[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
[செப்டம்பர் 2003 இதழ் 45 -மாத இதழ்] கனடாவில் கோடைகாலம் தொடங்கிவிட்டால் போதும், அதிலும் சனி, ஞாயிறு தினங்கள் என்றால் கூறத் தேவையில்லை. தமிழர்களின் விழாக்களுக்கு பஞ்சமில்லை. ஒரே நாளில், ஒரே நேரத்தில் பல இடங்களில் வைபவங்கள். புகழ் விரும்பிகள், போலிப்பட்டம் விரும்பிகள், பந்தம் பிடிப்பவர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் நடாத்தும் விழாக்களுக்கு மத்தியில் சமூகத்தை அறிவுபூர்வமாக முன் தள்ளக் கூடிய விழாக்களும் நடைபெறத்தான் செய்கின்றன. இவ்வாறான விழாக்களில் பங்குபற்றுவோரின் தொகையையும் எண்ணிவிடலாம். இவ்விழாக்களுக்கு மத்தியில் அறிவும் ஆக்கபூர்வமும் கொண்ட அதேவேளை 300க்கு மேற்பட்ட ஆத்மார்த்தமான சபையோரைக் கொண்டு கடந்த 2003 ஆவணி மாதம் 24ந்திகதி கனடாவின் ரொரன்ரோ நகரின் ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் ஒரு விழா மாலை 6-8.30 மணிவரை வெகுசிறப்பாக நடைபெற்றது. அது மார்க்சிஸ மேதையும் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதியும் ஆசிரியருமான தோழர் மு.கார்த்திகேசனுக்கு எடுக்கப்பட்ட ஞாபகார்த்த நூல் அறிமுக விழாவாகும்.
கம்யூனிஸ்ட் கட்சி என்பது இலங்கையில் - யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியில் தாழ்த்தப்பட்ட சாதிமக்களின் கட்சி, வட அமெரிக்காவில் பலருக்கு அது ஒரு பூதம் என்ற தப்பான அபிப்பிராயம் இருந்தும், அவர்களது வட்டத்தைக் கடந்து, கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அவர்களுக்கு நினைவு விழா என்ற பதாகையை அரங்கில் முன்வைத்து விழாவை ஒழுங்கு செய்த விழாக்குழுவினரின் துணிச்சலையும் ஆளுமையையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
சபையோர் மத்தியில் கணிசமான பெண்களும், பலதரப்பட்ட வயதினரும், தமிழ்மொழி பேசாத வேறு இனத்தவர்களும் கலந்து கொண்டதையும், மொத்தமாக ஒரு சமூகப்பிரதிபலிப்பாக இருந்தமையையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். வேண்டும். இவர்கள் அனவரும் முகமனுக்காகவோ அல்லது போலியாகவோ வந்தவர்கள் அல்ல என்பதையும் விழாவில் காட்டிய ஈடுபாட்டிலிருந்து தொ¢யவந்தது. இலங்கையிலிருந்து அண்மைக்காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்ந்த பல இடசாரிகளும், தோழர்களும் தங்கள் பழைய தோழர்களைச் சந்திப்பதற்கு இவ்விழா ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது போல் தென்பட்டது.
தோழர் கார்த்திகேசன் விளம்பரத்தையும், ஆடம்பரத்தையும் அறவே விரும்பாத மனிதர். அவரிடம் நாங்கள் அரசியலைக் கற்ற போது அவருக்கு வயதாகிவிட்டது. அவரது மனைவி, பிள்ளைகள் ஆகியோரைக் கண்டு பழகும் வாய்ப்பு அவரது மாணவர்கள், அரசியல் சீடர்கள் பலருக்குக் கிடைக்கவில்லை. இந்த ஆதங்கத்தை நிவர்த்தி செய்யும் வகையில், தோழர் கார்த்தியின் பல்கலைக்கழக காலம் தொடக்கம் முதிர்ந்த அரசியல்வாதியாக செயற்பட்டது வரையிலான புகைப்படங்களையும், அவரது மனைவி பிள்ளைகளின் படங்களையும் விழா மண்டபத்திற்கு வெளியே நேர்த்தியாக அடுக்கியிருந்தனர். அப்படங்களை ஆவலோடு பலர் கிட்ட வைத்துப் பார்த்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
இடதுசாரிகளுள் ஒருவரான பிரேம்ஜி அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்க, கூடத்தின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த கார்த்திகேசனின் படத்திற்கு இன்னொரு இடதுசாரி தோழரான வ. திருநாவுக்கரசு மலர்மாலை அணிவித்தது மிகவும் பொருத்தமான செயல். ப.வைஷ்ணவி என்ற தமிழ் மாணவி தமிழ்த்தாய் வாழ்த்தையும் பின் கனடா தேசிய கீதத்தையும் பாடியதுடன் நிகழ்ச்சி களைகட்டி ஆரம்பமாகியது.
கார்த்திகேசனின் புதல்வி ஜானகி பாலக்கிருஷ்ணன் தனது வரவேற்புரையை தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகழ்த்தியது அவரது ஆளுமையை நிருபித்ததுடன் தமிழ் சமூகத்துடன் மற்றைய சமூகத்தினரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது. தனது தந்தையைப் பற்றிச் சொல்ல நிறைய தகவல்கள் அவரிடமிருந்தும், பெருமிதமில்லாமல் எளிமையாகவும் சுருக்கமாகவும் கார்த்திகேசன் தனது கொள்கையிலிருந்து விலகாதவர், ஒரு வான் நட்சத்திரமாக இருந்திருக்கக் கூடியவர், அதைவிடுத்து தனது சமூகத்தின் கருவாக இருந்து உழைத்ததையே விரும்பினார் எனவும், அச்சேவையினால் அவருக்குப் ஒரு மறுபக்கம் மட்டுமல்ல, பல பக்கங்கள் இருந்தன எனவும் கூறி முடித்தது ஒரு வித்தியாசமான அணுகுமுறையென கூறத்தான் வேண்டும்.
ஜானகியை அடுத்து பிரேம்ஜி தனது தலைமையுரையை நிகழ்த்தினார். கார்த்திகேசனுடன் வடபுலத்தில் அரசியல் வேலை செய்த ஏனைய இடதுசாரித் தலைவர்களைப் பற்றியும் குறிப்பிட்ட பிரேம்ஜி, மார்க்சிஸ தத்துவங்களிலிருந்து சில கூற்றுக்களை மேற்கோள் காட்டி தனது பேச்சை முடித்துக் கொண்டார். சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் மார்க்சிஸம் செத்துவிட்டதாக மேற்குலகக் கம்பனிகளுக்குத் துணை போவோர் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். அந்தப் பிரச்சாரத்திற்குப் பதிலிறுக்கும் வகையில் பிரேம்ஜியின் பேச்சு அமையாதது ஏமாற்றமாகவிருந்தது. மார்க்சிஸ கொள்கைக்காக சேவை செய்த இடதுசாரிகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், தர்மகுலசிங்கம், அண்ணாமலை போன்ற இடதுசாரித் தலைவர்களின் தியாகத்தை ஏன் குறிப்பிடவில்லை என்பது தெரியவில்லை.
யாழ்ப்பாணத் தமிழர் சமூகத்தில் நிலவிய சாதியொடுக்குமுறை எரிமலையாக வெடித்த கிராமங்களில் சங்கானையும் ஒன்று. அந்த எரிமலையை எதிர் கொண்டவர்களுள் ஒருவரான Man முத்தையா ஒரு மார்க்சிஸவாதியும் கார்த்தியின் இன்னுயிர்த் தோழர்களில் ஒருவருமாவார். கார்த்தி பற்றி அவர் யாத்த பாடல் ஒன்றை நாடகக் கலைஞன் திவ்வியராஐன் அன்றைய நிகழ்ச்சியின் நடுவே ராகபாவத்துடன் பாடியது கனமான அரசியல் பேச்சுகள் நடுவே ஒரு உருக்கமான தென்றலாக வீசி சபையோரை நெகிழ வைத்தது.
கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்கு இவ்விழா வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்த வேண்டுமென இவ்விழாக்குழுவினர் நினைத்தார்கள் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் கனடாவின் இடதுசாரிக் கட்சியான புதிய ஐனநாயகக் கட்சி (என்.டி.பி)யின் ஒன்ராறியோ மாகாணத் தலைவரான ஹாவாட் ஹம்டன் வரவழைக்கப்பட்டு, அவர் வர முடியாத பட்சத்திலும், காலத்திற்குத் தக்கதாக கடந்த மின் இருட்டடிப்பு பாதிப்பைத் தொடர்ந்து, உலகமயமாக்கலின் விளைவின் ஒரு பகுதியான மின்சாரம் தனியார் மயமாக்குதல் பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புப் பற்றியும் திரு. போல் கானட் என்பவரை அழைத்துப் பேசவைத்தார்கள். அவர் தந்த விபரங்கள், இங்கு குடிவந்த நாமும் அவ்வாறான அரசியல் நன்மை தீமைகளிலிருந்து ஒதுங்க முடியாது என்பதை அறிவுறுத்தியது.
அடுத்து கார்த்திகேசனின் முன்னாள் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களில் ஒருவரும், அண்மையில் இலங்கைத் தூதரகத்தின் ரொரன்ரோ கொன்சல் ஜெனரலாக நியமனம் பெற்று வந்தவருமாகிய திரு. பூலோகசிங்கம் அவர்கள் கார்த்திகேசன் பற்றிப் பேசி, வெளியீட்டுரை நடாத்தினார். பாரபட்சமின்றி இளம் மாணவர்களை அன்போடும் ஆதரவுடனும் தக்கமுறையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கல்விபுகட்டி அனவரையும் ஆளாக்கிய விதத்தை, கார்த்திகேசனுக்கே சொந்தமான அரசியல், சமூகம் சார்ந்த நகைச்சுவைகளுடன் கூறி, சபையோரைப் பலதடவை சிரிக்கவும் வைத்தார். அவர் ஒரு கார்த்தியின் வார்ப்பு என்பதைக் காணக்கூடியதாக இருந்தது. பிரித்தானிய குடியேற்ற மரபுகளிலும், தமிழ் பிரபுத்துவ மரபுகளிலும் திளைத்திருந்த அக்கால ஆசிரியர்கள் உளம், உடல் சார்ந்த தண்டனையால் மாணவர்களை வேதனைப்படுத்திய காலகட்டத்தில் கார்த்திகேசனின் அணுகுமுறை மனிதநேயம் மிக்கது என்பதை பூலோகசிங்கத்தின் பேச்சு வெளிப்படுத்தியது.
மறைந்த தோழர் மு கார்த்திகேசனின் 25வது ஆண்டு நினைவாக கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் எனத் தலைப்பிட்ட, அவரது வாழ்க்கை, குணாதிசியங்கள், அரசியல், ஆசிரிய சேவைகள் பற்றி கட்சித் தோழர்கள், மாணவர்கள், சக ஆசிரியர்கள், அயலவர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் எனப் பலராலும் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தின் கெளரவப்பிரதிகளை கார்த்தியின் அரசியல் தோழரான சி. தர்மராஐன் வழங்கினார். கார்த்தியின் அரசியல் தோழனும், பிரபல எழுத்தாளருமான என். கே.ரகுநாதன் ஒரு பிரதியைப் பெற்றுக் கொள்ள, மற்றிரு பிரதிகளையும் ரொரன்ரோவில் பொதுப்பணிகளில் ஈடுபட்டவர்களான திரு. திருமதி சிவலிங்கம் அவர்களின் புதல்வி ஹரிணியும், திரு. சிறீஸ்கந்தராஜாவின் மனைவி ஜெனற்றும் பெற்றுக் கொண்டனர்.
இப்புத்தகம் பற்றிய ஆய்வுரைகளை நிகழ்த்த கலாநிதி. பார்வதி கந்தசாமியும், கலாநிதி சேரனும் அழைக்கப்பட்டிருந்தனர். மார்க்சிஸ தத்துவங்களின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வடபகுதியில் முன்னெடுத்த தோழர் கார்த்திகேசன், வடபகுதியிலுள்ள சாதியமைப்பை தகர்ப்பதில் எவ்வாறு உழைத்தார் என்பதை விபரித்த அதேவேளை, பெண்களின் உரிமைக்காக எந்தளவுக்கு உழைத்தார் என்ற கேள்வியை பார்வதி எழுப்பியிருந்தார். தமிழர்களின் கலாச்சாரமும் பெண்களின் பங்களிப்பிற்குத் தடையாக இருந்திருக்கலாம் என்ற பதிலையும் அவரே கூறினார். 1960களின் பிற்பகுதியில் சங்கானையிலும், மட்டுவிலிலும் நடந்த சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் ஆயுதம் தாங்கி பொலிஸ் அடக்குமுறைக்கு எதிராகப் போராடினார்கள் என்ற தகவல் வெளியிடப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லையோ தெரியவில்லை.
இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் வேண்டுமென 1930 தொடக்கம் 1948 வரை வடமாகாணத்தில் போராடிய இளைஞர் காங்கிரஸின்பால் ஈர்க்கப்பட்ட தோழர் கார்த்திகேசன் அவர்கள், அவரது இறுதிக்காலத்தில் சிங்கள இனவாத அரசு தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைக்கு எதிராகப் போராட முன்வந்த அமைப்பான தமிழ்மக்கள் ஐனநாயக முன்னணி என்ற அமைப்பை மறைந்த விசுவானந்த தேவர் போன்ற இளைஞர்களுடன் சேர்ந்து அமைத்துள்ளார் என்ற புதிய தகவலைத் தனது உரையில் தெரிவித்த சேரன், தற்போதைய தலைமுறையினருக்கு கிடைக்காத பல வரலாற்றுத் தகவல்கள் தேடப்பட வேண்டும், அவை ஆவண வடிவில் வரவேண்டும் என்று கூறி, இந்த ஆரம்ப முயற்சியையும், புத்தகத்தின் தலைப்பைத் தொ¢வு செய்த துணிச்சலையும் பாராட்டிச் சென்றார்.
இறுதியில் கார்த்திகேசனின் சக தோழர்களில் ஒருவரும் சமூக, அரசியல் அநீதிகளுக்கு எதிராக இடைவிடாமல் போராடி வருபவருமான தோழர் மார்க் அவர்களின் நன்றியுரையுடன் இவ்வைபவம் முடிவுற்றது.
மார்க்சிஸ தத்துவங்களை ஆழ்ந்து கற்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவற்றைக் கற்பித்தும், எமது தாய்நாட்டில் வாழும் லட்சக்கணக்கான உழைக்கும் பாட்டாளிகள், வறிய மக்களுக்கு சோசலிஸ அமைப்பின் கீழ் விமோசனமும், சுபீட்ச வாழ்வும் கிடைப்பதற்குத் தனது வாழ்வை அர்ப்பணித்த அந்த தன்னலமில்லாத மாமனிதன் கார்த்திக்கு ஒரு ஞாபகார்த்த விழாவும் நடாத்தி ஒரு நு¡லும் வெளியிட்டது அவரது தோழர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரு மன நிறைவே.
தகவல்: ஜானகி பாலகிருஷ்ணன்