[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை  இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]


பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50 

புகலிடத்தில் வாழும் பெண்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளும் முகமாக 1990இல் ஜேர்மனியில் உள்ள சில பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப் பெண்கள் சந்திப்பு ஜேர்மனியின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற அதேநேரம், அது தனது எல்லைகளை விஸ்தா¢த்து சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சந்திப்புகளை நடாத்தி வருகின்றது. ஜரோப்பாவில் வாழும் பெண்கள் மட்டுமன்றி இலங்கை, இந்தியா அவுஸ்திரேலியாவிலிருந்தும்கூட பெண்கள் வந்து கலந்து கொள்ளும் சந்திப்பாக வளர்ந்திருக்கிறது. சுவிஸில் மூன்றாவது தடவையாக நடைபெறும்  பெண்கள் சந்திப்பின் 22வது தொடர் ஒக்டோபர் மாதம் 11ம் திகத§ சுவிஸ் சூ¡¢ச் நகா¢ல்  நடைபெற்றது. இச் சந்திப்பு தனது 13வது வருடத்தை பூர்த்தி செய்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஓரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இச் சந்திப்பில் பெண்ணியச் சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள், அனுபவப் பகிர்வுகள், விமர்சனங்கள் என்பன இடம்பெற்றன. 

வழமைபோல் சுய அறிமுகத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. ”தமிழ்ப் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் கலாச்சாரமும் பெண்களும்” என்ற தலைப்பில் பிரான்ஸைச் சேர்ந்த பரிமளா தனது கருத்தை வெளியிட்டார் அவர் கூறும்போது சகல பெண்களும் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருக்கின்றோம், வெள்ளை இனப் பெண்களாக இருந்தால்கூட. குறிப்பாக வறிய வெள்ளை இனப் பெண்கள், ஆபிரிக்கப் பெண்களைவிட இந்திய, இலங்கைப் பெண்கள் கலாச்சாரத்தினால் கூடுதலாக ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இந்திய இலங்கைப் பெண்கள் 'தாலி' என்ற பதத்தை வைத்து சென்ரிமென்டாகவும் பெண் ஒடுக்குமுறைக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளார்கள். பண்டைய காலத்தில் மாடுகளை தங்களுடைய மாடுகள்தாம் என அடையாளம் காண்பதற்காக நிறம் பூசிய கயிறுகள் மூலம் கட்டுவர். அதேபோல்தான் இந்தத் தாலியும் என்று கூறினார். கலாச்சாரத்தை பெண்கள் மட்டும்தானா கட்டிக்காக்க வேண்டும்  என்றும் கேள்வி எழுப்பினார்.   தாய்வழிச் சமூகம் இருந்த காலத்தில் பெண்கள் கடின உழைப்பாளிகளாகவும் ஆண்கள் வீட்டு வேலைகளை செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தாய்வழிச் சமூகம் மாறி தந்தைவழிச் சமூகம் வந்தபின் அவர்கள் பெண்களை அடக்குவதற்காக தாலி, சாமர்த்திய சடங்கு, பொட்டு பூ நகை போன்ற அடையாளங்களை வேண்டுமென்றே கலாச்சார சின்னங்களாக திணித்து பெண்களை அடிமையாக்கியுள்ளனர். இவ்வாறாக தனது கருத்துக்களை முன்வைத்தார் பா¢மளா. கலந்துரையாடல் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது மட்டுமல்லாமல் பயனுள்ளதாகவும் அமைந்தது. 

மதியபோசனத்தின் பின் சாந்தினி வரதராஐன் ”புலம்பெயர் தமிழ்ப் பெண்களின் முற்போக்கு சிந்தனையும் அவர்கள் வாழும் பிற்போக்கு வாழ்க்கையும்” என்ற விடயத்தினை முன்வைத்து தனது கருத்தை வெளியிட்டார். இன்று பெண்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையில் பின்தங்கியே உள்ளார்கள் என்றும் மனம்விட்டுப் பேசக்கூட அவர்களால் முடியாமல் உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தாங்கள் முற்போக்கு சிந்தனையுடன் தான் வாழ்கிறோம் எனக் கூறிக்கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். இதையடுத்து பலர் அங்கு மனம்விட்டுக் கதைத்தார்கள். இது அங்கு சமூகமளித்த பெண்களை உணர்வு¡£தியில் ஒன்றுகூட வைத்தது சிறப்பான அம்சமாக அமைந்தது. 

அடுத்த நிகழ்ச்சியாக பெண்கள் சந்திப்பு மலர் 2002 இன் மீதான ஓர் வாசிப்பை  ஜேர்மனியைச் சேர்ந்த சந்திரவதனா செய்யவிருப்பதை அறிவித்த நான், அதற்குமுன் இம் மலர் பற்றிய சில கருத்துக்களை எனது தலைமையுரையின் ஒரு பகுதியாகக் குறிப்பிட்டேன். பால்வினைத் தொழில் பற்றிய விடயங்களை கருப்பொருளாகக் கொண்டு இம் மலர் வெளிவந்துள்ளது. பால்வினைத் தொழில் என்ற சொல்லே எம்மில் பலருக்கு அலர்ஐ¢யை ஏற்படுத்தக்கூடியது. இது என்ன சாக்கடை, இந்த அசிங்கத்தை எழுதுவதன் மூலம் நாமும் கெட்டவர்கள் ஆகிவிடுவோமா என்ற பயமும் எம்மில் சிலருக்கு. ஒரு தலைப்பைத் தொ¢வு செய்து இதுபற்றி எழுதுங்கள் என வரையறுப்பது படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றது என்றாலும், சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் பாலியல் சுரண்டல், சமப்பாலுறவு போன்ற விடயங்கள் ஏனைய  சமூகங்களில் பேசப்படுவது போன்று தமிழ்பேசும் மக்களிடையே உரத்துப்பேசப்படுவதில்லை. பால்வினைத் தொழிலை பேசு பொருளாக்குவதன் மூலம் பெண்கள் மீது சமூகமும் அதனுடன் தொடர்புடைய சகல  நிறுவனமயப் படுத்தபட்டவைகளும் எவ்வாறு அடக்குமுறையை திட்டமிட்டுப் பேணுகின்றன என்பதை நாம் வேறு ஒரு பரிமாணத்தில் காணலாம். பெண்ணியம் பற்றிய புரிதலில், உணர்தலில் பால்வினைத் தொழில் பற்றிய கருத்தோட்டத்தையும் வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்த வேண்டிய தேவையின் அடிப்படையில் இதனை நாம் தொ¢வு செய்திருந்தோம் என தொகுப்பாளர்கள் கூறியுள்ளார்கள். 

ஆனால் இப் பெண்கள் சந்திப்பு மலர் வெளிவந்தவுடன் பல ஆண்கள் தங்களது காழ்ப்புணர்ச்சிகளை கொட்டவும் தவறவில்லை. யாழ் இணையத்தில் தங்களது ஆணாதிக்கக் கருத்துக்களை வலுப்படுத்துவதற்காக பெண்கள் சந்திப்புமலரை கொச்சையாக எழுதியதும் மட்டுமல்லாமல், தங்களது சொந்தப் பெயர்களில் எழுத திராணியற்ற ஆண்கள் வேறு பெயர்களில் பெண்கள் சந்திப்பு மலரைப் பற்றி மிகக் கேவலமான முறையில் யாழ்.கொம்மில் 14 பக்கங்கள் வரை தங்களது காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்த்தனர். அதற்குப் பதிலடி கொடுத்து இளைஞனும், சந்திரவதனாவும் தமது கருத்துக்களை கூறியிருந்தனர். அம் மலரை கண்ணால்கூட பார்க்காமல், அதில் வந்த கட்டுரைகளை வாசிக்காமல் கருத்துச் சொல்ல வருமளவுக்கு ஆண் மேலாதிக்கச் சிந்தனை எழுத்துத் தர்மத்தையே மீறி செயற்பட வைத்தது. இதற்குத் துணைபோன இணையத்தளங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாமைக்கு எனது வன்மையான கண்டனத்தைத் முன்வைத்தேன். இதன்பால் அபிப்பிராயம் தெரிவித்த பலரும், இவர்களைப் போன்றவர்களை நாம் கணக்கில் எடுத்து விவாதிப்பதும் விமர்சிப்பதும் தேவையில்லாதது. இவர்கள் எல்லாவற்றுக்கும் மூக்கை நுழைப்பவர்கள். அதனால் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எமக்கு இல்லை எனவும் அத்துடன் சொந்தப் பெயர்களில் எழுதுவதை விடுத்து புனைபெயர்களின் பின்னால் ஒளிந்துகொள்வதே அவர்களது கருத்துகளின்மீதான திராணியற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும் கருத்துக்கள் கூறப்பட்டதுடன் யாழ்.கொம் மீது கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இம் மலர் பற்றிய சந்திரவதனாவின் கட்டுரை வாசிக்கப்பட்டது. (இக் கட்டுரை கீழே இணைக்கப்பட்டுள்ளது) 

பால்வினைத்தொழில் சம்பந்தமான தகவல்களைத் திரட்டும் இந்தக் கால கட்டத்தில் என்னால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியாதபடி மனசு ஏதோ ஒரு சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தது. இப்படியும் நடக்கிறதா..? இப்படியெல்லாம் சின்னஞ்சிறு சிறுமிகளும், பெண்களும் துயருறுகிறார்களா..? உலகம் இத்தனை ஏமாற்றுத்தனமும் நயவஞ்சகமும், சுயநலமும் நிறைந்ததா..? என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டே இருந்தன. சில விடயங்களை நம்பவும் முடியாமல், நம்பித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பால்வினைத் தொழிலுக்காகவும், பாலியல் துர்ப்பிரயோகத்துக்காகவும் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்ட பெண்களின் துயர்களை மனசை விட்டு அகற்றவும் முடியாமல்.. அவஸ்தைப்பட்டேன் என உணர்வைக் கொட்டியபடி தொடங்கிய அவா¢ன் விமர்சனம் எல்லோரையும் பாதிப்பதாக இருந்தது. 

இதற்கு கருத்துச் சொன்ன பெண்கள், இப்படியான பிரச்சினைகள் எமது சமூகத்தினரிடமும் இருக்கின்றது அதை மூடி மறைத்து வருகின்றனர் என்றும் சென்ற ஆண்டில் வவுனியாவில் ஒரு சிறுமி 65 வயது நிரம்பிய ஆணால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியதை ஒரு உதாரணமாகவும் அந்த ஆண் குற்றவாளிக்கு நீதிமன்றம் 1500 ரூபா அபராதமும் 6 மாதச் சிறைத்தண்டனையும் விதித்த மலினமான தண்டனை பற்றியும் பேசப்பட்டது. புலம்பெயர் தேசத்திலும்கூட நிகழ்ந்த இவ்வாறான வன்முறை பற்றியும் (குறிப்பாக பிரான்ஸ் இல் கொலைசெய்யப்பட்ட சிறுமி நிதர்சினி உதாரணமாக்கப்பட்டார்) கருத்துக்கள் பரிமாறப்பட்டது. இந்தியா போன்ற நாடுகளில் பால்வினைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுவதில் ஆட்கடத்தல்  மூலமாக அதாவது சிறுமிகள் யுவதிகளைக் கடத்திச் சென்று பலவந்தமாக இத் தொழிலுக்கு உட்படுத்தி பின் அதிலிருந்து மீளமுடியாமல் ஆக்கிவிடுவதின் மூலமும் பால்வினைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுவது பற்றியும் பேசப்பட்டன.

அடுத்த நிகழ்ச்சியாக நளாயினி ”ஒரு பெண்ணின் எழுதுகோலுக்குப் பின்னால்” என்ற தலையங்கத்தில் உரையாடினார். அவர் கூறும்போது ஒரு ஆண் எழுத்தாளன் ஒரு பெண் எழுத்தாளரை விட எத்தனை தவறுகள் செய்தாலும் இந்த சமூகம் எதையுமே கூற தலைப்படாது என்றும் ஒரு பெண் எழுத்தளருக்கோ இச்சமூகம் எழுந்தமானமான விமர்சனங்களால் சந்தேகப் பார்வைகளால் மனம் நொந்து தற்கொலை செய்யுமளவுக்கு தள்ளிவிடுகின்றனர் என்றும் கூறினார். அத்தோடு ஆண் எழுத்தாளர்கள் எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டு போகலாம்ளூ அது கருத்தோடு நோக்கப்படும் விமர்சனம் அந்த ஆணையோ அல்லது அவனின் குடும்பத்தையோ சாடாது எழுத்தோடு மட்டுமே நின்று கொள்ளும். ஓரு ஆண் எழுத்தாளன் காதலை காமத்தை சமூக வரம்பு மீறலை எதையும் எழுதலாம். ஆனால் ஒரு பெண் எழுத்தாளர் இதையே காமத்தை காதலை ஏன் பாலியல் சம்பந்தமாக எழுதிவிட்டால் அவளே அதை செய்ததாக குற்றச்சாட்டு வைத்து, விமர்சனத்தை கூறி, மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவளை எழுதவிடமால் பண்ணிவிடுகிறார்கள் என தனது பல கருத்துக்களை முன்வைத்தார். 

கடைசி நிகழ்ச்சியாக அடுத்த பெண்கள் சந்திப்பு மலர்க் குழு தெரிவுசெய்யப்பட்டதுடன், பெண்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறுந் திரைப்படங்களான மத்தம்மா, மல்லி, தூக்கம், ஆயிஷா, ராஜாங்கத்தின் முடிவு ஆகிய படங்கள் காண்பிக்கப்பட்டன. . 

இப் பெண்கள் சந்திப்பினால் என்ன பலன் ஏற்பட்டுவிடப் போகிறது. பெண்கள் சந்திப்பு மலர் தேவைதானா?? கவிதை, கட்டுரை, கதை, ஓவியம், விமர்சனங்களினால் என்ன நிகழ்ந்துவிடப்போகிறது?? இவைகளால் பெண்களின் பிரச்சினைகள் இல்லாமல் போய்விடுமா?? அல்லது பெண்ணுரிமை தான் கிடைத்துவிடுமா?? இவ்வாறான கேள்விகளோடு இச் சந்திப்பிலிருந்து சில பெண்கள் ஒதுங்கிக் கொண்டனர். காலம்காலமாக எழும் இப்படியான சலனங்களுக்கு விடைகளை அவர்கள் தமது தரப்பிலேயே தேடிக்கொள்ள வேண்டியிருப்பதால் அவை எந்த சமூகச் செயற்பாட்டையும் இல்லாமல் செய்துவிடுவதில்லை. பெண்கள் சந்திப்பும் அதன் தொடர்ச்சியைப் பேணிக் கொண்டு ஒக்ரோபர் 11ம் தேதியன்று சுவிஸில் ஆக்கபூர்வமாக நடந்துமுடிந்தது. அடுத்த பெண்கள் சந்திப்பு (2004 ம்ஆண்டு) பிரான்சில் நடைபெறவுள்ளது. 


பின் இணைப்பு:  பெண்கள் சந்திப்பு மலர் 2002! ஒரு பார்வை!  - சந்திரவதனா செல்வகுமாரன் -

உணர்வுகள் கூடாத போது ஒருவனுடன் கூட வேண்டிய உளவலி தரும் பால்வினைத் தொழிலால் உலகளாவிய ரீதியில் பெண்கள் துன்புறும் போது அது பற்றி நாம் பேசுவதே தப்பு என்றும், பாரது¡ரமான குற்றமென்றும், அருவருப்பான செயலென்றும், அது பற்றிப் பேசுபவர்கள் பண்பற்றவர்கள், அத்தொழிலில் ஆர்வம் கொண்டவர்கள்... என்றும் எமது சமூகத்துள் பல்வேறு திசைகளிலிருந்தும் குரல்கள் எழுகின்றன. இப்படியான நமக்கில்லைத்தானே! நாம் ஏன் பேச வேண்டும்..! என்ற எண்ணம் கொண்ட, உலகளாவிய ஒரு பிரச்சனை பற்றிய எந்த விதமான பிரக்ஞையுமின்றிய பெருபான்மையானோரைக் கொண்ட, நமது தமிழ் சமூகத்தின் மத்தியில் ஏழாவது மலரான கடந்த வருடப் பெண்கள் சந்திப்புமலர், பால்வினைத் தொழிலை மையமாகவும், கருப்பொருளாகவும் கொண்டு துணிகரமாக வெளி வந்துள்ளது. 

பால்வினை பற்றிப் பேசுதலே தவறென்று கருதுவோர் மத்தியில் பால்வினை சம்பந்தமான தகவல்களைத் திரட்டுவது என்பது சுலபமான காரியமல்ல. இணையத்தளங்களில் தேடும் போதும் சரி, அது பற்றிய பத்திரிகை, சஞ்சிகைகளை பொது நூலகங்களிலோ அல்லது கடைகளிலோ பெற்றுக் கொள்ளும் போதும் சரி அவை தமிழர்கள் யாராவது கண்களில் பட்டு விட்டால் போதும். ஒரு துச்சமான ஏளனப் பார்வை. - இந்தளவுக்கு முன்னேறிட்டீங்களோ..?  என்பது போன்றதான அநாகா¢கக் குத்தல் பேச்சு....  இந்த நிலையில் இத் தொழிலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களோடோ அல்லது இத் தொழில் நடைபெறும் இடங்களில் கடமையாற்றுபவர்களிடமோ இவை பற்றிப் பேசித் தகவல்களை எடுக்க முனைந்தால் இன்னும் சற்று அதிகப் படியான ஏளனத்துடன் - சமூகத்தைக் கெடுக்க வந்த பொழுது போக்குப் பெண்ணியவாதிகள் - என்கின் ற முத்திரை குத்தல்.... இப்படியான எத்தனையோ இடர்பாடுகள். 

இவைகளின் மத்தியில் பால்வினைத் தொழிலை மையமாகவும், கருப்பொருளாகவும் கொண்டு மலரை வெளியிட நினைந்தது மட்டுமல்லாமல், நினைத்ததைச் செயற் படுத்தியும் காட்டியது பெண்கள் சந்திப்பு மலர்க் குழு. இத்துணிச்சலான செயற்பாடு உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பெண்கள் அடக்கப் பட்டுக் கொண்டும் ஒடுக்கப் பட்டுக் கொண்டும் இருந்தாலும் ஆங்காங்கு ஒரு சில பெண்களாவது விழிப்படைந்து விட்டதையும் தாம் நினைத்ததைச் செயற்படுத்துமளவுக்கு தன்நம்பிக்கை கொண்டு விட்டதையுமே எடுத்துக் காட்டுகிறது.

தொழில் நுட்பம், வடிவமைப்பு... என்று  நோர்வே தயாநிதி, லக்சுமி.... போன்ற பெண்கள் உள்ளுக்குள் நின்றே.. உழைக்க, கவித்ரா, ¦ஐயந்திமாலா, கோசல்யா, சந்திரவதனா, சிந்துக்கரையாள், தீபா, தேவா, ஈஸ்வரி, ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், பாமதி, உமா, றஞ்சி, பார்வதி கந்தசாமி, அந்திரியா ட்வார்கின், நிரூபா ஆகியோர் முனைந்து முனைந்து தகவல்களையெல்லாம் தேடி எடுத்து ஆக்கங்களை மிகுந்த அக்கறையுடன் தயாரித்து கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும், கதை வடிவிலும் தந்திருந்தார்கள். அத்தனையும் பொய்மை கலக்காத உண்மைத் தகவல்கள். 

இவைகளுள் கட்டுரைகள் பால்வினைத்தொழில் பற்றிய பேச்சுக்கே முக்கியத்துவம் கொடுத்து, பால்வினைத் தொழில் பற்றிய ஏராளமான தகவல்களைத் தந்திருந்தன. பால்வினைத்தொழில் செய்பவர்களை கீழ்தரமானவர்களாகவே அனேகமானோர் கணிக்கிறார்கள். ஏன்..! அவர்களிடம் பணம் கொடுத்து தமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் ஆண்களும் கூட அவர்களை மிகவும் கீழ்தரமான ஸ்தானத்தில் வைத்துத்தான் கதைக்கிறார்கள். அந்தக் கணிப்பினு¡டான கண்ணோடுதான் பார்க்கிறார்கள். ஆனால் பால்வினைத் தொழில் என்பது ஆணாதிக்க சமூகத்தின் சுயநலத் தேவையின் பொருட்டு, பெண்களை அடிமை கொண்டு சுகிக்கு முகமாக ஆரம்பித்து வைக்கப் பட்ட தொழில் என்பதையும், பால்வினைத் தொழிலின் முக்கிய காரணி வறுமை என்பதையும் இக்கட்டுரைகளின் மூலம் எவரும் புரிந்து கொள்ளலாம். 30 வீதமான பெண்கள் வறுமையின் நிமித்தமும், 70 வீதமான பெண்கள் தரகர்களால் ஏமாற்றி அழைக்கப் பட்டு வந்து கட்டாயத்தின் போதிலும் பால்வினைத் தொழிலைச் செய்து கொண்டிருப்பது உலகளாவிய ரீதியான கணிப்பீடு. இம்மலரில் இடம் பிடித்திருக்கும் இக் கட்டுரைகளில் இவை பற்றிய ஆதாரபூர்வமான பல தகவல்கள் தரப் பட்டுள்ளன. வாசிக்கும் போது தலை விறைக்கும் அளவுக்கு பால்வினைத் தொழில் செய்வோர் அனுபவிக்கும் துயர்கள் பற்றிப் பேசப் பட்டுள்ளன. 

பால்வினைத் தொழிலைச் சட்ட பூர்வமாக்கலாமா? என்ற தலைப்பின் கீழ் பிரெற்லெவி எழுதியதொரு கட்டுரையை தமிழில் கவித்ரா மொழிபெயர்த்துத் தந்திருந்தார். இதில் பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எப்படியாக ஏமாற்றப் பட்டு அழைத்து வரப்படுகிறார்கள் என்பதிலிருந்து இதை சட்ட பூர்வமாக்கலாமா..? அதனாலான நன்மை தீமை என்ன என்பவை பற்றி ஆராயப் பட்டிருந்தன. பால்வினைத் தொழில் குற்றமற்றதாக்கப் படுவது என்பதற்கு ஒரு இலகுவான விடை இல்லை என்பதும் இக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருந்தது.

சட்டத்தரணியான Catherine Mackinnon மற்றும் போர்ணோகிராபி எதிர்ப்புக் கோட்பாளரான Andrea Dworkin போன்ற தீவிரப் பெண்ணியலாளர்கள் பாலியல் தொழிலை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதையும் இன்னும் பல இது சம்பந்தமான ஆதாரத்துடனான தகவல்களையும் பால்வினைத் தொழில் - பெண்ணிய நோக்கு என்ற கட்டுரையின் மூலம் றஞ்சி தந்திருந்தார். இடைச்செருகலாக வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தால் என்ன..! வளர்ச்சியடையாத நாடாக இருந்தால் என்ன...! எங்கும் பெண்கள் இரண்டாந்தரப் பிர¨ஐகளாகவே கையாளப் படுகிறார்கள் என்பதையும் பெண்கள் இன்னும் சுதந்திரமாகச் செயற்பட முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையும் தாயகத்தில் நடை பெறும் பாலியல் துர்ப்பிரயோகங்களையும் றஞ்சி சுட்டிக் காட்டியிருந்தார்.

¦ஐயந்திமாலா மறுபக்கம் என்ற தனது கட்டுரையில் உலகின் திறந்தவெளிப் பால்வினைத்தொழில் விடுதியைக் கொண்ட கியூபாக் கடற்கரை, தாய்லாந்து, சுவிஸ் போன்ற இடங்களில் எப்படியெல்லாம் பெண்கள் பயன் படுத்தப் படுகிறார்கள் என்பதை ஆய்ந்திருந்தார். தாய்லாந்தில் கட்டாயப் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்ட பெண்குழந்தைகள் சிறு வயதிலேயே எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி சீரழிக்கப் படுகிறார்கள் என்பதையும் பெளத்த மதக் கோட்பாட்டைக் காரணம் காட்டி முற்பிறப்பில் அவர்கள் செய்த கர்ம வினையாலேயே இப்படி ஆனார்கள் என்ற நியாயப் படுத்தலை ஆணாதிக்க பெளத்த மதம் நியாயப் படுத்துகிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இடத்தில் நின்று நிதானித்து நாம் யதார்த்தமாகச் சிந்தித்துப் பார்ப்போமேயானால் - பால்வினைத்தொழிலை முற்றாக அழிப்பது என்பது இயலாத காரியம். அப்படியிருக்கும் போது அறநெறிப் பண்புகளைக் காரணம் காட்டி அதற்கு அங்கீகாரம் வழங்க மறுப்பது ஏற்கெனவே துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் கட்டாயப் பால்வினைத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களை இன்னும் துன்பச் சகதிக்குள் தள்ளுவதற்கே சமனாகும். இத்தொழிலை சட்ட பூர்வமாக்கும் போது இந்தப் பாழுங்கிணற்றுள் கட்டாயமாகத் தள்ளி விடப் பட்ட பெண்களோ அன்றில் குழந்தைகளோ எவராயினும் பயமின்றித் தமது பிரச்சனைகளையும், உள்ளுக்குள் நடைமுறைப் படுத்தப் படும் வன்முறைகளையும்... வெளியிலே சா¢யான இடங்களில் எடுத்துக் கூறி தம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம். தம்மை முறைப் படியான உடல் நலப் பா¢சோதனைக்கு உட்படுத்தலாம். இவைகளால் எத்தனையோ விதமான நடைமுறைச் சீரழிவுகள் குறையும். இது பற்றி கவித்ராவின் மொழிபெயர்ப்புக் கட்டுரையில் மட்டுமல்லாது இம் மலா¢ல் இடம் பெற்ற மற்றைய அனேகமான எல்லாக் கட்டுரைகளிலும் குறிப்பிடப் பட்டிருந்தது. 

இதே நேரம் றஞ்சியின் கட்டுரையில் நான்கு வருடங்கள் பால்வினைத் தொழிலாளியாக இருந்த Carmen இப்போதுள்ள அமைப்பு முறையில் நாம் கைது செய்யப் பட்டால் இரும்புக் கம்பிகளின் பின் தள்ளப் படுகிறோம். பாலியல் தொழிலைச் சட்ட ரீதியாக்கிய பின் நாம் முட்கம்பிகளின் பின்னால் தள்ளப் படுவோம் என்று கூறியதும், சட்டங்களை அமுல் படுத்தும் அதிகாரிகள் எப்படிச் சட்டங்களை தமக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள் என்பது பற்றியும்  குறிப்பிடப் பட்டிருந்தது. 

அப்படியானால்...? பால்வினைத் தொழிலை சட்டரீதியாக்கினாலும் கூட இதனுள் வீழ்ந்த பெண்களுக்கு விமோசனம் கிடையாதா..? மீண்டும் எம்மிடம் கேள்வி எழுகிறது.

சிந்துக்கரையாளின் - உலகமயமாக்கலும் தென்கிழக்காசியாவின் பால்வினை வர்த்தகமும் - என்ற கட்டுரையும் கவித்ராவினதைப் போல ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரையே. இவர் PeopleS Solidarity For Social Progress (PSSP) என்ற மாத சஞ்சிகையில் மார்ச் 2001 இல் கொரிய மொழியில் மின்சூய் என்பவரால் எழுதப் பட்ட ஒரு கட்டுரையை மொழி பெயர்த்திருந்தார். பெண்கள் மீதான சுரண்டல் பற்றியும் 2001 இல் குன்சான் இல் உள்ள பால்வினைதொழிலாளர் விடுதி எ¡¢க்கப் பட்ட போது அதற்குள் சிறை வைக்கப் பட்டிருந்த பால்வினைத் தொழிலாளப் பெண்கள் கருகியது பற்றியும் இக் கட்டுரை கூறுகிறது. மேலும் இக் கட்டுரையில் பால்வினைத் தொழிலாளர் பற்றியும் அவர்கள் மீதான சுரண்டல்கள் பற்றியுமான இன்னும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. 

தீபா - தனது பால்வினை - பரிணாமம் என்ற கட்டுரையின் மூலம் - முந்திய காலத்தில் பணக்கார ராஐ¡க்களும் வணிகர்களும் இன்னும் சுகபோக வாழ்வில் மையல் கொண்ட மானுடரும் போகும் இடமெல்லாம் சுகபோகம் காண விளைந்ததின் பயனே பால்வினைத் தொழில் தோன்றியதற்கான அடிப்படைக்காரணம் என்றும், ஹைசா என்று அழைக்கப்பட்ட ஆரம்பகால விலைமாதர்கள் எப்படி உருவாக்கப் பட்டார்கள் என்பது பற்றியும் மிகவும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். 

தேவா - சில முரண்கள் - குறிப்புகள் - என்ற கட்டுரையினு¡டு தொழில் நிலையங்களில் பாலியல் வன்முறை... மதம் சார் பால்வினைத் தொழில்... அரசு சார் பாலியல் வன்முறை.. குடும்ப வறுமை காரணமாக பெற்றோர்களால் பால்வினைத் தொழிலுக்கு விற்கப் படும் பிள்ளைகளின் அவலம்... என்று பல விடயங்களைத் தொட்டிருந்தார். குறிப்பாக தமிழ் சமூகங்களில் பாலியல் என்பது ஆணுக்கான ஒரு விடயமாகக் கருதப் பட்டு, பெண்ணுக்கு அது பற்றியதான எந்த அறிவும் கொடுக்கப் படாமல், அது தெரியாமல் இருப்பதுதான் பெண்ணுக்கு அழகு என்னும் விதமாக வளர்க்கப் படுவது பற்றியும், அவள் உடல் பாலியல் உறுப்பு என்பவைகளை கருத்தில் வைத்தே சடங்குகளும் சம்பிரதாயங்களும் நடாத்தப் படுவது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இவரது எழுத்தில் தமிழ் சமூகத்தின் மூடுமந்திரத் தன்மையின் மீதான இவருள்ளான கோபம் தொ¢ந்தது.

உமா - மானிடராய் வாழ என்ற கட்டுரை மூலம் எங்கெங்கெல்லாம் பால்வினைத் தொழிலைச் சட்ட பூர்வமாக்கப் படுவதற்கான கோ‘ங்கள் எழுகின்றன. எங்கெங்கெல்லாம் பால்வினைத் தொழிலைச் சட்ட பூர்வமாக்கியுள்ளார்கள் எங்கெங்கெல்லாம் மறுக்கப் படுகின்றன என்பது பற்றியும், பெண்கள் மீதான ஆண்களின் பாலியல் சுரண்டல்கள் பற்றியும், ஆணாதிக்க சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்கான முக்கிய கூறாகவே பெண்ணொடுக்கு முறை இருப்பது போலவே இச் சமுதாயத்தில் பால் வினைத் தொழிலாளர்களின் பங்கும் ஆணாதிக்கத்தின் ஸ்திரத் தன்மையுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

பார்வதி கந்தசாமி - பாலியல் சிக்கல்களா? உரிமை மறுப்புக்களா? என்ற கட்டுரை மூலம் தமிழ் சமூகத்தில் எப்படியெல்லாம் ஆண்கள் மேன்மைப் படுத்தப் பட்டு, பெண்கள் தாழ்த்தப் படுகிறார்கள் என்பதையும் அதனாலான பிரதி பலிப்புகளையும், அதனால் பெண்கள் தாங்கிக் கொண்டுள்ள அசெளகா¢யங்களையும் சற்றுக் கோபமாகச் சுட்டியிருந்தார். 

மேலும் மிக்சிக்கன் சட்டக்கல்லு¡ரியில் - பால்வினைத்தொழில் சர்வகலாசாலையில் இருந்து செயற்பாட்டுக்கு - என்ற தலைப்பின் கீழ் அந்திரியா ட்வார்கின் (Andrea Kworkin) -  ஆற்றிய உரை ஒன்ற மொழிமாற்றம் செய்யப் பட்டு பால்வினைத் தொழிலும் ஆண் மேலாதிக்கமும் என்ற தலைப்பில் தரப்பட்டிருந்தது.

இக்கட்டுரைகளின் நடுவே எனது கட்டுரையான பால்வினை என்ற கட்டுரையும் இம்மலரில் இடம் பெற்றிருந்தது. நான் எழுதிய கட்டுரைக்கு நானே வியாக்கியானம் சொல்ல முடியாது. ஆனாலும் அந்தக் கட்டுரையை எழுதுவதற்காக நான் வாசிகசாலை, பால்வினைத் தொழில் மையங்களில் ஏதோ ஒரு மூலையிலேனும் கடமையாற்றுவோர், இணையத்தளம்.. என்று பலதையும் நாடினேன். அதன் பயனாக இங்கு நான் கட்டுரையில் தந்ததை விடப் பன்மடங்கு அதிகமான என்னை வதைப்பதான தகவல்களைப் பெற்றேன். இதற்கான தகவல்களைத் திரட்டும் இந்தக் கால கட்டத்தில் என்னால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியாத படி மனசு ஏதோ ஒரு சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தது. இப்படியும் நடக்கிறதா..? இப்படியெல்லாம் சின்னஞ்சிறு சிறுமிகளும், பெண்களும் துயருறுகிறார்களா..? உலகம் இத்தனை ஏமாற்றுத் தனமும் நயவஞ்சகமும், சுயநலமும் நிறைந்ததா..? என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டே இருந்தன. சில விடயங்களை நம்பவும் முடியாமல், நம்பித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பால்வினைத் தொழிலுக்காகவும், பாலியல் துர்ப்பிரயோகத்துக்காகவும் பலிக்கடாக்கள் ஆக்கப் பட்ட பெண்களின் துயர்களை மனசை விட்டு அகற்றவும் முடியாமல்.. அவஸ்தைப் பட்டேன். அடிக்கடி போலந்து, தாய்லாந்து, உக்ரையின், கென்யா, சீராலியோன்... போன்ற நாட்டுப் பெண்குழந்தைகளும் அவர்களது கண்ணீரும் என் நினைவில் வந்து கொண்டே இருந்தன. என் மனதை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது இந்த நினைவுகளிலிருந்து விடுவித்துக் கொள்ள எனக்குச் சில மாதங்கள் தேவைப் பட்டன என்பதை உங்களுக்கும் தெரியப் படுத்த விரும்புகிறேன்.

நிருபாவினது பயந்தாங்கொள்ளியும், ராஜேஸ்வா¢ பாலசுப்ரமணியம் அவர்களின் சென்னையில் ஒரு சின்ன வீடும் பால்வினைத் தொழில் பற்றிப் பேசாவிட்டாலும், பாலியல் துர்ப்பிரயோகம் பற்றிப் பேசின. இரண் டுமே வெவ்வேறு கோணங்களிலான கதை வடிவங்களில் தரப்பட்டிருந்தாலும் உள்ளடக்கம் சிறுமிகள் மீதான பாலியல் துர்ப்பிரயோகம் சம்பந்தமானதாகவே இருந்தன. 

கதை சொல்லும் உத்தி நிரூபாவுக்குக் கை வந்த கலை. எப்படியெல்லாம் எழுதுகிறார்..! வியக்க வைக்கிறார். யதார்த்தம்.. முழுக்க முழுக்க யதார்த்தம். கதையின் நடை, வார்த்தைப் பிரயோகம்... சொல்லும் விடயங்கள் அத்தனையிலும் யதார்த்தம் ஒட்டியுள்ளது. பல சிறுமிகளின் வாழ்வுகள் எப்படி நகர்கின்றன என்பது பலருக்குத் தொ¢யாது. சொல்லப் படாமலே, எழுதப் படாமலே மனசுக்குள்ளே விழித்திருக்கும் அந்த அருவருப்புகளை பயந்தாங்கொள்ளியில் வரும் கதாநாயகியான அந்தச் சிறுமி அனுபவித்திருக்கிறாள். எத்தனையோ விடயங்களை சிறுமியாக இருந்து பார்த்திருக்கிறாள். கதையிலே வரும் மலரக்காவினதும் விக்கியினதும் தொடர்பை அவள் அந்த வயதில் விளங்கிக் கொண்ட விதத்தையும், அந்த விக்கியாலேயே அவள் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு ஆளாகிறாள் என்பதையும், ஆனால் இதில் எதையும் அவள் வெளியில் சொல்ல முடியாத படிக்கு பேய் பிசாசு என்று பயமுறுத்தப் பட்டுள்ளாள் என்பது மட்டுமல்லாமல் இப்படியான விடயங்களை எல்லாம் மனம் விட்டுப் பேசுமளவுக்கு அவள் தாயோ, ஆச்சியோ இடம் கொடுப்பதில்லை என்பதையும் நிரூபா மிகவும் தத்ரூபமான முறையில் சொல்லியுள்ளார். ஆச்சிக்கு எப்பவும் அயதி. மழை பெஞ்சுதெண்டால்.. என்று நிரூபாவின் பிறப்பிடம் வடமராட்சியோ என்று எண்ணும் அளவுக்கு, வடமராட்சி மண்ணின் தமிழ் வாசனையைக் கலந்து அடுக்கிக் கொண்டே போகிறார். 

நிரூபாவின் கதையை வெறும் கதையாகக் கருத முடியாது. ஒரு உண்மையின் பிரதி பலிப்பு. இப்படியான விடயங்கள் அன்று மட்டுமல்ல. இன்றும் தொடர்கின்றன. இதைப் பெரும்பாலானவர்கள் ஏற்க மறுத்தாலும் லண்டனில் சமூக நலப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் - சென்னையில் ஒரு சின்ன வீடு - என்ற கதை வடிவிலான ஆக்கம் உண்மை என்று அத்தாட்சி படுத்துகின்றது. சாந்தி என்ற பெண்குழந்தை தனது பன்னிரண்டாவது வயதிலேயே அவளது தாய்மாமனால் சிதைக்கப் படுகிறாள். அவள் சிதைக்கப் பட்டதோ அல்லது தொடர்ந்தும் அவள் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு ஆளாகிக் கொண்டிருப்பதோ அவளது தாய்க்குத் தொ¢யாது. அல்லது பு¡¢யவில்லை. அல்லது பு¡¢ந்தும் அது பற்றிப் பேசவோ, நடந்ததை ஒப்புக் கொள்ளவோ ¨தைரியமில்லை. எத்தனையோ விதமாகக் கலாச்சாரம் பண்பாடு என்று பேசிக் கொண்டிருக்கும் எமது சமூகத்துக்குள்ளும் இப்படியான கொடுமைகள் நடக்கின்றன. அவைகளும் வீட்டுக்குள்தான் கூடுதலாக நடக்கின்றன. இதை ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் தனது ஆதங்கம் நிறைந்த வரிகளால் மனதைத் தொடும் படியாகச் சொல்லியுள்ளார். இதே கருத்தை அதாவது குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மிக நெருங்கிய உறவுகளாலேயே நிகழ்த்தப் படுகிறது என்பதை பார்வதி கந்தசாமியும் தனது கட்டுரையில் சுட்டியிருந்தார்.

இன்னும் விலங்கிடாப் பெண் என்ற கவிதை மூலம் கோசல்யாவும், எய்ட்ஸ் நீ வாழ்க  என்ற கவிதை மூலம் ஈஸ்வரியும் தலைப்பிடப் படாத கவிதை ஒன்றின் மூலம் பாமதியும் தத்தமது உணர்வுகளை அழகாக வெளிப் படுத்தியிருந்தார்கள்.

மிகுந்த சர்ச்சைக்குள்ளான, பெண்கள் சந்திப்பு மலரின் அட்டைப்படத்தை அவுஸ்திரேலியாவில் பிறந்த, பெண்களுக்காகக் குரல் கொடுத்த Germani Greer  வரைந்திருந்தார். இப்படம் 1970ம் ஆண்டு முதற் தடவையாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தாலும், 1981 Granado Publication லண்டன் என்ற அமைப்பினால்  The Femalee Unach என்ற  பெண்கள் சஞ்சிகையில் மீண்டும் பிரசுரிக்கப்பட்டது.  ஆனாலும் இந்தப் படத்தை பெண்கள் சந்திப்பு மலரின் அட்டைப் படமாக்கிய போது இதையும் பிரசுரிக்கலாமா..? என்ற கருத்துப்பட குற்றப் பட்டியல் தயா¢த்து வைத்துக் கொண்டு ஆர்ப்பா¢த்தவர்கள் பலர். ஆர்ப்பா¢த்தவர்களில் ஆண்களை விட பெண்கள்தான் அதிக பங்கு வகித்தனர் என்பதுதான் வருத்தத்துக்குரிய விடயம். நியத்தில் பெண்களின் சுயம் வதை பட்டுக் கொண்டிருக்கும் போது அது பற்றி வருத்தப் படாதவர்கள், படத்தில் வந்த உள்ளாடைக்காகக் குதித்தார்கள். அது ஒரு ஓவியம் என்பதை அவதானிக்கக் கூட முயலாமல் கூச்சலிட்டார்கள். 

தன் முகம் காட்ட துணிவற்ற ஒரு பெண் எழுத்தாளர் நிலவன் என்ற பெயரில் இணையத்தளமொன்றில் இப்படி எழுதியிருந்தார்.

'அண்மையில் பால்வினைத் தொழிலாளர் எனும் நூலொன்று வெளிவந்துள்ளது. எனக்கும் பார்க்கக் கிடைத்தது. புத்தகத்தை நண்பர் நிச்சயம் படிக்கும்படி வலியுறுத்தியதனால் நானும் வாங்கிப்படித்தேன். புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் இது எமது பெண்களால் வெளியிடப்பட்டதா ? அல்லது  ஜரோப்பியரது வெளியீடா என எண்ணவைத்தது. அப்படியொரு அட்டைப்படம். இதிலிருந்து எமது பெண்ணியவளர்ச்சியை மதிப்பிடக் கூடியதாக இருந்தது. 

இதில் உமா (ஜேர்மனி) 
றஞ்சி (சுவிஸ்) 
சந்திரவதனா செல்வகுமாரன்(ஜே+மனி) 
சிந்துக்கரையாள் 
பார்வதி கந்தசாமி 
ஜெயந்திமாலா குணசீலன் 
தேவா(ஜேர்மனி) 
ராஜேஸ்வரி 

போன்ற படைப்பாளர்கள் எழுதியுள்ளார்.  இப்பால்வினைத் தொழிலாளர் நு¡லில் அடக்கப்பட்ட விடயங்கள் மிகுந்த சர்ச்சையை உண்டுபண்ணும் விடயங்களாகவுள்ளன.  அதனை முன் அட்டைப்படமே சொல்கிறது. இதில் எழுதியுள்ள பெண்களில் எத்தனைபேர் நல்ல தெளிந்த பெண்ணியச் சிந்தனைகளுடன் உள்ளார்கள் என்று ஆராய்ந்தால் பூச்சியமே விடையாகக் கிடைக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.  இது பெண்ணியத்துக்கோ அல்லது பெண்விடுதலைக்கோ எதிரான குரலாக யாரும் து¡க்கவேண்டாம்.  எனெனில் இந்நூலில் பேசப்பட்டுள்ள விடயம் எமது பெண்களுக்கான பிரச்சனையாக இல்லை. நமது உரிமைகளை நாமே தவறாகப் பயன்படுத்தி ஒரு நல்ல சமூகத்தின் சிந்தனைகளின் மீது குப்பையை வாரக்கூடாது'.

அட்டைப் படத்துக்கும் பெண்எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கும் முடிச்சுப் போட முனைந்த இவரது அறியாமையை என்ன சொல்ல. ஆண்களில்தான் சிலர் பெண்விடுதலை பற்றிப் பேசினாலே - ஜரோப்பியக் கலாச்சாரம் - என்று சொல்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு அட்டைப் படத்தைப் பார்த்து இது ஜரோப்பிய வெளியீடா...! என்று விழிக்கும் பெண்கள் மத்தியில் என்ன செய்யலாம்..?  ஏன் ஜரோப்பியப் பெண்களுக்கு மட்டுந்தான் சுதந்திர உணர்வுகள் உள்ளதா? நாமெல்லாம் என்ன ஐடங்களா?

உலகின் அதி புரதான தொழில் ஒன்றினால் பெண்கள் மீது அதி உச்ச அடிமைத்தனத்தை உலகம் பிரயோகித்துக் கொண்டு இருக்கும் போது பெண்கள் நாம் பேசாதிருக்கலாமா? என்பதான கேள்விகள் எம்முள் எழும் போது...........நாம் பேசத்தான் வேண்டும் என்கின்றன பெண்கள் சந்திப்பு மலா¢ல் இடம் பிடித்துள்ள ஆக்கங்களும் தகவல்களும். தகவல் தந்த... அதைப் பதிவாக்கித் தந்த... சமூகப் பிரக்ஞை நிறைந்த அனைத்துப் பெண்களுக்கும் என் மனதார்ந்த நன்றி.

பெண்கள் சந்திப்பு மலரின் வருகைக்கு உள்ளிருந்தும், வெளியிருந்தும் உதவியது மட்டுமல்லாது எனதும் மற்றையவர்களதும் இது பற்றியதான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்வதற்கும் இப்படியானதொரு அரிய சந்தர்ப்பத்தை வழங்கிய றஞ்சிக்கு எனது பிரத்தியேகமான நன்றி.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வ.ந.கிரிதரன் பக்கம்
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்