- எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அதனையொட்டி வெளியாகும் அவரது சிறுகதை எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் முக்கியமான நாவலாக நாம் கருதுவது 'மண்ணில் தெரியுதொரு தோற்றம்' நாவலையே. வீரகேசரி பிரசுர நாவலாக வெளியான நாவல். வர்க்க விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஜானகி என்னும் பெண் போராளி பற்றிய நாவல். நாவலை வாசிக்க
உவ அஞ்சாறு பெட்டையள அடுக்கடுக்காப் பெத்துப்போட்டாவாக்கும் அதுதான் ‘வெப்பியா’ரத்தில பெருமையடிக்கிறா. அந்தக் காலத்திலேயே ‘அஞ்சு பிள்ளையளைப் பெத்தா அரசனும் ஆண்டியாவா’னென்டு இன்னும் மொருதன் பாடியிருக்கிறான். இந்தக் காலத்தில் எப்படியிருக்கும்.
‘சீவன் போக முன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில் முழிக்குங்களென்டு நான் நம்பேல’
இவள்பாவி என்ன, எடுத்தாப்போல ‘சகுனி’ யாட்டம் சொல்கிறாள்.
‘அது பாவம் மனுசி பெத்ததுகளைக் கடைசியாப் பாத்திட்டுக் கண் மூடவெண்டு கொட்டுக்க சிவனை வைச்சுக்கொண்டு படுற பாட்டைக் கண் குடுத்துப் பாக்கக் கறுமமாக் கிடக்கு’
கள்ளி, மனிசியில உருகுமாப் போல சும்மா சாட்டுக்கு மாய வித்தை காட்டுறாள்.
‘அது சரி, தந்தி எப்ப குடுத்ததாக்கும்?’
‘வேளையோட குடுத்திருப்பினம் தானே?’
‘அக்காள், வாய் புளிக்குது, உந்த வெத்திலைத் தட்டத்தை இஞ்சாலையும் ஒருக்கா அரக்கிவிடு’
ஓ, வருத்தம் பாக்கிற சாட்டா, ‘தாக்கற’ இருந்து வெத்திலையும் சப்பிக்கொண்டு வியளம் பறைய வந்திருக்கிறாளுகள்.
‘தந்தி குடுத்து ரண்டு நாளாப்போச்சு, இஞ்சால இன்னும் ஒரு மறுமொழியும் வரக்காணன், என்ன சங்கதி?’
‘வயிலசில பேசினாச் சுறுக்கில் கிடைக்குமல்லே’
‘தந்தி என்னெண்டு குடுத்துதுகளோ?’
‘ஆச்சிக்குக் கடுமை உடனே புறப்பட்டு வாருங்கோ’ண்டு தான் அடிச்சவையாம்’
‘ஒரு பிள்ளையளிட்டயிருந்தும் மறுமொழி வரேல்லயாமோ?’
இதேன் இவளவே இதுகளைக் கிண்டிக் கதைச்சு விசேண்டியத்தை ஊட்டுறாளவையோ தெரியல்லே.
‘இல்ல பாவம், தேப்பன் மனுசன் தந்தி குடுத்துப்போட்டுப் பெஞ்சாதிக்குப் பக்கத்திலயிருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கு’
வேண்டிப்போட்ட வெத்திலை பாக்குச் சமையப் போகுதாக்கும் தேப்பனைத் தின்னியளாட்டம் மனிசனிலையும் பரிவு காட்டிக் கரிசனையாய்ப் பறையிறாளவ.
‘தந்தியள் அந்தந்தத் தேசங்களுக்குப் போய்ச் சேர்ந்ததோ ஆர் கண்டது?’
ஒருத்திக்கு ஒருத்தி கதையில் ‘கோசு’ போகாளுகள் போலத் தெரியுது.
‘தெல்லிப்போமில கதைச்சாலென்ன?’
‘தங்கச்சிமாரே, உங்களைக் கும்பிட்டுக் கேக்கிறன். உந்த வாயளை எப்பனுக்கு அடக்கிக்கொண்டு அலட்டாமல் சும்மா கிடவுங்கோ.
புண்ணியவதி, விடாதையன, உவளவேயின்ர ‘குலு குலுப்பை’ய அப்பிடி அடக்கி வையன.
‘வருத்தக்காற மனிசிக்கு ஏதும் பணிவிடை செய்ய வந்தனீங்களோ, உங்கட சலிப்புத் தீர்க்க வந்தனீங்களோ?’
நாச்சியார், நல்ல ‘நறு விசா’க் கேட்டுக் கிழிக்கிறார் அச்சா.
‘டியே, பொறுங்கோடியாத்தை பிள்ளையளக் காண்ற ஏக்கத்தில மனிசி புழுவாத் துடிச்சுப் பதகளிக்குது. உங்கட ‘விடுப்பு’க் கதைகளால பொடியள் வர முந்தியே மனிசி போயிடும். எப்பன் மெல்லமாப் பறையுங்கோவன்’
இதேன் உவள் பாவி இதுக்க ‘சமன்’ படுத்திறாள்! என்ன சம்பந்தஞ் செய்ய வந்தவளே?
மூத்த பொடியன் எந்த நாட்டிலயாக்கும்?’
பங்க பார் பேந்தும் துவங்கியிட்டாளவ. இவளவே சரக்குக் கண்ட இடத்திலே பிள்ளை பெறுவாளுகள் போலக் கிடக்கு.
‘பொடியன் யேமனியில கப்பல்ல வேலை செய்யுதாம்’
ராப்போலாப் படிச்சுப் பாஸ் பண்ணிப் போட்டு, கப்பல் வேலை செய்யிறது ‘இங்கிஷை’யெண்டு மற்றவைக்கு நசுக்கிணாமல் புட்டுக் காட்டுகிற கெட்டித்தனம், அப்புக்காத்துமாரை விட எங்கட ஊர்ப் பெண்டுகளுக்குத்தான் இருக்கு.
‘நடுவிலான் எந்த நாட்டுல?’
‘லண்டன் சீமையில இஞசினியருக்குப் படிச்சுப்போட்டு ‘அங்க ஏதோ பெரிய வேலையில கொளுவியிட்டானாம்’
‘அப்ப இளையவன்?’
‘படிச்சிட்டு வேலையளுக்கு எழுதடாவெண்டு எழுதிப் போட்டு களைச்சுப்போய் கடைசியா இந்தப் பொடியும் வெளிநாட்டுக்குப் போட்டானாம்’
பெத்தவள் புண்ணியவதி ஆனா, இவளவைக்குப் பொறாமை பிடிச்சிட்டுது. இவளவே ஒருக்காலும் உருப்படாளவை…
எடிய புள்ள, வெத்திலைத் தட்டத்துக்க நாறப்பாக்கிருந்தா ஒரு கடி புளவு தாண’
இவளவேக்குக் கதை கண்ட இடம் கைலாசம், அஞ்சு நிமிட்டில ஒரு சேனை வெத்தில சமைஞ்சுபோச்சு.
‘அது கிடக்க, மோள்க்காறி எந்த நாட்டிலயாக்கும்?’
‘பொடிச்சி சிங்கப்பூரில’
‘அது பெட்டையும் கல்யாணம் முடிச்ச கையோட சங்கப்பூருக்குப் போட்டுது’
‘ஓ பின்ன, கட்டின மாப்பிளை விடுறானே? குட்டிக் கொண்டு போட்டான்’
‘பெட்டைக்கும் தந்தி குடுத்திருப்பினம் தானே?’
‘ஓ, குடுத்திட்டினம். ஆனா, பொடிச்சி பெறுமாதம் எக்கணம் பயணம் கியணம் வைக்க ஏலுதோ?’
‘என்ன, இந்தச் சுறுக்காயோ?’
‘அது சில பெண்களின்ர தேகவாசி தொட்டால் போதும் உடனே பத்தியிடும்’
‘தேகவாசியோ ஊர் வாசியோ யார் கண்டது?’
‘உதேன் ‘தக்கு’ வைச்சுப் பேசுறாளுகள்? ‘சொடுகு’ பொறுக்காட்டி உவளவேக்குப் ‘பொச்சம்’ அடங்காது.
‘பெட்டை எங்க இருந்தாலும் ஏதோ விக்கினமில்லாமல் சுவமாப் பெத்து, தாய் வேற புள்ள வேறயா வந்தாக் காணும்’
‘இப்ப மோள்க்காறிய நினைச்சுத்தான் மனிசி ஆகத் தவிச்சுத் துடிக்குது’
‘பெண்ணாப் பிறந்தவளுக்குத்தானே பெண்ணாப் பிறந்த பிள்ளையளின்ர அருமை தெரியும். ஆணாப் பிறந்தவன் சேறு கண்ட இடத்தில மிதிச்சு, தண்ணி கண்ட இடத்தில கழுவுற சாதி தானே? தந்தி கண்டதும் பொடிச்சியை அவன் பொடியல்லோ கூட்டிவந்து விட்டிருக்கவேணும். எப்படியோ பெத்தவளுக்குப் பொம்புளப் புள்ளயளிலதானே கரிசனை இருக்கும்?’
‘ஓ, பின்ன என்ன பெத்தவளுக்கு பெட்டைக் குஞ்சுகளாலதானே ஆத்தி’
‘ஆயிரம் ஆம்புளையளிருந்தென்ன… வீட்டில ஒரு பொம்புளைக்கு ஈடாகுமே! இப்ப அந்தப் பெட்டைக்குஞ்சு நிண்டால் பெத்தவளின்ர ஆத்துமக்கொதி எப்பனாவது தணியும்’
உவ அஞ்சாறு பெட்டையள அடுக்கடுகாப் பெத்துப் போட்டாவாக்கும். அதுதான் ‘வெப்பியார’த்தில பெருமையடிக்கிறா. அந்தக் காலத்திலேயே ‘அஞ்சு பிள்ளைப் பெத்தா அரசனும் ஆண்டியாவா’னெண்டு இன்னு மொருதன் பாடியிருக்கிறான். இந்தக் காலத்தில எப்படியிருக்கும்?
பணத்துக்கு ஆசைப்பட்டு ஆம்புளப் புள்ளையள் பிறதேசம் போட்டினம். பெத்தவள் விழுந்து கிடந்து தவிக்கேக்க தண்ணிச் சொட்டுக் குடுக்க வீட்டில பிள்ளையளில்ல’
‘ஆமோ, ஆரும் பொருள் பண்டந்தேடி வசதியாச் சீவிக்க விரும்புறது புழையோ? டியே, இந்த உலகத்தில பணத்துக்கு ஆசைப்படாதவே ஆர் இருக்கினம்?’
ராசாத்தி, விடாத புடியடி செப்பமான கேள்விதான் உன்ர வாய்க்குச் சீனி போடவேணும். சரிதானே, பணத்துக்கு ஆசைப்படாதவே ஆர் இருக்கினம்.
‘பின்ன என்ன, இஞ்ச உழைச்சு நேர் சீராச் சீவிக்க ஏலுமெண்டால், தங்கமான பொடியலெல்லாம் சோனாவாரியாக அள்ளுப்பட்டுக்கொண்டு பிறந்த நாட்டை விட்டு ஏன் புறதேசங்களுக்கு ஓடுதுகள்?’
பொறுப்பாய்த்தான் கேட்டிருக்கிறாள். ‘வகை’ சொல்லவே முழிசிக் கொண்டிருக்கினம்.
‘அப்ப அது ஆற்ற சீத்துவக்கேடு?’
எங்க, இதுக்கு மறுமொழி சொல்லுங்கோ பாப்பம்? ஓ… உது ஆற்ற சீத்துவப்புழை?
‘உதுகளைப் பற்றிப் பறையாமல் மூடி மறைச்சுக் கொண்டு அமசடக்கமா இருக்கிறதால தான் நெடுகலும் இந்தச் சில்லெடுப்பு’
‘இப்ப பாக்கிறியள்தானே… பத்து மாதம் சுமந்து நொந்து பெத்து வளத்துச் சீராட்டித் தாலாட்டி ஆளாக்கியவள் படுக்கையில் விழுந்திட்டாள். பெத்த பிள்ளையள் தாயின்ர ஆவத்துச் சம்பத்துக்கு உதவ அருகில் இல்ல. இதுவும் ஒரு சீவியமே?’
‘இது ஆற்ற சீத்துவக்கேடு?’
‘நீ என்ன சொல்றாய் பிள்ளையளின்ற சீத்துவக்கேடே’
‘ஏன் அது பாவங்களில பழி போடுவான்?’
‘பின்ன, நொந்ததுகளின்ர பிழையே?’
‘ஏன், அவேயப் பெத்து வளத்து ஆளாக்கிவிட்ட படியாலோ?’
‘அப்ப ஆற்ற குற்றம்?’
‘எல்லாம் உடையான் மூப்பு. அதுதான் சங்கதி’
‘இது போலத்தான் எக்கணம் புறந்த நாட்டுக்கு ஆவத்துச் சம்பத்து வந்தாலும், ஆபத்துக்குதவ ஆமான ஆக்களிருக்காயினம்’
‘சரியாச் சொல்லிப்போட்டாய். இப்ப பெத்த தாய்க்கு நடக்குறதுதான் நாளைக்குப் புறந்த நாட்டுக்கும் கட்டாயம் நடக்கும்’
உண்ணான, நீதான் தீர்க்க தரிசியாட்டம்சரியாய்ச் சொல்றாய். ஆனா, ஆரும் கேட்பாரில்லை.
‘நாச்சிமாரே, நீங்கள் வருத்தக்காற மனுசியைப் பாக்க வந்தனீங்களோ, உடையார் மணியகாறனைப்பற்றிப் பறைய வந்தனீங்களோ?’
‘பாத்தியளே உள்ளதைச் சொன்னால் உங்களுக்கு உடம்பெல்லாம் நோகுது நோணாக்கள், நோகாமல் பிள்ளைப் பெறப்பாக்கிறியளே?’
சீதேவி, கரிநாக்கிச்சியாட்டம் வாய் திறந்து அச்சாக்கேள்வி கேட்டிருக்கிறாள். கலகம் வந்தால்தானே நாயம் புறக்கும்.
‘ஆச்சி என்னைத் தெரியுதே!’
‘ம்?’
மனுசி பிள்ளையளைக் கண்ணில முழிக்கத் தவிக்குது இதுக்கள்ள பாக்க வாறவே அலட்டி அரியண்டப்படுத்துகினம்;
‘இஞ்ச பாருங்கோ எங்களைத் தெரியுதோண’
‘ம் கூ’
‘நான் உங்கட மூத்த மோனோட ஒண்டாப்படிச்சிட்டு இடையில விட்டிட்டுத் தோட்டஞ் செய்து போட்டு வெளிநாட்டுக்குப் போய் வந்தனான். இப்ப ‘லொறி’ எடுத்து ஓடுறன். மோன் வெளிநாட்டிலயிருந்து அனுப்பின ‘பார்சல்’களை ஒரு நாள் லொறியில கொண்டு வந்து தந்தன் நினைவிருக்கே?’
‘ஓ…’
இவர் பொருள் பண்ட ஆசைய மூட்டுறார். மனிசி பிள்ளைப் பாசத்தில் கிடந்து தவண்டையடிக்குது.
‘இவவை ஆரெண்டு பாக்கிறியளாக்கும். இவ என்ர அவவின்ர தங்கைக்காறி உங்கட மோளோட ஒண்டாப் படிச்சவ அதுதான் உங்களைப் பாக்க வந்தவ’
‘ஆ…’
இவருக்கு என்ன எடுப்பு? பெஞ்சாதிய விட்டிட்டு அவவின்ர தங்கச்சிக்காறிய ஏன் கூட்டித் திரிவான்? உவனை ஏன் குறை சொல்லுவான் உவவுக்கு என்ன அரிப்பு -?
‘ஆச்சி இஞ்ச ஒருக்காப் பாரணை‘
‘அங்?’
எப்படியெண்டாலும் பொம்புளப் புள்ள வாய் துறந்தால் கிளி பேசுற மாதிரிக் கனிவு, மனுசி பொடிச்சிய ஆவலோடு பாக்குது.
‘ஆச்சிக்கு என்ன செய்யுது?’
‘ம்…’
‘சுடுதண்ணப் போத்தலுக்க ‘நெஸ்ட மோல்ட்’ கரைச்சுக்கொண்டு வந்தனான். எப்பன் குடிக்கிறீங்களே?’
‘ம்…ம்கூ’
‘அப்ப ஆச்சிக்கு என்ன வேணும்?’
‘ம்…புள்..’
புள்ளயளக் கண்ணில முழிக்க வேணுமெண்டு மனிசி அவலோட வாய்க்குள்ள அருக்கூட்டிச் சொல்லுதெண்டு தெரிஞ்சும், அவே இதைக் கவனிக்கிற நிலையில் இல்லை.
‘ஆச்சி இஞ்ச பாத்தியளே உங்கட மோளின்ர கலியாணப் போட்டோவை..’
‘அங்… இஞ்…’
சந்தோஷத்தில் சடாரென்று விரிஞ்ச ஆச்சியின்ர முகம், பிறகு சுருங்குது… கண் கலங்குது.. கண்ணீர் பொசிஞ்சு கடைக்கண்ணால வழியுது. வந்தவேக்கு ஏன் உந்த விசுப்புளுத்திக் கதையள்…?
‘மக்கள் வருவினம், கண்கலங்காதையண பங்க பாரண மக்கள் அனுப்பின கார், ரேடியோ, ரெலிவிஷன், சீலை, சூட்கேஸ் எல்லாம் ஆச்சிக்குத்தானே?’
உதுகளை என்ன சவத்துக்கு? ‘ஆபத்துக்குதவாப்பிள்ளை அரும்பசிகுதவா அன்ன’மெண்டு இன்னும் மொரு ஊரவன் பாடின கணக்கா, மனிசிக்கு இப்ப பிள்ளையளல்லோ தேவை. அதுக்கு ஏதும் அடுக்குப் பண்ணாமல், உப்பிடி விண்ணாணங் கொத்தினா, அதின்ற ஆத்துமக்கொதி தணியுமே..?
‘ஆச்சி, என்னெ;ன விதங்களில சாமான்கள் அனுப்பியிருக்கினமெண்டு பாத்தியளே! எல்லாம் ஆச்சிக்குத்தானே?’
‘மக்காள், கவ்வைக்குவாததுகளைக் காட்டி என்ர அவவின்ர சீவனை மாய்க்காதையுங்கோ…? அவ உதுகளை எப்பவோ ஆண்டனுபவிச்சவ அவவில உருக்கமெண்டா அவவைக் காப்பாத்த விரும்பினா அவவின்ரை விருப்பத்தை நிiவேத்த ஏதும் தேவையான அலுவல் பாருங்கோ. உங்களால ஏலாட்டி அவவுக்கு தேவையில்லாத பண்டங்களைக் காட்டி அலட்டாமல் கிடவுங்கோ…’
மனுசன் மனசு பொறுக்காமல் இப்பதான் வாய் திறந்து உவேயின்ர ‘பவுசு’களை அப்பு செம்மையாகப் புட்டுக் காட்டிப் போட்டார். இப்பதான் அவேக்கு சங்கதி ஓடி வெளிக்குது.
‘தந்தி…தந்தி’
‘விடியப்புறம் காகம் கத்தேக்கயே, ‘இண்டைக்குப் பிள்ளையள் வருமெண்டு நான் சொல்ல, நீங்கள் காதில விழுத்தேல இப்ப பாத்தியளே நான் வாயோச்சமாய்ச் சொன்ன மாதிரித் தந்தி வந்திருக்கு’
‘என்ன புள்ளயள் வருகுதெண்டு தந்தி வந்திட்டுதே?’
‘அ ஆச்சி தந்தி வந்திருக்கண…’
‘ம்…..’
‘புறப்பட்டு வாறதெண்டு பிள்ளையள் மறுமொழி வரக்காட்டியிருக்கினமாக்கும்’
‘அங்….ம்….ம்…’
ஆச்சி அந்தரப்படுறா. முகந் திரும்பிக் கண் முழிக்கறா: தந்திக் கடுதாசியில தான் கண் விழுகுது.
‘தந்தியப் புரியனிட்டக் குடுங்கோ. மனிசன் பாத்துச் சொன்னால்தான் அவவுக்கு எப்பன் ‘ஆத்தி’யாயிருக்கும்’
பெத்த வயிறு பூரித்த ஆச்சி புரிசனையே உத்துப் பாக்கிறா. இனி ஆச்சிக்கு என்ன குறை? பிள்ளையள் வரப்போகுதுகள் வருத்தம் பறக்கும்.
‘மோன, எனக்குக் கை காலெல்லாம் நடுங்குது. சுறுக்கா உடைச்சுப் பாத்துச் சொல்லுங்கோ’
ஆச்சி பாயில கிடந்தபடி, அப்பு அமபலோதிப்பட்டுக் கொண்டு தந்தி உடைக்கிற பொடியன்ர வாயையே அணில் ஏறவிட்ட நாயாட்டம் ஆக்கள் பாக்கினம். பொடியனுக்கு இங்கிலீசு வாசிக்கத் தெரியாதாக்கும். வேற ஒரு களிசான்காறப் பொடியனிட்ட குடுக்கிறான்.
‘தம்பி தந்தி என்னவாம்?
தந்தி வாசிச்ச பொடியன் மலாரிட்டு விறைச்சாப்போல சலிச்சுக் கொண்டுபோய் களிசானோட நிலத்தில் குந்;தியிட்டான். அப்புவின்ர நெஞ்சு ஓணான் குஞ்சாட்டம் பதறுது… முகத்தில் துக்குறி படருது ஆமை மூசுற மாதிரி விலா ஏவப் பெருமூச்சு விட்டுக்கொண்டு ஆகாசத்தைப பாக்கிறார். விலாச் சீப்பு ஏவி இறங்குது. கை எடுத்துக் கூப்பிப் பரதவிக்கிறார்.
கதிர்காமம் – செல்வச்சந்நிதிக் கோயில்களுக்கு ‘நேத்தி’ வைக்கிறார் போலத் தெரியுது.
பெண் புரசுகள், குஞ்சு குருமன்கள் ஓடி ஆடி அந்தரப்படுதுகள்.
‘மோன தந்தி என்ன சொல்லுது?’
பொடியன் கூட்டத்தில் நிற்கிற பெண்டுகளைப் பார்த்து அழுமாப்போல சொல்றான்:
‘ஆச்சிக்குப் பொசிப்பில்லை பிள்ளையள் பாவங்கள், அதுகள் என்ன செய்யும்? திரும்பிவர ஏலாமல் கிடந்து அந்தரப்படுகுதுகள்?’
‘ம்ங் … அம்…ம் அம்ங்கோ….’
‘… ஆச்சி அய்யோ அது பாவத்தின்ர பெத்த வயிறு பதறுதே விலா எலும்புகள் குடைஞ்சு விரியுதே கண்முழி பிரளுதே…’
‘ஆ மூச்சுத் திணறுதே சேடம் இழுக்குதனே!’
‘தம்பியவ, உதில ஓடிப்பொய் பரியாரி சுப்பறுமணியத்தை ஒருக்காக் கூட்டியாருங்கோ’
‘கொம்பங் கல்லுங் உரைச்சுக் கொடுத்தால் சேடம் நிண்டாலும் நிற்கும் சுறுக்காப் போங்கோ’
‘அ… கண் மேல சொருகுதடி அய்யோ எங்கட ஆச்சி எணெய் …!’
‘ஆ கொள்ளையுல போவாரே, என்னுமடி விடுப்புப் பாக்கிறயள். இஞ்சால விடுங்கோடி கண் பொத்துங்கோடி’
‘அ அங்…அங்க்… அய்யோ என்ர ராசாத்தி எல்லாரையும் தவிக்க வைச்சு, என்னையும் தனிய விட்டுப் போறியோண… என் பத்தினியே… நீயில்லாமல் நான் ஒரு கணமும் தரீயேனணே என்னையும் உன்னோட கூட்டிக்கொண்டு போண ராசாத்தி…’
மனிசன் பெஞ்சாதியின்ர கால்மாட்டில நெடுஞ்சாணையா அடியுண்டு விழுந்து கிடந்து கதறி அழுகுது. அதின்ர கோலத்தைப் பாக்கப் பெரிய கறுமமாக் கிடக்கு. எக்கணம் மனிசியோட மனுசனும் போயிடும்போல தெரியுது. இப்பவே மனிசன்ர அரைவாசி வாணால் போட்டுது.
‘யே…மனிசன் எக்கணம் சாகப் போகுது. அது பாவத்தைக் கைத்தாவாத் தூக்கி முத்தத்துக்கு கொண்டு வாருங்கோ’
‘ஆ… அப்பு ணேய் உலகத்தில ஆரண சாகிறேல்ல? கொஞ்சம் ஆறியிரணயப்பு…’
‘அப்பு ணேய்… அப்பு…’
‘ஆருமத்த பாவியப் போல் – அப்பு இப்ப அந்தரிச்சுப் போனியோண …?’
‘தேசம் விட்டுப் போன மக்கள் – ஆச்சியின்ர ஆசைமுகம் பாக்கவில்லே…’
‘ஆச்சியுன்ர செல்வங்கள் – கடைசி மட்டும் ஆவலோடு பாத்திருந்தாய்…’
‘தேகம் பதறியல்லோ – ஆச்சியுந்தன் ஆவி பிரிஞ்சதணே ….’
‘பெத்ததுகளைப் பிரிச்சு – பெரும்பவுசாய் பிறதேசம் போக வைச்ச’
‘மெத்தப் படிச்சவகள் – ஆகொடிய மோசஞ்செய்து போட்டினமே’
‘ணேய் அப்பு. ஆச்சியின்ர அத்திரட்டியும் முடிஞ்சிட்டுது, ஒண்டும் தின்னாமல் குடியாமலிருந்தாப் போல போனவ வரப் போறாவே? இந்த உலகத்தில பிறக்கிறவே எப்பிடியும் ஒரு நாள் இறக்கிறதுதானே! அவ சாகேக்க பெத்த பிள்ளையள் இல்லையெண்டு நாங்கள் என்னத்தால குறைய விட்டனாங்கள். அவவின்ர கருமத்தையும் வடிவா ஒப்பேத்தி எல்லாம் நீரோசையா முடிச்சனாங்கள் தானே? நாலு பேர் குறை சொல்லாமல் சகலதுஞ் செய்தும் நாங்கள் பிறத்தியெண்டு தானே தண்ணி வென்னி குடிக்கவும் ‘ஒஞ்சிச்சு’ வயிறெக்கிக் கொண்டிருக்கிறியள்?’
அகத்தி ஆயிரங்காய் காய்ச்சாலும் பிறத்தியே பிறத்திதானே? உவே எப்பிடி நாக்கு வளைச்சாலும் மனிசியின்ர செத்தவீட்டுச் சிலவு மனிசன் மனிசியின்ர சொத்துப் பத்தில தானே நடந்தது? வழித் தேங்காய்த் தெருப்பிள்ளையாருக்கு அடிச்ச கணக்கா இருக்கு. உவேயின்ர கதை காரியம்.
‘அப்புணேய், உப்பிடியே கிடந்து எங்கள மனவருத்தப் படுத்தாமல் எழும்பி வந்து ஒரு அவிழ் சோத்துப் பருக்கையெண்டாலும் தின்னண’
‘மோன, உங்களைக் கும்புட்டன் என்னை இப்ப தொந்தரவு செய்யாதையுங்கோ, மேலைக்குப் பாப்பம்’
‘உப்பிடித்தான் நெடுகலும் சொல்லுறியள். நீங்க உப்பிடி அன்னந்தண்ணியில்லாமலிருந்து அழுந்தேக்க, உங்கட பிள்ளையள் வந்து பாத்தால் ஆரைப் பழி சொல்லுங்கள். எங்களைத்தானே?’
பெத்த தாய்க்கில்லாத பிள்ளையள், தேப்பனைத் தலையில தூக்கி வைக்கப் போகுதுகளே? தாயைத் தின்னியள் இனிமேல் தேப்பனைத் தின்னயளா அந்தரிக்கட்டன்.
‘அப்பு, எழும்பி வந்து ஒரு கவளமெண்டாலும் தின்னண’
‘மக்காள், இப்ப நீங்கள் போய்த் தின்னுங்கோ. வேணுமெண்டால் நான் பிறகு பொறுத்துத் தின்றன்’
அப்புவின்ர அழுங்குப்பிடி, அவற்ற வயித்துக் கொதியால இளகிப்போச்சு, அதை இவளவ – இவனவே கவனிச்சுப் போட்டானவ.
‘அப்பிடியெண்டா நீங்களும் சாப்பிடமட்டும் இண்டயதுவக்கம் நாங்களும் பிள்ளையளும் பட்டினி கிடக்கப் போறம்.
‘மோன, எனக்காக ஏன் பிள்ளையளப் பட்டினி போடுவான்?’
‘நீங்கள் சாப்பிடாட்டி அதுகளும் தின்னாதுகளாம்’
அப்பு கடுவலாக யோசிக்கிறார், பெருமூச்சு விடுகிறார். அவே குசாலாகப் பாக்கினம்.
‘அப்பிடியே ! …ம் பின்ன எப்பன் பருக்கையைத் தா மோன’
‘ணேய் அப்பு அங்க பாரண, உங்கட மக்கள் நாலு பேரும் ‘ஒக்கம’ காரால றங்கி வருகினம்’
‘ஆ நான் பெத்த என் மக்காள்..’
‘அய்யோ எங்கட அப்பு எங்களைப் பெத்த தெய்வத்தின்ர கண்ணில முழிக்காமல் விட்ட கறுமக்காறரணே’
அப்புவின்ர தேகம் உசும்பேல அவற்ர வாணால் போட்டுது. அழ ஏலாமல் தவிக்கிறார். பிள்ளையளைக் கட்டிப் பிடிச்சபடியே கிடக்கிறார். மோள் பெட்டை தூணோட, சுவரோட தலை தலை யெண்டடிச்சு மோதுது. அயலட்டைச் சனங்கள் ஓடி வருகினம். பெண்டுகள் கூவாக் குளங்கரையெண்டு விழுந்தடிச்சு ஆத்துப் பறந்து ஓடி வருகுதுகள்….
‘ஆ… செல்வங்களே வந்து சேந்திட்டியளே ?’
‘பாசமும் பாக்கவல்லோ – ஆச்சியவதேசமெல்லாம் தூது விட்டா’
‘ஆவி பிரியுமட்டும் செல்வங்களை ஆவலோடு பார்த்திருந்தா’
பெண்டுகள் மாரடிச்சு அழுகிற விறுத்தத்தைப் பாத்தால், ஆச்சி இப்பதான் மோசம் போனவ போலத் தோணுது.
‘நாச்சியாரவே ஒப்பாரி வைச்சு அழுதது காணும். இனி எப்பன் ஓஞ்சிருங்கோ. வந்த பிள்ளையள் அந்தரிச்சுத் துடிக்குதுகள். அதுகளை எப்பனுக்கு ஆசறுதி’யா இருக்க விடுங்கோ’
ஆச்சியின்ர செத்தவீட்டுக் கருமங்களை முடிச்சு ஓடியாடி அலுவல் பார்த்த பெடி பெட்டையள் சொன்னோடன, பெண்டுகள் ஒப்புச் சொல்லி அழுகிறதை நிப்பாட்டியிட்டினம். வந்து நிண்ட அயலட்டைச் சனங்கள் ‘எங்களுக்கேன் இந்த வில்லங்க’மெண்டு நினைச்சு, அந்தடியால அவருக்கவர் விலகிப் போறதை, அப்பு தவிச்ச முகத்தோட பாக்கிறார். கொஞ்ச நேரத்தால் பிள்ளையள் தேப்பனோட ஏதோ ‘குசு குசு’த்துப் பறையேக்க, கருமாதிகள் செய்த அந்தப் பெட்டை பொடியளுக்கு விசேண்டியமாக் கிடக்கு.
‘பெத்த தாயின்ர கண்ணிலும் முழிக்காமலிருந்துபோட்டு, இப்ப சொத்துப் பத்துக்களை…. பங்கு போடவல்லே வந்திருக்கினம்’
அடிச்சாப்போல இது பிள்ளையளின்ர காதில விழுந்தது.
‘உதென்ன உங்கட எடுப்பான கதைகள்? எங்கட அப்பு ஆச்சியின்ர சொத்துக்களை நாங்கள் பங்கு போடுவம் விடுவம். நீங்கள் புறத்தியார், அதுகளில தலையிட்டுக் கதைக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?’
‘அ….அப்படியும் ஆணவமோ? மனிசி சாகுமட்டும் நாங்கள் பாத்து மேச்சுவிட? எங்கேயோ கிடந்துபோட்டு ‘உரிமை’ கொண்டாட வெளிக்கிட்டிட்டியளே? மரியாதையா இப்பவே வெளிக்கிடுங்கோ இல்லாட்டி, அதில எக்கணம் ‘மேடர்’ தான் நடக்கும். ஓ சொல்லப்போட்டன்’
தேப்பனும் பிள்ளையளும் மலாரடிச்சு விறைச்சுப் போய் நிக்குதுகள் அதுகளின்ர கையும் ஓடுதில்லை, காலம் ஓடுதில்லை. அதுகளுக்கு இவங்கட ‘பிளான்’ ஒண்டுமாப் பிடிபடேல்ல என்ன செய்யிறதெண்டு தெரியாமல் தாயத்தின்னிப் பிள்ளையள் தேப்பனைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு விம்முதுகள். இவங்கள் அமெரிக்கக் காண்டா முறுகமாட்டம் தேப்பனையும் பிள்ளையளையும் வெருட்டுமாப்போல முறைச்சுப் பாக்கிறாங்கள்….
‘உதவி செய்தால் உரிமை கொண்டாட வேணுமெண்டு எந்தச் சட்டத்தில இருக்கு?’
‘பிள்ளைகள் ஒரு சாவாய்க் கேக்கினம்; சங்கதி வில்லங்கத்தில வரும்போல கிடக்கு. பறப்பார் உந்தப் புடியை விடாங்கள் போலத் தெரியுது…உதவி செய்யிறதே ‘உரிமை’ கொண்டாடத்தான், இதுதான் இப்பத்தையச் சட்டம்’
தேப்பனும் மக்களும் ஓடி முழிக்கினம். பிறத்தியாருக்கு இந்த நீரேத்தம் யாரால வந்தது? எப்புடி வந்தது?
தேப்பனும் கோடேறி வழக்காடுற நிலையில் இல்லை. பிள்ளையள் பறிதேசம் போய்விடுவினம். இது ஆற்ற சீத்துவக்கேடு?
இன்னும்தான் ஒருவருக்ம் சங்கதி புடிபடேல்ல
இது உடையான்ர சீத்துவக்கேடெண்ட சங்கதி இன்னும்தான் சனங்களுக்கு விளங்கேல்ல.
அனுப்பியவர்: நவஜோதி ஜோகரட்னம்
– 1982 மல்லிகை
– அகஸ்தியர் கதைகள், முதற் பதிப்பு: 1987, ஜனிக்ராஜ் வெளியீடு, ஆனைக்கோட்டை.
எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் 'மண்ணில் தெரியுதொரு தோற்றம்'
எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் முக்கியமான நாவலாக நாம் கருதுவது 'மண்ணில் தெரியுதொரு தோற்றம்' நாவலையே. வீரகேசரி பிரசுர நாவலாக வெளியான நாவல். வர்க்க விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஜானகி என்னும் பெண் போராளி பற்றிய நாவல். நாவலை வாசிக்க