பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டு ஆயுதப்போராட்ட களத்தில் இயங்கிய பெண்களின் குரலாக வந்த கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. எனவே இந்தக் கவிஞைகளிலும் புலி அடையாளத்தை மட்டும் வைத்து நோக்கும் எளிமையான போக்கு மறைமுகமான எதிர்ப்பாகவும், கள்ள மௌனமாகவும் பேணப்படுகிறதா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. இந்த 'மறுப்புக்கான' சமூக நியாயத்தை வைக்க முற்படுதல் என்ற நேர்மையான வழியில் இதை உரையாட முன்வருவதே சரியாக இருக்கும். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற இருமைகளில் சிக்குண்டு இருப்பது இவ்வகை தேக்கத்தை கடக்க முடியாத நிலையில் பலரை விட்டுள்ளது ஒருவகை அவலம்தான். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களால் மட்டும் எழுதிய வன்முக அரசியல் எதிரியிடம் வீழ்ந்துபோனது. பல இலட்சம் உயிர்களைக் காவுகொடுத்து தப்பிப் பிழைத்திருப்பவர்களுக்கு வெறுமையையும் பரிசளித்துச் சென்றுள்ளது.
நிர்வாகத்தனமாக இயங்கும் புலிகளின் புகலிட அமைப்புகள் இயக்கத்தில் இருப்பதுபோல் அரசியல் அரங்கில் தம்மை காட்சிப்படுத்துகிறார்கள். ஆனால் நாட்டில் நிலைமை அவ்வாறு இல்லை. புலிகளின் வீழ்ச்சியோடு அல்லது அழிவோடு அந்த அமைப்பின் உயர் அதிகார அலகுகளில் தப்பிப் பிழைத்தவர்கள் அரச புலனாய்வுப் பிரிவோடு போயினர் அல்லது பங்காளிகளாக மாறினர். கீழணியில் இருப்பவர்களின் நிலை அப்படிப்பட்டதல்ல. அதிகார அலகில் கீழ்நிலையில் இயங்கியவர்கள் அவர்கள். இந்த மக்களுக்காக தம்மை அர்ப்பணிப்பதாக தமது நலன்களையெலாம் தூக்கியெறிந்து போனவர்கள் அவர்கள். தவறான அரசியலால் வழிநடத்தப்பட்டு கைவிடப்பட்ட இந்தப் போராளிகளைப் புறக்கணித்துப் பேசுவதில் புலியெதிர்ப்பு மனோபாவமே எஞ்சும். அவர்கள் இந்த சமூகத்துள் உயிரற்ற உடல்களாகவும், தப்பிப் பிழைத்தவர்கள் மௌனமாக்கப்பட்டவர்களாக அல்லது வெறுமை படிந்த மனிதர்களாகவும் திரும்பியது ஒரு பெரும் அவலம். அரச வன்முறை இயந்திரங்களின் சித்திவரைத் கூடங்களிலும் சிறைச்சாலைகளிலும் அவர்களில் பலரின் வாழ்வும் சிதைவது இன்னொரு துயரம்.
புலிகளின் அழிவுக்கு முன்னரும் பின்னருமாக அரச இயந்திரத்துள் இணைந்த முன்னாள் பின்னாள் புலிகளின் உயர்நிலை பொறுப்பாளர்களெல்லாம் தமது வாழ்வை காத்துக்கொண்டனர். வேடிக்கை என்னவென்றால் இவர்களை ஜீரணிப்பதிலிருந்து இவர்களுக்கு ஆதரவு தருவதுவரை போன சிலர் கைவிடப்பட்ட சாதாரண போராளிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதை புலியெதிர்ப்பு மனோபாவத்துக்கு வெளியில் எப்படி புரிந்துகொள்ள முடியும். இதற்குள் பெண்போராளிகள் ஆணாதிக்க மனோபாவத்தின் வெறித்தனத்துக்கும் சமூகக் கருத்தியலுக்கும் எப்போதைக்குமான கைதிகளாக சிக்குப்பட்டிருப்பது பற்றி சிந்திக்காமல் பெண்ணியம் பேச வருவது போலித்தனமானது. ஒருவகை அரசியல் வன்மம் நிறைந்தது. புலியெதிர்ப்பு மனோபாவம் கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் 'இவர்களும் (கீழணிகளும்) சேர்ந்துதானே சனத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டவர்கள்' என்று வாதிக்கும் பலரும் கடந்தகாலத்தில் இதேவழியிலேயே வெவ்வேறு இயக்கங்களில் தம்மை இணைத்துச் செயற்படப் பறப்படவர்கள் என்பதுதான். இன்று இந் நிலையை தமிழ் மக்கள் வந்தடைந்ததிற்கு முன்னோடியாக (எண்பதுகளின் ஆரம்பத்தில்) இயக்கங்களை நோக்கி ஓடிக்காட்டியவர்கள் தாம் என்பதை மறந்துவிடுவதுதான் ஒரு முரண்நகை. அவர்கள் மட்டும் தமது இயக்க அடையாளங்களைக் கழற்றி எறிந்து சமூகத்தின் முன்னேறிய பிரிவினராகக் காட்டும் ஒருதொகை எழுத்துகளுடனும் உரையாடல்களுடனும் உலாவருவது நாம் அறியாததா என்ன. புலிகளில் செயற்பட்ட (இயக்க அடையாளங்களைத் துறந்த) கீழணிப் போராளிகளை கண்டுகொள்ளாமல் விடுவதற்குப் பின்னால் இருக்கும் அரசியல்தான் என்ன? இந்த அரசியலுக்கு முன்னால் 'பெயரிடாத நட்சத்திரங்கள்' கேள்விகளோடு வந்திருக்கிறது.
உயிர்கொடுப்பவர்களே உயிர் பறிப்பவர்களாக மாறுவதாக பெண்போராளிகளின் பாத்திரத்தை மறுப்போரும் உளர். பெண்களை பிள்ளைபெறும் இயந்திரமாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பார்வை உயிர்கொடுப்பதில் தனது பாத்திரத்தை சூட்சுமமாகவே மறைத்துவிடுகிறது. கலாச்சார, மத அடிப்படைவாதிகளின் குரலாக அது வெளிப்படுகிறது. புலி வட்டத்துக்கு வெளியிலிருந்து இத் தொகுப்பு வந்ததின்மூலம் இல்லாமல்போன பெண்போராளிகளின் இந்தக் குரல்களை புலிகள் தொடர்ச்சியான தமது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் நிலை இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் அரசியலோடு உடன்படாத வெளிக்குள்ளிருந்து இத் தொகுப்பு வந்திருப்பது அவர்களிடம் தாம் ஏன் இதைச் செய்ய யோசிக்கவில்லை என்று அங்கலாய்ப்பதிலிருந்து வெளித்தெரிகிறது. அதேபோல் தமிழின உணர்வாளர்கள் மறத் தமிழனின் வீரம்பாடி தமது வேட்டியை மினுக்கிக் கொள்வதற்குமான சந்தர்ப்பமும் அடிபட்டுப் போயிற்று. (சுவிஸில் நடந்த வெளியீட்டு நிகழ்வின்போதும் நண்பர் யோகாவும் இதைக் குறிப்பிட்டிருந்தார்.) இவை அதன் விளைவுகள் என்றபோதும் இத் தொகுப்பை வெளிக்கொணர்வதன் அரசியல் பெண்ணிய அரசியலுக்குள் முக்கியத்துவம் வாய்ந்தது. இப் போராளிகள் சமூகத்துள் வரவேற்கப்பட வேண்டியவர்கள் என்பதை ஆணதிகார கருத்தியல் கொண்ட சமூகத்துள் ஒரு செய்தியாக எடுத்துச்செல்கிறது. ஆணாதிக்கக் கருத்துநிலைகளுக்கு எதிரான கலாச்சாரப் போராட்டத்தை சமூகத்துள் புலிகள் நிகழ்த்தாமல் தவிர்த்ததின் விளைவுக்கு இந்தப் பெண்போராளிகள் பலியாகியிருக்கின்றனர். இதுசம்பந்தமான சட்டங்களை அவர்கள் தமிழீழ சட்டக் கோவையுள் சேர்த்ததைத் தவிர கருத்தியல் தளத்தில் எதையுமே அவர்கள் செய்ததில்லை. அதிகாரம் கவிழ்ந்து கொட்டுப்பட்டவுடன் சட்டக்கோவையை மண் தின்றுதீர்த்துவிட்டது. சுதந்திரமான வெகுஜன அமைப்புகளின் செயற்பாடுகளை முழுமையாக புலிகள் முடக்கியதால் இவ்வகைச் செயற்பாடு சமூகத்துள்ளிருந்து எழவும் சாத்தியமற்றுப் போயிற்று. மற்றைய நாடுகளின் விடுதலைப் போராட்ட அமைப்புகளில் நிகழ்ந்த இந்த அவலத்தை எத்தனையோ உதிரிப் புத்திஜீவிகள் அந்நேரம் சுட்டிக்காட்டியபோதும் வாழாவிருந்தனர் புலிகள். இந்த நிலைமைகள் இன்று பெண்போராளிகளை இக்கட்டான நிலையில் சமூகத்துள் விட்டிருக்கிறது. எனவே அவர்களிடம் இப்போதும் புலி அடையாளத்தை சுமத்துவதில் அர்த்தமேதுமில்லை. புலிகளின் அரசியலால் வஞ்சிக்கப்பட்ட இப் போராளிகளை (புலிப் பெண் போராளிகள் என்றில்லாமல்) 'பெண்போராளிகள்'என சமூகத்துள் வரவேற்பது முக்கியமானது. இதற்கான சமிக்ஞையை 'பெயரிடாத நட்சத்திரங்கள்' காட்டியுள்ளது எனச் சொல்ல முடியும்.
சமூக மாற்றத்துக்கான தத்துவம் சமூக விஞ்ஞானத்தை விளக்குவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, அதை மாற்றுவதற்கான வழிமுறைகளையும் முன்வைக்கிறது. இதன்மூலம் அது நடைமுறையையும் கோருகிறது. நடைமுறைகளிலிருந்து தத்துவம் செழுமைப்படுத்தப்படுகிறது. இந்த இருவழி இயங்குநிலை பெண்ணிய விடயத்தில் பெண்போராளிகளின் நடைமுறைகளினூடு ஒரு அடியெடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் பெண்விடுதலைக்கான போராட்டமென்ற ஒன்று உருவாகுவதென்றால் இந்தப் பெண்போராளிகள் சாத்தியமாக்கிக் காட்டியவைகள் ஒரு முகவுரையாக இருப்பது தவிர்க்க முடியாதது. இதை மறுப்பவர்கள் வரலாற்றை பின்னோக்கி சுழற்ற எத்தனிப்பவர்கள். இந்த ஆணதிகார சமூகம் வரைவுசெய்திருக்கும் 'பெண்மை' என்பதை அவர்கள் துணிச்சலுடன் மீறிக்காட்டியிருக்கிறார்கள். போர்க்களங்களில் போர்செய்து காட்டியிருக்கிறார்கள்.
பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றபோது ஒரு வெள்ளையினத் தொழிலாளி தனது நண்பனான இன்னொரு கறுப்பினத் தொழிலாளியைப் பார்த்து கேட்டான்... 'ஒபாமா கறுப்பன் என்பதால்தானே நீ அவருக்கு வாக்களித்தாய்' என. அதற்கு அவன் பதிலளித்தான்... 'ஆம்... எனது மகன் ஏன் அப்பா நான் அமெரிக்க ஜனாதிபதியாக வர ஆசைப்படக்கூடாது எனக் கேட்டபோதெல்லாம் பதில்சொல்ல முடியாமல் இருந்த எனக்கு இப்போ பதில் கிடைத்திருக்கிறது... அதனால்தான் வாக்களித்தேன்' என்றான். ஒடுக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமற்றது என அதிகாரவர்க்கம் உளவியல் ரீதியில் ஊட்டிவைத்திருக்கும் நினைப்புகளைப் போட்டுடைத்தல் போராட்டங்களுக்கான முன்நிபந்தனையாகிறது. உலகின் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்ட போராளிப் பெண்களும் சொல்லிவைத்திருக்கும் செய்தி இதேவகைப்பட்டதுதான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட எல்லா இயக்கப் பெண் போராளிகளையும் நாம் இந்தவகையில் அணுக வேண்டியிருக்கிறது.
எதிரியால் கைதுசெய்யப்படும் ஆண்போராளிகள் உடல் ரீதியான சித்திரவைதைகளை அனுபவிக்கின்றனர். மன உளைச்சல்களை அனுபவிக்கின்றனர். ஆனால் ஒரு பெண் போராளியோ ஆண் அனுபவிக்கும் இந்தச் சித்திரவதைகளுடன் கூடவே பாலியல் ரீதியிலான உடல் சித்திரவதைகளையும் அது தரும் உளவியல் சித்திரவதைகளையும் சேர்த்தே அனுபவிக்கிறாள். சித்திரவதைகளைத் தாண்டியும் அவளுக்கு சமூகப் பயம் ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிடும். இங்கு 'கற்பு' என்ற கருத்தாக்கம் அவளை மேலதிக சித்திரவதைக்கு உளவியல் ரீதியில் உட்படுத்திவிடுகிறது. சில வேளைகளில் சித்திரவதைப் படலம் முடிவடைந்தபின்னரும் பாலியல் பண்டங்களாக தொடர்ச்சியாக உடல், உள சித்திரவதைகளை அவள் அனுபவிக்க நேர்கிறது.
கற்பு, பெண்மை என்ற கருத்தாக்கங்கள் புலிகளுக்கும் பிரச்சார நோக்கத்தில் துணைபுரிந்துள்ளது. அதனால்தான் கொலையையும்விட மிதப்பாக பாலியல் வல்லுறவு செய்திகளாக்கப்பட்டு சமூக உணர்ச்சியூட்டலைச் செய்ய அவர்களுக்குப் பயன்பட்டது. அதேபோல் பெண்களின் இராணுவ சாகசங்கள் பெண்மை பற்றிய வரையறுப்புகளை அசாதாரணமாக மீறுவதாக காட்டும் பிரச்சார உத்தி பாவிக்கப்பட்டது. இருந்தபோதும் பெண்களின் சாகசங்கள் பிரச்சார அளவைத் தாண்டி அவர்களால்; கொண்டாடப்படவேயில்லை. ஆனால் ஆணதிகார மனோநிலையால் கண்டுகொள்ளப்படாமல் இருந்த அவர்களின் சாகசம், திறமை எல்லாமே பின்னர் அவர்களே படையணிகளை வழிநடத்தக்கூடிய அளவுக்கு சென்றதன்மூலம் இதே ஆணதிகாரத்துக்கு முகத்திலறைந்து ஒரு செய்தியைச் சொன்னது. அவர்கள் தரப்பில் உள்ளுறைந்திருந்த தம்மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்களுக்குள் அமுங்கியிருந்த உணர்வும் சேர்ந்தே இதைச் சாத்தியமாக்கிற்று என்பது கவனிக்கப்பட வேண்டியது. பெண்போராளிகளை உள்வாங்குவது இயக்கத்தின் ஆட்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் ஒரு வழிமுறையாக புலிகள் இயக்கத்தால் கையாளப்பட்டது. ஆரம்பகாலங்களில் மற்றைய போராட்ட இயக்கங்கள் பெண்களை உள்வாங்கியபோதும் புலிகள் அதை மறுத்திருந்தனர். பெண்போராளிகளில் ஒரு பகுதியினர் குழந்தைப்போராளிகாளாக நிர்ப்பந்தமாகவும் இயக்கத்துள் இணைக்கப்பட்டார்கள் என்ற விடயம் மனித உரிமைகள் அமைப்புகளினால் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது. 2009 இறுதியுத்த காலத்தின்போது இது இன்னும் மோசமடைந்திருந்தது. இக்; காலகட்டத்தில் பலவந்தமான ஆட்பிடிப்பு நடவடிக்கைகளுக்குப் பயந்து சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்த நிகழ்வுகளும், வயல்வெளிகளில் இரவுகளில் படுத்துறங்கவேண்டிய பல இளம்பெண்களின் துயரமும் வன்னிநிலப் பரப்பில் காற்றையும் உறையவைத்திருந்தது என்ற பக்கத்தையும் இங்கு மூடிவைத்துவிட முடியாது.
எல்லாவகை அதிகாரங்களுக்குள்ளும் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே, அந்த அதிகார நிறுவனங்களுக்குள் பிழையாக வழிநடத்தப்பட்டவர்களையும் கையாளப் பெற்றுக்கொண்ட ஜனநாயகத்துவ செயற்பாடு அல்லது மனோபாவம் மனித உரிமைகளின் அடிப்படையான ஒன்று. மனித உரிமை அமைப்புகள் இந்த வெளிகளில் இயங்குகின்றன. இதைக்கூட புரிந்துகொள்ளாத மனநிலையில் இருந்து கொண்டு மாற்றுக்கருத்துப் பற்றி பேசுவதில் அர்த்தமேதுமில்லை.
கைவிடப்பட்டுள்ள போராளிகளில் சமூகத்துள் உள்நுழையும் ஓர் ஆண்போராளி எதிர்நோக்கும் சவால் போன்றதல்ல பெண்போராளிகளின் நிலை. சமூகம் ஆணதிகார விதிகளுடன் இயங்குவதால் ஆண்போராளிகள் தனித்துப்போராடுதலுக்கான பின்புலம் பலமாகவே இருக்கிறது. ஆனால் பெண் போராளிகளைப் பொறுத்தளவில் சமூக விதிகளை மீறியவர்களாக பெண்மையின் வரையறுப்புகளைக் கடந்துசென்றவர்களாக சமூகம் அவர்களை எதிர்கொள்கிறது. அவர்கள் தனித்துப் போராடுவதற்கான களமோ பின்புலமோ இந்த சமூகத்திற்குள் சாத்தியமில்லாமல் போகிறது. அநாதரவாக விடப்படுகிறார்கள். இந்த சமூகத்துக்காக உழைக்கப் புறப்பட்டதான அவர்களின் உணர்வுநிலை ஒருவித குற்றமாக்கப்படுகிறது என இதை மொழிபெயர்க்க முடியும். எனவே சிவில் சமூகத்துள்; இவர்கள் கரிசனை கொள்ளப்பட வேண்டியவர்கள் ஆகிறார்கள். 'பெயரிடாத நட்சத்திரங்கள்' இவர்களை அடையாளம் காட்டுகிறது.
வியட்நாம், கியூபா, நிக்கரகுவா, எல்சல்வடோர், அல்ஜீரியா, எரித்ரியா, சிம்பாவே... என நீளும் பட்டியலில் விடுதலைப் போராளியாக இருந்த பெண்களின் போருக்குப் பிந்தைய வாழ்வு என்பது பல பொது அம்சங்களில் ஒன்றுபட்டிருந்தது. அது ஆணதிகாரத்தின் ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பாக இருந்தது. குடும்பப் பெண், பெண்மை, பாலியல் நுகர்வு என்பன சம்பந்தமான ஆணாதிக்க வரையறைகளால் சமூக ஏற்பு (அதாவது இந்த சமூகத்துள் போராளிகளை ஏற்றுக்கொள்ளல்) பிரச்சினைக்குள்ளாகியிருந்தது. பாலியல் ரீதியில் எதிரிகளால் மட்டுமல்ல தமது சக தோழர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிகழ்வுகள்கூட நடந்திருப்பது பின்னர் தெரியவந்தது.
சிம்பாவே விடுதலைப் போராட்ட அமைப்பில் (சான்லா பயிற்சி முகாம், மொசாம்பிக்) உயர் தளபதிகள் பெண் தோழிகளுக்கு 'தமது கூடாரத்தை கூட்டிப்பெருக்க வா' என்று அழைப்பது ஒரு வழமையான செய்தியாய் இருந்தது. அது பாலியல் தேவைக்கான அழைப்பாக குறியீட்டு வடிவம் கொண்டது என்கிறார் அறியப்பட்ட பெண்போராளியான நியாம்பூயா. அந்தப் பெண் போராளிகளில் பலர் தமக்கு நடந்ததை மூடி மறைக்க முற்பட்டனர். ஏனெனில் தாம் 'விபச்சாரியாக' பெயர்சூட்டப்பட்டுவிடுவேன் என்ற அச்சத்தில் அவ்வாறு நடந்துகொண்டனர் என்கிறார். அதேநேரம் சுதந்திரத்தின் பின்னான பல வருடங்களின் பின்னும் பல பெண்போராளிகள் முகாம்களில் தாம் முன்னர் சமமாகவே நடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள் என்பதும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எப்படியோ இதன் சாத்தியப்பாடுகள் மறுக்கமுடியாதவை. இவ்வாறான சம்பவங்கள் விடுதலைப் புலிகளுக்குள்ளும் நடந்ததா இல்லையா என்ற தகவல்களும் எதிர்காலத்துக்கே வெளிச்சமாகும். புலிகள் அமைப்பு ஒழுக்கவாத அமைப்பாக இருந்தது என்பது இதற்கான பதிலைத் தர போதுமானதல்ல.
ஆரம்பகாலங்களில் பெண்களை உள்வாங்கிய அமைப்புகளான புளொட், ஈபிஆர்எல்எப் அமைப்புகளில் அந்தக் காலகட்டங்களிலேயே (80 களின் நடுப்பகுதியில்) பாலியல் மீறல்கள் பற்றிய கதைகள் கசிந்ததையும் இந்த இடத்தில் நிiவுகொள்வது தகும். புலிகள் கருணாவின் பிரிவின்பின் கிழக்குப் பெண்போராளிகளை வெருகல் தரையிறக்கத்தின்போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கதைகள் வெளிவந்தன. தம்மோடு ஒன்றாய்க் கலந்து பயிற்சி முதல் போர்க்களம்வரை தோழமை கொண்டாடிய ஆண்போராளிகளே இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பது பெண்கள் மீதான ஆணாதிக்க வக்கிரத்துக்கு இன்னொரு உதாரணமாகும்.
இதன் மறுபக்கமாக, இப் பெண்போராளிகளின் மீதான இந்தக் கொடுமையை உரத்துச் சொல்லும் எவரும் இராணுவத்தின் பாலியல் வல்லுறவுத் தடயங்களுடன் கொலைசெய்யப்பட்ட பெண்போராளிகளின் மீதான கரிசனையையோ அரச பயங்கரவாதத்தின் மீதான கண்டனத்தையோ தெரிவிக்காமல் இருக்கமுடியாது. இல்லாதபோது, வெருகல் பெண்போராளிகளின் மீதான அவர்களின் கரிசனை என்பது தமது புலியெதிர்ப்பை நிறுவுதலுக்கான ஆதாரங்களாகிப்போகும் அவலம்தான் எஞ்சுகிறது. இங்கும் புலி அரசியலும் புலியெதிர்ப்பு அரசியலும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றன. இலங்கை இராணுவத்துக்கு சான்றிதழ் வழங்குவதுவரை இந்தப் புலியெதிர்ப்பு தனது முகத்தைக் காட்டவும் செய்தது. புலிகளுடனான தமது யுத்தத்திலிருந்து பின்வாங்கும்போது கருணா தரப்பினர் தமது பெண்போராளிகளுக்கு மொட்டையடித்து விட்டனர். மீண்டும் அவர்களை தாம் இலகுவில் அடையாளம் கண்டு பிடித்துக்கொள்வதற்காக இதைச் செய்தார்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தப் பெண்போராளிகள் பின்னர் எதிரிகளிடத்திலும் இலகுவில் அடையாளம் காணப்படும் ஆபத்தை எதிர்நோக்கினர். அப் பிரதேசத்திலிருந்து நழுவி வேறு பிரதேசங்களுக்குச் செல்வதற்கோ, அல்லது வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லும் நோக்கில் கொழும்புக்குச் செல்வதற்கோ அவர்கள் 'விக்'(செயற்கைத் தலைமுடி) வைத்து தம்மை காத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துள் ஆளாகினர் என்ற விடயத்தையும் இங்கு பதிவுசெய்தல் வேண்டும்.
இப்போ புலிகளின் அழிவோடு தப்பிப் பிழைத்த புலிப் பெண்போராளிகள் இக்கட்டான நிலைக்குள் ஆளாகியிருக்கின்றனர். இந்தப் பெண்போராளிகளின் சாகசங்களை பிரச்சாரப்படுத்தி புலிகளுக்கு பலமும் பணமும் சேர்க்க அயராது உழைத்தவர்களில் எத்தனைபேர் இந்தப் பெண்போராளிகளை குடும்ப வாழ்க்கைக்குள் வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள் என்ற கேள்விக்கும் பதில் இல்லை. குடும்பப் பெண்ணாக அடங்க மறுப்பாள் என்ற அச்சம், 'கற்பை' பறிகொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எல்லாம் ஆண்போராளிகளைக்கூட போட்டு ஆட்டக்கூடியது. சமூகம் அவர்களை அகப்பையோடான பிம்பத்திலேயே மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறது. நிலமதிர நடப்பதையும் அது விரும்புவதாயில்லை.
தமது முகாம்களுக்குள் நடந்த பெரும்பாலான திருமணங்கள் உணர்சித்தன்மை வாய்ந்ததாக இருந்தது என்கிறார் எரித்திரிய விடுதலைக்காக களம்கண்ட பெண்போராளி ஒருவர். நாமெல்லாம் சாகப்போகிறவர்கள் என்ற மனப்பிரமை எம்மைக் கவர்ந்தவர்கள்மீதான உடனடிக் காதலாகவும், திருமணங்களாகவும் நிச்சயிக்கப்பட்டன என்கிறார். இன்னொரு பெண்போராளியோ தமக்கு பாலியல் பற்றிய அறிவு எதுவும் இருந்ததில்லை என்பதால் எளிதில் உணர்ச்சியூட்டப்படுதலும் நிகழ்ந்தது என்கிறார். பல திருமணங்கள் முகாம்களுக்குள் நடைபெற்று ஒரு குறுகியகால தாம்பத்திய வாழ்வின்பின் அவர்கள் வெவ்வேறான களங்களுக்கு போருக்காக அனுப்பப்பட்டுவிடுவதாலும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ளல் என்பது சாத்தியமற்றுப் போய்விடுகிறது என்கிறார். இவ்வாறு தப்பிப்பிழைத்த தம்பதிகள் போருக்குப் பிந்திய சமுதாயத்தில் விடப்படும்போதும் பெரும்பலான திருமணங்கள் முறிந்துபோவதே நிகழ்ந்தது. ஆண்போராளிகள் மிக இலகுவாகவே இந்த மரபார்ந்த முறைக்குள் போய்விடுகிறார்கள் என்றும் அவர் சொல்கிறார். உடை,தலையலங்காரம், உடல்மொழி என்று வருகிறபோதுகூட பல வருடங்களாக அவர்கள் வரித்துக்கொண்ட -அதுவும் இளமைப்பருவத்து வாழ்நிலையில் பெற்றுக்கொண்ட- விடயங்களை அவர்கள் இலகுவில் கைவிடுவது என்பது தகவமைதலுக்கு உரிய பிரச்சினை மட்டுமல்ல, மனஉளைச்சலுக்குரிய விடயமுமாகிறது.
இலங்கையைப் பொறுத்தளவில் இந்தப் பெண்போராளிகளின் குரல் வெளியில் வரவில்லை. காரணம் அவர்களில் களத்தில் கொலைசெய்யப்பட்டவர்கள் போக, தப்பிப் பிழைத்தவர்களில் பெரும்பாலானோர் கைதிகளாக அல்லது காணாமல்போனவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அதைத் தாண்டிவந்து சமூகத்துள் கலந்தவர்களும் தம்மை அடையாளம் காட்டுவதில் அல்லது போராட்டவாழ்வு பற்றிப் பேசுவதில் எச்சரிக்கையோடு அல்லது விரக்தியோடு இருக்கின்றனர். அதற்கான அரசியல் சூழலே அங்கு நிலவுகிறது. அவர்களின் நினைவுகளைத் துருத்திக்கொண்டிருக்கும் போராட்ட வாழ்வுபற்றி, அது தந்த அனுபவங்கள் பற்றி, துயரங்கள் பற்றியெல்லாம் அவர்கள் உரையாட முடியாத நிலை அவர்களை மேலும் உளவியல் சிக்கலுக்கள் வீழ்த்தக்கூடியது. இதை இயக்கங்களில் செயற்பட்டு உள்முரண்களை எதிர்கொண்டவர்கள் நன்கு உணர்வர். முகநூல் வித்துவான்கள், அறிக்கைப் போராளிகள் இதை உணர சாத்தியமேயில்லை. தான்சார்ந்த விடுதலை அமைப்பில் நம்பிக்கை இழந்தபோது குழந்தைபோல் அழுது குளறிய தோழர்களும் அந்த நாட்களும் நினைவில் பிசாசுபோல் துரத்துவன.
எரித்திரிய விடுதலைப் போராட்டத்தில் சுமார் மூன்றிலொரு வீதத்தினரும், எல்சல்வடோரில் (30 வீதம் களப்போராளிகள் உட்பட) 40 வீதமானவர்களும் விடுதலை அமைப்புகளினுள் இருந்தனர். நிக்கரகுவா எப்.எஸ்:எல்.என் அமைப்பினுள் 30 வீதமான பெண்கள் களப்போராளிகளாக இருந்தனர். அவர்களின் குரல்கள் தொகுப்புகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. நிக்கரகுவா, எல்சல்வடோர் பெண்போராளிகள் பலர் கவிதைகளாகப் பதிவுசெய்துள்ளனர். இந்த தமிழ்ப் பெண் போராளிகளின் குரல்கள் விடுதலைப் புலிகளால் தொகுப்புகளாக பதிவுசெய்யப்பட்டபோதும் அவை பிரச்சார நோக்கம் கொண்டதாக ஒரு குறுகிய வட்டத்துள் சுழல்வதாக இருந்தன. அவை தொகுக்கப்பட்டிருக்கும் விதமும் இதை உறுதிசெய்கிறது. பிரச்சார வாடை கொண்ட கவிதைகளை தமது நம்பிக்கைகளின் அடிப்படையிலும், தலைமை மீது கொண்ட விசுவாசத்திலும் அவர்களாக எழுதியிருக்கவும் சாத்தியமுண்டு. அதேநேரம் எழுத ஊக்குவிக்கப்பட்டிருக்கவும் சாத்தியமுண்டு. விடுதலைப் போராட்டம் பற்றிய தகவல்கள், அதுபற்றிய மக்களின் உணர்வலைகள் என்பவெல்லாம் புலிகளின் பிரச்சார ஏடுகளினால் உற்பத்தி செய்யப்பட்டு மூடுண்ட வாசிப்புச் சூழலுள் விடப்பட்ட நிலையில் இவை நிகழ வாய்ப்புண்டு. ஆனாலும் போர் மீதான நிர்ப்பந்தம், அதேநேரம் அதன்மீதான வெறுப்பு, அம்மா பற்றிய நினைவு, சக தோழர் தோழிகளின் பிரிவு, களத்தில் அடைந்த வெற்றிப் பெருமிதம், பெண்மீதான சமூக ஒடுக்குமுறை, காதல் உணர்வு பற்றிய அவர்களின் கவிதைகள் பெருமளவு இருக்கின்றன. பிரச்சார வாடையை மீறி இவற்றைப் பதிவுசெய்திருக்கின்றன பெயரிடாத நட்சத்திரங்களில் வந்த பெரும்பாலான கவிதைகள். றுவண்டாவின் (1992) வரலாற்றுப் படுகொலையில் சிக்கியவர்களின் தாயாக, மலையகத் தொழிலாளிகளின் மீதான கரிசனையாக, வல்லரசுகளின் மீதான கோபமாகவும்... என ஒருசில கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. இந்திய இராணுவத்துக்கு எதிரான அவர்களின் கவிதைகள் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாகவும், பழிவாங்கல் உணர்வாகவும்கூட வெளிப்பட்டிருக்கிறது. இவற்றுக்கு வெளியே அவர்கள் பேச முடியாமல் போன பக்கங்கள் ஒருவேளை எதிர்காலத்தில் எழுதப்படலாம்.
இலக்கியத் தளத்தில்கூட வெளியிலிருந்தான வாசிப்புகளை மறுத்த புலிகளின் மூடுண்ட இலக்கிய உலகுக்குள் வைத்து இவ்வாறான கவிதைகள் எழுந்தது அவர்கள் அனுபவித்த வலிகளிலிருந்து எழுந்ததால்தான். இலக்கியத் தரம், கவிநயம் என்றெல்லாம் அளவுகோல்களுடன் அவற்றை அளக்க வேண்டிய அவசியம் இல்லை. அது அவர்களுக்கு களத்தில் ஒரு செயற்பாடாகக்கூட இருந்திருக்க வாய்ப்புண்டு. நிக்கரகுவா சான்டினிஸ்ரா பெண்போராளிக் கவிஞை றோசாறியோ 'நாங்கள் ஒரு கவிதையை எழுதும்போது புரட்சி செய்கிறோம்' என சொல்வதன்மூலம் கவிதையை ஒரு அரசியல் செயற்பாட்டு நிலைக்கு உயர்த்திவிடுகிறார். எல்சல்வடோர் பெண்போராளி ஒருவர் 'உலகின் பலம்வாய்ந்த நாடு எமது மண்மீது குண்டுவீசிக்கொண்டிருக்கும்போது நாம் நிலவைப் பாடிக்கொண்டிருக்க முடியாது' என்றார். அவர்கள் எல்லோரும் எழுத்து என்பதை ஒரு வீரியமான அரசியல் செயற்பாடாகப் பார்த்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த நூற்றாண்டின் புதிய இலக்கியப் போக்குளை இலத்தீன் அமெரிக்கப் பெண்போராளிகள் படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
எல்சல்வடோர் போராளிக் கவிஞையான அலேக்ரியாவின் கவிதையொன்று...
(எனது மொழிபெயர்ப்பில்)
நான் சமாதானத்தை நேசிப்பதால்...
யுத்தத்தையல்ல, நான்
சமாதானத்தை நேசிக்கிறேன் என்பதால்...
பசித்திருக்கும் குழந்தைகளையும்
உருவழிந்த பெண்களையும் மட்டுமல்ல
ஊமைகளாக்கப்பட்ட மனிதர்களையும் நான்
பார்க்க விரும்பாததால்...
களத்தில் தொடர்ந்து நான் போரிடவேண்டும்.
குவேய் உலங்குவானூர்திகளிலிருந்து
தேர்ந்த விமானிகள்
நேபாம் குண்டுகளினால் எங்கள்
கிராமங்களை துடைத்தெறிகின்றனர்.
நதிகளுக்கு நஞ்சு10ட்டுகின்றனர்.
மக்களுக்கு உணவூட்டும்
பயிர்களை தீயிடுகின்றனர்
அதனால்...
களத்தில் தொடர்ந்து நான் போரிடவேண்டும்.
விடுவிக்கப்பட்ட எம் நிலங்களில்
மக்கள்
வாசிப்பது எப்படியென
பயிலத் தொடங்கியிருக்கின்றனர்.
நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன
மண்ணின் முகிழ்ப்புகளெலாம்
எல்லோருக்கும் சொந்தமாகிறது
அதனால்...
களத்தில் தொடர்ந்து நான் போரிடவேண்டும்
யுத்தத்தையல்ல, நான்
சமாதானத்தை நேசிக்கிறேன் என்பதால்...
களத்தில் தொடர்ந்து நான் போரிடவேண்டும்!
இந்தக் குரலை 'பெயரிடாத நட்சத்திரங்கள்' இல் அம்புலியின் கவிதை இன்னொரு வடிவில் பதிவுசெய்கிறது.
நான் எப்பொழுதும் மரணிக்கவில்லை
யுத்தம் எனக்குப் பிடிக்கவில்லை
குண்டுமழைக் குளிப்பில்
குருதியுறைந்த வீதிகளில்
நிணவாடை கலந்த சுவாசிப்புக்களில்
வெறுப்படைகிறேன்
நரம்புகள் அறுந்து தசைகள் பிய்ந்த
மனிதர்களின்
கோரச் சாவு கண்டு என்
மனம் குமுறுகின்றது
துப்பாக்கி முழக்கத்திடையே
விழித்துக்கொள்ளும் ஒவ்வொரு காலையையும்
என்னால் ரசிக்க முடியவில்லை
வசந்தம் கருகிப்போன வருடங்களாய்
விரிந்துள்ளது எம் வாழ்வு.
எப்பொழுதும்
யுத்தம் எனக்குப் பிடிப்பதில்லை
ஆயினும் அதன் முழக்கத்தினிடையே
எனது கோலம் மாற்றமடைந்தது,
கால நிர்ப்பந்தத்தில்.
சிவந்து கனியும் சுடுகலன் குறிகாட்டியூடே
குண்டுகளின் அதிர்வோசை
கேட்காத ஒரு தேசத்தை
இங்கே தேடுகிறேன்.
வெறிச்சோடிப்போன வீதிகளிலும்
முட்புதர் படர்ந்த வயல்களிலும்
மீண்டும் குதூகலம் கொப்பளிக்க
ஒரு மயானத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட
மகிழ்வோடு பூரிக்கும்
என் தேசத்தைத் தேடி
கால்கள் விரைகின்றன.
ஆயினும்
ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில்
எனை மறக்கவும்
ஒரு குழந்தையை மென்மையாக
தாலாட்டவும்
என்னால் முடியும்.
குளத்தடி மர நிழலில்
எனது புல்லாங்குழலைத் தழுவும்
காற்றோடு கதைபேச
நான் தயார்.
நிம்மதியான பூமியில் நித்திரைகொள்ள
எனக்கும் விருப்புண்டு.
எனது மரத்துப்போன கரங்களுள்
பாய்வது துடிப்புள்ள இரத்தம்.
வெறும்
இடியும் முழக்கமுமல்ல நான்.
நான் இன்னமும் மரணிக்கவில்லை
எப்பொழுதும்.!
- அம்புலி (-1997)
'போர் ஒன்று வருகிறபோது பெண்களும்கூட (கவனிக்கவும் - பெண்களும்கூட) சண்டையிட வேண்டும்' என்ற முன்னோர் வாக்கு வியட்நாமியர்களிடம் இருக்கிறது. இரண்டு தலைமுறைகளாக (யப்பான், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிரான) போர்களைச் சந்தித்த வியட்நாமில் வெற்றியின் இறுதியில் பெண்போராளிகள் குசினிகளைத்தான் வந்தடைந்தனர். எரித்திரிய விடுதலைப் போராட்டம் வெற்றிபெற்றபின்னர் எஞ்சிய பெண்போராளிகள் (முன்னாள் போராளிகளின்) புதிய அரசினால் போதியளவு கவனத்தில் எடுக்கப்படாமல் கைவிடப்பட்டனர். இவ்வாறாக போராட்டங்கள் வெற்றியடைந்தாலென்ன தோல்வியடைந்தாலென்ன பெண்போராளிகள் அநாதரவாக கைவிடப்படுவதையே வரலாறு திரும்பவும் திரும்பவும் ஒப்புவிக்கிறது. இந்தப் படிப்பினைகளையும்கூட புலிகளின் அரசியல் உள்வாங்கியதே கிடையாது.
இருபதாம் நூற்றாண்டு புரட்சிகளின் காலம். குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் அது புயலாய் வீசிய காலம். புரட்சி நாயகனாகிய சேகுவேரா இவ் எழுச்சியை 'புதிய மனிதன்' என வர்ணித்தார். இப் புரட்சிகளில் எண்ணற்ற பெண்களும் பங்குபற்றினர் என்பதை இந்த 'புதிய மனிதன்' என்ற சொல்லுடன்தான் சேயும் விளிக்க முற்பட்டார் என்பது நெருடலான ஒன்றுதான். நடந்த எந்தப் புரட்சியும் பால்நிலை தாண்டிய வெளியை வந்தடைந்ததில்லை. இருந்தபோதும் அவை வௌ;வேறு அளவுகளில் ஆணாதிக்க கருத்துநிலைகளின்மீது தாக்;குதல் தொடுத்துத்தான் இருக்கிறது என்பது மறுத்துவிடக்கூடியதுமல்ல. மார்ச்சியவாதிகள் வர்க்க விடுதலையுடன் பெண்விடுதலை தானாகவே நிகழும் எனவும், தேசியவிடுதலைப் போராட்டங்கள் அதன் வெற்றியுடன் பெண்விடுதலை தானாகவே நிகழும் எனவும் கனவுகாணக் கேட்டவைகள் எல்லாம் பொய்த்தே போயின. இந்தப் படிப்பினைகள் பெண்விடுதலையின் வேர்களை வேறு பரிமாணங்களில் தேடவைத்திருக்கிறது என்பதை நாம் அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
நிக்கரக்குவா பெண்போராளி ஒருவர் பெண்களைப் பொறுத்தவரை இரட்டைப் புரட்சி நடத்தப்பட வேண்டும் என்றார். குறைந்தபட்சம் நிக்கரகுவா புரட்சியாவது வெற்றிபெற்றது. ஆனால் தமிழ்ப் பெண்போராளிகளைப் பொறுத்தவரை திருப்திப்பட ஒரு துரும்புமேயில்லை. கைவிடப்பட்ட இந்தப் பெண்போராளிகளை அவர்களின் நம்பிக்கைகளை, கனவுகளை, அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் ஒரு சிறு பாத்திரத்தை 'பெயரிடாத நட்சத்திரங்கள்' ஆற்றவே செய்கிறது. அவர்களின் குரல்கள் எதிர்காலத்தில் வௌ;வேறு இலக்கிய வடிவங்களில் பதிவுசெய்யப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன. 'பெயரிடாத நட்சத்திரங்கள்' அந்த ஆவணப்படுத்தல்களுள் ஒரு சிறு அத்தியாயமாக இருக்கும்.
இந்த இடத்தில் புலிகள் இன்னொரு (புலியல்லாத) போராளிக் கவிஞையான செல்வியை காணாமல்போகச்செய்து பின் கொன்றொழித்தார்கள் என்ற விடயத்தை 'பெயரிடாத நட்சத்திரங்கள்' தன் முகவுரைக்குள் மீளவும் பதிவுசெய்திருக்கலாம். அதேபோல் முதன்முதலில் களம்கண்டு மரணித்த பெண்போராளி ஈபிஆர்எல்எப் இன் “ஷோபா“ என்ற விடயத்தையும் பதிவுசெய்திருக்கலாம். மற்றைய இயக்கங்களுக்குள்ளும் பெண்போராளிகள் இருந்தனர் என்ற குறிப்பையும் சேர்த்திருக்கலாம். இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதல்ல என்ற புரிதலின் அடிப்படையில் இத் தொகுப்பை அணுகுவதே சரியாக இருக்கும். இக் கவிதைகளுடன் செல்வியின் கவிதைகளை சேர்த்து வெளியிட்டிருக்க வேண்டும் என நான் வெளியீட்டு நிகழ்வன்று விமர்சனம் செய்தேன். செல்வி போராட்டத்தை அமைப்புக்கு வெளியில் நின்று விமர்சித்த ஓர் அற்புதமான போராளிக் கவிஞை. பெயரிடப்படாத நட்சத்திரங்களின் கவிஞைகள் இயக்கத்துள் இருந்து எழுதிய போர்க்களத்துக் கவிதைகள். இரண்டுமே வெவ்வேறான தளங்களில் இயங்குவதால் செல்வியின் கவிதைகள் உள்ளடக்கப்பட்டிருந்தால் வீம்புக்கு ஒரு இடையீடு செய்ய 'பாவிக்கப்பட்டவையாகப்' போய்விடும் ஆபத்தும் உண்டு என நான் இப்போ உணர்கிறேன். (இக் கருத்து மாற்றத்தை நான் சுயவிமர்சனமாக இங்கு முன்வைக்கிறேன்.) ஏனைய இயக்கங்களுக்குள் செயற்பட்ட பெண்போராளிகளின் கவிதைகள் இன்று 23 வருடங்களுக்குப் பின்னரும் வாசிக்கக் கிடைக்கவில்லை.
இத் தொகுப்பு ஒரு ஆவணம் என்ற வகையில் அல்லது பதியப்பட வேண்டிய குரல் என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது புலிகளின் மோசமான அரசியலை மறுக்கிறது அல்லது மறைமுகமாக ஏற்கிறது என மொழிபெயர்க்க இடமில்லை. இந்த மனநோயைத் தாண்டாதவர்களுக்கு இத் தொகுப்பின் மீதான பன்முக வாசிப்பு சாத்தியப்படாது.
(30122011)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.