6ஆனால், இவை அனைத்தும், கிட்டத்தட்ட, நேற்றைய அரசியலாகின்றது. அதாவது, இவை அனைத்தும் ஒரு முனை உலக ஒழுங்கின், ஆதிக்கத்தை நிலைநாட்டும் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகவே இருந்துள்ளன. இன்றோ, நிலைமை வேறுபட்டுள்ளது. அமெரிக்கா, தானே ஏற்படுத்திய கடந்த கால ஒப்பந்தங்களில் இருந்தும் அமைப்புகளில் இருந்தும், தனது சர்வதேசிய போலிஸ்காரன் என்ற கடப்பாட்டில் இருந்து வாபஸ் வாங்கியும் வெளிக்கிளம்பி ஒதுங்கிக் கொள்ளும் சூழ்நிலையானது, இன்றைய உலகில், உருவாகி விட்டது.
உதாரணமாக, 2021இல், தனது முழு மூச்சில் ஏற்படுத்திய கால சுவாத்தியம் தொடர்பிலான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி கொள்வதாக 20.01.2025 இல் ட்ரம்ப் கைச்சாத்திடும் சூழ்நிலை தோன்றி விட்டது. (நான்கு வருடங்களில்).
இதனைப் போன்றே, அல்லது இதனை ஒத்ததாய், உலக வர்த்தக சந்தைக்கு (WTO) தான் வழங்க வேண்டிய பொருளாதார கடப்பாடுகளைத் தாமதித்து வழங்க போவதாகவும் இதேபோல் ஐக்கிய நாடுகளின் பல அமைப்புகளில் இருந்து விடைபெற்று கொள்வதாகவும் (UNESCO போன்றவை) அல்லது அவற்றின் பல அமைப்புகளுக்கு கொடுபட வேண்டிய நிதியைக் குறைத்தும் தாமதப்படுத்தியும் வழங்குவதாகவும் அல்லது UNHRC போன்ற மனித உரிமைகள் ஸ்தாபனத்தில் இருந்து 03.02.2025 முதல் முற்றாக விலகியும் தனது புதிய அரசியலை இன்று அமெரிக்கா கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
வேறு வார்த்தையில் கூறுவதானால், அமெரிக்கா தனது அரசியல் முகத்தையும் மீள வடிவமைக்க வேண்டிய தேவையை இந்த மாறிய உலகானது ‘உருவாக்கி’ உள்ளது எனலாம். இனியும் சர்வதேச போலிஸ்காரன் என்ற முகத்துடன் வலம் வராமல் புதிய அரசியல் முகத்தைத் தரிக்க அமெரிக்கா இன்று நிர்பந்திக்கப்பட்டுப் போகின்றது.
7
திருக்குறள் தொட்டு, மனு சாஸ்திரங்கள் வரையிலான படைப்புகள் அவ்வவ் கால ஆதிக்கச் சக்திகளுக்கு ஏற்புடையதாகவே தோற்றுவிக்கப்படுகின்றன. அரசன் உருப்படியாக ஆட்சி செய்ய வேண்டுமெனில், விவசாயி உருப்படியாக வார்த்தைப் பேசாது பயிரிட்டு வாழ வேண்டுமெனில் - இவர்கள் இருபாலாருக்கும் ஏற்ற வகையில், இவ் இருபாலாரையும் கட்டிக் காக்கும் நிகழ்ச்சி நிரலுடன் ஓர் கலைப்படைப்பு தேவையானதாகின்றது. இதுவரை இந்நிகழ்ச்சி நிரல்களின் கோட்டிலேயே தனது நிதி நிறுவனங்களின் நலனையும் அமெரிக்கா பொருத்தி வந்துள்ளதாக இருந்துள்ளது.
பேராசிரியர் அகிலன் கதிர்காமர் கூறுவார்: அமெரிக்கா UNHRC இல் இருந்து விடைபெற்ற பின், இதுவரை தொடர்ந்த அரசியலை, மேலும் தொடர்வது தமிழருக்கு பொருந்தாதது என.
இருக்கலாம். ஆனால், இது ஒரு பாரிய பனிப்பாறை தோற்றுவிக்கும் வெளிமுனை மாத்திரமே. அதன் அடியிலேயே பாரிய கப்பல்களையும் தகர்க்கக் கூடிய விடயம் மறைந்திருக்கின்றது.
பாறையின் பெயர் பல்முனை உலக ஒழுங்கு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.
8
உலகம் பெருமளவில் இவ்விதிகளின் வழியே பயணித்து கொண்டிருக்கும் போதே இரண்டு வெடிப்புகள் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பாரிய சத்தம் கொண்டு வெடித்தன. ஒன்று அமெரிக்காவின் உள்நாட்டு வெடிப்பு. மற்றது, வெளிநாட்டில், அமெரிக்க விருப்பு-வெறுப்புகளுக்கு மாறான வெடிப்பு.
சீனாவும் ரஷ்யாவும் அல்லது இதையொத்த வேறு நாடுகளும் தத்தமது மூலதன-தொழிநுட்ப-ராணுவ-உற்பத்தி-வர்த்தக மையங்களோடு போட்டியில் குதிக்கின்றன.
இவை, அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சினைகளுக்குப் புதிய வேகத்தைச் சேர்ப்பதாக அமைந்து விட்டன.
உள்நாட்டில், பழைய சிறைகளைப் புனரமைத்து கொள்வது முதல் உலக ஒப்பந்தங்களைக் கிழித்தெறிவது வரையிலான அமெரிக்காவின் முகமாறுதல், தெளிவுற மாறி வரும் உலகின் ஒரு காட்சி அங்கமாகவே இருக்கின்றது.
WTOவையும் தாண்டிய பொருளாதார தடைகளைத் தன்னிச்சையாகவும், உலக வர்த்தக சட்ட விதிகளைப் புறந்தள்ளியும், தனது சர்வதேச பொலிஸ்காரன் வேடத்தை கைவிட்டும், இன்று, போலிஸ்காரன் என்பவன் சர்வதேச பொறுக்கியாகத் தானே நாமம் சூட்டிக் கொள்வதும் நடந்தேறுகின்றது.
இந்நிலையில் தான், அதாவது ஒப்பந்தங்களும், நிறுவனங்களும், தர்ம பட்டுவாடாக்களும் (NGOக்கள் முதலானவை), மனித உரிமை கூக்குரல்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில்தான் அமெரிக்கா இன்று காசா படுகொலைகளுக்குப் பச்சைக்கொடி காட்டுவது முறைமையாகின்றது.
தர்மம் செய்வதும் அன்றி தனது விமானம்தாங்கிக் கப்பல்களைக் களமிறக்குவதும் அல்லது பொலிசின் குண்டாந்தடிகளைக் கொண்டு உலகை வலம் வருவதும் இனியும் தனக்குக் கட்டுப்படியாகப் போவதில்லை என அதன் உள்நாட்டு திறைசேரி விவகாரங்களும், டாலரின் தன்னிகரற்றச் செல்வாக்கும் காசடிக்கும் நடைமுறையும் கையை விரித்துவிட அமெரிக்காவின் அரசியல் முகமானது மேற்கூறியவாறு மாறுகின்றது.
காசாவின் படுகொலையின் பின்னணியில், இனி ஒரு இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவதும் அன்றி ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு இஸ்லாமிய கிளர்ச்சி நாட்டுக்கு ஒத்தாசை வழங்குவதும் சிரமமாகியது. எனவே, வர்ண புரட்சிகளை அல்லது இஸ்லாமிய புரட்சிகளை அல்லது குறுந்தேசியவாத கருத்துக்களை முன்னெடுப்பது இனி இடை நிறுத்தப்பட வேண்டி வருகின்றது. எனவே, இப்போது, நகர்வுகள் அல்லது அவை செல்லும் திசைகள் மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவை எழுகின்றன.
இம்மாற்றங்களின் முக்கிய பின்னணி, தனக்குப் போட்டியாக வந்துள்ள ஒரு சில நாடுகளின் மூலதனக் குவிப்பே அடிப்படையாகின்றது என்ற புரிதல் இன்றைய மாறிய உலக முகத்தைக் காட்டுவதாய் உள்ளது.
வேறு வார்த்தையில் கூறுவதானால், இப்போது, Multi Polar World Order என்பது தெளிவுடன் தொட்டுணரத்தக்க ஓர் உருப்படியாக மாறிவிட்டது எனலாம்.
9
கோவிட் பெருந்தொற்றும், பொருளாதார தடையும் பரஸ்பரம் பலமிழந்து போன நிலையில் தனது புதிய அரசியலுக்கு ஏற்றவாறு தேசங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடரவும் புதிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளவும் அமெரிக்கா ஓர் புதிய வரி விதிப்பைத் தந்ரோபாயமாகப் பாவித்து, அதற்கூடு தேவைப்படும் அழுத்தங்களைப் பிரயோகித்து, தேவைப்படும் பேச்சு வார்த்தைகளை தொடங்குகின்றது. ஆனால், மூலதனக் குவிப்புகளைப் பெருமளவில் குவித்துள்ள சீன-ரஷ்ய பொருளாதாரத்தை அல்லது அந்நாடுகளின் ராணுவ-விண்வெளி-தொழிநுட்ப வல்லமையோடு போட்டிப் போடும் சூழலானது இப்பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கவே செய்கின்றது. அதாவது, நாடுகளுக்கு ஒரு மாற்றுவழி கிட்டுவதாயுள்ளது. மூலப்பொருள்-வர்த்தகம்-மூலதனம்(கடன்கள்)-இவற்றை பெற்றுக் கொள்ள. வேறு வார்த்தையில் கூறுவதானால், இப்புதிய சூழல் ஒரு, இடையறா இழுப்பறியாகவே தொடரப் போகின்றது – யுத்தங்கள் ஒரு முடிவினைத் தராதவிடத்து.
அதாவது, ஆதிக்கங்களின் மாற்றம் என்பது வெறுமனே ஒரு ‘தேனீர் கோப்பை’ விவகாரமாக இருக்கப் போவதில்லை – சமயங்களில் பல யுத்தங்களையும் உள்ளடக்குவதாக இருக்கும் என்பதாகவே அகிலன் கதிர்காமரின் உரையும் அமைந்திருந்தது.
இது உண்மையாக இருக்கலாம்.
மக்களைப் பிளவு படுத்துதல் தொடர்பில், அமெரிக்காவின் ஆலோசனைகளை மோடி பின்பற்றலாம். ஆனால், அவர் அம்பானியினதும்-அதானியினதும் மூலதனக் குவியல்களைக் காப்பாற்றவே பதவி வகிக்கின்றார்.
எனவே, தற்போது ஒவ்வொரு நாடுகளுமே தமது யுத்த தயாரிப்புகளுக்காக ஒதுக்கும் நிதியையும் விண்வெளியில் நாளும் செலுத்தும் ராக்கட்டுக்களையும், செய்மதிகளையும் - இவற்றைப் பார்க்கும் போது, மேலும், உருவாகும் புதிய நவீன ஏவுகனைகள்-நீர்மூழ்கிக் கப்பல்கள்-விமானங்கள் இவற்றையும் பார்க்குமிடத்து, இவ் உண்மை, அதில் பொருள் கொண்டதாகின்றது.
ஐரோப்பிய யூனியன் தனது பாதுகாப்பு செலவீனங்களுக்காக இனி ஐந்து சதவீதத்தை அதிகமாகச் செலவிடப் போகின்றது என அண்மையில் அறிவித்திருந்தது. இரண்டு சதவீதத்தைத் தாண்டியதாக, இது என்றுமே இருந்ததில்லை. இவ் அதிகரிப்பானது, கிட்டத்தட்ட 928 கோடி டாலரைத் தாண்டிய ஒரு தொகை என கணிப்பிடப்படுகின்றது. இத்தொகையானது கல்விக்கும், மருத்துவத்திற்கும், மற்றும் இவற்றை ஒத்த ஏனைய மனித தேவைகளுக்காகச் செலவிடப்படலாமே என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஆனால், இதனைப் பார்க்கும் ஏனைய நாடுகளும் தமது பாதுகாப்பு செலவீனங்களைப் பரஸ்பரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
உதாரணமாக 2025 ஜுலை 23-27 வரை ரஷ்யா, பசுபிக்-ஆர்டிக்-பால்டிக்-கஸ்பியன் கடல்களில், 150 கப்பல்களுடனும் 120 விமானங்களுடனும் பத்து பல்வேறு கரையோர ஏவுகணை அமைப்புகளுடனும் நடத்திய பிரமாண்டமான ராணுவ ஒத்திகை இதற்கான கட்டியம் என வர்ணிக்கப்படுகின்றது. இதனுடன், தென்சீன கடலில் களமிறக்கப்பட்டுள்ள சீனத்தின் மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களும், 2030இல் சீனத்தின் மொத்த விமானம் தாங்கிக் கப்பல்களின் எண்ணிக்கை ஆறை தாண்டும் என்பதும் சேர்த்து வாசிக்கத்தக்கதுதான்.
இவை அனைத்தும், இழுபறி, இழுபறியாகவே தொடரப் போகின்றதா என்பதற்கான பதிலைத் தருவதாய் உள்ளது.
10
இவ்வகையில், அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய யூனியன் தலைவர்களின் சீன விஜயமும் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது. (24-26 ஜுலை 2025).
ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான கொடுக்கல்-வாங்கலின் வர்த்தக இழுபறி 2024இல் 300 கோடி டாலரைத் தாண்டியதாகக் காணப்பட்டது. அதாவது, ஐரோப்பிய நாடுகளின் சீன இறக்குமதி 213.2 கோடி டாலராக இருக்கும்வேளை ஐரோப்பிய நாடுகளுக்கான சீன ஏற்றுமதியானது 519 கோடி டாலராக இருந்தது.
இந்தச் சூழலை மாற்றியமைக்க சீனமே வழிவகைகளை எடுத்துரைக்க வேண்டும் என உர்சுலா (ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவி) கோர, அவரது பின் மண்டையில் சீனத்தின் அரிய தாது பொருட்கள் சம்பந்தமான வர்த்தகம் கப்பி போயிருந்தது. இதனை விடுத்து, அவர் சீனா, இனி, இறைச்சி-மருந்துவகை-அலங்கார பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதிகளைக் கூட்டட்டும் என்று யோசனை தெரிவித்தார். இதேவேளை ஐரோப்பிய யூனியன் ஆணைக்குழுவின் தலைவர் கொஸ்டாவின் முழக்கமோ ரஷ்யாவுக்கு எதிரான போர் கொடியை நீட்டிப் பிடிப்பதாகவே இருந்தது. (ரஷ்ய-சீன வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் சென்ற கட்டுரைத் தொடர்களைப் பார்க்கவும்). ரஷ்யா ஓர் ஆக்கிரமிப்பு நாடு எனவும், அது என்றும் ஐ.நாவின் சட்டதிட்டத்தைச் சட்டை செய்வதில்லை எனவும் சீனா அது சரியான வழிக்கு வரத் தகுந்த அழுத்தம் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
வேறு வார்த்தையில் கூறுவதானால், இப்பேச்சுவார்த்தையானது முற்றாய் ஒரு வர்த்தக பேச்சுவார்த்தை வடிவில் இடம் பெறாது ஒரு அரசியல் இழுபறியையே காட்டுவதாய் இருந்தது என்பது தெளிவு. அதாவது, விதண்டாவாதம் என்பது ஆரோக்கியமான பேச்சுவார்த்தைக்கான அடிப்படைகளை என்றும் தரப்போவதில்லை என்பது அறிந்த ஒன்றே.
எனவே, எதிர்பார்த்ததைப் போல், பேச்சுவார்த்தையானது குறிப்பிட்ட கால அளவினை விட விரைவாகவே முடிக்கப்பட்டது. XI, தான் பேச விரும்பியவற்றில் பாதிக்கு மேலானவற்றைப் பேசாமலேயே விட்டு விட்டார் என்பதும் தகவலாயிற்று. பேச்சுவார்த்தைகளுக்காக இரண்டுநாள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், சீனாவின் வேண்டுகோளின்படி, இது ஒரு நாளாகக் குறைக்கப்பட்டது. போதாதற்குப் பேச்சுவார்த்தை மண்டபத்துக்கு வருகை தந்த உர்சுலா-கொஸ்டா குழுவினரை, காரில் தானும் ஏற்றி வராமல், வெறும் பஸ்ஸில் புளி மூட்டைகளை அடைத்து வருவது போல் அடைத்து வந்தது வேறு, மேற்கத்தைய ஊடகங்களால் கடுமையாகச் சாடப்பட்ட ஒன்றாகியது. ஆனால் உர்சுலா அவர்கள், இந்தக் கதை முடிய நேரடியாக ட்ரம்பை காணப் புறப்பட்டு போனதும் அங்கே வரியை 27 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்துள்ளதும் ஒரு கதையானது. (இவர்களுக்கான சீன வரவேற்பையும் சீன உபசரிப்பையும் பார்க்கும் போது இக்கதை, ஏற்கனவே தெரிந்த கதைத்தான் எனச் சீனா ஏற்கனவே அறிந்திருந்ததை போல் இருந்தது).
வேறு வார்த்தையில் கூறுவதானால், G -20 மாநாட்டின் போது, கனடா திட்டமிட்ட ரீதியில், ஊக்குவிக்கப்பட்டு சீனத்து ஜனாதிபதி XIக்கு எதிராக நடந்து கொண்ட நடத்தையின் தொடர்ச்சியையே இன்று சீனத்திலும் அரங்கேறியதை நாம் காணக்கூடியதாக இருந்தது. அதாவது, உர்சுலா-கொஸ்டாவின் சீன பேச்சுவார்த்தையானது, அமெரிக்காவின் வழிகாட்டலில், அல்லது அதனது ஆசிர்வாதங்களுடனேயே இடம் பெறுகிறது என்பது வெளிச்சமாகியது.
இதுபோக, ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே சீனத்துக்கு எதிராய் தனது வரிவிதிப்பை வரலாறு காணாத வகையில், 20.6 வீதத்தில் இருந்து 66.7 வீதம் வரை, 28.04.2025 முதல் விதித்து விட்டது. அதாவது, அழுத்தத்தைத் தந்து பேச்சுவார்த்தையை நடத்தும் அமெரிக்க பாணியையே ஐரோப்பிய யூனியனும் கைகொண்டது. எனவே, பஸ்ஸில் புளிமூட்டையை ஏற்றி வருவதற்கு இதுவும் ஒரு காரணமாய் அமைந்தது என்றால் அது மிகையாகாது.
இந்நிகழ்வுகள் அனைத்தும் ஓர் அமெரிக்க-ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கிடையிலான இறுக்கமான ஒத்துழைப்பையும் கூட்டுணர்வையும் காட்டுவதாய் உள்ளன. அப்படியெனில் அமெரிக்கா இறுதியாக ஒரு Multi Polar World Orderக்கு தன்னைத் தயார்ப்படுத்தி உள்ளது என்பது தெளிவாகத் தெரிய வருகின்றது.
11
ஆனால், இம் Multi Polar World Orderஆனது வடக்கு நாடுகளுக்கு மாத்திரமே உரித்தானதாகுமா என்பதே கேள்வியாகின்றது. அதாவது, அமெரிக்கா தனது Uni Polar World ஒழுங்கின் ஆதிக்கத்தைக் கைவிட்டு, வடக்கின் நாடுகளுக்கு மாத்திரமே பொருந்தக்கூடிய-அதாவது ஐரோப்பிய-அமெரிக்க-ஆங்கிலேய நாடுகளுக்கிடையிலான Multi Polar World Orderஐ பிரயோகிக்க முடிவு செய்து விட்டதா என்பதும், இவ் வடநாடுகள் இனி, தெற்கு நாடுகளை அதாவது சீனா-ரஷ்யா-ஆப்ரிக்கா-பிறேசில்-இந்தியா போன்ற தெற்கு நாடுகளை இதற்கூடு ஆளவும் கட்டுப்படுத்தவும் முயற்சிக்கக் கூடுமா என்பதும் கேள்வியாகின்றன.
இந்நிலையிலேயே, ரஷ்யா எலன் மஸ்கின் எட்டு ஸ்டார்லிங் (STAR LINK) நிலையங்களைத் தகர்த்து விட்டதாகச் செய்தி வெளிவந்துள்ளது (28.07.2025). வேறு வார்த்தையில் கூறுவதானால், எலன் மஸ்க், ட்ரம்பிடம் இருந்து பிரிந்து விட்டார் - அல்லது ட்ரம்புக்குப் போட்டியாக இன்னுமொரு கட்சியைத் தொடங்கி விட்டார் என்ற கதைகள் எதனையும் புட்டின் நம்புவதாக இல்லை என்பதைக் காட்டுவதாக உளது. ஆனால், இவை அனைத்தும் நாடுகளின் புதிய நகர்வுகளையே எமக்கு காட்டுவதாயுள்ளன.
அதாவது, நாடுகளுக்கிடையேயான இவ் இழுபறியானது, தெரிந்தோ தெரியாமலோ, ஓரு யுத்தத்தை நோக்கி மெல்ல மெல்ல பிரஞ்ஞையற்று நகர்வதாகவே தென்படுகின்றது. ஆதிக்கச் சக்திகள் கைமாறும் போது, இது இயல்பானது, என்பார் உரைஞர்.
இனி, இந்த மாற்றங்களை உள்வாங்காமல், முள்ளிவாய்க்கால் அவலம் தொடக்கம் பல தசாப்தங்களாகச் சர்வதேச சமூகத்திடம் - முக்கியமாக சர்வதேச போலிஸ்காரனிடம்- நீதியைக் கோரி கையேந்தும் எமது தமிழ்ச் சமூகம், தெற்காசியாவில் தனது அரசியலை இப்போதாவது மாற்றாவிடின் வேதனைகளை அனுபவிப்பது இனியும் தொடரும் என நாம் எதிர்பார்க்கலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.