[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
பதிவுகள் டிஸம்பர் 2003 இதழ் 48
உடல் உழைப்பாளர்களையும், அடித்தட்டு மக்களையும் அதிகளவில் கொண்ட பாரிஸ் - 18 இல் கடந்த 16-11-2003 அன்று மட்டக்களப்பு தமிழகம் எனும் வரலாற்று நு¡ல் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர்கள் வணிகரீதியாக மையங்கொண்டுள்ள லாசப்பல் எனும் இடத்தில் அமைந்துள்ள தமிழர் வித்தியாலயத்தில் சுமார் மாலை 5மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு இரவு 9 மணிவரை நீடித்தது. ”எக்ஸில்” வெளியீட்டகத்தின் மூன்றாவது வெளியீடாக அமைந்த மட்டக்களப்பு தமிழகம் ஜரோப்பாவில் இரண்டாவது தடவையாக வெளியிடப்பட்டுள்ளது. முதலாவது தடவையாக சுவிஸ் -சூரிச் நகரில் 12.10.2003 வெளியீட்டு வைக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு கிழக்கிலங்கை தோறும் ஆலயங்களிலும், பண்டைத்தமிழ்ப் புலவர்களிடத்திலும் அடங்கிக்கிடந்த கல்வெட்டுக்கள் தொகுக்கப்பட்டு விளக்கவுரையுடன் முதன்முதலில் ”மட்டக்களப்பு மான்மிகம்” அச்சுருவம் பெற்றது. இதையடுத்து வீ.சி.கந்தையா பண்டிதர் அவர்கள் 1949 இலிருந்து எழுதிவந்த ஆராய்ச் சிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு முழுமையான ஒரு வரலாற்று நு¡லாக 1964 இல் ”மட்டக்களப்பு தமிழகம்” எனும் நு¡ல் வெளியிடப்பட்டது. தமிழர் குடியேற்றம், நாட்டுக்கூத்துகள், பாடுமீன், புலவர் பரம்பரை, பண்டைய வழிபாட்டுமுறைகள், மந்திரவழக்கு, அரசியல் வரலாறு என்று குறித்த சமூகத்தின் சகலவித அசைவியக்க அம்சங்களையும் ஒன்றுசேர்த்து தொகுக்கப்பட்ட இந்நு¡ல் எதிர்கால ஆய்வுகளுக்கு சிறந்தவொரு ஆதார மையமாகும்.
நூல்வெளியீட்டுக்கு தலைமையேற்ற ஓவியரும், எழுத்தாளருமான அ.தேவதாசன் அவர்கள் 2500 வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்ட தீகவாபி குகையில் இருந்து மட்டக்களப்பின் புராதன வரலாறு தொடங்குவதை தொட்டுக்காட்டி தனது பேச்சை ஆரம்பித்தார். கிறிஸ்துவுக்கு முன் 545 ஆம் ஆண்டு விஐயன் வந்ததில் இருந்து துட்டகைமுணு ஈறாக நீண்டகால அரசியல் வரலாற்றை இக்குகை கொண்டிருப்பதனையும் பெளத்த, சமண, சைவ, இஸ்லாம், கிறிஸ்தவம் என்று பல்வித மதங்களையும் பின்பற்றிய சிற்றரசர்கள் தீகவாபியில் இருந்து மட்டக்களப்பு பிரதேசத்தை ஆட்சிசெலுத்தியிருப்பது குறித்து சிலாகித்தார்.
தொடர்ந்து பேசிய அரவிந் அப்பாத்துரை மட்டக்களப்பில் புலவர்கள் குறித்து உரையாற்றினார். ஒரு வரலாற்று நு¡லில் பொதுவாக அப்பிரதேசத்தினை அரசாண்ட மன்னர்களின் வரலாறே பிரதேச வரலாறாக, தேசங்களின் வரலாறாக முன்வைக்கப்படுவது வழமை. ஆனால் இந்நு¡லில் மன்னர்களின் வரலாறு மட்டுமன்றி மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்கள் முழுமையாகத் தொகுக்கப்பட்டிருப்பது முக்கியமானதொரு விடயம் என்றார். அதையும் தாண்டி கவிதைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது இப்பிரதேச மக்களின் வாழ்வியல் குறித்து மேலும் அறிய தன்னைத் து¡ண்டுகிறது எனவும் சொன்னார்.
நாட்டாரியல் எனும் தலைப்பில் தில்லைநடேசன் உரையாற்றுகையில் எக்ஸிலின் நு¡லுக்கான பதிப்புரையில் ”சைவத்தையும் தமிழையும் காப்பதாக கூறிக்கொண்டு செயற்பட்ட ஆறுமுக நாவலரால் சொந்தமண் சார்ந்ததும் வாழ்வு சார்ந்ததுமான நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் கொன்றொழிக்கப்பட்டன” என்பதில் உண்மையுண்டு என்றும் ”அந்த இடத்தை பார்ப்பனியக் கலை இலக்கிய வடிவங்கள் நிரப்பிக் கொண்டன என்பதில் தனக்கு மாற்றுக்கருத்து உண்டென்றும் தெரிவித்தார். மட்டக்களப்பைப் பொறுத்தவரை ஆறுமுக நாவலர் போன்ற மனிதர்கள் மட்டக்களப்பில் பிறக்காதது பெரும் புண்ணியம் என்றார். மட்டக்களப்பு தமிழகத்துக்கு முன்பே யாழ்ப்பாணத்தை அடிப்படையாகக் கொண்ட ”கைலாயமாலை, வையைபாடல், யாழ்ப்பாண வைபவமாலை” என்று எத்தனையோ வரலாறுகள் எழுதப்பட்டிருந்தாலும் இந்த மட்டக்களப்பு தமிழகம் முன்வைத்தது போல் பாரம்பரிய வழக்காறுகளும் கலைவடிவங்களும் நிறைந்த மக்களின் வாழ்க்கையை அவர்களால் முன்வைக்கமுடியவில்லை எனத் தெரிவித்தார்.
அடுத்து பேசிய கைலைநாதன் வரலாறு என்பது கட்டமைக்கப்படுவது. எல்லா வரலாறுகளும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன, அவ்வகையில் வரலாற்றை எழுதுதல் என்பது அறிதலுக்கானது என்பதைவிட பிரச்சாரத்துக்கானது என்பதே சரியானது என்றார். கண்முன்னே நிகழ்ந்தேறும் நிகழ்வுகள் குறித்து செழியனுடைய ”ஒரு மனிதனின் நாட்குறிப்பு, ”முறிந்தபனை” இன் ராஜனி திரணகமவினுடைய எழுத்துக்கள், கோவிந்தனின் ”புதியதோர் உலகம்”, அடல் பாலசிங்கத்தின் விருப்பமும் அனுபவமும் சேர்ந்த ”சுதந்திர வேட்கை” போன்ற வரலாற்று நு¡ல்கள் கூறும் முரண்பாடான பதிவுகள்பற்றி நாம் கவனம் கொள்ளவேண்டும் என்றார். இதேபோன்று வீ.சி.கந்தையாவினுடைய ”மட்டக்களப்பு தமிழகம்” எனும் கட்டமைப்பும் எந்த அரசியல் சார்ந்தது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் சிந்திக்கத் து¡ண்டினார். இருக்கு வேத ஆதாரங்களை உறுதியாக நம்பி வரலாற்றை எழுதுவதும் புலவர் சரவணமுத்தரை நாவலரோடு ஒப்பிட்டு புளகாங்கிதம் அடைவதும் பண்டிதர் யாழ் சைவவேளாளக் கூட்டின் பிரதிநிதியாய் இருந்ததற்கு ஆதாரங்களே என்றார்.
இதனைத் தொடர்ந்து எக்ஸிலின் இவ்வெளியீட்டினை சாத்தியப்படுத்த பொருளாதார ரீதியில் பங்களித்த கிழக்கிலங்கை நண்பர்கள் வட்டத்தினருக்கு சுகன் முதன் பிரதிகளை வழங்கினார்.
- கிழக்கிலங்கை நண்பர்கள் வட்டத்தினருக்கு சுகன் முதன் பிரதிகளை வழங்கினார். -
மேலும் எக்ஸில் ஆசிரியர் எம்.ஆர்.ஸ்ராலின் கருத்துத் தெரிவிக்கையில் மட்டக்களப்பில் இன்று ஆதிக்கம் செலுத்தும் முக்குவர் குடியின் வரவிற்கு முன்பே பட்டாணிகள் என்கின்ற ஆப்கானிஸ்தான் பரம்பரையினர் நிலைகொண்டிருந்ததாகவும் அவ்வகையில் பார்க்கும் போது பூர்வீகம் குறித்த உரிமை கொண்டாடல்கள் இன்று கேள்விக்குறியாகின்றன என்றார். எவ்வாறாயினும் பெளத்தரும், முஸ்லிம்களும், தமிழர்களும்... ஒருமித்து, கலந்து வாழ்ந்து வரும் மட்டக்களப்பின் பன்மைத் தன்மைகளை புரிந்து கொள்ளாது தனியொரு சமூகத்துக்கானதாக அம்மண்ணை உரிமைகொண்டாடுவது என்பது என்றுமே சமாதானத்தைக் கொண்டு வரப்போவதில்லை என்றார்.
கவிஞர் சுகன் அவங்களும் வெளிநாடு வாறாங்களோ? என்று ஒரு திருமலை நண்பர் குறித்து கனடாவில் யாரோ தன்னிடம் விசாரித்ததாக தனது உரையைத் தொடங்கிய சுகன் யாழ்பாணியத்தின் நெருக்குவாரம் புகலிடத்திலும் ஆதிக்கம் கொண்டுள்ள சூழலில் நாங்கள் மட்டுமல்ல எங்களுடன் சேர்ந்து எங்கள் கலைகளும், பண்பாடுகளும், விழுமியங்களும், பண்டிதங்களும் கூடவே வந்துள்ளன என்கின்ற ஒரு செய்தியாகவே இந்த வெளியீட்டை நான் கருதுகிறேன் என்றார். கலாச்சாரப் பாலைவனமான யாழ்ப்பாணத்து திமிருக்கு இது ஒரு நல்ல பதில் என மிக சந்தோசமாகக் கூறினார். யாழ்நு¡ல், மட்டக்களப்பு தமிழகம் போன்ற பெரும் ஆய்வு நு¡ல்கள் மட்டக்களப்பு மண்ணில் இருந்தே வந்திருக்கின்றன யாழ்ப்பாணத்திலிருந்து அல்ல என்றும், மட்டக்களப்பின் அரிய ஏட்டுச்சுவடிகள், கலைப்பொக்கிசங்கள், மருத்துவ வாகடங்கள் அனைத்தையும் யாழ்ப்பாணம் அபகரித்துக் கொண்டு சென்றதை சுட்டிக்காட்டி இது காலணித்துவக்காரர்களின் கொள்ளைக்கொப்பானது, இது யாழ் மேலாதிக்கத்தினுடைய அப்பட்டமான வெளிபாடேயன்றி வேறென்ன என்று கூறியவிடத்து அவையில் ஒருவர் பாதுகாப்புக்காகக் கொண்டுபோயிருக்கலாம்தானே என்று மாற்றுக் கருத்தொன்றை வைத்தார். ஆனால் யாழ்ப்பாணத்து உயர்வேளார்கள் தாம் படிப்பதற்காக மட்டுமே கொண்டுசென்றனர் என்கின்ற விடயத்தை இன்றுவரை குறிப்பிடத் தயங்குகின்றார்கள் என்றும் குறிப்பிட்டார். இவ்வெளியீட்டு நிகழ்வில் ’மட்டக்களப்புத் தமிழகத்தின்’ (புத்தகம்) மீதான விமர்சன உரை நிகழ்த்தியவர்களின் உரைகளைக் கவனத்திற்குள்ளாக்கிப் பேசியவர்கள் அருந்ததியும் றயாகரனுமாகும். அருந்ததி பேசுகின்றபோது தில்லைநடேசின் நாட்டுக்கூத்து பற்றிய உரைகளில் வெளிப்படுத்திய கலைவடிவ வேறுபாடுகளையும் அவைகள் மீதான தனது அனுபவங்களையும் கூறி, யாழ்ப்பாணத்தில் இன்னமும் சாதியமானது அதேவடிவங்களில் மாறாது பேணிப் பாதுகாத்துவருவதை தான் அண்மையில் நேரில் சென்று பார்த்ததாகவும் கூறினார்.
றயாகரன் (சமர்) பேசும்போது, இங்கு வரலாற்று நம்பகத்தன்மை பற்றிப்பேசப்பட்டது சாதியமைப்புமுறை அழியாது எனப்பேசப்பட்டது. அவ்வகையான கருத்துக்களுக்கு மாறான தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மற்றும் தீண்டாமை என்பது கி.பி. தோன்றிய ஒரு கருத்தியல் வடிவமெனவும். அவை தகர்ந்து போகக்கூடிய வாயப்புகள் உருவாகும் என்பதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
குறிப்பாக வீரசைவத்தின் தாக்கங்கள், சாதி அமைப்பின் நெகிழ்வுத் தன்மை, தாய்வழி சமூதாயத்தின் எச்சங்கள் என்பவை குறித்து கலந்துரையாடலில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. வெளியீட்டு நிகழ்வை எக்ஸிலுடன் இணைந்து நடாத்திய கிழக்கிலங்கை நண்பர்கள் வட்டத்தினரான வி.சி.கந்தையாவின் மாணவியான திருமதி கலாநிதி,மற்றும் திலீபன், சுதா, தங்கேஸ், தயா, சசி, தனேஸ், நடேஸ் போன்றோர் நன்றிக்குரியவர்கள். பல்வித கருத்தாடல்களுக்கும் இடமளிக்கப்பட்டு ஒரு வெளியீட்டு நிகழ்வு என்பதையும் தாண்டி ஒரு விமர்சன அரங்காக பரிணமித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.