உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த மூன்று முக்கிய நிகழ்வுகள்! - குரு அரவிந்தன் -
அண்மையில் பொது ஊடகங்களில் வெளிவந்த விளையாட்டுத்துறை சார்ந்த இரண்டு நிகழ்வுகளும், விண்வெளி சார்ந்ததொரு நிகழ்வும் பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது. ஒன்று இங்கிலாந்திற்கும் ஸ்பெயினுக்கும் நடந்த உலகக் கிண்ணத்திற்கான பெண்கள் உதைபந்தாட்ட இறுதிப் போட்டி, மற்றது பதினெட்டே வயதான பிரக்ஞானந்தாவின் உலகக் கிண்ணத்திற்கான சதுரங்க ஆட்டப் போட்டி, மூன்றாவது சந்திரனின் தென்துருவத்தில் தரையிறங்கும் போட்டி. இந்த மூன்று நிகழ்வுகளும் விளையாட்டுத்துறை மற்றும் விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ளவர்களை மட்டுமல்ல, ஏனைய பொதுமக்களின் கவனத்தையும் பெரிதாக ஈர்த்திருந்தன.
பெண்கள் உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்பெயின் அணியினர் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றாலும், அவர்களின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு சோகக்கதை இருந்தது. சிட்னியில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் ஸ்பெயினும் மோதிக் கொண்டன. ஸ்பெயின் அணியின் தலைவியான 23 வயதான ஒல்கா காரமோனா ஒரு கோலைப் போட்டு ஸ்பெயினுக்கு வெற்றியைத் தேடித்தந்திருந்தார். ஸ்பெயின் வெற்றியைக் கொண்டாடிய போது, இந்த வெற்றிக்குக் காரணமாக யார் அந்தக் கோலை அடித்து வெற்றியை ஸ்பெயின் நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தாரோ, அவரிடம் ஒரு சோகச் செய்தி பகிரப்பட்டது, அது என்னவென்றால் அவரது தந்தையார் திடீர் மரணத்தைத் தழுவிக் கொண்டார் என்பதேயாகும்.