நாங்கள் யப்பான் போகும் போது எனது மகன் கேட்ட விடயம் ‘’ யமசாகி 12 வருடங்கள் (Yamazaki 12 Year Old Single Malt Japanese Whisky)’’ வரும்போது வாங்கி வரும்படிகேட்டான். விலையைப் பார்த்துவிட்டு ‘’ இது அதிகமானது’’ என்றபோது ‘’ யப்பானில் மலிவாக கிடைக்கும்’ என்றான்.
அதைப்பற்றி அறிவதற்கு கூகிளில் பார்த்தபோது மற்றைய புகழ்பெற்ற ஜப்பானிய மதுக்கள் எல்லாம் அரிசியிலிருந்து வடிக்கப்படுவன. ஆனால், இது மட்டும் பார்லியிலிருந்து வடிக்கப்பட்டு, செப்பு கொள்கலத்தில் வைத்து ஆவியாக்கப்பட்டு, மீண்டும் வரும் அல்ககோலில் மலையிலிருந்து வரும் நீர் கலக்கப்படுகிறது . இந்த முறையை ஸ்கொட்லாந்தின் வெளியே யப்பானியரால் மட்டுமே கையாண்டு தயாரிக்கப்பட்டது. அத்துடன் இந்த விஸ்கியில் மலையிலிருந்தவரும் நீருடன் சில பழங்களின் வாசனை சேர்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஸ்கொட்லாந்தில் விஸ்கியை பற்றியும் அயர்லாந்தில் பியரைப் பற்றியும் அறிந்ததுடன், அவர்கள் தயாரிப்பதை சென்றும் பார்த்தேன். எனது முதுநிலைப் படிப்பில் (Applied biotechnology) இதை ஒரு பாடமாகச் செய்ததால் என்னை அறியாது அல்ககோல் தயாரிப்பில் ஒரு கவர்ச்சி உள்ளது.
மனித வரலாற்றின் ஆரம்பத்தில் வலி நீக்கும் நிவாரணியாகப் உலக மக்களால் பாவிக்கப்பட்டது பியரே (நாம் கள் பாவித்தோம்). ஓபியம் எனப்படும் அபின் பாவனைக்கு வரும்வரையில் சாதாரண மக்களுக்கு பியரே கிடைத்தது . 7000 வருடங்கள் முன்பு சீனாவில் பியரை வடித்த கலங்களையும் மற்றும் வடித்த பொருட்களை ஒரு கிராமத்தில் கண்டுபிடித்தார்கள் .
எகிப்து மற்றும் மொசபத்தேமியாவில் பியர் பாவிக்கப்பட்ட ஆதாரங்கள் இருந்தது . எகிப்திய அருங்காட்சியகத்தில் பியரை வடிக்கும் பெண்ணின் சிலையையோ படத்தையோ பார்த்த ஞாபகம் எனக்கு உள்ளது . அதைவிட பாபிலோனியர்களுக்கு, அரசன் பியரை ரேசனில் கொடுத்தாகவும் , எகிப்தில் பிரமிட் கட்டும் தொழிலாளர்களுக்கு வேதனமாக அளித்த உணவில் ஒரு பகுதியாக இருந்தது என்கிறார்கள். எங்கெல்லாம் விவசாயம் நடந்ததோ அங்கெல்லாம் கோதுமை பார்லியை நொதிக்க வைத்து பியர் செய்தார்கள். மனித குல வரலாற்றில் பெரும்பான்மையான காலமாக பியர் ஒரு வித இனிப்பான பானமாகவே இருந்தது. நமது புராணங்களில் உள்ள பழங்களில் இருந்து பெற்ற சோமபானமும் அதுவே. பழரசம் பாதி நொதித்து அல்ககோலாகவும் மீதி இனிப்பாகவும் இருந்தது. பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் ஹொப்ஸ் ( Hops) என்ற கசப்பான மலரைப் போட்டு பியரை கசப்பாக்கினார்கள். ஆரம்பத்தில் பியர் நமது எலிபன்ட் பிராண்ட் சோடாபோல் இருந்தது என்றால் நம்மில் எவரும் நம்பமாட்டோம்
காலையில் எங்களுக்கு யப்பானியர்கள் சாகே (Sake )- எனப்படும் அரிசியில் இருந்து பியர் தயாரிக்கும் அருங்காட்சியகத்திற்கு ( Hakutsuru brewery museum) அழைத்துச் சென்றார்கள். இது ஒரு காலத்தில் பாரம்பரிய முறையில் சாகே தயாரித்த இடம் . ஆனால் தற்போது இயந்திரங்கள் வந்ததால் பெரும்பாலான வேலைகள் தற்போது இயந்திரமயமாக்கப்பட்டு வேறு இடத்திற்கு போய்விட்டது. இந்த பழைய மாடி கட்டிடத்தை உல்லாசப்பிரயாணிகள் மற்றும் மாணவர்களுக்கு காட்சிக்காக வைத்திருக்கிறார்கள் . இங்கு சாகே மது விற்பனை செய்கிறார்கள் .
சாகே தயாரிக்க விசேடமான அரிசி அதிக மாசத்து கொண்டது அதை விசேடமாக பயிரிடுவார்கள் . சாகே பியர் இனிப்பானது . இங்கு அதிகம் கொப்ஸ் (Hops) இல்லை .
சாகே பியருக்கு விசேடமாக விளைவிக்கப்பட்ட அரிசி, மிகவும் தீவிரமாகத் தீட்டப்பட்டுக் கழுவியபின் ,ஆவியில் அவிக்கப்படும். அதன்பின்பாக கொஜி (Koji) எனப்படும் சிறிய காளான் (Fungus) தொற்றிய அரிசியையும் ஈஸ்ட்டையும் சேர்த்து பெரிய கலத்தில் நொதிக்க வைப்பார்கள். கிட்டத்தட்ட முப்பது நாட்கள் நொதித்தல் நடக்கும். அதன்பின் வடித்து, பின்பு (Maturation process) ஆறு மாதங்கள் அதைப் பாதுகாப்பார்கள் , அதன்பின் மீண்டும் வடித்து போத்தலில் அடைக்கப்படும் .
ஒரு விதத்தில் சாகே, வையினுக்கும் பியருக்கும் இடையிலானது அதனது அல்ககோல் அளவு 15 - 20 வீதத்திற்கு செல்லலாம் . இந்த இடத்தில் எங்களுக்குக் குடிக்கத் தந்தார்கள்: காலைப் பொழுதானதால் நான் வாயில் வைக்கவில்லை.
எல்லோரும் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து வாசலில் காத்திருந்த போது எங்களுடன் வந்த ஐம்பது வயதான, ஆறு அடி உயரமானவர், காட்டில் வெட்டிய மரமாக, ஒலி எழுப்பியபடி நிலத்தில் சரிந்தார் . ஆரம்பத்தில் நான் நினைத்தேன்: சாகே அதிகம் குடித்து விட்டார் என்று. ஆனால், அவரருகே சென்று சியாமளா கையை பிடித்து பார்த்தபோது, அவர் எழுந்து ‘தனது சுவாசத்தில் பிரச்சனை’ என்றார். மேலும் அன்ரி பயட்டிக்கில் இருப்பதாகச் சொன்னார். அவருடன் வந்த மனைவி , மகள், அவளின் காதலன் அந்த இடத்தில் முழித்தார்கள். அவர்களுக்கு ஏதாவது உதவி பெற யப்பானிய மொழி தெரியாது. நான் ஓடி சென்று எமது வழிகாட்டி ரிச்சாட்டிடம் கூறியபின் அம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. நல்ல வேளையாகப் பெரிதாக எதுவுமில்லை. ஆனால், அதன்பின்பு எங்கள் குழுவிலிருந்த எல்லோருக்கும் இருமல் தொற்றிக் கொண்டது.
மதியத்தில் நாங்கள் யப்பானில் உள்ள புல்லெட் ரயிலில் அரைமணி நேரம் பயணம் செய்ய முடிந்தது. நாங்கள் இருக்கைகளைத் தேடிப் பிடித்து அமர்த்த சில நிமிடங்களில் இறங்குமிடம் வந்துவிட்டது. 280 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் போவது தெரியவில்லை. அதாவது இதில் போகும்போது வெளிப்புறக் காட்சிகள் அனுபவிக்க முடியாது .
50 வருடங்கள் மேலாக யப்பானில் உள்ள இந்த ரயிலில் எந்த பயணிக்கும் மரணம் சம்பவிக்கவில்லை என்றார் எங்கள் வழிகாட்டி. நான் அதை நம்பாது கூகுளில் பார்த்தபோது அந்த கூற்று உறுதிப்படுத்தியது. தன்னியக்கமான விபத்து கட்டுப்பாடு (Automatic Train Control) இந்த ரயில்களில் உள்ளது ரயில்கள் இவற்றுக்கான பிரத்தியேக பாதையில் ஓடுகின்றன.
வியாபாரம் செய்பவர்கள் நகரங்களிடையே பயணங்களைச் செய்வதற்காக இந்த புல்லட் ரயில்கள் வந்தன. விமான பணத்தின் செலவிலும் அதிகம் என்கிறார்கள்.
- புல்லெட் ரயில் -
புல்லட் பயணத்தின் இறுதியில் நாங்கள் போனது ஒரு குன்றின் உச்சியில் உள்ள பெரிய கோட்டை. அதை கிமிஜி (Himeji Castle) கோட்டை என்பார்கள். இதுவே யப்பானில் உள்ள பெரிதானதும் அதிகமானவர்கள் செல்லும் கோட்டை யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த கோட்டை, யப்பானின் மூன்று முக்கிய கோட்டைகளில் ஒன்று.
14ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் இந்தப் பகுதியை ஆண்ட குறுநில மன்னரால் கல், மரம் எனக் கலந்து கட்டப்பட்டது. பிற்காலத்தில் இந்த கோட்டை படைவீரர்கள் தங்குமிடமாகப் பாவிக்கப்பட்டது. மூன்று அகழிகள் அமைத்துப் பாதுகாப்பானது . இந்த கோட்டை பற்றிப் பல தொன்மையான கதைகள் உள்ளன. இந்த கோட்டையின் உள்ளே ஏறிப் பார்த்தபோது ஐரோப்பியர்களது கோட்டை அமைப்பைவிட எவ்வளவு வித்தியாசமானது எனப் புரிந்து கொள்ள முடியும் . வளைவுகள் மூலைகள் சிறிய பொந்துகள் எனப் பல பாதுகாப்புகளை ஏறும் வழியெங்கும் கொண்டது . 1945 அமெரிக்கர்கள் போட்ட குண்டு ஒன்று வெடிக்காததால் இந்த கோட்டை அழிவிலிருந்து தப்பியது .
பல யுத்தங்கள், பூகம்பங்களிலிருந்து தப்பிய இந்தக் கோட்டையில் பல ஜப்பானியப் படங்கள் எடுக்கப்பட்டது . ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் (You only live twice) இங்கு சில காட்சிகள் எடுக்கப்பட்டன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.