சிறுகதை: நெருடல்கள் - ஶ்ரீரஞ்சனி -
வலது கன்னத்தில் குழி விழ, அழகாகச் சிரித்தபடி, “லுக் அற் யுவர் பியூட்டிபுல் சண்”, எனச் சொல்லி, அந்தத் தாதி என் கையில் தந்த என் மகனை இனம்புரியா மகிழ்வுடனும் பதட்டத்துடனும் வாங்கி என் மடியில் வைக்கிறேன், நான். பஞ்சிலும் மிருதுவான அந்தக் கால்கள் என் கைகளில் பட்டபோது என் மனதில் பல வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டுப் பறக்கின்றன.
இவன் என் மகன், எனக்குச் சொந்தமானவன், என் அன்பில் நனைந்து பதிலுக்குத் தன் அன்பில் என்னை முழுக வைக்கப் போகிறவன் என்ற நினைப்பே இனித்தது. அவன் நெற்றியை என் உதட்டருகே எடுத்து மெல்ல முத்தமிடுகிறேன்.
இவனை உருவாக்குவதில் நானும் ஒரு பங்கு வகித்திருக்கிறேன். என் ஒரு பகுதி இவனில் வாழ்கிறது என்பது நம்ப முடியாத அதிசயமாக மனதில் படபடப்பையம் நிறைவையும் தந்ததில் மனசு மிகவும் சிலிர்த்துப் போகிறது.
அரைத் தூக்கத்திலிருந்து விழித்த என் மனைவி சர்மி, என்னைப் பார்த்து மிகுந்த காதலுடன் புன்னகைக்கிறாள். களைப்பாகவும் மருந்து மயக்கத்தில் ஆயாசமாகவும் இருந்தாலும் கூட, அவள் முகத்தில் தாய்மையின் ஜோதி தெரிந்தது. மகனுடன் அவளருகே போன நான் மகனை அவளருகே வளர்த்தி விட்டு, அவள் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுக்கிறேன்.
“சர்மி, என்ன அமைதியாக, எவ்வளவு நிறைவாக என் மகன் நித்திரை கொள்கிறான் பாரேன். என்னால் இவனுக்கு ஒரு நல்ல அப்பாவாக, இவன் வாழ்வுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக, இவனின் நிம்மதிக்கு இடைஞ்சல் இல்லாத உறவாக வாழமுடியுமா?” சொல்லும் போது என் நாக்கு தளுதளுக்க கண்கள் பனிக்கின்றன.