புலம்பெயர் தமிழ் இலக்கியம் - வ.ந.கிரிதரனின் அமெரிக்கா நாவலை முன்வைத்துச் சில குறிப்புகள்! - அப்தான் நிஷான், மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைகழகம், இலங்கை -
அண்மையில் கிழக்குப் பல்கலைககழகத்தின் கலை, கலாச்சாரப் பீடத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் மூன்றாம் வருட மாணவன் அப்தான் நிஷான் ,Abdhan Nishan, எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் புலம்பெயர் இலக்கியங்கள் என்னும் பாடத்துக்காக எனது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவலைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையினைத் தான் சமர்ப்பித்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். இதுவே தனது முதலாவது ஆய்வு என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் 'தொடர்ந்து புலம்பெயர் சிறுகதைகளில் அந்நியமாதல் (தனிமைப்படுத்தப்படல்) என்ற விடயம் வெளிப்படுமாற்றினை ஆய்வு செய்யுமாறு கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறையினால் பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்று சிறுகதைத் தொகுப்பை ஆய்வுக்காக தெரிவு செய்துள்ளேன்.' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முதலில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். மாணவர்களை இதுபோன்ற விடயங்களில் கவனத்தைச் செலுத்துமாறு தூண்டுவது ஆரோக்கியமான விடயம். மேலும் போர்ச்சூழலை அடுத்து ஆயிரக்கணக்கில் இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். இன்றும் புலம்பெயர்கின்றார்கள். இன்றுள்ள தலைமுறையினருக்குப் புகலிட வாழ்க்கை பற்றிய விபரங்களை, புலம்பெயர்ந்ததற்கான காரணங்களைப் புகலிட இலக்கியப் படைப்புகள் எடுத்துக்காட்டுகின்றன., அவ்வகையில் புகலிடத் தமிழ் இலக்கியம் நோக்கியும் மாணவர்களின் கவனத்தைத் திருப்பியிருப்பதும் ஆரோக்கியமானது. இத்தருணத்தில் எண்பதுகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர் நா. சுப்பிரமணியன் , பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோர் மாணவர்களை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றியும் கவனத்தைத் திருப்ப ஊக்குவித்தது நினைவு வருகின்றது. அதன் பயனாக இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுகள் வெளிவந்தன. அப்தான் நிஷானின் ஆய்வு முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன் -
தமிழிலக்கிய வரலாற்றில் 'புலம்பெயர்வு, 'புலம்பெயர்தல்" ஆகிய சொற்கள் பற்றிய கருத்துக்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. மனிதநாகரிகத்தின் வளர்ச்சிநிலைகளில் புலம்பெயர்வு தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ்விலக்கியத்துக்கூடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.
'புலம்பெயர்வு" என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப்பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சு10ழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே இங்கு 'புலம்பெயர் இலக்கியம்" அல்லது 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்" என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கின்றோம். இதனை ஆங்கிலத்தில் னுயைளிழசய டுவைநசயவரசந என குறிப்பிடுவர்.
ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள்
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள்; இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், நோர்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும்: வடஅமெரிக்காவில் கனடாவிலும், மற்றும் அவுஸ்திரேலியாவிலும் மிக அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைய கணிப்பின்படி ஏறத்தாள ஆறு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. இந்நாடுகளிலிருந்து ஈழத்தமிழர்கள் படைக்கும் படைப்புக்களே 'புலம்பெயர் இலக்கியம்" என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.