கம்பராமாயணத்தில் தன்மேம்பாட்டுரை அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி , உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று தன்மேம்பாட்டுரை அணி அணியாகும். தண்டியலங்காரத்தில் தன்மேம்பாட்டுரை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
தன்மேம்பாட்டுரை அணி
தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது தன் மேம்பாட்டுரை என்னும் அணியாகும்.
“தான்தற் புகழ்வது தன் மேம் பாட்டுரை”
(தண்டியலங்காரம் 44)
1.வாலி, தாரையிடம் தன்னைத் தானே புகழ்தல்
வாலியை சுக்ரீவன் போருக்கு அறைகூவல் விடுத்தான். வாலியும் போருக்குக் கிளம்புகிறான். அப்போது தாரை, சுக்ரீவனுக்கு உதவியாக இராமன் வந்துள்ளான் என்பதை, நம் அன்புக்குரியவர்கள் கூறியதை வாலியிடம் கூறினாள். அதற்கு பதில் அளிக்கும் போது, வாலி மூன்று என்று அமைந்துள்ள அழிவற்ற பெரிய உலகங்களில் உள்ள உயிர்கள் யாவும் கருத்தால் ஒத்து ஒருங்கு சேர்ந்தவையாகி, எனக்குப் பகையாக வந்து எதிர்த்தாலும் அவை அனைத்தும் தோல்வியடையும் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவற்றையெல்லாம் கூறுகிறேன் கேட்பாயாக. மந்திரம் என்னும் பெரிய மலை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பு முடிவில்லாமல் கடையும் கயிறாகவும், திருமால் அந்த மத்தாகிய மந்திர மலை ஆழ்ந்து போகாது தாங்கிக் கொள்ளும் ஆமையான அடைக்கலாகவும், சந்திரன் மத்தாகிய மந்திர மலையை அணைத்து நிற்கும் தூணாகவும் விளங்க, அக்கயிற்றைப் பெருமிதத்துடன் ஒருபுறத்தில் இழுத்துக் கடைபவர் இந்திரன் முதலிய தெய்வங்களும், மறுபுறத்தில் கடைபவர் அத்தேவர்களுக்கு எதிரான அசுரர்களும் ஆவர்.
“ மந்தர நெடு வரை மத்து வாசுகி
அந்தம் இல் கடை கயிறு அடைக் கல் ஆழியான்
சந்திரன் தூண் எதிர் தருக்கின் வாங்குநர்
இந்திரன் முதலிய அமரர் ஏனையோர்”
(வாலி வதைப்படலம் 252)
அந்த மத்தாகிய மந்திர மலையைப் பெயர்த்து சுழலுமாறு இழுத்து வலிமை இல்லாத தன்மையரான தேவர்களும், அசுரர்களும் தளர்ச்சி அடைந்த நிலையைப் பார்த்து நான் அவர்களை எல்லாம் விலக்கி, அதைத் தயிறு கடைவது போலக் கடைந்து அவர்களுக்கு அமிர்தம் கிட்ட செய்தது நீ மறக்க கூடியதாகுமோ. (வாலி வதைப்படலம் 253)