2021இல் பதினொரு மணிநேரம் இணைய வழியில் சிறப்புற நிகழ்ந்த பேராதனைத் தமிழ்த்துறையின் 5ஆவது சர்வதேசத் தமிழியல் மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி நூல் குறித்து இந்தியத் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான அம்ஷன் குமார் எழுதிய கட்டுரை 'எதிர்ப்புக் குரல்களை முன்னிறுத்தும் ஈழத் தமிழ் நாடகங்கள்'
(பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஏற்பாடு செய்த ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு 2021 டிசம்பர் 15 ஆம் திகதியன்று இணையவழியூடாக, காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டினை நேரடியாக நடத்தத் திட்டமிட்டிருந்த போதும் அது இயலாமல் போனது. உலகளாவிய ரீதியில் பரவிய கொரோனாப் பெருந்தொற்றினால் இலங்கையும் அடிக்கடி பொதுமுடக்கங்களை எதிர்கொண்டு இயல்புவாழ்க்கை பாதிப்புற்ற நிலையில், இம்மாநாட்டினை இணையவழியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
”ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம்” என்பதைப் பிரதான தொனிப்பொருளாகக் கொண்டமைந்தது ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டு. ஆய்வுக்கட்டுரைகள் பொதுவெளியில் கோரப்பட்ட போது, ஒழுங்கமைப்புக் குழுவினருக்குக் கிடைத்த ஆய்வுக்கட்டுரைகள் புலமையாளர் குழுவினால் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு தரத்தின் அடிப்படையில் 29 கட்டுரைகள் மட்டுமே ஏற்கப்பட்டன. மாநாட்டில் அவற்றை அளிக்கை செய்வதற்கான அனுமதி ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது.
திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்த, மாநாட்டினைத் ஆரம்பித்து வைத்த தமிழ்த்துறையின் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையுரையை ஆற்றினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் எம். டி. லமாவன்ச மற்றும் கலைப்பீடத்தின் பீடாதிபதியான கலாநிதி ஈ. எம். பி. சி. எஸ். ஏக்கநாயக்க ஆகியோர் முறையே பிரதம அதிதி, சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு உரையாற்றியதோடு, தமிழ்த்துறையின் இச்சிறப்பான முன்னெடுப்பினை வாழ்த்தி மகிழ்ந்தனர். அத்தொடக்க நிகழ்வில் இடம்பெற்ற ஆதார சுருதி உரையினைப் பேராசிரியர் சி. மௌனகுரு நிகழ்த்தியிருந்தார். தொடக்க நிகழ்வில் நிறைவாக மாநாட்டின் இணை ஒருங்கிணைப்பாளரான கலாநிதி செல்லத்துரை சுதர்சன் நன்றியுரையை நிகழ்த்தினார்.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையானது, ஈழத்து தமிழ் நாடகத்துறைக்கு அரும்பணியாற்றிய பெருந்தகைகளை மதிப்புடன் நினைவுகூர்ந்து, அவர்களின் பெயர்களை ஆய்வு மாநாட்டின் அரங்குகளுக்குச் சூட்டியமை பலராலும் பாராட்டப்பட்டது. சுவாமி விபுலானந்த அடிகள் அரங்கு, வண. கிங்ஸ்பரி தேசிகர் அரங்கு, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அரங்கு, பேராசிரியர் சு. வித்தியானந்தன் அரங்கு, பேராசிரியர் கா. சிவத்தம்பி அரங்கு, வித்துவான் க. சொக்கலிங்கம் அரங்கு என அந்த நினைவு அரங்குகள் அமைந்தன.
அரங்கத் தலைமையேற்ற தமிழ்நாட்டு நாடக ஆளுமைகளான திரு. ‘வெளி’ ரங்கராஜன், திரு. அம்ஷன்குமார், திருமதி ப்ரசன்னா ராமசாமி, திரு. பிரளயன், முனைவர் கி. பார்த்திபராஜா, முனைவர் ஆர். ராஜு ஆகியோர் ஒவ்வொரு அரங்கினையும் சிறப்புரையாற்றித் தொடங்கிவைத்தனர்.
ஆறு அமர்வுகளிலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அளிக்கைகள் மீது மதிப்பீட்டாளர்களால் விமர்சன உரைகள் ஆற்றப்பட்டன. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர்களான பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் துரை. மனோகரன், பேராசிரியர் வ. மகேஸ்வரன், கலாநிதி சோதிமலர் இரவீந்திரன் ஆகியோரும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி சி. ஜெயசங்கர், தஞ்சாவூர் – தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அயலகத் தமிழ்க்கல்வித்துறையின் தலைவர் பேராசிரியர் இரா. குறிஞ்சிவேந்தன் ஆகியோரும் விமர்சன உரைகளை வழங்கினர்.
மாநாட்டின் அமர்வுகள் இணையவழியில், காலை 9 மணிக்கு ஆரம்பித்து எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக நடைபெற்று மாலை 8 மணியளவில் பல்கலைக்கழக கீதத்துடன் இனிதே நிறைவு பெற்றன. பதினொரு மணி நேரம் தொடர்ச்சியாக இடம்பெற்ற அமர்வுகளில் உலகின் பல பாகங்களிலும் இருந்து அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாநாட்டின் ஆய்வுப்பொருளில் ஆர்வமுடைய ஆர்வலர்கள், அரங்கவியலாளர்கள், மாணவர்கள் எனப் பெருந்தொகையானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இப்போது அந்த ஆய்வுத் தொகுதி வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
அத்தொகுதி குறித்து திரு. அம்ஷன் குமார் எழுதிய கட்டுரை - எதிர்ப்புக் குரல்களை முன்னிறுத்தும் ஈழத் தமிழ் நாடகங்கள்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.