கம்பராமாயணத்தில் மாதரைக் கொல்லுதல் பாவம் என்பது குறித்த பதிவுகள் - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -
முன்னுரை
கவிச்சக்கரவர்த்தி கம்பர் தம் ராமாயணத்தில் குற்றமுடைய செயல்களாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். நமக்குத் துன்பத்தைச் செய்தாலும் தூதரைக் கொல்லக்கூடாது என்றும் கூறியுள்ளார். மகளிரைக் கொல்வது பாவம் என்றும், குற்றம் என்றும் கூறியுள்ளார் என்பதை இக்கட்டுரையின் வழி ஆராய்வோம்.
பெண் கொலை புரிந்த மன்னன்
சங்க இலக்கியத்தில் நன்னன் என்ற மன்னன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவனுடைய காவல் மரம் மாமரம். அந்த மரத்தில் உள்ள பழங்களை யாரேனும் சாப்பிட்டால், அவர்கள் நீண்ட நாள் வாழ்வர் என்ற நம்பிக்கையும் இருந்து வந்தது. காவல் மரத்தின் மாம்பழம் ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வந்தது. அது இன்னாருடையது என்பதை அறியாமல், ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த கோசர் குடி பெண் அதனை எடுத்துத் தின்றுவிட்டாள். இதனை அறிந்த நன்னன் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தான். கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது காவல் மரத்தின் மாம்பழத்தைத் தின்ற தவறுக்காக, அவளது எடைக்கு எடை பொன்னும், 81 யானைகளும் தண்டமாக ஏற்றுக்கொண்டு அப்பெண்ணை உயிருடன் விட்டு விடும்படி மன்றாடினார்கள். ஆனால் மன்னன் நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல், அவளைக் கொன்று விட்டான். இதனால் புலவர் இவனைப் ’பெண் கொலை புரிந்த மன்னன்’ என குறிப்பிடுகின்றார்.