- புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழர்களின் , அவர்கள்தம் அடுத்தடுத்த தலைமுறையினரின் வாழ்க்கை ,இவை எவ்விதம் புகலிடச் சூழலில் நிலவும் சமூக, பொருளாதார, அரசியற் சூழலின் தாக்கங்களுக்கு உள்ளாகின்றன, அவை எவ்விதமான பாதிப்புகளை முதலாவது தலைமுறையினருக்கு ஏற்படுத்துகின்றன என்பதை இக்கதை ஆராய்வதை நவஜோதி யோகரட்னத்தின் இந்தக் குறிப்பிலிருந்து உணர முடிகின்றது. இழந்த மண்ணின் சமூகக் கட்டமைப்புகளை, அபிலாசைகளைச் சுமந்து வந்து புதிய இடங்களில் நட்ட , முதலாவது தலைமுறையினரின் மன உணர்வுகளை மேற்படி கதை விபரிப்பதையும் உணர முடிகின்றது. - பதிவுகள்.காம் -
நல்ல புத்தகம் ஒன்று வாசகனின் கையில் வந்துவிட்டால் அடுத்த நிமிடமே அதற்கொரு உயிர் வந்துவிடும். எல்லாக் காலகட்டத்திலும், புறக்கணிப்புக்கள் மத்தியிலும் கதைகள்தான் எம்மோடு பேசக் காத்திருக்கின்றன. புத்தகங்கள்தான் அத்தகைய அந்தரங்கமான விடயங்களையும் நினைவுகளினூடாக எமக்குப் பரிசளிக்கின்றன. கதைகளுக்கு இதயம் இருக்கிறது என்று நம்புகின்றேன்.
தத்துவப் புத்தகங்களை படிக்கும்போது என்னுள் ஓசையை எழுப்பாது சத்தமில்லாமல் படித்து சத்தமில்லாமலே போய்விடுகின்றன. ஆனால் கதைப்புத்தகங்கள் என்னுள் துணிச்சலுடன் ஒரு கலகக் குரலாகித் தொனிக்கிறது. பொதுவாக எல்லாப் படைப்பாளிகளும் தனது காலகட்டத்தில் செல்லாத காசாகவும் பல காலங்களுக்குப் பிறகு அவர்கள் அரிய பொக்கிஷங்களாகவும் மாறிவிடுகின்றார்கள். இத்தகைய பல படைப்பாளிகள் வெளிச்சம் காட்டுவதை நான் அவதானித்து வந்திருக்கிறேன். வாழ்க்கை பற்றிய பாடத்தை இத்தகைய படைப்பாளிகளால்தான் காட்ட முடிகின்றது. படிப்பது கதையை அல்ல நிஜவாழ்வின்; மாற்றங்கள் பற்றிய தெளிவை நம்முள் உணர்த்துகிறது.
அந்த வகையில் சற்று வித்தியாசமாக ‘புலம் பெயர்ந்தவனின் கனவுகள்;’ என்ற ஜோர்ஜின் சிறுகதை என்னுள் பேசியது.
ஊருக்கும் நாட்டிற்கும் பெரும் சேவையாற்றிய பெரும் மனிதரை இழந்து நிற்கின்றோம். மேடையில் இரங்கலுரை வழங்கிய ஒருவர் தழுதழுத்த குரலில் உரையாற்றிக் கொண்டிருந்தார் என்று ஜோhஜ் கதையை ஆரம்பிக்கின்றார். எனக்குத் தவன் என்பவரை முப்பத்தைந்து வருடங்களாகத் தெரியும். தவன் இலங்கையின் வடக்குப் பகுதியல் இருந்து எமது நாட்டிற்குப் புலம் பெயர்ந்து வந்தவன். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரினால் உயிருக்குப் பயந்து இலங்கையைவிட்டு வெளியேறியதாக அடிக்கடி கூறிக்கொள்வான். தவன் தனது மனைவியுடனும் இரண்டு பிள்ளைகளுடனும் எமது நாடான நியூசிலாந்திற்குக்; குடியேறியிருந்தான். அந்த நேரத்தில் இலங்கையிலிருந்து வருகை தந்தோர் பெரும்பாலாக வைத்தியர்களும், பொறியியலாளர்களும் ஆக இருந்தனர். அவர்களுக்குக் கூடத் தகுந்த வேலை வாய்ப்புகள் எமது நாட்டில் வந்தவுடன் கிடைக்கவில்லை. இதனால் அதிகமானோர் ‘பீசாகட்’, ‘பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் வேலை செய்தனர்.
இதற்கு வித்தியாசமாக தவனுக்கு அவன் குடியேறிய மிகக் குறுகிய காலத்தில் எமது நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்தது. ஆரம்பத்தில் அவனது ஆங்கிலத்தைப் புரிவது சிரமமாகவிருந்தது. பின்னர் அதற்கு என்னைப் பழக்கப் படுத்திக்கொண்டேன். எனது நிறுவனம் இயந்திரங்களைத் தயாரித்து பால்மா வெண்ணெய், சீஸ் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளுக்கு வழங்கிக் கொண்டிருந்தது. தவன் இயந்திரங்களை வடிவமைக்கும் ஒரு பொறியியலாளராக வேலை செய்தான். அவனது வேலை அலுவலகத்தில் இருந்தாலும், அடிக்கடி தொழிற்சாலைக்குச் சென்று இயந்திரங்கள் தயாரிப்பதைப்பார்வையிட வேண்டிவரும்.
தவனின் இறுதிச் சடங்கின்போது ஒருவரின் உரையிலிருந்து ஆரம்பிக்கும் கதையாசிரியர் கதையை வளர்த்துச்சென்று முடிக்கும் விதம் தத்ரூபமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. புலம்பெயர்ந்து ஒரு நிறுவனத்தில் தவன் இரவு பகலாக ஒய்வுவின்றிய வேலைகளில் ஈடுபடுகின்றான். பிள்ளைகளைச் சிறப்புடன் படிப்பித்து நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற மிகப் பெரும் ஆசைதான்; புலம்பெயர்ந்த ஒவ்வொரு பெற்றோரின் கனவுகளாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவ்வண்ணமே இக்கதையில் ‘தவன்’ என்ற தந்தையும் தன்னை வருத்தி உழைக்கின்றான். இந்தக் கதையை கதையாசிரியர் சமகாலத்தில் இடம்பெற்று வரும் நிகழ்வுகளைத்தான் கதைக்கருவாக்கி நகர்த்தும் பாணி வாசகனைச் சிந்திக்க வைக்கின்றது.
தவனுக்கு மூன்றாவது மகனும் பிறந்தான். உண்மையில் தவன் தனது குடும்பத்தில் பற்றும் பாசமும் வைத்திருந்தான்.
வழமையான எமது பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள். வைத்தியராக வரவேண்டும், பொறியியலாளராக வரவேண்டும் அல்லது ஒரு கணக்காளராக வரவேண்டும் என்பதே எமது தமிழ் மக்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால் வேலை வேலை என்று பெற்றோர்கள் ஓடித்திரிவர்கள்.
தவனும் அதற்கு விதிவிலக்கில்லை. தனது மூன்று பிள்ளைகளும் வைத்தியராக வந்து தமிழ்ப்பெண்களைத் திருமணம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பிள்ளைகளை வளர்த்து வந்தான். தவனுக்குத் தான் பதவியிலும், சமூகத்திலம் உயரவேண்டும் என்ற பேரவா. தந்தையான ‘தவன்’ ஓய்வு ஒளிச்சலின்றிய அயராத உழைப்பு. பணமும் பல வழிகளில் வந்து சேர்ந்தன. சமூகத்தில் உயர் மட்டத்தில் இருந்தவர்கள் அவனுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினர். தொழில் அதிபர்கள், அரசியல் வாதிகள் எனப் பல தொடர்புகள் அவனுக்குக் கிடைத்தன.
தவன் தனது முன்னேற்றம், தனது குடும்பத்தின் முன்னேற்றம் எனக் கருதினான். தனது சமூக அந்தஸ்தின் உயர்வு தனது குடும்பத்தின் உயர்வு எனவும் கருதினான். ஆனால் அதற்கான கடின உழைப்பு ஒன்றுக்கொன்று முரண்பாட்டைத் தோற்றுவித்திருக்கின்றன என்பதை அவன் உணரவில்லை. தவனுக்கு அவனது மனைவியுடனும் மகன்மார்களுடனும் செலவழிக்க நேரம் கிடைக்கவில்லை. மனைவிக்கு அவளின் நிஜங்கள் அளிக்கும் சந்தோஷத்தைவிட அவளின் நினைவுகள்தான் அவளுக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்திருக்க வேண்டும். நிலையில்லாத நிஜங்களை அவள் தன்னுள் நிறுத்திப்பார்த்து அழியாத நினைவுகளால் தன்னை ஆசுவாசப்படுத்தினாள். காலப்போக்கில் தவனின் மனைவி தனது பெரும்பாலான நேரத்தை ஒரு இந்துக் கோவிலுக்குச்சென்று, அங்கு உதவி செய்யும் நோக்குடன் பலவிதமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்துவதில்தான் கழி;த்தாள்.
தவனின் முதலாவது மகன் வைத்தியத்துறையில் தவனின் வற்புறுத்துதலின் பேரில் படித்தான். ‘நீங்கள் நினைத்தபடி இதோ நான் டாக்டராக வந்து விட்டேன். ஆனால் நான் டாக்கடராக வேலை செய்யப் போவதில்லை’ என்றுவிட்டு அவன் இசைத்துறையில் நுழைந்து ஒரு பாடகனாகத் திகழ்ந்தான். தவனின் அந்த முதலாவது மகனோ இசைத்துறையில் முன்னேறி நியூசிலாந்திலேயே மிகச்சிறந்த ஒரு பாடகனாகத் திகழ்ந்தான். ஆனால் இசைத்துறை பொதுவாக மதுவுக்கும், போதை மருந்திற்கும் பெயர் போனது என்று கூறுவார்கள். ஒரு நிகழ்ச்சியில் பாடி முடித்துவிட்டு வந்து படுத்தவன் எழுந்திருக்கவில்லை. அளவுக்கு அதிகமான போதை மருந்துப் பாவனை காரணமாக இறந்துபோனான். தவனின் வாழ்க்கையில் அது ஒரு பேரிடி. தவனின் மனைவி இந்தக் கொடிய வேதனையான கவலையால் பாரிசவாதம் வந்து சிலகாலம் படுக்கையிலிருந்து இறந்து போனாள்.
இரண்டாவது மகன் பொருளாதாரத்துறையில் படித்து ஒரு ஆலோசகராக வேலை செய்தான். அவன் ஒரு ஐரோப்பிய பெண்ணைத் திருமணம் செய்துவிட்டு
ஒரு குழந்தை பிறந்தவுடன் சில வருடங்களின் பின் விவாகரத்தச் செய்துவிட்டு இன்னொரு சீனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு ஏற்கனவே மணமாகி இரண்டு பிள்ளைகள் இருந்தன.
மூன்றாவது மகன் ஃபஷன் இன்டஸ்றியலில் தலைமுடி அலங்கரிப்பாளராக வேலை செய்தான். அவன் ஒரு ஓரினச் சேர்க்கையாளன். அவன் இன்னொரு ஆண் மகனை நியூசிலாந்துச் சட்டத்தின்படி மணந்துகொண்டான். அவர்கள் ஆபிரிக்க வறிய நாடொன்றிலிருந்து இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.
இது தவனுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. கடின உழைப்புடன் வேகமாக முன்னேறி பதவி பணம் அந்தஸ்து என்பவற்றையடைந்த தவன், தனது கடைசிக் காலத்தைத் தனிமையில் ஒரு வயோதிப மடத்தில் கழித்துக் கடைசியில் இறந்துபோனான்.
தவனின் இறுதிக் காரியங்கள் தமிழ் முறைப்படி நடந்துகொண்டிருந்தன. தவனின கால்மாட்டில் அவனது மனைவியின் படமும் மூத்த மகனின் படமும் வைக்கப்பட்டிருந்தன. வலது புறத்தில் இரண்டாவது மகனும் அவனது தற்போதைய சீன வம்சாவழி மனைவியும் அவளது இரண்டு பிள்ளைகளும் நின்று கொண்டிருநதார்கள். சற்றுத் தூரத்தில் அவனது ஐரோப்பிய முதல் மனைவியும் அவனது குழந்தையும் நின்று கொண்டிருந்தார்கள். தவனின் இடது புறத்தில் அவனது மூன்றாவது மகனும் அவனது துணைவனும் அத்தோடு அவர்கள் தத்தெடுத்த ஆபிரிக்கக் குழந்தைகளும் நின்றுகொண்டிருந்தார்கள். தவனின் உடல் அந்த மின்சார எரிப்பகத்தில் வெந்து சாம்பலாகப் போயிற்று என்று ஜோர்ஜ் கதையை நிறைவு செய்கின்றார்.
இதுதான் இன்றைய மனித வாழ்க்கையில் இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். மாற்றங்கள் அடைந்துவரும் உலகில் மனித வாழ்க்கையும் கலாச்சாரங்களும் மாறி மறைக்கப்பட்ட சுவர்களுக்கிடையில் சிக்கித் தவிக்கின்றது. எனவே வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோமே ஏன்று இக்கதை உணர்த்துகின்றது.
நாம் யாருக்கு உதவி செய்தாலும், எமக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை. அதனைவிட யாருக்கு நாம் உண்மையாக இருந்தாலும் முதலில் ஏமாற்றப்படுபவர்கள் நாமே! நாம் யாருக்கும் நல்லது நினைத்தாலும் எமக்கு நல்லது நடக்கிறதா? நன்றி இல்லாத இநத மனிதர்களிடத்தில் நன்றியை எதிர்பார்க்க முடியாதுதானே! இப்படியாகப் பல கேள்விகளை நம்முள் தொடுத்துக் கொண்டிருக்கின்றது. இன்றைய தலைமுறையினரிடம் திருமணம் பற்றிய கதையை பெற்றோர்கள் எடுத்தால் அது ஒரு தேவையில்லாத வாழ்க்கையையெல்லோ நிங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்கின்றார்கள். அழகு என்று சொல்லிக்கொண்டு எடைக் குறைப்பும் உடற்பயிற்சியும் செய்து கொண்டிருக்கிறார்கள இன்றைய இளையவர்கள்.
‘அழகு வேறு ஆரோக்கியம் வேறு. திடகாத்திரமாக இருப்பதற்கு நல்ல உணவை உண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பெண்கள் கூடுதலாக உடலின் ஆரோக்கியத்தைக் கவனிக்கவேண்டும்’ என்றால்.
‘என்ன ஆரோக்கியமாக இருந்து உங்களைப்போல பிள்ளைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?’ என்கின்றார்கள்.
இன்றைய தலைமுறையினர் புலம்பெயர்ந்து படித்துப் பட்டம் பெற்றதோடு தொழில் நுட்பங்களும் பிடிபட தமது பெற்றோரையே ‘நீங்கள் எல்லாம் பழைய காலத்து மனிதர்கள்’ எங்களுடைய வாழ்க்கை வேறு உங்களுடைய வாழ்க்கை வேறு என்றெல்லோ போதிக்கிறார்கள்.
பிள்ளைகள் எதைக் கூறினாலும் பெற்றோருக்கு பிள்ளைப் பாசம் விட்டுப் போகுமா?; பழைய பாசம் புதிய பாசம் என்று ஒன்று உண்டா?
‘தோல்வியடைவதற்கு நான் வருத்தப்படவில்லை. ஆனால் நான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்த பிறகு வரும் தோல்விக்கு நான் கவலைப்படுவதில்லை’ என்று ஆபிரகாம்விங்கன் சொல்லிச் சென்றதை அதிகமான பெற்றோர்கள்; மாற்றங்களைப் புரிந்து மகிழ்வதாக எனக்குத் தோன்றுகின்றது.
.
கதை என்பது வாழ்வின் ஆவணம். கதைகளிடம் நாம் கற்போம்!
:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.