காத்யானா அமரசிங்ஹவின் 'தரணி'! - வ.ந.கிரிதரன் -
காத்யான அமரசிங்ஹவின் 'தரணி' நாவலுக்குச் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான கொடகே சாகித்திய விருது (2020)! வாழ்த்துகள்!
- எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில், பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாகத் தமிழில் வெளியான எழுத்தாளர் கத்யானா அமரசிங்ஹ அவர்களின் சிங்கள நாவலான 'தரணி' நாவலுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான 23 ஆவது கொடஹே தேசிய சாகித்திய விருது சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நாவலுக்காகக் கிடைத்துள்ளது. எழுத்தாளருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் எனது வாழ்த்துகள். நூலை வாங்க: பூபாலசிங்கம் புத்தகசாலை இல. 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11. மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - இந்நாவலுக்கு நான் எழுதிய அணிந்துரையினை இங்கு உங்கள் வாசிப்புக்காகத் தருகின்றேன். - வ.ந.கிரிதரன் -
அண்மையில் நான் வாசித்த புனைகதை 'தரணி'. இதுவொரு சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர் இவர். அத்துடன் ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இலங்கையின் சமகால சமூக, அரசியற் பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவர். அவற்றை இன, மத, மொழி ரீதியாக அணுகாமல், மானுடப்பிரச்சினைகளாக அணுகுமொருவர். இதனை இவர் எழுதி அண்மையில் வெளிவந்த 'தரணி' நாவலிலும் காணலாம். இந்நாவல் இலங்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நாவலைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப். இவரும் இலக்கியத்தின் பல்வகைப்பிரிவுகளில் , மொழிபெயர்ப்பு உட்பட, காத்திரமான பங்களிப்பைச் செய்து வருபவர். ஏற்கனவே பல நூல்களை, ஆக்கங்களைச் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றார். இந்நாவலின் மொழிபெயர்ப்பும் இவரது மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைக்கப்பெற்ற சிறந்த படைப்புகளிலொன்றாக அமைந்துள்ளதென்பதை வாசிக்கும் எவரும் உணர்ந்துகொள்ளலாம்.