இலங்கை தினகரனுக்கு இம்மாதம் 92 வயது ! தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தினகரனின் வகிபாகம் ! - முருகபூபதி -
இலங்கைத் தலைநகரில் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கும் தினகரன் பத்திரிகைக்கு இந்த ஆண்டு, இம்மாதம் 92 ஆவது பிறந்த தினம்! குறிப்பிட்ட தொண்ணூறு ஆண்டுகளுக்குள், இலங்கையில் நேர்ந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களையெல்லாம் ஊடகப்பெருவெளியில் தொடர்ந்தும் பதிவுசெய்து வந்திருக்கும் தினகரன், தென்கிழக்காசியாவில் குறிப்பிடத்தகுந்த நாளேடாகவும் பரிமளிக்கிறது.
காலிமுகத்தில் கடலோடு சங்கமிக்கும் சிற்றேரியின் அருகே தினகரனும் இதர ஆங்கில, சிங்கள ஏடுகளும் வெளியாகும் மாபெரும் கட்டிடம் அமைந்திருப்பதனால், தினகரனுக்கும் ஏரிக்கரை பத்திரிகை ( Lake House) என்ற நாமம் கிட்டியிருக்கிறது. இதன் நிறுவனர் ( அமரர் ) டி. ஆர். விஜேவர்தனா. தினகரன், 1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake House என்ற பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த்தினசரி தினகரன். தினகரன் முதலாவது இதழ் 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வெளியானது. தினகரன் வாரமஞ்சரி ( ஞாயிறு பதிப்பு ) 1948 மே மாதம் 23 ஆம் திகதி அதன் முதல்வெளியீட்டை வரவாக்கியது.