முன்னுரைகம்பர் இயற்றிய இராமாயணத்தில் கூறப்படும் கதாப்பாத்திரங்களுள் முக்கியமானவர்களுள் ஒருவர் ஜனகர். இவர் மிதிலாபுரியின் மன்னர். சீதையைக் கண்டு எடுத்து வளர்த்தவராவார். மாவீரர். குடிமக்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்.பெரு வேள்விகள் செய்தவர். கம்பராமாயணத்தில் ஜனகரின் மாட்சி குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
கம்பராமாயணத்தில் ஜனகர்
ஜனகர் மிதிலையின் மன்னர். சீதையைத் தன் மகளாக எடுத்து வளர்த்தவர். நாட்டு மக்களைத் தன் கண் போல் காப்பவர். இவருக்குத் துணையாக தேவர்களே தம் படைகளை அனுப்பி வைப்பர். அத்தகைய ஆற்றல் மிக்கவர். இராமன் வில்லை வளைத்ததைக் கண்ட ஜனகர் மிக்க மகிழ்ச்சி பொங்க நாட்டு மக்களுக்கு தேவையான பெருஞ்செல்வத்தை வாரிச் செல்லக் கூறினான்.மன்னன் ஜனகனின் ஆணைப்படி அவனது பெருஞ் செல்வத்தை மிதிலைவாழ் மக்கள் வாரிச்சென்றார்கள்.
“வெண்நிற மேகம் மேன்மேல்விரி கடல்பருகுமா போல்
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார்“
(கார்முகப்படலம் 653)
கம்பர் ஜனகனை அறிமுகப்படுத்தும்போது ' மருதம் சூழ் மிதிலையர் கோன்' என்கிறார். நிலவளம், நீர்வளம் முதலிய பல வளங்களை உடையது மருதநிலப்பகுதி.
மிதிலையின் சிறப்பு
விசுவாமித்திரர், இராம இலட்சுமணனுடன் மிதிலை நகர வீதியில் வரும் போது நகரின் சிறப்புகள் பேசப்படுகின்றன. நடன மங்கையர் நடனமாடும் பொன்னாலான நடன சாலைகளை அவர்கள் கண்டார்கள். குற்றம் உடைய பிறப்புகளைப் போல மேலும் கீழுமாய் போவதும் வருவதுமாகிய தன்மையுடைய குற்றமற்ற பிறப்புகளைப் போல மேலும் கீழுமாய் போவதும் வருவதுமாகிய தன்மையுடைய பாக்கு மரங்களிலே பிணைக்கப்பட்டுள்ள ஊஞ்சலிலே, பெண்கள் தம்மைச் சுற்றிலும் ஆரவாரத்தோடு மேலெழுந்த வண்டுகள் ஒலித்து நிற்க, ஆடவர்களின் மனதோடு ஆடுவதை அவர்கள் கண்டார்கள். அளவில்லாத இரத்தினங்கள், பொன்முத்துக்கள் கவரிமானின் வால், காடுகளில் உண்டாகும் வகிர்க் கட்டைகள், மயில் தோகைகள், யானை தந்தங்கள் ஆகியவற்றை வயல்களுக்கு வரப்புகளை அமைத்து முடிக்கும் உழவர்கள் குவித்து வைக்குமாறு இரு கரைகளிலும் பரவச் செல்கின்ற காவிரி நதியைப் போன்ற கடைவீதிகளை அவர்கள் கண்டார்கள். மகளிர் வீணை வாசிப்பதைக் கண்டார்கள்.
அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழி
தேவர்களும் வந்து தங்குவதற்கு தகுதி வாய்ந்த அரண்மனைக்கு அருகே உள்ள மாளிகை வரிசையின் நிழல் பிரதி பிம்பம் அகழியில் படிந்தது. அதனால் அகழி தேவலோகத்தை எழிலைத் தன்னிடம் காட்டியது. அலைகளை மிகுந்து நீர் பொங்கி வருகின்ற கங்கையைப் போல் அது ஆழமுடையது. இத்தன்மை வாய்ந்த சேனைகளைக் கொண்ட ஜனகனது அழகிய பொன்மயமான அரண்மனையைச் சுற்றும் மதிலினை சூழ்ந்திருந்த அகலியை அவர்கள் பார்த்தார்கள். (மிதிலைக் காட்சிப் படலம் 506)
சீதையின் பிறப்பு
ஜனக மாமன்னன் யாகம் செய்வதற்காக ஒரு இடத்தைக் கண்டு தேர்ந்தெடுத்து அதைத் தாமே கலப்பைப் பிடித்து உழுகிறார். பூமி தேவியின் அழகிய உருவத்தைப் புல்லை மறைந்து நிற்கும் தேவியின் அழகு நமக்கு தெரியாது. அந்த தேவியே சீதையாக வெளிப்பட்டு ஜனகனுடைய கலப்பை கொழு முன் தோன்றினாள்.
“உழுகின்ற கொழு முகத்தின் உதிக்கின்ற கதரின் ஒளி
பொழிகின்ற புவி மடந்தை திரு வெளிப்பட்டென புணரி
எழுகின்ற தென் அமுதொடு எழுந்தவளும் இழிந்து ஒதுங்கித்
தொழுகின்றநல் நலத்துப் பெண்ணரசி தோன்றினாள்”
(கார்முகப்படலம் 631)
பெண்ணின் திருமணம் தந்தையின் மனநிலை
பருவமடைந்த பெண்ணுக்குத் திருமணம் தாமதமானால் அவள் தந்தையின் மனநிலை மிகவும் வருத்தமடையும். சிவதனுசின் வரலாற்றை சதானந்த முனிவர் அவையோர்க்கு சொல்லத் தொடங்குகிறார். இம்முறையாவது சிவதனுசை யாராவது முறித்தால் சீதைக்குத் திருமணம் நடைபெறும். நடைபெற வேண்டுமே என்ற கவலையோடு அந்த சிவதனுசை ஜனகர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் கவனித்த சதானந்த முனிவர்,
“போதகம் அனையவன் பொலிவை நோக்கி அவ்
வேதனை தருகின்ற வில்லை நோக்கித் தன்
மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய
கோதமன் காதலன் கூறல் மேவினான்”
(கார்முகப்படலம் 625)
வில்லை 60,000 வீரர்கள் சுமந்து வந்து நில மகளின் முதுகு நெளிந்து போகும் படி கீழே வைத்தனர். இந்த வில்லை எடுத்து வளைக்கப் போகின்றவர் யாரோ என்று கூறி கை நடுக்கம் அடைந்தார். (கார்முகப்படலம் 624)
பெரு வேள்வி செய்த ஜனகன்
ஜனகன் பெருவேள்வி நடத்தினார். அதில் பங்கு கொள்வதற்காக முனிவர்களும், அந்தணர்களும் வந்து சேர்ந்தனர். ஜனகனை மறையோர்கள் வாழ்த்தினர். முனிவர்களும் நல்ல ஆசி கூறினர்.
மணமகனை, (மருமகனைத்) தேடல்
பெண்ணைப் பெற்ற ஜனகர் தன்மகள் சீதைக்குத் திருமணம் செய்ய விரும்பினார். வில்லை வளைத்தவர்க்கே பெண் என்ற நிபந்தனையை விதித்திருந்தார். யாராலும் அந்த வில்லைத் தூக்கக் கூட முடியவில்லை. திருமணமும் தள்ளிப்போனது. அப்போது விசுவாமித்திரரோடு வந்திருந்த அந்த அரச குமரர்களான இராம, இலட்சுமணர்களை ஜனகர் கவனித்தார். சிறந்த தந்தையானதால் அவர் கண்கள் தன் மகளுக்குத் தக்க மணமகனைத் (மருமகனை) தேடியது. முருகனைப் போல அழகன் தன் மருமகனாக மாட்டானா என்று ஜனகர் ஏங்கினார்.
விசுவாமித்திரரிடம் வேண்டுதல்
யார் இவர்கள் என்று முனிவரிடம், ஜனகன் வேண்ட முனிவர் தன் மனதுக்குள் மகளைத் தருவதற்காக மன்னர் அடி போடுகிறார் என்பதையும் அறிந்து கொண்டார்.
மாப்பிள்ளையை பற்றி விசாரித்தல்
இராம இலட்சுமணர்களைக் கண்களால் கண்ட ஜனகருக்கு அவர்களின் தோற்றம் பிடித்திருந்தது. தன் மகளுக்கேற்ற மணமகன் இவனே என்று எண்ணினார். முனிவரிடம் அவனைப் பற்றியும், குல பெருமைகளையும், குண நலன்களையும் விசாரிக்கிறார். விசுவாமித்திரர், இவர்கள் கோசல நாட்டு மன்னன் தசரதனின் அருமைப் புதல்வர்கள் என்றும், பிருது, சக்கரவர்த்தி இசுவாகு, அரசன் காகுத்தன், நேமி, மாந்தாதா, சிபி, சகரன், பகீரதன், ரகு, அயன் ஆகிய இவர்கள் இவனது முன்னோர்கள் என்று அத்தகைய வரிசையில் வந்தவன் தசரதன். அவன் மகனே இராமன் என்று விசுவாமித்திரர் இராமனின் குலப்பெருமைகளைக் கூறினார்.
இராமன் பிறப்பு
தசரதன் புதல்வரைப் பெறும் பேறின்றி வருந்தினான். கலைக்கோட்டு முனிவர் செய்த யாகத்தின் மூலம் பெற்ற அமுதம் போன்ற உணவை உண்டதால், தசரதனின் முதல் மனைவி கோசலை இராமனைப் பெற்றெடுத்தாள் என்றும், கைகேயி பரதனையும், சுமத்திரை இலட்சுமணன் சத்துருக்கணனையும் பெற்றெடுத்தார்கள் என்று கூறுகிறார்.
மாப்பிள்ளையின் கல்வித்தகுதி குறித்து விசாரித்தல்
விசுவாமித்திரரே தொடர்ந்து பேசுகிறார். நான்கு புதல்வர்களும் சரஸ்வதியினும் உயர்ந்தவர்கள். வில்வித்தையை ஆராய்ந்து கூறும் தனுஷ் வேதம் எனும் நூல் தோற்று அடிமையான பகைவர்களைப் போல, அவர்களுக்கு குற்றேவல் செய்தன. கலைகள் நிறைந்த வட்டமான ஒளிமிக்க சந்திரனின் உதயத்தால் பேரொளி செய்கின்ற அலை கடல்கள் போல அவர்கள் வளர்ந்தார்கள்.
வளர்த்தவர் வசிஷ்டர்
பெண்ணைப் பெற்ற தந்தையாயிற்றே, தந்தையைப் போல மகனும் பல பெண்களை மணந்து கொண்டால் என்ன செய்வது என்ற எண்ணம் ஜனகனின் மனதில் இருந்தது என்பதை உணர்ந்து கொண்ட விசுவாமித்திரர், ஜனகனிடம் பெயரளவில் மட்டுமே தசரதன் தந்தை. ஆனால் உண்மையில் உபநயன சடங்கைச் செய்து வேதங்களைக் கற்பித்து இவர்களை வளர்த்தவர் வசிஷ்ட முனிவனே என்று கூறுகிறார்.
“திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழல் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரேகாண்
உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்து
மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிஷ்டர் காண்”
(குலமுறை கிளத்துபடலம் 609)
வீரம் குறித்து விசாரித்தல்
இராமனின் வீரம் வலிமை குறித்து விசுவாமித்திரர், ஜனகரிடம் அரக்கி தாடகையை வதம் செய்ய அவர்களை அழைத்து வந்தேன். இந்த இராமன் செலுத்திய ஒரே அம்பு தாடகையின் மார்பைத் துளைத்து, குறுக்கிடும் பொருள் எதுவும் இல்லாததால் நிலத்தைத் துளைத்து அப்புறம் சென்றது. தாடகையின் புதல்வர்களில் ஒருவன் சுபாஹு. அவன் இராமனின் அம்புகளால் உயிர்த் துறந்து வானுலகம் சென்று விட்டான். மற்றொருவரான மாரீசன் போன இடம் தெரியவில்லை. நானும் என் வேலையை முடித்துக்கொண்டு இங்கு வந்தேன் என்று இராமனின் தோள் வலிமையை விளக்கிக் கூறினார்.(குலமுறைக் கிளத்துப் படலம் 611)
இராமனின் வில்லாற்றல்
இராமன் கோபத்தில் அம்புகளைச் செலுத்தினால், இவ்வுலகங்கள் அனைத்தையும், இவற்றில் உள்ள கடல்களோடும், மலைகளோடும் கரிந்து போகும்படி எரித்து அழிக்கும் ஆயுதங்களை, நான் முன் செய்த தவ பயனால் அவனுக்குப் பெற்றுத் தந்தேன். தந்த நானும் மனதிலே நாணும் படி, அவை இந்த இராமனுக்குக் குற்றேவல் செய்கின்றன என்று கூறினார்.
“ஆய்ந்து உணர் ஐய அயற்கேயும் அறிவு அரிய
காய்ந்து ஏவின் உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏறச் சுடுகிற்கும் படைக் கலங்கள் செய் தவத்தான்
ஈந்தோனும் மனம் உட்க இவற்கு ஏவல்செய்குனவால்”
(குலமுறை கிளத்து படலம் 613)
இராமனின் பாத மகிமையைப் போற்றுதல்
கௌதமன் மனைவியாகிய அகலிகையின் சாபத்தை நிவிர்த்தி செய்து முன்பிருந்தபடியே நல்லுருவம் தந்தான். இராமன் மேலும் எனக்கு மிகுதியான அன்பு உண்டு. நான் இங்கே கூறியவையே இராமனது வரலாறும், தோள் வலிமையும் ஆகும் என்று விசுவாமித்திரன் ஜனகருக்குக் கூறி முடித்தான்.
“கோதவன் தன் பன்னிக்கு முன்னே உருக் கொடுத்தது இவன்
போது வென்றது எனப் பொலந்த பொலங் கழற்கால் பொடி கண்டாய்
காதல் என்தன் உயிர்போலும் இக் கரியோன்பால் உண்டால்
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான்”
(குலமுறை கிளத்து படலம் 614)
வில்லின் வரலாறு
வில்லின் வரலாற்றை சதானந்த முனிவர் கூற ஆரம்பித்தார். சிவன், உமாதேவியைத் தந்தையான தக்கன் இகழ்ந்தான் என்பதால், பொறுமை சிறிதுமற்று பொங்கிய சினத்தோடு இந்த வில்லைக் கையில் எடுத்துக்கொண்டு, தக்கன் வேள்வி செய்யும் இடத்துக்குச் சென்றான். வேள்விக்கு வந்திருந்த தேவர்கள் சிலருடைய பற்களும், கைகளும் சிதறின. அதுவரை அவர்கள் புகுந்திடாத மறைவிடங்களில் எல்லாம் தேவர்கள் ஓடிப் புகுந்தனர். தக்கனது வேள்வி குண்டத்தில் இருந்த அக்னியும் அழிந்தது. பின்பே சிவன் சினம் தணிந்தான். அவர் கையில் இருந்த வில்லைக் கண்ட தேவர்கள் நடுங்கினார்கள். அவர்கள் இன்னும் வாழ வேண்டிய வாழ்நாளைப் பெற்றவர்கள். அதனால் வலிமை பொருந்திய அடிதண்டையும் கட்டமைப்பையும் பெற்ற தனது வில்லை ஜனகனது குலத்திலே தோன்றிய வாள் கொண்டு உழும் வல்லமை பெற்ற தேவராஜன் என்னும் அரசனிடம் கொடுத்துவிட்டான். இத்தன்மை பெற்ற இவ்வில்லின் வலிமையை நான் எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ என்று சதானந்தர் கூறினார்.(கார்முகப்படலம் 628)
வில்லை வளைத்தவனுக்கே சீதை
அழகுமிக்க சீதையை மணக்க ஜனகன் ஒரு நிபந்தனை விதித்திருந்தார். சிவபெருமான் கைக்கொண்டு போரிட்ட வில்லை வளைத்தவனே சீதையை மணப்பதற்கு உரிமை உடையவன் என்று நாங்கள் உறுதியாக உரைத்தோம் என்ற சதானந்தன் கூறினார்.
அழகான பெண்ணுக்கான போர்,
வலிய வில்லை வளைக்க முடியாதவர்கள் சீதையிடம் ஆசை கொண்டு எம்மோடு போரிடத் தொடங்கினார்கள். எங்கள் அரசனான ஜனகனது பெரிய சேனை ஈகையை மேற்கொண்டு நடுநிலை நிற்கும் மன்னர்களின் புகழை விரும்பிய பொருளைப் போலக், குறைந்து போனது. எனினும் பொம்மெனும் ஒலி உண்டாகுமாறு வண்டுகள் ஒலிக்கும் சுருண்ட கூந்தலை உடைய சீதையை விரும்பிய அந்த அரசர்களின் சேனை அவர்களது ஆசையைப் போல வெற்றியடையாமல் போயிற்று.
“எம்மன்னன் பெருஞ் சேனை ஈவதனை மேற்கொண்ட
செம் மன்னர் புகழ் வேட்ட பொருளேபோல் தேய்ந்ததால்
பொம்மென்ன வண்டு அலம்பும் புரி குழலைக் காதலித்த
அம் மன்னர் சேனை தனது ஆசை போல் ஆயிற்றால்”
(கார்முகப்படலம் 636)
இவ்வாறு நடக்கும் போரில் ஜனகருக்கு ஆதரவாக போரிட, தம் பெரும்படைகளை தேவர்கள் கொடுத்தனர்.
அந்த நாள் முதல் இந்த நாள் வரை எந்த மன்னரும் இவ்வில்லின் அருகில் கூடச் செல்லவில்லை. போரிலே தோற்று ஓடிய தேரை உடைய வேந்தர் எவரும் திரும்பி வரவும் இல்லை. அதனால் இனி எப்போதும் சீதைக்கு திருமணம் இல்லை என்று வருந்தி இருந்தார். இந்த இராமன் இவ்வில்லை வளைத்து நாண் ஏற்றினால், அது நமக்கு நன்மை தரும். மலரை அணிந்த கூந்தலை உடைய சீதையின் அழகும் அப்போது வீணாகாது என்று சதானந்தன் கூறி முடித்தான்.(கார்முகப்படலம் 638)
விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்ற எண்ணம்
வில்லை வளைத்தவனுக்கே தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஜனகனின் நிபந்தனையின்படி, இராமன் வில்லை வளைத்தான். அது ஒடிக்கப்பட்டது. காலம் தாழ்த்தாமல் இராமனுக்கும், சீதைக்கும் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று ஜனகர் நினைத்தார். உன் புதல்வன் வேள்வித்தான் விரைவில் இன்று ஒரு பகல் முடித்தல் வேட்கையோ முரசு எரிந்து அதில் முழங்கு தானே இவ் அறசையும் இவ்வழி அழைத்தல் வேட்கையோ ஜனகன் விசுவாமித்திரரைப் பார்த்து, தசரதனுக்கு தகவல் தெரிவித்து அவர் வந்து சேரும் வரை பொறுத்து இருக்கலாமா இல்லை உடனடியாக திருமணத்தை நடத்தி விடலாமா என்று கேட்கிறார். (கார்முகப்படலம் 679)
திருமண ஓலையோடு தூதர்களை அனுப்புதல்
ஜனகன் கூறியதைக் கேட்ட விசுவாமித்திரர், ’தசரதன் விரைவாக இங்கு வந்து சேருதல் நல்லது’ என்று தன் கருத்தைத் தெரிவித்தார். இங்கு நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தசரத சக்கரவர்த்தியிடம் சொல்லுக என்று கூறி திருமண ஓலையோடு தூதுவர்களை கோசல நாட்டுக்கு அனுப்பி வைத்தார். தூதர்கள் மூலம் செய்திகளை அறிந்த மன்னர் மன்னன் தசரதன் பெரு மகிழ்ச்சி அடைந்தார். இராமன், சீதை திருமணம் காண அயோத்தி நகரமே திரண்டு வந்தது. அனைவரும் வந்தனர்.
“மல் வலான் அவ் உரை பகர மா மாதவன்
ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று என
எல்லை இல் உவகையான் இயைந்தவாறு எலாம்
சொல்லுக என்று ஓலையும் தூதும் போக்கினான்”
(கார்முகப்படலம் 680)
எதிர்கொண்டு அழைத்து வரவேற்றான்
இராமன் சீதை திருமணத்திற்காக மிதிலைக்கு வரும் தசரதனை, ஜனகர் எதிர்கொண்டு வரவேற்றார். ’தன் தேர் இழைந்து முன் சேரலும் கையின் வந்து ஏறு என தசரதனே செய்கை காட்ட கடிதி வந்து ஏறினான்’. இராமனின் தந்தையான தசரதன் தன் தேரிலேயே அமர்ந்திருக்க, சீதையைப் பெற்ற ஜனகர் தன் தேரில் இருந்து இறங்கி வந்து, தசரதனின் தேரில் ஏறினான்.உடனே தசரதன் முகம் மலர்ந்து, அகத்திலும் அதே மகிழ்ச்சி பொருந்த, சனகனைத் தழுவிக் கொண்டான்.
“கையின் வந்து ஏறு எனக் கடிதின் வந்து றினான்
ஐயனும் முகம் மலர்ந்து அகம் உறத் தழுவினான்”
(எதிர்கொள் படலம் 994)
ராஜ உபச்சாரம்
தசரதனது சேனை மிகுதியாக இருந்தது.அடி பெயர்த்து வைப்பதற்கு இடம் இல்லாதபடி தசரதனது பெரியக் கடலைப்போன்ற படை தனித் தனியாக மிகப்பலரைக் கொண்டிருந்தும் ஒரே பொருள் என்று சொல்லும்படி நெருக்கமாகப் பரவியிருந்தது. அதனால் வெற்றியை உடைய மதத்தைப் பொழியும் யானைப்படையைக் கொண்ட சனகனது நாடு முழுவதும் மக்கள் நெருக்கத்தால் ஒரு தலைநகரம் போல் காணப்பட்டது.(உலாவியற்படலம் 1062)
சீதையின் திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு. கல்யாண மாப்பிள்ளை இராமனுக்கு என்ன மாதிரியான வரவேற்பும் கவனிப்பும் அதே மாதிரி மரியாதையோடு சாதாரண குடிமக்களையும் ஜனகன் உபசரித்தான்.
“ஒழிந்த என் இனி ஒண்ணுதல் தாதை தன்
பொழிந்த காதல் தொடர பொருள் எல்லாம்
அழிந்து மன்றல் கொண்டாடலின் அன்பு தான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே”
(உலாவியற்படலம் 1063)
தசரதனது படைப்பெருக்கம்
இராமன், சீதை திருமணத்தைக் காண தசரதன் புறப்பட்டான்.அவனுடன் வந்தவர்கள் குறித்து கம்பர் கூறுகிறார். தன் ஆட்சிக்கு உட்பட்ட உலகம் முழுவதும் உள்ள உயிர்கள் துன்பம் அடைந்தால், அதைப் போக்கும் கொழுக்கொம்பாக இருக்கும் தசரதன் தனது இருப்பிடமான அயோத்தி நகரை விட்டு இன்னும் புறப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போதே அவ்வரசனின் ஆணையால் புறப்பட்டு அயோத்திக்கும், மிதிலைக்கும் இடையே ஓர் உழுந்து இடுவதற்கும் இடம் இல்லை என்று சென்று கொண்டிருக்கும் சேனையின் தலைப்பகுதி, கொடிகள் பறக்கும் மதிலை பெற்ற மிதிலையைச் சென்று அடைந்து விட்டது.
“உழுந்து இட இடம் இல்லை உலகம் எங்கணும்
அழுந்திய உயிர்க்கு எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன் எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே“
(எழுச்சிப் படலம் 703)
ஒரு நாடே திருமணத்திற்கு வந்த போதும் அவர்கள் அனைவரையும் மாப்பிள்ளையை உபசரிப்பது போல் மிதிலை மன்னன் உபசரித்தான்.(மாப்பிள்ளை வீட்டார் கூட்டத்தை அதிகமாக கூப்பிட்டு வருவர் என்பதை தசரதன்தான் ஆரம்பித்து வைத்தான் போலும். மாப்பிள்ளை வீட்டுக் கூட்டம் அதிகமாக வந்தாலும் வரவேற்று உபசரிப்பதில் எந்தக் குறைவும் வராமல் பார்த்த முதல் பெண்ணின் தந்தை ஜனகன் போலும்)
ஜானகியை அழைத்து வர அறிவித்தல்
தசரதன் மிதிலை வந்தவுடன் வசிஷ்டர், ஜனகரிடம் ஜானகியை அழைத்து வருக என்றவுடன் ஜனகன் பெண்களுக்கு அரசி சீதையை அழைத்து வாருங்கள் என்று மகளிருக்கு ஆணையிட்டான். மகளிர் சீதைக்கு அலங்காரம் செய்து அழைத்து வந்தனர்.
ஆனந்தக் கண்ணீரில் ஜனகன்
கோலம்காண் படலத்தில் மகளிர் சீதையை நன்கு அலங்கரித்து சபைக்கு அழைத்து வந்தனர். தாமரையை வெறுத்து நீத்து, ஜனகன் அரண்மனையை விரும்பிப் புகுந்தவளான சீதை, அவையில் இருந்த வசிட்டன்,விசுவாமித்திரன் முதலிய முனிவர்களை முதலில் வணங்கினாள். பிறகு மன்னனான தசரதனின் மலர் போன்ற பாதங்களைப் பணிந்தாள்.அதன் பிறகு கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொரிய அமர்ந்திருந்த தந்தையான ஜனகனின் அருகே இடப்பட்ட ஆசனத்தில் ஒப்பற்ற முறையில் வீற்றிருந்தாள். தன் மகள் சீதைக்குத் திருமணம் நடைபெற இருப்பதால் ஆனந்தக் கண்ணீரில் மன்னன் ஜனகன் வீற்றிருந்தான். (கோலம் காண் படலம் 1098)
ஜனகன் அனைவரையும் உபசரித்தல்
ஜனகன் இனிமையாக அனைவரையும் உபசரித்தான். அரசர்கள் முதலான அரச குலத்தில் வந்த பெருமை வாய்ந்த தோள்களை உடைய சிறிய தம்பியர்களான சிறுவர்கள் வரையிலும் உள்ள அனைவரும் இடைப்பட்ட நிலையில் உள்ள அரசர் சேவையில் உள்ள அனைவரையும் இந்த இடமுடனே சொர்க்கலோகத்தை அடைந்தவர்களை ஒத்திருந்தார்கள். (கடி மணப்படலம் 1107)
முரசறைந்து திருமண செய்தியைக் கூறல்
மிதிலையில் இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் நாளை நடைபெற இருப்பதால், அதன் பொருட்டு மலர்களாலும், இந்த அழகான நகரத்தை மேலும் அழகு படுத்துங்கள் என்று ஜனகன் ஆணையிட்டான். அந்த ஆணையை ஏற்று, முரசை ஒலிக்கச் செய்து, வள்ளுவன் அறிவித்தான்.
“மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக
தேன் அமர் குழலாள்தன் திருமணவினை நாளை
பூ நறு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று
ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான்“
(கடிமணப்படலம் 1125)
திருமணம் காண ஆசனத்தில் அமர்தல்
திருமணத்தைக் காண தசரதன் திருமண மண்டபத்தை அடைந்து அழகிய அங்குள்ள பொன்னால் செய்யப்பட்டு மணிகள் பதிக்கப்பட்ட ஆசனத்தில் அந்த ஆசனம் புதிய அழகு பெறும்படி அமர்ந்தார். முனிவர்களும், அரசர்களும் தத்தமக்குரிய ஆசனங்களில் முறைப்படி ஏறி அமர்ந்தார்கள். ஜனகனும் தன் சுற்றத்தார் தன்னை சூழ்ந்து திகழ ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.
“அனையவன் மண்டபம் அணுகி அம்பொனின்
புனை மணி ஆதனம் பொலியத் தோன்றினான்
முனைவரும் மன்னரும் முறையின் ஏறினார்
ஜனகனம் தன்கிளை தழுவ ஏறினான்”
(கடி மணப் படலம் 1149)
திருமண மண்டபத்தின் அழகிய தோற்றம்
மன்னர்களும், மா முனிவர்களும் மற்றும் உள்ள பிறரும் அன்னத்தின் மென்மையான நடையை உடைய திருமகளைப் போன்ற மகளிர் அம் மண்டபத்தில் நெருங்கி நிறைந்தனர். அதனால் ஒப்பற்ற அந்த மண்டபம் கிரகங்களும், நட்சத்திரங்களும் ஒன்று கூடிய பொன்மயமான மேருமலையை ஒத்திருந்தது. முற்காலத்தில் திருத்தமாக செய்து முடிக்கப்பட்ட அந்த மணிகள் பதிக்கப்பட்ட மண்டபத்தில் மேகங்கள் (மகளிரின் கூந்தல்) உள்ளன. மின்னல்கள் (மகளிரின் உடல்) உள்ளன உவமையற்ற மீன்கள் மகளிரின் கண்கள் உள்ளன. சிறந்த ஒளி அமைந்த பல வகையான மணிகள் (ஆபரணங்களில் உள்ளவை) உள்ளன. சூரியன் (தசரதன்) சந்திரன் (சனகன்) உள்ளனர். அதனால் அந்த மண்டபம் பிரம்மன் ஆதி காலத்தில் படைத்த அண்ட கோளத்தை ஒத்திருந்தது. (கடிமணப்படலம் 1151)
எவரும் மதிக்கத்தக்க தவத்தை உடைய முனிவர்களும், அரசர்கள் அனைவரும், தேவர்களும் பிறரும் அந்த மண்டபத்தில் வந்து நிறைந்தனர் இதனால் அந்த மண்டபம், மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் உள்ளிட்ட அண்டம் முழுவதையும் வாய் வைத்து உண்ட திருமாலினது நீலமணி போலும் நிறமுள்ள திருவயிறு போலத் திகழ்ந்தது.
இந்த நிலவுலகம் முதலாக உள்ள பல உலகத்தில் இருப்பவர்கள் அனைவரும், சீதையின் திருமணம் காணவேண்டும் என்று ஆசை உந்தித்தள்ள, தமக்குள் கலந்தவராய் அந்த மண்டபத்தில் கூடினர்.
இராமனுக்கு சீதையை ஜனகர் தாரை வார்த்து தரல்
இராமன் முன்னே ஜனகன் சென்று தாமரையில் வாழும் திருமகளும் பரம்பொருளான திருமாலும் போல, நீ என் சிறந்த மகளோடு சேர்ந்து வாழ்க என்று கூறி, இராமனது செந்தாமரை போன்ற பெரிய கையிலே குளிர்ந்த நல்ல நீரை வார்த்து சீதையை கன்னிகாதானம் செய்தான்.
“கோமகன் முன் ஜனகன் குளிர் நல்நீர்
பூ மகளும் பொருளும் என நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா
தாமரை அன்ன தடக் கையின் ஈந்தான்”
(கடிமணப்படலம் 1192)
தம்பி மகளுக்கும் திருமணம்
ஜனகன் தன்மகள் சீதைக்கு திருமணம் நடந்த அதே நேரத்தில் குசுத்துவன் தம்பி மகள்களான ஊர்மிளா, மாண்டவி, ஸ்ருத கீர்த்திக்கு இலட்சுமணன், பரதன், சத்ருகணனுக்கு திருமணம் செய்து வைத்தான். (கடிமணப்படலம் 1206)
சீதனம் அளித்தல்
அன்பு மகள் சீதையின் திருமணத்தின் போது பெரு மகிழ்ச்சியுடன் ஜனகன் தன் புகழை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற எல்லாவற்றையும் கொடையாகக் கொடுத்தான்.
மகள் வீட்டில் தங்காத தந்தை
மாயா ஜனகன் படலத்தில் மகோதரன் ஆலோசனைப் படி மருத்துவன் ஜனகன் உருவத்தில் வந்தான். இராவணன் ஜனகனை கைது செய்து வைத்திருந்ததைக் கண்ட சீதை மிகவும் துன்பப்பட்டாள்.அவளது கதறலில் வெளிப்பட்டது இந்தச் செய்தி.
சீதையின் திருமணத்திற்கு பிறகு அவர், மகள் வீட்டில் தங்கி விருந்து உண்ணவில்லை. விசேஷ நாட்களில் மகளுக்கு சீர்வரிசை வழங்கவோ, வேறு ஏதேனும் கடமைகளைச் செய்வதற்குக் கூட ஜனகர் அயோத்தி வந்து தங்கவில்லை என்பதை சீதையே, வேதம் விதித்த நெறிமுறைகளிலிருந்து நீங்காத அரச குலத்திலே பிறந்தவரான நீர், பிறை நிலாப் போன்ற நெற்றியைப் பெற்ற மகளிர்க்குப் பிறந்த வீட்டார் செய்யும் கடமைகளைச் செய்வதற்காகவும், எனது தலைவன் இராமனது இருப்பிடமான பழமையான அயோத்தி நகருக்கும் என்றும் வந்து தங்காதவர்ஆனீர். அத்தகைய நீர் சிறையிலே என்னைக் காண்பதற்காகச் சிறைப்பட்டு வந்து சேர்ந்த வகையோ இது.
“பிறையுடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இற் கடன்கள் செய்ய
இறையுடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர்
சிறையுடைக் காண நீரும் சிறையோடும் சேர்ந்த வாறோ
மறையுடை வரம்பு நீங்கா வழிவந்த மன்னர் நீரே“
(மாயா சனகப் படலம் 1610)
இவ்வாறு ஜனகன் என நினைத்த சீதை இப்படிப் பலவாறாகப் புலம்பி அழுதாள். திரிசடை வந்து உன் தந்தை உருவத்தில் வந்தவன் மருத்தன் என்னும் அரக்கன் என்று கூறி அவளது துயரை மாற்றினாள்.
முடிவுரை
சீதையை வளர்த்த தந்தையும், மிதிலையின் மன்னருமான ஜனகர் மாவீரர். தன் குடிமக்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தவர். மிதிலை பல்வேறு வளங்களை கொண்டது. வில்லை வளைத்தவருக்கே தன் மகளை மணம் செய்து தருவதாகக் கூறியதால் திருமணமும் தாமதமானது. அதனால் ஜனகன் வருந்திருந்தான்.. தாடகையை வதம் செய்ததும் அகலிகைக்கு சாப நிவர்த்தி வழங்கிய வில்லாற்றல் கொண்ட தசரத மைந்தன் இராமனே வில்லை வளைத்து சீதையை மணந்தான். சீதையின் பொருட்டாக நடைபெற்ற போரில் ஜனவருக்கு ஆதரவாக போரிட தம் பெரும் படைகளை தெய்வர்களே அனுப்பி வைத்தனர். திருமணத்திற்கு வந்தவர்கதங்காத தந்தையாகவும் இருந்துள்ளார் என்பதையும் கம்பராமாயணத்தில் ஜனகரின் மாட்சியையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
துணைநூற்பட்டியல்ளை எதிர்கொண்டு அழைத்து மாப்பிள்ளை கவனிப்பது போல, ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஜனக மன்னர் கவனித்தார். தன் தம்பி மகள்களுக்கும் திருமணம் செய்து சிறப்பாக நடத்தி வைத்தான். தன் புகழை மட்டுமே வைத்துக்கொண்டு எல்லாவற்றையும், சீதனமாகத் தந்தான். இருப்பினும் மகளின் வீட்டில் தங்காத தந்தையாகவும் இருந்துள்ளார் என்பதையும் கம்பராமாயணத்தில் ஜனகரின் மாட்சியையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை, 2019.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.