பயணத்தொடர்: நதியில் நகரும் பயணம் (3) - நடேசன் -
ஆஸ்திரியாவின் தலைநகரான வீயன்னா, ஐரோப்பாவின் முக்கியமான மனிதர்கள் பலர் பிறந்து வளர்ந்த நகரமாகும். புதிய சங்கீதம், கட்டிடக்கலை, மருத்துவம் என பல விடயங்கள் உருவாகிய நகரம் என நான் கேள்விப்பட்டிருந்தாலும், நமக்கு யார் முதல் நினைவுக்கு வருவார்கள்? நல்லவற்றை விட கெட்டவைகள் நமது உள்ளங்களில் அதிக காலம் நீடிப்பது உண்மையே! மொர்சாட்,பீத்தோவன், சிக்மண்ட் பிரைட் போன்றவர்கள் வசித்த நகரமான போதிலும், வரலாற்றில் ஈடுபாடான எனக்கு முதல் வருவது ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் நினைவுகளே.
அடால்ஃப் ஹிட்லர் பிறந்தது (Brauanau am Inn) ஜெர்மன் -ஆஸ்திரிய எல்லையில் என்ற போதும், இளமையில் தந்தை இறந்தபின், தாயுடன் வீயன்னா நகரத்திலே வாழ்ந்தார் . அவர் பாடசாலை முடித்துவிட்டு இளைஞனாக இருக்கும்போது வீயன்னாவில் ஓவியனாகும் நோக்கத்தில் இங்குள்ள நுண்கலை அக்கடமிக்கு இரு முறை (1907,1908) விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது விண்ணப்பம், அவரது ஓவியங்களில் முகங்கள் சரியாக வரையவில்லை என அங்கு நிராகரிக்கப்பட்டது. அதை விட, அவருக்குக் கட்டிடக்கலைஞராகும் திறமை உள்ளது எனத் தேர்வுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் சிபார்சும் செய்தார்கள். ஆனால், அதற்கு மீண்டும் பாடசாலையில் படித்துத் தேர்வெழுதி பல்கலைக்கழகம் போக வேண்டும் ஆனால் ஹிட்லருக்கு அதற்குப் பொறுமையில்லை. அவர் நிராகரிக்கப்பட்ட இலட்சியங்களோடு வெறுப்படைந்த மனிதனாக அரசியலுக்குள் பிரவேசித்தார். அவரை ஓவியனாக அனுமதித்திருந்தால், உலகப் புகழ் பெற்ற பிக்காசோ , வான்கோ போன்ற ஓவியக்கலைஞன் கிடைத்திருக்காத போதிலும் அடால்ஃப் ஹிட்லர் என்ற மூன்றாம் தர ஓவியர் உலகத்திற்கு எவ்வளவு நன்மையாக இருந்திருப்பார் என்பது அவரை நிராகரித்தவருக்குத் தெரிந்திருக்காது. மேலும் நிராகரித்தவர், ஹிட்லர் பதவிக்கு வருமுன்பே இறந்து விட்டார் என்ற செய்தியை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் சொன்னார்.