[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
பதிவுகள் யூலை 2004 இதழ் 55
எழுத்தாளர் மா.அரங்கநாதனின் படைப்புலகம்! ஐம்பதுகளில் பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை ஆகிய இலக்கிய இதழ்களில் எழுதியவர். சாகித்ய அகாதமிக்காக சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளவர். தமிழக அரசு நாவல் பரிசு, கோவை வில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசுகள் பெற்றவர். 'பொருளின் பொருள் கவிதை' என்ற கட்டுரை நூல், வீடு பேறு, ஞானக்கூத்து, காடன்மலை முதலிய மீன்று சிறுகதைத் தொகுப்புகள், 'பறளியாற்று மாந்தர்' என்ற புதினம் ஆகியவற்றின் படைப்பாளி. தமிழின்பால் அபரிமிதமான அபிமானம் கொண்டவர். எண்பதுகளில் 'மூன்றில்' என்ற சிற்றிதழின் நிறுவனர்- ஆசிரியர் மற்றும் 'மூன்றில் ' என்ற இலக்கிய அமைப்பின் வாயிலாக பல நல்ல புத்தகங்களையும் வெளியிட்டவர். இத்த்னை சிறப்பிற்கும் உரிய திரு. மா.அரங்கநாதனுக்கு 17-04-01 அன்று சென்னையில் இலக்கிய ஆர்வலர்களால் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. திரு.ச.சீ.கண்ணனை அடுத்து அமர்நதா, 'வெளி' ரெங்கராயன், லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் மா.அரங்கநாதனின் படைப்புத் திறனுக்கான பதில் மரியாதையாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இது.
கூட்டத்தில் மா.அரங்கநாதனின் படைப்புலகம் பற்றியும், அவருடைய 'மூன்றில்' சிற்றிதழின் இலக்கியப் பங்களிப்பு குறித்தும் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மூன்றில் ஏறத்தாழ 20 இதழ்களுக்கு மேல் வெளியாகியது. பலதரப்பட்ட இலக்கியப் போக்குகளுக்கும் அது இடமளித்தது. அதன் முதல் சில இதழ்களுக்கு திரு.க.நா.சு ஆசிரியராக இயங்கினார். 'மூன்றில்' சார்பில் நடத்தப்பட்ட மூன்றூ நாள் இலக்கியக் கருத்தரங்கம் 'First of Kind' என்று சொன்னால் மிகையாகாது. மேலும் மூன்றில் என்பது வெறும் இலக்கிய இதழாக மட்டும் செயற்படாமல், ஒரு சிறு பத்திரிகை இயக்கமாகவும் செயல்பட்டது. மூன்றில் பதிப்பகம் மூலம் நல்ல பல புத்தகங்கள் வெளியாகின. கோபிக்கிருஷ்ணனின் 'சமூகப்பணி- அ-சமூகப்பணி-எதிர்-சமூகப்பணி' மற்றும் 'உள்ளேயிருந்து சில குரல்கள்' முதலிய புத்தகங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சென்னை மாம்பலம் ரங்கநாதன் தெருவில் இயங்கிய மூன்றில் அழுவலகம் இலக்கியவாதிகள் இளைப்பாறும், உத்வேகம் பெறும் இடமாக இருந்தது என்றால் மிகையாகது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் நினைவு கூர்ந்தார்கள்.
எழுத்தாளர் அமரந்தா உரையாற்றுவதையும் அருகில் 'வெளி' ரங்கராஜன், எழுத்தாளர் பாரதிராமன், கவிஞர் ஞானக்கூத்தன் உரையினைச் செவிமடுப்பதையும் காண்கிறீர்கள்.
ரவி சுப்ரமணியம், சா.கந்தசாமி, கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி, எம்.ஜி.சுரேஷ், திருநாவுக்கரசு,ஞானக்கூத்தன்,வைதீஸ்வரன்,சிபிச்செல்வன்,காவியா ஷண்முகசுந்தரம் முதலிய பலர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். திரு.அரங்கநாதன் 17 வய்துப் பையனாகச் சென்னையில் காலடியெடுத்து வைத்து கன்னிமாரா நூலகமே கதியாகக் கிடந்து அறிவைப் பெருக்கிக் கொண்ட அந்த நாள் ஞாபகங்களை ஆழமாக எடுத்துரைத்தார். அவரோடு மூன்றில் நடத்தத் துணையாக நின்ற அவர் மகாதேவன் விலகிய பார்வையில் தந்தையை ஒரு படைப்பாளியாகப் பார்த்து கருத்துக்களை முன் வைத்த விதம் குறிப்பிடத்தக்கது.
பதிவுகள் யூலை 2004 இதழ் 55
தொடரும் கவிதைக்கணம்!
(மே 29 அன்று சென்னையில் நடைபெற்ற கவிதைக்கணம் ஆண்டு விழாக் கூட்டம் பற்றிச் சில பகிர்வுகள்).
'இத்தனை வருஷங்களில் எனக்குக் கிடைக்கும் முதல் விருது, பாராட்டு இதுதான். இது கூட எனக்கு ஆச்சர்யம். இதுவே கடைசி விருதாகவும் அமையக் கூடும் என்று நினைப்பது தவறு என்று எனக்குத் தோன்றவில்லை. எனக்கு தகுதி நிரைய இருப்பதாகவும், அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நாண் ஆதங்கப்படுவதாகவும் தயவு செய்து நினைக்காதீர்கள். இன்றூ எனக்கு எந்த ஆதங்கமும் இல்லை. சொந்த வாழ்க்கையில் எனக்கு நேர்ந்தவைகளுக்காக வருந்தியிருக்கிறேன். எழுத்து வாழ்க்கையில் எனக்கு நேர்ந்தவைகளுக்காக நான் கவலைப்படவேயில்லை. என் ஆசை என்று எதுவும் இல்லை என்றாலும் என் கவிதைகலின் ஆசையை மதிக்கிறேன். அவை ஆழ்ந்த வாசிப்புக்கு ஆசைப்படுகின்றன..வெற்றிடத்திலும், மெளனத்திலும் அவை இயங்கும் இயக்கம் கவனிக்கபப்டவேண்டும் என ஆசைப்படுகின்றன. ஒன்று சொல்லாதிருக்கிற, ஒன்றும் இல்லாதிருக்கிற அவற்ரின் எளிமை உணரப்படவேண்டும் என ஆசைப்படுகின்றன.'
சமீபத்தில் நடந்தேறிய கவிதைக்கணம் ஆண்டு விழாக் கூட்டத்தில் 'கவிதைக் கணம் விருது' பெற்ற மூவரில்- கலாப்ரியா, ஆர்.ராஜகோபாலன், அபி- உடல் நிலை காரணமாக நேரில் வர இயலாத கவிஞர் அபி-யின் ஏற்புரையில் இடம்பெற்றிருந்த சில வரிகளே மேலே தரப்பட்டிருக்கின்றன. வெறும் நினைவுக்கேடயம் மட்டுமே என்றாலும் சக கவிஞர்கள் மத்தியில் அதைபெற்றுக் கொள்ளும் சந்தோஷத்திற்காக கவிஞர் கலாப்ரியா தென்காசியிலிருந்து கிளம்மி வந்திருந்தார். 'அபியின்' மொத்தக் கவிதைகளையும் கலைஞன் பதிப்பகத்தால் ஒரு முழு தொகுதியாக வெளியாகியுள்ளன. அவற்றைப் அப்டிக்கும்போதே அந்தக் கவிஞனின் வீச்சையும், ஆளுமையையும் உள்வாங்கிக் கொள்ள முடியும். கவிஞர் கலாப்ரியாவின் கவிதைகளும், அவற்றின் பரிசோதனை முயற்சிகளும் பரவலாக அறியப் பெற்றவை. ஆர்.ராஜகோபாலன் 'ழ' சிறு பத்திரிகையின் இயக்கத்தில் கணிசமான பங்களிப்பு செய்தவர், அவருடைய கவிதைகள் 'அன்பெனும் விதை' என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளன. குழந்தைகளுக்கான் பாடல்கள், கவிதைகளும் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டவர். பல சிறு பத்திரிகைகளில் அவருடைய படைப்புகளும், மொழியாக்கங்களும் இடம் பெற்றுள்ளன. அவரும் காலை முதலே 'கவிதைக் கணம்' ஆண்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
காலை அமர்வாகப் படைப்பிலக்கியம், குறிப்பாகக் கவிதைகலின் மொழிபெயர்ப்பு குறித்து ·ப்ராஞ்சு மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் பெயர்ப்பவரும், செவாலியே விருது பெற்றவருமான மொழிபெயர்ப்பாளர் வெ.ஸ்ரீராம் ( இவர் கடந்த ஆண்டும் கவிதைக்கணம் துவக்க நாள் இலக்கிய நிகழ்வுகளில் முக்கிய பங்களிப்பு செய்தவர்) மற்றும் மணீலாவில் ஆசிய மேம்பாட்டு வங்கி மேலாளராகப் பணி புரிந்து, ஓய்வு பெற்றவரும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவ்லகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவருமான டாக்டர் கே.எஸ்.சுப்ரமணியமும் (இவர் தற்சமயம் தன் ரசனைக்கேற்ற தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகின்றார் என்பதும், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் 'கவிதைக் கணம்' ஆண்டு விழாக் கூட்டம் சிறப்பாக நடைபெற பேருதவி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது) தங்கள் மொழிபெயர்ப்பு அனுபவஙக்ளையும், மொழி பெயர்ப்பில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் விரிவாகக் பேசினார்.
மதிய அமர்வுகளில் ஒன்றான கவிதை வாசிப்பு நிகழ்வுக்குக் கவிஞர் இளம்பிறை தலைமை தாங்கினார். தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞரான அவர் தனது கவிதைகளை வாசிக்க அவரைத் தொடர்ந்து கவிஞர்கள் பூமா ஈஸ்வரமூர்த்தி, சிபிச் செல்வன், தமிழ் மணவாளன், சிர்ணபாரதி, அய்யப்ப மாதவன், சங்கரராம சுப்ரமணியன்,கடற்கரை, அழகிய சங்கர், எஸ்,குரு,ரவி சுப்ரமணியன், பால் நிலவன் எனப் பல கவிஞர்கள் தஙக்ள் கவிதைகளை வாசித்தனர். நேரில் வர இயலாத கவிஞர்கள் சதாரா மாலதி, நா.விசுவநாதன் ஆகியோர் கவிதைகளை அனுப்பியிருந்தனர். இரண்டாம் அமர்வான சிறு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெயர் பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ('அட்சரம்' சிற்றிதழ்) கல்வெட்டி பேசுகிறது ஆசிரியர் 'முனியாண்டி' (சொர்ணபாரதி என்ற பெயரில் கவிதை எழுதி வருபவர்) அழகிய சங்கர் ('நவீன் விருட்சம்' இதழின் ஆசிரியர்), தோழர் மனோன்மணி('புது எழுத்து' பத்திரிகையின் ஆசிரியர். மறைந்த எழுத்தாளர் கோபி கிருஷ்ணனுக்கென்று சிறப்பிதழ் வெளியிட்டவர். தற்சமயம் இவர் கொண்டு வந்துள்ள மார்க்வெஸ் சிறப்பிதழ் மிகவும் பேசப்படுகிறது. 'வியன்புலம்' என்ற சிற்றிதழின் ஆசிரியர் துரை ஜெயப்ரகாஷ் முதலியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். தமிழின் முன்னோடிச் சிற்றிதழான 'ழ' பத்திரிகையில் முக்கிய பங்களிப்பு செய்திருக்கும் ராஜகோபாலன் இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கினார்.
'கவிதைக் கணம்' அமைப்பாளர்களில் ஒருவரான கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தி விழா சிறப்பாக நடந்தேற அயராது பாடுபட்டதோடு அவருடைய மகன்கள் இருவரையும் (இரட்டையர்கள்) விழா நிகழ்வுகளில் உதவி புரிய கூட்டி வந்திருந்தார். மற்றொரு அமைப்பாளரான கவிஞர் ரவி சுப்ரமணியம் ஓவியர் சீனிவாசிடம் 'கவிதைக் கணம்' விருதுகளை அற்புதமாகச் செய்யச் சொல்லி அவற்றை வாங்கி வந்ததோடு கவிஞர் அபியிடமிருந்து வாங்கி வந்திருந்த 'கவிதை புரிதல்' என்ற விரிவான கட்டுரையையும், அவரது ஏற்புரையையும் தனது ஆழங்கூடிய குரலில் தெளிவாக வாசித்துக் காட்டினார். அமைப்புக் குழுவைச் சேர்ந்த கவிஞர் சிபிச் செல்வன் பல நாட்களாகக் கவிதை எழுத நேரவில்லையே என்ர வருத்தம் நீங்கும் விதமாய் தான் எழுதிக் கொண்டு வந்திருந்த 'ஒரு குவளை நீர் வேண்டும்' என்ற ரீதியிலான கவிதையைப் படித்த போது அரங்கில் ம்ழு அமைதி நிலவியது. அப்பொழுதுதான் மகளின் திருமணத்தை நடத்தி முடித்திருந்த அயர்வையும் மீறி அழகிய சங்கர் தான் மாற்றலாகிச் சென்றிருக்கும் ஊர் பற்றிய கவிதையை வாசித்துக் காண்பித்தார்.
கவிஞர் கலாப்ரியா தனது ஏற்புரையில் தன் சகோதரன் 'விஸ்வநாதனை' (கவிஞர் கல்யாண்ஜி) நன்றியோடு நினைவு கூர்ந்தார். மனமிருந்தால் யாரும் கவிஞனாக முடியும் என்றார் அவர். கவிஞர் அபியின் கேடயத்தைக் கவிஞர் லாவண்யா (இயற்பெயர் சத்யநாதன்) பெற்றுக் கொண்டார். வந்திருந்த தலைகளை எண்னும் போதெல்லாம் இரண்டு பேரைக் கூடுதலாகவே சேர்த்துக் கொள்வது தவிர்க்க இயலாமல் போனது. ஒன்று அரங்க மேடையில் நடப்பவற்றைக் கம்பீரமாகப் புகைப்படத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பாரதியார். இன்னொருவர் அத்தனை மனம் விட்டு, தன்னம்பிக்கையோடு சங்கரராம சுப்ரமணியனின் சட்டையில் முகம் மலரச் சிரித்துக் கொண்டிருந்த மனிதன்.
பதிவுகள் ஜூன் 2003 இதழ் 42
எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் நினைவாக...
கடந்த மே 10, 2003 அன்று மறைந்த எழுத்தாளர் கோபி கிருஷ்ணனின் மரணம் நம்மை அதிர்ச்சியிலும், துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. பலவிதமான மன அழுத்தங்களுக்கும், உடல் உபாதைகளுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கிடையிலும் எதையும் வெளிக்காட்டாமல் எழுத்து குறித்த தீவிரமான நம்பிக்கைகளுடன் ஒரு எளிய மனிதராய் வாழ்ந்து மறைந்தவர் கோபி கிருஷ்ணன். வாழ்தலுக்கான அடையாளத்தையும், அர்த்தத்தையும் எழுத்தில் தேடமுயன்ற அவரது படைப்புகள் மன இயல் சார்ந்தும் நடப்பியல் சார்ந்தும் பல்வேறு முரண்களையும், பிறழ்வுகளையும் சுட்டி நிற்கின்றன. உளவியல் அறிவும், தேர்ந்த இலக்கிய வாசிப்பும் கொண்ட கோபி கிருஷ்ணன் மைய நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்ட ஊனம் மற்றும் மனநலம் குன்றிய நோயாளிகள் குறித்து அதிகமான கவனமும், அக்கறையும் கொண்டவராக இருந்தார். அவர்கள் பற்றிய சமூகத்தின் புறக்கணிப்பு மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ முறைகள் குறித்து தீவிரமான மாற்றுக் கருத்துகளுடன் இயங்கிய கோபி கிருஷ்ணன் இது விசயமாக பல்வேறு களப்பணிகளை மேற்கொண்டவர். அவரது சிறுகதைகளும், குறுநாவலும் பல்வேறு கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும் மனித இயல்புகளின் வகைப்படுத்த முடியாத முரண்பாடுகளை ஒருவித அங்கதத்துடன் வெளிப்படுத்துபவைகளாகவுள்ளன.
அத்தகைய நோய்த்தன்மைகளுக்கு தானும் ஒரு விதத்தில் இலக்காகி இன்று கோபிகிருஷ்ணன் நம்மிடமிருந்து மறைந்து விட்டார். தமிழ்ச்சூழலில் ஒரு உண்மையான எழுத்தாளன் தன் எழுத்தை நம்பி வாழமுடியாத அவல நிலையே மீண்டும் மீண்டும் நம் கண்முன் நிற்கிறது. இந்நிலையில் கோபிகிருஷ்ணனின் மறைவால் உதவியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அவரது குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டியது சக எழுத்தாளர்களும், வாசகர்களுமாகிய நமது பொறுப்பும், கடமையும் ஆகிறது. உதவிக்கான DD அல்லது MO அனுப்ப வேண்டிய முகவரி:
J.Rangarajan
1415 , 2nd Street, 1 Srctor,
K.K..Nagar, Chennai - 600078
Ph: 24715368
கோபிகிருஷ்ணன் நண்பர்கள் குழு சார்பாக
வெளி ரங்கராஜன்
லதா ராமகிருஷ்ணன்
அமரந்தா
பதிவுகள் யூன் 2004 இதழ் 54
நூல் வெளியீடு! சென்னை இலக்கிய நிகழ்வு'! வீணை அதன் பேர் தனம்'! 'மொழியும் நிலமும்'! 'ஹோசே மார்த்தி ஓர் அறிமுகம்'!
'வீணை அதன் பேர் தனம்' (எழுதியவர் சோழ நாடன்), 'மொழியும் நிலமும்' (எழுதியவர் ஜமாவன்), 'ஹோசே மார்த்தி. ஓர் அறிமுகம்' (எழுதியவர் அமரந்தா) ஆகிய மூன்று நூல்களைப் பற்றிய அறிமுகக் கூட்டம் ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்தேறியது. நாடக வெளி மற்றும் புதுமலர்ப் பதிப்பகம் ஆகிய இரண்டு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் எழுத்தாளர் விட்டல்ராவ், பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், நவீனத் தமிழ் இலக்கிய விமர்சகரும், படைப்பாளியுமான எஸ்.ஷண்முகம், பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மேற்குறிப்பிட்ட நூல்களைப் பற்றிய கருத்துகளை வெளியிட்டார்கள். இசை ஆய்வாளர் நா.மம்மூதின் சோழநாடனின் புத்தகம் பற்றி எழுதியனுப்பியிருந்த கட்டுரையை எழுத்தாளர் ரவி சுப்ரமணியன் வாசித்தார். 'காலக்குறி' என்ற சிற்றிதழின் ஆசிரியராக இயங்கிய காலத்தில் ஜமாலன் காலக்குறியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு 'மொழியும் நிலமும்'. இந்தப் புத்தகம் பற்றிய கருத்துகளை பேராசிரியர் க.பஞ்சாங்கம் மற்றும் எஸ்.ஷண்முகம் முன் வைத்தனர். வடமொழியிலிருந்து தொல்காப்பியம் பிறந்தது என்ற பார்வை சரியில்லை. அதையும் ஜமாலன் கட்டுடைத்திருக்க வேண்டும் என்று திரு.பஞ்சாங்கம் கூற 'மொழியின்' உள்ளார்ந்த மனம் என்கிறார் ஜமாலன். மனம் தான் மொழி என்பது தான் சரி என பின் நவீனத்துவ அணுகுமுறையில் ஜமாலனின் நூல் குறித்த தனது பார்வைகளை முன் வைத்தார் எஸ்.ஷண்முகம்.
சோழநாடன் என்ற பெயரில் தமிழிசை முதலான பல ஆய்வு நூல்களை எழுதி வருபவர் தமிழ் இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்ட 'தாமரைச்செல்வி' பதிப்பக உரிமையாளர் திருநாவுக்கரசு தான் என்பதை விட்டல்ராவ் மேடையில் தெரிவித்தபோது ஆச்சரியமாக இருந்தது. திரைப்படங்கள் முதலான விஷ¤வல் மீடியா சம்பந்தப்பட்ட கனமான விஷயங்களைத் தாங்கி வரும் 'நிழல்' மாதப் பத்திரிகையையும் இவர் தான் கொண்டு வருகின்றார். 'அரசியல் எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். எனவே கடந்த ஐந்து வருடங்களாக இசை பற்றியே கவனம் செலுத்திட்டிருந்தேன்' என்று தெரிவித்த சோழநாடன் தமிழிசை குறித்து பேசுகிறோமே தவிர உருப்படியான ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. இதற்கு திராவிட அரசுகளும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். விருத்தம் பாடுதல், ராகமாலிகை முதலிய மரபுகள் இன்று வழக்கொழிந்து விட்டன. ஆதிக்கசாதி எதைக் கைப்பற்றினாலும் மூலத்தை அழித்து விடுவார்கள். அப்படித்தான் இப்போதைய வீணை உண்மையில் முந்தைய யாழ்தான். வீணை செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டால் யாழ் என்ற வரலாற்றுண்மை மறைக்கப்பட்டிருக்கிறது என்றும், தமிழுக்கென்று 2000 வருட ஓவிய மரபு இருக்கிறது என்றும் கூறிய திருநாவுக்கரசு 'தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்களை மீள உருவாக்கம் செய்வதே தனது நோக்கும் இலக்கும்' என்றார்.
'ஹோஸே மார்த்தி' ஓர் அறிமுகம் என்ற நூலை எழுதியுள்ள அமரந்தா மூன்றாம் உலகப் படைப்புகளை தமிழிலே கொண்டு வரும் மொழிபெயர்ப்புப் பணியில் தீவிரமாக இயங்கி வருபவர். ஆரம்பத்தில் விசாலாட்சி என்ற தனது இயற்பெயரில் அவர் எழுதிய சில படைப்புகள் குறிப்பிடத் தக்கவை. ஒன்றிரண்டு கணையாழி குறுநாவல் திட்டத்தில் பரிசுகளும் பெற்றிருக்கின்றன. 'எக்ஸில்' இதழில் வெளிவந்த அவருடைய சிறுகதை 'சுழல்' குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கியூபாவிற்கு 'ஹோஸெ மார்த்தி'யின் 150வது பிறந்த நாள் விழாக் கமிட்டியின் அழைப்பின் பேரில் பயணமாகி வந்திருக்கிறார். அவருடைய இந்த நூல் குறிந்த்து மிக நீண்ட அறிமுக உரையாற்றிய (சமயங்களில் வகுப்பு எடுக்கும் தொனியில்) பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் அமெரிக்காவின் அரசியல் சூழ்நிலைகளை க்யூபா அரசியலைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டு அந்தக் க்யூபாவின் புரட்சித் தலைவர்களின் ஆசான் 'ஹோஸே மார்த்தி' என்றார். எந்த மண்ணின் விடுதலைக்காக மார்த்தி தனது ரத்தத்தைச் சிந்தினாரோ அந்த மண்ணிற்கே சென்று அவருடைய எழுத்துக்களை நான் முதலாக வாசித்தேன். வாசித்த உடனேயே 'ஹோஸே மார்த்தியை' தமிழில் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். 'ஹோஸே மார்தி' இறந்து 108 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் இன்றைய க்யூபாவின் மக்கள் மனதில் அவர் வாழ்கிறார். வெற்றி பெற்ற க்யூபாப் புரட்சியின் நாயகனாக பிடல் காஸ்ட்ரோவின் உருவில் நடமாடிக் கொண்டிருப்பவர் அந்தப் புரட்சிக்கான அடிப்படைகளை அமைத்துக் கொடுத்த 'ஹோஸே மார்த்தி'யே என்று தனது 'என்னுரையில்' குறிப்பிடுகின்றார் அமரந்தா. ஏற்புரையிலும் 'ஹோஸே மார்த்தி' என்ற ஆளுமை தன்னைக் கவர்ந்த விதம் குறித்துப் பேசினார் அவர். நாடக வெளி அமைப்பின் சார்பில் 'வெளி' ரங்கராஜன் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.