- வேதாரணியேசுவரர் ஆலயம் -

கட்டுரை ஆசிரியர்: கலாநிதி செல்லத்துரை சுதர்சன். இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர். ஆய்வாளர், கவிஞர், விமர்சகர். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர். அவரது முக்கியமான கவித்தொகையான ‘தாயிரங்கு பாடல்கள்’ என்பதை மணற்கேணி வெளியிட்டுள்ளது.


அறிமுகம்

அப்பால் நிலம்’ என்ற கருத்தாக்கம் ‘கடலாற் பிரிவுண்ட நிலப்பகுதி’ என்பதையே இங்கு குறித்துநிற்கிறது. ‘அப்பால் நிலக்கோயில்’ என்பது ‘கடலாற் பிரிவுண்ட நிலப்பகுதியில் அமைந்த கோயில்’ என்பதைக் குறிக்கிறது. கப்பலசைவின் காரணமாக, அப்பால் நிலத்துக் கோயில்களுடன் சமய பண்பாட்டுத் தொடர்புகளைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்ப் புலவர்களும் புலமையாளர்களும் பேணியுள்ளனர். யாழ்ப்பாணத்தவரின் வேதாரணியப் பாரம்பரியம், அதனுடனான ஊடாட்டம், அது குறித்த இலக்கியப் பங்களிப்பு ஆகியவை பற்றிய விரிவான ஆய்வுக்கான முன்வரைபு முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது. அந்த வகையில், இப்பொருள் குறித்த ஓர் அறிமுக எழுத்தாக இது அமைகிறது.

அப்பால் நிலக்கோயில்களும் பண்பாட்டு உறவும்

சைவமறுமலர்ச்சி இயக்கம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றகாலத்தில் தமிழ்நாட்டுடனும் இந்தியாவின் பிறபகுதிகளுடனும் ஈழத்தவர் மேற்கொண்ட சமய, சமூக, பண்பாட்டுத் தொடர்புகளும் அவற்றால் விளைந்த நன்மைகளும் ஏராளமானவை.

தமிழகத்தில் உள்ள பல ஆலயங்கள் யாழ்ப்பாணத்தவருடன் மிகநெருக்கமானவை. குறிப்பாகச் சிதம்பரம், வேதாரணியம், இராமேஸ்வரம், திருச்செந்தூர், எட்டிகுடி முதலாய இடங்களுடன் யாழ்ப்பாணத்தவருக்கு நீண்டகால ஊடாட்டம் உள்ளது. வேதாரணியம் ஈழத்தவருக்குரியது என்பது வரலாற்று ரீதியாகவும் ஆவணங்களின் அடிப்படையிலும் நிறுவப்பட்ட ஒன்று. யாழ்ப்பாணம் வரணி கரணவாய் ஆதீனமே வேதாரணியத்தை நிர்வகிக்கும் முழுமையான உரித்துடையது.

மறைசைப்பதி எனும் வேதாரணியம்

மறைசையானது ‘வேதாரணியம்’, ‘சத்தியகிரி’, ‘வேதவனம்’, ‘திருமறைக்காடு’ எனப் பல சிறப்புப் பெயர்களைக்கொண்டது. தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்தது. கடற்கரையையொட்டியது. சோழநாட்டின் தென்கரைத் தலங்களில் 125ஆவது தலமாக விளங்குவது. இத்தல மூர்த்தி - வேதாரண்யேஸ்வரர், சக்தி - யாழைப் பழித்த மொழியம்மை, தல விருட்சம் - வன்னிமரம், தீர்த்தம் - மணிகர்ணிகை. ‘இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் பூசித்த தலம் என்பதால் வேதாரண்யம்’ (கஜேந்திரன், வேதை. 2009:8-9) எனப் பெயர் பெற்றது.

பரஞ்சோதி முனிவரின் வேதாரணிய புராணம் இத்தலத்துக்கேயுரிய தலபுராணம். அம்பிகைக்குரிய 64 சக்தி பீடங்களில் ‘சுந்தரி பீடம்’ என்ற சிறப்பும் இத்தலத்துக்குரியது. சப்தவிடத் தலங்களில் ஒன்றான இத்தலம், பாடல்பெற்ற தலங்களில் முதன்மையானது. ‘வேதங்களால் பூட்டிய கதவை’, திறப்பதற்கும் மூடுவதற்கும் முறையே அப்பரும் சம்பந்தரும் பாடிய செய்தி இத்தலத்திற்குரியது. அப்பர், ‘பண்ணின் நேர்மொழியாள்…’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கதவினைத் திறந்ததும், சம்பந்தர் ‘சதுரம்மறை தான் துதி செய்து வணங்கும்...’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கதவை மூடியதுமான செய்தியைப் பெரியபுராணம் பதிவுசெய்துள்ளது. இச்செய்தி, வடமொழியில் அமைந்த வேதங்களுக்கு நிகரான அல்லது மேலான சக்தி, தமிழில் அமைந்த திருமுறைப் பாடல்களுக்கு உரியதென்பதையே நிலைநிறுத்துகிறது. வரலாற்றுச் செய்திகள், தொன்மக் கதைகள், புராணக்கதைகள் ஆகியவற்றை ஏராளமாகக் கொண்டது, இத்தலம்.

யாழ்ப்பாணத்தாரின் வேதாரணியம்

சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தினால் யாழ்ப்பாணத்திற்கும் வேதாரணியத்திற்கும் பண்டைக்காலத்திலிருந்து நெருக்கமான உறவு நிலவுகிறது. ‘யாழ்ப்பாணம் தனது பல துறைமுகங்களினூடு தென்னிந்தியாவிற்கும் அதனூடு உலகிற்கும் திறக்கப்பட்டிருந்தது’ (சனாதனன், தா. 2018:iஎ) என்பதற்கொப்ப ‘புவியியல் அண்மை, மொழி ரீதியான தொடர்பு, கலாசார உறவுகள் ஆகியவை இந்த இரண்டு பிராந்தியங்களையும் இணைத்தன’ (மகேஸ்வரன், வ. 2015:194) இவையாவற்றுக்கும் மேலாக யாழ்ப்பாணத்தவருக்கும் வேதாரணியத்துக்கும் இடையிலான தொடர்பு புலமைசார்ந்தும் அமைந்திருந்தது.

வேதாரணியத்திற்கு அபிஷேகத்துக்குப் பால் அனுப்புதல், வேதாரணியத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வண்டி மாடுகளும் உழவு மாடுகளும் இறக்குமதி செய்தல், யாழ்ப்பாணத்தில் ‘வேதவனம்’, ‘வேதவனமுதலி’, ‘வேதவனப் பிள்ளை’ முதலாய ஆட்பெயர்களும் ‘வேதாரணியம்’, ‘வேதாரணியச் சதுக்கம்’ முதலாய இடப்பெயர்களும் காணப்படுதல், யாழ்ப்பாணத்திலிருந்து வேதாரணியத்திற்குப் புகையிலைச் செய்கை அறிமுகமும் ஏற்றுமதியும் நடைபெற்றிருத்தல், திருமணம்சார் உறவுகள் இடம்பெறுதல் முதலியன இரு பிரதேசங்களுக்குமான பண்பாட்டுத் தொடர்புகளாகக் காலனிய காலம்வரையும் நீடித்துள்ளன. (மகேஸ்வரன்,வ. 2005:195)

வேதாரணியத்தில் யாழ்ப்பாணத்தவர் வசித்த தெரு ‘யாழ்ப்பாணத்தார் தெரு’ என வழங்கப்படுதல், யாழ்ப்பாணக் குருக்கள் மரபு வேதாரணியக் குருக்கள் மரபினூடு வளம் பெற்றிருத்தல், யாழ்ப்பாணத்தில் இருக்கும் கல்வி மற்றும் சமூக நிறுவனங்கள் ‘வேதாரணியேஸ்வரம் (வேதாரணியேஸ்வர வித்தியாலயம், வேதாரணியேஸ்வரா சனசமூக நிலையம்) எனப் பெயர் பெற்றிருத்தல் முதலியவை இருபிராந்தியங்களின் நெருங்கிய உறவைவே காட்டிநிற்கின்றன. இன்னும், வேதாரணியக் குருக்கள் பரம்பரையினர், யாழ்ப்பாணத்தில் உள்ள உடுப்பிட்டி, கரணவாய், வரணி, இணுவில் முதலிய ஊர்களில் இன்றும் வாழ்கின்றனர். இவ்வூர்களில் ‘குருக்கள் பகுதி’ என இன்றும் அழைக்கப்பெறும் இடங்கள், வேதாரணிய வம்சாவழிச் சைவக்குருக்கள் சமூகத்தின் வாழிடங்களாக விளங்குகின்றன.

யாழ்ப்பாணத்தில் வீரசைவ மரபின் செழுமைக்கு வேதாரணியக் குருக்கள் மரபின் ஊடாட்டம், முக்கியமானதொன்றாகக் கணிக்கப்படுகிறது. வேதாரணியக் கோயிலுக்கும் யாழ்ப்பாணத்தாருக்குமான தொடர்பைக் கல்வெட்டுக்கள் வாயிலாகவும் ஆய்வாளர் உறுதிப்படுத்துவர். (மகேஸ்வரன், வ. 2015:197-200) இத்தகு ஆய்வுகள் யாழ்ப்பாணத்தவருக்கு வேதாரணியத்தோடுள்ள ஊடாட்டத்தை மட்டுமல்லாது, ‘யாழ்ப்பாணத்தாரின் வேதாரணியம்’ என்பதையும் துலக்கம் செய்கின்றன.

வேதாரணியமும் யாழ்ப்பாணம் வரணி ஆதீனமும்

வேதாரணியேஸ்வரத்துக்கு உரித்துடையவர்களாக யாழ்ப்பாணம் வரணி ஆதீன சபையினர் விளங்குகின்றனர். அவர்களுடைய ஆதீனம் ‘வரணி ஆதீனம்;’ எனவும் ‘யாழ்ப்பாணம் வரணி ஆதீனம்’ எனவும் அழைக்கப்படுகிறது. வேதாரணியத்தில் ‘வரணி மடம்’ என்ற பெயரில் ஒரு மடம் இருந்ததாகக் கூறுவர். தில்லைநாதர் என்ற பெயர் கொண்ட வரணியைச் சேர்ந்த குருக்கள், வேதாரணியத்தின் ஆதீனப்பொறுப்பை ஏற்று, தில்லைநாதத் தம்பிரான் எனப் பட்டப் பெயர் கொண்டார். இவருக்குப் பின்னர் இவருடைய வம்சாவழியினர் இந்த ஆதீனத்தின் பண்டார சந்நிதிகளாக விளங்கிவருகின்றனர். இவரது வம்சாவழியினர் யாழ்ப்பாணத்தின் கரணவாய் என்னும் இடத்திலிருந்து இன்று வேதாரணியத்திற்குச் செல்வதால், இந்த ஆதீனம், இப்போது ‘கரணவாய் வரணி ஆதீனம்’ என அழைக்கப்படுகிறது.

“இந்த ஆதீனத்துக்குரிய ஆதீன கர்த்தாவை யாழ்ப்பாணம் கரணவாயில் உள்ள ஆதீனசபைகூடி, வாக்கெடுப்பு நடாத்தி, தேர்ந்தெடுத்து அவருக்குரிய நியமன உத்தரவு வழங்கும்படி தஞ்சாவூரிலுள்ள அறநிலையத்துறை ஆணையாளருக்குக் கடிதம் அனுப்புவார்கள். அதனைத் தொடர்ந்து நியமன உத்தரவு பண்டாரச் சந்நிதிகளுக்கு வழங்கப்படும்.” (மகேஸ்வரன், வ. 2015:201)

மேற்படிகூற்று ஆலயத்தின் பொறுப்பும் உரிமையும் யாழ்ப்பாணத்தவருக்குரியது என்பதைக் காட்;டுகிறது.

தமிழ்நாட்டின் வடபாதி மங்கலத்தில் வாழ்ந்த தில்லைநாதத் தம்பிரான் சந்ததியார் வேதாரணிய ஆலய உரிமை குறித்து வழக்குத் தொடுத்தார்கள். 1913ஆம் ஆண்டு இந்த தொடுத்த இந்த வழக்கானது, ‘வரணி ஆதீனப் பண்டார சந்நிதிகளுக்கே ஆலய உரிமை’ என்ற தீர்ப்போடு முடிவுற்றது. இதன் பின்னர், வடபாதி மங்கலம் சோமசுந்தர முதலியாரும் அதே ஊரைச் சேர்ந்த இராசப்ப முதலியாரும் வேதாரணிய ஆலய உரிமைகோரி வழக்குத்தொடுத்தனர். 1919ஆம் ஆண்டு நடைபெற்ற இவ்வழக்கில், சேர் பொன். இராமநாதன் அவர்கள் வரணி ஆதீனத்துக்காக வழக்குரைத்தார். ‘ஆதீனம் வரணி ஆதீனத்திற்குரியதே’ என்ற தீர்ப்போடு இந்த வழக்கும் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர், தமிழ்நாடு அரசு தனது இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தின் 65ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் 1949இல் வரணி ஆதீனத்தின் அதிகார எல்லைகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது. இதற்கு எதிராகப் பண்டார சந்நிதிகள் வழக்குத் தொடர்ந்தார். ‘ஆலயம் வரணி ஆதீனத்திற்கே உரியது’ என்ற தீர்ப்புடன் 1953இல் இந்த வழக்கும் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர், இந்து சமய அறநிலையத்துறை, ஆலய உரிமை தொடர்பாக 1994ஆம் ஆண்டு முறைகேடான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு எதிராக, வ ரணி செவ்வந்திநாத பண்டார சந்நிதிகள் வழக்குத் தொடுத்தார். அப்போதைய இந்திய உயர்நீதிமன்ற நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியன் அவர்கள் 2005ஆம் ஆண்டு ‘இந்தியக் குடியுரிமை அற்றவரை இந்து அறநெறிக் கட்டளையில் சேர்க்க முடியாது’ எனத் தீர்ப்பளித்தோடு, தமிழ்நாடு அரசின் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும்படி கட்டளையுமிட்டார். அத்துடன் அந்த வழக்கும் முடிவுக்கு வந்தது. அதன் பிரகாரம் யாழ்ப்பாணம் வரணி கரணவாய் ஆதீனத்தின் பொறுப்பில் வேதாரணியம் இன்றுவரை இருந்து வருகிறது. யாழ்ப்பாணம் வரணிச் சைவக்குருக்கள் சமூகத்திலிருந்து இருபத்தியொரு வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, ஆதீன கர்த்தாவாகவும் தர்மகர்த்தாவாகவும் நியமிக்கும் அதிகாரத்தை, வரணிச் சைவக்குருக்கள் மரபினர் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணக் கோயில்களில் வேதாரணியச் செல்வாக்கு

யாழ்ப்பாண ஆலயங்கள் பலவற்றில் வேதாரணியக் குருக்கள் மரபினர் பூசகர்களாகப் பணிபுரிகின்றனர். கடந்தகாலத்தில், யாழ்ப்பாணத்து ஆலயத் திருவிழாக் காலங்களில் வேதாரணியம்வழியாக நெடுந்தீவுக்குவரும் தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் யாழ்ப்பாணக் கலைஞர்களுடன் ஒன்றிணைந்து ஒரு குழுவாகச் செயற்படுவர். இவ்வாறு ஒன்றிணைதலை, ‘மேளங்கட்டுதல்’ எனச் சொல்லும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் உண்டு. (தகவல்: எஸ். சிவலிங்கராஜா)

யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவின் நடுக்குறிச்சியில் அமைந்துள்ள பெருக்கடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், நெடுந்தீவில் நைமித்திய பூசை இடம்பெற்ற முதலாவது ஆலயம் எனக் கருதப்படுகிறது.(சிவம்பூத்த சேவடிகள் சிந்திப்போமே - 2018:2)

“சுமார் 300ஆண்டு காலப் பழமையுடன், இந்தியாவுக்கு அணித்ததாய் பரஸ்பர தொடர்புகளைக் கொண்டிருந்தவேளையில், வேதாரணியத்துச் சைவக் குருமார் ஆரம்ப காலங்களில் இங்கு கொடியேற்றி, திருவிழாக்களை நடத்தி வந்தனர். கர்ப்பக் கிரக விக்கிரகமும் வேதாரணியத்திலிருந்து கடலில் வந்தடைந்ததாகவே கூறப்படுகிறது. கடலில்வந்து கண்டெடுக்கப்பட்ட மூன்று விநாயகர் விக்கிரகங்களில் மற்றொன்று சாவகச்சேரியில் வேதவனப்பதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது” (சிவம்பூத்த சேவடிகள் சிந்திப்போமே - 2018:2)

ஆயினும் மூன்றாவது விக்கிரகம் எங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதென்பது இன்னும் அறியக்கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத்துப் பஞ்சாங்கம், நாட்காட்டி (காலெண்டர்) ஆகியவற்றில் வேதாரணிய விசேடவிழாக்கள் பற்றிய குறிப்புக்களும் இடம்பெற்றுள்ளன. இவையாவும் யாழ்ப்பாணத்தில் வேதாரணியச் செல்வாக்கையே காட்டிநிற்கின்றன.

காலனிய கால யாழ்ப்பாணமும் வேதாரணியமும்

போர்த்துக்கீசக் காலனிய யாழ்ப்பாணத்தில், கத்தோலிக்கத்தை நிலைநிறுத்த, சைவாலய அழிப்பு, சைவ வழிபாட்டு மறுப்பு போன்ற சைவத்துக்கெதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அக்காலகட்டத்தில் வேதாரணியத்தைப் புகலிடமாகக் கொண்டவர்கள் பலர். போர்த்துக்கீசரின் பசுவதைக்கு அஞ்சி யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறிய ஞானப்பிரகாச முனிவர், வேதாரணியம் சென்று, அதன் பின்னர் சிதம்பரம் சென்று வாழ்ந்தார் என்பது வரலாற்றுச் செய்தி. வரணி, கரணவாயைச் சேர்ந்த சைவக்குருக்கள் பலரும் போர்த்துக்கீசரின் சைவ அழிப்புக் காரணமாக வேதாரணியத்துக்குச் சென்று வாழவேண்டியதாயிற்று. இவ்விடத்தில் பின்வரும் கூற்றை மனங்கொள்வது பொருத்தமானது.

“போர்த்துக்கீசர் காலத்தில் சைவநடைமுறைகளுக்கு எதிராகக் கட்டவிழ்;த்து விடப்பட்ட அராஜகத்தில் வரணியைச் சேர்ந்த குருக்கள் குடியிருப்பு என்ற பகுதியில் வாழ்ந்த தில்லைநாதர் என்பவர் கட்டுமரத்தில் பயணம்செய்து கோடியக்கரைத் துறைமுகம்வந்து வேதாரணியத்தில் தங்கினார்.” (மகேஸ்வரன், வ. 2015:200)

யாழ்ப்பாணத்தில் காலனிய ஆட்சியாளர் சைவ ஒடுக்குதலை மேற்கொண்டபோது, சைவர்களின் புகலிடமாக வேதாரணியம் அமைந்ததோடு, அவர்கள் தமது சைவத்தமிழ் வாழ்வைத் தொடரும் புலமாகவும் அது விளங்கியது.

“இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வடநாட்டில் தண்டியிலும், தென்னாட்டில் வேதாரணியத்திலும் உப்புச் சத்தியாக்கிரகம் நடைபெற்றது” (கஜேந்திரன்,வேதை. 2009:8) என்ற செய்தியும் மனங்கொள்ளத்தக்கது. காலனிய காலத்தில் சைவத்தமிழ்ப் புலத்தின் முக்கியமான மையங்களுள் ஒன்றாக வேதாரணியம் விளங்கியதையே இச்செய்திகள் யாவும் சுட்டிநிற்கின்றன.

வேதாரணியம் குறித்த ஈழத்து இலக்கியங்கள்

வேதாரணியம் குறித்து ஈழத்தில் தோன்றிய இலக்கியங்களை பின்வரும் மூன்று அடிப்படையில் குறித்துக்கொள்ளலாம்.

    ஈழமண்டலச் சதகங்களில் வருகின்ற வேதாரணியம் குறித்தும் ஆதீனம் குறித்தும் வருகின்ற பாடல்கள் முதல் நிலையில் கவனிப்புக்குரியவை. ஈழத்தின் பெருமைக்குரிய அடையாளங்களில் வேதாணியமும் முக்கியமானது எனச் சதகங்களை ஆக்கிய புலவர்கள் கணித்திருப்பதன் காரணமாகவே அப்பாடல்களை ஆக்கியுள்ளனர் எனக் கருதுவது பொருத்தமானது.

    ஈழத்துப் புலவர்கள் வேதாரணியம் குறித்துப் பாடிய பிரபந்தங்கள் மற்றும் தனிப்பாடல்கள் அடுத்த நிலையில் கவனிப்புக்குரியவை. இவை தலப்பிரபந்தங்களாக அமையும் அதே வேளையில் உள்@ரக மரபுகளையும் பதிவாக்கி வைத்துள்ளமை முக்கியமானது. யாழ்;ப்பாணத்தாரின் ‘அப்பால் நிலம்’, அப்பால் நிலத் தலப் பிரபந்தம்’ என்றவாறு நோக்கி இவற்றை வாசிக்கும்போதுதான், இப்பால் நிலத்துக்கும் அப்பால் நிலத்துக்குமான சைவத்தமிழ் வாழ்வியல் ஊடாட்டத்தையும் அதன் வரலாற்று இருப்பையும் அறிய முடியும்.

    வேதாரணியம் குறித்த இலக்கியங்களுக்கு ஈழத்தவர் எழுதிய உரைகள் மூன்றாவது நிலையில் கவனிப்புக்குரியவை. ஈழத்து உரையாசிரியர்கள் வேதாரணியம் குறித்த பல்வேறு சமய, தத்துவச் செய்திகளையும் புராணச் செய்திகளையும் தமது உரைகளில் விரிவாக பதிவுசெய்வது அவதானிப்புக்குரியது. இவை வேதாரணியம் குறித்த மரபுசார் புலமைப் பதிவுகளாகக் கொள்ளத்தக்கவை.

ஈழமண்டலச் சதகங்களில் வேதாரணியம்

ஆரிய திராவிட பண்டிதர் வே. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய ‘ஈழமண்டல சதகம்’ (1930) தில்லைநாத தம்பிரான் என்னும் துறவி பற்றியும் திருஞான சம்பந்ததேசிகர் பற்றியும் இரு செய்யுட்களைக் கொண்டுள்ளது. இவ்விரு பாடல்களிலும் வேதாரணியம் சிறப்பிக்கப்படுகிறது. தில்லைநாத தம்பிரான் குறித்த பாடல் வருமாறு.

“திடமா மனத்தன் சிவயோகி யாந்தில்லை நாதனெனப்
படமா லிகந்த பெரியோன் வரணிப் பதித் தம்பிரான்
விடமார்களத்தனெம் மாரூர்த் தியாகன் விழாக்கிரத
வடமா குவடு தொடுத்தான்முன் னீழநன் மண்டலமே”
(ஈ.ம.ச. செய்யுள்-69)

திருமறைக்காட்டாதீன கர்த்தர்’ எனுந் தலைப்பில் திருஞானசம்பந்த தேசிகரைக் குறித்த பாடல் வருமாறு.

“கருவா ருயிர்கடைத் தேறமுன் னோன்முன் கலந்தவருட்
டிருவா டளிவருங் கேதாரத் தான்றன் செழுமரபா
னெருவா வரணிநல் லாதீனத் தானொளி ருந்திருமுன்
வருஞான சம்பந்த தேசிக னீழநன் மண்டலமே”
(ஈ.ம.ச.செய்யுள்-74)

மேற்குறித்த செய்யுட்களில், வேதாரணியம் சிறப்பிக்கப்படுவதோடு ‘வரணிப்பதித் தம்பிரான்’, ‘வரணி நல்லாதீனத்தான்’ ‘சிவயோகி’ என்றெல்லாம் வரணி ஆதீனம் சிறப்பிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

ம.க.வேற்பிள்ளை அவர்கள் இயற்றிய ‘சந்திரமௌலீசர் சதகம் என்னும் ஈழமண்டலச் சதகம்’ (1923) வேதாரணியம் குறித்து இரு செய்யுட்களைக் கொண்டுள்ளது. ‘தில்லைநாத தம்பிரான்’ என்னும் தலைப்பில் அமைந்த 70ஆவது செய்யுள் வருமாறு.

“வரணியி லுதித்தமுது மாதவச் சிவயோகி
மறைசையிறை யாலயஞ்செய்
வான்றில்லை நாதப் பெயர்த்தம் பிரான்யாழை
வைதமொழி யம்மைவனச
சரணிணை தலைக்கொண்டு தஞ்சைமா நகரரசு
தனயைநோய் தள்ளிமும்மை
சால்சகத் திரவேலி யுப்பளந் தந்தெந்தை
தாளிற் சமர்ப்பித்தவன்
அரணியழ லிற்சுத்த சைவகுரு திலகரம
ராரூர்த் தியாகராசற்
கம்பொன்வட மேருநிகர் தேருமொன் றாக்கினோ
னஃதின்று முளவதற்பின்
றரணியிற் சந்தான குரவர்நால் வர்க்கருள்செய்
சாந்தநா யகிசமேத
சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே
சந்த்ரபுர தலவாசனே” (ச.ஈ.ம.ச. செய்யுள்-70)

மேற்குறித்த செய்யுளில் இடம்பெறும் ஐந்து முக்கியமான செய்திகளைக் குறித்துக்கொள்வதோடு, அவற்றுக்கு யாழ்ப்பாணம் ந. சபாபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய உரையினையொட்டி சாராம்சக் குறிப்பினையும் இங்கு தருவது பயனுடையது.

    ‘வரணியில் உதித்த முதுமாதவச் சிவயோகி’ - யாழ்ப்பாணத்தில் உள்ள வரணி எனும் ஊரில் பிறந்த தில்லைநாதத் தம்பிரான் ஒரு முதுமாதவச் சிவயோகி. (1923:144)

    ‘மறைசை இறை ஆலயஞ் செய்வான் தில்லை நாதப் பெயர்த் தம்பிரான்’ -மறைசைப் பதியாகிய வேதாரணியேசுவர ஆலயத்தின் பழைய செங்கல் திருப்பணி ஆலயத்தை நீக்கி, கருங்கல் திருப்பணிசெய்து, கருங்கல் ஆலயமாக நிர்மாணித்தவர் தில்லைநாத தம்பிரான்.(1923:144)

    ‘யாழை வைத மொழி அம்மை வனச சரண் இணை தலைக்கொண்டு தஞ்சை மாநகர் அரசு தனயை நோய் தள்ளி’ – தஞ்சை மாநகர் அரசரது ஏகபுத்திரியைப் பெருநோய் (மகாரோகம்) ஒன்று பீடித்தது. வைத்தியர் பலர் முயன்றும் ஒருவராலும் குணமாக்க இயலவில்லை. அதனை, வேதாரணியேசுர அம்மையின் அருளினால் குணமாக்கியவர், தில்லைநாத தம்பிரான்.

செய்யுளின் இப்பகுதிக்கு, யாழ்ப்பாணம் ந. சபாபதிப்பிள்ளை அவர்கள், ‘அங்கெழுந்தருளியிருக்கின்ற திருவருட்சக்தியாகிய யாழைப்பழித்த மொழியம்மையினது உபயதிருவடிகளைச் சிரசின்மேல் வகித்துக்கொண்டு, அத்திருவடிகளின் அனுக்கிரகத்தினாலே தஞ்சாவூரரசனுடைய ஏகபுத்திரியினது (வைத்தியரொருவராலும் மாற்றப்படாத) மகாரோகத்தை அவ்வம்மையினது பவரோக அருமருந்தாகிய விபூதிப் பிரசாதத்தைக்கொண்டு மாற்றி’ (1923:144) எனப் பொருள் வரைவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கு குறிப்பிடப்படும் தஞ்சாவூர் அரசர் மராத்திய அரசரான தஞ்சாவூர் முதலாம் ஏகோஜியின் புதல்வரான முதலாம் சரபோஜி (1675-1728) ஆவார். இவர் தஞ்சாவூரைத் தலைநகராகக்கொண்டு, 1712 முதல் 1728 வரை ஆட்சி செய்தவர் என்பதால், மேற்குறித்த நிகழ்வும் இக்காலப் பகுதிக்குள்ளேயே இடம்பெற்றிருக்க வேண்டும். சிலர் தில்லைநாத தம்பிரான் 1552இல் வேதாரணியம் சென்றார் என்று பதிவுசெய்கின்றனர். சரபோஜியின் ஆட்சிக்காலப் பகுதியைக் கருத்திற்கொண்டு நோக்கினால், 1621ஆம் ஆண்டு தில்லைநாதர் சென்றார் என்று வேறுசிலர் கருதுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது.

    ‘மும்மைசால் சகத்திர வேலி, உப்பளம் தந்து எந்தை தாளிற் சமர்ப்பித்தவன்’ - நோய் குணமாக்கியமையால், அரசர் வழங்கிய மூவாயிரம் வேலி நிலங்களையும் உப்பளத்தையும் நன்கொடையாகப் பெற்று, அவற்றை வேதாரணிய ஆலயத்துக்கு வழங்கியவர், தில்லைநாத தம்பிரான். (1923:144-145)

    ‘ஆரூர்த் தியாகராசற்கு அம்பொன் வடமேரு நிகர் தேரும் ஒன்றாக்கினோன்’ -

திருவாரூத் தியாகராசப் பெருமானுக்கு, அழகிய ஒரு மகா மேருவை ஒத்த பெரிய தேர் ஒன்றைச் செய்வித்துக் கொடுத்தவர், தில்லைநாத தம்பிரான். (1923:145)

‘வேதவன ஆதீன கர்த்தாக்கள்’ எனும் தலைப்பில் அமைந்த 71ஆவது செய்யுள் வருமாறு.

“அளமார் தருங்கடற் பொருவில்வே தாரணிய
வாதீன கர்த்தராவா
ரரியயாழ்ப் பாணத் துறும்வரணி கரணவா
யமர்சைவ திலகரன்றோ
குளமார் தருங்கனற் கண்ணந்தி வண்ணனுறை
கோதில்கே தாரநின்றுங்
குணநிதி குளக்கோட்டு நிருபன்முன் கொடுவந்த
குரவரிவர் கூர்த்தவறிவின்
வளமார் தருஞ்சைவ சித்தாந்த நன்னிலை
வழாவருட் செல்வர்வேத
வனமுலை யாழைப் பழித்தமொழி யம்மையொடு
வழிபட்டு வாழுநீரார்
தனமார் கருங்குழலி னழகார் தருங்கலுவ
சாந்தநா யகிசமேத
சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே
சந்த்ரபுர தலவாசனே”
(ச.ஈ.ம.ச.செய்யுள்-71)

மேற்குறித்த செய்யுளில் இடம்பெறும் மூன்று முக்கியமான செய்திகளையும் பின்வருமாறு குறித்துக்கொள்ளலாம்.

    தில்லைநாத தம்பிரானது காலத்திற்குப் பின்னர், உப்பளம் பொருந்திய கடற்கரையில் அமைந்துள்ள வேதாரணியேசுவரர் கோயிலின் ஆதீன கர்த்தாக்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள வரணி, கரணவாய் ஆகிய இரு ஊர்களிலும் உள்ள சைவக்குருக்கள்மாரும் அவர்களது வம்சாவழியினரும்.

    திருகோணமலையில் அமைந்த திருக்கோணேசுவரத்துக்குத் திருப்பணி செய்த குளக்கோட்டு மகாராசனால், திருக்கேதாரத்திலிருந்து, இலங்கைக்கு அழைத்துவரப்பட்டவர்களே வரணி, கரணவாய் சைவக்குருக்கள் மரபினர். இவர்களே வேதவன ஆதீன கர்த்தர்களாக இருந்துவருகின்றனர்.

    சைவத்தமிழ்ப் பணியினை மேற்கொள்வோராக விளங்கும் இவர்;கள், சைவசித்தாந்தப் புலமைமிக்கவர்களாகவும் விளங்குகின்றனர்.

மேற்குறித்த, இரு செய்யுட் பகுதிகளிலிருந்து வேதாரணியத்துக்கு ஈழத்துச் சதக இலக்கியங்கள்கொடுத்த முதன்மையை அறியமுடிகிறது.

வேதாரணியம் குறித்த ஈழத்துப் பிரபந்தங்கள்

வேதாரணியம் குறித்த ஈழத்துப் பிரபங்களில் காலத்தால் மூத்தது, நல்லூர் சின்னத்தம்பிப் புலவரின் ‘மறைசையந்தாதி’. இது ஒல்லாந்தர் காலத்தில் தோன்றியது. ஆங்கிலேயர் காலத்தில் சிவசம்புப் புலவரின் ‘மறைசைப் பதிகம்’, ‘மறைசை நான்மணிமாலை’, ‘வேதாரணியேஸ்வரர் ஊஞ்சல்;’ ஆகியனவும் பீதாம்பரப் புலவரின் ‘மறைசைக் கலம்பகம்’ என்னும் பிரபந்தமும் முக்கியமானவை. இவற்றைவிட வேறுபலரும் மறைசைப்பதிமீது பிரபந்தங்களையும் தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளனர்.

சின்னத்தம்பிப் புலவரின் மறைசையந்தாதிக்கு வரதராச கவிராசர் இயற்றிய நூற்சிறப்புப் பாயிரம் பின்வருமாறு அமைகிறது.

“செந்தாதி யன்மணிப் பூண்புலி யூரற்குச் சேர்ந்தளித்த
சிந்தாத்தி யானஞ்செய் வில்லவ ராசன் றிருப்புதல்வன்
நந்தாவ ளந்திகழ் நல்லைச் சின்னத்தம்பி நாவலன்சீர்
அந்தாதி மாலையை வேதாட வீசற் கணிந்தனனே.”
(மறைசையந்தாதி - சிறப்புப் பாயிரம்)

யாழ்ப்பாணத்து நீர்வேலிப் பீதாம்பரப் புலவர் செய்த மறைசைக்கலம்பகத்திற்கு மறைசைக் கலம்பகம், அவதாரிகை, விசேடம், பதப்பிரயோசனம், அவாய்நிலை, அலங்காரம், பா முதலிய தலைப்புகளில் நீண்டதொரு விளக்கம் கொடுத்தவர் சங்கர பண்டிதராவர். அவரது நீண்டவிளக்கம் ‘காப்பு விருத்தி’ எனும் பெயரில் அமைந்துள்ளது.

மறைசை அந்தாதிக்குச் சின்னத்தம்பிப் புலவர் பாடிய காப்புச் செய்யுள் வருமாறு.

“திங்க ளணிந்த திருமறைசைச் சிற்பரன்மேற்
றங்குங் கலம்பகப்பாச் சாற்றுதற்கு - மங்குனிகர்
மெய்யத்தி யானைத்தான் வேண்டங் குசபாசக்
கையத்தி யானைத்தான் காப்பு.”
(மறைசையந்தாதி -காப்புச் செய்யுள்)

சின்னத்தம்பிப் புலவரின் மறைசையந்தாதிக்குச் சிவசம்புப் புலவர், மதுரை சபாபதி முதலியார் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்.

வேதாரணியப் பிரபந்தங்கள் குறித்த உரைகள்

மறைசையந்தாதி ஈழத்தில் தோன்றியதுபோல, அதற்குச் சிவசம்புப் புலவர் எழுதிய உரையும் ஈழத்தது என்பதால், ஈழத்துப் புலமைப் பாரம்பரியத்தில் அதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. சிவசம்புப் புலவரின் மறைசையந்தாதிக்கான உரை 1893ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த உரை எழுந்த பின்னணியைப் பின்வருமாறு குறித்துக்கொள்ளலாம்.

    வேதாரணியத்துடனான புலவரின் நெருக்கமான உறவு: வருடத்தில் மூன்றுமுறை தமிழ்நாடு சென்றுவரும் வழக்கமுடைய புலவர், அவ்வாறு செல்லும்போதெல்லாம் வேதாரணியம் சென்று, வழிபட்டு வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தமை.

    புலவரோடு வேதாரணியக் குருக்கள்மார் கொண்டிருந்த அத்தியந்த நட்பு: புலவரது மாணாக்கர்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் புலமையாளர்களுமாகிய ம. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், தி. ஞானப்பிரகாச தேசிகர், கை. திருஞானசம்பந்த தேசிகர், கை. நமசிவாய தேசிகர், வே. சிவானந்த தேசிகர் முதலானோர் வேதாரணியக் குருக்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வரணி, கரணவாய், நவிண்டில் முதலாய ஊர்களைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்தவ மதக் காலனிய காலத்தில், சைவத்தை நிலைநிறுத்துவதிலும் தமிழை வளர்ப்பதிலும் இவர்களின் செயற்பாடுகள் முக்கியமானவை.

    மரபுப் கல்விப் பாடத்திட்டத்தில் மறைசையந்தாதி இடம்பெற்றமை: காலனிய ஈழத்தின் மரபுத் தமிழ்க்கல்விப் பாடத்திட்டத்தில் ஈழத்து இலக்கியங்களும் பெருவாரியாகக் கற்பிக்கப்பட்டன. மறைசையந்தாதி பாடத்திட்டத்தில் முக்கிய இடம்பெற்றிருந்தது. ஆங்கிலேய, கிறிஸ்தவக் கல்விமுறைக்கெதிரான சுதேசக் கல்விமுறையில், மறைசையந்தாதி முதன்மை இலக்கியமாகக் கற்பிக்கப்பட்டது. புலவர் தனது மரபுப் பள்ளியில் மாணாக்கருக்குத் தொடர்ச்சியாகக் கற்பித்து வந்தார்.

    ஈழத்து இலக்கிய உரைகளில் மறைசையந்தாதிச் செய்யுள் மேற்கோள்கள்: இந்த அம்சம் மறைசையந்தாதி அக்காலத்தில் சைவத்தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தில் பெற்ற செல்வாக்கைக் காட்டிநிற்கிறது.

    கிறிஸ்தவ வேதாகமத்தின் செல்வாக்கைக் கடிதல்: பைபிளை ‘வேதாகமம்’ எனக் குறிப்பிட்டு, அச்சிட்டு விநியோகம் செய்த சூழலில், புலவர் கிறிஸ்தவ வேதாகமத்தின் செல்வாக்கினை மறைமுகமாகக் கண்டிக்க, ‘வேதம்’ வழிபட்ட வேதாரணியத் தலத்திற்கான பிரபந்தத்திற்கு உரையெழுதியிருக்க வாய்ப்புண்டு. வேதாரணியம், ‘தமிழ் மறை வழிபாட்டுத் தலம்’ என்ற நிலையை அக்காலத்தில் பெற்றிருந்தது.

    உரையாசிரியர் புலமைத் திறன்: புலவரின் புராண இதிகாசப் புலமையும் திராவிட வேதப் புலமையும் வடமொழி இலக்கிய அறிவும் வேதாரணியம் என்ற தலத்தின் பெருமைகளை அக்காலச் சைவச் சமூகத்தினருக்கு உணர்த்தவேண்டிய தேவையைப் புலவருக்குள் ஏற்படுத்தியிருக்கலாம்.

    ‘மறைசையந்தாதியும் திராவிடமே’ (நீலகண்டன்,கா., 1998:01) எனக் காட்டப் புலவர் அதற்கு உரையெழுதினார் என்றும் கூறுவர்.

ஈழத்து மரபுத்தமிழ்ப் பள்ளியில் மறைசையந்தாதி கற்றல் நூலாக அமைந்த காலத்தில், புலவர் அதற்கு எழுதிய உரை பெரும் வரவேற்பைப்பெற்றது. சைவத்தமிழ்ப் புலமையாளர்கள் புலவரது உரையை வரவேற்றமையைப் பல்வேறு புலமையாளர்களது கவிகளாலும் வாசகங்களாலும் அறியலாம். புலவரது உரை யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாட்டிலும் பெரும் செல்வாக்குப்பெற்று விளங்கியது. “மறைசையந்தாதிக்குச் சிவசம்புப்புலவர் எழுதி வெளியிட்டவுரையொன்று உண்டு” (1971:5) என மெய்கண்ட சந்தானபீடம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குறிப்பிடுவதிலிருந்து, புலவரது உரை தமிழகத்தில் செல்வாக்கோடு திகழ்ந்தமை புலப்படுகின்றது. ஈழத்தில் புலவரது உரைக்கிருந்த மதிப்பினைப் பலவாறு குறிப்பிடலாம். ஈழத்துப் புலவர் வரலாற்று ஆசிரியர்கள் தரும் குறிப்புகள், பத்திரிகைகளில் வெளிவந்த குறிப்புகள் புலவரது உரையின் மேன்மையைப் புலப்படுத்துகின்றன.

புலவரது உரை 1893ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வித்தியாநுபாலன யந்திரசாலையில் முதன்முதலில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் மூன்று பதிப்புகள் வெளிவந்தன. அதுபற்றிப் ‘பாவலர் சரித்திர தீபகம்’ பின்வருமாறு குறிப்பிடுகிறது.

“உடுப்பிட்டி அ.சிவசம்புப் புலவர் உரையுடன் பதிப்பித்த மறைசையந்தாதி உரைப் பதிப்பினை யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினர் 1905, 1934, 1939 ஆம் ஆண்டுகளில் மும்முறை வெளியிட்டனர்.” (பா.ச.தீ. 2001:231 )

அ.சதாசிவம்பிள்ளை தாம் மறைசையந்தாதி தொடர்பாக எழுதி உதயதாரகைப் பத்திரிகையில் வெளிவந்த செய்தியைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“மறைசையந்தாதிக்கு உடுப்பிட்டி ஸ்ரீ ஸ்ரீ அ.சிவசம்புப் புலவர் உரை இயற்றி அச்சிடுவித்திருக்கிறார். இந்த உரை நயப்பையும் வியப்பையும் உதயதாரகைப் பத்திரிகையிற் பேசியிருக்கிறோம்.” (பா.ச.தீ. 2001:228-229)

உதயதாரகையில் வெளிவந்த அக்குறிப்பு வருமாறு.

“மறைசையந்தாதி மூலமும் உரையும் - இதன் பிரதிக்காக மிகு வந்தனஞ் சொல்லுகின்றோம். இவ்வந்தாதி செய்தார் இற்றைக்குச் சுமார் 200 வருடங்களின் முன்னே நல்லூரிலிருந்த வில்லவராயர் புத்திரராகிய சின்னத்தம்பிப்புலவர். அவர் இதனையன்றிக் கல்வளையந்தாதியையும் பாடினார். முன்னொருவருரை செய்யாதிருந்த இதற்கிப்போது உடுப்பிட்டி அ.சிவசம்புப் புலவர் உரையியற்றி, யாழ்ப்பாணம் வித்தியாநுபாலன யந்திரசாலையில் இதனை அச்சிற் பதிப்பித்திருக்கிறார். கண்ணுங்கருத்துஞ் செலுத்தி நாம் பார்வையிட்டவிடத்து இவ்வுரையை மிக மெச்சுதற் கேவப்பட்டோம். பற்பல நூற்றிருட்டாந்தங்கள் செறிந்து, அரிய இலக்கண இலக்கிய விதிகள் கலந்து, பொருளோடணியிலக்கணத் தெளிவும் விளைநுழைந்து, பாடசாலைகளில் கற்பார்க்கன்றிக் கற்பிப்பார்க்கும் பயனும் நயனும் தரவல்ல இவ்வுரையாதலால் அதனாசிரியர் தமிழுலகிற்குப் பேருபகாரியாயினரெனல் சம்பிரதாயப் பேச்சாகாது. இவ்வுரையையியற்றினா ராசியர்மார் காலஞ்சென்ற சரவணமுத்து, சம்பந்தரெனும் பண்டிதராகவும். இவர் மாணாக்கர், காஞ்சிபுரம் பச்சையப்பர் முதலியார் வித்தியாசாலை உபாத்தியாயர் வ. கணபதிப்பிள்ளையாதியாய்ப் பலராகவுமிருக்கிலிவர் திறமையை நாஞ் சொல்ல வாய் திறத்தலிற் சபலமியாது? இவ் அந்தாதியுரையன்றித், திருச்செந்தில் யமகவந்தாதி, புலோலி நான்மணிமாலை முதலிய சில பிரபந்தங்களையு மிவர் பாடியிருக்கிறாரென்றுங் கேள்வி. இப்புத்தக விலை பிரதியொன்றுக்குச் சதம் 25” (உதயதாரகை. பங்குனி 1883)

மேற்குறித்தவற்றிலிருந்து புலவரது உரை வெளிவந்த காலத்திலும் அதன் பின்னரும் ஈழத்துப் புலமை மரபில் அதன் செல்வாக்கை அவதானிக்கமுடிகிறது.

புலவரின் மறைசையந்தாதி உரைக்கு, புலவரின் மாணாக்கர்களும் புலமையாளர்களுமாகிய நவிண்டில் ச. இராமநாதக் குருக்கள், ஆரிய திராவிட இங்கிலீஸ் பண்டிதர் புலோலி வ. கணபதிப்பிள்ளை ஆகியோர் சிறப்புக் கவிகள் கொடுத்துள்ளனர்.

இருவரும் புலவரது உரைச் சிறப்பினை “சிவசம்புப் புலவன் செய்தான் அன்ன மலி அயன் மறைசையந்தாதிக்கு உரை என எவரும் அறியத்தானே” என்றும், “சிவசம்புப் புலவன் வேணி ஆர்பூத்தபிரான் மறைசையந்தாதிக்கு ஆய்ந்து உரை இன்று ஆக்கினானே” என்றும் குறிப்பிடுகின்றனர்.

புலவரது மறைசையந்தாதி உரைத்திறன்பற்றிப் புலவர்மணி கா. நீலகண்டன் பின்வருமாறு குறிப்பிடுவார்.

“மறைசையந்தாதிக்குப் புலவரெழுதியவுரை மதுரைச் சபாபதி முதலியார் உரையினும் மேம்பட்டது. புலவரது உரையின்கண் வரும் பதவுரையும் விரிவுரைக் குறிப்பும் புலவரது திறமைக்குச் சான்றாய் அமைவன. உரையாசிரிய மரபை மீறாமலும் புதுமையாகப் புதுப்பொருள் பொலிய உரை எழுதுவதிலும் புலவருக்கு நிகர் புலவரே என்பதைக்காட்ட மறைசையந்தாதியுரையே போதுமானது” (நீலகண்டன், கா., 2005:04)

புலவரது மறைசையந்தாதி உரையூடாகப் புலப்படும் உரைத்திறன் பற்றித் தனித்தனியே ஆராய்வது பயனுடையது.

புலவரது உரையில் பதவுரைச் சிறப்பு, விரிவுரைச் சிறப்பு, ஐவகை இலக்கணக் குறிப்பு, உரைமுரண் களையும் இலக்கணக் குறிப்பு, இலக்கணவிதி வளர்ச்சி காட்டும் சிறப்பு, கொண்டுகூட்டல் இலக்கணக் குறிப்பு, பல்பொருள் விரிக்கும் சிறப்பு, செய்யுள் நயக் குறிப்பு, தாமுரை பொருளுக்குக் காரணம் வரையும் சிறப்பு, சமயதத்துவப் பொருள் விரிக்கும் சிறப்பு, நவீன உரைநடையை அண்மிக்கும் நடைச்சிறப்பு, பன்னூல்மேற்கோளிடும் சிறப்பு ஆகியவற்றைச் சிறப்பாகக் காணமுடிகிறது.

மறைசையந்தாதி உரைகள் குறித்த ஒப்பீடு

மறைசையந்தாதிக்கு இதுவரை இரு உரைநூல்கள்; தோன்றியுள்ளன. சிவசம்புப் புலவர் 1893இல் உரை எழுதினார். மதுரைச் சபாபதி முதலியார் 1912இல் உரை எழுதினார். இவ்விடத்தில், இருவரது உரையையும் சிறிது ஒப்பிட்டு நோக்கலாம்.

காப்புச் செய்யுளில் ‘செந்தமிழ் நூற்பொருள் அந்தாதி’ எனவரும் தொடருக்குச் சபாபதி முதலியார் ‘செந்தமிழ்ப் பிரபந்தங்களிற் புகழ்ப் பொருளமைதற்குரிய வந்தாதி’ எனக் கூறுவதோடு அமைந்துவிடுகிறார். ஆனால், புலவர் செய்யுளடியை நுண்ணிதாக நோக்கி ‘செந்தமிழ் நூலிலே வழங்கும் பொருளையுடைய அந்தாதி’ எனப் பதவுரை செய்கிறார். புலவர் ‘பொருள் அந்தாதி’ என்பதில் உள்ள ஆழ்ந்த அர்த்தத்தைத் தண்டியலங்கார விதிகாட்டி விளக்குகிறார். பின்னர், சொற்றொடர்நிலையைக் கருத்திற்கொண்டு, செய்யுளந்தாதி சொற்றொடர்நிலை எனக் குறிப்பிட்டு, நூற்பொருள் அந்தாதி என்பது இங்கு அதுவே எனவும் நிறுவுகிறார். முதலியாரின் விரிவுரைக் குறிப்புகள் ஒரு வரியில் அமைந்துவிடுகின்றன. புலவரோ செய்யுளின் மேன்மையை விளக்க மிக விரிவாகக் உரைக் குறிப்பு எழுதுகிறார்.

மறைசையந்தாதியில் 17ஆவது பாடலுக்கான கொண்டுகூட்டல், பதவுரை, விரிவுரை ஆகியவற்றுக்குப் புலவரும் முதலியாரும் எழுதுவதை இங்கு ஒப்புநோக்கலாம். செய்யுள் வருமாறு.

“பதிகம் பரிக்குங் குழன் மாத ராயப் பரவையுள்ளே
வதிகம் பரிக்கு நிகர்விழி யாய்மலை மாதுகங்கா
ளிதிகம் பரிக்கு மணியாக மீந்தரு ளீசர்முத்தம்
பொதிகம் பரிக்குந் திரைவேலை வேத புரிவரைக்கே.”
(மறைசையந்தாதி - செய்யுள் 17)

முதலியாரது கொண்டுகூட்டல்

“பதிகம் பரிக்கும் குழல் மாதர் ஆயப் பரவையுள்ளே, வதிக அம்பு அரிக்கு நிகர் விழியாய், மலைமாது கங்காளி திகம்பரிக்கு, மணி ஆகம் ஈந்தருள் ஈசர், முத்தம் பொதிகம்பு அரிக் குந்திரை வேலை வேத புரி வரைக்கு ஏ,” (1971:12-13)

புலவரது கொண்டுகூட்டல்

“மலை மாது கங்காளி திக் அம்பரிக்கு, மணி ஆகம் ஈந்தருள் ஈசர், முத்தம் பொதி கம்பு அரிக்கும், திரை வேலை வேத புரி வரைக்கு, அம்பு அரிக்கு நிகர் விழியாய், பதிகம் பரிக்குங் குழல் ஆய மாதர்ப் பரவையுள் வதிக.”(2005:90)

முதலியாரது பதவுரை

“பாசியைப் போலுங் கூந்தலைத் தாங்கிய மாந்தர்கள் பரந்த நினது ஆலயத்துளே, போய்ப் பொருந்துவாயாக அம்பினையும் வண்டினையுமொத்த கண்ணினையுடையாய், மலைமகளும் கங்காளியும் திகம்பரியுமாகிய தேவியாருக்கு, அழகிய திருமேனியிற் பாதியைக் கொடுத்தருளிய சிவபெருமானது, முத்துக்கள் நிறைந்த சங்கினை யரிக்கப்பெற்ற அலைகளையுடைய கடல் சூழ்ந்த திருமறைக்காட்டின் வரையினிடத்தே.” (1971:13)

புலவரது பதவுரை

“(இமைய) மலையில் (உதித்த) மங்கையும், முதுகெலும்பைப் புனைந்தவளும், திசையாகிய ஆடையை யுடையவளுமாகிய உமாதேவிக்கு, அழகாகிய (பாதித்) திருமேனியைக் கொடுத்த இறைவரது முத்தைப் பொதித்த சங்கையளிக்கின்ற, அலையையுடைய கடலை (யோர்சாரிற் கொண்ட) திருமறைக்காட்டு மலையில், பாணத்துக்கும் வண்டுக்குஞ் சமமாகிய கண்ணையுடையாய், பாசியை வருத்துகின்ற கூந்தலையுடைய தோழிப்பெண்களாகிய கடலுளிருக்கக் கடவை.” (2005:90)

முதலியாரது விரிவுரை

“வரையினிடத்தே ஆயத்துள் வதிவாயாக என முடிக்க, வதிக என்பதின் அகரந் தொகுக்கப்பட்டது. வரைக்கு வேற்றுமை மயக்கம். இது ஆயத்துய்த்தல்” (1971:13)

புலவரது விரிவுரை

“பதிகம் இப் பொருளாதலை இரகுவம்சத்தில் ‘செறியணிப் பதிகத் திடைவளரிளஞ் சேல்கள்’ என்னுஞ் செய்யுளானுணர்க. பரிக்குங்குழல் என்பதற்குத் தாங்கினாற் போன்ற கூந்தலெனினுமாம். மிகுதிபற்றிப் பரவையென்றான். உள்ளே என்பதின் ஏ இசை நிறை. வதிக என்பது ஈறுகெட்டது வகுதி என்பாருமுளர். இது ஆயத்துய்த்தல்.” (2005:90)

முடிவுரை

யாழ்ப்பாணத்தவரின் வேதாரணியப் பண்பாட்டு ஊடாட்டம் குறித்த விரிநிலை ஆய்வுகளுக்கான இடைவெளி உள்ளது. அத்தகைய ஆய்வுகள் இடம்பெறும்போது, ஈழத்தமிழரின் கடல்கடந்த ஊடாட்டதால் அடைந்த பேறுகளை இனங்காண முடியும். காலனிய காலத்தில் கப்பல், புகையிரதம் ஆகியவற்றின் அசைவு, இலங்கையோடு இந்தியா மற்றும் மலேசியா ஆகியவற்றை எவ்வாறு பின்னியது என்பதையும் அந்தப் பண்பாட்டுப் பின்னலுக்குப் பின்னால் இயங்கிய அரசியல் மற்றும் பொருளாதார நலன் பேண்நிலை எத்தகையது என்பதையும் புலமை ஊடாட்ட விரிதளம் எவ்வாறு இருந்தது என்பதையும் விரிவாக வாசிப்பதற்கான களங்கள் உள்ளன. ஆலயங்களை மையப்படுத்தியே இருவேறு நிலங்கள் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டன என்பதும் அந்தத் தழுவலால் புவியியல் எல்லையால் பிரிந்த இரு நிலங்கள் தமக்குள்ளேயே கொண்டும் கொடுத்தும் வளர்ந்தன என்பதும் வாசிப்பதற்குச் சுவாரசியமானது.

உசாத்துணைகள்

இரகுபரன், க. (ப.ஆ.) (2005) நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் பிரபந்தங்கள், கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

இராசவேலு, சு., சுகவன முருகன். (ப.ஆ.) (2015) சிலையும் கலையும் (கோவிலூர் ஆதின அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், தஞ்சாவூர்: தொல்லியல் கழகம்.    

கணபதிப்பிள்ளை, வே. (1930) ஈழமண்டலச் சதகம், பருத்தித்துறை: கலாநிதி யந்திரசாலை.

கஜேந்திரன், வேதை. (2009) வேதவனம் என்னும் வேதாரண்யம், வேதாரண்யம்: தேவஸ்தான வெளியீடு.

கிருஷ்ணராஜா, செ., கணேசலிங்கம், ப. (தொ.ஆ.) (2011) தென்கிழக்காசியாவில் இந்துப் பண்பாடு, கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம்.

சபாபதி முதலியார். (1893) மறைசையந்தாதியுரை, சென்னை: சின்னையா நாடாரவர்கள் அச்சுக்கூடம்.

சனாதனன், தா. (2018) நவீனத்துவமும் யாழ்ப்பாணத்தில் காண்பியப் பயில்வும் (1920-1990), கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம்.

சிவத்தம்பி, கா. (1995) யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு - ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம், கொழும்பு: சுதந்திர இலக்கிய விழா அமைப்புக் குழு.

சிவசம்புப் புலவர், அ. (1893) மறைசையந்தாதியுரை, யாழ்ப்பாணம்: அச்சுவேலி யந்திரசாலை.

சுதர்சன் செல்லத்துரை, நீலகண்டன், கா. (2024) சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு, உடுப்பிட்டி: புலவர் இல்லம்.

பூலோகசிங்கம், பொ. (ப.ஆ)(2001)பாவலர் சரித்திர தீபகம் - பகுதி -1, கொழும்பு: தமிழ்ச்சங்கம்.

பஞ்சநாதம்பிள்ளை, ஆர். (1958) வேதாரண்யம் கோயில் வரலாறு, வேதாரண்யம்: தேவஸ்தான வெளியீடு.

பிள்ளை, ம.க.வே. (1861) சந்திரமௌலீசர் என்னும் ஈழமண்டலச் சதகம், சென்னை: வித்தியாநுபாலன யந்திரசாலை.

முத்துக்குமார சுவாமிப்பிள்ளை, கு. (1965) சிவசம்புப்புலவர் சரித்திரம் (வானொலிச் சொற்பொழிவு), சுன்னாகம்: புலவரகம்.

வேலுப்பிள்ளை, ஆ. (1989) இலங்கைத் தமிழர்களின் கயிலாசப் பாரம்பரியம்,

யாழ்ப்பாணம்: கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம்.

வேலுப்பிள்ளை, க. (1918) யாழ்ப்பாண வைபவ கௌமுதி, வசாவிளான்: ஜயஸ்ரீ சாரதா பீடேந்திர சாலை.

மகோதயப் பெருவிழா சிறப்பு மலர், வேதாரண்யேசுவர சுவாமி திருக்கோயில்.

சிவம்பூத்த சேவடிகள் சிந்திப்போமே. (2018) நெடுந்தீவு: பெருக்கடி ஸ்ரீ சித்தி விநாயகர்.

வேதாரணியம் கோயில் வழக்கில் ஐகோர்ட்டுத் தீர்ப்பு, தினத்தந்தி, 13.09.2005.

இறைப்பணி செய்ய வந்தேன் இடைஞ்சல் கொடக்கிறார்கள் - இலங்கை ஆதீனத்தின் குமுறல் புகார். குமுதம் ரிப்போர்ட்டர், 21.01.2006.

யாழ்ப்பாணம் - வேதாரணியம்: உடைக்கப் பார்த்த தமிழக அரசு – உறுதிப்படுத்திய உயர்நீதி மன்றம், ஜூனியர் விகடன், 28.09.2005.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வ.ந.கிரிதரன் பக்கம்
                                                                                             


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்