- அண்ணாவியார் குமுழமுனை நாகலிங்கம் நெல்லிநாதன்-
பிறந்தகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுளமுனை என்பது அண்ணாவியார் நாகலிங்கம் நெல்லிநாதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் ஊராகும். இக்கிராமம் வன்னியின் குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட கிராமமாகும். சோழராட்சிக்காலத்தில் திருகோணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வளந்தொட்டுக் குளம் பெருக்கிய மன்னான குளக்கோட்ட மன்னனின் ஆட்சிக்கும் இக்கிராமம் உட்பட்டிருந்தது. தண்ணிமுறிப்புக் குளம் இவன் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாற்றாய்வாளர்களின் துணிபு. இக்கிராமத்தில் ‘வன்னியன் வளவு’ ‘வன்னியன் கிணறு’ ‘யானை கட்டிய புளி’ என்னபன வன்னியர் இக்கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளாகக் காணப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் இக்கிராமத்தவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை கோலாட்டம், கும்மி, கூத்துப் போன்ற கலைகளில் செலவு செய்துள்ளனர். வெளியிடங்களிலிருந்து அண்ணாவிமாரை அழைத்துவந்து கூத்துக்களைப் பழகி மேடையேற்றி ஆடி வருவது வழமையாக இருந்துவந்துள்ளது.
குடும்பப் பின்னணி
குமுளமுனை சின்னப்பிள்ளை நாகலிங்கம் மற்றும் ஆறும் இரத்தினம்மா தம்பதியினரின். நான்காவது மகவாகப் பிறந்தவர் நெல்லிநாதன். மூத்த சகோதரர் நடனசபாபதி நீர்பாபசனத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டாவது சகோதரர் ஈஸ்வரபாதம் கூத்துக்கலையில் இவரும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இளமையிலேயே மறைந்தவர். அடுத்ததாகப பிறந்த சகோதரி யோகேஸ்வரி திருமணமாகி வேறு பழம்பாசி என்னும் கிராமத்தில் குடியேறியுள்ளார். அடுத்தவர் குகன் என்னும் இளைய சகோதரர், அடுத்தவர் சந்திரகுமாரி திருமணமாகி ஊரிலேயே வாழ்நதவருகின்றார். லலிதகுமாரி ஆசிரியையாக குமுளமுனை ம.வி.யில் கற்பித்துவருகின்றார். திருமணமாகிப் பிள்ளைகளோடு குமுளமுனையில் வாழ்ந்து வருகினறார். நேசமலர் இளைய சகோதரி முள்ளியவளையில் திருமணம் செய்து அங்கேயே வாழந்து வருகின்றார்.
நெல்லிநாதன் சம்மளங்குளத்தைச் சேர்ந்த செல்வரத்தினம், அன்னலட்சுமி தம்பதியினரின் புதல்வி சூரியபவானியைத் தனது வாழ்க்கைத் துணவியாக்கி இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் உள்ளார்.
தனது ஆரம்பக் கல்வியை குமுளமுனை மகாவித்தியாலயத்தில் கற்றுவந்துள்ளார். அக்காலத்தில் குமுனமுனை ம.வி.யில் ஆசிரிய தம்பதிகளாக பொலிகண்டியைச் சேர்ந்த திரு, திருமதி பாலசிங்கம் தம்பதியனர் கடமையாற்றி வந்துள்ளனர். வே.பாலசிங்கம் ஆசிரியர் பொலிகண்டியைச் சேர்ந்தவர். துணைவியார் இமயாணன் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். இருவரும் ஆசிரியர்கள். குமுளமுனையில் பாடசாலையிலேயே கலைத்துவம் மிளிர நாடங்களையும், கூத்துக்களையும் தனது ஓய்வுநேரங்களில் மாணவர்களுக்கு பயிற்றுவித்தும் போதித்தும் வந்தவர். இவரது அயராத பணியினால் குமுளமுனையில் பல இளைஞர்கள் கலைஞர்களாக மிளர ஊக்கமும் ஆக்கமும் தரப்ப்டு வளர்த்தெடுக்கப்பட்ட முத்துக்களில் ஒருவர் தான் நாகலிங்கம் நெல்லிநாதன். அத்தோடு குமுளமுனையில் வழமையாக மழையை வேண்டி ஆடப்பட்டு வரும் கூத்துக்களில் காத்தராயன் முக்கியமானது. குமுளமுளையில் உள்ள பட்டிதொட்டிகளில் காத்தவராயன் கூத்துப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருப்பதற்கு அதுவே காரணம். கூத்துக்கலையில் ஈடுபாடு கொண்ட அவர் அடியெடுத்து வைத்த்ம் அந்தக் கூத்துக்கலையின் கவர்ச்சியும் ஒரு காரமாகும்.
கூத்துக்கலையில் நாட்டம்
கூத்துக்கைலைப் பரம்பரையில் வந்தவர் திரு. பாலசிங்கம் அவர்கள். தன்னிடம் கற்ற மாணாக்கருக்கு பண்டைய கூத்தக்கலைகளை கற்பித்ததோடு பயிற்றுவித்தும் வந்துள்ளார். “வள்ளி திருமணம்” “கண்ணன் தூது” “அரிச்சந்திரா மயானகாண்டம்’ ‘பாஞ்சாலி சபதம்” ‘ஏழுபிள்ளை நல்ல தங்காள்’ போன்ற கூத்துக்களையும் நாடகங்களையும் பழக்கி குமுளமுனையில் உள்ள தங்கராசா அவர்களின் மில் வளவு என்னும் காணிக்குள் மேடையமைத்து அரங்கேற்றியுள்ளார். அந்த நாடகங்களில் பல்வேறு வேடங்களை ஏற்று நடத்டித்தவர்கள் அனைவருமே குமுளமுனைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்த நாடகங்களைப் பார்ப்ப தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு, வட்டுவாகல், சிலாவத்தை, அளம்பில், செம்மலை, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்ற கிராமங்களில் உள்ள மக்கள் வருகை தந்து பார்ப்பது வழக்கமாககும்.
கூத்துக்கலை தவரி வில்லுப்பட்டுக்கலலாயையும் அசிரியர் பாலசிங்கம் அவர்கள் கற்றுத்தந்துள்ளார் என்பதும் நெல்லிநாதன் அதில் பயிற்சியம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கே தரப்பட்ட வாழ்த்து மடலில் தனது தந்தையின் பெயரை மாற்றி எழுதிவிட்டார்கள் என்றும் ஆதங்கப்பட்டார். கொடுத்ததைத் திருத்திக்கொடுக்க தாமதமாகிவிட்டது. ஆறிய கஞ்சி பழங்கஞ்சிதான் எனச் சலித்துக்கொண்டார். நா. நெல்லிநாதன் என்பதை. நாகலிங்கத்திற்குப் பதிலாக நாகமுத்து என்று எழுதிவிட்டார்கள். என்ன செய்யலாம்.
கூத்துக்கலையில் ஈடுபாடுகொண்டிருந்த இளைஞர்கள் தென்னமரவடியைச் சேர்ந்த பேச்சுமுத்து அண்ணாவியாரை அழைத்துவந்து ‘காத்தவராயன்” அரிச்சந்திரா’, சத்தியவான் சாவித்திரி” போன்ற நாடகங்களை குமுளமுனையில் பழகி பிலாவடி வளவில் கூத்துக் கொட்டகை போட்டு அதில் மேடையேற்றுவது வழமையாக இருந்து வந்துள்ளது எனினும் அக்காணியின் உரிமையாளர்கள் அந்தக் காணியில் வீடு கட்டி வாழத்தொடங்கிவிட்டனர். இதனால் தங்கள் கூத்துக்கான இடத்தை ‘கொட்டுக்கிணற்று ஆலயத்திற்கு’ முன்பாக மேடையேற்றி வந்துள்ளனர்.
1979ல் பேச்சுமுத்து அண்ணாவியாரால் பழக்கப்பட்டு மேடையேற்றப்பட்டள்ளது ‘அரிச்சந்திரா’ அந்தக் கூத்தில் அரிச்சந்திரனாக முக்கிய பாத்திரத்தில் நடித்ததோடு தனது கம்பீரமான குரலில் அரிச்சந்திரனாகத் தோன்றி பாடி நடித்திருக்கின்றார் நெல்லிநாதன். வில்லுப்பாட்டு, கூத்து நாடகம் என்பனவற்றோடு அவர் காத்தவரலாயன் கூத்தில் பல முறை நடித்துள்ளார். காத்தானாக, முத்துமாரியாக, நடித்துள்ளதோடு பின்னர் அதனை தானே தயாரித்து பழக்கியும் வந்துள்ளார். வேளம்படுத்த வீராங்கனை” என்னும் நாடகத்தை எழுதி நடித்தும் பழக்கியும் வந்தவர். அவரின் பரிட்சயம் இவருக்குக் கிடைத்தமைக்கு அவர் தபாற்காரராக பணியாற்றி குமுளமுனையில் உள்ளவர்கள் அனைவரையும் நன்றாகத் தெரிந்தவர்.
1980ல் “சத்தியவான் சாவித்திரி” கூத்தைப் பழகி அதில் சத்தியவானாக நடித்து பலபேரது பாராட்டுக்களைத் தனதாக்கிக்கொண்டவர். பேச்சுமுத்து அண்ணாவியாரின் வழிகாட்டலும், ஆற்றலும் இவரை ஆண்கொண்டது போலவே முள்ளியவளையைச் சேர்ந்து புலவரும் அண்ணாவியாருமான அரியான் பொய்கை செல்லத்துரை அவர்களின் ஆளுமையும் இவரைப் பின்பற்ற வைத்தன. முல்லைமோடியில் அமைந்த “கோவலன் கூத்தைப் பழகி” ஆண்டாண்டாய் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் வட்டக்களறி அமைத்து ஆடிவந்தவர்.
நடித்த கூத்துகளும் நாடகங்களும்
குமுளமுனையின் பிரபலமான “அரியாத்தை’ என்னும் நாடகம் பலமுறை பல கிராமங்களில் மேடையேற்றியுள்ளார்கள். இவற்றைவிட முல்லைமணி வே. சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்ட “பண்டார வன்னியன்’ நாடகத்தையும் பல தடவைகள் மேடையேற்றிய போது அவற்றில் நடித்துத்தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டியிருக்கின்றார். நெல்லிநாதன் அண்ணாவியார்.
கொட்டுக்கிணற்றுப் பிள்ளையாரின் கழுத்துவெட்டிய வரலாறு மற்றும் ‘பிரகலாதன்’ வில்லுப்பாட்டாக வெளிவருவதற்கு முக்கியமானவராக செயற்பட்டவர் நெல்லிநாதன்., கோலாட்டமாகவும் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன. வேலப்பணிக்கன் ஒப்பாரி, வேளம்படுத்த வீராங்கனை என்ற பெயர்களிலும் அரியாத்தை என்னும் யானையை அடக்கிக்கட்டிய வீராங்கனையின் கதையை வில்லுப்பாட்டிலும், நாடகத்திலும், கூத்திலும் மக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பலவற்றில் அவரது ஆளுமைமிக்க நடிப்பாற்றலும் நெறியாளுகையும் வௌிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
நெல்லிநாதனின் சித்தப்பா சின்னப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவரின் இரண்டாவது புதல்வர் தெய்வேந்திரம்பிள்ளை அவர்கள் நாடகத்தில் மிகவும் ஈடுபாடுகொண்டவர். அரியாத்தையின் வரலாற்றை நாடக வடிவில் எழுதிப் பழக்கி பல ஊர் அரங்குகளில் மேடையேற்றியவர். இந்த நாடகங்களில் நெல்லிநாதனின் கலைவண்ணம் மிளர்ந்துள்ளது. இவர்களது குடும்ப்பின்னணி மிகவும் பழமையான மரபுவழியான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். குடும்பங்களுக்கிடையே மிக இறுக்கமான பிணைப்பைக் கட்டி வளர்த்தவர்கள். ஆண்டான் குளம் ஐயன் கோவில் பூசாரியாக இருந்தவர் அண்ணாவியார் நெல்லிநாதனால் சின்னண்ணன் என்று அழைக்கப்பட்ட ஒன்றவிட்ட சகோதரர் சிதம்பரப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை. நெல்லிநாதனின் மூத்த சகோதரன் நடனசபாபதி தண்ணீரூற்றில் திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்துவருகின்றார்.
இவர்களின் பெற்றோர் பாரம்பரியமான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். கட்டாடி உடையார் பரம்பரையில் வந்தவர்கள். அதனால் அப்பிரதேசத்தில் நன்செய், புன்செய் நிலத்திற்கு உரிமையாளர்கள். அதனால் நீண்டகாலமாகப் பயிரடப்பட்ட வளமிழந்த எல்லைநிலமாக இருந்த போதிலும் புதிதாக அமைக்கப்பட்ட நீர்ப்பாசனத் திட்டத்திற்கு கீழ் ஊரவர்களுக்குக் கிடைத்த காணிகள் இவர்களுக்குக் கிடைக்காதமை அவர்கள் நீர்ப்பாசனமற்ற விவசாயத்தோடு வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களில் அண்ணாவியார் நல்லைநாதனும் ஒருவர். அத்தோடு கூத்துக்கலையில் ஈடுபடுவதனால் அவரது குடும்பமும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடையவில்லை என்றாலும் கூத்தக்கலையில் அப்பிரதேசத்தில் மிகப் பிரபலமான ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞர் என்பது அவர் பெற்றுக்கொண்ட மதிப்பளிப்புக்கள், விருதுகள் என்பன சாட்சியம் பகர்கின்றன. முழுநேர விவசாயியான இவரால் முழுமையாக விவசாயத்தில் ஈடுபடமுடியாத நிலையும் முழுமையாக கூத்துக்கலையில் ஈடுபடமுடியாத நிலையும் உண்டு.
விவசாயம்தான் குடும்பத்தை வழிநடத்தும் வருமான மூலமாக உள்ளது. நெற்பயிற்செய்கையோடு நிலக்கடலை, உழுந்து மிளகாய்ப் பயிர்களையும்சிறுதானியப்பயிர்களாகப பயிரிட்டு வாழ்க்கையை ஓட்டும் நெல்லிநாதனின் குடும்பம் வருமானம்குறைந்த சாதரண நிலையிலும் தனதுமகனை பொறியில் படிக்கவைத்து வேலைக்காக காத்திருப்பதிலும் பார்க்க வெளிநாடு செல்லவேண்டும் என்னும் கனவோடு வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நான் 2022ல் அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டேன். வாழ்க்கை மிகவும் கடினமானது என்பதை உணர முடிந்ததது. கலைஞர்களின் வாழ்வு கடினமானதான அமைவதற்கு தங்கள் உழைப்பை ஊதியமின்றி செய்வதே என்பது வெளிப்படை. அதற்கு அண்ணாவியார் நெல்லிநாதனும் விதிவிலக்கல்ல என்பதை உணரமுடிந்தது. அண்ணாவியாரின் கலைத்துவம் தொடரவும் மிளிரவும் யாராவது உதவ முன்வரவேண்டும் என்பது எனது ஆதங்கம்.