சிறுகதை உலகில் தனக்கென்றதொரு தனியிடத்தை பெற்றிருக்கும் திருமதி. பவானி சிவகுமாரன் அவர்களின் மூன்றாவது சிறுகதை தொகுதியான நிஜங்களின் தரிசனம் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. யதார்த்தமான 15 கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு மீரா பதிப்பகத்தின் வெளியீடாக 150 பக்கங்களில் அமைந்திருக்கிறது.மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய் ஆகிய தொகுப்புக்களை ஏற்கனவே வெளியிட்ட நூலாசிரியர் பற்றி பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தனது உரையில் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கிறார். சம காலத்தைய மத்திய தரத்தினரின் வாழ்வு இடுக்கினுள் நிகழும் பல்கோணச் சிதறல்களின் தனித்தனிப் பரவல்கள் ஒவ்வொரு சிறுகதைக்குமுரிய தெரிவாகவும், கருவாகவும் அமைகின்றன. அவற்றின் இயல்பு முக்கியத்துவத்தை அடியொட்டி நெட்டாங்கு மற்றும் அகலாங்கு விபரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
படைப்பாளி தன்னை வானத்திலிருத்திக்கொண்டு இலக்கியம் படைக்க முடியாது. தன்னைச் சூழ நடப்பனவற்றிற்கு இலக்கிய வடிவம் கொடுக்கும்போதே அதை வாசிக்கும் வாசகன் அக் கதாபாத்திரங்களை தன் அயலவனாகவோ, உறவினராகவோ, அறிமுகமானவனாகவோ அடையாளம்காண முற்படுகின்றான். அதுதான் அக்கதையின் வெற்றி. யதார்த்தம் இல்லாத எதுவும் காலவோட்டத்தில் காணாமல் போய்விடும் என்று தனது கருத்தை முன்வைத்திருக்கும் திருமதி பவானி அவர்கள் உண்மையில் மனிதநேயமிக்க படைப்பாளி என்பதை அவருடன் பழகிய அனைவரும் உணர்ந்திருப்பர் என்பது திண்ணம். எழுத்துக்கும் செயலுக்கும் வேறுபாடு காட்டாதவனே உண்மை மிக்க கலைஞனாக இருக்க முடியும். அந்த அடிப்படையில் பவானி சிவகுமாரன் அவர்கள் தனது எழுத்துக்கள் போலவே செயற்பாடுகளிலும் உண்மையாக இருக்கிறார்.
சொப்பனத் திருமணம் என்ற முதல் கதையானது திருமணக் கனவுகளுடன் வாழ்ந்த இந்துமதி என்ற பெண்ணின் வாழ்வை அடிப்படையாகக்கொண்டது. கொழும்பில் வீடு வேண்டும் என்றும், நிறம் குறைவு என்றும் இந்துமதியின் திருமணம் காலத்தின் கோலத்தால் தள்ளிப்போகிறது. அன்றாட வாழ்க்கையுடன் வாழப் பழகிக்கொண்ட 32 வயதான இந்துமதி இறுதியாக தோழியின் வழிகாட்டலில் காண்டம் பார்க்கச் செல்கிறாள். அங்கே அவளது ஓலைகள் வாசிக்கப்பட்டு ராகு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அதற்குப் பரிகாரமாக ஒன்பது சுமங்கலிக்கு தானமும், ஒன்பது குழந்தைகளுக்கு இனிப்பு, உடைகள், புத்தகம் ஆகியவை ஒன்பது வகையாகவும் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இறுதியாக பஸ்ஸிலிருந்து இறங்கி தோழி வீட்டை அடைவதற்காக பாதையைக் கடக்க முற்படுகின்றாள் இந்துமதி. பாதுகாப்பு வலயத்தைக் காரணம் காட்டி ஒருவழிப் போக்குவரத்துக்கு மாற்றப்பட்டிருந்த வீதியால் வந்த வாகனம் இந்துமதியை தூக்கியெறிகிறது. கல்யாணக் கனவுகளுடன் வந்தவள் இறுதியில் இறந்துபோகிறாள் என்று அக்கதை நிறைவடைகிறது.
தோற்ற மயக்கங்கள் என்ற சிறுகதை இன்றைய மாணவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைப் படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கின்றது. தனியார் வகுப்புக்களுக்குப் போகும் சில மாணவர்கள் கைத்தொலைபேசி காதை விட்டு அகலாதபடி உலகை மறந்து கதைக்கின்றனர். 'இயர்போனை' மாட்டிக்கொண்டு தமக்கு மாத்திரம் தான் பாடல் கேட்கத் தெரியும் என்ற வகையில் நடக்கின்றனர். புகையிரத பாதைகளில் தன்னை மறந்தபடி பாடல் கேட்டவாறு சென்ற மாணவர்கள் பலர் புகையிரத விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த சம்பவங்கள் ஏராளம் இடம்பெற்றிருக்கின்றன. ஆடை விவகாரத்தில் மாணவிகள் அடிமட்டத்தில் இருக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும் இச் சிறுகதை தாய் தந்தையர் படும் கஷ்ட நஷ்டங்கள் பற்றி விளக்குவதோடு பிள்ளைகள் பின்விளைவுகளை யோசிக்காமல் தனக்கு பிடித்தவர்களுடன் வாழ்க்கையை ஆரம்பிக்குமளவுக்கு துணிச்சலடைந்து விடுகிறார்கள் என்ற உண்மையையும் சொல்லி நிற்பதை அவதானிக்க முடிகிறது.
பெண்களுக்கு உத்தியோகம் அவசியமா இல்லையா என்ற பட்டிமன்றம் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பொருளாதார மேம்பாட்டுக்காக பெண்கள் தொழில் பார்க்கலாம் என்று ஒரு சிலரும், பெண்கள் ஆணுக்கு குறைந்தவளல்ல அவளும் தொழில் செய்யலாம் என்று இன்னொரு சாராரும், பெண்கள் வீட்டிலிருப்பதே சிறந்தது என வேறு சிலரும் கூறி வருகின்றனர். எது எப்படிப்போனாலும் பிள்ளைகளை வளர்த்தல், சமைத்தல், வீட்டு வேலைகள் செய்தல் போன்ற பொறுப்புக்கள் பெண்களைச் சார்ந்தததாக இருக்கின்றது. கோடைகாலத் தூறலகள் என்ற சிறுகதையில் வரும் தயாளினியும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஓய்வொழிச்சலின்றி இருக்கிறாள். அப்படியிருக்க இன்னொரு தலையிடியாக வந்து சேர்கிறாள் கணவனின் ஒன்றுவிட்ட சகோதரியான ஆனந்தி. வெளிநாடு போவதற்காக விசா வரும் வரை ஆனந்தி தயாளினியின் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.
ஆனந்தியின் பிள்ளைகள் செய்கின்ற அட்டகாசங்கள் தயாளினியை கோபம் கொள்ளச்செய்தாலும் தயாளினியின் வேலைகளில் முக்கால்வாசியை ஆனந்தி பொறுப்பேற்கிறாள். டே கெயாரில் விடப்படும் தயாளினியின் மகனையும் ஆனந்தியே வளர்க்கிறாள். இவ்வாறிருக்க எட்டு மாதங்களின் பின் ஆனந்திக்கு விசா வருகிறது. அவள் புறப்படும் நாளுக்கு முந்தின நாள் இரவு தயாளினியிடம்,
'நான் தனியப் பிள்ளைகளோட சண்டைக்க எவ்வளவு கஷ்டப்பட்டன். ஏழு வருஷம்... இவ்வளவு நாள் நானும் கணவரும் பிரிஞ்சிருப்பம் என்று நினைக்கல்ல. நீங்க இல்லாட்டா நான் கொழும்பில கஷ்டப்பட்டிருப்பன். நானோ பிள்ளைகளோ தெரியாம ஏதாவது பிழை விட்டிருந்தால் மனசுல வச்சிருக்காதேங்கோ' என்று அழும் காட்சி மனதை நெருடுகிறது.
இவ்வாறான உரையாடல்களை உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கும் நூலாசிரியர் பவானி சிவகுமாரன் அவர்கள் ஆனந்தியின் பிள்ளைகள் வீட்டிலுள்ள டெப், க்ளாஸ் ஆகியவற்றை உடைக்கையில் 'பிள்ளைகளாம் பிள்ளைகள். சரியான குரங்குகள். தாயும் பிள்ளைகளும் சரியான பட்டிக்காடுகள்' என்றவாறு நகைச்சுவையூட்டக்கூடிய சிலவரிகளை எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியில் ஆனந்தி சென்றுவிட இதுவரை ஆனந்தியிடம் ப்ரியமாக இருந்த தயாளினியின் மகன் மிகவும் சோர்வுற்றுப் போகிறான். அவனது முகத்தில் சந்தோஷம் காணாமல் போகிறது. அவன் தாயிடம் வேலைக்குப்போக வேண்டாம் என்று கூற தயாளினி பிள்ளைக்கும் தனக்குமாக கீழுள்ளவாறு சமாதானம் கூறிக்கொள்கிறாள் என்றவாறு கதை நிறைவடைகிறது.
'அம்மா வேலைக்குப் போனாத்தானே பிள்ளைக்கு வடிவான டீ சேட், ஷூஸ், ஸ்கூல் பேக் வாங்கலாம். பிள்ளையின் ரூமுக்கு ஏஸி போடுவமா? கார் வாங்கலாம். ராகவ் அண்ணா மாதிரி நிறைய படிக்கலாம்...'
நிழல் கொஞ்சம் தா என்ற கதை பாட்டி பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்வதினூடாக நற்பழக்க வழக்கங்களை புகட்டுவதாய் அமைந்துள்ளது. மகன் மயூரனுடன் வசிக்கும் அந்தத்தாய் தனது சகோதரியின் மகளின் திருமணத்துக்காக தன் தாலியையும் காப்பையும் கொடுக்கின்றாள். அதையறிந்த மகன் தாயுடன் வாக்குவாதப்படுகின்றான். இரவு பேரப்பிள்ளைகள் பாட்டியிடம் கதை கேட்கப்போகிறார்கள். அவர் கூறும் கதை பாண்டவர் பற்றியது. அதில் தர்மனிடம் எந்தத் தம்பியை உயிருடன் பெற்றுக்கொள்ளப் போகிறாய்? என்று தர்மதேவதை கேட்டபோது, தர்மர் நகுலனைத் தருமாறு கேட்கிறார் காரணம் ஷஎனது தாய் குந்தி தேவிக்கு நான் இருப்பது போல எனது சிற்றன்னைக்கு அவரது மகன் நகுலன் இருக்கட்டுமே| என்கிறார். அதைக்கேட்டு தர்மதேவதை நான்கு தம்பிமாரையும் உயிரோடு திருப்பிக்கொடுக்கிறது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பாட்டி கதை சொல்லி இறுதியில் உன்னைப்போல் பிறரை நேசி என்ற தத்துவத்தை விளக்குகிறாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த மகன் மயூரன் மனம் மாறி இறுதியில் தாயிடம் இவ்வாறு கூறுகிறான்.
'அம்மா நான் நாளைக்கு வேலையால வரேக்க ரெடியா இருங்கோ. பிள்ளைகள் சின்னன்ல போட்ட காப்பு, மோதிரம் எல்லாம் சும்மாதானே இருக்கு. வெறுங்கையோட இருக்க வேண்டாம். உங்களுக்கு காப்பு வாங்கி வரலாம்...'
ஒரு சின்ன விடயத்தை வைத்து அழகிய கதையை ஆக்கும் திறமையுள்ள பவானி சிவகுமாரன் அவர்கள் மேலும் பல படைப்புக்களைத்தர வேண்டுமென்று வாழ்த்துகிறோம்!!!
நூலின் பெயர் - நிஜங்களின் தரிசனம்
நூலாசரியை - பவானி சிவகுமாரன்
விலாசம் - 37 ஏ, ஸ்ரீ மகா விகார வீதி, களுபோவில, தெஹிவளை.
வெளியீடு - மீரா பதிப்பகம்
தொலைபேசி - 011 2721382
விலை - 300 ரூபாய்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.