- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய தமிழ் மொழிச் சாதனை விழாவில் நித்தி கனகரத்தினம் அவர்கள் கெளரவிக்கப்பட்டபோது அதன் தலைவர் கிறிஸ்டி நல்லரெத்தினத்திடமிருந்து சான்றிதழ் பெறும் காட்சி. -
ஒருவரை கௌரவிக்கும் நிகழ்வில்அவரை ஏன் நாங்கள் தெரிவு செய்தோம் என்பது எல்லோருக்கும் புரிய வேண்டும். இல்லையெனில், தெரிந்தவர், முகஸ்துதிக்காக அல்லது எம்மை முக்கியத்துவப்படுத்த, ஏன் சில வேளைகளில் அவரிடம் உதவிபெற என பல காரணங்களை சிலர் ஊகிக்கக்கூடும். நாம் ஒருவரைக் கொண்டாடும் போது அவரை நேரடியாக தெரியாத போதும், அவரது பணிகள் அல்லது படைப்புகள் எமக்கு அறிமுகமாகி இருக்க வேண்டும் . இதைத்தான் திருவள்ளுவர் 2000 வருடங்கள் முன்பு நமக்குச் சொல்லியது.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
இலகுவான குறள் – ஐந்தாம் வகுப்பில் படித்தது.
1968ல் நான் எட்டாம் வகுப்பு இந்துக் கல்லூரியில் படிக்கும்போது “சின்னமாமியே” மற்றும் “கள்ளுக்கடை பக்கம் போகாதே” ஆகிய பாடல் வரிகளை எங்கோ கேட்டேன். அதற்கப்பால் அவற்றின் ரிஷி மூலத்தை அறிந்து கொள்ளவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.
நித்தியை அறிந்து பின்பே அவரது பாடல்களை அறிந்தால், அட நமக்குத் இங்கு அது நடக்கவில்லை. தெரிந்தவர், நண்பர் அல்லது பழகியவர் இவர் என்பது ஒரு விதத்தில் முகமன் பாராட்டுவது போன்றதாகும்.
பல காலங்கள் கடந்த பின் 1975இல் பொப் இசையைப் பற்றி நான் அறிந்தது பேராதனை பல்கலைக்கழகத்தில்தான். அக்காலத்தில் சிங்கள பாடகர்களுடன் ஏ.ஈ மனோகரன், நித்தி கனகரத்தினம் போன்றவர்களைப் பேரளவுக்கு அறிந்திருந்தேன்.
கடந்த ஒரு மாதம் வரையில் நான் நித்தியை பற்றி அறிந்து கொள்ள முயலவில்லை. அவரது பாட்டை விட அவரது செய்கையே இங்கு முக்கியம் என்பதை சொல்லியாக வேண்டும். எனது இந்துக் கல்லூரி நண்பன் டாக்டர் ரஞ்சித் சிங் ( சாம் ஜெயக்குமார்) சமீபத்தில் நித்திக்கு வரகு (Millet) வாங்கி அனுப்பும் படி பிரித்தானியாவிலிருந்து தொடர்பு கொண்டார்.
எதற்கு, என்று நான் வினவியபோது “நித்தி தனது சொந்த பணத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆயுர்வேத வைத்தியசாலை கட்டி , யாழ் பல்கலைக்கழகத்திற்கு கொடுத்துள்ளார் . அது மேற்கத்தைய மற்றும் கிழக்கத்தைய மருத்துவத்தை இணைந்து செயற்படுவதற்காக யாழ்ப்பாணம் மருத்துவபீடத்திடம் மேற்பார்வையில் உள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் அரிசிக்கு பதிலாகச் சிறு தானியங்களை உண்ணும்போது டயபட்டிஸ் குறைக்கலாம் என்பதால் அவரிடம் அதன் உள்ளடக்கத்தை ஆராயக் கேட்டுள்ளோம் அதற்கு நாங்கள் (இங்கிலாந்தில் வதியும் வைத்தியர்கள்) உதவுவதாக வாக்களித்துள்ளோம்” என்று விபரித்தார்.
அப்பொழுது நான் அதற்குச் சம்மதித்து, நண்பர் இளங்கோவின் கடைக்குச் சென்று வரகு வாங்கி அதை நித்திக்கு அடுத்தநாள் தபாலில் அனுப்பினேன் .
இங்கே நான் நித்தியை பற்றி மற்றவர்கள் மூலமாக அறிந்து கொள்கிறேன். தனது சொந்தப் பணத்தில் செய்த சமூக சேவையை நித்தி வெளிப்படுத்தவில்லை. அப்படி ஒரு தன்னடக்கம்!
நண்பன் டாக்டர் ரஞ்சித் சிங் சொன்னார்ர் “நித்தி 1963ல் பாடல் எழுதிய போதிலும் 1968 ஆண்டு தினகரன் விழாவிலே பாடல் பாடப்பட்டது.”
நான் அவ்விடயங்களை பின்பு நித்தியிடம் கேட்டுச் சரி பார்த்தேன் .
பொப் இசை என்பது எங்கள் காலத்தில் உருவாகி பிரபலமாகி தமிழ், சிங்கள மக்களைக் கவர்ந்தது. எனக்கும் இசைக்கு அதிக தூரமென்பதால் அதைப் பெரிதாக அறிய நான் முயலவில்லை ஆனாலும் எனது சிங்கள நண்பர்கள் தமிழ் தெரியாதவர்கள். அவர்கள் ‘சின்ன மாமியே’ பாடலின் ஆரம்ப அடிகளை தெரிந்திருந்தார்கள் . அவர்கள் பேராதனையில் தமிழ் பெண்களைப் பார்த்து அதை பாடிவிட்டு அரைவாசியில் எங்களிடமிருந்து கற்ற தமிழ் தூசண வார்த்தைகள் கலந்து பாடுவார்கள். இதற்கப்பால் தமிழ்நாட்டில் தெரிந்த ஒரே இலங்கைப் பாடகர் நித்தி மட்டுமே எனலாம்.
“சின்ன மாமியே பாடலை தமிழகத்தில் மட்டுமல்ல, தெலுங்கு கன்னடம் படங்களில் மொழி பெயர்த்து பாட்டு எழுதி இசையமைத்துள்ளார்” என்றார் எனது நண்பர் ரஞ்சித் சிங்.
நித்தி தனியே பாடகர் மட்டுமல்ல, பாடல் எழுதி இசையமைத்து கிட்டாரும் வாசிப்பவர் என்பதால் நாம் இங்கு எமது தலைமுறையில் வந்த ஒரு பன்முக கலைஞர் என நாம் பாராட்டுகிறோம். நித்தி அம்பாறை ஹாடி தொழில்நுட்ப கல்லூரியில் விவசாயம் படித்து பின் அலகாபாத் பல்கலைகத்தில் விவசாயம் (BSc)மேலும் தாவர நோயியல்(MSc) மேற்படிப்பு படித்தவர் .
அவரது உணவு ஆய்வு, தாவரநோயியல் அறிவு போன்ற தொழில் தகமைகளுக்கு நாம் இங்கு பாராட்டவில்லை. நாம் பாராட்டுவது நமது சமூகத்தில், பொப்பிசைப் பாடகராக மட்டுமின்றி, சமூக அக்கறை கொண்ட அவரது பன்முகத்தன்மையும் , சமூகப்பற்றையும் அறிந்தபோது அது , அவரை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது . போர் முடிந்தவுடன் 15 வருடங்கள் முன்பாக, ஊருக்கு சென்று உதவி செய்ய சென்ற அவரை அதற்காக ஓக்லி ஆலயத்தில் சந்தித்து வாழ்த்தியதை இங்கு நினைவு கூருகிறேன்
அவர் தனது திருமண வாழ்வில் 50 வருடங்கள் கடந்து சமீபத்தில் அதைக் கொண்டாடியவர். நித்திக்கும் அவரது பாரியாருக்கும் எனது வாழ்த்துகள்- முக்கியமாக நித்தியின் சமூக பணிகளை சகித்து அவருடன் வாழ்வது ஒரு சவால்தான். இது இலகுவானதல்ல. அதைப் பற்றிய அனுபவம் எனக்கு நன்கு தெரியும் என்பதால் இங்கு இருவரையும் மனமார நான் வாழ்த்துகிறேன்.
மேலதிகத் தகவல்