புகழ்பெற்ற இலங்கை நடிகை மாலினி பொன்செகா மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -
இலங்கையின் புகழ்பெற்ற நடிகையான மாலினி பொன்செகாவின் மறைவுச் செய்தியைத்தாங்கி வந்தது முகநூல். ஆழ்ந்த இரங்கல்.
என்னைப் பொறுத்தவரையில் சிங்களத்திரையுலகின் புகழ் பெற்ற நடிகைகளில் முதலில் நினைவுக்கு வரும் நடிகை மாலினி பொன்செகா. நடிகர் காமினி பொன்செகா. நான் முதன் முதலில் அறிந்த சிங்களத்திரைப்பட நடிகர்கள் இவர்கள்தாம். அறிந்துகொண்ட அந்த நிகழ்வு என் வாழ்வின் அழியாத கோலங்களில் ஒன்றாக ஆழ்மனத்தில் படிந்து விட்டது. 'பாரா வலலு' என்னும் சிங்களத் திரைப்படம் அறுபதுகளின் இறுதியில் யாழ் மனோஹராவில் திரையிடப்பட்டபோது அதற்கு மிகுந்த விளம்பரம் பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டது.
அப்பொழுதெல்லாம் புதிய திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில் அதனை ஒலிபெருக்கி கட்டப்பட்ட காரொன்றில் அறிவித்தபடி வருவார்கள். விளம்பரத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துச் செல்வார்கள். அக்காலகட்டத்தில் அவ்விதம் திரைப்பட 'நோட்டிஸ்'களை விநியோகித்துச் செல்கையில் அனைவரையும் கவரும் குரலில் அறிவித்தபடி வருபவர் அண்ணாமலை என்பவர். அவர் அப்போது யாழ் மனோஹராவின் உரிமையாளர்களாக இருந்த ஒருவரின் உறவினர் என்று கேள்விப்பட்டதாக ஞாபகம். உண்மை பொய் தெரியவில்லை. நான் அவரது இரசிகர்களில் ஒருவன். அவரது அறிவிப்புக் குரலினிமையை இரசிப்பவன்.
'பாரா வலலு' பற்றிய அறிவிப்பில் அவர் காமினி கொன்செகரா, மாலினி கொன்செகரா நடித்த பாரா வலலு என்று அறிவித்திருந்தார். பொன்செகாவை அவர் கொன்செகராவாக மாற்றியதை அப்போது பெரிதும் இரசித்தோம். அவர் உண்மையில் அவ்விதம் அறிவித்தது அவரது அறியாமையினாலா அல்லது அவ்விதம் உச்சரிப்பது 'ஸ்டைலா'க இருக்குமென்று எண்ணியதாலா என்பதில் இதுவரை தெளிவில்லை. ஆனால் அவ்விதமான அவரது அறிவிப்பில் ஈர்க்கப்பட்டவன் நான் என்பதால் , என் நெஞ்சில் அச்சம்பவம் நிலையாக் நின்று விட்டது.