சிறுகதை என்னும் அற்புத வடிவத்தை சுப்ரபாரதிமணியன் கையாளும் நோக்கம் 'ஓலைக்கீற்று' என்னும் இந்தத் தொகுதி மூலம் மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியனின் சிறுகதை உலகம் பெரும்பாலும் சிதைந்து வரும் மனித மனத்தையும் உடலையும் பற்றியதே. சிதைவுக்குக் காரணமாக அவர் என்றுமே தனிநபர்களைக் காரணமாய்க் காட்டியதில்லை. தவிர்க்க முடியா தொழில் வளர்ச்சி எவ்விதம் நகரங்களை விரிவு படுத்தி சுற்றுச் சுழலில் தன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் உயர் தொழில் நுட்பங்கள் எவ்விதம் மனிதனின் மனஉடல் கூறுகளில் ஆதிக்கம் செலுத்தி மனித வளத்தை ஊனப்படுத்துகிறது என்பதையும் தீராத வேதனையோடு தொடர்ந்து தன் படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்தி வந்துள்ளார். இந்தத் தொகுப்பும் அவ்வித வேதனைகளை முன்வைக்கும் கதைகளின் கூட்டமே. இத்தொகுப்பின் சகல கதைகளும் வெவ்வேறு அனுபவங்களை நம்முள் நிகழ்த்தும் திறன் படைத்தவையெனினும் சிறந்த கதையாகத் தெரிவு செய்து கொண்டு நான் கொண்டாடுபவற்றைப் பற்றி இங்கு பகிர விருப்பமெனக்கு. அவ்வகையில் 'முன் பதிவு' என்றொரு கதையை எதிர்கால சமூக அமைப்பை முன்நுணர்ந்தறிவிக்கும் தீர்க்கம் கொண்டவை என்று கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் சேவை அமைப்புகள் வெகுவாக மனிதனின் அன்றாட நிகழ்வுகளில் தன் பரவலைத் துரிதப்படுத்தியுள்ளன. முன் காலங்களில் திருமணம் என்னும் நிகழ்வு உறவுகளின் ஒற்றுமையைப் பேணவும் உறவுகளுக்குள் இருக்கும் பேதங்களை களைவதற்குமான ஒரு வாய்ப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். திருமணம் என்பது ஒரு மிகப் பெரிய திட்டமிடலாக உறவுகளின் துணை கொண்டு நிகழ்த்தப்பட்ட காலம் மெல்ல அருகி, இன்று பத்திரிகை அச்சாக்கத்திலிருந்து முதலிரவுக்கான படுக்கை அறையைத் தயார் செய்வது வரை சேவை நிறுவனங்களையே நாம் சார்ந்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. மேல்தட்டு மக்களிடம் ஆரம்பித்த இந்தக் கலாச்சாரம் மெல்ல அனைத்து நிலைகளிலும் பரவிக் கொண்டு வருகிறது. இது திருமணம் என்ற நிலையிலிருந்து விரிந்து இன்று வீடு மாற்றுவது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், அலுவலகப் பார்ட்டிகள், வியாபாரச் சந்திப்புகளுக்கான ஏற்பாடுகள் என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் இன்னொரு படியான மரணத்தின் இறுதிச் சடங்குகளையும் சேவை நிறுவனத்தின் துணையுடனேயே செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை இன்றைய உறவுமுறைச் சிக்கல்கள் நமக்கு விதிக்கக்கூடும் நிலை வெகு தொலைவில் இல்லை என்பதை 'முன்பதிவு' கதை நம் புத்தியில் ஏற்றுகிறது.
இத்தொகுப்பில் 'நீலப்படமும் சுசித்திராவும்' என்றொர் கதையுண்டு. நீலப்படம் பார்த்த அனுபவம் அனேகமாக எல்லோர்க்கும் இருக்கக்கூடும். அதையே தவறவிட்ட தன் காதலியின் மறுநினைவாக்க வடிவமாகக் கொண்டு ஒரு புனைவைச் சாத்தியப்படுத்தி அதைக் கலையாக்குகிறார் சுப்ரபாரதிமணியன். நீலப்படத்தில் தோன்றும் பெண் தன் காதலியென உணரும் கதைசொல்லி தனக்கு ஏற்படும் பதற்றத்தை அப்படியே வாசகருக்கும் ஏற்படச் செய்யும் வித்தையை இந்தக் கதை கச்சிதமாகச் செய்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இந்த விபத்து நடந்துவிடக் கூடிய சாத்தியங்களை நம் முன் நிறுத்துகிறது இக்கதை.
மற்றோர் கதை 'பொட்டலங்கள்'. இன்று அலோபதி மாத்திரைகளின் பயன்பாட்டைத் தவிர்த்த வீடென்று ஒன்றுமில்லை நம் சமூகத்தில். எல்லா வீடுகளிலும் யாரோ ஒருவர் அலோபதி மருந்துகளின் தொடர்பிடியில் சிக்குண்டு தங்கள் வாழ்வை நடாத்தி வருவது நமக்கு அன்னிய அனுபவமல்ல. எல்லா வீடுகளிலும் நேரந்தவறாமல் விழுங்கவென்று மாத்திரைகள் வரிசையிட்டு அமர்ந்து பல்லிலித்துக் கொண்டுதானிருக்கின்றன. மாத்திரையின் பாற்பட்ட வாழ்முறையை அதன் சங்கடத்தை இவ்வளவு நுட்பமாகச் சொன்ன கதை நானறிந்து எதுவுமில்லை.
தொகுப்பிலுள்ள மற்ற இரண்டு கதைகள் 'கழிவு', 'ஈரம்' என்பன. நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் பயங்கர பின்விளைவுகளைப்பற்றி பதைபதைப்பாய்ப் பேசக் கூடியவை. விவசாயத்துக்கென்று கட்டப்பட்ட அணை விதிமாறி வேறு கதியில் தன் நோக்கத்தைத் திருப்பிக் கொண்டு விவசாயிகளின் அடிமடியிலேயே கைவைத்த சோகம் சுப்ரபாரதிமணியனின் ஆழ்மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன என்பதை அவருடைய அனைத்து படைப்புகளிலும் நாம் உணர முடியும். சமூகத்தின் பாதிப்புகள் ஒரு நல்ல எழுத்தாளனின் படைப்புகளில் அவன் விரும்பாவிடினும் வெளிப்பட்டுவிடும். அவ்வகையில் சுப்ரபாரதிமணியன் ஒரு நல்ல எழுத்தாளர் என்பது அவரின் சமூகம் சார்ந்த அக்கரையின் பாற்பட்ட எழுத்தால் நிலை நிறுத்தப்படுகிறது.
நகர வாழ்வின் நெருக்கடிகளை சுப்ரபாரதிமணியன் எப்போதும் சொல்ல மறந்ததில்லை. இத்தொகுப்பிலும் அதைத் தொடர்ந்துள்ளார். 'சாம்பல்', 'கழிப்பறைகள்' போன்ற கதைகள் நகரத்தின் கீழ்த்தட்டு மக்களுடைய அன்றாட வாழ்வின் நெருக்கடிகளைப் பேசுகின்றன.
இவ்வகைக் கதைகளுக்கிடையில் இத்தொகுப்பினூடே 'மயானம்', 'திரும்புதல்'. 'மாற்றங்கள்', 'வெளுப்பு', 'பாதுகாப்பு', 'சூடு' போன்றவைகளும் வாசிப்பின் சுவை குன்றாமல் நம்மை எதிர்கொள்கின்றன. தொகுப்பின் தலைப்பான 'ஓலைக்கீற்று' என்ற கதை ஒரு மனநலம் குன்றிய மனிதத்தின் குரலாக ஓலமிட்டு ஒலிக்கிறது. இந்தக் கதையில் புதிர்களும் அதிர்ச்சிகளும் ஒரு சேர நம்மை அலைகழிக்கின்றன.
அவலங்கள் நிறைந்த மனித வாழ்வை அர்த்தமிகு வார்த்தைகளால் கருத்துக்களாகவும் காட்சிகளாகவும் ஆக்கும் சுப்ரபாரதிமணியனின் மற்றுமொரு சிறப்பான கதைக் குவியல் இந்த 'ஓலைக்கீற்று'.
ஓலைக்கீற்று: காவ்யா வெளியீடு சென்னை ரூ, 50/-
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.