முன்னுரைஉயிர் சுருட்டி கனிமொழி செல்லத்துரை என்பவரால் எழுதப்பட்ட நாவல். 2025 இல் வெளியான இந்நாவல் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைக் கதைக்களமாகக் கொண்டு அமைந்துள்ளது. கதைக்களம் என்று சொல்லுவதை விட வேதாரண்யத்தின் நிலவியல் வரைபடமாக இந்நாவல் உள்ளது என்றால் அது மிகப் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், வேதாரண்யம் பகுதியில் உள்ள மக்களின் ஒரு குறிப்பிட்ட காலகட்ட பண்பாட்டு எச்சங்களை ஆவணப்படுத்துவதாக அமைந்துள்ளது இது.
பொதுவாக நாவல்களில் ஒரு மையத்தைச் சுற்றியதாகக் கதைப்பின்னல் அமைந்திருக்கும். அதாவது, கதை அல்லது கதப்பாத்திரம் என்ற ஏதாவதொன்றினை அது முதன்மை படித்தி அமையும். அதுவும் இம்மாதிரியான வட்டார நாவல்கள் என்ற வகைப்பாட்டில் உள்ளவை அதை இன்னும் கூர்மைபடுத்திக் கூறும்.
இதுதான் முதன்மை கதாபாத்திரம் என்று கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அந்நிலம் சார்ந்த மக்களின் வாழ்க்கை முறையின் தொடர் இயங்கியலை இந்நாவல் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எனில், இந்நாவலில் கதாநாயகன், கதாநாயகி என்று யாரும் இல்லையா? கதை என்று எதுவும் இல்லையா? என்று நாம் நினைத்துவிட முடியாது. ஏனெனில் இதற்குள் தொடர்ந்து ஒரு கதை, அந்த கதையோடு தொடர்புடைய இன்னொரு கதை என்பதாக, கதைக்குள் கதை கதையோடு தொடர்புடைய இன்னொரு கதை என்று அது பின்னிப் பிணைந்துள்ளது.
நாவலுக்குரிய புனைவுத்தன்மையில் சிறிதும் குறைவில்லாமல் விளங்கும் இந்நாவலில் அழகியலைக் காட்டிலும் அரசியலை அதிகம் முன்னிருத்திச் செல்லுகிறது. அது கதாப்பாத்திரங்களின் வாழிலாகவும் கதாசிரியன் இடையீடுகளாகவும் நாவல் நெடுகிலும் பரவலாக வெளிப்படுகின்றது.
நாவலின் கதைக்களம்
ஒரு அரசு அதிகாரி ஒரு பெரு (தஞ்சை) நகரத்திலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு பயணப்படுவதாகத் தொடங்கிறது இந்நாவல். அவ்வாறு பயணிக்கும் அவர் திருத்துறைப்பூண்டிக்கு விரைவுப் பேருந்துக்குப் பதிலாக சின்ன சின்ன நிறுத்தங்களிலும் நின்று செல்லும் சாதாரணப் பேருந்தில் பயணிக்கிறார். செல்லுகிற போது சாலையின் இருபுறங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை (கட்டிடங்கள், சாலை முதலான...) அவர் அதிசயமாகப் பார்த்துக் கொண்டே செல்கிறார். திருத்துறைப்பூண்டி அடைந்ததும், அங்கிருந்து மற்றொரு பேருந்தில் வேதாரண்யம் நோக்கிப் பயணிக்கிறார். அப்பொழுது அவர் தன்னுடைய பூர்வீகக் கிராமத்தில் இருந்து நகரதிற்குச் செல்லும் பொழுது மக்கள் எவ்வாறு இருந்தார்களோ அதே நிலையில் மாறாமல் இருக்கின்ற வாழ்வியல் முறையைக் காண்கிறார் எனத் தொடங்குகிறது இந்நாவலின் கதை. இவ்வாறு நாவலின் தொடக்கத்திலே ஒரு புறமும் கட்டிடங்கள் முதலான நகரமயமான வாழ்வியல் மாற்றங்களும் மறுபுறம் மக்களின் மாறாத வாழ்வியலும் எனச் சமூகத்தின் இரு விதமான நிலையை ஒப்பிட்டுக் காட்டித் தொடர்கிறது நாவலின் கதை.
வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு கிராமத்தை நோக்கி தனக்குக் கீழ் வேலை செய்யும் சகஊழியர் கொண்டு வந்த அவருக்கான வாகனத்தில் பயணத்தைத் தொடரும் பாலு என்ற அவர் ‘புகையிலையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரிப்பதற்காகத்தான் தன்னுடைய பூர்வீக கிராமத்திற்குச் செல்கிறார்.
புகையிலையால் உயிர் இழந்த தன்னுடைய தந்தை முருகையனால் தன்னுடைய கல்வியைத் தொடர முடியாமல், அதே வேளை புகையிலையைப் பயிர் செய்வதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஆனந்தின் தம்பி தான் இந்த பாலு என்பதும் அவனால் படிக்க வைக்கப்பட்டு ஆளானவன் என்பதும் முன் கதை.
இளைய மகன் உயர் அதிகாரியாக மாறிய பின்னணியிலும், அந்த வேலையை விட்டுவிட்டு வெளியில் வர எவ்வளவு சிரமப்பட்டும் அதிலிருந்து மீள இயலாமல் மீளா வட்டத்திற்குள் சுழன்றுகொண்டுள்ள ஆனந்த் வாழ்க்கை அவனது மகன் காலத்திலாவது மீளுமா? என்ற ஆனந்த் தாயாரின் எதிர்பார்ப்புடன் ஆந்த முன்கதை வாசகனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு நீள்கிறது.
சாராயம் விற்று வசதியைப் பெருக்கிக் கொண்டவன். ஊரை ஏமாற்றி வசதியைப் பெருக்கிக் கொண்டவன். வயலில் உழைத்துக் கொண்டுவரும் பூ மற்றும் புகையிலையின் உற்பத்தியை வாங்கி விற்பதின் மூலம் வசதியைப் பெருக்கிக் கொண்டவன். ஏன் கல்வியால் (ஆனந்த் தம்பி பாலு) அதிகாரியாக மாறியதன் மூலம் தன் வசதியை, வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டவன் எனக் கதையில் பலர் சுட்டப்பட்டாலும் உழைப்பால் வாழ்க்கைத் தரம் மாறியதாக இல்லாமல், ‘ஏதோ! வாழ்க்கை நகர்கிறது, என்பதான நிலையில்தான் அந்நிலத்தில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்’ என்று அந்நிலத்தின் / மக்களின் வாழ்க்கைத் தரம் ஓர் ஆவணப்படமாகிறது வாசகனுக்கு.
வேதாரண்ணத்தை அடுத்த ஒரு சிறு கிராமத்தின் ஏறக்குறைய 30 ஆண்டுகால காலகட்ட சிறு சிறு அசைவுகளையும் தனக்குள் கொண்டுள்ள இந்த நாவல் புகையிலை உற்பத்தி - புகையிலை பாதிப்பு என்ற இருவிதமான மக்களின் வாழ்க்கையில் நீங்காமல் இருக்கின்ற முரண்பட்ட ஒரு வாழ்கைச் சூழலை ஒருபுறமும், மறுபுறம் ஊரில் நடக்கக்கூடிய அதிகாரவர்க்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகள், சிறுவர்களின் பால்யபருவ எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் எனச் சமூகத்தின் பல்வேறு விசயங்களைப் போகிற போக்கில் வெளிப்படுவத்திச் செல்கிறது.
ஆனந்த் என்ற 10 வயது சிறுவன் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்ற தன்னுடைய தந்தையைத் சேடிச் செல்கிறான் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனையில் இல்லை என்பதை அறிந்த அவன் தஞ்சாவூர் மருத்துவமனையில் இருக்காலம் என்ற தகவல் அறிந்து அங்குச் செல்கிறான்.
கிராமத்தில் வளர்ந்த அதுவரை வேதாரண்யத்தைத் தாண்டி வேறெங்கும் செல்லாதவன் தன் சிறு கிராமத்தில் இருந்து தஞ்சாவூருக்குத் தனியாக பயணிக்கிறான். அப்படிப் பயணப்பட்டுப் போன அவன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிரமப்பட்டுத் தேடி அலைந்துதிரிந்து தன் தந்தையைக் கண்டுபிடிக்கின்றான். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான பிரிவில் அவருடன் சில நாட்கள் தனியாகத் தங்கி இருக்கிறான். அங்கு தான் அச்சிறுவனுக்குப் புகையிலையினால் தன் தந்தைக்கு நேர்ந்த தீங்கினை அறிந்துகொள்கிறான். மருத்துவமனையிலுள்ள ‘புகையிலை தீங்கு’ பற்றிய வாசகத்தைப் பார்த்தவனுக்குத் ‘ஊரில் தான் விளைவிக்கும் போயில என்பதும் தன் தந்தையைப் போன்றே பலரது உயிரை வாங்கத் துடிக்கும் புகையிலையும் ஒன்றுதான்’ என்பதை அறிந்து கொள்கிறான். அப்படி அறிந்து கொள்ளும் அவனால் அந்தப் பயிர் செய்வதிலிருந்து மீள இயலவில்லை. அப்படி ஒரு நெருக்கடியான வாழ்க்கை அவனுடையது.
தந்தை முருகையனின் மரணம். அந்த மரணத்தைத் தொடர்ந்து மூத்த மகன் என்ற கடன் தன்னுடைய கல்வி - வாழ்க்கை பாதிப்பு என்பதைத் தாண்டி பயிர் செய்ய வாங்கிய கடனை அடைப்பது. தன்னுடைய தம்பியின் கல்விச்செலவு என்பன போன்ற காரணங்கள் நாவலில் சொற்களால் சொல்லாமல் வாசிப்பால் உணர்ந்து கொள்ள செய்வதாக விரிகிறது இந்நாவலின் கதைக்களம்.
ஆனந்த், ராஜூ, செம்பா இளமை
நாவலில் பல சிறுவர்களின் பால்யபருவத்தின் வாழ்வியல் மிக அழகாக ஆவணப்படுத்தப்பட்டிருகிறது. குறிப்பாக முருகையன் மகன் ஆனந்த் மற்றும் பாலு, கருப்பசாமியின் மகன் ராஜு, சித்திரத்தின் மகன் செம்பா என்ற இந்த மூன்று சிறுவர்களின் வாழ்வியல் இச்சமூகத்தில் இருந்து குழந்தைகள் எவ்வாறு பாடம் கற்கின்றனர் என்பதையும், சமூத்தின் எழுச்சி - வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்தும் மிக ஆழமாக அதேவேளை மிக எதார்த்தமாகப் பதிவு செய்துள்ளது.
ஆனந்த் சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் படும் வேதனைகளையும் குடும்பத்தின் வறுமை நிலையையும் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். அதனால் சேமிப்பது குடும்பத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வது என்று குடும்பத்தின் மீது அக்கறை உடையவனாகத் தன்னை வடிவமைத்துக் கொள்ளுகிறான். தன் வீட்டில் உள்ள சின்ன சின்ன வேலைகளைச் செய்வது, தினமும் அதிகாலையில் எழுந்து பூப்பறிக்கச் செல்வது, மாலை பள்ளி முடிந்து வந்த பிறகு பூந்தோட்டத்திற்குச் சென்று களை எடுப்பது முதலான பிற வேலைகளில் ஈடுபடுவது என்பதாக அவனுடைய அன்றாட வாழ்வியல் அமைந்திருக்கிறது. அத்துடன், குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் முயற்சியாக வயலில் வேலை செய்துகொண்டே அருகில் உள்ள வேப்ப மரங்களில் இருந்து வேப்பம் பழங்களைக் பறித்து வேப்பங்க்கொட்டைகளைச் சேகரிக்கிறான். அதை விற்பதன் மூலமாக கிடைக்கும் ஒரு பெரும் தொகை அவனுடைய தந்தையின் அவசரத் தேவையின் பொழுது கைகொடுக்கிறது.
ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவனான அவன் ஊருக்கு அருகில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவிற்குச் செல்கிறான். அங்குள்ள மற்ற சிறுவர்கள் (நண்பன் ராஜூ) எல்லாம் விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்கின்றார்கள். அவற்றை எல்லாம் பார்த்தும் தனக்குள் தோன்றிய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் தனக்குச் செலவுக்கு என்று அவனது தாயார் கொடுத்தனுப்பிய 50 ரூபாயைச் செலவு செய்ய மனம் வராமல் பத்திரமாக வைத்துக் கொண்டுள்ளான். அப்படி வீண் செலவு செய்து விடக்கூடாது என்று மனதில் உறுதி கொண்டவனாக இருக்கும் அவன் பிறகு அந்த தொகையைக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு அவசியத் தேவையான தோசை கல்லை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாகச் செல்கிறான்.
“அவனப் பாக்க இருப்புக் கடக்காருக்குப் பாவமாகத் தோனுச்சி. ரொம்ப நேரமா பிசுவிகிட்டே நிக்குற தம்பி அம்பது ரூவாவ குடுத்துட்டு இருப்புக்கல்ல எடுத்துக்கிட்டு எடத்தக் காலி பன்னு"ன்னான் அந்த கடக்காரன்.
கைல வச்சிருந்த கல்லத் திருப்பித் திருப்பிப் பாத்தான். பாக்கெட்டுல இருந்த காச எடுத்துக் குடுத்துட்டுக் கையில இருப்புக்கல்ல இறுக்கமா புடிச்சுக்கிட்டு நடந்தான்.
அதுக்குள்ள ராத்திரி பாட்டுக்கச்சேரி ஆரம்பிச்சிருந்தது. இருப்புத் தோசக் கல்ல பாத்து "என்னாடா இனுமே தெனமும் தோசதானா"ன்னு ராஜூவும் கிண்டலு பண்ணான்’’( ப. 117)
தன் நெருங்கிய நண்பனின் தாராளமான செலவும் அவனது கேளிப்பேச்சையும் பொருட்படுத்தாமல் அவனது அந்த செயல் நடைபெறுவது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
ஆனந்திற்கு நேர் எதிரானவனாக கருப்பசாமியினுடைய மகன் ராஜுவின் வாழ்க்கைமுறை அமைந்திருக்கிறது. ஒரே வகுப்பில் படிக்கக்கூடிய அவன் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறான். தன்னுடைய தந்தையின் அதிகாரம் மற்றும் செல்வாக்கு அவனுக்கு அத்தகைய ஒரு சூழலை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது. அவனுக்குப் பள்ளியில் தனித்த மரியாதை கிடைக்கிறது. அத்தகைய தனித்த அடையாளம் சுகபோக வாழ்க்கையை வாழ விரும்புகிறவனாக அவனை மாற்றுகின்றது.
கோயில் திருவிழாவில் ராட்டினம் சுத்திக்கொண்டிருந்தவனை அந்த ஊர்ல இருந்த வெட்டிகும்பல் மிரட்டி பணம் வசூலித்துக் கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்து ஆனந்த் பாவம் ஆந்த ராட்டினக் காரன் என்று வருத்தப்படுகிறான்.
“என்னடா பாவம், அவங்கிட்ட அம்பது ரூவா குடுத்தேண்டா. பத்து ரவுண்டுதான் ஆடுனேன். என்ன ஏமாத்துனான்ல நல்லா வேணும் கட்சில மாட்டுனான் பாரு"ன்னுக் கையத் தட்டிச் சிருச்சான். "நாமளும் பெரியவனாயி அவனுவோள மாதரி திருவிழாவுல வெள்ள வேட்டி வெள்ளச் சட்டப் போட்டுக்கிட்டு வந்து இப்டித் தான்டா கெத்த காட்டனுமு"ன்னு காலரத் தூக்கிவிட்டான் ராஜூ. அவன் கண்ணுக்கு ரோக கலருல கண்ணாடி வாங்கி மாட்டியிருந்தான்.... (ப.114)
அந்த இளைஞளைஞர்களுடைய செயல்பாட்டைப் பார்த்த “ஆனந்துக்குப் படப்படப்பா இருந்தது. ‘அவ்வோல்லாம் பாவம்தானடா அவ்வோகிட்ட இப்டி ஏமாத்துறாவோளே இப்டி வரண்டுறத பாத்தா பாவமா இருக்குடா’ன்னு கவலையோட ராஜூகிட்ட சொன்னான்.
‘இதுல என்னாடா தப்பு நம்ம கோயில்ல வந்து ஒரே நாள்ல எவ்வளோ காசத் தேத்திக்கிட்டுப் போறானுவோ. இவ்வோளயெல்லாம் இப்டித் தான்டா பண்ணனுமுன்’ னுச் சொல்லிகிட்டே மோதிரக் கடக்கிப் போனான்.
ஜிக் ஜிகின்னு ஜிகித்துக்கிட்டு மோதுரக் கட இருந்துது. அதப் பாத்துட்டே நின்னான். ராஜூபய என்ன இவ்ளோ மோசமா இருக்கா அப்பா சொன்ன மாதுரி இவனோட சவகாசத்தச் கொறச்சுக்கணும் போலன்னு நெனச்சுக்கிட்டு நவந்தான்’’ (ப.118).
நாமும் பெரியவனாக ஆனால் இப்படித்தான் மாற வேண்டும் என்று அவன் விரும்புவதைக் கவனித்த ஆனந்துக்கு தன் அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. ‘அப்பா சொன்னது போல இவனுடைய சவகாசம் நமக்குத் தேவை இல்லைதான் போல’ என்று அவனது அந்த நேர்மையற்ற செயலைக் கண்டு விலகவேண்டும் என்று முடிவெடுக்கிறான்.
ஆனால் அவனுடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகான குடும்ப நெருக்கடி அவனது எதிர்காலத்தையே தலைகீழாக மாற்றியமைத்தது.
ஆனந்தின் அரவணைப்பில் வளர்ந்த அவனது தம்பி பாலு சிறு குழந்தையாக இருக்கிற பொழுது ஆனந்தின் கையைப் பிடித்துக் கொண்டு அவனையே சுத்திசுத்தி வருவான். அபடிப்பட்டவன் முருகையன் மறைவுக்குப் பிறகு ஆனந்தால் உயர் அதிகாரியான அவன், அந்த ஊருக்கே தன் தந்தை மறைவிற்குக் காரணமான அதே புகையிலையால் பாதித்த மக்கள் பற்றிய கணக்கெடுப்பு செய்ய வந்தான். தன் தாயின் பிடிவாத்ததால் பல அண்டுகளாக அந்த ஊர்பக்கமே வராமல் இருந்த அவன் இம்முறையும் அதே வேண்டுதலை முன் வைத்தான். இந்த புகையிலை பயிரை விட்டுவிட்டு தன்னுடன் வந்துவிடு என்று’ அதற்கு,
“இந்த மண்ணோட சொகம் எங்க போனாலும் கெடைக்காது. ஒன்னப் படிக்க வச்சி இந்த நெலமக்கி ஆளாக்குறதுக்கு இந்தப் போயிலதாய்யா கையி குடுத்துது. இது இல்லன்னா சோத்துக்கே நம்ம சிங்கி அடிச்சிருக்கணும். நம்ம குடும்பத்த ஏத்திவுட்ட ஏணிய்யா இந்தப் போயில். அவனுக்குத்தான் படிப்பு வல்ல. படிக்க முடியாதுன்னுட்டான். நீ அப்பயிலருந்து படிப்புல கெட்டி போயில் கொல்ல வச்சி ஒன்னய எப்புடியாவது படிக்க வச்சி பெரியாளாக்கி அழகு பாத்து சந்தோசப்படுறான். அவனோட புள்ள குட்டியாவது ஒன்னாமாரி புத்திசாலியா இருக்கனுமுன்னு தெனமும் அந்த கலீத்தய்யாவ வேண்டிக்கிட்டு இருக்கேன்” (ப.14) என்று தன் பிடிவாதத்தில் இருந்து அப்பொழுதும் பின்வாங்கத் தாயாக இல்லை என்பதாகப் பதிலளித்தாள்.
ஆனந்த் பற்றியும் தன்னைப் பற்றியும் புகையிலையின் பாதிப்பு பற்றிய கணக்கெடுக்கும் அரசு அதிகாரியாக வந்த தன் மகனிடம் கூறுகிற மேற்கண்ட செய்தி கூர்ந்து கவனிக்க வேண்டியது.
இது இப்படி இருக்க, இதற்கு நேர் எதிரான வாழ்க்கை வாழ்கிறான் ராஜூ. ஆடம்பரமாகத் தொடங்கிய அவனது எதிர்காலம் கேள்விக் குறியாய் நிற்கிறது. குடிகாரனாக ரோட்டில் திரிந்து கொண்டிருக்கிறான். அவனது வாழ்க்கை ஊதாரி தனமானதாக அமைந்திருக்கிறது.
இப்படி ஆனந்த் ராஜூவின் வாழ்க்கை எதிர் எதிராக முரண்பட்ட நிலையில் அமைந்திருப்பது ஒருபுறம் இருக்க செம்பா என்ற சித்திரத்தின் மகன் வாழ்க்கை சீரழிந்து போவதை இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது.
கருப்பசாமி செல்வாக்கு மிக்க நபர். தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். தனது செல்வாக்கை அந்தச் சமூகத்தில் சீராக நடத்துவதற்கு தொடர்ந்து சிலருக்குச் சாராயத்தையும், போதையையும் கொடுத்து உடன் வைத்துக்கொண்டு சுகபோகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அந்த ஊரில் வேலை செய்கிற சின்னப்பன் என்ற ஆசிரியர் தன் உறவினரின் சைக்கிளைச் சேதப்படுத்தினான் என்று தொடங்கிய ஒரு சிறு பிரச்சனை வஞ்சமாக மாறி அவரை பழிவாங்கியே தீர்வது என விருட்சமாய் வளர்ந்தது. அதன் விளைவு அதற்குப் பலிகடா ஆக்கப்படுகிறான் செம்பாவின் தந்தை. ‘சித்திரத்தின் மகளின் வாழ்கையை அந்த ஆசிரியர் சீரழித்துவிட்டார்’ என்று வீண் பழியை அவர் மீது சுமத்தினான். பஞ்சாயத்துக் கூட்டி அவரிடமிருந்து ரூபாய் 50,000 பணத்தை அபராதமாக அபகரித்துக் கொள்கிறான். அப்படி வாங்கிய அப்பணத்தைச் செம்பாவின் தந்தையிடமும் கொடுக்கவில்லை. அவர் அப்பணத்தை வாங்க நடையாய் நடந்தும் அவருக்குக் கிடைத்தது குடியும் சாராயமும் தான்.
செம்பா தன்னுடைய தந்தையின் வேலையைச் செய்ய வேண்டி நிர்பந்திக்கப்படுகிறான். பள்ளிக்கூடத்தில் இருக்கிற இடம் தெரியாமல் மென்மையானவனாக, மெலிந்த மேனியை கொண்டவனாக, சாதுவானவனாக இருக்கக்கூடியவன் கம்பீரமாக ஆட்டம் ஆட கூடியவனாக திருவிழாவின்போது மாறுகிறான். கருப்பசாமியின் சுயநலம் அவனைச் சித்த பிரம்மை பிடித்தவன் போல மாற்றிவிடுகிறது. அவன் குடுப்பம் சீரழிகிறது. ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் வேப்பில்லை அடித்து நோய் தீர்த்து வைத்த பெரிய வண்ணனால் தன் மகன் மற்றும் பவரப்பிள்ளை செம்பாவின் நோயைத் தீர்க்க முடியாமல் போகிறது.
அதிகாரவர்கத்தின் செயல், விளைவு
ஒன்று சித்திரம் தன் குடி பழக்கத்தால் தன் மகன் செம்பாவின் வாழ்க்கையைச் சீரழித்தல். இரண்டு வீண் பழிசுமத்தப்பட்ட சின்னப்பன் என்ற ஆசிரியர் தன் வேலையை விட்டுவிடுவதால் அவரது மூன்று பெண் குழந்தைகளுடன் அவதிப்படுவது என்ற இரு குடும்பங்களின் எதிர்காலமும் பாழாய்போனதற்குக் காரணம் கருப்பசாமி.
ஒருவரின் (சித்திரத்தின்) குடிபழக்கதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவரைக் கொண்டு வேறொருவரின் (ஆசிரியரின்) வாழ்க்கையையும் தன்னை நம்பிய சித்திரத்தின் வாழ்க்கையையும் ஒன்றாகச் சேர்த்து அழித்தொழிக்கிற ஒரு வேலையை செய்கிறான் அந்தப் கருப்பசாமி. அவனது சுயநலம் ஒரே நேரத்தில் சித்திரம் மற்றும் சின்னப்பன் ஆசிரியரின் குடும்பத்தையும் தத்தளிக்க விடுகிறது. இந்த தவிப்பில் செம்பாவின் கல்வியும் அவனது இளமையும் எதிர்காலமும் கேள்விக்குறியாய் மாறுகிறது.
புகையிலை பயிர் செய்தால் கொஞ்சம் லாபம் அதிகம் கிடைக்கும் என்று முருகையன் அதைச் செய்ய முயல்கிறான். ஆனால் அவனது மரணம் அதைத் தொடர்ந்த ஆனந்த் அதைத் தொடர்ந்தாலும் பெரிய அளவில் அவனது வாழ்க்கை மேம்பாடடைவில்லை. ஆனால் அதனால் வியாபாரிகளுக்கு மட்டும் கொள்ள லாபம் கிடைக்கிறது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மற்ற பயிர்களைப் போலவேதான் இந்தப் புகையிலைப் பயிரும் வணிகர்களுக்கு மட்டுமே செல்வத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்பைத் தருகின்றது. உழைக்கும் விவசாயிக்கும் அதை வாங்கிப் பயன்படுத்தும் நபர்களுக்கும் அதனால் ஏழ்மையும் நோயும்தான் லாபமாய்க் கிடைக்கின்றன.
இரண்டு சமூகத்தின் அதிகார படிநிலையும் நாவலில் இடம்பெற்றுள்ளன. சான்றாக முருகையனின் பின்வரும் செயலைக் கூறலாம்.
பன்னிரண்டு மணிக்கு வரும் கொள்ளிவாய் பேய்க்கதையைத் தன்னுடைய மாமனிடம் கேட்ட ஆனந்த் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாய் ஆனான். அதனால் அவனுக்கு மந்திரிக்க ... அந்த ஊரிலுள்ள பெரிய வண்ணானை அழைத்துவர ஓடிய முருகையன்,
"என்ன காலயிலயே தூங்குறியா" ன்னுக் கேட்டதும் துடிச்சிப் புடிச்சித் திரும்பிப் பாத்தான்.
"வாங்க வாங்க தம்பி"ன்னுச் சொல்லிகிட்டே வேட்டியக் கட்டிக்கிட்டு எழும்ப முடியாம எழும்பினான்....
"சரி சரி புள்ளக்கி ஒடம்புக்கு ஆவல, கொழ அடிக்கணும் நீ ஒடனே கெளம்பி வா"ன்னான்.
"இந்தால வாரன் தம்பி நீங்க வீடு போறதுகுள்ள அங்க வந்து நிப்பேன் வேப்பல சமாச்சரமெல்லாம் சொல்றேன் தயார் பண்ணி வைங்க வந்துடுறேன்" னான்.
வயசு எண்பதுக்கு மேல ஆச்சி, வெளில எதுக்கும் கௌம்பாமதான் இருந்தான். யாருன்னாலும் வண்ணான் வீட்டுக்கு வந்துதான் கொழ அடிச்சுட்டுப் போவாவோ. ஆனா இது மாதரி ஆத்துர அவசரத்துக்கும். முடியலன்னாலும் கெளம்பிப் போயி தான் ஆவணுமுன்னு போவான்.
கூட்டம் கலயாம எல்லாரும் வீட்டுல இருந்தாவோ. பெரிய வண்ணான் வந்ததும் பாத்துட்டு 'வ்வா'ன்னு கத்தினான். "ஆட்டம் அதிசுமால்ல இருக்கு நானா அதுவான்னு ஒரு கை பாக்குறேன்னு கத்தினான்.
‘பெரியவோ புள்ள குட்டி எவ்லாரும் இங்க இருந்து போயிடுங்க இங்குனயே நின்னீங்கன்னா நேரா ஒங்கள வந்து சாடிடுமு’ ன்னு சொன்னதும் எல்லாரும் திக்காவுக்குத் திக்காவ ஓடிப் போயிட்டாவோ.
வீட்டுக்குள்ளப் போவாம பாலுவ மடில வச்சிக்கிட்டு வெளியே நின்னா சீதா அழுவுறத பாத்து பாலுவும் அழுதுகிட்டே இருந்தான்”(ப.130)
மகனுக்கு வேப்பிலை அடிக்க சித்திரத்தின் தந்தையான பெரிய வண்ணானைத் தேடிச் சென்ற முருகையன் தன்னைவிட வயதில் மூத்தவரான அவரை ஒருமையில் பேசுவதும் பதிலுக்கு அந்தப் பெரியவரிடமிருந்து மரியாதையுடன் வெளிப்படும் பதில்களுமான அந்த உரையாடல் வர்கத்தின் பின்னணியில் வெளிப்படும் அதிகார அடக்குமுறையின் ஓர் அங்கமாகத் திகழ்கவதைக் காணலாம். அதாவது, சமூகத்தின் இரண்டு அடுத்தடுத்த பிரிவினரிடையே வெளிப்படும் இந்த உரையாடல் அதிகார அடக்குமுறையின் அங்கமாக அமைவதைக் காணலாம்.
ஒருபுறம் கருப்பசாமி – தன் இனத்தைச் சார்ந்த பெரிவாத்தியாரை மிரட்டிப் பணியவைப்பது, சின்னப்பன் வாத்தியாரை வேலையை விட்டு விலகும் அளவிற்கான மன உலைச்சலுக்கு ஆளாக்கியது என்பன பணம், செல்வாக்கு என்கிற பின்புலத்தில் நடக்கும் அதிகார அத்துமீரல்களாக அமைகின்றன. என்றால், மறுபுறம் கருப்பசாமி – சித்திரதைத் ‘தன் மகள் வாழ்க்கையை ஆசிரியர் சின்னப்பன் சீரழித்துவிட்டார்’ என்று சொல்லும் அளவிற்குத் மாற்றுவதும், முருகையன் தன்னைவிட வயதில் மூத்தவரான பெரிய வண்ணானை அவரது உதவி தனக்கு அவசியம் என்கிற பின்னணியல் மரியாதைக் குறைவாகச் சிறுவர்களை அழைப்பதுபோல் அழைத்து ஒருமையில் பேசுவது என்பது சாதிய பின்புல அதிகாரத்தின் அத்துமீரலாக - வெளிப்பாடாக அமைகின்றது. இவ்வாறு சமூகத்தின் இருவிதமான அதிகாரமையத்தின் அத்தமீரல்களையும் அடக்குமுறைகளையும் அவை உண்டாக்கிய விளைவுகளையும் நாவல் வெளிப்படுத்தியுள்ளதைக் காண முடிகின்றது.
கிராமத்தின் வாழ்வியல்
கிராமத்தின் வாழ்வியல் சுவடுகளை நாவலில் பரவலாகப் பார்க்கமுடிகின்றது. பின்வரும் பதிவை அதற்குச் சான்றாகக் கூறலாம். “அதானடி மருமொவளே அடி வந்துருக்காவோளேன்னு பாத்தேன்"னு சொல்லிட்டுச் சிருச்சா. பணியாரக்கார ஆத்தா எப்ப வெளிய போனாலும் வீட்டச் சுத்தி தன்னோட காலடிக்கூடப் படாம, அடி கழிச்சிப் போட்டுட்டுத் தான் போவா. நல்ல வெள்ள வெளேருன்னு புழுதி மண்ணுல எல்லாக் காலடியும் அப்புடியே தெரியும். அடிய வச்சே, யாரு விட்டுப் பக்கம் வந்ததுன்னு கண்டுபுடிச்சிடுவா. பூச்சி பொட்டு விட்டுக்குள்ள வந்தாலும் கண்டுபுடிச்சிடுவா’’ (ப.127) என்று கிராமத்தின் கண்காணிப்பு கேமரா போன்ற துள்ளியமான கண்காணிப்பு வளையம் பற்றிய பதிவாக மேற்கண்டதைப் பார்க்கலாம்.
இவையன்றி கிட்டிபுள் விளையாட்டு, வெள்ளெளி பிடித்துத் தின்பது. பனங்குருத்து வெட்டித் தின்பது. இரவு பனிரெண்டுமணிக்கு மட்டுமே வரும் கொள்ளிக்கட்டி பேய் பற்றி கதை. உடல் நலத்தை வேப்பில்லை கொண்டு சரிசெய்யும் மக்களின் நம்பிக்கை. திருவிழாவின் போது தோசை சுட அடுத்த வீட்டுத் தோசை கல்லை எதிர்பார்த்திருப்பது, மாவிலக்கு தயாரிக்க அரிசி மாவு இடிக்க உரல் உலக்கை முதலானவற்றிற்காக அடுத்த வீட்டை சார்ந்திருப்பது முதலான கூட்டு வாழ்வியல் முறையின் எச்சங்கள். மரணத்தைத்தவிர வேறு எந்த ஒன்றிற்காகவும் தடைபடாமல் காலையில் தொடர்ந்து நடக்கும் பூப்பறிக்கும் வேலை என கிராமத்தின் அழகிய வாழ்வியலும், மறுபுறம் புகையிலை பாதிப்பும், பால்டாயில் மரணங்களும், அவசர சிகிச்சைக்கு வேதாரண்யம்தான் செல்ல வேண்டும் என்கிற நிற்பந்தமும், அப்படிச் செல்வதற்குச் சரியான வசதி இல்லாததால் நோயாளியைக் கட்டிலில் வைத்து நடந்தே தூக்கிச் செல்லும் அவலங்களும் என ஒரு கிராமத்தின் வாழ்வியலைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
முடிவுரை
உழைப்பு x சுரண்டல், அதிகாரம் x அடிமைத்தனம், வளமை x வறுமை, நகரம் x கிராமம் முதலான பல்வேறு எதிரிணைவுகளை மையமாகக் கொண்ட பல கதைகளால் பின்னிப் பிணைந்துள்ள இந்நாவல், சிறுவர்களின் பால்யத்தின் எதிர்பார்புகள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள் முதலானவற்றையும் மறுபுறம் காட்சிப்படுத்திச் செல்கிறது. பூ, புகையிலை பயிர் சாகுபடி முறைகள், கிராமத்தின் கோயில் நிலங்கள் தனிநபர்களுக்கு ஏமாற்றி விற்பனை செய்தல், சாதிய மற்றும் பொருளாதார பின்புல அதிகார வர்கத்தின் விளைவுகள், பகிர்ந்து வாழும் பண்டய கூட்டு வாழ்வியல் முறையின் எச்சங்கள் என அந்நிலத்தின் கால் நூற்றாண்டுகால அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றைச் சொற்கலால் வரைந்துள்ளது இந்நாவல்.
துணை நின்றவை
இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், பஞ்சாங்கம், க., 2016 (இரண்டாம் பதிப்பு), அன்னம், 1, நிர்மல் நகர், தஞ்சாவூர் – 613 007.
உயிர்சுருட்டி, கனிமொழி செல்லத்துரை, 2025 (முதல் பதிப்பு), ஆம்பல் பதிப்பகம், சென்னை – 600 008.
உடலரசியல், ஜமாலன், 2018 (முதல் பதிப்பு), காலக்குறி பதிப்பகம், 2, லட்சுமி அம்மன் கோயில், 2வது தெரு, சென்னை - 600 066.
பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள், 2018, மேலது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.