நினைவு கூர்வோம்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!

இன்று , ஜூலை 21, நடிகர் திலகத்தின் நினைவு நாள். அவர் நினைவாக ஒரு பாடல்: https://www.youtube.com/watch?v=Vd_RC89xYeg


இன்று , ஜூலை 21, நடிகர் திலகத்தின் நினைவு நாள். அவர் நினைவாக ஒரு பாடல்: https://www.youtube.com/watch?v=Vd_RC89xYeg
அண்மையில் கேட்டதிலிருந்து அடிக்கடி நினைவில் வந்து வந்து போகும் பாடல் 'மாமன்னன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நெஞ்சமே நெஞ்சமே' பாடல்.ஏ.ஆர்.ரகுமானின் இசை, கவிஞர் யுகபாரதியின் வரிகள், விஜய் ஜேசுதாஸ் & சக்திஶ்ரீ கோபாலனின் குரலினிமை , ஒளிப்பதிவு எல்லாம் கேட்பவர்தன் உள்ளங்களை ஈர்க்கின்றன. விஜய் ஜேசுதாஸின் குரல் சிற் சில இடங்களில் எனக்கு பாடகர் உன்னிமேனனின் குரலை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. மனத்தை இலேசாக வருடிச்செல்லும் குரல். https://www.youtube.com/watch?v=xvfDN_Ga2_M

மாமன்னன் திரைப்படத்தைத் தமிழ்த்திரையுலகின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக நான் இனங்காண்கின்றேன். முக்கிய காரணம் இயக்குநர் மாரி செல்வராஜ் இத்திரைப்படத்தில் கையாண்டுள்ள கரு.அதனை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள். வசனங்கள். நடிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள்.
கலைஞரின் பராசக்தி வசனங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றனவோ அவ்விதம் இத்திரைப்படத்தின் சில காட்சிகள், வசனங்கள் நிலைத்து நிற்கப்போகின்றன. உதாரணங்களாகப் பின்வருவனற்றைக் கூறலாம்:
1. தகப்பன் வடிவேலைப் பார்த்து மகன் உதயநிதி கதிரையில் உட்காரச் சொல்வது. அக்காட்சியில் அற்புதமாக நடித்திருப்பார் வடிவேலு. அவரது உடல் மொழி சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. கடைசியில் மகனின் உத்தரவுக்கமைய கதிரையில் அமர்வதும், எழாமல் இருக்கும்போது காட்டும் முகபாவங்களும் மறக்க முடியாதவை.
மேலும் இக்காட்சி முக்கியமானதொரு குறியீட்டுக் காட்சி. சமூக அடக்குமுறைகளுக்கெதிராகப் போராட வேண்டுமென்பதை, அடங்கி விடக்கூடாதென்பதை எடுத்துக்காட்டும் மிகவும் வலிமையான குறியீட்டுக் காட்சி. சமூக அநீதிகளுக்குள் அடங்கி, ஒடுங்கிக் கிடக்கும் எவரையும் அதனை எதிர்கொண்டு , எதிர்த்துப்போராட வேண்டுமென்பதை எடுத்துக்காட்டும் மிகவும் வலிமையான குறியீடாகவே இக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் மிகவும் முக்கியமானது.
2. அச்சமயத்தில் வில்லனாக வரும் Fahadh Faasil கூறும் வசனம் : 'நான் அவரை உட்காரச்சொன்னது என் அடையாளம். உன்னை உட்காரச் சொன்னது என் அரசியல்' வசனகர்த்தாவை நினைவில் வைத்திருக்கச் செய்யும் வசனமிது. Fahadh Faasil சிறந்த நடிகர். பல்வேறு விருதுகளை நடிப்புக்காகப் பெற்ற நடிகர். அவரை நன்கு பாவித்திருக்கின்றார் இயக்குநர் இத்திரைப்படத்தில்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச்சிறந்த நர்த்தகி. அவரது நடனத்திறமையின் காரணமாகத்தான் அவர் நடித்த திரைப்படங்களில் அவர் நடித்திருக்கும் பாடற் காட்சிகளெல்லாம் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அப்பாடற் காட்சிகளிலெல்லாம் அவரது நடனத்திறமையின் கூறுகள் சிலவற்றைத்தான் காண முடியும்.
ஜெயலலிதாவின் நடனத்திறமையினை முழுதாக வெளிப்படுத்தும் வகையில் வெளியான திரைப்படங்கள் வெகு சிலதாம். அவற்றிலொன்று ஆதி பராசக்தி. அப்படத்தில் வரும் இப்பாடற் காட்சியினைப் பாருங்கள் அவரது நடனத்திறமையினை புரிந்துகொள்வீர்கள்.
அறுபதுகளில் அவர் தயாரித்து மேடையேற்றிய நாட்டிய நாடகமான 'காவிரி தந்த கலைச்செல்வி' நாட்டிய நாடகம் மிகவும் புகழ்பெற்றது. கல்கியில் அது பற்றியொரு விமர்சனம் வெளிவந்ததாக நினைவு. நீண்ட நாட்களாக அதனை யு டியூப்பில் தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் கிடைக்கவில்லை. யாரிடமாவதிருந்தால் பகிர்ந்துகொள்ளூங்கள்.

நான் கனடாவில் வானொலி நிகழ்ச்சிகள் கேட்பது குறைவு. இணையத்திலேயே என் முக்கியமான தேடல்கள், எழுத்துப்பணி இருப்பதால் எனக்கு இவற்றில் நிகழ்வுகளைக் கேட்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. மேலும் பதின்மப் பருவத்தில் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் நிகழ்ச்சிகளைப் பல திறமை மிகு ஒலிபரப்பாளர்கள், வானொலிக் கலைஞர்களூடாகக் கேட்டு மகிழ்ந்த எனக்கு அவர்களைப்போன்ற பன்மிகு துறைகளில் ஆளுமை மிக்க, புலமை மிக்கவர்களை இங்கு என்னால் எளிதாக இனங்காண முடியவில்லை என்பதும் ஒரு காரணம். இருந்தாலும் இரவு வேளைகளில் 9 மணிக்குப் பிறகு வாகனத்தில் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் கனடிய பல்லினக் கலாச்சார வானொலியான CMR 101.3 வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதுண்டு. தொடர்ச்சியாக அல்ல. இதனால் செந்தில்நாதன், பாலா, தர்சினி உதயராஜா போன்றவர்களின் குரல்கள் எனக்கு அறிமுகமாகின.
இவர்களில் தர்சினி உதயராஜாவின் குரல் நேயர்களை மிகவும் கவர்ந்து விட்டதை அறிய முடிந்தது. பத்து வருடங்களுக்கு முன்னர் இவர் நிகழ்ச்சியை கேட்டு விட்டு மீண்டும் பல வருடங்களின் பின் கேட்டபோது அன்றிருந்த பல வாசகர்கள் மீண்டும் அவரது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். ராஜவர்மன், அப்பன் என்று சில பெயர்கள் நினைவில் நிற்கும் வகையில் மீண்டும் மீண்டும் வானலையில் ஒலித்தன.இவர்களைப் போன்ற பல நேயர்கள் இவர் நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்காகக் காத்திருந்து பங்கு பற்றினார்கள் என்பதையும் அவர்களது கூற்றுக்களிலிருந்து அறிய முடிந்தது. இவரது வெற்றிக்கு முக்கிய காரணம் நேயர்களை அன்பொழுக அழைத்துச் செல்லும் அவரது குரல் என்பதை உணர முடிந்தது. நேயர்கள் இவரைச் சகோதரியாக, சிநேகிதியாக, ஆசிரியையாக , சிறந்ததோர் ஊடகவியலாளராக, வானொலி அறிவிப்பாளராகப் பார்த்தார்கள் என்பதையும் உணர முடிந்தது.
இரவுகளில் அமைதியாகக் காரில் பயணிக்கையில், அல்லது தொலைதூரப்பயணங்களில், அல்லது இரவுகளின் தனிமையில் படுக்கையில் புரண்டிருக்கையில் கேட்பதற்குத் துணையாக வரும் குரல்களில் முக்கியமானதொரு குரல் பாடகர் உன்னிமேனனின் குரல். 'வருசமெல்லாம் வசந்தம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ரவிசங்கரின் வரிகளில், சிற்பியின் இசையில் ஒலிக்கும் இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள் நான் கூறுவதன் அர்த்தம் புரியும். இதயத்தை வருடிச் செல்லும் குரல் உன்னிமேகனுடையது. நடிகர் மனோஜ் ஆர்ப்பாட்டமில்லாத சிறந்த நடிகர். தமிழ்த் திரையுலகில் அவரால் சோபிக்க முடியாது போனது துரதிருஷ்ட்டமே.
எண்பதுகளில் தனது நாற்பதுகளில் What's Love Got to Do with It பாடலின் மூலம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தவர் 'டீனா டேர்னர்' (Tina Turner). அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்திலுள்ள பிறவுண்ஸ்வில்லில் பிறந்தவர் இவர். இயற்பெயர் - Anna Mae Bullock.
அக்காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் இசைச் சானல்களில் லயனல் ரிச்சி, புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பில்லி ஜோயெல், மைக்கல் ஜோன்ஸன், சிந்தி லோப்பர் போன்றவர்களுடன் இவரது பாடல்களும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். இளையவர்களுக்கு மத்தியில் சரிக்கும் சமமாக இளமைத்துடிப்புடன் இயங்கிக்கொண்டிருந்தார். இவரை எப்போதும் இரசிகர்கள், விமர்சகர்கள் 'ரொக்கின் இராணி' என்றழைப்பார்கள். அது மிகையான கூற்றல்ல.
அண்மையில் நடிகர் சரத்பாபுவின் மறைவினையடுத்து நடிகை ரமாபிரபா பற்றிய செய்திகள் இணையத்தை நிறைத்துவிடத் தொடங்கி விட்டன. காரணம் - அவர் சரத்பாபுவின் முதல் மனைவியாக வாழ்ந்தவர். அதன் பின் திரைப்பட உலகைவிட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்த ரமாபிரபாவை அண்மைக்காலமாக அவரது முதுமைப் பிராயத்தில் தெலுங்கு சினிமா மீண்டும் திரையுலகுக்கு அழைத்து வந்துவிட்ட தகவல்களயும் அறிய முடிகின்றது. சரத்பாபுவின் கடைசிப்படமான 'வசந்த முல்லை'யிலும் இருவரும் நடித்திருப்பது காலத்தின் கோலம்.
ரமாபிரபாவின் படங்களை அதிகம் நான் பார்த்ததில்லை. ஆனால் பார்த்த படங்களில் இரண்டு மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ளன. ஒன்று சாந்தி நிலையம். அதில் ஜெமினியின் பெறா மகள்களில் மூத்த பெண் கீதாவாக நடித்திருப்பார். அடுத்தது ஶ்ரீதரின் 'உத்தரவின்றி உள்ளே வா' திரைப்படத்தில் சித்த சுவாதீனமற்ற பெண் ஆண்டாள் ஆக நடித்திருப்பார். நாகேஷை எந்நேரமும் 'நாதா நாதா' என்றழைத்துத் துரத்தித் திரிவார். அப்படி அழைக்கும்போதெல்லாம் நாகேஷ் விழுந்தடித்து ஓடுவார்.
என்னை மிகவும் கவர்ந்த நடிகர்களில் ஒருவர் சரத்பாபு. அவரது அமைதியான யாரையும் கவரும் முக அழகுடன் கூடிய ஆளுமையும், இதயங்களை வருடிச் செல்லும் குரலும் எப்போதும் என்னை ஆகர்சிப்பவை. அது அவரது உண்மைக் குரலா அல்லது வேறு யாராவது அவருக்குக் குரல் கொடுத்தார்களா என்பது தெரியாது. ஆனால் அந்தக் குரலும், அவரது நடிப்பும், சிரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.
அவரது மறைவுச் செய்தியினை இன்று இணையம் மூலம் அறிந்தேன். அண்மையில் அவர் மறைந்ததாக முகநூலில் வதந்தியொன்று பரவியது நினைவுக்கு வந்தது. ஆனால் இது வதந்தியல்ல என்பதைத் தமிழக முதல்வரின் இரங்கல் செய்தி புலப்படுத்தியது. இதுவரை காலமும் தன் நடிப்பால் எம்மையெல்லாம் மகிழ்வித்து வந்தார் சரத்பாபு. அவரது இழப்பால் வாடும் அனைவருக்குமென் ஆழ்ந்த இரங்கல்.
உழைப்பாளர் தினத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 'சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி' பாடலைப் பகிர்ந்துகொள்கின்றேன் - https://www.youtube.com/watch?v=TyYEYFTuec0
பாமர மக்களின் பேச்சுத்தமிழில் உயிரோட்டத்துடன் எழுதப்பட்டுள்ள கவிதை. எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் இசையில், பானுமதி , டி.எம்.எஸ் குரலில் , எம்.ஜி.ஆர் & பானுமதி நடிப்பில் ஒலிக்கும் பாடல். கேள்வியும், பதிலுமாக ஒலிக்கும் பாடலின் கருத்து உலகில் உழைப்பாளர் நிலையினை எடுத்துக் கூறுவதுடன் நின்று விடாது அவர்களுக்கு எதிர்காலத்தில் மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. அதுவே இப்பாடலின் சிறப்பு.
அவள் கூறுகின்றாள் 'காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்' என்கின்றான். அதற்குப் பதிலளிக்கும் அவனோ 'இப்போ காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னேவ் என்று நம்பிக்கையூட்டுகின்றான். அத்துடன் மேலும்
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாள் ஏப்ரில் 13. அவரது நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது பாடலொன்று - 'தூங்காதே தம்பி தூங்காதே.'. 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கருத்தாழம் மிக்க பாடல். 'நாடோடி மன்னன்' எம்ஜிஆரின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த திரைப்படம். எம்ஜிஆரின் திரையுலகில் முக்கிய மைல் கல் 'நாடோடி மன்னன்'. இதில்தான் அவர் சரோஜாதேவியை முதன் முதலாகத் தன் திரையுலக நாயகியாக அறிமுகப்படுத்துகின்றார்.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முற்போக்குக் கவிஞர். பொதுவுடமையைப் பாடிய கவிஞர். வர்க்க விடுதலையை நாடிய கவிஞர். அவரது இன்னுமொரு புகழ்பெற்ற பாடல் 'சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா'. 'நாடோடி மன்ன'னில் இடம் பெற்றுள்ள 'சும்மா இருந்த நிலத்தைக் கொத்தி' பாடலும் அவரது முக்கியப் பாடல்களிலொன்று.
நரசிம்ம பல்லவராக எம்ஜிஆரும், நர்த்தகி சிவகாமியாகச் சரோஜாதேவியும் திரையில் வரும் இப்பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம் 'கலங்கரை விளக்கம்'. இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. கேட்பதற்கு இனிமையான, மனத்துக்கு ஒத்தடம் தரும் பாடல்களிலொன்று இந்தப்பாடல். பாடல் வரிகள் ஒவ்வொன்றும், அவற்றைப் பாடிய டி.எம்.எஸ் & பி. சுசீலா குரல்களின் இனிமையும் , அபிமான நடிகர்களின் நடிப்பும் நெஞ்சைக் கொள்ளுவன. எப்பொழுது கேட்டாலும் கேட்பவர் உள்ளங்களை இன்பத்திலாழ்த்தும் பாடல். காதலின் சிறப்பைச் சிறப்பாக எழுத்தில் வடித்திருப்பார் கவிஞர். இப்பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசனல்லர். அவரிடம் உதவியாளராகவிருந்த பஞ்சு அருணாசலம். கண்ணதாசனின் கவி உதவியாளரும் கவிதை எழுதுவார் என்று எண்ண வைக்கும் பாடல்.


நாங்கள் டி.எம்.எஸ் & பி.சுசீலாவுடன் வளர்ந்தவர்கள். அவர்களுக்குப் பின்னர்தான் எவரும். மார்ச் 24. அமரர் டி.எம்.செளந்தரராஜனின் நூறாவது பிறந்த தினம். எம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த குரல் அவருடையது. அவரது நினைவாக ஒரு பாடல். 'ஆயிரத்தில் ஒருவ'னில் 'ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ' பாடல். https://www.youtube.com/watch?v=T590PRV5hig

இந்தக் காதல் மானுடரை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது. காதலை, குறிப்பாக ஒருதலைக் காதலை மையமாகக்கொண்டு எழுபதுகளில் வெளியான 'ஒரு தலை ராகம்' அக்காலக் கல்லூரி மாணவர்களையெல்லாம் உலுக்கி எடுத்த படம். இப்படம் பல சாதனைகளைப் புரிந்துள்ளது. படைத்தை முடித்ததும் தயாரிப்பாளர் E.M..இப்ராஹிம் அவர்களால் படத்தை விற்க முடியவில்லை. விநியோகத்தர்கள் எவரும் வாங்க முன் வரவில்லை. புதுமுகங்கள் நடிக்க, புதுமுகங்கள் எடுத்த படமென்பதால் தயங்கினார்கள் போலும். இப்ராஹிமே படத்தை விநியோகித்தார். ஆரம்பத்தில் படத்துக்கு வரவேற்பு பெரிதாக இருக்கவில்லை. ஆனால் விரைவிலேயே படத்துக்கான ஆதரவு அதிகரித்து பெரு வசூல் பெற்று வெற்றியடைந்தது. 360 நாட்களைக் கடந்து பல இடங்களில் ஓடியதாக அறியப்படுகின்றது.

'நீரும் நெருப்பும்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இனியதொரு காலத்தால் அழியாத கானம். மெல்லிசை மன்னரின் இசையமைப்பில், கவிஞர் வாலியின் எழுத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில், டி,.எம்.எஸ் & பி.சுசீலா குரலில் ஒலிக்கும் இனிய பாடல். 'அபூர்வ சகோதரர்கள்' பாடல்கள் அனைத்தையும் கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருப்பார். 'நீரும் நெருப்பும்' பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுதியிருப்பார் (விருந்தோ விருந்து பாடலில் மட்டும் அதில் இடம் பெறும் மலையாள, கன்னடம், தெலுங்கு மொழி வரிகளை அம்மொழிக் கவிஞர்கள் எழுதியிருப்பார்கள்).
'நீரும் நெருப்பும்' திரைப்படத்தில் 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தில் பானுமதி நடித்த வேடத்தில் ஜெயலலிதா நடித்திருப்பார். ஜெமினியின் 'அபூர்வ சகோதரர்க'ளில் எம்.கே.ராதா & பானுமதி நடித்திருப்பார்கள். பெரு வெற்றி கண்ட திரைப்படம். 'நீரும் நெருப்பும்' பெரு வெற்றியடையாவிடினும், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில் வெளியான முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. எனக்குப் பிடித்திருந்தது.

'அந்த 7 நாட்கள்' திரைப்படத்தில் இடம் பெறும் இப்பாடல் எனக்குப் பிடித்த பாடகர் ஜெயச்சந்திரனின் இன்னுமொரு பாடல். மெல்லிசை மன்னரின் இசையில் , எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடும் இப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலியோ, கவிஞர் கண்ணதாசனோ அல்லர். எனக்கு அறிமுகமில்லாத கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம். இப்பாடலை அடிக்கடி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையில் அந்திப்பொழுதுகளில் எண்பதுகளில் கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன். ஆறு மணியுடன் தமிழ்ச்சேவையை நிறுத்தி விடும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அப்பொழுதுதான் அதனை இரவு பத்து மணி வரையென்று நினைக்கின்றேன் நீடித்திருந்தது. 'பொக்கற் சைஸ் டிரான்சிஸ்டர் ரேடியோ'வில் அச்சேவையில் ஒலிக்கும் பாடல்களை எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருந்த காலகட்டம். இப்பாடலை எழுதிய கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் வேறு ஏதாவது பாடல்கள் எழுதியிருக்கின்றாரா?

என் அபிமானப் பாடகர்களில் ஒருவரான பாடகர் ஜெயச்சந்திரனின் மென்மையாக இதயங்களை வருடிச் செல்லும் குரலில் ஒரு பாடல். இன்று , மார்ச் 3, அவரது பிறந்த நாள்.
நான் கேட்ட இவரது குரலில் ஒலித்த முதற் பாடல் 'அலைகள்' திரைப்படத்தில் வரும் 'பொன்னென்ன பூவென்ன கண்ணே' பாடல்தான். நடிகர் விஸ்ணுவர்த்தனுக்காகப் பாடியிருப்பார். யாழ் ராஜா திரையரங்கில் பார்த்த திரைப்படம் 'அலைகள்'.
ஆனால் இன்று இவர் நினைவாகக் கேட்கும் பாடல் 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள, கவிஞர் வாலியின் வரிகளை, இசைஞானி இளையராஜாவின் இசை தாங்கி வரும் 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' பாடல். நடிகர் விஜயகாந்துக்காகப் பாடிய பாடல். விஜயகாந்தின் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய மைல் கல் 'வைதேகி காத்திருந்தாள்'. https://www.youtube.com/watch?v=bihKCX6nDQA
இசை, வரிகள், குரல் & நடிப்பு அனைத்தும் ஒன்றிணைந்து நெஞ்சை வாட்டி ஈர்க்கும் பாடல்களிலொன்று இந்தப்பாடல்.

நடிகை ஶ்ரீதேவி எங்கள் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவர். அவர் எங்களுடன் சேர்ந்து வளர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக, இளம் பெண்ணாக எங்கள் கண் முன்னால் வளர்ந்து இந்தியத் திரையுலகின் உச்சத்தைத் தொட்டவர். அவரது நினைவு தினம் பெப்ருவரி 24.
கந்தன் கருணையில் அறிமுகமாகி, எம்ஜிஆர் (நம்நாடு)< சிவாஜி (பாபு) எனத் தொடர்ந்து 'மூன்று முடிச்சு', 'குரு', 'வாழ்வே மாயம்', 'பதினாறு வயதினிலே' , 'சிகப்பு ரோஜாக்கள்' , 'மூன்றாம் பிறை' , 'மீண்டும் கோகிலா' என எழுபதுகளில், எண்பதுகளில் வெளியான அவரது திரைப்படங்கள் என்றும் நினைவில் நிற்பவை.

"அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!" - பாரதியார் -
பாரதியின் வரிகள் எல்லாமே இருப்பின் அனுபவத்தெளிவு மிக்கவை, ஆனால் எளிமையானவை. அதனால்தான் கேட்பவர் உள்ளங்களை வெகு இலகுவாகக் கவர்ந்து விடுகின்றன. அவரது 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா'ப் பாடல் எனக்குப் பிடித்த அவரது கண்ணம்மாப் பாடல்களிலொன்று: https://www.youtube.com/watch?v=hWIGYq3JfDU

கலாச்சாரம், பண்பாடு,சமயக் கட்டுமானங்கள்,பொருளாதார நிலை,ஆணாதிக்கம் என்ற பல காரணிகளால் ஒடுக்கப் பட்டு வாழும் பெரும்பாலான பெண்களின் நிலையைத் தன் கிராமத்தில்; கண்ட கௌரி அவர்களைப்போல் தானும் வாழாமல், தங்கள் பாடசாலைக்குப் படிப்பிக்க வந்த புனிதமலர் ரீச்சர் மாதிரி, அறிவுடன், துணிவுடன், அன்பான உணர்வுடன் மற்றப் பெண்களின் மேப்பாட்டுக்கு உதவும் கல்வி கொடுக்கும் ஆசிரியையாக வாழச் சபதம் கொள்கிறாள். எப்படியும் தனது கல்வியைத் துணிவாகச் செயற்பட நினைக்கிறாள். 'தில்லையாற்றங் கரை'நாவலில் துணிவான இலங்கைத் தமிழ்ப் பெண் கௌரியின் கல்விக்கான 'போர்'அந்த'பெரிய பிள்ளையாகும்' விடயத்திற்தான் ஆரம்பமாகிறது.
'அயலி' என்ற பெயர்,அவர்களின் குல தெய்வத்தின் பெயர் என்றும் அந்த அயலித் தெய்வம்,அந்த ஊர்ப் பெண் ஒருத்தி அயலவனைக் காதலித் குற்றத்திற்காகக் கோபமடைந்து அந்த ஊராரை வருத்தியாகதாகவும, அதனால் பல துன்பங்களை அனுபவித்தவர்கள் பல இடமலைந்து, இந்த ஊருக்கு வந்ததும் மிகவும் பயபக்தியுடன் அயலியை வணங்குறார்கள என்றும் , பெண்கள் பருவம் வந்ததும் 'அயலி'குலதெய்வக் கோயிலுக்குள் போக முடியாது. உடனடியாகத் திருமணம் செய்து வைக்கப்படவேண்டும் என்பதுபோன்ற கலாச்சாரத்துடன் வாழ்வதாகவும். அயலி படம் சொல்கிறது.
இந்தக் கதை எனது நாவலில் (ஆங்கில) 139-142 பக்கங்களில் சொல்லப் பட்டிருக்கும் கோளாவில் கிராமத்தில்,பத்தினி அம்மன் கண்ணகி வழிபாடும் ஒழுக்கமும் பற்றிய பாரம்பரிய கதையைத் திருடியதாகும். ஆச்சியின் கதைப்படி, ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன், அதாவது இன்றைக்கு நூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், பத்தினியம்மன் ஒருநாள் கோளாவில் கிராமத்தாரில் உள்ள கோபத்தில் ஊரை விட்டுப் போனாதாம். அதற்குக் காரணம் கண்ணகியம்மன் கோயிலுக்குப் பின் புறமுள்ள திருக்கொன்றை மரத்தடியில் இளம் காதலர்கள் ஒழுக்கக் குறைவாக நடந்ததுதான் என்றும் பூசகர் கனவில் வந்து கண்ணகியம்மன் சொன்னதாம். அதைத் தொடர்ந்து இளம் தலைமுறையினர் மிகவும் ஒழுங்காக நடந்து கொள்வதாகச் சபதம் செய்து கொண்டாதவும், அதன் நீட்சியாகப் பெண்கள் பெரிய பிள்ளையானதும,; திருமணம் ஆகும் வரை வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாட்டைப் பலர் கடை பிடிக்கிறார்கள். அத்துடன், காட்டிலுள்ள பட்டிமேடு என்னும் இடத்தில் பத்தினியம்மனுக்குக் கோயில் கட்டி மிகவும் பய பக்தியுடனும் பல நாட்கள் பூசை செய்வதாகவும் சொன்னார்கள். இக்கதையையின் திரிபுதான் அயலி. இக்கதையில்,பெண்கள் பெரிய பிள்ளையானதும், வீட்டோடு அடைக்கப் படுகிறார்கள். அவருடைய கதாநாயகி, தனக்குப் பருவம் வரவில்லை என்று படு பொய் சொல்லிக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறாள்.

பாடகி வாணி ஜெயராமின் இழப்புச் செய்தியை முகநூல் மூலம் அறிந்தேன். இந்தியத் திரைப்பட உலகின் சிறந்த பின்னணிப்பாடகிகளில் ஒருவர். ஆழ்ந்த இரங்கல். இவரது நினைவாக எனக்குப் பிடித்த ஒரு பாடலை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். இப்பாடல் அவருக்கு அகில இந்திய சிறந்த பாடகி என்னும் விருதினைப் பெற்றுத்தந்த பாடலும் கூட. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் இசையில் ஒலிக்கும் இப்பாடலுக்கு அற்புதமாக நடித்திருப்பார் ஶ்ரீவித்தியா. பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன். பாடல் இட,ம் பெற்றுள்ள படம்: கே.பாலச்சந்தரின் 'அபூர்வ ராகங்கள்'. https://www.youtube.com/watch?v=2xVFBKSxMP0

- பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மறைந்த செய்தியினை இணையச் செய்திகள் மூலம் அறிந்தோம். அவரது இழப்பு கலை, உலகிற்குப் பேரிழப்பு என்பது மிகையான கூற்றல்ல. ஆழ்ந்த இரங்கலைப் 'பதிவுகள்' தெரிவித்துக்கொள்கின்றது. அவரது நினைவாக அவரைப்பற்றி 'இந்துதமிழ்' இணையத் தளத்தில் முன்னர் வெளியான கட்டுரையினை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் - வாணி ஜெயராம் - https://www.youtube.com/watch?v=2xVFBKSxMP0
புகழ்பெற்ற பழைய திரைப்படங்களை மீண்டும் வெளியிடும்போது, அந்தப் படத்தில் ‘ஹிட்டடித்த’ பாடல்களின் பட்டியலை அச்சிட்டு.. ‘இனிய பாடல்கள் நிறைந்த படம்’ என்று விளம்பரப்படுத்துவார்கள்.
ஆச்சரியகரமாக.. 1974-ம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆன ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் சுவரொட்டியில், படம் வெளிவரும் முன்பே பிரபலமாகியிருந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடலின் முதல் வரியைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி விளம்பரம் செய்யத் தூண்டிய குரல், அன்று துளிர்விட்டிருந்த புதிய பாடகியான வாணி ஜெயராமினுடையது.
இந்தப் படத்துக்கு முன்பே 1973-ம் வருடம் வெளிவந்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஆகிய இரு படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் அவரது குரலை இல்லம் தோறும் கொண்டு சேர்த்த பெருமை ‘தீர்க்க சுமங்கலி’க்குக் கிடைத்தது.
1945 - நவம்பர் 30-ம் தேதி வேலூரில் ‘கலைவாணி’ என்கிற வாணி ஜெயராம் பிறந்தார். இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்க தமிழ்க் குடும்பம் அவருடையது. கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்னாடக இசையைப் பயின்றுவந்த சிறுமி வாணிக்கு சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, மன்னா டே ஆகியோரது பாடல்களைக் கேட்கக் கேட்கத் தானும் திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது.

- இயக்குநர் கே.விஸ்வநாத் -
திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் எனப் பன்முக ஆளுமையாளரான இயக்குநர் கே.விஸ்வநாத் இன்று மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல். இவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உறவினர். தனது திரையுலகப் பங்களிப்புக்காக ஐந்து தடவைகள் இந்திய மத்திய அரசின் தேசிய விருதுகளையும், ஏழு தடவைகள் ஆந்திர மாநில அரசின் விருதுகளையும் , ஏனைய பல விருதுகளையும் பெற்றவர். வாழ்நாள் சாதனையாளர் விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதினையும் பெற்றவர். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா என்பதும் நினைவு கூரத்தக்கது.