நதியில் நகரும் பயணம் -5 சல்ஸ்பேர்க் (Salzburg) - நடேசன் -
நதிப் பயணத்தில் அடுத்த நகரமானது ஜெர்மனி -ஆஸ்திரியா எல்லையில் உள்ள சிறிய நகரம் பாஸ்சு (Passau). அங்கு நிறுத்தப்பட்டால் புனித ஸ்ரிபன் தேவாலயத்தையும் அத்துடன் வேறு சிறிய ஆற்றின் கழிமுகம் உள்ள நகரம். ஆனால், அங்கிருந்து இரு மணி நேரப் பஸ் பயணத்தில் ஆஸ்திரியாவின் சல்ஸ்பேர்க் நகரம் உள்ளது. அங்கு போக விசேடமாகப் பணம் கொடுக்க வேண்டும் .
ஏன் அங்கு போகவேண்டும் ?
அந்த நகரத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
என்னைப் பொறுத்தவரை சல்ஸ்பேர்க் முக்கியமாக இருந்தது. நான் சிறு வயதில் பார்த்த ‘சவுண்ட் ஒவ் மியூசிக்’ என்ற ஆங்கிலத் திரைப்படம் இந்த நகரிலே எடுக்கப்பட்டது . அந்தப் படத்தை நகலெடுத்த படமாகச் சொல்லப்பட்ட தமிழ்ப் படமாகிய ‘சாந்தி நிலயமே’ நான் 1969 இல் பார்த்த படம். உண்மையில் சாந்தி நிலையம், ஜேன் இயர் (Jane Eyre by Charlotte Bronte) என்ற பிரித்தானிய நாவலையும் ‘சவுண்ட் ஒவ் மியூசிக்’ என்ற அந்தப் படத்தை ஆஸ்திரிய கதையையும் இணைத்த நகல் எனக்கேள்விப்பட்டேன். மேலும் எனது நண்பன் ஒருவன் சாந்தி நிலையத்தில் நடித்த சிறுமி பிற்கால நடிகை மஞ்சுளா மீது ஏற்பட்ட பிரியத்தால் ஒன்பது தடவை பார்த்தான் என்பது, நாங்கள் இந்து கல்லூரி விடுதியில் இருக்கும்போது ஒரு வித சாதனையாகப் பார்க்கப்பட்டது. அவனும் அக்காலத்தில் சாதனையாளனாக எங்களுக்குத் தெரிந்தான்.
அதன் பின்பாகவே அது சவுண்ட் ஒவ் மியூசிக் இலங்கைக்கு வந்த பிற்காலத்தில் என் மனைவி சியாமளா பாடசாலையில் படித்த காலத்தில் அந்த படத்திற்கு யாழ்ப்பாணத்தில், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியினர் பாடசாலையால் கொண்டு சென்றார்கள் என்று சொன்னபோது சல்ஸ்பேர்க் செல்ல அதுவே முக்கிய காரணமாகியது .
சவுண்ட் ஒவ் மியூசிக் ஆங்கிலப்படத்தின் கதாநாயகி ஜுலி அன்ரூ மலையுச்சியில் நின்று பாடுவது என் மனத்தில் மட்டுமல்ல பலரது மனங்களில் பசுமையான காட்சியாக படிந்திருந்தது. இறுதிக் காட்சியில் , ஹிட்லரின் நாஜி படையினரிடமிருந்து முழுக் குடும்பமும் ஒரு சவக்காலையில் ஒழித்திருந்து, அதன்பின் அங்கிருந்து வாகனத்தில் கதாநாயகனும்( Mr. Christopher Plummer as Captain Georg Von Trapp) கதாநாயகியும் ஏழு பிள்ளைகளுடன் மலையில் ஏறி தப்பிச் செல்வதாகப் படம் முடிகிறது.