
- குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி - 3 (2025) முதற்பரிசு பெற்ற கட்டுரை. -
ஆய்வுச்சுருக்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த புதிய வரவு புனை கதைகளாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் இதன் வளர்ச்சி பல பரிணாமங்களைப் பெற்றது. சிறுகதை வளர்ச்சியால் கன்னித்தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சியால் சிறுகதைத் துறை மேலும் வளர்ச்சியடைந்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியமும் முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கின்றது. இப் புலம்பெயர் இலக்கியம் விசைகொள்ள பலவகைப்பட்ட ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட, பரந்துபட்ட வாசகர்களின் எழுத்தாளர் குரு அரவிந்தனின் பங்களிப்பு தனித்துவமானது. இவர் எழுதிய புல்லுக்கு இறைத்த நீர், நங்கூரி, பனிச்சறுக்கல், உறவுகள் தொடர்கதை ஆகிய நான்கு சிறுகதைகள் மட்டும் இவ் ஆய்வுக்காக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் நோக்கமானது மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளைத் திறனாய்வு செய்வதுடன் இவரது சமூகம் பற்றிய பிரக்ஞையையும் வெளிக்கொணர்வதாகும். பண்புநிலை அடிப்படையில் விபரண ஆய்வு முறையினூடாக இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாய்வுக் கட்டுரைக்குரிய தரவுகள் ஆசிரியருடைய சிறுகதைகள், நூல்கள், இணையத்தளங்கள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன.
திறவுச் சொற்கள்:- குரு அரவிந்தன், புல்லுக்கு இறைத்த நீர், பனிச்சறுக்கல், நங்கூரி, உறவுகள்
தொடர்கதை.
அறிமுகம்
குரு அரவிந்தன் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், புலம்பெயர் தேசமாகிய கனடாவில் வசிப்பவருமாகிய கணக்காளர், ஆசிரியர் குரு அரவிந்தன் அவர்கள் படைப்பிலக்கியத்தில் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளியாவார். ஆழ்ந்த புலமைப் பின்புலம் கொண்ட மகாஜனாக் கல்லூரியின் அறிவேற்றமும், ஆழ்ந்த புலமையும், ஆழ்ந்த வாசிப்பும் இவரின் ஆக்கங்களின் வேர்களோடு தொடர்புபட்டுள்ளன. எட்டுச் சிறுகதைத் தொகுப்புக்கள், ஏழு நாவல்கள், ஒலிப்புத்தகங்கள், சினிமாக் கதை, வசனம், சிறுவர் இலக்கியம், நாடகங்கள் என்ற பன்முகத்தளங்களில் கால்பதித்து நிற்கும் அவரது ஆளுமையின் உறுபண்பு (trait ) அறிவு நிலையிலும், ஆக்க நிலையிலும் அவர் மேற்கொண்ட செறிவான ஊடாட்டங்களின் வெளிப்படுத்துகையாயின. சர்வதேச தமிழர் மட்டத்தில் இவரது வாசகர் வட்டம் மிகப்பெரிய அளவில் பரிணாமம் அடைந்து கொண்டிருப்பதற்கு இவரின் கனதியான இலக்கியப் பங்களிப்பே காரணமாகின்றது.