[ ஏற்கனவே எம்.ஏ.சுசீலா அவர்கள் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும் தணடனையும்' நாவலை தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றார். அது தமிழ் இலக்கிய உலகில் பரவலான வரவேற்பினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தஸ்தயெவ்ஸ்கியின் 'அசடன்' நாவலை மொழிபெயர்த்திருக்கின்றார். அம்மொழிபெயர்ப்பு தற்போது நூலுருப் பெற்றுள்ளது. மேற்படி நாவலைப் பற்றி சுசீலா அவர்கள் தனது வலைப்பதிவில் எழுதியிருந்த குறிப்புகளை இங்கே மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்-] தஸ்தயெவ்ஸ்கியின் இடியட் நாவலை ‘அசடனா’க மொழிமாற்றிய அற்புதமான கணங்கள்,என்றென்றும் நினைவு கூரத்தக்க வாழ்நாள் அனுபவமாக எனக்கு வாய்த்ததால் இந்நூல் வெளியாகும் இத் தருணம் என் மனதுக்கு மிகவும் நிறைவளிக்கிறது. முழுமையான தீமை என்றோ...முழுக்க முழுக்கத் தீயவர்கள் என்றோ உலகில் எதையும் யாரையும் வரையறுக்க முடியாது என்பதை எப்போதுமே தன் படைப்புக்களில் முன்னிறுத்துபவர் தஸ்தயெவ்ஸ்கி என்பது அவரைப் பற்றி ஓரளவேனும் அறிமுகமுடைய வாசகர்கள் அறிந்திருப்பதுதான்.
காமுகனான சுவிட்ரிகைலோவ்,கண்டிப்பான கடுமை காட்ட வேண்டிய நிலையில் இருக்கும் நீதிபதி போர்ஃபிரி பெத்ரோவிச் ஆகியோரிடமும் கூட வற்றாமல் சுரக்கும் மானுடக் கருணையின் தெறிப்புக்களைக் குற்றமும் தண்டனையும் நாவலிலும் கூட மிக இயல்பாகச் சித்திரித்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. அவரது இடியட்/அசடன் நாவலும் அதிலிருந்து விலக்குப் பெற்றதில்லை என்பதோடு கூடுதலான ஒரு பரிமாணமும் அதில் சேர்ந்திருப்பதே அவரது பிற படைப்புக்களிலிருந்து தனித்து நிற்கும் தகுதியை அசடனுக்கு அளிக்கிறது.
அசடனாகச் சொல்லப்படும் இளவரசன் மிஷ்கினின் பாத்திரத்தை அப்போதுதான் மண்ணில் ஜனித்த ஒரு குழந்தையைப் போன்ற பரிசுத்தத்துடன் - கபடுகளும் சூது வாதுகளும் வன்மங்களும் வஞ்சனை எண்ணங்களும் கிஞ்சித்தும் தலை காட்டாத ஒரு பாத்திரமாக மட்டுமே - மிகப் பெரிய இந்த ஆக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் முழுக்க முழுக்கக் காட்ட முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.பிறரைப் பற்றிய தவறான எண்ணம் தற்செயலாக மனதில் தோன்றும் தருணங்களிலும் - அந்த எண்ணம் அல்லது கணிப்பு உண்மையாகவே இருந்தாலும் கூட- அப்படி நினைத்து விட்டதற்காகவே தன்னைத் தானே கடிந்து கொள்ளும் ஓர் உன்னத மாமனிதன் மிஷ்கின்.பிறர் துயர் கண்டு இரங்கி நெகிழ்வதோடு நின்று விடாமல்,அந்தத் துயர் தீர்க்கத் தன்னையே ஒப்புக் கொடுத்துக் களபலியாக்கத் துணியும் உள்ளம் மிஷ்கினைப் போல அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்து விடுவதில்லை.இயேசுவை மனதில் கொண்டுதான் மிஷ்கினின் பாத்திரத்தை தஸ்தயெவ்ஸ்கி உருவாக்கியிருக்கக் கூடும் எனத் திறனாய்வாளர்கள் கூறுவது இது பற்றியே.
தன்னை வேடிக்கைப் பொருளாக்கி அலைக்கழிக்கும் பெண்களாகட்டும்.. வன்மத்தோடும்,பொருளாசையால் தூண்டப்பட்ட சுரண்டல் விருப்பங்களோடும்,கொலை வெறியோடும் தன்னை அணுகும் மனிதர்களாகட்டும்..! இவர்களில் எவருமே எப்போதுமே அவனது வெறுப்புக்கும் கசப்புக்கும் உரியவர்களாவதில்லை; மாறாக அவர்களின் நிலை கண்டே அவன் கசிந்து உருகுகிறான் ; அவர்களது எதிர்காலம் குறித்தே அவன் கவலை கொள்கிறான்.உலகத்தின் லௌகீகப் பார்வையில் அவன் அசடனாகப் பார்க்கப்படுவதற்கான காரணம்
அதுவே...''எனக்கு இருபத்தேழு வயதாகிறது.. ஆனாலும் கூட நான் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறேன்... என்னுடைய பாவனைகள் எல்லாமே...எப்போதுமே இடத்துக்குப் பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன. நான் சொல்ல நினைத்த கருத்துக்கு எதிரான கருத்தையே அவை வெளிப்படுத்தி விடுகின்றன. அதனாலேயே நகைப்புக்கு இடமாகி நான் சொல்ல வந்த கருத்துக்களைத் தரம் தாழ்த்தியும் விடுகின்றன..
எதை..எப்படி..எந்த அளவுக்குச் சொல்வது என்ற அறிவு என்னிடம் சுத்தமாகவே இல்லை.அதுதான் முக்கியமான விஷயம்..! ’’ என்றபடி தன் நடத்தை மீதான ஒப்புதல் வாக்கு மூலத்தை அவனே அளித்தபோதும் -ஒரு புறம் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கும் உலகம் அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் மறுதலிப்பதே இல்லை.அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா,ரோகோஸின் போன்றவர்களும் கூட அந்த உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதிலேயே இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது.
பொதுவாகவே பிறநாட்டு,பிற மாநிலப் பின்புலம் கொண்ட படைப்புக்கள் நம்மிடம் ஒரு அந்நியத் தன்மையை ஏற்படுத்திவிடுவது போல நமக்கு நாமே கற்பித்துக் கொண்டிருப்பதனாலேயே அவற்றின் மீது நாட்டம் செலுத்துவதில்,அவற்றை படிப்பதில் நமக்குள் நிரந்தரமான ஒரு தயக்கம் இருந்து கொண்டிருக்கிறது.மொழியாக்கங்கள் போதிய அளவு விற்பனை செய்யப்படாமலும், அவற்றுக்கான அங்கீகாரம் உரிய முறையில் கிடைக்காமலும் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்ற கசப்பான உண்மையை இங்கே ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ’விசித்திர விபரீத உடையுடன்,பாஷையுடன் காணப்பட்டாலும் - அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்கவே’’மொழியாக்கம் முயல்கிறது(மணிக்கொடி,நவ.1937.) என்று புதுமைப்பித்தன் குறிப்பிடுவதைப்போலப் பிரபஞ்சமெங்கும் வியாபித்துக் கிடக்கும் மனித இயற்கையே அசடன் நாவலிலும் உயிர்த் துடிப்போடு நம் கண்முன் விரிகிறது; உறவு/நட்புக்களின் மோதல்கள் ,தனி மனித அவசங்கள், கொந்தளிப்பான உணர்வுப் போராட்டங்கள் ஆகியவை நாடு மொழி இனம் கடந்து சகலர்க்கும் பொதுவானவை என்பதாலேயே இப் படைப்பு உலகம் முழுமைக்கும் பொதுவான உலகப் பேரிலக்கியம் என்ற தகுதியையும் பெற்றிருக்கிறது.
பணக்கார மனிதன் ஒருவனின் பாதுகாப்பில் வளர்ந்து அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைந்து நினைத்தே கழிவிரக்கம் கொண்டவளாகி - முறையான திருமண வாழ்விற்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் அதற்குத் தகுதியற்றவளாய்த் தன்னைக் கருதியபடி ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்து விட்டு ஓடிப் போகும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா , ஜெயகாந்தனின் கங்காவை (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்கு நினைவுபடுத்துவதில் வியப்பில்லை; செல்வந்தர் வீட்டுச் சின்னப் பெண்ணாகக் குறும்பு கொப்பளிக்க ஏதாவது ஒரு சாகசம் செய்தே தீரும் ஆவலுடன் நாவலில் வளைய வரும் அக்லேயா.., தளபதி என்ற அதிகார மிடுக்கு ஒரு புறம் இருந்தாலும் குடும்பப் பாசமும் மிஷ்கின் மீது பிரியமும் கொண்டவராய் நாவலில் இடம் பெறும் இபான்சின்,வெள்ளை மனம் கொண்ட அவளது அன்னை,பாசம் காட்டும் சகோதரிகள் என நாவல் காட்டும் அந்தக் குடும்பத்தின் சூழல் நம்மைச் சுற்றி நாம் பார்க்க முடியாததா என்ன?
மரணத்தின் நாளை எதிர்நோக்கியபடி தன் இறுதி சாசனத்தை வாசிக்கும் நோயாளியான இப்போலிட்,வன்மத்தோடு வளைய வரும் கன்யா, கொலைவெறியோடு சுற்றிவரும் ரோகோஸின்,பணம் படைத்தவர்களிடம் வளைந்து நெளிந்தபடியே வாழ்வை நகர்த்தும் ஒட்டுண்ணி மனிதர்களின் பிரதிநிதியாகிய லெபதேவ் என நாவலில் இடம் பெறும் வேறுபட்ட பல பாத்திரங்களின் குண இயல்புகளை நாம் வாழும் சூழலிலும் கூட நாம் எதிர்ப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆள் பெயர்,இடப்பெயர்,பழக்க வழக்கங்கள்..ஒரு சில கலாசார வேறுபாடுகள் ஆகியவற்றைச் சற்றே கவனத்தோடு உள் வாங்கிக் கொண்டபடி நாவலின் முதல் ஐம்பது அறுபது பக்கங்களை மட்டும் கடந்து விட்டால் உணர்ச்சிமயமானதும்,இங்கே நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஒரு உலகம்தான் அங்கேயும் காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவதோடு மகத்தான் ஓர் உலக இலக்கியத்தைத் தவற விட்டு விடவில்லை என்ற ஆத்ம திருப்தியும் நமக்குக் கிடைக்கும்.
குழந்தையைப் போன்ற அப்பாவித்தனத்துடனும்,களங்கமற்ற பரிசுத்தமான துறவியைப் போன்ற வாழ்க்கை முறையுடனும் இந்நாவல் முழுவதும் வியாபித்திருக்கும் மிஷ்கினுடனும்...அவன் எதிர்ப்பட்டு அன்பு செய்யும் சக மனிதர்களுடனும் ஊடாடுவதற்கும், தஸ்தயெவ்ஸ்கியின் அலைவரிசையில் அவர்களை அணுக்கமாக விளங்கிக் கொள்வதற்கும் இம் மொழியாக்கம் எனக்குப் பெரிதும் துணை
புரிந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக் காலம் தொடர்ந்த இப் பணியில் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது எனக்குள் ஏற்பட்ட பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க இயலாத மகத்துவம் கொண்டது.
’குற்றமும் தண்டனையும்’ நாவல் மொழியாக்கத்தைத் தொடர்ந்து என் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து ஒப்பற்ற இப் பணியை என் வசம் ஒப்புவித்து, தஸ்தயெவ்ஸ்கியின் இரு உலகப்பேரிலக்கியங்களை அடுத்தடுத்து மொழிபெயர்க்கும் அரிய வாய்ப்பினை எனக்கு அளித்த மதுரை பாரதி புத்தக நிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கு என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிஉணர்வை முதலில் உரித்தாக்குகிறேன். குற்றமும் தண்டனையும் நூலைப் போலவே உரிய பின்னிணைப்புக் கட்டுரைகளுடனும்,திரைப்படக் காட்சிப் படங்களுடனும் - ‘அசடன்’நாவலையும் மிகச் சிறப்பான பதிப்பாக வெளிக் கொணர - பல வகையான சிக்கல்களுக்கு நடுவிலும் அயராது அவர் மேற்கொண்ட முயற்சிகளை வணிகநோக்கம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கி விட முடியாது; இலக்கியத்தின் மீது ஆழ்ந்த ஈர்ப்பும்,அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டோருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய இந்தச் சாதனையை மெய்யாக்கித் தமிழுக்கு வளம் சேர்த்த அவருக்கு என் பாராட்டுக்கள்.
இந்நாவலின் இடையிடையே விரவி வந்திருக்கும் ஃபிரெஞ்சுப் பழமொழிகள், தொடர்கள்,கலைச்சொற்கள் ஆகியவற்றைத் தமிழில் பிழையின்றிக் கொண்டு சேர்க்க எனக்கு உதவிய புது தில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக ஃபிரெஞ்சுத் துறைப் பேராசிரியை திருமதி ஷோபாசேகர் அவர்களையும் இந்த வேளையில் நன்றியோடு நினைவு கூர்கிறேன். ரஷிய மூலத்திலிருந்து ஆங்கிலம் வழியாக இடியட்டை மொழி மாற்றம் செய்ய CARNACE GARNETT இன் மொழிபெயர்ப்பே எனக்குப் பெரிதும் துணை நின்றது; அதை அடியொற்றியே என் மொழியாக்கம் அமைந்திருக்கிறது என்பதையும்,கூடுதல் தெளிவுக்கு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் JULIUS KATZER இன் ஆங்கிலமொழிபெயர்ப்பையும் நான் ஒப்பு நோக்கிக் கொண்டேன் என்ற தகவலையும் இங்கே பதிவு செய்ய விழைகிறேன். உலகப் பேரிலக்கியங்கள் அளிக்கும் தரிசனங்கள் மானுடத்தின் உச்சமான நல்ல
பக்கங்களைத் திறந்து காட்டும் நுழை வாயில்கள். அந்த உச்ச கட்ட கணங்களின்போது நான் பெற நேர்ந்த தரிசனங்களை - மூல நாவலிலிருந்து முரண்படாத உயிரோட்டத்துடன் எனது மொழி அளித்திருப்பதாக இதைப் படிக்கும் வாசகர்கள் சிலர் கருதினாலும் கூட அதுவே இம் மொழியாக்கப் படைப்பின் வெற்றியாக அமையும்.
அசடனில் சில பாத்திரங்கள்!
- எம்.ஏ.சுசீலா -
முழுமையான தீமை/நன்மை என்றோ...முழுக்க முழுக்கத் தீயவர்கள்/நல்லவர்கள் என்றோ உலகில் எதையும் யாரையும் இருமைகளாக மட்டுமே எப்போதும் வரையறுத்து விட முடியாது என்பதையே தன் படைப்புக்களில் பெரும்பாலும் முன்னிறுத்தும் தஸ்தயெவ்ஸ்கி முழுமையான ஒரு நன்மையின் உருவகமாகக் காட்ட முயன்றுள்ள பாத்திரமே மிஷ்கின் என்னும் அசடன் பிறமொழி நாவல்களை வாசிக்கையில்-அதிலும் குறிப்பாக அயல்நாட்டு இலக்கியங்களை வாசிக்கையில் அவற்றில் இடம் பெறும் பெயர்கள் - குடும்பத் துணைப் பெயர்கள்-surname-மற்றும் சுருக்கமாகக் குறிப்பிடும் செல்லப் பெயர்கள் இவை நம்மை அந்த நாவலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற ஒரு தயக்கமும் மலைப்பும் ஏற்படுவது இயல்புதான்..ஆனால் முன் பதிவொன்றில் நான் குறிப்பிட்டிருப்பது போல அந்தப் படைப்புக்கள் ’’விசித்திர விபரீத உடையுடன்,பாஷையுடன் காணப்பட்டாலும் - அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்க முயற்சிக்கி’’ன்றன என்று மட்டும் கொண்டால்-(நம் ஊர் சுப்பிரமணியனும், கணேசனும்,ரமேஷ் சுரேஷ் முதலிய பெயர்களும் அவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும் என்று மட்டும் நினைத்தபடி)- அந்தக் கட்டத்தைத் தாண்டிச் சென்று விட்டால் மகத்தான தரிசனங்களும் உச்சங்களும் அங்கே நமக்காகக் காத்திருக்கும்.
தஸ்தயெவ்ஸ்கியின் இடியட்/அசடன் நாவலில் வந்து போகும் பாத்திரங்கள் மிகப்பல.தளபதி என்ற அதிகார மிடுக்கு ஒரு புறம் இருந்தாலும் குடும்பப் பாசமும் மிஷ்கின் மீது பிரியமும் கொண்டவராய் நாவலில் இடம் பெறும் இபான்சின், வெளிப்படையாகப் பேசும் இயல்பு கொண்ட கபடுகளற்ற மனம் கொண்ட அவரது மனைவி,பாசநெருக்கத்தோடு கூடிக் குலவும் அவரது மகள்கள்,மரணத்தின் நாளை எதிர்நோக்கியபடி தன் இறுதி சாசனத்தை வாசிக்கும் நோயாளியான இப்போலிட்,வன்மத்தோடு வளைய வரும் கன்யா, கொலைவெறியோடு சுற்றிவரும் ரோகோஸின்,பணம் படைத்தவர்களிடம் வளைந்து நெளிந்தபடியே வாழ்வை நகர்த்தும் ஒட்டுண்ணி மனிதர்களின் பிரதிநிதியாகிய லெபதேவ்,பழைய நினைவுகளில் சஞ்சரிப்பதையே பொழுது போக்காய்க் கொண்டிருக்கும் கன்யாவின் தந்தை முன்னாள் தளபதி இவால்ஜின்,மிஷ்கின் மீது வெகுளித்தனமான உண்மையான பாசம் வைத்திருக்கும் அவரது இரண்டாவது மகன் கோல்யா என அசடன் நாவலில் இடம் பெறும் பலதரப்பட்ட பாத்திரங்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு தனித் தன்மையுடன் காட்ட நாவலாசிரியர் முயன்றுள்ளபோதும் இளவரசன் மிஷ்கின் மற்றும் அவனது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா,அக்லேயா ஆகிய இரு பெண்கள் -இடையே குறுக்கிடும் ரோகோஸின் இவர்களை மையம் கொண்டதாகவே நாவல் பெரிதும் நகர்கிறதென்பதால் அவர்களை முன்னிலைப்படுத்தி இங்கே சில செய்திகள்.... ரஷ்ய பிரபுத்துவ/சிற்றரச வம்சம் ஒன்றின் வாரிசான 26 வயது இளைஞன் லேவ் நிகொலெயெவிச் மிஷ்கின் இளவரசனே நாவலின் முதன்மைப் பாத்திரமாகிய அசடன்.உலகியலின் சூது வாதுகளைப் பற்றிச் சிறிதும் அறியாத பரிசுத்தமான உள்ளம் கொண்டிருக்கும் அவன்,பிறர் துன்பம் கண்டு நெகிழ்வதோடு மட்டுமன்றி அவர்களின் நன்மைக்காகத் தன் வாழ்வையே கூடப் பணயமாக்கி விடத் துணிபவன்.மிகப் பெரிய இந்த ஆக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் வஞ்சனை எண்ணங்களே கிஞ்சித்தும் தலை காட்டாத ஒரு பாத்திரமாக மட்டுமே மிஷ்கினைக் காட்ட முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி என்பது அசடன் சில முன் குறிப்புகள்[3]இலும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
முழுமையான தீமை/நன்மை என்றோ...முழுக்க முழுக்கத் தீயவர்கள்/நல்லவர்கள் என்றோ உலகில் எதையும் யாரையும் இருமைகளாக மட்டுமே எப்போதும் வரையறுக்க முடியாது என்பதையே தன் படைப்புக்களில் பெரும்பாலும் முன்னிறுத்தும் தஸ்தயெவ்ஸ்கி முழுமையான ஒரு நன்மையின் உருவகமாகக் காட்ட முயன்றுள்ள பாத்திரமே மிஷ்கின் என்னும் அசடன்.
தன்னைக் கொலை செய்யவோ ஏமாற்றவோ முன்வரும் எவரையும் கூட,எந்தக் கட்டத்திலும் தவறாக எண்ணத் துணியாதவன் மிஷ்கின். ''இவரைப் போன்ற ஒரு மனிதரை ..இந்த அளவு பெருந்தன்மையும்,எளிமையும் கொண்ட ஒரு மனிதரை நான் எதிர்ப்பட்டதே இல்லை.அவரை ஏமாற்றிவிட வேண்டும் என்று எவர் நினைத்தாலும் அவரை ஏமாற்றி விட முடியும்;தன்னை அவ்வாறு ஏமாற்றியவரைக்கூட அவர் பிற்பாடு மன்னித்து விடுவார்’’ என்கிறாள் அவனை நேசிக்கும் அக்லேயா. தன் மீது வன்மமும் பொறாமையும் கொண்டு தன் மீது கத்தி வீச வரும் ரோகோஸினையும் கூட அவனால் மன்னித்து ஏற்க முடிகிறது. உண்மையில் நஸ்டாஸ்யாவை முன் வைத்துத் தன் மீது விளைந்த பொறாமை உணர்வால் ரோகோஸின் தன் மீது கத்தியை வீசக் கூடும் என்பது மிஷ்கினின் உள்ளுணர்வுக்குள் தோன்றவே செய்கிறது.
ரோகோஸின் வீட்டின் படிக்கும் அறையில் புத்தகத்தின் நடுவே பார்க்க நேரிடும் கத்தி அவனுள் அவ்வாறான ஒரு முன்னறிவிப்பைக் கிளர்த்தியபோதும் அப்படி ஒரு நினைப்பு தன்னுள் தோன்றியது கூட நினைதைக் கூட ஒரு பாவச் செயலென்றே கருதுகிறான் அவன். ஒரு வேளை தான் நினைத்தபடி எதுவும் நடக்காமல் போனால் அப்படி மனதுக்குள் நினைத்துக் கொண்டது ஒரு தவறுதானே என எண்ணும் அளவுக்கு நெகிழ்வானவன் அவன். இதை ரோகோஸினிடமே அவன் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறான். ‘’தொடக்கத்திலிருந்தே உங்களை ப்பார்க்கும்போதெல்லாம் அப்படிப்பட்ட எதிர்பார்ப்போடு கூடிய ஒரு உள்ளுணர்வு என்னிடம் இருந்துகொண்டுதான் இருந்தது.நாம் சிலுவைகளை மாற்றிக் கொண்ட அந்தத் தருணத்திலே கூட அ ப்படிப்பட்ட சந்தேகம் என் மனத்தின் ஒரு மூலையில் இருந்திருக்கலாம்.நம் இருவரின் எண்ணங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன.ஒருவேளை நீங்கள் என்னைத் தாக்க முற்படாமல் இருந்திருந்தால் நான் என் முகத்தை எங்கே வைத்துக் கொள்வேன்!நீங்கள் அப்படித்தான் ஏதோ செய்யப் போகிறீர்கள் என்று சந்தேகப்பட்டு விட்டதால் கிட்டத்தட்ட நம் இருவரின் பாவங்களும் ஒரே மாதிரியானவைதான்..’’
இப்படிச் சொன்னதோடு நின்று விடவில்லை மிஷ்கின். உண்மையாகவே ரோகோஸின் தன்னைத் தாக்க வந்து அதிலிருந்து தப்பிப் பிழத்த பிறகும் கூட அவனது அந்தச் செயல் ஆத்மார்த்தமானதல்ல..ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் நிகழ்ந்த பைத்தியக்காரத்தனமே அது என்றும் அவனால் பார்க்க முடிகிறது. ‘’அப்பொழுது நடந்த எல்லாவற்றையும் வெறும் பைத்தியக்காரத்தனமாக மட்டுமே நான் பார்க்கிறேன்... அன்றொரு நாள் நாம் பரஸ்பரம் சிலுவைகளைப் பரிமாறிக் கொண்டோமே அந்த பர்ஃபியோன் ரோகோஸின்தான் என் நினைவில் இருக்கிறான்,மற்ற எல்லா விஷயங்களையும் மறந்து விடும்படியும் திரும்பவும் அது பற்றிப் பேச வேண்டாம் என்றும் நேற்றிரவு நாந்தான் உங்களுக்கு எழுதியிருந்தேனே அப்புறமும் ஏன் இப்படி விலகிப் போக வேண்டும்....நாம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஏன் கோபம் கொள்ள வேண்டும்..’’
மிஷ்கினின் இந்த வார்த்தைகள் கொடூர நெஞ்சம் படைத்த ரோகோஸினைக் கூட இலகுவாக்கி விட ‘’ஏதோ உங்களால் கூடக் கோபமும் பகைமையும் கொள்ள முடியும் என்பதைப் போல அல்லவா பேசுகிறீர்கள்.நீங்கள் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறீர்கள் இளவரசே...’’ என்று அவனே மிஷ்கினுக்கு நற்சான்றும் வழங்கி விடுகிறான்.
மகதலீனா மேரியின் மீது கல்லெறியாமல் இருக்கச் சொன்ன இயேசுவைப் போல எல்லோரும் பரிகசித்து இழிவு செய்யும் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா மீது கரை காணாக் கருணை காட்டி அவளுக்காகவே தன் காதல் வாழ்வையும் கூடத் தொலைத்து விட்டு நாவலின் முடிவில் மீண்டும் மனநிலைப் பிறழ்வுக்கு ஆளாகிறான் மிஷ்கின். உலகியல் வாழ்வின் அளவுகோல்களுக்குப் பொருத்தமற்ற அசடனாக அவன் கணிக்கப்படுவதற்கு அந்தச் செயலும் முதன்மையான ஒரு காரணமாகிறது.
ரோகோஸினையும் நஸ்டாஸ்யாவையும் தொடர்ந்தபடி மிஷ்கின் மாஸ்கோவுக்கு ஓடுவது இபான்சின் குடும்பத்தாருக்குச் சற்று சங்கடத்தை ஏற்படுத்தினாலும் மிஷ்கின் எதற்காகவும் யாருக்காகவும் கவலை கொள்ளாமல் நஸ்டாஸ்யாவை மீட்பது ஒன்றே குறியென இருக்கிறான்;ஆனால் அவளோ கிட்டத்தட்ட ஆறுமாத காலம்,அவனையும் ரோகோஸினையும் மாறி மாறி அலைக்கழிக்கிறாள்;
ரோகோஸினோடு மணமேடை வரை பல முறை வந்து விட்டுத் திடீரென மிஷ்கினிடம் ஓடி வந்து விடும் அவள் அவனிடமிருந்தும் சட்டென்று மாயமாகி விடுவாள். இனிமேல் தன்னால் ஆவது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து கொண்ட கட்டத்தில், மிஷ்கின் பீட்டர்ஸ்பர்க் நகருக்குத் திரும்பி வருகிறான்.ரோகோஸின் வீட்டிலேயே அவனைச் சந்தித்து அவன் மீதான தன் நல்லுணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்கிறான். தான் அணிந்திருக்கும் சிலுவையை மிஷ்கினுடன் மாற்றிக் கொண்டு அவனைத் தாயிடம் ஒரு சகோதரனாக அறிமுகம் செய்து வைக்கும் ரோகோஸினுக்கு அவனைக் கொல்லும் பொறாமை வெறியும் (நஸ்டாஸ்யா சார்ந்ததாக) உடனேயே ஏற்பட்டு விட, மிஷ்கினைக் கொல்லும் வெறியோடு அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து அவனைக் கத்தியால் குத்த முயல்கிறான்.மிஷ்கினுக்குத் திடீரென ஏற்படும் காக்காய் வலிப்பு நோய் அப்போது ஏற்பட்டு அவன் மயங்கி விழுவதால் ரோகோஸின் எதுவும் செய்யாமல்,அங்கிருந்து அகன்று சென்று விடுகிறான்.
மிஷ்கினுக்கு எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்திருக்கும் சொத்து பெருந்தொகையாக இல்லையென்பதோடு,ஏற்கனவே அதில் சேர வேண்டிய கடன் பாக்கி தங்களுக்கு இருப்பதாக வேறு சொல்லிக் கொண்டு பலரும் அவனை முற்றுகையிட்டபடி இருக்கிறார்கள்.
இயல்பாகவே இரக்க குணம் படைத்த மிஷ்கின் அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை; அவனது ஏமாளித்தனம் கண்டு லிசவெதாப்ரகோஃபியேவ்னா-இபான்சின் தம்பதியர் வருத்தம் அடைந்தாலும் அவனது உயர்வான குணம் அவர்களை வியக்கவும் வைக்கிறது.
சொத்துக்களைப் பராமரிப்பதில் மிஷ்கினுக்கு உதவியாக இருந்தாலும் ஒரு புறம் அவன் மீது பொறாமை உணர்வை அடைகாத்தபடியே இருக்கிறான் கன்யா; ரோகோஸினுக்குக் கூட்டாளியாக இருந்த லெபதேவ் இப்போது மிஷ்கினோடு ஒட்டிக் கொள்கிறான்.பணம் படைத்தவர்களோடு ஒட்டிக் கொண்டிருப்பதே அவனது பிறவிக் குணம்.பாவ்லோஸ்க் என்னும் கோடைவாசச் சிற்றூரில்,லெபதேவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கு ஓய்வெடுக்க வருகிறான் மிஷ்கின்; தங்கள் கோடை காலத்தைக் கழிப்பதற்காக இபான்சின் குடும்பமும் பாவ்லோஸ்கிலேதான் தங்கியிருக்கிறது. நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னாவும்தன் தோழி ஒருத்தியின் வீட்டில்- பாவ்லோஸ்கில் தங்கியிருக்கிறாள்;அவளை அவ்வப்போது கண்காணிக்க ரோகோஸினும் அங்கு வந்து செல்கிறான். மிஷ்கினை வளர்த்த பாவ்லிஷ்ட்சேவின் மகன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டபடி பர்தோவ்ஸ்கி என்ற ஓர் இளைஞனும் அவனைச் சார்ந்த வாலிபர் கூட்டமும் மிஷ்கினை வளைத்துக் கொண்டு பணம் பறிக்க முயல்கிறது.மிஷ்கின் அந்தச் சூழ்நிலையை நிதானமாகவும்,பொறுமையாகவும் கையாளுகிறான்;பர்தோவ்ஸ்கி பாவ்லிஷ்ட்சேவின் மகன் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டாலும் அவனுக்குப் பணம் தர முன் வருகிறான். அந்தக் கூட்டத்திலுள்ள இளைஞர்கள் மிஷ்கினின் நல்லியல்புகளைப் புரிந்து கொண்டு அவனுக்கு நண்பர்களாகிறார்கள். பாவ்லோவ்ஸ்கில் இபான்சின் குடும்பத்தாரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு மிஷ்கினுக்கு நிறையவே வாய்க்கிறது.
நஸ்டாஸ்யாவின் மீது தான் கொண்டிருந்தது கருணை உணர்வு மட்டுமே என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் மிஷ்கின் இபான்சின் குடும்பத்தினரின் மூன்றாவது பெண்ணான அக்லேயா மீது காதல் வயப்படுகிறான்.ஆனாலும் அதற்குக் கூடத் தனக்கு அருகதை உண்டா என்ற கேள்வியும் அவனுள் தலை காட்டாமல் இல்லை. ‘’அவன் காதல் வயப்பட்டிருக்கிறான் என்றோ உணர்ச்சிகரமான காதலில் அவன் மூழ்கிப் போயிருக்கிறான் என்றோ அந்தத் தருணத்தில் யாராவது சொல்லியிருந்தால் அவன் அவர்களின் அந்த எண்ணத்தை வியப்போடும் சிறிது வெறுப்போடும் கூட மறுக்கவே செய்திருப்பான்...... அப்படி எண்ணுவதற்கே அவனுக்குக் கூச்சமாக இருந்தது.அவனைப் பொறுத்த வரையில் ‘அவனைப் போன்ற ஒரு மனிதன் காதல் கொள்வதும்,அவன் மீது பிறர் காதல் கொள்வதும்’ அரக்கத்தனமான ஒரு விஷயமாகவே தோன்றியது..’’ என்று அவனது அப்போதைய மனநிலையை விவரித்துக் கொண்டு போகிறது நாவல்.
குறும்புத்தனமும்,ஏதாவது ஒரு சாகசம் செய்தே ஆக வேண்டுமென்ற வேண்டுமென்ற விருப்பமும் கொண்ட அக்லேயாவும் மிஷ்கினின் பால் ஈர்க்கப்பட்டபோதும் - முன்பு நஸ்டாஸ்யாவுடன் அவன் கொண்டிருந்த அன்பு,மற்றும் உலகியலுக்கு ஒவ்வாத அவனது நடத்தை ஆகியவை ,தனது முடிவைத் துணிந்து உடனடியாக வெளிப்படுத்த முடியாமல் அவளைத் தடுக்கின்றன. அவ்வப்போது அவனைப் பரிகாசம் செய்வதும்,சில வேளைகளில் அவனுக்குப் பரிந்து பேசுவதுமாக அவள் இருந்தாலும் அவள் மனம் இன்னதென்று அவளது பெற்றோருக்குப் பிடிபடாமல் இல்லை.
இடையே பாவ்லோஸ்கில் தங்கியிருக்கும் நஸ்டாஸ்யாவும் மிஷ்கினை மணக்குமாறு அக்லேயாவுக்குத் துண்டுக் கடிதங்களைச் சில நபர்கள் வழி அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கிறாள். மிஷ்கினுக்கு அமையவிருக்கும் நல்வாழ்வு,தன் மீது அவன் கொண்டிருக்கும் கருணை உணர்வினால் பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்ற ஆதங்கமே அவ்வாறு செய்யுமாறு அவளைத் தூண்டுகிறது. அவள் கொண்டிருக்கும் அவ்வாறான எண்ணத்தை,ரோகோஸினும் கூட ஒருமுறை மிஷ்கினிடம் பகிர்ந்து கொள்கிறான்; அக்லேயாவை மிஷ்கின் மணந்த பின்புதான் அவனைத் தான் மணக்க முடியும் என்று நஸ்டாஸ்யா அவனிடம் தெரிவித்திருப்பதால்,மிஷ்கின் - அக்லேயா உறவில் ரோகோஸினும் அக்கறை காட்டுகிறான்.
சம்பிரதாயமான நிச்சயதார்த்தமாக இல்லாவிடினும் தங்கள் நண்பர்கள்,உறவினர்கள் ஆகியோருக்கு மிஷ்கினை அறிமுகம் செய்து வைக்கும் வகையில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்கிறது இபான்சின் குடும்பம்.
அது போன்ற விருந்துகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற மரபுகளையெல்லாம் அறிந்து பழகியிராத மிஷ்கின் அந்தக் கூட்டத்தில் அசந்தர்ப்பமாக எதையேனும் பேசி விடக் கூடும் என்றோ..அங்குள்ள நாகரீகமான-பழமை வாய்ந்த விலையுயர்ந்த பூச்சாடியை உடைத்து விடக் கூடும் என்றோ அக்லேயா அஞ்சி அவனை எச்சரிக்கவும் செய்கிறாள்; அதே போன்ற உள்ளுணர்வு அவனுக்கும் இருந்தபோதும் கூடியவரை அமைதியாகவே இருக்க முயல்கிறான் அவன்; இடையே ஒரு கட்டத்தில் நடக்கும் உரையாடலில் தன்னை மறந்தவனாய் உணர்ச்சி வசப்பட்டுப் பலவற்றையும் பேசி அந்தப் பூச்சாடியை உடைத்து இலேசான வலிப்பினால் தாக்கப்பட்டு அங்கேயே மயங்கியும் வீழ்கிறான்.
அக்லேயாவுக்கு அவன் பொருத்தமான ஜோடி இல்லை என அந்தக் கூட்டத்தார் எண்ணியபோதும் அக்லேயா அவனை நிராகரித்து ஒதுக்கி விடவில்லை; அவள் அவனைப் புரிந்து கொள்ளவே செய்கிறாள். ஆனாலும் அவனையும் அழைத்துக் கொண்டு அவன் முன்னிலையில் வைத்து நஸ்டாயாவைச் சந்திக்கிறாள் அவள்.மிஷ்கினின் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்களும் எதிரும் புதிருமாகச் சந்திக்கும் இந்தக் கட்டமே நாவலின் உச்சகட்ட திசை திருப்பமாகிறது.
மிஷ்கினை மணக்க வேண்டும் என்பது தானாக எடுக்கும் முடிவு,அதில் நஸ்டாயா ஏன் தலையிட்டுத் தன்னை அவ்வாறு செய்ய வற்புறுத்த வேண்டும் என்பது அக்லேயா முன் வைக்கும் வாதம்.தொடக்கத்தில் நிதானமாகவே பேசிக் கொண்டு வந்தநஸ்டாயா ,அக்லேயா பயன்படுத்தும் சொற்கள் தன்னை இழிவுபடுத்துவதாகவும்,தனது தன்மானத்தைக் காயப்படுத்துவதாகவும் போய்விடும் நிலையில் தானும் பதிலுக்குச் சீறி வெடிக்கிறாள். மிஷ்கின் அக்லேயா மீது நேசம் வைத்திருந்தாலும் நாவலின் தொடக்க கட்டம் முதல் மீது அவனிடம் பொங்கித் ததும்பும் காருண்யம் அக்லேயாவின் வார்த்தைகள் தவறானவை என்று அவனைச் சொல்ல வைத்து விடுகின்றன. அதில் புண்பட்டுப் போன அக்லேயா அடிபட்ட பார்வையுடன் அவனைப் பார்த்து விட்டு அங்கிருருந்து ஓட எத்தனிக்கிறாள்; மிஷ்கினும் அவளைத் தொடர்ந்து சென்று நஸ்டாயா மீது தான் கொண்டிருப்பது வெறும் இரக்கமும் கருணையும் மட்டுமே என்று சொல்ல முற்படுகிறான்.அதற்குள் நஸ்டாயா அவன் கரங்களில் மயங்கி விழுந்து விட- காதலா கருணையா என முடிவெடுத்தாக வேண்டிய அந்தக் கணத்தில்...அந்த நேரத்தில் காதலை விடவும் அவனுக்குக் கருணையே முதன்மையாகி விடுகிறது.நஸ்டாயாவைச் சற்றே அமைதிபடுத்தி விட்டு அக்லேயாவை அவன் தேடிச் செல்வதற்குள் காலம் கடந்து விட, அக்லேயாவின் மனக் கதவு அவனைப் பொறுத்தவரை முற்றாக அடைபட்டுப் போய் விடுகிறது.
இம் முறை உறுதியாக மிஷ்கினையே மணக்கப் போவதாக நஸ்டாயாஅறிவிக்கிறாள்; எதிலும் ஒட்டாத மனத்துடன் இருக்கும் அவனும் அவளது மன ஆறுதலுக்காக அதற்கான ஏற்பாடுகளில் முனைகிறான்.அவளுக்கு விருப்பமான உடைகள்,விலையுயர்ந்த ஆபரணங்கள் அனைத்தும் வாங்கிக் குவிக்கப்பட அவளும் ஆசையோடு தன் திருமண நாளை எதிர்நோக்கியிருக்கிறாள்.
ஆனாலும் அவள் மனதுக்குள் ஏதோ ஒரு பிறழ்வு ஏற்பட்டுப் போயிருப்பதாகவே ஐயப்படும் மிஷ்கின் அவள் கூடவே உடனிருந்து அவளை மகிழ்வான மனநிலையில் வைத்துக் கொள்ள இயன்ற வரை முயல்கிறான்.மண நாளன்று மணமகளின் வருகைக்காக மணக் கோலத்தில் கோயிலில் மிஷ்கின் காத்திருக்க அவளோ திருமணத்துக்கான கோச்சு வண்டியில் ஏறப் போகும் மிகச் சரியான வேளையில் கூட்டத்தில் பாய்ந்து அங்கிருக்கும் ரோகோஸினைத் தன்னைக் கூட்டிச் செல்லுமாறு கூறியபடி அவனுடன் ஓடி விடுகிறாள்.
தனக்கு நேரிட்ட அவமானத்தை விடவும் அவள் மீதான அக்கறையும் கவலையுமே தூண்டப் பெற்றவனாய் மறுநாள் அவளைத் தேடிச் செல்லும் மிஷ்கின்,தன் உள்ளுணர்வில் பட்டவாறே ரோகோஸின் வீட்டில்- ரோகோஸினால் கத்திக் குத்துக்கு ஆளாகி மரணித்த நிலையில் அவளைக் காண்கிறான். ஏதோ ஒரு வன்மமும் பொறாமையும் தூண்ட அவளைக் கொலை செய்து விட்ட போதும் அந்தக் கொலையால் சித்தப் பிரமை பிடித்தவனைப் போலிருக்கும் ரோகோஸின்,மிஷ்கினின் வருகையை முன் கூட்டி எதிர்பார்த்தது போல,அவனை இயல்பாக எதிர்கொள்கிறான்.வாசனைத் தைலம் நிறைத்த ஜாடிகளை அறையில் வைத்துவிட்டு,அவளது சவத்தின் இரு புறங்களிலும் அவர்கள் இருவரும் படுத்துக் கொள்ள ஏற்ற முறையில் படுக்கைகளைக் கூடத் தயார் செய்து வைத்திருக்கிறான் அவன்.
மறுநாள் காலை அறைக் கதவை உடைத்துத் திறப்பவர்கள் சித்தப் பிரமை கொண்டு கலங்கிய நிலையில் ரோகோஸினையும் அவனைத் தழுவித் தழுவி ஆறுதல் கூறும் நிலையில் மிஷ்கினையும் காண்கின்றனர்.
உடலும்மனமும் சற்றுத் தேறிய பின்,தன் குற்றத்தை உள்ளபடி ஒத்துக் கொள்ளும் ரோகோஸினுக்குப் பதினைந்து ஆண்டுக்கால சிறை வாசம் விதிக்கப்பட சைபீரிய சிறைக்குச் செல்கிறான். நாவலின் தொடக்கப் புள்ளிக்கே வந்து சேர்ந்து விட்டிருக்கும் மிஷ்கின்,மன நலசிகிச்சைக்காக மீண்டும் சுவிட்சர்லாந்து மருத்துவரின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்படுகிறான்
’’ஒரே மனிதனால்..ஒரே நேரத்தில் எப்படி இரண்டு பெண்களை நேசிக்க முடியும்?அதுவும் இரண்டும் இரு வேறு வகைப்பட்ட அன்பு.. இது மிகவும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.பாவப்பட்ட முட்டாள் இந்த இளவரசன் மிஷ்கின்..’’-யெவ்கெனி பேவ்லோவிச் மிஷ்கினின் வாழ்க்கைப் போக்கையே மாற்றும் இரு பெண்களில் ஒருத்தி[அக்லேயா]அவனது காதலுக்குரியவள்;மற்றொருத்தி [நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா ] அவனது கருணைக்குப் பாத்திரமானவள்.
தாய் தந்தையரை இழந்த அனாதைப் பெண்ணாக டாட்ஸ்கி என்ற பணக்கார மனிதன் ஒருவனின் பராமரிப்பிலும்,பாதுகாவலிலும் வளர்ந்து அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைந்து நினைத்தே கழிவிரக்கம் கொண்டவளாகி - முறையான திருமண வாழ்விற்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் அதற்குத் தகுதியற்றவளாய்த் தன்னைக் கருதியபடி ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்து விட்டு ஓடிப் போகும் பாத்திரமாக அசடன் நாவலில் இடம் பெறும் நஸ்டாஸியா ஜெயகாந்தனின் கங்காவை (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்குச் சில வேளைகளில் நினைவூட்டியபோதும் கங்காவிடம் இல்லாத சில இயல்புகளையும் கொண்டிருக்கிறாள்.குறிப்பாகத் தன்னைப் பற்றிய ஒரு பெருமித உண்ர்வு அல்லது தன்முனைப்பு ஒருபுறமும்,தன்னைப் பற்றிய கீழ்மை உணர்வு மறு புறமுமாக அவளை அலைக்கழித்து ஆட்டி வைக்கின்றன.
சந்தர்ப்ப வசத்தாலும் மிகத் தீயவனான ஒருவனின் நடத்தையாலுமே தன் ஒழுக்கநெறி சீர்குலைந்து போயிருக்கிறது என்பதையும் அதில் தன் தவறு ஏதுமில்லை என்பதையும் அவள் உணர்ந்தே இருக்கிறாள்; என்றாலும் முறையான ஒரு வாழ்வைக் கைக் கொள்ளத் தனக்கு அருகதை இல்லை என்ற எண்ணமும் அவளிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.மிஷ்கின் தன்னை மணக்க முன்வரும்போது குதூகலிக்கும் பணிப்பெண்ணிடம் ,‘’அந்தக் குழந்தையின் வாழ்க்கையைப் போய் நான் சீரழித்து விடுவேனென்றா நினைத்தாய்..’’ என்று அவள் சீறி வெடிப்பதற்கும், ‘’நான் ஒரு வெட்கம் கெட்ட முரட்டுப் பெண்.டாட்ஸ்கியின் வைப்பாட்டியாக இருந்திருப்பவள்.இளவரசே! இந்த நஸ்டாஸ்யாவுக்குப் பதிலாக நீங்கள் அக்லேயா இபான்சினைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்...’’என்று மிஷ்கினிடம் அவனது கோரிக்கையை நிராகரிப்பதற்கும் தனது கறை படிந்த இறந்தகாலம்,அவளது நெஞ்சுக்குள் நிழலாடி நெருடிக் கொண்டிருப்பதே காரணமாகிறது.
அதே வேளையில் அளப்பரிய தன்மான உணர்வு கொண்டவளாகவும் இருக்கிறாள் அவள்.பணத்தைக் கொடுத்துத் தன்னை கன்யாவின் தலையில் கட்டத் துடிக்கும் டாட்ஸ்கி,.பணத்தால் துரத்தியபடி, ஏலத்தில் வாங்குவது போலத் தன்னை உடைமையாக்கிக் கொள்ள எண்ணும் ரோகோஸின்-இவ்விருவரின் போக்கும் தனது தன்மதிப்பை ஊறு செய்வதாகவே எண்ணி அருவருக்கிறாள் அவள்.
இவ்விருவரின் பிடியிலிருந்தும் தன்னை விடுவிக்க மிஷ்கின் முன் வருகையில் அந்த இரக்கமும் கருணையும் கூடத் தனது தன்மானத்தைக் காயப்படுத்துவதாகவே உணர்கிறாள் அவள்.அதனாலும் கூட அதை ஏற்க மறுக்கிறாள் அவள்.
’’எந்தக் காரணத்தை வைத்துப் பார்த்தாலும் எதற்காகவும் உன்னைக் குற்றம் சொல்லவே முடியாது.உன் வாழ்க்கை அப்படி ஒட்டு மொத்தமாக அழிந்து போய்விடக் கூடாது.ரோகோஸின் உன்னை நாடி வந்ததாலோ அல்லது கன்யா உன்னை ஏமாற்ற முற்பட்டதாலோ இப்போது என்ன ஆகிவிட்டது..?நீ ஏன் அதையே நினைத்து உன்னை வதைத்துக் கொண்டிருக்கிறாய்....உன் வாழ்க்கையில் நடந்து போன துரதிருஷ்டவசமான துயரமான விஷயங்களால் உன் மீது நீயே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறாய்...என் ஆயுள் முழுவதும் உன்னை நான் மரியாதையோடு நடத்துவேன் நஸ்டாஸ்யா..’’என்று தன்னிடம் அழைப்பு விடுக்கும் மிஷ்கினின் உயர்ந்த பண்பு அவளை வியக்கவும், நெகிழவும் வைக்கிறது.
‘’கடைசியாக இப்படியும் ஒரு மனிதர்...இவருடைய நல்ல மனத்தைத்தவிர வேறு எதுவுமே இதற்குக் காரணமில்லை... என்னுடைய நலத்தை நாடும் ஒருவரை இறுதியாக நான் கண்டு பிடித்து விட்டேன்........ நான் உங்களைப் பற்றியும் கனவு கண்டிருக்கிறேன்... உங்களைப் போன்ற அன்பான நல்லிதயம் படைத்த நேர்மையான வெகுளித்தனம் ஒரு மனிதரைப் பற்றி நான் எப்போதுமே கற்பனை செய்து கொண்டிருப்பேன்.அப்படிப்பட்ட ஒரு மனிதர் என்னிடம் வந்து ’நீ எந்தத் தவறும் செய்யவில்லை நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன்..உன்னை ஆராதிக்கிறேன் என்றெல்லாம் சொல்லப் போகிறார் என்று என் மூளையே பிசகிப் போகும் அளவுக்குக் கற்பனை செய்து கொண்டே இருப்பேன்.பிறகு இந்த மனிதர் டாட்ஸ்கி அங்கே வந்து ....என்னைத் தன் விருப்பப்படி பயன்படுத்திக் கொண்டு விட்டு என்னைத் தரம் தாழ்த்திவிட்டுக் கிளம்பிப் போய்விடுவார்.என்னுடைய இந்த இழிநிலையை எண்ணி எண்ணி அவமானத்தில் கூசிக் கூனிக் குறுகிக் கிடந்திருக்கிறேன்.ஆயிரம் தடவைகளுக்கு மேலாக ஏதாவது குளம் குட்டையில் வீழ்ந்து என் உயிரை மாய்த்துக் கொள்ளலாமே என்றும் எண்ணியிருக்கிறேன்.ஆனால் என்னிடம் அந்தத்துணிச்சல் இல்லை’’ என்று அதை வெளிப்படுத்தவும் செய்கிறாள் அவள்.ஆனாலும் அவனை மணந்து கொள்வதில் அவளுக்கு உள்ளூர ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருப்பதனாலேயே ரோகோஸினுடன் ஓடுவதும்,பிறகு சிறிது காலம் மிஷ்கினிடம் மீள்வதுமாய் அவனை அலைக்கழிக்கிறாள்.
அவளையும்,அவளது மன அமைப்பை மிகச் சரியாகப் புரிந்து வைத்திருப்பவன் மிஷ்கின் ஒருவனே. ‘’நான் அவளை நேசித்தேன்..ஆமாம் மிகவும் அதிகமாகவே அவளை நான் நேசித்தேன்.ஆனால் பிற்பாடு அவள் மீது நான் இரக்கம் மட்டுமே கொண்டிருக்கிறேன் என்பதையும் அதைத் தவிர அவளை நான் காதலிக்கவில்லை என்பதையும் அவள் எப்படியோ ஒருவாறு ஊகித்து விட்டாள்’’என்று தான் காதலிக்கும்அக்லேயாவிடம் பிற்பாடு அது பற்றிக் குறிப்பிடுகிறான் மிஷ்கின்.
’’அவள் என்னிடமிருந்து ஓடிப் போனது ஏன் தெரியுமா....தான் ஒரு இழிந்த பிறவி என்பதை எனக்கு வெளிப்படையாகக் காட்ட வேண்டுமென்பதற்காகத்தான்.அதை என்னிடம் நிரூபித்தாக வேண்டும் என்பதோடு அவளால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத வேறொரு உள் மனத் தூண்டுதலும் கூட இருந்தது.உள்ளத்தின் ஆழத்தில் இப்படித் தொடர்ச்சியாக அவமானத்தைச் சுமந்து கொண்டே இருப்பதென்பது,அவளைப் பொறுத்த வரையில் இயற்கைக்கு விரோதமான-குரூரமான ஒரு சந்தோஷத்தை அவளுக்கு அளிப்பதாகக் கூட இருக்கலாம்.அதன் மூலம் யாரையோ பழி வாங்குவதாகக் கூட அவள் நினைத்திருக்கலாம்....’இந்த உலகத்திலேயே தான் மட்டும்தான் மிக மிக மோசமான இழிந்த பிறவியென்றும் மிகவும் கீழானவள் என்றும் அந்தப் பாவப்பட்ட பெண் தன்னப் பற்றி உறுதியாக முடிவு கட்டிக் கொண்டிருக்கிறாள்.தயவு செய்து அவளைக் கேவலப்படுத்திப் பேசாதே..அவள் மீது கற்களை வீசாதே...அவமானகரமான தனது நிலையை உள்ளத்தில் எண்ணி எண்ணி அவள் தன்னைத்தானே மிகுதியாக வதைத்துக் கொண்டிருக்கிறாள்.ஆனால்..பழி சுமத்தப்பட வேண்டியது அவளில்லை....அந்த மனிதான் குற்றவாளி என்று அவன் மீது பழி சுமத்தினாலும் அவளே கூட அதை நம்பத் தயாராக இல்லை என்பதுஉனக்குத் தெரியுமா....தான் மட்டுமே குற்றவாளி என்றே அவள் உளப் பூர்வமாக நம்பிக் கொண்டிருக்கிறாள்.அப்படி அவள் கொண்டிருக்கும்அந்த மாயையை அகற்ற நான் முயற்சி செய்யும் தருணங்களிலெல்லாம் அது..அந்த எண்ணம் - அவளை இன்னும் கொடுமையான துயரத்திற்கு ஆளாக்கி விடுகிறது.தன்னைத்தானே அவள் வருத்திக் கொள்கிற பயங்கரமான அந்தத் தருணங்களை இப்போது நினைத்துப்பார்த்தாலும் கூட என் இதயம் வலிக்கிறது.’’
என்றபடி மிகத் தெளிவாக நஸ்டாஸ்யாவின் இயல்புகளை அவளது நடவடிக்கைக்கான காரணங்களை பின் புலங்களை அக்லேயாவிடம் ஆத்மார்த்தமாக அவன் பகிர்ந்து கொண்டபோதும் பணக்காரக் குடும்பம் ஒன்றின் கடைக் குட்டி பெண்ணாகக் குறும்பு கொப்பளிக்க வளையவரும் அக்லேயாவால் அதை உள்ளபடி உள் வாங்கிக் கொள்ள இயலவில்லை; வெளியுலகத்தைப் பொறுத்தவரை எல்லை கட்டிய அனுபவத்தை மட்டுமே பெற்றிருக்கும் அவளுக்கு நஸ்டாஸ்யாவின் மீது மிஷ்கின் வைத்திருப்பது கருணையும் இரக்கமும் மட்டுமே என்பது புரிகிறது;ஆனாலும் அவன் தனக்கு மட்டுமே முழுமையாகச் சொந்தமானவனாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் அவளுக்கு அவனது மென்மையான அந்த இரக்க உணர்வும் கூட உவப்பானதாக இல்லை;அதை வைத்தே பல முறை அவள் அவனைச் சீண்டுகிறாள்.தங்கள் திருமணம் நிச்சயிக்கப்படவிருக்கும் நிலையிலும் கூட அவன் முன்னிலையில் வைத்தே நஸ்டாஸ்யாவின் நடத்தை குறித்த அவதூறுகளை ஆவேசமாகக் கொட்டுகிறாள்.
இருவேறுபட்ட குண இயல்புகள் கொண்ட இரு பெண்கள் மீதும் வெவ்வேறு வகையான அன்பு வைத்திருந்தாலும் அந்த வேளையில் நஸ்டாஸ்யா இழிவுபடுத்தப்படுவதே மிஷ்கினைப் பெரிதும் பாதிக்கிறது;அவனது இதயம் அக்லேயாவால் அவளுக்கு நேர்ந்து விட்ட காயத்தை எண்ணியே கசிகிறது. ‘’உன்னால் எப்படி இந்த மாதிரி நடந்து கொள்ள முடிந்தது?அவள் எவ்வள்வு துரதிருஷ்டசாலியான ஜீவன் தெரியுமா?’’என்பதற்கு மேல் அவனால் எதையும் தொடர முடியவில்லை.அப்போது அந்தக் கணத்தில் அக்லேயாவின் விழிகளில் தென்பட்ட விசித்திரமான பார்வை,அளவு கடந்த துயரத்தையும்,அதே வேளையில் எல்லையற்ற வெறுப்பையும் உள்ளடக்கி இருந்ததைக்கண்டதும் அவன் கூச்சலிட்டுக் கொண்டே அவளிடம் ஓடுகிறான்;ஆனால் அதற்குள் நேரம் கடந்து விடுகிறது;அவனது காதலும் கை நழுவிப் போகிறது.
மேற்குறித்த நாடக நிகழ்ச்சி நடந்தேறிச் சில நாள் கழிந்த பிறகு மிஷ்கினிடம் இதைச் சுட்டிக் காட்டும் யெவ்கெனி பாவ்லோவிச் மிஷ்கினின் கிறுக்குத்தனமான அந்தச் செயலைச் சுட்டிக் காட்டி அவனைக் கடிந்து கொள்ளும்போதுதான் அது அவனுக்கு உறைக்கிறது. ‘’என் பிரியத்துக்குரிய இளவரசே ...ஏன் இந்த மாதிரியெல்லாம் நடக்க இடம் கொடுத்தீர்கள்...அந்த நேரம் எப்படி சாதுரியமாக நடந்து கொள்வதென்பது உங்களுக்குத் தெரியாமல் போயிருக்க வேண்டும்.கர்வம் பிடித்த கிறுக்குத்தனமான அந்தப் பெண்ணைக் கட்டுக்குள் கொண்டு வரக் கூடிய சக்திஉங்களிடம் இல்லாமல் போயிருக்க வேண்டும்;அதையெல்லாம் என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.ஆனாலும் கூட அக்லேயா உங்களிடம் கொண்டிருந்த அன்பு எத்தனை ஆழமானது,ஆத்மார்த்தமானது என்பதும் உங்களுக்குக்கட்டாயம் புரிந்திருக்க வேண்டும்.இன்னொரு பெண்ணோடு உங்களைக் கூறுபோட விரும்பாதவள் அவள்.அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தைப் போய் உடைத்து விடவும் அதைத் துறந்து விடவும் உங்களுக்கு எப்படி மனம் வந்தது?’’
ஆனாலும் கூட மிஷ்கினின் தராசுத் தட்டிலுள்ள முள் தன் காதலை விடவும் நஸ்டாஸ்யாவின் மீதான இரக்கத்துக்கே முன்னுரிமை அளிக்கிறது. ’’நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னாவின் அருகில் அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் மிஷ்கின்;அவளை ஒரு குழந்தையைப் போலக் கருதிக் கொண்டு அவள் தலையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டும்,அவள் கன்னங்களைத் தன் கைகளால் வருடிக் கொடுத்தும் அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான் அவன்.அவள் சிரித்தபோது கூடவே சிரிக்கவும்,அவள் அழுதபோது கண்ணீர் வடிக்கவும் அவன் தயாராக இருந்தான்.சம்பந்தமில்லாத அவளது பிதற்றல்களும்,உணர்ச்சிவசப்பட்ட அவளது வார்த்தைகளும் அவனுக்குக் கொஞ்சம் கூடப் புரியாதபோதும் மென்மையாக அவளைப் பார்த்துப் புன்னகை செய்தபட் அவற்றை வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தான் அவன்....’அவள் மீது அவன் காட்டிய நேசத்தில் மென்மையான பரிவுணர்ச்சியும் கூட ஓடிக் கொண்டிருந்தது.சுயமாக நகர்ந்து செல்ல முடியாத நோயுற்ற சந்தோஷமற்ற ஒரு குழந்தையின் பால் காட்டும் பரிவைப் போன்றதே அது.ஆனால் அவள் மீதான அந்த உணர்வை ஒருபோதும் எவரிடமும் விளக்கிக் கூற அவன் முற்படவே இல்லை;’’என்கிறது நாவல்... மனிதச் செயல்பாட்டுக்கான காரணங்கள் இன்னதுதான் என்று கூறிவிட முடியாத அளவுக்குச் சிண்டும் சிடுக்குமானவை.மிகவும் சிக்கலானவையும் வெவ்வேறு வகைப்பட்டவைகளுமான அவை நாம் தரும் விளக்கங்களுக்குள் எளிதாக அடங்கக் கூடியவை அல்ல.அவற்றை மிகத் தெளிவாக வரையறுத்துச் சொல்வது கடினம்.’என்னும் தஸ்தயெவ்ஸ்கியின் பார்வை ஒன்றே இம்மூன்று வேறுபட்ட பாத்திர அமைப்புக்களையும் புரிந்து கொள்ள வழிகாட்டக் கூடும் முழுமையான தீமை என்றோ...முழுமையான தீயவர்கள் என்றோ உலகில் எதையும் யாரையும் வரையறுக்க முடியாது என்பதை எப்போதுமே தன் படைப்புக்களில் முன்னிறுத்துபவர் தஸ்தயெவ்ஸ்கி என்பது அவரைப் பற்றி ஓரளவேனும் அறிமுகமுடைய வாசகர்கள் அறிந்திருப்பதுதான்.
காமுகனான சுவிட்ரிகைலோவ்,கண்டிப்பான கடுமை காட்ட வேண்டிய நிலையில் இருக்கும் நீதிபதி போர்ஃபிரி பெத்ரோவிச் ஆகியோரிடமும் கூட வற்றாமல் சுரக்கும் மானுடக் கருணையின் தெறிப்புக்களைக் குற்றமும் தண்டனையும் நாவலிலும் கூட மிக இயல்பாகச் சித்திரித்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. அவரது இடியட்/அசடன் நாவலும் அதிலிருந்து விலக்குப் பெற்றதில்லை என்பதோடு கூடுதலான ஒரு பரிமாணமும் அதில் சேர்ந்திருப்பதே அவரது பிற படைப்புக்களிலிருந்து தனித்து நிற்கும் தகுதியை அசடனுக்கு அளிக்கிறது.
அசடனாகச் சொல்லப்படும் இளவரசன் மிஷ்கினின் பாத்திரத்தை அப்போதுதான் மண்ணில் ஜனித்த ஒரு குழந்தையைப் போன்ற பரிசுத்தத்துடன் - கபடுகளும் சூது வாதுகளும் வன்மங்களும் வஞ்சனை எண்ணங்களும் கிஞ்சித்தும் தலை காட்டாத ஒரு பாத்திரமாக மட்டுமே - மிகப் பெரிய இந்த ஆக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் முழுக்க முழுக்கக் காட்ட முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.பிறரைப் பற்றிய தவறான எண்ணம் தற்செயலாக மனதில் தோன்றும் தருணங்களிலும் - அந்த எண்ணம் அல்லது கணிப்பு உண்மையாகவே இருந்தாலும் கூட- அப்படி நினைத்து விட்டதற்காகவே தன்னைத் தானே கடிந்து கொள்ளும் ஓர் உன்னத மாமனிதன் மிஷ்கின்.பிறர் துயர் கண்டு இரங்கி நெகிழ்வதோடு நின்று விடாமல்,அந்தத் துயர் தீர்க்கத் தன்னையே ஒப்புக் கொடுத்துக் களபலியாக்கத் துணியும் உள்ளம் மிஷ்கினைப் போல அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்து விடுவதில்லை.
தன்னை வேடிக்கைப் பொருளாக்கி அலைக்கழிக்கும் பெண்களாகட்டும்.. வன்மத்தோடும்,பொருளாசையால் தூண்டப்பட்ட சுரண்டல் விருப்பங்களோடும்,கொலை வெறியோடும் தன்னை அணுகும் மனிதர்களாகட்டும்..! இவர்களில் எவருமே எப்போதுமே அவனது வெறுப்புக்கும் கசப்புக்கும் உரியவர்களாவதில்லை; மாறாக அவர்களின் நிலை கண்டே அவன் கசிந்து உருகுகிறான் ; அவர்களது எதிர்காலம் குறித்தே அவன் கவலை கொள்கிறான்.உலகத்தின் லௌகீகப் பார்வையில் அவன் அசடனாகப் பார்க்கப்படுவதற்கான காரணமும் அதுவே...
''எனக்கு இருபத்தேழு வயதாகிறது.. ஆனாலும் கூட நான் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறேன்... என்னுடைய பாவனைகள் எல்லாமே...எப்போதுமே இடத்துக்குப் பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன. நான் சொல்ல நினைத்த கருத்துக்கு எதிரான கருத்தையே அவை வெளிப்படுத்தி விடுகின்றன. அதனாலேயே நகைப்புக்கு இடமாகி நான் சொல்ல வந்த கருத்துக்களைத் தரம் தாழ்த்தியும் விடுகின்றன.. எதை..எப்படி..எந்த அளவுக்குச் சொல்வது என்ற அறிவு என்னிடம் சுத்தமாகவே இல்லை.அதுதான் முக்கியமான விஷயம்.." என்றபடி தன் நடத்தை மீதான ஒப்புதல் வாக்கு மூலத்தை அவனே அளித்தபோதும் - ஒரு புறம் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கும் உலகம் அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் மறுதலிப்பதே இல்லை.
ஆளுக்கொரு புறமாக அவனை அலைக்கழித்து ஆட்டிப் படைக்கும் இரு பெண்பாத்திரங்களுமே அவனது இதயத்தின் பரிசுத்தத்தை வியக்கிறார்கள்.
’அன்பான நல்லிதயம் படைத்த நேர்மையான வெகுளித்தனம் கொண்ட ஒரு மனிதனாக அவனைக் காணும் நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா,பலதரப்பட்ட ஆண்களின் வஞ்சகங்களுக்கு ஆளாகி வாழ்வில் நொந்து போனவள்.மிஷ்கினின் தன்னலம் துறந்த அன்பும் காருண்யமும் அவளுக்கு வியப்பூட்ட,‘’என் வாழ்க்கையில் சந்தித்த முதல் மனிதர் நீங்கள்தான்!’’ என்கிறாள் .
மிஷ்கினின் வாழ்வில் குறுக்கிட்டுக் குறும்பு செய்யும் இன்னொரு பெண்ணான அக்லேயா இவானோவ்னா, ’’உங்களுடைய சுண்டுவிரல் அளவுக்குக் கூடத் தகுதியானவர்கள் இங்கே இல்லை.உங்களுடைய மனம்,உங்களுடைய இதயம் ஆகியவற்றுக்கு ஈடு கொடுக்கும் இணையான தகுதி படைத்தவர்கள் இங்கே யாருமே இல்லை.அவர்கள் எல்லோரையும் விட நீங்கள் மிகவும் நேர்மையானவர்;மிகவும் மேன்மையானவர்;சிறந்தவர்;அன்பானவர்.அவர்கள் எல்லோரையும் விட அறிவுக் கூர்மை படைத்தவர் நீங்கள்.இவர்களில் சிலர் நீங்கள் நழுவ விட்ட கைக் குட்டையை எடுக்கும் தகுதி கூட இல்லாதவர்கள்’’ என்று அவனுக்கு நற்சான்று வழங்குகிறாள். ’’எப்படிப்பட்ட அன்பான இதயம் கொண்ட மனிதன்.... ஆனால் தன்னைத்தானே அழித்துக் கொள்ள வேண்டுமென்பதே அவனது விதியாக இருக்கிறது’’
என்கிறார் அவனது தூரத்து உறவினரான தளபதி இபான்சின். அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா,ரோகோஸின் போன்றவர்களும் கூட அவன் தூயவன் என்னும் உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதிலேயே இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது.