
கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை ஈழத் தமிழ் நாடக இலக்கியத்திற்கு தொடர்ந்து தனது பங்கினை ஆற்றிவருகிறது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்த்துறை பேராசிரியரான சுவாமி விபுலானந்த அடிகள் ஒரு நாடக ஆசிரியரும் ஆவார்.' மதங்க சூளாமணி' என்கிற நாடக இலக்கண நூலை எழுதிய முன்னோடி இவர். மகாகவி பாரதி பற்றிய முதல் ஆய்வினையும் நடத்தியவர் என்பது நாம் அறிந்த செய்தி. பின்னர் வந்த தமிழ்த் துறை தலைவர்களான பேராசிரியர்கள் கணபதிப் பிள்ளை, வித்தியானந்தன், தில்லைநாதன், துரை மனோகரன், தற்போதைய தமிழ்த்துறை தலைவர் பிரசாந்தன் வரை அனைவரும் நாடக ஆசிரியர்கள் . சிங்கள நாடக முன்னெடுப்புகளும் பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்விப் புலத்தால் பெரிதும் அரவணைக்கப்பட்ட ஒன்று . இத்தகைய பாரம்பரிய பின்புலத்துடன் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஈழத்தமிழ் நாடக இலக்கியத்தை மையப் பொருளாக்கி ஐந்தாவது தமிழியல் மாநாட்டை கொரோனா பெருந்தொற்றின் போது 2020 ஆம் ஆண்டில் நடத்தியது. இதற்கான கட்டுரைகள் துறைசார்ந்தவர்களிடமிருந்து பெறப்பட்டன.தமிழ்நாட்டு நாடகத்திற்கும் ஈழத் தமிழ் நாடகத்திற்கு இடையேயான பிணைப்பினை நினைவு கூறும் வகையில் தமிழகத்து நாடகச் செயற்பாட்டாளர்களான வெளி ரங்கராஜன், பிரஸன்னா ராமஸ்வாமி, பிரளயன் கி.பார்த்திபராஜா, ஆர். ராஜு ஆகியோர் ஜூம் வாயிலாக அரங்கத் தலைமை உரையை அழைப்பின் பேரில் நிகழ்த்தினர். நாடக ஆர்வலனாக நானும் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினேன். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட கலாநிதி செல்லத்துரை சுதர்சன் ,திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அவை அனைத்தையும் ஹஈழத்தில் தமிழ்நாடக இலக்கியம்’ என்கிற நூலாக தொகுத்துள்ளனர்.
ஈழ நாடக அரங்கினதும் கல்விப்புலத்தினதுமான முக்கிய அடையாளமாக விளங்கும் பேராசிரியர் சி.மௌனகுரு இம்மாநாட்டின் துவக்க உரையை நிகழ்த்தியுள்ளார். ஈழ நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டு நாடகம் பற்றியும் அவர் வரலாற்றுப் பார்வையுடன் சுருக்கமாகவும் செறிவுடனும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். நாடகம் பிரதானமாக ஆற்றுகை வடிவம் என்றாலும் அது இலக்கியப் பிரதியாகவும் பெற்றுள்ள முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். தொடர்ந்த இலக்கியப் பாரம்பரியம் நம்மிடையே இருந்தபோதிலும் நாடகம் பற்றிய நல்லெண்ணங்கள் வளராததன் காரணமாகவே அதன் வரலாறும் பிரதிகளும் தொலைந்து போனதை குறிப்பிடுகிறார். செவ்விலக்கியங்கள் நாடகப் பிரதிகளை தம்முள் கொண்டுள்ளன என்பதை தெரிவிக்கும் அவர் நாடகமாகவே இலக்கிய கர்த்தாக்கள் அவற்றை எழுத முன்வராதது பற்றிய தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார். “ அது கம்பராமாயணம் அன்று. அது ஓர் கம்ப நாடகமே. கம்பன் நாடகம் எழுதியிருப்பின் தமிழருக்கு காளிதாசன் போல ஒரு நாடக ஆசிரியன் கிடைத்திருப்பான்” என்கிறார். கூத்துப் பனுவல்களாக பள்ளு, குறவஞ்சி நூல்கள் 16, 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே நம்மை தொடர்வன என்பதைக் கூறிவிட்டு பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் நவீன தமிழ் நாடக இலக்கியத்தின் தோற்றுவாய் என்று குறிப்பிடுகிறார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, சுவாமி விபுலானந்தர் ஆகியோரைத் தொடர்ந்து சீர்திருத்த கருத்துகளை உள்ளடக்கிய வசனங்கள் புனைகதை எழுத்தாளர்கள் எழுதிய நாடகங்கள், இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் ராமானுஜம், நா.முத்துசாமி, மு.ராமசாமி, இன்குலாப் ஆகியோர் நாடகப் பிரக்ஞையுடன் எழுதிய நாடகங்கள் ஆகியவற்றையும் நாடக இலக்கியத்தின் தொடர்ச்சியாகக் கருதுகிறார். இப்போக்குகளுக்கு இணையாக ஈழத்தமிழ் நாடக இலக்கியங்களின் வளர்ச்சி பற்றியும் எழுதியுள்ளார். பேச்சோசை நாடகங்கள், கவிதை நாடகங்கள், அபத்த வாத நாடகங்கள், சிறார் நாடகங்கள், பெண்ணிய நாடகங்கள் என்று பலதரப்பட்ட போக்குகளையும் இதில் அறிமுகம் செய்கிறார். மேலைத் தேய மரபுகளின் வழிவந்த சிந்தனைகளின்பாற்பட்டவற்றை நாம் கண்மூடித்தனமாக அணுகாது விமர்சனப் பார்வையுடன் நமக்கானவற்றை அடைய வேண்டும் என்கிற அறிவுறுத்தலுடன் தனது கட்டுரையை முடிக்கிறார் மௌனகுரு.