இலங்கை வரலாற்றின் சில பக்கங்களின் சாட்சியாகத் திகழும் கலகக் குரல் மு. நித்தியானந்தன்! ஏப்ரில் 01 இல் பவளவிழா நாயகன்! - முருகபூபதி -
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் நடந்த பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு அரங்கில் நான் முதல் முதலில் சந்தித்த மு. நித்தியானந்தனுக்கு அப்போது 25 வயது. பேராசிரியர் கா. சிவத்தம்பி தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சியில், இளமைக்கேயுரிய துடிப்போடு எழுத்தாளர் – சிந்தனையாளர் மு. தளையசிங்கத்துடன் இலக்கிய ரீதியாக விவாதித்த நித்தியானந்தனின் கலகக்குரல் இன்னமும் ஓயவில்லை. இலங்கை மலையக மக்களின் ஆத்மக்குரல் நித்தியானந்தனின் எழுத்திலும் உரைகளிலும் தொடர்ந்து ஒலித்து வந்திருக்கிறது. அம்மக்களின் வரலாற்றினைப்பற்றி மட்டுமல்லாது, முழு இலங்கை வரலாற்றின் சில பக்கங்களின் சாட்சியாகவும் விளங்கும் நித்தியானந்தனின் தந்தையார் முத்தையாபிள்ளை பதுளையில் கலைஒளி என்ற இதழையும் நடத்தியிருக்கும் சமூகப்பணியாளர். அன்னாரின் ஞாபகார்த்தமாக பின்னாளில் இலங்கையில் இலக்கியப்போட்டிகளும் நடந்திருக்கின்றன.
நித்தி, பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறியபின்னர் சிறிது காலம் கொழும்பில் தினகரனில் துணை ஆசிரியராக 1970 களில் பணியாற்றினார். அக்காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரில் நடந்த பாரதி விழாவுக்கும் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின் பிரசார கூட்டத்திற்கும் வருகை தந்து உரையாற்றினார். பாரதி விழாவில் நித்தியுடன் வந்து அங்கே உரையாற்றியவர்கள் எழுத்தாளர்கள் நவசோதி, மற்றும் எச். எம். பி. மொகிதீன். தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின் பிரசாரக்கூட்டத்தில் நித்தியுடன் வந்து உரையாற்றியவர்கள் பேராசிரியர் க. கைலாசபதி, மற்றும் சிங்கள எழுத்தாளர் குணசேனவிதான. அந்தச் சம்பவங்கள் இன்றும் நினைவுகளில் பசுமையாக வாழ்கின்றன.