மத்தாப்பும் பட்டாசும் மனமெல்லாம் மகிழ்வும்
தித்திக்கும் இனிப்பும் சேர்ந்துமே நிறைய
இத்தரையில் மலர்கின்ற ஏற்றமிகு நாளாய்
தீபாவளித் திருநாள் சிறப்பாக வருகிறதே
பெரியவரும் மகிழ்வார் சிறியவரும் மகிழ்வார்
உரிமையுடன் உறவுகள் பரிசுகளும் தருவார்
மூத்தோரை வணங்கி ஆசிகளும் பெறுவார்
முதல்வனாம் இறையை பணிந்துமே நிற்பார்
புத்தாடை அணிவார் புத்துணர்வு பெறுவார்
சித்தமதில் எத்தனையோ தேக்கியே வைப்பார்
அத்தனையும் நிறைவேற ஆண்டவனை வேண்டி
அனைவருமே ஆலயத்தை நோக்கியே செல்வார்
பட்டுடுத்தி மகிழ்வார் பலபேர் இருக்கின்றார்
பட்டின்றி மகிழ்வாரும் பலபேர் இருக்கின்றார்
கஷ்டமுடன் உழைத்து களிப்புறுவார் களிப்பே
காசினியில் நிறைவான களிப்பாக அமையும்
ஏழை பணக்காரென எத்தினமும் பார்ப்பதில்லை
இல்லார்க்கும் விடிகிறது இருப்பார்க்கும் விடிகிறது
தீபாவளித் திருநாள் சிறப்பான திருநாளே
யாவர்க்கும் நன்னாளாய் அதுவமைந்து நிற்கிறதே
நரகாசுரன் மடிந்தான் எனவெண்ணி நிற்கின்றோம்
நாளும் பொழுதுமாய் பலவசுரர் வருகின்றார்
அசுரன் மடிந்தநாள் அதுதானே தீபாவளி
ஆனாலும் அசுரர்கள் எப்படித்தான் வருகின்றார்
கோபமும் வெறுப்பும் கொள்ளையும் கொலையும்
பகையும் பதட்டமும் பாரெல்லாம் நிறைகிறதே
அன்பும் அரவணைப்பும் அறமும் ஆன்மீகமும்
நின்று நிலைத்தாலே நித்தமுமே தீபாவளி
இறையெண்ணி நிற்போம் இயலார்க்கு ஈவோம்
மறைகூறும் அனைத்தும் மனமேற்றி வைப்போம்
குறைகளைந்து நிற்போம் கோவிலுக்குச் செல்வோம்
உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்
:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.