முன்னுரை:புலம்பெயர் தமிழ்ப்பெண்கள் தாங்கள் புலம்பெயர்ந்த நாட்டிலும் தமிழர் பண்பாட்டைக் கடைப்பிடித்தனர். தமிழருக்கான வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றினர். தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் இயற்கையைப் பருகினர். அதன் இன்பத்தை அனுபவித்தனர். சங்க கால மக்களது இயற்கையின் நேசிப்பை மணிமாலா மதியழகனின் கதைகளில் காணமுடிகிறது. இயற்கையைச் சார்ந்து வாழ்ந்த பறவைகளின் இயல்புகளையும் அதிலிருந்து மனிதர்கள் கற்றுக்கொண்ட பாடத்தையும் இவள்..? சிறுகதைத் தொகுப்புச் சுட்டுகிறது. மனிதர்களின் சிறுமைத்தனமான எண்ணங்களையும் கதைகள் விளக்குகின்றன. தமிழர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் இச்சிறுகதைகளில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.
மணிமாலா மதியழகன்:
தமிழ்நாட்டின் கடலூரில் பிறந்து சிங்கப்பூரில் குடியேறியவர் மணிமாலா மதியழகன் அவர்கள். முகமூடிகள், தேத்தண்ணி, பெருந்தீ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளோடு இவள் சிறுகதைத் தொகுப்பும் இவரது படைப்புகளாகும். சிங்கையின் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். எளிமையான நடையோட்டத்தாலும் செம்மையான கருத்துகளாலும் தனது எழுத்துகளுக்கு வலுச்சேர்க்கிறார். இக்கட்டுரையில் மணிமாலா மதியழகன் அவர்களின் இவள் சிறுகதைத் தொகுப்பில் வெளிப்படும் புலம்பெயர் பெண்களின் வாழ்வியல்முறைகள் பற்றிக்கூர்ந்து நோக்குவோம்.
மனிதமும் இயற்கையும்:
இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு ஆதிகாலத்திலிருந்தே தமிழர்களிடம் குறிப்பாக பெண்களிடம் இருந்தது. மணிமாலா மதியழகனின் ‘ங்கா...’ சிறுகதை பெண்ணுக்கும் இயற்கைக்கும் இடையிலான நேசிப்பைச் சுமந்து நிற்கிறது. தேன்சிட்டு கூடு கட்டுவதில் ஆரம்பிக்கும் மகிழ்ச்சி, அதன் கூடு கட்டும் நேர்த்தி, சுறுசுறுப்பு, அதனால் ஏற்படும் மனித மனதின் உற்சாகம் மிகுந்து மிகுந்து மழையின் காரணமாக என பலவித காரணங்களால் கூடு களைவதில் வடிந்து போகிறது. தேன்சிட்டு கட்டிய கூட்டை,
“பிடிவாதத்தில் இருந்த பகல் ஊர்ந்து கடக்க, கட்டுக்கடங்கா ஆவலோடு கதவைத் திறந்து கட்டுமானப்பணியைப் பார்த்தவள் அசந்து போய்ட்டேன்! கட்டடக்கலையின் வித்தகர்கள் எனத் தேன்சிட்டுகளுக்குப் பட்டமே கொடுக்கலாமோ? கொடியில் காயவைத்த புடவையைப் போல நீளமாகத் தொங்கியது”(பக்.14)
என்று வர்ணிக்கிறார் மணிமாலா மதியழகன். இறுதியில் அதனைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் குரூரமான புத்தியில் பறவையின் கூடு அழிந்து போகிறது என்பதோடு தற்கால வாழ்வியலில் இயற்கையை அழிப்பது மனிதன்தான் என்பதைப் பூடகமாக உரைக்கிறார்.
தன்மானத்தையும் ஒழுக்கத்தையும் உயிரெனப் போற்றுதல்:
‘துரந்தரி’ என்ற சிறுகதையில் பூமணி என்ற பெண் கதாபாத்திரத்தின் வழி தமிழ்ப் பெண்களின் களவு வாழ்க்கையை எடுத்தோதுகிறார். குடும்ப வறுமை காரணமாகச் சிங்கப்பூர் வந்து வீட்டுவேலை செய்யும் பூமணி, தன்னைக் காதல் செய்யும் தியாகுவிடம் தன்னை இழக்காமல் கற்பைப் பாதுகாப்பது, வீட்டு வேலை செய்பவர்களை இளக்காரமாய்ப் பேசும் அவனின் எண்ணத்தைத் தெரிந்து கொண்டு தன்மானத்தோடு அவனை விட்டு விலகுவது என தமிழ்ப்பெண்களின் பண்பாட்டுச் சிறப்பையும் மானத்தைப் பெரிதாக எண்ணும் அவளின் மனத்தையும் விவரிக்கிறார்.
“போயும்போயும் ஒரு மெய்டையா....? என்ற தியாகுவின் கைத்தொலைபேசி உரையாடலோடு காதலையும் வீசியிருந்த பூமணி” ”(பக்.51) என்ற மதிமாலா மதியழகனின் வரிகள் பூமணியின் தன்மானம் சீண்டப்படுவதால் அவளது காதல் நிறைவு பெறுவதைப் பதிவு செய்கிறார்.
புலம்பெயர் நாடுகளில் பெண்களுக்கான பண்பாட்டுச் சிக்கல்கள்:
‘இவள்’ என்ற சிறுகதை புலம்பெயர் நாடுகளில் கல்லூரியில் பயிலும் சகானா என்ற மாணவிக்கு ஏற்படும் சிக்கலைப் பதிவு செய்கிறது. அவளது சக தோழர்கள் அவள் அறியாமலேயே புத்தகப்பையில் ஆணுறையை வைக்கின்றனர். அச்செயல் அவளது தாய்க்கு உண்டாக்கும் மனஉளைச்சல், அதிர்ச்சி, சகனாவுக்கும் தாய்க்கும் இடையில் பிரிவினையை உண்டாக்குதல் என நீள்கிறது. சகானாவின் தாய் அட்சயா ஆணுறையைத் தனது மகளின் புத்தகப்பையில் பார்க்கும்பொழுது அது தமிழ்ப் பண்பாட்டிற்கு விழும் சாட்டையடியாகவே ஆசிரியர் அட்சயா கதாபாத்திரத்தின் வழி உணர்த்துகிறார். தனது மகள் தவறு செய்திருப்பாளோ என்ற எண்ணத்தில் அவள் மறுகுவதை,
“இப்படிப்பட்ட பிள்ளையைப் பெத்த பாவத்தை எப்படிப் போக்குவது? இதை மூடி மறைக்க முடியுமா? அப்படி வெளியாகையில் அது கண்ணு, மூக்கு, வாயுடன் இன்னும் விகாரமாகுமே! மற்றவர்கள் முன் தலைகுனிந்து நடக்கத் தன்னால் இயலுமா? புரட்டியெடுக்கும் மனவலி தாங்காது உள்ளம் மருகியது”(பக்.73) என்று படம்பிடித்துக் காட்டுகிறார்.
பெரியோர் சொற்களைக் கேட்டல்:
பெரியோர் சொற்களை வேதவாக்காகக் கொண்டு நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் பெண்களுக்கான வழக்கமாகும். அந்த வகையில் மணிமாலா மதியழகனின் ‘வந்துட்டியா வைஷீ’ என்ற சிறுகதையில் தண்ணீரை வீணாகச் சிந்தக்கூடாது என்பதற்கு வைசாலி என்ற பெண் கதாபாத்திரத்தின் வழி,
“நீரைச் சிந்தினாயே....உன் சீரைச் சிந்தினாயேன்னு என்று பெரியவங்க சொல்வாங்க” (பக்.84) என்ற கூற்றின்வழி உணர்த்துகிறார்.
சமுதாயச் சீர்கேடுகளைச் சாடுதல்:
‘வந்துட்டியா வைஷீ’ என்ற சிறுகதையில் வைசாலியின் பேச்சுகளை உதாசீனப்படுத்துவதோடு அவளது கணவன் அவளைத் திட்டுவதை ஆசிரியர் பதிவிடுகிறார். கணவனது பழக்கங்கள் சமுதாயத்திற்குக் கெடுதல் விளைவிப்பனவாகவும் பொருள்களை வீணாக்குவதாகவும் இருப்பதைப் பதிவு செய்கிறார்.
“வீட்டைவிட்டு எங்குக் கிளம்பினாலும் தண்ணீர் பாட்டிலுடன் கிளம்பும் வைசாலியை “கருமி” எனக் கிண்டலடித்தது நினைவுக்கு வர என் தலை தானாகக் குனிந்தது” (பக்.83) இச்சிறுகதையில் மனைவியை உதாசீனப்படுத்தும் பாத்திரமாக கணவன் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடக்கும் ஆணின் மனப்பாங்கு இச்சிறுகதையில் வெளிப்பட்டுள்ளது. வைசாலி பொறுப்பான பெண்ணாக தனது கணவனுக்கு நீர், மின்சாரம் ஆகியவற்றை வீணாக்குதல் கூடாது என்பதை அறிவுறுத்தும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளாள்.
“நெகிழிக் குப்பையானது மட்க யுகம் யுகமாய் ஆகுமென்று உனக்குத் தெளிவாய்த் தெரிந்திருந்தும் அதைப் பாவித்தது பாவமில்லையா?” (பக்.83)
“ஒரு கொலையைச் செய்தவனால் ஓர் உயிர் மட்டுமே போகும்...ஆனால் பொறுப்பற்ற விதமாய் இப்படிப் பூமியைப் பாழாக்குபவர்களால் அடுத்தடுத்த தலைமுறைகளே நாசமாகும்.” (பக்.86)
என்ற மணிமாலா மதியழகனின் வரிகள் சமுதாயத்தின்மேல் அவர் வைத்துள்ள பற்றினையும் அடுத்த தலைமுறை மக்களிடம் கொண்டுள்ள அக்கறையும் பூமி மாசுபாடு குறித்த விழிப்புணர்வையும் ஊட்டுகின்றன. நீரை வீணாக்குவது, காற்று மாசுபாடு, நெகிழிக்குப்பை, மின்சாரத்தை வீணாக்குவது கூடாது என சமுதாயத்திற்குத் தேவையான கருத்துகளைக் கற்பனை கலந்து சித்தரிப்பது சிறப்பானது.
சிங்கப்பூரில் பெண்களின் வாழ்விடச் சிக்கல்கள் :
சிங்கப்பூர்ப் பெண்களின் வாழ்விடப் பதிவுகள் பலவற்றையும் அவற்றிலுள்ள சிக்கலையும் மணிமாலா மதியழகன் தனது தனிமை சிறுகதையில் இயம்புகிறார். இக்கதையில் புதிய வீடு குடிபோகும் இடத்தில் அண்டை வீட்டில் வாழும் சீனப்பெரியவரால் ஏற்படும் பிரச்சினைகளைத் தனிமை சிறுகதை,
“இங்கே இந்த மனிதருக்குப் பயந்து நாலைந்து தொட்டிகளோடு நிறுத்திக் கொண்டேன். அவரது வீட்டுக்கெதிரே ஓரிலை பறந்தாலும் அவர் உமிழும் வெறுப்பைத் தாங்கமுடியாது போகும். ஏதோ கலந்த தண்ணியை ஊற்றிவிடுவார். அந்த வாடையானது மூடியிருக்கும் வீட்டுக்குள்ளிருக்கும்போதே எனக்குக் குமட்டலைக் கொடுக்கும். அந்தக் கருமத்தைத் தாண்டித்தானே நாங்கள் வந்தாகணும். வேறு வழியில்லாமல் ‘டெட்டாலை’ ஊற்றி அதையும் கழுவணும். என்னுடைய செடி வளர்க்கும் ஆசையும் இங்கே சமாதியானது!” (பக்.130)
என்று செடிவளர்ப்பதையும் பக்கத்துவீட்டுப் பெரியவரால் கைவிட்டதைப் பெண் கதாபாத்திரத்தின் வழி பதிவிடுகிறார்.
சிங்கப்பூரில் வாழும் தமிழ்ப்பெண்கள் பெரும்பாலும் வேலைக்குச் செல்லும்போது அவர்களின் குழந்தைகளைக் கவனிக்கவும் பாதுகாக்கவும் ஒரு உதவியாளரை வேலைக்கு அமர்த்துகின்றனர். அந்த உதவியாளர் சரியாக அமையாவிட்டால் ஏற்படும் சிக்கல்களைத் ‘துரந்தரி’ என்ற சிறுகதையில் ஆசிரியர் பதிவு செய்கிறார்.
“வீட்டுக்குச் சரியான உதவியாளர் அமைவது எவ்வளவு பெரிய சோதனை என்பதை அனுபவித்தவர்களே அறிவர். அவ்வீட்டில் வேலை செய்ய முதலில் இந்தியாவிலிருந்துதான் ஆளை எடுத்தனர். வந்த புதிதில் சொல்லும் வேலைகளுக்குத் தலையாட்டிய பெண், சில மாதங்களுக்குப் பிறகு அவள் விருப்பம்போலவே எல்லாவற்றையும் செய்தாள். பாலர்பள்ளிக்குப் பிள்ளைகளைத் தாமதமாகக் கொண்டு விட்டு, பள்ளி முடிந்து வெகுநேரம் கழித்தே அழைத்துப் போக ஆரம்பித்தாள். இவளை வேலைக்கு அமர்த்தியது விருப்பம்போலச் சினேகிதிகளிடம் கதையளந்து கொண்டிருக்கவா?”(பக்.38,39)
இவ்வாறு உதவியாளர்களால் ஏற்படும் இன்னல்களைத் தொடர்ந்து நவில்கிறார். கொஞ்சம் அனுபவமுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்க, அவள் வேலை செய்யாமல் இருக்கவும் பிலிப்பினோ பெண்ணைத் தேர்ந்தெடுக்க, அவள் தனக்கு நண்பன் அமைந்தவுடன் வேலை செய்யாதிருக்க, அடுத்து இந்தோனேசியப் பெண் வர அவள் அலைபேசியிலேயே நேரம் செலவளிக்க... என்று நீளமாகச் செல்கிறது பட்டியல். இறுதியாக அதன் உபத்திரவத்தை,
“ஒவ்வொரு முறையும் உதவியாளரை மாற்றும்போது, முகவருக்கும் பணத்தைக் கட்டியழ வேண்டியிருந்தது. அதையும் தாண்டி, புதிய உதவியாளர் வந்து, வீடு பிடிபடும்வரை கணவனும் மனைவியுமாக மாற்றி மாற்றி விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்க வேண்டியதாயிற்று”(பக்.39) என்று விவரிக்கிறார். இவை சிங்கப்பூர் பெண்களுக்கான நடைமுறைச் சிக்கல்களாக உள்ளன.
கதாபாத்திரங்களுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல்:
மணிமாலா மதியழகன் அவர்கள் சிறுகதையில் கதாபாத்திரங்களுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுகிற பாங்கினைக் காணமுடிகிறது. இவள் சிறுகதைத் தொகுப்பில் பரிதி, கார்முகில், பூமணி, கமலி, உதயன் முதலான பெயர்கள் தூய தமிழ்ப் பெயர்களாக அமைந்திருப்பது தமிழின் மேல் ஆசிரியர் கொண்ட பற்றினைக் காட்டுகிறது.
சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகளின் போக்கு:
சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் குறித்து எண்ணுகையில் அவை புலம்பெயர் தமிழர்கள் வாழும் சூழலையும் இடத்தையும் பண்பாட்டுச் சிக்கலையும் நிறைவாகவே பதிவுசெய்கின்றன. சிங்கப்பூர்ச் சிறுகதை ஆசிரியர்கள் பற்றி,
“சிறுகதைகளில் சிங்கை நாட்டு மண்ணின் மணமும் இந்நாட்டு இயற்கை எழிலும் இடங்களின் பெயரும் பல்லின மக்கள் வாழும் வாழ்வியல் சூழலும் பல்லினக் கலாச்சாரமும் நிறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன.”
என்பார் எம்.சேகர். (படைப்பும் பன்முகப் பார்வையும், பக்.121)சிங்கப்பூர்ச் சிறுகதையாளர்களில் குறிப்பிடத்தக்கவராக மணிமாலா மதியழகன் பற்றியும் தனது ஆய்வில் இயம்புகிறார். அதில்,
“இன்றைய சமகாலப் படைப்பாளர்களாகச் சூரிய ரத்னா, ஜெயந்தி சங்கர், மாதங்கி, சித்துராஜ், பாலுமணிமாறன், எம்.கே.குமார், எம்.சேகர், ஷாநவாஸ், மில்லத், முஹைதீன், அழகுநிலா, ரமாசுரேஷ், பிரேமா மகாலிங்கம், மலையரசி, மணிமாலா மதியழகன், சித்ரா ரமேஷ், மோகனப்பிரியா, பிரியா ராஜீவ், வித்யா சுப்ரமணியன் போன்றோரையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.”
என்பார் சிங்கப்பூர் எழுத்தாளர் எம்.சேகர். (படைப்பும் பன்முகப் பார்வையும், பக்.123) இதனின்று சிங்கப்பூரின் சமகாலப் படைப்பாளர்களில் மணிமாலா மதியழகனும் ஒருவர் என்பது இலங்குகிறது. மணிமாலா மதியழகனது கதைகளில் தமிழர்களின் அகப்புற வாழ்வியலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
முடிவுரை :
மணிமாலா மதியழகனின் சிறுகதைகளில் இருந்து பெண்கள் பல்லினச் சூழலில் வாழும்போது ஏற்படும் பண்பாட்டுச் சிக்கல்களையும் இயற்கையின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டையும் குடிபுகும் வாழ்விடங்களில் ஏற்படும் சிக்கலையும் தமிழகத்திலிருந்து பணிநிமித்தம் புலம்பெயர்ந்து வாழும் பெண்களின் பிரச்சினைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் இக்கட்டுரையின் வழி அறிந்து கொள்ள முடிகிறது. இவரது படைப்புகளில் தமிழ்மொழிப் பற்றும் சமுதாயத்தின் மீதான நாட்டமும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. இதன்மூலம் பெண்களுக்கான தனித்துவம் அவர்களது பண்பாலும் வாழ்வியல் முறையாலும் பண்பாட்டுச் சிறப்பாலும் மொழிப்பற்றாலும் வெளிப்படுவதைக் காணலாம்.
துணைநின்ற நூல்கள்
1. மணிமாலா மதியழகன், இவள்...? (சிறுகதைத் தொகுப்பு), கரங்கள் பதிப்பகம், டிசம்பர் 2019, கோயம்புத்தூர்
2. எம்.சேகர், படைப்பும் பன்முகப்பார்வையும், டிசம்பர் 2021, சிங்கப்பூர்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.