கொடூரமான கொலை ஒன்றைப் பற்றிக் கேள்விப்படும்போது, அந்தக் கொலையாளி மனச்சோர்வால் (depression) பாதிக்கப்பட்டிருந்ததால்தான் அந்தக் கொலை நிகழ்ந்ததெனப் பொதுவில் பேசிக்கொள்கிறார்கள். நாங்கள் அதிகமாகக் கேள்விப்படும் ஒரு மனநல ஒழுங்கீனமாக மனச்சோர்வு இருப்பது அதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால், மனச்சோர்வு என்பது ஒருவரின் மனநிலையில்/உணர்ச்சிகளில் ஏற்படும் ஓர் ஒழுங்கீனம் ஆகும். அதன்போது, மனச்சோர்வடைந்திருக்கும் நபரே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார். மனச்சோர்வைத் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு நிலையை ஒருவர் அடையும்போது, அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடும். ஆனால், எழுந்தமானமாக நிகழும் திடீர்க் கொலைகளுக்கு மனச்சோர்வு காரணமாக இருப்பதில்லை. அதேவேளையில், இன்னொரு வகையான மனநல ஒழுங்கீனமாக இருக்கும் schizophrenia (மனப்பிறழ்வு) என்ற நோ ய் இவ்வகையான திடீர் கொலைகளுக்குக் காரணமாக இருக்கக்கூடும்.
Schizophrenia என்பது யதார்த்தம் எது, பிரமை எது என்ற வித்தியாசம் தெரியாத சவால்கள் நிறைந்த ஒரு மனநிலையாகும். அந்த நிலையில் ஒருவரால் தெளிவாகச் சிந்திக்கவோ, தன் உணர்சிகளைக் கட்டுப்படுத்தவோ, சரியான தீர்மானங்களை எடுக்கவோ, உறவுகளைக் கையாளவோ முடியாதிருக்கும். சிலநேரங்களில் இந்த நோயின் அறிகுறிகள் மோசமாகலாம். Schizophrenia உள்ளவர்கள் எல்லோரும் வன்முறையாளர்களாகவோ, கொலைசெய்பவர்களாகவோ இருப்பதில்லை, எனினும், அந்த நோய்க்கு ஏற்ற சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளாதவர்களை அந்த நோய் வன்முறையாளர்களாக மாற்றலாம். அத்துடன், மதுபானம், போதைப்பொருள் போன்ற பொருள்களை அந்த நோயாளர் அதிகமாகப் பயன்படுத்துவதும் அவரை மேலும் ஆக்ரோஷமானவராக மாற்றக்கூடும்.
எங்களின் சமூகத்திலும் மனநல ஒழுங்கீனம் இருப்பது களங்கம் என்ற நிலைப்பாடு இருப்பதால், அதற்குரிய சிகிச்சைக்கான தேடல் எப்போதும் இருப்பதில்லை. அத்துடன், அப்படி ஒரு நோய் தங்களின் குடும்பத்தில் இருப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ளவும் முடிவதில்லை. இந்த நிலையே கொலை போன்ற துர்ப்பாக்கிய நிகழ்வுகள் நிகழ்வதற்குக் காரணமாகின்றது. மேலும் குடும்பத்தவர்களே அதற்குப் பலியாகிறார்கள்.
Schizophreniaஇன் நோய்க்குறிகள் ஆளுக்கு ஆள் வேறுபடக்கூடும். சிலருக்கு இதன்போது மனச்சோர்வும் ஏற்படலாம். ஆனாலும், மனச்சோர்வு பொதுவில் இதற்கான காரணமாக இருப்பதில்லை. அத்துடன், 18 முதல் 35 வயதானவர்களைத்தான் இந்த நோய் பாதிக்கிறது. பெண்களைவிட ஆண்கள் இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். 100இல் ஒருவருக்கு schizophrenia ஏற்படலாம் என்பதால், அதனை விரைவில் இனம்கண்டு, அதற்கு வேண்டிய சிகிச்சைகளையும், தேவையான ஆதரவுகளையும் பெற்றுக்கொள்வதற்கு இந்த நோய்பற்றி அறிந்திருந்தல் அவசியமானது.
Schizophrenia இருப்பதன் அறிகள்
Hallucinations – ஒருவருக்கும் கேட்காத குரல்கள் கேட்டல், அல்லது ஒருவருக்கும் தெரியாத விடயங்கள் தெரிதல், அல்லது மற்றவர்கள் உணராத வகையிலான ருசி/தொடுகை/மணம் ஆகியவற்றை உணரல்.
Delusions – சான்றுகள் எதுவுமற்ற பிழையான நம்பிக்கைகள். உதாரணத்துக்கு, ஊடகங்களில் அவர்களுக்கான விசேட செய்தி வழங்கப்படுகிறது, மற்றவர்கள் தங்களின் மனதில் உள்ளவற்றை அறிந்துகொள்கிறார்கள், அரசாங்கம் அவர்களை வேவு பார்க்கின்றது என நம்புதல்.
அர்த்தமற்ற பேச்சு, மிக மெதுவான பேச்சு, ஏனையோரிடமிருந்து விலகியிருத்தல்,
ஒழுங்கற்ற நடத்தை, முடிவெடுக்க முடியாமை, நினைவாற்றல் பாதிப்பு
உணர்ச்சிகளை முகத்தில் வெளிக்காட்ட முடியாமை/ கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமை
Schizophrenia உருவாவதற்கான அபாயக் காரணிகள்
பிறப்புரிமையியல் காரணிகள் – முக்கியமாக பிறப்புரிமைக் காரணிகளின் செயல்பாட்டில் சூழலின் தாக்கம் (epigenetics). எங்களின் மூதாதையரின் பிறப்புரிமைக் காரணிகளில் ஏற்பட்ட விகாரங்களும் இதற்குப் பங்களிக்கக்கூடும்.
புலம்பெயர்ந்தவராக இருத்தல் – அதிகளவிலான அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருத்தல்
கருத்தரிக்கும்போது தகப்பனின் வயது அதிகமாக இருத்தல்
கர்ப்பத்தில் இருக்கும்போது தாய்க்கு ஏற்படும் பிரச்சினைகள்
போர்க்காலத்தின் நெருக்கீடு
நீரிழிவு நோய்
உயர் குருதி அமுக்கம்
போசாக்குக் குறைபாடு
நோய்த் தொற்றல்
அதிகளவிலான நிறை (obesity)
குறைமாதத்தில் பிறத்தல், மிகக் குறைந்த பிறப்புநிறை
பிள்ளைப்பராயத்தில் ஏற்படும் துன்புறுத்தல்கள்
மூளையில் பாதிப்பு ஏற்படல்
போதைப்பொருள் பயன்பாடு
Schizophrenia உள்ளவருக்கு உதவக்கூடியவை
போஷாக்குள்ள உணவு
தேகப்பியாசம்
போதுமான நித்திரை
மன அழுத்தத்தைக் கையாளும் வழிகளை அறிந்திருத்தல்
சமூக உறவுகளைப் பேணல்
நினைவூட்டல் குறிப்புகள்
அலாரங்கள்
கிரமமாகச் செய்யவேண்டியவற்றின் அட்டவணை
நாள்காட்டி ஒன்றைப் பயன்படுத்தல்
Counsellors, ioccupational therapists, social workers ஆகியோரின் உதவிகளை நாடல்
“எனக்கு ஒரு வருத்தமும் இல்லை, நான் எந்தச் சிகிச்சைக்கும் வரமாட்டேன்.” என்று ஒருவர் கூறினால், “சரி உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையென நீ நம்புகிறாய். அதை நான் மதிக்கிறேன். ஆனால், ஒரு தடவை மருத்துவரை நீ சந்திப்பது நல்லதென நான் நினைக்கிறேன். என் நம்பிக்கைக்கு மதிப்புக்கொடுத்து வருவாயா?” எனக் கேட்கலாம். அப்படிக் கேட்பதற்கான நிலை இருப்பதற்கு சுமுகமான உறவுகள் இருப்பது முக்கியமென்கின்றனர் மருத்துவ ஆலோசகர்கள். அவ்வாறே “அம்மா ஒரு அரக்கி, என்னைத் துன்புறுத்துகிறா!” என்று ஒருவர் கூறினால், “ஓ அம்மா அரக்கியா, உன் நிலையில் இருந்தால் எனக்கும்தான் பயமாயிருக்கும்.” என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, “அம்மாவை நீ எப்படி அப்படிச் சொல்வாய்?” என எதிர்வாதத்துக்குப் போகக்கூடாது என்கிறனர். இப்படியாக நோயாளர்களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளும்போது, அவர்கள் மனம்திறந்து கதைக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும்.
ஆனால், அம்மாவைக் கொலைசெய்யப் போகிறேன் என்று ஒருவர் சொன்னால், உடனடியாக பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை அம்மா எடுப்பதுடன், பொலிசாரையும் அழைக்க வேண்டும். நோயின் கிளர்ச்சியின்போது சொல்வதோ, செய்வதோ பின்னர் நோயாளருக்கு நினைவிருக்கமாட்டாது. ஆனால் அந்தக் கட்டத்தைத் தாண்டுவது மிகவும் முக்கியமாகும், அல்லது அங்கு ஒரு கொலை நிகழக்கூடும். பிள்ளைதானே அவன் என்னைக் கொல்லமாட்டான் என நினைப்பது அசட்டுத்தனமாகும். ஏனெனில் அப்படிச் சொல்வது உங்களின் பிள்ளை அல்ல, அது அந்தப் பிள்ளையின் நோய் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அவருக்குக் கேட்கும் குரல்கள்தான் அப்படிச் செய்யச்சொல்லி அவரைத் தூண்டுகிறது, அவருக்கு அதை மேவும் வழியில்லை என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.
அந்த நோயாளரின் கோபத்தைத் தணித்து, வைத்தியசாலை ஒன்றில் அவரைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்குப் பொலிசாருக்குச் சட்டங்கள் இடமளிக்கின்றன. அவ்வாறே அந்த நோயாளரின் விருப்பத்துக்கு மாறாக மூன்று மாதம்வரை அவரை வைத்தியசாலையில் வைத்திருப்பதற்கு மருத்துவர்களைச் சட்டம் அனுமதிக்கிறது. பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறும்போதும், அந்த நோயாளர் தன் சிகிச்சை பற்றிய முடிவுகளை எடுக்கமுடியாததொரு நிலையில் இருக்கிறாரென மருத்துவர் உணர்ந்தால் அவரின் சிகிச்சைக்குப் பொறுப்பாக இருப்பதற்காக மாற்றீட்டுத் தீர்மானம் எடுப்பவராக (Substitute Decision-Maker) குடும்ப நபர் ஒருவரை அந்த மருத்துவர் நியமிக்க முடியும்.
Schizophreniaஐக் குணப்படுத்த முடியாது, ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான மருந்துகள் உள்ளன. தினமும் குளிகைகள் எடுப்பது நோயாளர்களுக்குச் சவாலானதாக இருக்கலாம் என்பதால் நீண்டகாலம் செயற்படக்கூடிய ஊசிகளைப் பெற்றுக்கொள்வது ஒரு தெரிவாக உள்ளது. அவற்றை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை பெற்றுக்கொள்ள முடியும். சமூகம் என்ன சொல்லும், தெரிந்தால் அவமானம் அல்லவா என எவருக்கும் தெரியாமல் மூடிவைத்திருப்பது நோயாளருக்கு மட்டுமன்றிக் குடும்பத்தவருக்கும் ஆபத்தானதாக முடியலாம். எனவே மற்றவர்கள் நினைப்பதோ, சொல்வதோ எங்களுக்கு முக்கியமில்லை, எங்களுக்கு எது நல்லதோ அதை நோக்கிச் செல்வதற்கான விழிப்புணர்வைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்போம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.