சமீப காலத்தில் பொன்னியின் செல்வன் திரைப் படம் குறித்தும், அதனைத் தொடர்ந்து மாமன்னர் ராஜராஜன் குறித்தும் பலராலும், பலவகைகளிலும் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. நானும் சில வார்த்தைகள் சொன்னால் குறைந்தா விடப் போகிறது?
நான்கு விஷயங்கள் குறித்துத் தான் விவாதங்கள் அதிகம் நடந்தன.
1. பொன்னியின் செல்வன் படம்
2. ராஜராஜன் தன் தமையன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் விஷயத்தில் மனு தர்மத்தைக் கடைப் பிடித்தார்.
3. ராஜராஜன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் இருந்ததா? இல்லையா?
4. திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ராஜராஜனின் கொலையாளிகள் பிராமணர்கள் என்பதை மறைத்தாரா ?
பொன்னியின் செல்வன் திரைப்படம் படத்தையும், கதையையும் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது என்ற போதிலும் தேவையற்ற ஒன்று. அந்தக் கதையில் மூழ்கிப் பாத்திரங்களோடும், ஓவியங்களோடும் ஒன்றி விட்டவர்களால் நிச்சயமாக அப்படி ஒப்பிடுவதே “ நினைத்துப் பார்க்கக் கூடாத ஒன்று “ என்ற மன நிலையில்தான் இருக்க முடியும். படம் திரைப் படம் என்ற அளவில் மிக அருமையாக இருந்தது. அதனைக் கதையுடன் ஒப்பிட்டுக் குறை, நிறை கூறுவதை, அதிலும் குறை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இந்து மதம்
ராஜராஜனை இந்து மதத்துடன் இணைத்துப் பார்க்குமுன், இந்து மதம் குறித்த சில கருத்துகளையும், உண்மைகளையும் முதலில் காணலாம்.
உலகில் மனித இனம் தோன்றி, அது இயற்கைச் சக்திகளையும் ஊறு விளைவிக்கும் பிற உயிரினங்களையும் கண்டு பயந்து அவற்றை வணங்கத் தொடங்கியது. நாகரிகம் வளர வளர சடங்குகள் உருவாகின. உருவங்கள் அமைக்கப் பட்டன. அப்படித்தான், இறை வழிபாடுகள் தொடங்கிய காலத்திலிருந்து இந்திய மண்ணிலும் ஏராளமான வழிபாட்டு முறைகளும், கோட்பாடுகளும்,வழிபடு தெய்வங்களும் அன்று முதல் இன்று வரை இருக்கின்றன. சில பகுதிகளில் சீர் திருத்தக் கோட்பாடுகள் உருவாகின. அவையே மதங்களாக உருவெடுத்தன. எடுத்துக் காட்டாக, கிருத்துவம், இஸ்லாம், ஜூடையிசம் போன்றவற்றைச் சொல்லலாம். இந்தியாவை எடுத்துக் கொண்டால் முதலில் இந்து மதமும் (பின்னர் அவ்வாறு அழைக்கப் பட்ட ) பின்னர் அதனைச் சீர்திருத்தப் பௌத்தம், சமணம் போன்ற மதங்களும் தோன்றியதைக் குறிப்பாகச் சொல்லலாம்.
பிற மதங்களைப் பொறுத்தவரை ( எ.கா. பௌத்தம், சமணம், சீக்கியம், கிருத்துவம், இஸ்லாம் மற்ற....) அவை குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட நபர்களால் கோட்பாடுகளாகவும், வாழும் வழிமுறைகளாவும் வழங்கப்கப் பட்டவை. குறிப்பிட்ட வழிபடு முறைகள், வழிபடு தெய்வங்களைக் கொண்டவை. ஆனால், இந்து என அழைக்கப் படும் மதத்திற்கு அப்படி எதுவும் இல்லை. இந்திய மண்ணில் மேற்சொன்ன மதங்களே முக்கியமானவைகளாக இருப்பவை. மேற்சொன்ன மதங்கள் அனைத்திற்குமே தொடக்கத்தில் பெயர்கள் சூட்டப் படவில்லை. பின்னாட்களில் தான் மற்றவற்றிலிருந்து வேறு படுத்திக் காட்டப் பெயர்கள் வந்தன. எந்த மதத்திற்குமே அது தோன்றிய காலத்தில் பெயர்கள் சூட்டப்படுவதில்லை என்பது தான் பொதுவான உண்மை.
‘ இந்து ‘என்ற சொல் ஒரே மதம் என்று தோற்றத்தைத் தருகிறதேயொழிய அது பெரும்பாலும் மதப் பெயரில்லாத எண்ணற்ற குழுக்களின் ஏராளமான வழிபாட்டு முறைகளையும், கோட்பாடு களையும், வழிபடு தெய்வங்களையும் கொண்ட குழப்பங்களின் கலவையே. அதன் காவலர்கள் ( சொல்லிக் கொண்டவர்கள் ) பெரும்பான்மையை இழந்து விடக் கூடாதே என்பதற்காக எல்லாமே ஒன்று தான் என்று பூசி மெழுகி இந்து மதம் என்ற மாயையை உண்மையிலேயே காப்பாற்றி வந்தார்கள்.
வேதங்கள், உபநிஷதங்கள், த்வைதம், அத்வைதம், விசிஸ்தாத்வைதம், வருணாஸ்ரமம், மனு தர்ம சாஸ்திரம், சனாதன தர்மம், போன்ற பாமரனுக்குப் புரியாத, ஆரியர்களிலும், மதத்தின் காவலர்களாகக் கூறிகொண்ட சிலருக்கு மட்டுமே புரிந்த, குழப்பக் கோட்பாடுகளும், வேள்வி முறைகளும் அவற்றால் பாதிக்கப் பட்ட பாமரர்களைப் பிரித்தன. அதன் விளைவாகச் சமணமும், பெளத்தமும் தோன்றி, ஆதிக்கம் பெறவே, அவர்கள் சுதாரித்துக் கொண்டார்கள். பௌத்த, சமண மதக் கோட்பாடுகள் சிலவற்றைத் தங்களுக்குரியவை ஆக்கினார்கள். சமணம், பௌத்தம் ஆகியவற்றின் முக்கியக் கோட்பாடான கொல்லாமைக்கு அவர்களும் மாற நேர்ந்தது. வேள்வித் தீயில் விலங்குகளைப் பலியிட்டு உண்ட அவர்களது தற்போதையக் கொல்லாமைக் கோட்பாடு அப்படி வந்தது தான்.
அவர்கள் மதத்தின் குழப்பக் கோட்பாடுகளும், அவற்றின் கடவுளர்களும், அவற்றினிடை யிலேயான ஆதிபத்தியச் சண்டைகளும், தமிழ் மண்ணின் பூர்விகர்களான சிங்கனும், நாகனும் கும்பிட்ட, இதரத் தெய்வங்களும் அவை தொடர்பானவைகளும், ஒன்றுக்கொன்று மிகப் புத்திசாலித்தனமாகக் கோர்க்கப் பட்டன. தமிழக மலையொன்றின் தலைவனாக இருந்து, பின்னர் மலைத் தெய்வமாகி, அதன் பின்னர் தமிழர் அனைவருமே மிக விரும்பி வழிபட்ட, குறவள்ளி மணாளன் முருகன், ஆரியக் கடவுளின் மகனாக்கப் பட்டான். இன்னொரு ஆரியக் கடவுளின் மகள் வள்ளிக்குச் சக்களத்தியாக்கப் பட்டாள்; அதுவும் வள்ளிக்கு முந்தைய முதல் மனைவி என்ற தகுதியுடன். தமிழரின் ‘ முன்னோர் வழிபாடு ‘ குழப்பத்திற்குள்ளானது. ஆரியர்கள் படையெடுத்து வந்து போரிட்டுத் தமிழகத்தை வெல்ல வில்லை. அதனால் அவர்களால் தங்களது மொழி, மதம், கலாசாரங்களை இங்கு வன்முறை மூலம் திணிக்க முடியவில்லை. ஆனால், கலாச்சாரப் படையெடுப்பால் அவற்றை இங்கு கலக்க முடிந்தது. ( Fusion )
பிரபல வரலாற்றாசிரியர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், தனது History Of The Tamils From The Earliest Times To 600 A. D. ( Pages 537, 538 ) புத்தகத்தில், சங்க இலக்கியம் நெடுநல்வாடை குறித்துக் கூறுகையில் இந்தக் கலப்பு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
This is proved by the fact that the references in those poems to Aryan concepts are not of the nature of passing allusions to semi - foreign beliefs, just working their way into the Tamil mind, but indicate ideas that had taken root in the Tamil scheme of life and were fast smothering out the old Tamil notions.
Though thus the queen prays to the Tamil goddess, it is plain that the poem was composed after Aryan concepts had definitely established themselves in the life of the Tamils. Not remote but intimate references to Aryan culture abound in the poem.
ஒரு பக்கம், சைவம். அதற்கெனச் சில தெய்வங்கள் ( அவற்றுள் சில அசைவத்திலிருந்து, வம்படியாகச் சைவத்திற்குக் கொண்டு செல்லப்பட்டவை ). இன்னொரு பக்கம், சாராயம் குடித்து, உயிர்ப்பலி கேட்கும் அசைவத் தெய்வங்கள். இரண்டு மாறுபட்ட கோட்பாடுகளுமே ஒரே மதத்தைச் சேர்ந்தவைதான் என்று கூறி, இந்நாட்டின் பாமரக் குடிமக்களைக் குழப்பி, இரண்டையும் ஒருசேரக் கொண்டு செல்லும் ஏமாற்று வித்தை கைக் கொள்ளப்பட்டது. ( இல்லாவிட்டால் இந்து மதம் சிறு பான்மை ஆகி விடுமே! ) பாவம் அந்தப் பாமரக் குடிமக்கள்! தங்களது எண்ணற்ற தெய்வங்களோடு, சித்தார்த்தர், வர்த்தமானர், இயேசு, அல்லா எல்லாரையும் சேர்த்துக் கும்பிட்டு, விபூதி பூசிக் கொள்ளுபவர்கள் தானே அவர்கள்! தங்களின் மதம் எதுவென்று காரண காரியத்தோடு உணராமலேயே இந்து மதம் என்று சொல்லவைக்கப் படுபவர்கள் தானே அவர்கள்! கிருத்துவம், இஸ்லாம், பெளத்தம், சமணம் சீக்கியம் போன்ற மதங்களைச் சாராத இந்நாட்டின் பெரும்பான்மைக் குடிமக்கள் அனைவருமே இந்து மதத்தினர் என்பது தானே நமது அரசுகளின் கோட்பாடு!
இந்து மதம் என்று தங்கள் மதத்தை அழைத்துக் கொள்ளும் அம்மதத்தின் காவலர்கள், தங்களது மதம், குழப்பங்களின் கலவை என்பதை நேரடியாக ஒத்துக் கொள்ளாது, உலகின் எல்லா மதக் கோட்பாடுகளையும் உள்ளடக்கியது தங்கள் மதம் என்று கூறி, அதனைப் பெருமைப்படக் கூடிய ஒன்றாக மாற்றும் வித்தை அவர்களுக்கே உரியது.
‘ இந்து ‘ பெயர் மூலம் : இந்திய மண்ணைப் பொறுத்தவரை, மேற் சொன்ன பிற மதங்கள் நிலை பெறுவதற்கு முன்பு மேற்சொன்னது போல் ஏராளமான முரண்பட்ட வழிபாட்டு முறைகளும், கோட்பாடுகளும், வழிபடு தெய்வங்களும் இருந்தன. அவற்றில் சில ஒற்றுமைகளும் இருந்தன. அவற்றைப் பின் பற்றுவோர்கள்தான் பெரும்பான்மையாக இருந்தனர் , இருக்கின்றனர். பின்னர் வந்த பல மதத்தினரிடமிலிருந்து அவர்களை வேறு படுத்திக் காட்ட ஒரு பெயர் தேவைப் பட்டது. ஏற்கனவே இம்மண்ணின் மைந்தர்களுக்கு ‘ இந்துக்கள் ‘ என்ற காரணப் பெயர் இருந்தது.
( https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
……..மேற்கத்திய அரபு மொழியில் சிந்து நதிக்கு அப்பாலுள்ள மக்களைக் குறிக்க அல்-இந்த் என்கிற சொல் பயன்படுத்தப் பட்டுப் பிரபல மானது. மற்றும் ஈரான் நாட்டிலும் அந்து என்ற சொல்லே இந்தியர்களைக் குறிக்கப் பயன்பட்டது. ……….. ஆரம்பத்தில் இந்து என்கிற சொல் சமயத்தை பிரதானமாகக் குறிக்காமல் பகுதி மக்களையே குறித்துள்ளது. ….
அதுவே மற்ற எந்த மதத்தையும் சாராத அந்தப் பெரும்பான்மை மக்களின் மதப் பெயராக ஆகிவிட்டது , ஆக்கப் பட்டு விட்டது. மேற்சொன்ன பிற மதங்களிலிருந்து வேறு படுத்திக் காட்ட இது நடந்திருக்கலாம். பெரும்பான்மை மக்கள் தொகையைக் கொண்டதாகக் காட்டவும். இது நடந்திருக்கலாம்.
உலகத்தின் வேறு சில மதங்களின் பெயர்கள் கூட மக்களின் பெயரால் / நிலப் பகுதியின் பெயரால் உருவாகி இருக்கலாம். எடுத்துக் காட்டாக, ‘ஜூடையிசம் ‘ ( யூத மதம் ) மதத்தை எடுத்துக் கொள்ளலாம். ஜூடா என்ற நாட்டின் / மக்களின் பெயரில் அமைந்தது இம்மதப் பெயர். ( https://en.wikipedia.org/wiki/Judaism - Modern Judaism evolved from Yahwism, the religion of ancient Israel and Judah, by the late 6th century BCE,[5] and is thus considered to be one of the oldest monotheistic religions ).
இப்படியொரு தகவலும் இணையத்தில் உள்ளது... சிந்து விலிருந்து இந்து மருவியதாகும். முதன்முதலாக சிந்து என்ற சொல் இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்குப்பகுதி ஆறான சிந்து ஆற்றை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருக்கு வேதத்தில், பிரகாசுபதி ஆகமத்தில்,
“இமாலயன் சமாரப்ய யாவ்திந்துசரோவரம்.
தன் தேவ்னிர்மிதன் தேசன் இந்துசுதானன் பிரசட்சயதே.”
என்ற சுலோகம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
( பொருள்: கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசு தான் என்று அழைக்கப்படுகிறது.)
. ஆனால், பிரகஸ்பதியால் சொல்லப் பட்டதாகச் சொல்லப் படும் சுலோகங்களில் பெரும்பாலானவை காணாமல் போய் விட்டதாகத் தான் அனைவரும் கூறுகிறார்கள். சிறு சிறு துண்டுகள் தான் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் பல இடைச்செருகல்கள் தான் என்றும் தெரிய வருகிறது. மேற்சொன்ன பாடலும் ரிக் வேத கால காலத்தைச் சேர்ந்ததாக இருக்க முடியாது என்பது தான் பலரது கருத்து.
ஸ்தான் என்பது, நாடு , பகுதி என்பதைக் குறிக்கும் பாரசீக வார்த்தை. ( ஸ்தான் -பாரசீக : ـستان, டிரான்ஸ்லிட். ஸ்டான் ) என்ற பின்னொட்டு பிராந்தியத்திற்கு பாரசீக மொழி சொல்லாகும்.- விக்கி ) மேற்சொன்ன பாடலின் இந்து ’ஸ்தான்’ என்ற வார்த்தை நிச்சயம் வேதகாலப் புழக்கச் சொல் அல்ல. அப்படியே ஏற்றுக் கொண்டாலும், அந்த இந்துஸ்தானம் என்ற வார்த்தை ஒரு பரப்பைக் குறிக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது.
வரலாற்றாளர் பி. என். முகர்ஜியின் கூற்றுப்படி, ஒரு காலத்தில் சிந்து ஆற்றின் கீழ் வடி நிலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லான இந்துஸ்தான் படிப்படியாக விரிவடைந்து "கிட்டத்தட்ட அனைத்து இந்திய துணைக் கண்டத்தையும்" குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. மதத்தைக் குறிக்க வில்லை.
காஞ்சி காமகோடிகள் வார்த்தைகளில் ( https://www.kamakoti.org/tamil/part1kural28.htm ) பெயரில்லாத மதம் மகோடி
இப்போது ‘ஹிந்து மதம்’ என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ‘ஹிந்து’ என்றால் ‘அன்பு’ என்று அர்த்தம். ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ‘ஹிந்து மதம்’ என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியைக் கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். ஒரு தேசத்துக்குப் பக்கத்திலுள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு.
இந்து மதத்தின் பெயரும் இம்மண்ணின் மக்களின் பொதுவான அழைப்புப் பெயரை அடிப்படையாகக் கொண்டுதான் வந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலே குறிப்பிட்டது போல் எந்த மதத்திற்குமே அதன் கோட்பாடுகள் தோற்று விக்கப்பட்ட போதே பெயர் அமைவது மிக மிக அரிதான ஒன்றே. மேலே குறிப்பிட்டிருப்பது போல், சிந்து நதியின் பெயரில் இம்மண்ணின் மக்கள் ‘ இந்து ’ என்று வெளி நாட்டினரால் அழைக்கப் பட்டுப் பின்னர் அதுவே இம்மண்ணின் அந்நாளைய , இந்நாளைய ஒட்டு மொத்தக் குழப்பக் கோட்பாடுகளுக்கான ஒட்டு மொத்த மதப் பெயராக ஆகி விட்டது என்பது பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
‘ இந்து மதம் ‘ வார்த்தைச் சான்று : இந்து என்ற வார்த்தை மதப் பெயராக எப்போது வந்தது என்பது குறித்து சூடான, அநாகரிகமான விவாதங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் இல்லை என்பதிலிருந்து தான் பிரச்சனை தொடங்கியது. ஏராளமான பண்டைய நூல்கள் இந்து என்ற சொல்லை, மக்களைக் குறிக்கும் சொல்லாகவே குறிப்பிடுகின்றன.
அல்-பிருனி (973 – 1048) என்ற பாரசீகப் பல்துறை அறிஞர் தாரிக்-அல்-இந்த் என்ற வரலாற்று நூலை எழுதினார். அதில், ஹிந்து / ஹிந்துஸ் என்ற வார்த்தையைப் பல இடங்களில் பயன் படுத்தியுள்ளார். அவற்றில் பலவற்றை மக்களைக் குறிக்கும் பொதுவான சொற் பயன்பாடு என எடுத்துக் கொண்டாலும், நான் பார்த்தவரைஇரண்டு இடங்களில், மதத்தைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளார்.
CHAPTER I. If we now pass from the ideas of the educated people among the Hindus to those of the common people, we must first state that they present a great variety. Some of them are simply abominable, but similar errors also occur in other religions.
CHAPTER V. ON THE STATE OF THE SOULS, AND THEIR MIGRATIONS THROUGH THE WORLD IN THE METEMPSYCHOSIS.
As the word of confession, “'There is no god but God, Muhammad is his prophet,” is the shibboleth of Islam, the Trinity that of Christianity, and the institute of the Sabbath that of Judaism, so metempsychosis is the shibboleth of the Hindu religion.
அவர் பிற மதங்களிலிருந்து வேறுபடுத்தவே அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், இந்து என்ற சொல்லை அவர் இந்தியாவில் நிலவிய ஒரு மதத்தைக் குறிக்கவே பயன்படுத்தினார் என்பது தெளிவு. இந்து என்பது ஒரு மதப் பெயராகப் பயன் படுத்தப் பட்ட மிகப் பழைய நூல் ( கிடைத்தவற்றில் ) இதுவாகத்தான் தோன்றுகிறது.
ராஜராஜன் காலத்தில். ( 985 CE to 1014 ) அப்போதும் நிலவிய கலப்படக் கோட்பாடுகளுக்கு இந்து மதம் என்ற பெயர் தமிழகத்தில் இருந்ததோ இல்லையோ அப்படியொரு பெயரைக் கிட்டத்தட்ட அதே காலத்தில் வாழ்ந்த அல்பெரூனி குறிப்பிட்டுள்ளார்.
ராஜராஜனின் மத நல்லிணக்கம் : இந்துமதம் என்ற பெயர் அவரது காலத்தில் தமிழகத்தில் இல்லையென்றே எடுத்துக் கொண்டாலும், ராஜராஜன் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே ஆரியப் பிராமணர்களின் ஆதிக்கமும், அவர்தம் தர்ம ( அதர்மங்களே அதிகம் நிறைந்த ) சாஸ்திரங்களும் இங்கு வேரூன்றி விட்டன.
வேத ஆரியர் தென்னாடு வருகை : கிமு 1200 - வேத ஆரியருட் சிலர் தென்னாடு வந்து, தம் வெண்ணிறத்தையும் தம் வேத மொழியின் பொலி வொலியையும், தமிழரின் ஏமாறும் தன்மையையும், மதப் பித்தையும் முற்றும் பயன்படுத்திக் கொண்டு, தம்மை நிலத்தேவர் ( பூசுரர் ) என்றும், வேத மொழியைத் தேவ மொழி என்றும், மூவேந்தரும் நம்புமாறு செய்து விட்டனர் . அக்காலத்தில் அரசர் இட்டது சட்டமாக இருந்ததாலும், பொதுமக்களின் பழங்குடிப் பேதமையாலும், தமிழர் உள்ளத்தில் ஆரிய ஏமாற்று வித்தை எளிதாய்ப் பதிந்து வேரூன்றிவிட்டது. -- ஞா. தேவநேயப் பாவாணர் – தமிழ் வரலாறு
சைவம், வைணவம், பௌத்தம், சமணம், நான்கும் மதங்களின் பெயர்களில் நிலவி வந்தன. சைவத்தின் தீவிர வழியான பாசுபதமும், காளாமுகமும் கூட மதங்களாகத் தான் கருதப் பட்டு வந்தன. இவையெல்லாமே பலவிதமான கோட்பாடுகளூடன் இயங்கி வந்தன. அவற்றில் சில ஒற்றுமைகளும் இருந்தன. அவை இம்மண்ணின் கலாச்சாரக் கோட்பாடுகள் என்ற அடிப்படையில் இருக்கலாம். பெரும்பான்மை மக்கள் இந்தக் கலாச்சாரக் கோட்பாடுகளைச் சேர்ந்தவர்களே.
உலகின் பிற பகுதி மதங்களான இஸ்லாமும், கிருத்துவமும் கூட அறிமுகமாகி இருந்தன.
( இன்றைய கேரள மாநிலத்தில் வந்திறங்கிய இயேசு கிறித்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமா கிபி 52-72 ஆண்டுகளில் கிறித்தவ சமயத்தை அறிவித்து, மயிலாப்பூரில் உயிர்நீத்தார் என்னும் வாய்மொழி மரபு கேரள கிறித்தவர் களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது[2]; சென்னை சாந்தோம் தேவாலயம் புனித தோமாவின் கல்லறை இருந்ததாகக் கருதப்படும் இடத்தின்மேல் கட்டப்பட்டது. முகம்மது நபியின் தோழர்கள் பலரும் சமயப் பிரச்சாரத்திற்காக உலகின் பல பாகங்களுக்கும் பயணித்தனர். ஏற்கனவே இந்தியாவோடு இருந்து வந்த வணிகத் தொடர்போடு புதிதாக மார்க்கத் தொடர்பும் சேர்ந்துக்கொன்டது. கி.பி. 629-ல் மலபார் கரையிலுள்ள முசிறி துறைமுகப்பட்டிணத்தில் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது.
இதே போன்று சோழ நாட்டின் தலை நகரான உறையூரிலும் முசுலிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினார். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினார். அந்தப் பள்ளிவாசல் இன்றும் இருக்கிறது. திருச்சி நகரில், கோட்டை இரயிலடியில் கி.பி. 734 இல் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலம் கல்லுப்பள்ளி என்றழைக்கப் படுகிறது. இதற்கான ஆதாரம் பள்ளிவாசல் கல்வெட்டில் காணலாம்…… விக்கி )
அவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் விதத்திலேயே, அப்பெரும்பான்மை மக்கள் பின்பற்றிய அனைத்துக் கலப்படக் கோட்பாடுகளும் ஒரே மதத்தைச் சேர்ந்தவை என்ற தோற்றம் ஏற்பட்டது.
இனி, ராஜராஜனின் சமயப் பற்று குறித்துப் பார்க்கலாம். ராஜராஜன், சைவத்தை மட்டும் ஆதரிக்க வில்லை. வைணவம், பௌத்தம், சமணம் உள்ளிட்ட அனைத்துமே அவர் காலத்தில் ஆதரவு பெற்றிருந்தன. ராஜராஜன் காலத்தில் மட்டுமல்ல. அவருக்கு முன்பே இம்மண்ணில் நிலவிய மேற்சொன்ன அனைத்து மதங்களுமே மன்னர்களின் ஆதரவு பெற்றே வளர்ந்தன.
// இராஜராஜன் சிறந்த சிவபக்தன் இவன் கட்டிய பெரிய கோவிலே இதற்குப் போதிய சான்றாகும் எனினும் இந்திய பேரரசரைப் போலவே தன் பெரு நாட்டில் இருந்த எல்லாச் சமயங்களையும் சமமாகவே மதித்து நடந்தவன். பெரிய கோவில் சுவர்களில் உள்ள சிற்பங்களும் , மைசூரில் இவன் கட்டிய விஷ்ணு கோயில்களும் விஷ்ணு கோவில்களுக்கு இவன் செய்துள்ள தானங்களும் இவனது சமரசப் பட்ட மனப்போக்கை விளக்குவதாகும். நாகப்பட்டினத்தில் உள்ள புத்த விகாரம் கட்டப் பொருள் உதவி புரிந்த உத்தமன் இவன். இவனது ஆட்சியில் இருந்த சிற்றரசர் சிலர் சமணர் கோவில்களுக்குத் தர்மம் செய்துள்ளனர் என்பதையும் நோக்க, இப்பேரரசன் தன் சிற்றரசரையும், குடிகளையும் தத்தம் விருப்பத்துக்கு இயைந்த சமயத்தை பின்பற்ற உரிமை அளித்திருந்தனன் என்பது நன்கு புலனாகின்றது……….. //
…..( சோழர் வரலாறு – டாக்டர் மா. இராசமாணிக்கனார் )
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சோத்தமங்கலம் என்னும் சிற்றூரிலும், பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், பெங்களூரிலிருந்து 60 கி.மீ தொலைவில் தொட்ட மல்லூர் எனும் இடத்திலும், வைணவத் தலங்களைக் கட்டியுள்ளார்.
( https://veludharan.blogspot.com/2019/02/sri-aprameya-swamy-temple-sri-ambegalu.html
As per the Kaliyur 1006 CE Kannada inscription ( Jayasthamabam ),
Aprameya, who belongs to Koththamangala and one of the Chieftains of
Chozha King Rajaraja-I. was responsible for the Chozha's victory over the 18
small regional kings of Gangas & Hoysalas, ………………………He also built a
Vishnu temple at DoddaMallur and called as “Aprameya Vinnagar” and the
presiding deity is being called as "Aprameya Vinnagarathalwar". One of the
inscription mentions this place as "Kizhalai Nattu Periya Mazhuvur". Latter
the "Periya" was translated to "Dodda" in Kannada and Mazhuvur got
corrupted to Maalur, finally obtained the name as Doddamaalur/ Doddamallur. )
( The chapter 12 of Brahmanda Purana, describes Aaprameya Swami as the one beyond comprehension. )
நாகபட்டினம் சூடாமணி புத்த விஹாரைக்கு நிலங்களைத் தானமாக வழங்கியுள்ளார். இவரது தமக்கை குந்தவை, திருவண்ணாமலை அருகிலுள்ள. திருமலையில் சமணத் துறவிகள் வசிப்பிடத்தில் சமணக் கோவிலொன்றைக் கட்டியுள்ளார்.
( https://www.wisdomlib.org/south-asia/book/middle-chola-temples/d/doc210482.html
...... Next comes a record of Rajaraja I dated in his twenty-first year, which is found on a rock in front of the gopuram at the base of the Tirumalai hill (SII, I, 66). It mentions that a certain Gunavira-mamunivan built a sluice in the local reservoir. There are two inscriptions of Rajendra I. Both of them relate to his twelfth regnal year. One of them records a gift to the temple Vaigavur-Tirumalai which is therein called Kundavai Jinalaya, i.e., the temple dedicated by Kundavai to the Jina (SII, I, 67). )
பொன்னியின் செல்வன் கதையிலேயே, அத்தியாயங்கள் 2, 4 , 12 ல், ராஜராஜன் காலத்தில் அனைத்துச் சமயங் களும் சுதந்திரமாக இயங்கி வந்தன என்பதற்கான பதிவுகளை ஆசிரியர் செய்துள்ளார்.
ராஜராஜனும் மனு தர்மமும் : சமீபத்தில் பேராசிரியர் தெய்வ சிகாமணி அவர்கள் பேட்டியொன்றில் தெரிவித்த கருத்துக்களில் ராஜராஜனின் தமையன் ஆதித்த கரிகாலன் கொலையுண்டது குறித்த கல்வெட்டுச் செய்தித் தகவல் பின் வருமாறு.
// ஏறத்தாழ 969 ல் ராஜராஜ சோழனுடைய அண்ணன் ஒருவன் மிகப் பெரிய வீரனாக இருந்தான். அவனுடைய பெயர் ஆதித்த கரிகாலன். அவனைக் கொலை செய்தார்கள். ………….ஆனால் 985 ல் இவன் பட்ட மேற்ற உடனேயே முதன் முதலில் எடுத்த வழக்கு எது வென்றால் அண்ணனைக் கொலை செய்தவர்கள் யார் என்று விசாரணை செய்து, காட்டுமன்னார்குடி என்கின்ற வீராணம் ஏரி இருக்கிறது அதனுடைய கரைப் பகுதியில் இருக்கக்கூடிய அனந்தீஸ்வரர் கோயில் என்கின்ற கோயிலிலே கல்வெட்டாக அவருடைய தீர்ப்பினைச் செய்து விட்டான். அந்த வழக்கு விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் கண்டு பிடிக்கப் பட்டு, அவர்கள் சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். உறவுகள் கூட. கிளை உறவுகள் கூட அங்கிருந்து இடம் பெயர்ந்து செல்ல ஆணையிட்டு அவர்கள் ஓடிப்போனார்கள். அவர்களுக்குப் பிற தண்டனைகளை வழங்க முடியாத ஒரு சூழல் …………… வழக்கு விசாரணையில் ஆதித்த கரிகாலனைக் கொன்ற அந்த நான்கு அண்ணன் தம்பிகள் அந்தணர் வகுப்பைச் சார்ந்தவர்கள்.....//
திரு தெய்வசிகாமணி அவர்கள் கூறியிருக்கும் ‘சூழல்’ நிச்சயம் மனு தர்மம் குறித்ததே. அதில், தவறிழைக்கும் பிராமணனுக்கான தண்டனைகள், அவனுக்குத் தீங்கு இழைப்போருக்கு இறப்பின் பின் கிடைக்கும் தண்டனைகள் குறித்துப் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.
Verse 8.380
न जातु ब्राह्मणं हन्यात् सर्वपापेष्वपि स्थितम् ।
राष्ट्रादेनं बहिः कुर्यात् समग्रधनमक्षतम् ॥ ३८० ॥
na jātu brāhmaṇaṃ hanyāt sarvapāpeṣvapi sthitam |
rāṣṭrādenaṃ bahiḥ kuryāt samagradhanamakṣatam ||
Verily he shall not kill the Brāhmaṇa, even though he be steeped in all crimes; he should banish him from the kingdom, with all his property and unhurt.—
பிராமணன் எத்தகைய குற்றங்களை இழைத்தவன் ஆயினும் அவனுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது. அவன் செல்வத்தை அவனுக்கு கொடுத்து நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்
Verse 11.207
शोणितं यावतः पांसून् सङ्गृह्णाति महीतले ।
तावन्त्यब्दसहस्राणि तत्कर्ता नरके वसेत् ॥ २०७ ॥
śoṇitaṃ yāvataḥ pāṃsūn saṅgṛhṇāti mahītale |
tāvantyabdasahasrāṇi tatkartā narake vaset ||
As many particles of dust on the ground as Brāhmaṇa’s blood coagulates, for so many thousand years will the shedder (of that blood lie in hell.
பிராமணனின் இரத்தம் எவ்வளவு தூசித் துகள்களை உறைய வைக்கிறதோ, அத்தனை ஆயிரம் வருடங்கள் அந்த இரத்தம் சிந்தச் செய்தவர் நரகத்தில் இருப்பார். ஆனால், திரு தெய்வநாயகம் அவர்கள் கூறும் ஆதித்த கரிகாலனின் கொலையாளிகள் குறித்த ஒரேயொரு கல் வெட்டில் இருப்பவற்றைப் படித்தால், அதில் தண்டனை விபரங்கள் எதுவும் சொல்லப் படவில்லை என்பது தெரிய வரும்.
உடையார்குடிக் கல்வெட்டு
. "ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்.................. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........................ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம். தாங்களும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவரஇ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன் இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலை கொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன் இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன"
இதில் காணப் படும் ‘ இவ்வனைவர் (முடமை) யும் நம் ஆணைக் குரியவாறு ‘ என்ற வரியில் ‘ நம் ஆணைக் குரியவாறு ‘ என்ற சொற்றொடர் இந்தக் கல்வெட்டு ஆணைக்கு முந்தைய ஆணை ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டுகிறது.
அதே போல் அடுத்து வரும் ‘ இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு ‘ என்பதில் உள்ள ‘ நம் ஆணைக்குரியவாறு ‘ என்பது முந்தைய ஆணையை உறுதிப்படுத்துகிறது.
ஆனால், அந்த முந்தைய ஆணையின் விபரங்கள் கிடைக்கப் பெற வில்லை. அதில் தான் குற்றவாளிகளுக்கான குறிப்பான தண்டனை விபரங்களும், குற்றவாளிகள், அவர்தம் உறவினர்களது சொத்துப் பறிமுதல் விபரங்களும் இருந்திருக்க வேண்டும். இந்தக் கல் வெட்டில் இருப்பவை குற்றவாளிகள், அவர்களது உறவினர்களிடம் இருந்து ஏற்கனவே பறிமுதல் செய்யப் பட்ட சொத்துகளை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆணை மட்டுமே.
இதை மட்டும் வைத்துக் கொண்டு, ராஜராஜன், பிராமணக் கொலையாளி களுக்கு மரண தண்டனை விதிக்காது, மனு நீதிப்படி சொத்துக் களை மட்டும் பறித்துக் கொண்டு நாடு கடத்தி விட்டார் என்று சொல்லுவது வெறும் யூகத்தின் அடைப்படையிலான ஒன்றாகத்தான் இருக்க முடியும். மேலும், மனு தர்மத்தில், சொத்துக்களைப் பறிமுதல் செய்யாது நாடு கடத்த வேண்டும் என்று தான் உள்ளது. ஆனால், ராஜராஜன், சொத்துக்களைப் பறி முதல் செய்துள்ளார். உண்மை இப்படி இருக்க, ராஜராஜன், கொலையாளிகள் விஷயத்தில் மனு தர்மத்தைக் கடைப் பிடித்தார் என்று எப்படிச் சொல்ல முடியும்?
யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்தால், ராஜராஜன், கொலையாளி களுக்கு வேறு தண்டனைகள் ( மரண தண்டனை உட்பட ) கொடுத்து விட்டுச் சொத்துக் களைப் பறிமுதல் செய்தார் என்று கூடச் சொல்லலாம். கொலைக்குப் பின்னர், தப்பியோடிய கொலையாளிகளும், உறவினர்களும் மீண்டும் அகப்பட வில்லை; அவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டன என்றும் கூறலாம். இவ்விரண்டிலுமே சொத்துப் பறிமுதல் இயல்பே.. தண்டனை விபரங்கள் அடங்கிய கல் வெட்டுகளோ, பட்டயங்களோ வேறு சான்றுகளோ கிடைக்கும் வரை எந்த முடிவிற்கும் வர இயலாது.
திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி கொலையாளிகள் சாதியை மறைத்தாரா?:
எனக்குத் தெரிந்து உடையார்குடி கல்வெட்டைத் தவிர, கொலையாளிகள் விபரங்களைத் தரும் எந்தக் கல்வெட்டுமே கிடைக்க வில்லை என்று தான் பல வரலாற்று அறிஞர்களூம், ஆய்வாளர்களூம் குறிப்பிடுகிறார்கள்.
கல்வெட்டில், கொலையாளிகளில் ரவிதாசனுக்குப் பஞ்சவன் பிரம்மாதிராஜன் என்ற பட்டமும், பரமேஸ்வரனுக்கு இருமுடிச் சோழ பிரம்மாதிராஜன் என்ற பட்டமும் தெளிவாக இருக்கின்றன. ஆனால், சோமனுக்கான பட்டம் கல்வெட்டில் சேதமாகி விட்டது. பிரம்மாதிராஜன் என்ற பட்டம் தமிழக மன்னர்களால் பிராமண அதிகாரிகளுக்கு வழங்கப் படுவது. சிலர் பஞ்சவன் என்ற சொல் பாண்டியர்களைக் குறிக்கிறதென்றும், அதனால் ரவிதாசன் பாண்டிநாட்டில் உயர் அதிகாரியாகவும், பரமேஸ்வரன் சோழநாட்டின் உயர் அதிகாரியாகவும் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவில் அதன் பேரில் தங்கள் கருத்துக்களை ஏற்றிக் கூறுகிறார்கள்.
கதை நிகழ்ந்த காலத்தில், சோழ - பாண்டியர் ஒருவருக் கொருவர் எதிரிகள் அல்லது விரோதிகள் ஆனால், கல்வெட்டில் கொலையாளிகளைத் துரோகிகள் என்றல்லவா குறிப்பிடப் பட்டுள்ளது. துரோகிகள் என்றால் உடனிருந்தே குழி பறிப்பவர்கள் என்பதை விளக்க வேண்டியதில்லை. கொலையாளிகளில் அப்படி இரு நாட்டினரும் இருந்திருந்தால், துரோகிகள் யார், எதிரிகள் / விரோதிகள் யார் என்பதைக் கல் வெட்டுத் தெளிவாகச் சுட்டியிருக்கும்.
பஞ்சவன் என்ற சொல் பாண்டியர்களை மட்டும் குறிப்பதா யிருந்தால், ராஜராஜனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன் மாதேவி பாண்டிய நாட்டுக் காரரா? அவர் பளுவேட்டைரையர் மகள் என்பதை வேறு கல் வெட்டுகள் காட்டுகின்றன. ( பழுவூர் கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் 27 ஆம் ஆண்டு கல்வெட்டில் இவரைப்பற்றி “அவனி கந்தர்ப்புரத்து பழுவூர் தேவனாரின் திருமகள்” என்ற குறிப்பு உள்ளது ) மன்னர் ராஜேந்திர சோழர் தன் சிற்றன்னையான அவருக்குப் பள்ளிப் படைக் கோவில் எழுப்பியுள்ளார். ( பஞ்சவன் மாதேவிச்சரம் ) ராஜேந்திர சோழருக்கே ‘ பஞ்சவன் மாராயன் ’ என்ற பட்டப் பெயர் உண்டு ( மாலம்பிக் கல்வெட்டு ) ரவிதாஸனும் சோழ அரசின் அதிகாரியாக இருந்தவனே என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்? சோழ அதிகாரிகளாக இருந்து, கூட இருந்தே குழி பறித்ததனால் தான் அவர்களைக் கல்வெட்டு ‘ துரோகிகள் ’ என்று குறிப்பிடுகிறது
உடையார்குடி கல்வெட்டிலிருந்து தான் கொலையாளிகள் பெயர்கள் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும். கொலையாளிகள் பிராமணர்கள் என்று நூற்றுக்கு நூறு அவருக்குத் தெரிந்த விஷயம். பெயர்களை மட்டும் குறிப்பிட்டு விட்டு அப்படியே விட்டிருந்தால் நாமும் விட்டு விடலாம். ஆனால், சோழ நாட்டின் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தவர்களும், சோழ அரசில் உயர் பதவிகளில் இருந்தவர்களுமான அவர்களைப் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் என்கிறார். இது அவர் தெரிந்தே பொய்யை எழுதியுள்ளார் என்பதைக் காட்ட வில்லையா? அவர் கொலை யாளிகளைப் பிராமணர்கள் என அடையாளம் காட்டாமல் விடுத்ததை ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் பிராமணர்கள் என்பதை மறைக்கப் பிரயத்தனங்கள் மேற்கொண்டார் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
இன்னொரு முக்கியமான கற்பனைக் கதாபாத்திரமும், கல்கி அவர்களால் ராக்கம்மாள், என்ற பெயரில் உருவாக்கப் பட்டுள்ளது. கொலையாளிகளில் ஒருவனான கிரம வித்தன் ரேவதாசன் என்பனின் மகளாகக் காட்டப் படுகிறார். அவள் பாண்டிய நாட்டவள் எனவும், சோழநாட்டுப் படகோட்டி முருகையனின் மனைவி எனவும் காட்டப் படுகிறார். எதற்கு? கொலையாளிகள் பிராமணர்கள் என்பதை மறைக்கத் தானே?
உடையார்குடி கல்வெட்டைத் தவிர, கொலையாளிகள் விபரங்களைத் தரும் எந்தக் கல்வெட்டுமே கிடைக்க வில்லை.. அந்த ஒரேயொரு கல் வெட்டிலோ, முதல் கொலையாளியாகக் குறிப்பிடப் படும் சோமன் என்ற பெயருக்கு அடுத்துக் கல் வெட்டுச் சிதைந்துள்ளது. ஆனால், இவருக்கு மட்டும் அவனது மீதிப் பெயர் சாம்பவன் எப்படித் தெரிந்தது? அது ஒரு சாதிப் பெயர். கொலையாளிகள் பிராமணர்கள் என்பதை மறைப்பதற்கு, அவர்களில் ஒருவனை இன்னொரு சாதிக் காரன் எனக் குறிப்பிட்டு அந்தச் சாதியினரை வம்புக்கு இழுத்துள்ளார்
முடிவு
ராஜராஜனுக்குப் பல காலம் முன்பேயே மனு தர்மக் ( அதர்மம் ) கோட்பாடுகள் இம்மண்ணில் வேரூன்றி விட்டன என்ற போதிலும், ராஜராஜன் மற்ற விஷயங்களில் எப்படிச் செயல் பட்டிருந்தாலும், ஆதித்த கரிகாலனின் கொலையாளிகள் விஷயத்தில் மனு தர்மத்தைக் கடைப் பிடிக்க வில்லை என்ற முடிவிற்குத் தான் வர இயலும். ராஜராஜன் காலத்தில் இந்து மதம் இருந்ததா என்ற கேள்விக்கு, அவரது காலத்திலேயே வாழ்ந்த அல்-பிருனியின் , தாரிக்-அல்-இந்த் புத்தகமே பதில். அதில் பௌத்தம், சமணம், இஸ்லாமியம், கிருத்துவம், சீக்கியம் போன்ற மதங்களைச் சாராத, பலவகைக் குழப்பக் கோட்பாடுகளைப் ( அனைத்து மதங்களையும் தன்னுள் அடக்கிய என்றும் பெருமைக்குச் சொல்லலாம் ) பின் பற்றிய இம்மண்ணின் பெரும்பான்மை மக்களை அவர் இந்து மதத்தினர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜராஜனின் கொலையாளிகள் பிராமணர்கள் என்ற உண்மையைக் குறிப்பிடாதது மட்டுமின்றி, அதனை மறைக்க, திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பல பொய்களை எழுதியுள்ளார்.
உசாத்துணைப்பட்டியல்
1. பொன்னியின் செல்வன் திரைப் படம்
2. பி. டி. சீனிவாச அய்யங்கார் -- History Of The Tamils From The Earliest Times To 600 A. D. ( Pages 537, 538 )
3. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
4. https://en.wikipedia.org/wiki/Judaism
5. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
6. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
7. https://www.kamakoti.org/tamil/part1kural28.htm ) பெயரில்லாத மதம்
8. ALBERUNI’S INDIA Vol. I Dr EDWARD C. SACHAU Chapters II Page 31 & IV Page 50
9. தமிழ் வரலாறு - ஞா. தேவநேயப் பாவாணர்
10. https://ta.wikipedia.org/wiki
12. சோழர் வரலாறு – டாக்டர் மா. இராசமாணிக்கனார்
13. https://veludharan.blogspot.com/2019/02/sri-aprameya-swamy-temple-sri-ambegalu.html
14. chapter 12 of Brahmanda Purana,
15. https://www.wisdomlib.org/south-asia/book/middle-chola-temples/d/doc210482.html
16. https://www.youtube.com/watch?v=EbIcNAT42ZU
17. https://www.wisdomlib.org/hinduism/book/manusmriti-with-the-commentary-of-medhatithi/d/doc201313.html
18. http://devarbook.blogspot.com/2011/02/blog-post_8219.html#
19. http://muttaram.blogspot.com/2014/09/blog-post_63.html
20. http://sarasvatam.in/ta/2015/12/30/
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.