத்திரமானதொரு மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியை கெக்கிறாவயிலிருந்து திருமதி. ஸுலைஹா அவர்கள் வெளியீடு செய்திருக்கிறார். பயிற்றப்பட்ட ஆங்கில ஆசியரான கெக்கிறாவ ஸுலைஹா தற்போது மரதன்கடவல அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றுகிறார். ஆங்கிலத்தைத் தேடிப் படிப்பதில் தணியாத தாகம் கொண்டவர். இவர் ஏற்கனவே 2009 இல் பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும் - மொழி பெயர்ப்புக் கவிதைகள் (2009 சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது), 2010 இல் அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு - மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் (2010 இல் இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழ்), 2012 வானம்பாடியும் ரோஜாவும் - மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் ஆகிய மொழிபெயர்ப்புத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். பெண் படைப்பாளியான கெக்கிறாவ ஸஹானாவின் சகோதரியே இந்த நூலாசிரியர்.
மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் வடிவம் கவிதை ஆனாலும் அது தோன்றுகின்ற கால அரசியல் சூழ்நிலைகள் அதன் பாடு பொருளை தீர்மானிக்கிறது. பல செய்திகளை உணர்வு கொந்தளிப்புகளை மெளனமாகப் பேச வேண்டிய காலத்தில் எழுந்த கவிதைகள் இவை. எனவெ சொல்ல நினைத்ததெல்லாம் சொல்லி விடாது சொல்ல முடிந்ததைக்கொண்டு நிறைய சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் துஸ்யந்தனுக்கு அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை காட்டுகிறது மொழிபெயர்கப்படாத மெளனனங்கள். கவிஞருடைய இளமைக்காலம் பெரும்பாலும் போர்ச்சூழலுக்குள் நகர்ந்திருக்கிறது இறப்பு பற்றிய அச்சமும் வாழ்வின் நிச்சயமின்மையும் எதிர்காலம் சிதைந்து போயுள்ளதென்ற விரக்தியும் .இவரையொத்த இளைஞர்களைப்போலவே இவருக்கும் உரியதாயிற்று .இதுவே இவரது கவிதைகளைப் பிரசவித்தன. தமிழ் சமுகத்தின் மீது திணிக்கப்பட்ட போர் அவலங்களும் பாதிப்புக்களும் இவரது கவிதைகளில் பதிவு செய்யபடுகின்றதென்றவகையில் இத்தொகுதி ஒரு வரலாறாகிறது. இத்தகைய பின் புலத்தில் இவரது கவிதைகள் அதனுடைய மொழி அரசியல் பற்றி கவிதைகள் ஊடாக நோக்குதல் பொருத்தமென நினைக்கிறேன்.
யூ.எல். ஆதம்பாவா எழுதிய குருதி தோய்ந்த காலம் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி அண்மையில் மெற்றோ பொலிற்றன் கல்லூரியினால் வெளியிடப்பட்டது. இது இவரது ஐந்தாவது நூல் வெளியீடாகும். 1999 இல் கலாபூஷணம் விருது பெற்றுள்ள இவர் ஏற்கனவே நாங்கள் மனித இனம் (1991 உருவகக் கதைத் தொகுதி), காணிக்கை (1997 சிறுகதைத் தொகுதி), சாணையோடு வந்தது (2007 சிறுகதைத் தொகுதி), பகலில் ஒரு சூரியனின் அஸ்தமனம் (2003 மர்கூம் எம்.எச்.எம். அஷ்ரப் பற்றிய இரங்கற் கவிதைத் தொகுப்பு) ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறார். 63 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 35 கவிதைகள் இடம்பெற்று இருக்கின்றன. மெற்றோ பொலிற்றன் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் தனது வெளியீட்டுரையில் படைப்பிலக்கியத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கின்ற மூத்த எழுத்தாளர் யூ.எல். ஆதம்பாவாவை கௌரவிக்கும் வகையிலே அவரின் இந்நூலை வெளிக்கொணர்கிறேன். இது இக்கல்லூரியின் தலைவர் என்ற வகையில் எனக்கு மிகவும் திருப்தியையும் மனநிறைவையும் தருகிறது. கலைத் துறையின் மேம்பாட்டிற்கு இவர் ஆற்றிய சேவைக்காக தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் கௌரவிப்புக்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார் என்று குறிப்பிடுகிறார். 
உலகை அசைத்துப் பார்க்கிற படைப்புக்கள் நமக்கு அவசியம் தேவையாக இருக்கின்றது. மறுக்க முடியாத படி தொடர்ச்சியான அவலங்களை காலம் நமக்கு தந்து கொண்டிருகின்றது. முடிவில்லாத சோகத்திலும் ஓரளவேனும் ஒத்தடம் கொடுப்பது போல ஈழத்து படைப்புக்கள் அமைந்துவிடுகின்றன. மஹாகவி போன்றோரால் தொடக்கி வைக்கப்பட்ட மண்,மக்கள் சார்ந்து சிந்திக்க வைக்கிற கவிதைகளை வாசிக்க வைத்திருபதற்காக காலத்திற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இடப்பெயர்ச்சி, யுத்த அவலம்,இனசம்ஹாரங்கள் என தொடர்கின்ற நமது ரண களப் பயணத்தில் திருக்குமாரன் வரை தம் படைப்புக்களூடே மறைக்கப்பட்ட, மறைக்கப்படமுடியாத தடங்களை சொல்லிவைக்கிறார்கள். புதுவையின் உச்சஸ்தாயிலமைந்த கவிதையிலிருந்து மாறுபட்டதாக கருணாகரன், சித்தாந்தன், துவாரகன், தீபச்செல்வன், அமரதாஸ், முல்லைக்கோணேஸ், ஆதிலட்சுமி, கப்டன். வானதி, மேஜர்.பாரதி, நிலாந்தன், போஸ், அகிலன், யோ.கர்ணன் எனப் பலர் போர் அவலங்களை சொல்லி வந்திருக்கிறார்கள். வித்தியாசமான வடிவமைப்பில் ஆழமாக மனதில் படியும் வண்ணம் எழுதுபவர்கள் வரிசையில் திருக்குமாரனும் இடம்பெறுகிறார்.
எழுத்துத் துறையில் ஆரம்ப நிலையில் இருக்கும் கீதா கணேஸ் தமிழ் இலக்கியப்பரப்பில் தன் கதைகள் மூலம் ஆழமான தடத்தை பதித்திருக்கிறார். அவரது கதைத்தொகுப்பை வாசித்து முடிந்ததும் என்மனதில் எழுந்த இக்கருத்து மிகையானதல்ல.யாழ்ப்பாணத்திற்கு தெற்கே உள்ள வேலணையில் சிற்பனை எனும் ஊரில் பிறந்த கீதா கணேஸ் தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வருகிறார் யாழ் பல்கலைக்கழகப்பட்டதாரியான இவரது எத்தனங்கள் என்ற சிறு கதைதொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது ஈழத்து இலக்கியப்பரப்பில் ஒரு வறட்சியான போக்குநிலை அவதானிக்கப்படுகின்ற சூழலில் கீதாகணேஸின் கதைகள் வெளிவந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. போர்ச்சூழல் ஓய்ந்து விட்ட நிலையிலும் தமிழ் சமூகத்தில் காணப்படுகின்ற போலித்தனங்கள் மூட நம்பிக்கைகள் வக்கிரங்களுக்கெதிராக போராட வேண்டிய நிலையில் தமிழ் சமூகம் உள்ளதை இவரது கதைகள் சுட்டி நிற்கின்றன. தான் வாழ்ந்த சமூகத்தில் காணப்படுகின்ற சமூக போலித்னங்களுக்கெதிராக பகுத்தறிவு குரலாக ஒலிக்கின்ற இவரது கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு செய்தியை எமக்குசொல்கின்றன. இருப்பினும் என்னை மிகவும் கவர்ந்த கதைகள் பற்றி இங்கு குறிப்பிட விழைகிறேன்.
உலகில் எங்கெங்கு அடக்கப்பட்ட இனக்குழுமங்கள் தொடர்ந்தும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனவோ அங்கெல்லாம் ‘அதிகாரம்’ தன் கரங்களை அகல விரித்து வைத்திருக்கின்றது. இந்தத் தொடர் ஓட்டத்தில்தான் அகதிவாழ்வும் அடையாளஅழிப்பும் இந்த நூற்றாண்டிலும் பேசப்படும் சொற்றொடர்கள் ஆகியிருக்கின்றன. இனம், மொழி, பண்பாடுகளுக்கு அப்பால் ஓரினம் சந்திக்கின்ற அதே பேரழிவை இன்று தமிழினமும் சந்தித்திருக்கிறது. அதன் அடிப்படையில் எழுந்துள்ள கவிதைகளாகவே தீபச்செல்வனின் ‘கூடாரநிழல்’ கவிதைகளைக் கருதமுடிகிறது. மக்களை எவ்வளவு தூரம் விளிம்புநிலைக்குக் கொண்டு வந்து விடமுடியுமோ அந்த வேலையை யுத்தம் செய்து முடித்திருக்கிறது. கொளுத்தும் வெய்யிலிலும் கொட்டும் மழையிலும் வாட்டும் நோயிலும் பசியும் தாகமும் உந்தித்தள்ள நேரத்திற்கு நேரம் கையேந்தி வாழவேண்டிய அவலநிலையை அது உண்டாக்கியிருக்கிறது. தொடர்ச்சியான அகதிவாழ்வும் அவலங்களும் அடையாள அழிப்பும் இரக்கமில்லாதவர்களிடம் இரக்க வைத்திருக்கிறது. பேதலித்த மனங்கள் ஒருபுறமும் இழந்துவிட்ட உறவுகள் மறுபுறமும் இருப்பவர்களையும் காப்பாற்ற வழியில்லாது தவிக்கும் இரண்டகநிலை இன்னொருபுறமுமாக எல்லாம் சேர்ந்த குழப்பநிலையில் வாழ்ந்த மக்களின் கண்ணீர்க் கதைகள் தான் இந்தக் கவிதைகள்.
இணையத்தில் இறக்கைக்கட்டிப் பறந்து வந்த கவிதைத் தொகுப்பை கணனி முன் அமர்ந்து மிக பவ்வியமாய் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க தென்றலின் வேகத்தை எனக்குள்ளும் உணர ஆரம்பித்தேன். வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கும் கணிக்க முடியாது இந்தத் தென்றலின் வேகம் எத்தனை கிலோ (மனோ) மீற்றர் என்று. அத்தனை உணர்ச்சிப் பெருக்குடன் நூலின் எழுத்துக்களின் மேல் விழிகளை விரட்டும் வாசகர்களின் அடிமனதைத் தொட்டுச் சலனப்படுத்தும் கவிமலர்களால் கோர்க்கப்பட்ட கவிதைத் தொகுப்பாய் தென்றலின் வேகம் தவழ்கிறது. முதலில் என் கண்களில் கவரப்பட்டு கருத்தைத் தொட்டக் கவிதை 'கண்ணீரில் பிறந்த காவியம்!" அதில், முன்னேற்றப் பாதையிலேநான் எடுத்து வைத்தஒவ்வொரு அடியும்சறுக்கு மர ஏற்றச்சவாரியாகசாணேற முழஞ்சறுக்கிசலிப்பாகின! என தான் எடுக்கும் முயற்சியையும் சந்திக்கும் தோல்வியையும் விளக்கும் கவிஞரின் அந்தக் கவிதை இவ்வாறு முடிகிறது... கண்ணீரில் பிறந்ததோ காவியம்-என் கடமையில் நிலைத்ததோசீவியம்!!!
அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்பட்ட முருகேசு ரவீந்திரனின் வாழ்கை பயணம் சிறுகதை தொகுதி வாசித்த முடிந்து பல நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பில் இருந்து விடுபட முடியாத தொரு மனநிலை எனக்கிருக்கிறது. கதை மாந்தர்களை எம்மோடு உலவ விடுகின்ற உறவாக்கி விடுகின்ற திறமை ரவிந்திரனுக்கு வாய்த்திருக்கிறது. இது அவரது படைப்பிற்கு கிடைத்த வெற்றியெனலாம். வானொலி அறிவிப்பாளராக பலராலும் அறியப்பட்ட முருகேசு ரவீந்திரன் யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர். தொழில் காரணமாக இருபது வருடங்கள் கொழும்பில் வாழ்ந்தாலும் அவரது பெரும்பாலான கதைகள் யாழ்ப்பாணத்தையே களமாக கொண்டு புனையப்பட்டுள்ளன. யாழ் மண் அதன் பாரம்பரியம் அதற்கே உரிய தனித்தமான சிறப்பியல்புகள் கதைகளில் உயிர் நாதமாக வேரோடி இருப்பதை படிப்பவர்கள் அறிய முடியும். 1990ற்கு பின் எழுதப்பட்ட 12 சிறுகதைகள் இந் நூலில் இடம்பெற்றுள்ளன. ரவிந்திரனுடய கதைகளில் காணப்படுகின்ற சிறப்பம்சம் அதனுடய எளிமை தன்மை ஆகும் வாழ்வியல் அனுபவங்களை ஆடம்பரமில்லாது இயல்பாக சித்தரித்துள்ளமை வாசகனை பாத்திரங்களின் ஒருவனாக அவனுக்கு மிகவும் நெருங்கியவனாக உணரச்செய்து விடுகின்றது. அதாவது எழுத்துக்களோடு ஓர் அகவயமான தொடர்பை ஏற்ப்படுத்தி விடுகிறது.
நவீன காலத்தே எழுந்த இலக்கியத்தின் உட்பிரிவுகள் யாவற்றிலும் சிறுகதை பொதுமக்கள் பெரிதும் விரும்பபடுகின்ற இலக்கிய வடிவமாகத் திகழ்கின்றது. இன்றைய சமுதாயச் சூழல் தோற்றுவிக்க கூடிய தனிமனித முரண்பாடுகளும் நெரிசல்களும் சிறுகதைக்கான நுகர்வோர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்று, சிறுகதைக்கான உள்ளடக்கம், உருவம் சமகால வாழ்க்கைப் போராட்டத்தில் அதன் இடம் என்பன குறித்து விமர்சகர்கள் எவ்வளவுதான் அரிய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் வகுத்துக் கூறினாலும் அதன் இறுதி வெற்றி என்பது பொதுமக்கள் விரும்பும் நிலையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அதுவும் தரமான சிறுகதைகளுக்கு புறத் தூண்டுதல் அவசியமில்லையென்றே தோன்றுகின்றது. சிறுகதை சமூகவுறவுகளில் வெளிப்படும் மனித நிலைகளை பின்புல உறைப்புடன் எடுத்துக் காட்டுகின்றது. இன்றைய உலகில் சிறுகதைப் பற்றிய சிந்தனைகளும் போக்குகளும் பல புதிய பரிமாணங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. தமிழ் சிறுகதை வரலாற்றிலும் இதன் பாதிப்பு நிகழாமல் இல்லை. வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரத்தில் ஆரம்பித்து நமது யுகத்து ஆற்றல் மிக்க சிறுகதையாசிரியரான ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகள் வரை பலரும் பலவகைகளில் சோதனைகள் செய்து பார்த்து தான் இந்த புதிய திசை வழியை கண்டடைந்துள்ளனர்.
பூங்காவனத்தின் 08ஆவது இதழ் பூத்து வாசகர்கள் கைகளில் தவழும் இவ்வேளையில் அதனைப் பற்றிய சில கருத்துக்களை இங்கு பதியலாம் என நினைக்கிறேன். தரமான பெண் படைப்பாளிகள் வரிசையில் இம்முறை இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவராகத் திகழும் திருமதி நூருல் ஐன் பூங்காவனத்தின் அட்டைப் படத்தை அலங்கரிக்கிறார். நீண்டதொரு பேட்டியினை திருமதி நூருல் ஐன் நஜ்முல் ஹுஸைன் அவர்கன் வழங்கியிருக்கிறார். வழமைபோல் இளம் கவிக்குயில் வெலிகம ரிம்ஸா முஹம்மதும், இளம் பெண் படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் நேர்காணல் செய்திருக்கிறார்கள். இலங்கையிலே ஊடகத்துறை முஸ்லிம் பெண் ஊடக, மற்றும் தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாகத் திகழும் நூருல் ஐன் அவர்கள் நீண்ட எழுத்தனுபவங்களை அழகாக விபரித்திருக்கிறார். மகளிர் தினச் செய்தியாகவும், புத்தாண்டுச் செய்தியாகவும் ஆசிரியர் குழு தெரிவித்திருக்கும் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. நாகரிகம்தான் பெண்ணியம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பெண்ணிய சிந்தனை வாதிகள் பெண்ணியம் என்றால் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் அர்த்தம் பொதிந்தவை.
பெரும்பாண்மை இனத்தவர்கள் அதிகமாக வாழும் பிரதேசத்திலிருந்து சுமார் 08 வருடங்களாக படிகள் சஞ்சிகை வெளிவருவது நாம் அனைவரும் அறிந்த விடயம். அந்த வகையில் ஈழத்து சஞ்சிகையுலகில் படிகளுக்கென்று ஒரு தனியிடம் உண்டு என்பதை எவறும் மறுக்க முடியாது. படிகள் தனது 30 ஆவது இதழை (ஜனவரி - மார்ச் 2012) அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் காணப்படுகின்ற அனைத்து அம்சங்களும் சிந்தையைக் கவர்வனவாக இருக்கின்றது. படிகளின் அட்டைப் படத்தை மறைந்த பேராசிரியர் ம.மு. உவைஸ் மற்றும் சாகித்திய ரத்னா பேராசிரியர் சபா ஜெயராசா, டாக்டர் ஹிமானா செய்யத் போன்றோர்கள் அலங்கரக்கின்றார்கள். படிகள் தனது ஆசிரியர் தலையங்கத்தில் அநுராதபுரப் பிராந்திய கலை இலக்கிய முழுநாள் விழாவொன்றை நடாத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, 18.3.2011 அன்று லண்டன் என்பீல்ட் நகரில் Dugdale Centre மண்டபத்தில் அவை நிறைந்த நிகழ்வாகவும் நல்லதொரு குடும்ப நிகழ்வாகவும் சந்திரா இரவீந்திரனின் 'நிலவுக்குத் தெரியும்' சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு நிகழ்ந்தேறியது. வடமராட்சி-பருத்தித்துறையில் மேலைப் புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சந்திரா. 1991இல் பிரித்தானியாவுக்கு இடம்பெயரும்வரை யாழ்ப்பாண அரச செயலகத்தில் பணியாற்றியவர். இவர் 1981இல் (செல்வி) சந்திரா தியாகராஜா என்ற பெயரில் தனது கன்னிப்படைப்பான ஒரு கல் விக்கிரகமாகிறது என்ற சிறுகதையை எழுதி எழுத்துலகில் நுழைந்தவர். வடமராட்சியில், பருத்தித்துறை யதார்த்தா இலக்கிய வட்டத்தினால் இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான 'நிழல்கள்' 1988இல் வெளியிடப்பட்டது. ஈழமுரசு, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த 5 சிறுகதைகளினதும் 1984-85 இரசிகமணி கனக. செந்திநாதன் நினைவுக்குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் என்ற குறுநாவலினதும் தொகுப்பாக நிழல்கள் முன்னர் வெளிவந்திருந்தது. லண்டன், ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 2009வரை இவர் ஏழாண்டுக் காலமாக இலக்கிய நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தார்.
சமூகத்தைப் பேசவும் சமூகத்தைக் காட்டவும் சமூகத்தைச் சீர்படுத்தவும் ஒரு சிறந்த ஆயுதம் கவிதை.கவிதை எழுதுவது எளிது போல் தொடக்கத்தில் தோன்றும்.கவிதைக்கு என்று ஒரு மொழி இருக்கிறது.அது எளிதில் வசப்படாது.கவிதை உலகில் நுழைந்தவருக்கே தெரியும். புரியும்.சாத்தியப்படும்.தொலைந்து போன நிழலைத் தேடி புறப்பட்ட ப.மதியழகன் இரண்டாம் தொகுப்பில் சதுரங்கம் விளையாடி உள்ளார்.விளையாட்டில் முன்னேற்றம் தெரிகிறது. பால்யம் என்பது எல்லோருக்கும் ஒரு பொதுவான அனுபவமாகவே இருக்கும்.எதிர் காலம் குறித்த கவலை ஏதுமின்றி மகிழ்ச்சியாய்ச் சுற்றித் திரியும் பருவம் அது.பெரியவர்களுக்குக் கவலை அளிக்கும் செயலாகவே படும்.பொறுப்புப் பெற வேண்டும் என பெரிதாக முயல்வர்.அதிக பட்சமாக பட்டணத்திற்கு அனுப்பி வைத்து புதிய அத்தியாயத்திற்கு அடிகோலிடுவர்.முற்றுப்புள்ளி யில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிய கவிஞரின் அனுபவத்துடன் கவலையும் வெளிப்பட்டுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த திருமதி சந்திரமோகன் சுகந்;தினி எழுதிய நிலவுப் பொழுதின் நினைவலைகள் என்ற கவிதைத்தொகுதி வவுனியா தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. இதில் 53 பக்கங்களை உள்ளடக்கியதாக 27 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தொகுதி சுகந்தினியின் கன்னிக் கவிதைத் தொகுதியாகும். சில கவிதைத் துளிகளும் இதில் உள்ளடங்குகின்றன. அன்னையின் பெருமை, அன்பு, காதல், உறவு, மது, சீதனம், சேமிப்பு, பெண்ணியம், ஆசிரிய மாண்பு ஆகிய கருப்பொருளை மையமாகக் கொண்டு இக்கவிதைகள் புனையப்பட்டுள்ளன. கவிதைக்குப் பொய்யழகு என்று கவிப்பேரரசே சொல்லியுள்ள போதும், பொய்களைப் புறந்தள்ளி வைத்து அன்றாட வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் சந்தித்த, சந்தத்துக்கொண்டிருக்கும், சந்திக்க இருக்கும் சவால்கள், வாழ்வின் யதார்த்தங்கள் என்பவற்றை இலகு நடையில் எவரும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் என் சிந்தைக்கெட்டிய உள்ளத்து உணர்வுகளை கவிதைக்கு உண்மையும் அழகே என்று நீங்கள் யாவரும் உணரும் வகையிலான கவிதைகளாகத் தந்துள்ளேன் என்று நூலாசிரியர் தனதுரையில் குறிப்பிடுகிறார்.
மார்க்ஸை மறுவாசிப்பு செய்ய இதைக்காட்டிலும் உகந்த தருணம் இருக்க முடியாது. 1989 ம் ஆண்டு பெர்லின் சுவர் இடிந்ததும், கிழக்கு ஐரோப்பாவை பொறுத்தவரை பொதுவுடமையும் உடன் இடிந்ததென சொல்லவேண்டும். குடியில்லாத வீட்டில் குண்டுபெருச்சாளி உலாவும் என்பதுபோல பாசாங்குகாட்டி பொதுவுடமையை சுற்றிவருகிற நாடுகளும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கின்றன. இவற்றுக்கெல்லாம் மார்க்ஸை குறை சொல்ல முடியுமா? சோவியத் நாட்டில் காம்ரேட்டுகள் தோற்றதற்கு சோவியத் மார்க்ஸிஸம் (லெனினிஸமும், ஸ்டாலினிஸமும்) காரணமேயன்றி கார்ல்மார்க்ஸின் மார்க்ஸிஸம் காரணமல்ல என்பதை நினைவுகூர்தல் வேண்டும். இன்றைக்கும் எதிர்கால வல்லாதிக்க நாடுகள் என தீர்மானிக்கபட்டிருக்கிற இந்தியாவிலும் சீனாவிலும்(?) என்ன நடக்கிறது, ஏன் இந்த நாடுகளைத் தேடி மேற்கத்தியநாடுகளின் மூலதனம் வருகிறது? மார்க்ஸிடம் கேட்டால் காரணம் சொல்வார். தொழிலாளிகளின் ஊதியத்தை முடிந்த மட்டும் குறைத்து உபரிமதிப்பை அதிகரிப்பதென்ற விதிமுறைக்கொப்ப முதலாளியியம் தொழிற்பட இங்கு சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன என்பதுதான் உண்மை.
முல்லை முஸ்ரிபா என்ற தனித்துவக் கவிஞரின் இரண்டாவது தொகுதியாக அவாவுறும் நிலம் எனும் தொகுதி வெளிவந்திருக்கிறது. 2003 இல் தேசிய, மாகாண சாகித்திய விருதுகளைப் பெற்ற இவரது முதல் கவிதை நூல் இருத்தலுக்கான அழைப்பு என்பதாகும். அதனைத் தொடந்து தனது இரண்டாவது நூலை 103 பக்கங்களில் வெள்ளாப்பு வெளியினூடாக வெளிக் கொணர்ந்திருக்கின்றார். மொழித்துறை விரிவுரையாளராக, முதன்மை ஆசிரியராக, இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராக தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் இக்கவிஞரின் முதல் தொகுதியிலுள்ள மீதம் என்ற கவிதை க.பொ.த சாதாரணதர தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது இவரது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் அமைந்திருக்கின்றது. அவாவுறும் நிலம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகள் துயர் சுமந்த பாடல்களையும், வாழ்வியல் குறித்த விடயங்களையும் உள்ளடக்கியிருக்கின்றன. புதுப்புது வீச்சான சொற்கள் கவிதையை வாசிக்கும் ஆவலைத் தூண்டி நிற்கின்றன. முதல் கவிதையான நரம்பு சுண்டிய யாழ் எனும் கவிதை கையேந்தித் திரியும் ஓர் பிச்சைக்காரன் பற்றியது. பிச்சைக்காரர்களைக் கண்டால் காணாதது போல் தலை திருப்பிச் செல்லும் வழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. எல்லோரிடமும் தனது பசியைக் கூறி கை நீட்டும் பழக்கம் பிச்சைக்காரனுக்கும் இருக்கிறது. எனினும் ஓரிருவரைத் தவிர யாரும் அவனை மனிதனாகப் பார்ப்பதில்லை என்பதே கண்கூடு.
அம்பாறை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற நூலும், இறுவட்டும் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இந்நூலை கலாபூஷணம் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் தனது இரண்டாவது தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே கனலாய் எரிகிறது என்ற கவிதைத் தொகுதியை புரவலர் புத்தகப் பூங்கா மூலம் வெளியிட்டுள்ளார். 2010 இல் இலங்கை அரசு இவருக்கு கலைத்துறையில் ஆற்றிய பணிக்காக கலாபூஷண விருது வழங்கி கௌரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற கவிதைத் தொகுப்பு 27 பக்கங்களில் வெளிவந்திருக்கிது. இத்தொகுதியில் 69 பாடல்வரிகள் அமைந்துள்ளன. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி நிலத்தைப் பிழந்த சுனாமியில் உயிர்நீத்த உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவருக்கும்... நெஞ்சத்தைப் பிழந்து என்று நூலாசிரியர் தனது சமர்ப்பணத்தை முன்வைத்துள்ளார்.
நாவல், சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நாடகம், நூலாய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆளுமைகளைக் கொண்டவர் கே. விஜயன் அவர்கள். விடிவுகால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள் என்ற நாவல்களையும், அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கும் இவரது அடுத்த நூல் பலே பலே வைத்தியர். சிறுவர்களுக்கான இந்நூல் 98 பக்கங்களில் 20 கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. 'இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான கதைகள் மலையாள சிறுவர் சஞ்சிகைகளில் வாசித்து இன்புற்ற குட்டிக் கதைகளாகும். உட்கரு கதையோட்டத்தின் நிகழ்வுகளாக, நாடகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். பாத்திரங்களின் இயல்புத்தன்மை சித்திரங்களாக உருவாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் பிஞ்சு மனங்கள் அப்போதுதான் வாசிப்பில் ஈர்ப்புடன் ஈடுபடும். எளிமையான மொழிநடை இதற்கு பெரும் துணையாக அமையும்' என்கிறார் நூலாசிரியர் கே. விஜயன் அவர்கள். குட்டிக் கரணமடித்த குண்டு பயில்வான் என்ற கதையில் இரு எலி நண்பர்கள் பற்றியும், அவை குண்டு பயில்வான் ஒருவனுக்கு செய்யும் அட்டகாசங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. பயில்வானின் தோற்றத்தையும், பரபரப்பையும் கண்டு கேலியாக கதைக்கும் எலிகளை கல்லால் அடிக்கிறான் பயில்வான். அவன் கயிற்றில் ஏறி சர்க்கஸ் செய்யும்போது எலி தன் கூரிய பற்களால் கயிற்றை கடித்துவிட கயிறு அறுந்து பயில்வான் விழுகிறான் என்றவாறு இக்கதை அமைந்திருக்கிறது.
முதுசம் என்ற சிறுகதைத் தொகுதியை பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கிறார். சேமமடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 154 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. 19 சிறுகதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இத்தொகுதி மானிடத்தின் மேம்பாட்டுக்காய் உழைத்த உன்னதமானவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. திரு. தம்பு சிவா அவர்கள் கற்பகம் எனும் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் ஈழத்து இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் தனது எழுத்தாளுமையை வெளிப்படுத்தி வருகின்றார். திருகோணமலை பிரதேச சாகித்திய விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய pவிருது, லண்டன் இணுவில் ஒன்றியத்தின் தமிழ்த்தென்றல் விருது உட்பட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர். இவர் ஏற்கனவே சொந்தங்கள், முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









