சு.சமுத்திரத்தின் நெருப்புத் தடயங்கள் - புதின உத்தியும் மொழிநடையும்! முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி),வாணியம்பாடி -635 752 -
முன்னுரைஇலக்கியங்கள் அவையவை தோன்றிய காலத்துச் சமுதாயத்தை வெளிக்கொணர்ந்து காட்டும் காலக்கண்ணாடிகள் எனலாம். இவ்வகையில் புதின இலக்கியமும் தான் தோன்றிய காலத்துச் சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை. இப்புதின இலக்கியம் தன் காலச் சமுதாயத்து நிகழ்ச்சிகளைக் கூறுவதன் வாயிலாக வருங்காலச் சமுதாயத்தைத் திருத்த அல்லது நல்வழிச் செலுத்த முனைகின்றது. தற்காலத்துப் புதின ஆசிரியர்கள் பலருள்ளும் சு.சமுத்திரம் சமுதாய சிக்கலை இலைமைறை காய்ப்போல் அல்லாமல், அங்கை நெல்லியெனப் பளிச்சிடக் கொணர்வதை அறிந்தேன். என் உணர்வுக்கு ஏற்றாற் போலவே அவருடய வேரில் பழுத்த பலாவும் சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றது. அவருடைய இன்னொரு நூலாகிய நெருப்புத் தடயங்கள் என் நினைவுக்கு வந்தது. நெருப்புத் தடயமும் வேரில்பழுத்த பலாவைப் போலவே சிறந்தது என எண்ணியதால், அப்புதினத்தின் சிறப்புக் கூறுகளான உரையாடல், மொழி நடை போன்றவை கதையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் அவ்வாறு அமைய வேண்டியதன் அவசியம் என்ன என்பதையும், அது ‘நெருப்புத் தடயங்கள்’ என்னும் புதினத்தில் எங்ஙனம் அமைந்துள்ளது என்பதையும் ஆராய்ந்து விளக்கிக் கூறுவதே இவ்வாய்வின் நோக்கம்.
உரையாடல்
உலகம் இன்று துடிப்புடன் இயங்குகிறது என்றால் அதன் முக்கியகாரணம் ஒருவர் ஒருவரோடு மேற்கொள்ளும் கருத்துப் பரிமாற்றமே ஆகும். இந்தக் கருத்துப் பரிமாற்றம் உரையாடல்கள் மூலந்தான் நடைபெறுகிறது. அன்றாட மனித வாழ்வில் எவ்வாறு உரையாடல் இன்றியமையாத ஒரு இடத்தைப் பெறுகிறதோ அதுபோல் மனிதனால் படைக்கப்படும் அனைத்து இலக்கி;யங்களிலும் உரையாடல் அவசியமாகிறது. ஏனென்றால் இலக்கியம் என்பது, தான் வாழும் சமுதாயச் சூழல்களால் பாதிக்கப்பட்ட மனிதனால் அச்சமுதாயத்திலுள்ள பிற மக்களுக்காக அச்சமுதாயத்தை உணர்ச்சி மிக்க வார்த்தகளால் படைத்துக் காட்டுவதாகும்.
இலக்கியங்களில் வரும் உரையாடல்கள் பல வகையாக இருக்கும். சில இடங்களில் பாத்திரங்கள் தங்களுக்குள் உரையாடுவதாக அமையும். வேறு சில இடங்களில் பாத்திரங்களோடு உரையாடுவதாய் அமையும். இன்னும் சில இடங்களில் பாத்திரங்களுக்கும் வாசகர்களுக்கும் இடையில் உரையாடல் அமைவதாய் இருக்கும். இப்படி அமையும் உரையாடல்கள் இலக்கியத்தின் சிறப்புக்குத் துணை செய்ய வேண்டும். புதினத்தில் இடம்பெறும் உரையாடல்,