சதாசிவம் மதன் என்பவரை பிரதம ஆசிரியராகக் கொண்டு மீன்பாடும் தேனாட்டில் இருந்து வெளிவரும் காலாண்டு சஞ்சிகையான கவிஞன் என்ற சிற்றிதழின் 21 ஆவது இதழ் கிடைக்கப் பெற்Nறுன். முழுக்க முழுக்க கவிதைகளையே உள்ளடக்கி வரும் இவ்விதழ், சகல கவிஞர்களுக்கும் களம் அமைத்துக் கொடுப்பதோடு கவிதை எழுதத் துடிக்கும் புதுக் கவிஞர்களுக்கும் சிறந்ததொரு ஊடகமாகவும் அமைந்துள்ளது. உருவத்திலும், உள்ளடக்கத்திலும் அழகாக காட்சி தரும் இவ்விதழ் இந்தியச் சிற்றிதழ்களுக்கு ஈடாக காணப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதழின் முன்னட்டை பிரபல கவிஞரும் தென்றலின் வேகம் என்ற கவிதை நூலின் ஆசிரியரும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமாகிய வெலிகம ரிம்ஸா முஹம்மத், 2007ம் ஆண்டு இலங்கை நல்லுறவு ஒன்றியம் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தபோது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. சாதனை யுவதி வெலிகம ரிம்ஸா முஹம்தைப் பற்றி கூறுவதாயின் இவர் இலக்கிய ஈடுபாடு கொண்டு தன்னை இலக்கியத்துடனேயே ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஓர் இளம் படைப்பாளி என்று சுருக்கமாக கூறிவிடலாம் என்றாலும், அவர் அதீத இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால் அவரைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
இவர் இலங்கையின் வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, எங்கள் தேசம், இருக்கிறம், வேகம், அல்ஜஸீரா போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், ஓசை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அல்லஜ்னா, அல் ஹஸனாத், அஸ்ஸகீனாஹ், தூது, ஞானம், நீங்களும் எழுதலாம், மல்லிகை போன்ற சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறார். இது தவிர கணக்கீட்டுத் துறையில் வங்கிக்கணக்கிணக்கக் கூற்று, கணக்கீட்டுச் சுருக்கம், கணக்கீட்டின் தெளிவு ஆகிய 03 நூல்களை வெளியிட்டிருக்கிறார். கணக்கீட்டுத் துறையில் பட்டங்களைப் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றில் உதவிக் கணக்காளராக கடமையாற்றி வருகின்றார்.
கடமை நேரம் போக ஏனைய ஓய்வு நேரங்களை எழுத்துத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதுவரை 300க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 50க்கும் மேற்பட்ட நூல் விமர்சனங்களையும் செய்திருக்கிறார். தற்போது பூங்காவனம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் தலைவராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் போன்றவற்றின் அங்கத்தவராகவும் இருந்து செயலாற்றி வருகிறார்.
தென் மாகாணம், மாத்தறை மாவட்டம், வெலிகம தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கவிதாயினி வெலிகம ரிம்ஸா, முஹம்மத் - லரீபா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியான இவர் , 2004 இல் தினமுரசு பத்திரிகையில் 'நிர்மூலம்' என்ற கவிதையை எழுதியதையடுத்து எழுத்துலக்குள் நுழைந்து நிறைய பங்களிப்புகள் செய்துள்ளார்.
1997 - 1998 ம் சூரியன் பன்பலையில் ஏராளமான கவிதைகளையும், 2004 - 2005 காலப் பகுதியில் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ், 2008 - 2009 நேத்ரா அலைவரிசை ஹஜ் பெருநாள் கவியரங்கம், 2011 இல் சக்தி பன்பலையில் கவிராத்திரி போன்ற நிகழ்ச்சிகளில் நேரடியாகவும், பிரதிகள் மூலமாகவும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக்கொடுமை, போர்ச்சூழல், மானிட நேயம் என்பன இவரது கருப்பொருள்களாக படைப்புகளில் மிளிர்கின்றன.
எரிந்த சிறகுகள் (கவிதை), கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை (விமர்சனம்), வண்ணாத்திப் பூச்சி (சிறுவர் கவிதை) ஆகிய நூல்கள் வெளிவர இருக்கின்றன. பல விருதுகளும், பரிசில்களும் பெற்றுள்ள இவர் வார்ப்பு, முத்துக்கமலம், கீற்று, தமிழ் ஆதர்ஸ், பதிவுகள், ஊடறு, தேனீ ஆகிய இணையத் தளங்களிலும் எழுதிவரும் மிகவும் சுறுசுறுப்பான பெண் படைப்பாளி என்பதில் அவரது எழுத்து முயற்சிகள் மென்மேலும் வளர வாழ்த்தாமல் இருக்க முடியாது. கவிஞன் சஞ்சிகையானது, எனக்குப் பிடித்த கவிதையென்று தலைப்பிட்டு இவரது வெற்றிகள் உன்னை ஆளட்டும் என்ற கவிதை ஒன்றினையும் இடம்பெறச் செய்திருக்கிறது.
2012.03.23 அன்று எம்மையெல்லாம்விட்டு வான்வெளியை நோக்கிப் பறந்த வானொலிக்குயில் ராஜேஷ்வரி சண்முகம் அவர்களுக்கு கவிதாஞ்சலி ஒன்றினையும் தந்திருக்கிறது. அதே போல இன்னுமொரு முஸ்லிம் பெண் படைப்பாளியான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் தேடல் என்ற கவிதையையும், தவம், என்னைக்கட்டி விட்டவன், எப்போது நிக்குமடி உன் அழுகை, தாய், நிறைமகள், இந்திர விழாவின் இறுதிக் கட்டம், பாடசாலை, இடம்பெயர்ந்தவன், உழைப்பதற்கு ஒருவன் போன்ற தலைப்பிலான கவிதைகளும் வெளிவந்துள்ளன. இவற்றை முறையே குணரத்தினம், மயுரி உமா, திருமதி மகேஸ்வரி, வி. உதயன், கன்னிமுத்து வெல்லபதியான், வேதமூர்த்தி, நிறைவாள், மஸாஹிரா பாயிஸ், சித்ரா, கதிரவன் போன்றோர்கள் எழுதியுள்ளனர்.
இதயத்தில் கனிந்த காதல், அம்மாத் தோழி ஆகிய கவிதைகள் இணையத் தளத்தலிருந்து பெறப்பட்டவையாகும். தமிழில் ஹைக்கூ கவிதைகள் பற்றி மூ. முருகேஷ் (தமிழ் நாடு) அவர்களும், கவிதை மீது சில அவதானிப்புக்களை கவிஞர் நீலாபாலனும், பெண்ணியக் கவிதை வளர்ச்சி பற்றி கவிஞர் மேமன்கவி அவர்களும் தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்கள். மேசைக் கிறுக்கல்கள் என்ற தலைப்பில் பாடசாலை, கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் அங்கும் இங்குமாக குறிப்பிடப்பட்ட காதலர்களின் உள்ளங்களைப் பிரதிபலிக்கும் கிறுக்கல்களையும், சிறிய சிறிய இணையத்தள கவிதைகளையும் கவிஞன் இடம்பிடிக்கச் செய்திருக்கிறது. மொத்தத்தில் ஒரே மூச்சில் படித்து முடிக்கக்கூடிய சிற்றிதழ் இது!!!
சஞ்சிகை - கவிஞன்
பிரதம ஆசிரியர் - சதாசிவம் மதன்
தொலைபேசி - 0653650153, 0773620328
விலை - 60 ரூபாய்
அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.