LGBTQ - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகளே இன்று பேசுபொருளாக இருக்கின்றன. ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற உயர்திணைப் பாலினம். இப்போது பாலினமே இல்லை. மனிதர் என்ற இனம் மட்டுமே உள்ளது என கொண்டாடப்படுகின்றது. உறுப்புக்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆண், பெண் என்று பிரிக்கக் கூடாது என்பதே அவர்கள் வாதமாக இருக்கிறது. இங்கு ஒருமுறை என்ற வார்த்தை இந்த வாழ்க்கை என்பதற்குள் அடங்கி விடுகிறது. எம்முடைய மனத்துக்கு எது சரி, எது பிழை என்று தோன்றுகிறதோ அதன்படி வாழ்வோம் என்று வாழுகின்ற பண்பு தற்கால இளம் தலைமுறையினரிடம் தோன்றியுள்ளது. ஒரு பலூனை ஒரு பக்கம் அழுத்துகின்ற போது மறுபக்கம் அது தள்ளிக் கொண்டு வரும். அதுபோலவே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தி வைக்கின்ற போது அது மறுபக்கம் வேறுவிதமான குற்றங்களாக மாறுகின்றன.
ஒரு திருமண பந்தத்தின் சிறப்பு ஒரு உயிரை உலகத்திற்கு உருவாக்குதல். ஆணும் பெண்ணும் சேர்ந்து அற்புதமாக ஒரு குழந்தையை உலகத்திற்குக் கொண்டுவருகின்றார்கள். இது இயற்கையும் கூட. இந்த இயற்கையின் மூலமே இனவிருத்தி நடைபெற வேண்டும் என்பது நியதி. ஆனால், தற்காலத்தில் இனம் என்பதிலேயே பேதம் காணப்படுகின்றது. இயற்கையிலேயே இத்தனை காலமும் இருந்த திருமண நடைமுறைகளுடன் வாழுகின்றவர்கள் அப்படியே வாழட்டும். நாம் வேற மாதிரி என்பவர்கள் யார்?