'நீரும் நெருப்பும்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இனியதொரு காலத்தால் அழியாத கானம். மெல்லிசை மன்னரின் இசையமைப்பில், கவிஞர் வாலியின் எழுத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில், டி,.எம்.எஸ் & பி.சுசீலா குரலில் ஒலிக்கும் இனிய பாடல். 'அபூர்வ சகோதரர்கள்' பாடல்கள் அனைத்தையும் கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருப்பார். 'நீரும் நெருப்பும்' பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுதியிருப்பார் (விருந்தோ விருந்து பாடலில் மட்டும் அதில் இடம் பெறும் மலையாள, கன்னடம், தெலுங்கு மொழி வரிகளை அம்மொழிக் கவிஞர்கள் எழுதியிருப்பார்கள்).
'நீரும் நெருப்பும்' திரைப்படத்தில் 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தில் பானுமதி நடித்த வேடத்தில் ஜெயலலிதா நடித்திருப்பார். ஜெமினியின் 'அபூர்வ சகோதரர்க'ளில் எம்.கே.ராதா & பானுமதி நடித்திருப்பார்கள். பெரு வெற்றி கண்ட திரைப்படம். 'நீரும் நெருப்பும்' பெரு வெற்றியடையாவிடினும், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில் வெளியான முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. எனக்குப் பிடித்திருந்தது.
பல வருடங்களாக யாழ் ராஜாவின் வடக்குச் சுவரில் 'நீரும் நெருப்பும்' விளம்பரமிருந்தது. எப்போ படம் வருகிறது என்று காத்திருந்து பார்த்த திரைப்படம். எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்திருப்பார். ஜெயலிதாவின் 'விருந்தோ விருந்து' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் பானுமதி பாடி நடித்திருக்கும் 'லட்டு லட்டு' மிகவும் புகழ் பெற்ற பாடல். பானுமதியைப்போல் ஜெயலலிதாவையும் சொந்தக் குரலில் பாட வைத்திருக்கலாம் என்று நான் எண்ணுவதுண்டு. யாழ் ராஜாவின் இரு எம்ஜிஆர்கள் காட்சியளிக்கும் கட் அவுட் வைத்திருந்தார்கள். வில்லனாக வரும் அசோகனின் நடிப்பும் அந்த வயதில் எம்மைக் கவர்ந்திருந்தது. தம்பி கரிகாலனாக நடித்திருக்கும் எம்ஜிஆரின் நடிப்பும் சிறப்பாகவிருந்தது. வசனங்களும் நறுக்குத் தெறித்தால் எம்மைக் கவர்ந்திருந்தன.
பிரெஞ்சு நாவலாசிரியரான அலெக்சாண்டர் டுமாஸின் புகழ்பெற்ற நாவலான 'கோசிக்கன் பிறதர்ஸ்' நாவலின் தழுவலே 'அபூர்வ சகோதரர்கள்'. 'அபூர்வ சகோதரர்கள்'திரைப்படத்தின் மீள் வெளியீடே 'நீரும் நெருப்பும்'. 'நீரும் நெருப்பும்' பெயர் எனக்கு 'அபூர்வ சகோதரர்கள்' என்னும் பெயரை விட மிகவும் பிடித்திருந்தது. சகோதரர்களின் ஆளுமையினைப் பிரதிபலிக்கும் நல்லதொரு கவித்துவம் மிக்க பெயர்.
பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=D7NQKTKl4dM
'நீரும் நெருப்பும்' திரைப்படத்தைப் பார்க்க - https://www.youtube.com/watch?v=cby5vBJHcqY