முன்னுரை
மொழிபெயர்ப்பு என்பது யாருக்காக? இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. அதேபோல் தமிழ் நிலப்பரப்பும் பன்மயத்தன்மை உடையது. பல மொழிபேசும் மக்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர். அவர்களுக்குள் சடங்கு சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள் சார்ந்து பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. அப்பன்முகத்தன்மையில் தான் ஓர் ஒற்றுமையும் உள்ளது. அதுவே தமிழ் நிலம்சார் மக்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தமிழ் நிலப்பரப்பிலுள்ள பண்பாட்டு அம்சங்களை உலகிற்குப் பறைசாற்ற மொழிபெயர்ப்பு அவசியமாகிறது. மொழி, சடங்கு, வழிபாட்டு முறை போன்ற இனக்குழு அடையாளங்களை மொழிபெயர்க்கும் பொழுது, பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஒரு மொழியில் ஒரு சொல் உணர்த்தும் பண்பாட்டுப் பொருள் வேறு மொழியில் வேறொரு பொருளை உணர்த்துகிறது. இவ்வாறான பல சிக்கல்களை அடையாளப்படுத்தும் விதமாகவும் அதற்கான தீர்வு வழிமுறைகள் குறித்தும் இக்கட்டுரை ஆராய்கிறது. தமிழ் நிலம்சார் பண்பாட்டுக்கூறுகளைத் தன்னுள் கொண்ட பாரதியாரின் கண்ணன் பாடல்களில் கண்ணம்மா என் குலதெய்வம் என்னும் பாடல் மூலத்தோடு, கே. எஸ் சுப்பிரமணியம், பி. எஸ் சுந்தரம், தென்காசி தங்கபாண்டியன் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒப்புநோக்கப்படுகிறது.
கண்ணம்மா – எனது குலதெய்வம்
நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!
1. பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)
2. மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று ... (நின்னை)
3. தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வனம் ... (நின்னை)
4. துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)
5. நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)
- பாரதியார்
Kannamma – My Family Deity
In you I take refuge - Kannamma!
In you I take refuge!
1. May I not be consumed by worries
Of pursuing wealth, prestige and fame
(In you I take refuge...)
2. My heart assailed by meanness and fear;
Slay and sweep them away.
(In you I take refuge...)
3. Save me from self- anchored longing;
Fulfilled may I be, working your will.
(In you I take refuge...)
4. No more sorrow, despair and defeat;
Let Dharma flourish in love's path.
(In you I take refuge...)
5. Good and bad, know we not; O Mother!
Plant the good; banish the bad!
(In you I take refuge...)
-Dr. K.S Subramaniam
Kannamma Goddess of my Household
In you I take refuge, Kannamma,
In you I take refuge.
That wealth, position, fame pursuing,
Cancerous care I may not be wooing.
That you might kill with your fiery dart
Meanness and fear new lodged in my heart.
That self-willed I may not misery obtain,
But work your will and fulness obtain.
Know no more sorrow, despondence, defeat,
And let virtues spring in the print of Love's feet.
Of evil and good what do we know?
Weed the bad out, let the good grow!
- P.S Sundaram
Kannamma is my Family Deity
Song sung assuming Kannan as Female Goddess of the clan
At Thy lotus feet I shall take refuge,
Ah, Kannamma!
I take refuge;
1. Myself that craves gold, fame, upliftment
Ought not to fall prey to worry.
2. Distress, fear have crept unto my Heart
To inhabit, ah, Kannamma!, dispel them,
3. Thinking of my own work I languish,
Relieved off, doing thy work,
I ought to get contentment!
4. No more distress no more weariness,
No more defeat, dharma shall
Blossom in path of love;
5. Good, bad, we know not! May mother
Kannamma plant good!
Drive off bad!
- Thenkasi Thangapandian
(இக்கட்டுரை முழுவதும் கே. எஸ் சுப்பிரமணியம் கே. எஸ் எனவும், பி. எஸ். சுந்தரம் பி. எஸ் எனவும், தென்காசி தங்கபாண்டியன் தங்கபாண்டியன் எனவும் குறிப்பிடப்படுகிறார்கள்.)
இப்பாடலில் ‘குலதெய்வம்’ என்பதற்கு கே. எஸ் மற்றும் தங்கபாண்டியன் ‘Family deity’ என்று மொழிபெயர்த்துள்ளனர். பி. எஸ் ‘Goddess of my household’ என்று மொழிபெயர்த்துள்ளார். Family, household இரண்டுமே குடும்பம் என்ற பொருளைக் குறிக்கின்றன. குலதெய்வத்தில், குலம் என்ற வார்த்தைக்கு clan என்ற சொல் ஆங்கிலத்தில் உள்ளது. ஆனால், இங்கு குலம் என்பது குடும்பம் என்று பொருள் கொள்ளப்பட்டு family மற்றும் household என்று இரு மொழிபெயர்ப்பாளர்களும் மொழிபெயர்த்துள்ளனர். குலம் என்பது உறவுமுறைகளால் இணைக்கப்பட்ட ஒரு வம்சாவளி பாரம்பரியக் குடும்பத்தைக் குறிக்கிறது. அவர்கள் வழிபடும் தெய்வமே குலதெய்வம் ஆகும். குலதெய்வ வழிபாடு என்பது ஓர் இனக்குழுச் சமூகத்தின் மூதாதையர்களைக் காவல்தெய்வமாக வழிபடுவது. இதனை household என்று மொழிபெயர்ப்பது தவறாகும். Family deity என்பது ஒரு குடும்பத்திற்கான கடவுள் என்று சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கப்பட்டாலும் குலம் வேறு குடும்பம் வேறு. தலைமுறை தலைமுறையாக ஒரு குடும்பம் பரந்து விரிந்து பெரிய சமூகத்தை உருவாக்குகிறது. அவர்கள் பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த தங்களது மூதாதையரைத் தெய்வமாக வணங்குகிறார்கள். இங்கு தமிழரின் இனக்குழுச் சமூகத்தைப் பற்றியோ ஒரு பாரம்பரிய வம்சாவழியைப் பற்றியோ எந்தவொரு அறிமுகமும் இல்லாத வாசகர்களுக்குக் குலதெய்வம் என்ற சொல்லின் பொருள் புலப்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனைத் தெளிவுபடுத்த மொழிபெயர்ப்பாளர்கள் ஏதேனும் ஒரு விளக்கவுரையோ, அடிக்குறிப்பையோ பாடலின் நிறைவில் கொடுத்திருக்க வேண்டும். இந்த மொழிபெயர்ப்புப் பிரதியை வாசிக்கும் வாசகர்களுக்குக் குலதெய்வம் என்ற அடர்ந்த பொருள் முழுமையாகச் சேர்வதில்லை.
நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!
‘நின்னைச் சரணடைந்தேன்’ என்பதற்கு தங்கபாண்டியன் ‘At thy lotus feet I shall take refuge’ என்று மொழிபெயர்த்துள்ளார். இது ‘உன் கமலப்பாதங்களில் அல்லது தாமரைப் பாதங்களில் சரணடைகிறேன்’ என்று பொருளாகிறது. இங்கு கண்ணம்மா என்பது இறைவனாகிய கண்ணனின் நாயகி பாவத்தைக் குறிக்கிறது. திருமாலின் அவதாரமாகக் கண்ணனைக் கூறுகிறோம். திருமாலின் திருவடி பெரும்பாலும் தாமரை மலர்களோடு ஒப்புமைப்படுத்தப்படும். அதை வெளிப்படுத்தும் நோக்கில், lotus feet என்று மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தியிருக்கலாம். இப்பாடல் பெரும் தத்துவார்த்த சிந்தனையைத் தன்னுள் அடக்கியுள்ளது. அத்தத்துவங்கள் இங்கு உள்ளுறையாகக் கையாளப்பட்டுள்ளன. அவற்றை உணர்ந்து மொழிபெயர்த்தல் சவால் நிறைந்த ஒன்று. அவ்வாறு மொழிபெயர்க்கும் போது, பெறுமொழி வாசகர்களுக்கு இத்தத்துவம் கொண்டுசேர்க்கப்படுவது இன்றியமையாதது. இப்பாடல் மகாபாரதத்தில் கூறப்படும் மனிதரின் முக்குணங்களாகிய சத்வ, ராட்சத, தாமச குணங்களை குறிக்கிறது.
ஸத்த்வம் ரஜஸ் தம இதி குணா : தி-ஸம்பவா:
நிபத்னந்தி மஹா-பாஹோ தேஹே தேஹினம் அவ்யயம்
(ப. 725, பகவத் கீதை )
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
மனித ஆசைகள் துன்பத்திற்கு வழிவகுக்கும் என்பது வேதாந்தத்தின் தத்துவம். இப்பாடலில் பொன்னுக்கும் புகழுக்கும் சமூக அந்தஸ்திற்கும் (மனித ஆசைகள்) ஆசைப்படும் என்னைத் துன்பம், கவலைகள் சூழக்கூடாது என்று பாரதியார் பாடுகிறார். இதில் பொன், புகழ் மேல் கொண்டுள்ள ஆசை என்பது மனிதனின் முக்குணங்களுள் ஒன்றான ராட்சத குணத்தை குறிக்கிறது. இந்த மூன்று குணங்களும் அதன் தன்மைகளும் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. இறைவனிடம் இவற்றை வேண்டுதல் என்று பாடல் அமையப்பெறும் போது வேதம் கூறும் மனித குணங்களைக் குறிக்கிறார் பாரதி என்பது புலனாகிறது. ஆனால் வேதம் பற்றியோ இந்திய இறையாண்மைப் பற்றியோ ஒரு தொடக்க நிலைப் புரிதல் இல்லாத வாசகர்களுக்கு, இந்த மொழிபெயர்ப்பை வாசிக்கும் பொழுது, முக்குணங்கள் பற்றிய பார்வை புலனாகாது.
‘பொன்’ என்பதற்கு கே. எஸ் மற்றும் பி. எஸ் wealth என்று மொழிபெயர்த்துள்ளனர். தங்கபாண்டியன் gold என்று சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்துள்ளார். பொன் என்பது தங்கம் என்ற பொருளையும் உணர்த்தும். ஆனால், இப்பாடலில் பொன் என்பது செல்வத்தைக் குறிக்கிறது. தங்கபாண்டியன் கூறும் gold என்பது சரியான பொருளை உணர்த்தினாலும், wealth என்பது மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.
மூலம் கே. எஸ் பி. எஸ் தங்கபாண்டியன்
பொன் Wealth Wealth Gold
‘பொன்னையும் புகழையும் விரும்பும் என்னை’, என்பதில் பொன், புகழ் மேல் ஆசை கொண்டு, அதனைத் தேடி அதன்பின் ஓடுதல் என்றே பொருள்படுகிறது. ‘விரும்பும்’ என்ற சொல்லிற்கு பி. எஸ் மற்றும் கே. எஸ் pursuing, என்று மொழிபெயர்த்துள்ளனர். ஒன்றைப் பின்தொடர்ந்து செல்லுதல் என்ற பொருள் உணர்த்தப்படுகிறது. தங்கபாண்டியன் craves என்கிறார். தன்னால் கட்டுப்படுத்த முடியாத ஆசை என்ற பொருளை உணர்த்துகிறது.
‘I pursue my career’ என்பது நீண்டகாலமாக நான் செய்யும் தொழிலை அல்லது வேலையைத் தொடர்கிறேன் என்று பொருள்படுகிறது. அதேபோல், ‘I crave for something sweet’ என்பது இனிப்பாக ஏதாவதொன்றை சாப்பிட வேண்டும் என்ற தீரா ஆசை ஏற்படுகிறது என்று பொருள்படுகிறது. Pursue என்பது ஒன்றைத் தொடர்வது என்றும் craves என்பது பெரும் ஆசை என்றும் புலனாகிறது. பொன்,புகழ் மேல் ஆசை கொள்ளுதல் என்பதற்கு தங்கபாண்டியன் கூறும் craves என்ற சொல் மிகப் பொருத்தமானதாக அமைகிறது. ஏனெனில், பொன்னும் பொருளும் எப்பொழுதும் போதும் என்ற மனநிறைவைத் தராது. நாளுக்கு நாள் அதிகமாக வேண்டும் என்ற எண்ணத்தையே தூண்டும். அதனால், pursue என்ற சொல்லைக் காட்டிலும் craves என்ற சொல் பொருத்தமாக அமைகிறது.
மூலம் கே. எஸ் பி. எஸ் தங்கபாண்டியன்
விரும்பும் Pursuing Pursuing Craves
‘என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று’ என்பது துன்பங்களுக்கு நான் இரையாகிவிடக் கூடாது என்ற பொருள்படுகிறது. இதற்கு கே. எஸ் ‘not to be consumed’ என்றும், பி. எஸ், cancerous care என்றும், தங்கபாண்டியன் not to fall prey என்றும் கூறுகிறார். கே. எஸ் கூறும் not to be consumed என்பது தின்னத் தகாதென்று என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பாக அமைகிறது. பி. எஸ் கூறும் cancerous என்பது கட்டுப்படுத்த முடியாத நிலையை உணர்த்துகிறது. கவலைகள் என்னை அளவின்றி வருத்தும் நிலை வராதவாறு காக்கவேண்டும் என்று பொருள்படுகிறது. தங்கபாண்டியன் கூறும் not to fall prey என்பது துன்பங்களுக்கு நான் இரையாகிவிடக் கூடாது என்ற பொருளை உணர்த்துகிறது. கே. எஸ் ன் மொழிபெயர்ப்பு நேரடிப் பொருளை உணர்த்தினாலும் பிற இரண்டு மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்பு அதைக் காட்டிலும் சிறப்பானதாக அமைகிறது. பி. எஸ் மற்றும் தங்கபாண்டியன், இருவரின் மொழிபெயர்ப்பை ஒப்பிட்டுப் பார்க்கையில், தங்கபாண்டியனின் மொழிபெயர்ப்பு மூலமொழி ஆசிரியரின் கருத்தை பெறுமொழி வாசகர்களுக்கு முழுமையாகக் கொண்டுசேர்க்கிறது. Cancerous என்பதற்கிணையான தமிழ்ச் சொல் மூலத்தில் இல்லை. அளவுகடந்த அல்லது கட்டுக்கடங்காத என்ற பொருளிலும் மூலத்தில் சொற்கள் இல்லை. அதனால், தங்கபாண்டியனின் மொழிபெயர்ப்பு சிறப்பானதாகப் கருதப்படுகிறது.
மூலம் கே. எஸ் பி. எஸ் தங்கபாண்டியன்
தின்னத் தகாதென்று Not to be consumed Cancerous Not to fall prey
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று
‘மிடிமை’ என்ற சொல் வறுமை, சோம்பல் என்று பொருள்படும். எனது நெஞ்சில் குடிபுகுந்துள்ள மிடிமை என்னும் போது, இச்சொல் சோம்பலைக் குறிக்கிறது. காரணம், மனதில் வறுமை குடிகொள்ளாது, சோம்பலே குடிகொள்ளும். மேலும் பாரதியார் தனது வாழ்வின் பெரும் பகுதியை வறுமையில் கழித்திருக்கிறார். இருந்தும், எவ்விடத்திலும் வறுமையைப் பற்றிக் கவலை கொண்டதோ அச்சம் கொண்டதோ இல்லை என்று அவரது மனைவி செல்லம்மா, பாரதியார் சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனால், வறுமையைப் பற்றிய கவலை எனது நெஞ்சு முழுவதும் பரவியுள்ளது என்று பாரதியார் கூறியிருக்க வாய்ப்பில்லை.
(ப. 30, செல்லம்மா, பாரதியார் சரித்திரம்)
பாரதியார் தனது புதிய ஆத்திச்சூடியில், ‘மிடிமையில் அழியேல்’ என்று பாடுகிறார். ‘மிடிமை என்பது சோம்பல்; மலையாளத்தில் மடி என்பர்’.
(ப. 143, அ. சீனிவாசன், பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி)
ஆக, மிடிமை என்பது சோம்பலையே குறிக்கிறது. மிடிமை என்ற சொல்லை கே. எஸ். மற்றும் பி. எஸ். Meanness எனவும், தங்கபாண்டியன் distress எனவும் மொழிபெயர்த்துள்ளனர். Meanness என்பது சிறுமைகுணம், அற்பத்தனமான மனம் கொண்டவரைக் குறிக்கும் சொல். Distress என்பது பெரும் துன்பத்தைக் குறிக்கும் சொல். இரண்டு சொற்களும் சோம்பல் என்ற சொல்லையோ அதன் பொருளையோ உணர்த்தவில்லை. இம்மூன்று மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்புச் சொற்களும் பொருத்தமானதாக இல்லை.
மூலம் கே. எஸ் பி. எஸ் தங்கபாண்டியன்
மிடிமை Meanness Meanness Distress
சோம்பல், அச்சம் யாவும் தாமச குணத்தின் பிறப்பிடம். பெரும்பாலான மனிதர்கள் தமோ குணங்களுக்குட்பட்டு அதிலிருந்து வெளிவர இயலாமல், அதில் உழலும் நிலை ஏற்படுகிறது. அத்தகைய குணங்களை என்னிலிருந்து உடைத்து, நான் வெளிவர மன உறுதியை அருள வேண்டுமென இறைவியை வேண்டுவதாகப் பாடல் அமைகிறது. இத்தாமச குணங்களையெல்லாம் போக்க வேண்டும் என்பதை ‘கொன்றவை போக்கென்று’ என்ற சொற்கள் உணர்த்துகின்றன. இதனை, கே. எஸ், slay and sweep them away என்றும், தங்கபாண்டியன் dispel them என்றும் பி. எஸ், kill them with your fiery dart என்றும் மொழிபெயர்த்துள்ளனர். கே. எஸ் யின் மொழிபெயர்ப்பு மிகவும் சரியானதாக அமைகிறது. தங்கபாண்டியன், இக்குணங்களையெல்லாம் என்னுள்ளிருந்து மறைத்துவிடு என்கிறார். கொன்றுபோக்கு என்பதற்கும், மறைத்துவிடு என்பதற்கும் வேறுபாடு உள்ளது. இதனைத் துல்லியமான மொழிபெயர்ப்பாக ஏற்றுக்கொள்ள இயலாது. Fiery என்ற சொல் வேகமாக, ஆக்ரோஷமாக என்ற பொருளை உணர்த்தும். Dart என்பது கூர்மையான முனை கொண்ட ஓர் ஆயுதத்தைக் குறிக்கிறது. இங்கு குலதெய்வம் என்று பெண் தெய்வத்தை வணங்குகிறார் பாரதி. பெரும்பாலான பெண் தெய்வங்கள், கையில் சூலத்தை ஏந்தியபடி காட்சியளிக்ககக்கூடியன. இச்சூலாயுதத்தைக் கொண்டு எனது தாமச குணங்களைக் கொன்று போக்க வேண்டும் என்ற பொருளில் பி. எஸ். Fiery dart என்று மொழிபெயர்த்திருக்கலாம். தெய்வங்களின் உருவ அமைப்புகளையும், ஆயுதப் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு மொழிபெயர்த்திருப்பது சிறப்பானதாகும். இந்தியப் பெண் தெய்வங்களின் உருவ அமைப்பைப் பற்றித் தெரியாத அயல்நாட்டு வாசகர்களுக்கு வெறும் ஈட்டி என்று பொருளையே இச்சொல் உணர்த்தும்.
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெரும்வனம்
தன்னால் அனைத்து செயல்களும் நடக்கின்றன என்ற சுயநல எண்ணத்தை ராட்சத குணம் என்பர். இக்குணமே பெரும்பாலான உலக மனிதர்களிடம் காணப்படுவது. இதற்கு அடுத்த நிலை, தன்னலம் விடுத்து, இறையை முழுமையாக ஏற்று, இவ்வுலகில் சாதாரண தளத்தில் நின்று, நிகழும் அனைத்து செயல்களும் இறைமையின் செயல்கள் என்று உணர்ந்து அதில் நிறைவு பெறுவது. இதனை சாத்வ குணம் என்பர். ராட்சத குணத்திலிருந்து என்னை மாற்றி சாத்வ குணத்திற்கு எடுத்து வரவேண்டி உன்னிடம் சரணடைகிறேன் என்று பாடுகிறார் பாரதி.
‘தவிப்பது தீர்ந்திங்கு’ என்பது சுயநல எண்ணங்களால், நான் என்னும் செருக்கால் யான் பெற்றத் துன்பங்களைத் தீர்த்து அருள்புரிய வேண்டுவதாய் இப்பாடல் அமைகிறது. ‘தீர்த்து’ என்பதற்கு கே. எஸ். Save me என்றும் பி. எஸ். May not obtain என்றும் தங்கபாண்டியன் relieved off என்றும் மொழிபெயர்த்துள்ளனர். கே. எஸ் யின் மொழிபெயர்ப்பு நான் படும் துன்பங்களிலிருந்து என்னைக் காக்க வேண்டும் என்று பொருள்படுகிறது. காப்பதற்கும், தீர்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. பி. எஸ். ‘தவிப்பு’ என்பதற்கு misery என்று குறிப்பிடுகிறார். ‘தவிப்பது தீர்ந்து’ என்பதற்கு may not misery obtain என்று கூறுகிறார். துன்பங்கள் வராமல் என்னைக் காப்பாய் என்று பொருள் அமைவது தவறானதாகும். தங்கபாண்டியனின் மொழிபெயர்ப்பு எனது துன்பங்களைக், குறைகளைத் தீர்த்தருள வேண்டும் என்று பொருள்படுகிறது. மூன்று மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப்பார்க்கையில், தங்கபாண்டியனின் மொழிபெயர்ப்பு சரியானதாக அமைகிறது.
துன்பம் இனியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
எனது தீய குணங்களையெல்லாம் நல்லவையாக மாற்றியபின், எனக்குத் துன்பம், சோர்வு,தோல்வி போன்ற எதுவும் இல்லை என்று பாரதியார் பாடுகிறார். ‘சோர்வு’ என்பதை கே. எஸ். Despair என்றும் பி. எஸ். Despondence என்றும் தங்கபாண்டியன் weariness என்றும் மொழிபெயர்த்துள்ளனர். கே. எஸ் மற்றும் பி. எஸ் பயன்படுத்தியுள்ள சொற்கள் நம்பிக்கையற்ற விரக்தி நிலையை உணர்த்துகின்றன. தங்கபாண்டியன் நேரடியாக சோர்வு என்று பொருள்படும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இவரது மொழிபெயர்ப்பு சரியானது. விரக்தி நிலை இனி எனக்கில்லை என்று கூறுவது மேலும் பொருத்தமானதாகவே உள்ளது. காரணம், கண்ணம்மா என்னும் இறை சக்தியை நான் இறுகப்பற்றி, நம்பிக்கையின் வேராய்க் கருதுகிறேன். நம்பிக்கையற்ற நிலை என்ற ஒன்று எனது வாழ்வில் இனி இல்லை என்ற கருத்து வெளிப்படுகிறது. அதனால், மூவரின் மொழிபெயர்ப்புகளும் சரியானவை, ஆனால், Weariness என்ற நேர் இணைச் சொல்லைக் காட்டிலும், despair மற்றும் despondence என்ற சொல் சிறப்பானதாக உள்ளது.
மூலம் கே. எஸ் பி. எஸ் தங்கபாண்டியன்
சோர்வு Despair Despondence Weariness
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
இங்கு ‘அன்பு’ என்பதற்கு மூவரும் love என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் ‘நெறி’ என்பதற்கு கே. எஸ் மற்றும் தங்கபாண்டியன் path என்றும், பி. எஸ் feet என்றும் மொழிபெயர்த்துள்ளனர். நெறி என்பது ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறையைப் பின்பற்றுவது. இதனை வழி, விதி என்றும் கூறுவர். Path என்ற சொல் வழி, பாதை என்னும் பொருளை உணர்த்துகிறது. நெறி என்ற சொல்லிற்கும் இதனை இணையாகப் பயன்படுத்தலாம். பி. எஸ். Print of love’s feet என்கிறார். அன்பின் பாதச் சுவடு என்று பொருள்படுகிறது. பாதச் சுவடுகளின் வழியே பாதை உருவாகிறது. அதனால், இரண்டு சொற்களும் சரியான இணைச் சொற்களே.
மூலம் கே. எஸ் பி. எஸ் தங்கபாண்டியன்
அன்பு நெறி Love’s path Print of love’s feet Path of love
அறம் Dharma Virtues Dharma
‘அறங்கள் வளர்த்திட’ என்பதில் ‘அறம்’ என்பது தமிழுக்கும் தமிழனின் பண்பாட்டு அசைவிற்கும் தொடர்புடைய சொல். அறம் என்பதை dharma என்று கே. எஸ் மற்றும் தங்கபாண்டியன் மொழிபெயர்த்துள்ளனர். Virtues என்று பி. எஸ் மொழிபெயர்த்துள்ளார். இங்கு, dharma என்பது தர்மம் என்னும் தமிழ்ச் சொல்லின் ஒலிபெயர்ப்பு. Virtue என்பது நன்நடத்தை, உயர் பண்புகள் போன்றவற்றைக் குறிக்கும். Virtue என்ற சொல் ஓரளவு அறம் என்ற சொல்லிற்கு இணையாகப் பயன்படுத்தலாம். அறம் என்ற தமிழ்ச் சொல் நல்வினை, நீதி, ஒழுக்கம், வாய்மை போன்ற அனைத்து நற்செயல்களை உள்ளடக்கிய அடர்த்தி மிகுந்த சொல். ஔவையார் கூறும் ‘அறம் செய்ய விரும்பு’ என்பதில் ‘அறம்’ என்பதை good deeds, moral acts என்றே மொழிபெயர்த்துள்ளனர். அறம் என்பது தமிழுக்கே உரித்தான அரும்பெருஞ்சொல். இதற்கு இணையான மொழிபெயர்ப்பு எதுவும் தென்படவில்லை. அறத்திற்குள் அடங்கும் சொற்களை மொழிபெயர்த்தல் ஓரளவு சரியான புரிதலைப் பெறுமொழி வாசகர்களுக்கு உணர்த்தும். ஆனால், dharma என்று ஒலிபெயர்ப்பது சரியானதாக அமையாது. தர்மம் என்பதை நற்செயலாக அறத்தினுள் இணைத்தாலும், அதற்கு இணையான ஆங்கில மொழிபெயர்ப்பை பயன்படுத்த வேண்டுமேயன்றி நேரடியாக ஒலிபெயர்ப்பது தவறாகும்.
முடிவுகள்
ஒரு நிலம் சார் இனக்குழுவின் வரலாற்றையும் பண்பாட்டு எச்சங்களையும் அடுத்து வரும் தலைமுறை அறிந்து கொள்ள பெரிதும் துணை நிற்பது இலக்கியங்கள். அந்த இலக்கியங்களின் மொழிபெயர்ப்பை ஒப்பிடும் பொழுது, இவரது மொழிபெயர்ப்பு சிறப்பானது என்று முடிவுசெய்ய இயலாது. ஒவ்வொரு மொழியின் சொற்களும் அதன் பண்பாட்டுச் சூழலுக்கேற்ப அமைந்திருக்கும். அவற்றை மொழிபெயர்க்கும் போது, அதற்கு இணையாகப் பயன்படுத்தப்படும் பெறுமொழிச் சொல், அப்பொருளை முழுமையாகக் கொண்டு சேர்க்க இயலாது. ஏனெனில் மூல மொழியின் பண்பாட்டுக் கூறுகளும், பெறு மொழியின் பண்பாட்டுக் கூறுகளும் வெவ்வேறாக அமைகின்றன. இதற்கு, ஓரளவு நெருக்கமான பொருளைத் தரும் சொற்களை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரு மொழிபெயர்ப்பு சரியானதா என்று உறுதிசெய்ய, அம்மொழிபெயர்ப்பு யாருக்காக செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இங்கு, குலதெய்வம் என்ற சொல்லின் பொருள் தமிழ் மொழி பேசும் மக்களைக் கடந்து, இந்நிலம் சார்ந்து வாழும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என வேற்று மொழி பேசும் மக்களுக்கும் புரியும். காரணம் வேற்று மொழி பேசும் மக்களாக இருந்தாலும், ஒரே நிலம் சார்ந்து வாழும் பொழுது அவர்களின் சடங்கு முறைகளிலும், வழிபாட்டு அமைப்புகளிலும் ஓரளவு ஒற்றுமை காணப்படும். ஆனால், தமிழ் நிலம் சார் பண்பாட்டுக் கூறுகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாத ஐரோப்பியர் போன்ற பிற நாட்டு வாசகர்களுக்கு household என்ற சொல்லோ, family deity என்ற சொல்லோ, குலதெய்வத்தின் முழுமையான பொருளை உணர்த்தாது. அதேபோல், வேதாந்தத்தை மையமாக வைத்துப் பேசப்படும் முக்குணங்களும், வேதம் பற்றிய தொடக்கநிலைப் புரிதல் இல்லாத பிறநாட்டு வாசகர்களுக்குப் புரியாது. இச்சிக்கலைக் களைய குலதெய்வம் என்ற சொல்லைப் பற்றிய சிறுவிளக்கத்தை அடிக்குறிப்பாக அமைக்கலாம். அறம் என்ற சொல்லை இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் dharma என்று ஒலிபெயர்த்துள்ளனர். தர்மம் என்ற சொல்லைத் தான் dharma என்று ஒலிபெயர்த்துள்ளனர். தர்மம் என்பது வடமொழிச் சொல்; பிறருக்கு உதவுதல் என்பதே தர்மம். உதவுதல் என்ற பொருள் தரும் சொற்கள் ஒவ்வொரு மொழியில் இருந்தாலும், தர்மம் என்ற சொல் இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து மொழிபேசும் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. dharma என்ற ஒலிபெயர்ப்புச் சொல்லின் பொருள் இந்தியவாழ் அனைத்து மொழி பேசும் மக்களாலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்திய நிலச்சார்பு இல்லாத அயல் நாட்டு வாசகர்களுக்கு அறம் என்பதோ தர்மம் என்பதோ எதைக் குறிக்கிறது என்று தெரியாது. மொழிபெயர்ப்பாளர் தனது மொழிபெயர்ப்பை பிற மொழி பேசும் இந்தியர்களுக்காக செய்திருந்தால், அவரது மொழிபெயர்ப்புச் சரியானதாகிறது. ஒருவேளை, இம்மொழிபெயர்ப்பு பிறநாட்டவர்க்கானதாக இருக்குமேயானால், இது சரியான மொழிபெயர்ப்பாக அமையாது.
ஆங்கிலம் உலகப் பொதுமொழி என்பதால், ஒரு இலக்கியம் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்க்கப்படுவது, அனைவருக்குமானது, அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடியது. நிலம் சார் பண்பாட்டுக் கூறுகளோடு பெயர்க்கப்படும் இலக்கியங்கள், அனைத்து மொழி பேசும் உலக மக்களுக்கு ஒரே மாதிரியான புரிதலை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. இங்கு தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கண்ணம்மா என் குலதெய்வம் என்ற பாடல், தமிழகத்தில் வாழும் பிற மொழி வாசகர்களுக்கு ஒருவிதப் புரிதலும், தமிழகம் அல்லாது இந்தியாவில் வாழும் வேற்று மொழி வாசகர்களுக்கு ஒருவிதப் புரிதலும், பிறநாட்டு வாசகர்களுக்கு வேறுவிதமான புரிதலும் ஏற்படும். தமிழ் நிலம்சார் வேற்றுமொழி பேசும் மக்கள் தமிழரின் பண்பாட்டு இலக்கியங்களை ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொண்டு புரிந்துகொள்ளும் அளவிற்கு, பிறநாட்டு வாசகர்களால் புரிந்து கொள்ள இயலாது. இத்தெளிவும் புரிதலும் கொண்டு மொழிபெயர்ப்பாளர்கள் செயல்படுதல், மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் ஓரளவு குறைவதற்கான வழியாக அமையும்.
பார்வை நூல்கள்:
1. பாரதியார், பாரதியார் கவிதைகள், வானவில் பிரசுரம் சென்னை, 1977.
2. Subramanian K S, Subramania Bharati Volume One – Poems, Sahitya Akademi, New Delhi, 2016.
3. Sundaram P S, Subramania Bharati, Vikas Publishing House Pvt., Ltd., Delhi, 1982.
4. Thenkasi Thangapandian, Maha Kavi Bharathiyar Poems, A Poetic Translation in English, Kathirkantham Publications, Thenkasi, 2020.
5. அ.ச. பக்தவேதாந்த சுவாமி பிரபுபாதர், பகவத் கீதை, பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளை, மும்பை, 2008.
6. செல்லம்மா, பாரதியார் சரித்திரம், சக்தி காரியாலயம், சென்னை, 1945.
7. அ. சீனிவாசன், பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி, ஃப்ரண்ட்லைன் பிரிண்டர்ஸ் லிமிடெட், சென்னை, 2002.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.