A Long Watch: War, Captivity and Return in Sri Lanka by Commodore Ajith Boyagoda, as told to Sunila Galappatti, is published by Hurst - தமிழ்பதிப்பு ( நீண்ட காத்திருப்பு ) - வடலி வெளியீட்டகம்- தமிழில் தந்தவர் - தோழர் தேவா - நேற்று அவரும் மரணித்தார்.
நீண்டகாலமாக எழுத வேண்டுமன நினைத்திருந்த ஒரு குறிப்பை, அந்தக் குறிப்புக்கு காரணமாக இருந்த நூலை தமிழில் தந்த தோழர் தேவா மரணித்த போதும் விரிவாக எழுத முடியவில்லையே என்கிற நிலையில் , தோழர் தேவாவின் பணி பற்றியும் , தமிழ்பதிப்பாக வந்த “நீண்ட காத்திருப்பு ” பற்றியும் ஒரு சில வரிகளாவது எழுத வேண்டும் என்பதால் அவசரமாக இதனை பகிர்கிறேன். இத்துடன் தோழர் தேவாவைப் பற்றிப் பேச, பகிர்ந்து கொள்ள ஒரு ZOOM நிகழ்வையும் ஒழுங்கு செய்துள்ளோம் , இதுவே நாம் செய்யும் அஞ்சலி ! எம்மால் இப்போது செய்ய முடிந்தது. விரிவாக எதிர்வரும் 2 ஏப்ரல் - ஞாயிறு அன்று அவரது பல்துறை சார்ந்த பங்களிப்பினை அனைவரும் இந்த ZOOM வழியான நிகழ்வில் பேசுவோம்.
மன்னாரில் பிறந்து, திருக்கோணமலையில் தொழில் செய்து, சுவிட்சலாந்த்தில் வாழ்ந்து , புகலிட நாட்டில் இருந்த அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் உதறித் தள்ளி , சொந்த மண்ணில் , அம்மக்களுடன் வாழ்ந்து , மரணிக்கும் திடசங்கற்பத்தில் இருந்தவர் அவர் என்பதே , அவரது இலக்கை, வாழ்வை, அவரது ஒரு பக்கத்தினை புரிந்து கொள்ள அவர் நமக்குத் தந்த நடைமுறை செயல் வாழ்வின் சாட்சியமாகும்.
இரண்டாவதாக , தமிழ் இலக்கியம், சமூகவியல், பண்பாட்டுத் தளத்திற்கு பிற மொழிகளில் இருந்து கொண்டு வந்து சேர்த்த சேகரங்கள் . இதன் அனைத்து உள்ளடக்கங்களும் போரும் அழிவும் , படுகொலைகளும் , மேலாதிக்கமும் நிகழ்ந்த மண்ணின் அவலமிகு வாழ்வும், அந்த மாந்தர்கள் மீதான பல் தளங்களிலான ஒடுக்குதலும், மேலாதிக்கமும், அதிகார வெறியின் இரத்தச் சாட்சியங்களுமே.
படைப்பு, தன்வரலாறு வழியான தனி மனிதர்களின், மக்கள் திரளின் அனுபவங்களும் கதைகளும் நம்மை தொடர்ச்சியாக அலைக்கழிப்பவை. இத்தகையை ஆக்கிரமிப்பு போரை, மனித குலத்திற்கு எதிரான மிலோச்சத்தனமான காவு கொள்ளலை , தேவாவின் தேர்வின் வழியாக , அவர் செம்மையாக மூலப்பிரதிக்கு விசுவாசமாக நின்று தேடி, தன்னை அர்ப்பணித்து மொழிபெயர்த்து தந்ததன் வழியாக அவரது இன்னொரு பக்கத்தினை நமக்கு காட்டி உள்ளார்.
*குழந்தைப்போராளி'
*அம்பரயா
* அனொனிமா
*நீண்ட காத்திருப்பு
* என் பெயர் விக்டோரியா
எனும் பிரதிகள் நமது தமிழ்ச் சூழலுக்கு , அவர் தம் உழைப்பின் வழியாக கிடைத்திருக்கிறது. நான் இந்த 5 பிரதிகளையும் வாசித்து உள்ளேன். ஒன்றுக்கு ஒன்று குறைந்ததல்ல. இலங்கை அரசியல் சூழலில் மிக முக்கியமான ஒரு பிரதி “ நீண்ட காத்திருப்பு “
ஒரு சிங்கள கடற்படை அதிகாரி , தன் கதை வழியாக, இலங்கையின் இனப்பிரச்சினை , அதன் விளைவுகளை , அதற்குள் சிக்கி இருந்த அனைத்து இன மனிதர்களின் , இலங்கை படையினரின், விடுதலைப்புலி உறுப்பினர்களின் கதைகளை மட்டுமல்ல, இனத்துவ அரசியல்வாதிகளின் சுய நலன் சார்ந்த அரசியல் இலாப மனோபாவத்தையும் சொல்லும் தன்வரலாறு சார்த்த அரசியல் பிரதி இது.
யார் விரும்பினாலோ, இல்லையோ, இலங்கை வரலாற்றில் 3 தாசப்தத்திற்கு மேலான அரசியல், இனத்துவ வரலாற்றில் இலங்கை அரசு எதிர் விடுதலைப்புலிகள் என்கிற ஒரு கால கட்டம் இருந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே மிகப் பெரும் உக்கிர சமர்கள் நடந்துள்ளன. இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த இரு தரப்பும் இலங்கை அரசியலையே தம்வசம் வைத்திருந்திருக்கின்றன .
இந்தக் காலகட்டத்தில் , இலங்கை கடற்படையில் இருந்த அஜித் போயாகொட என்கிற அதிகாரி, விடுதலைப் புலிகளின் தாக்குதல் மூலம் கடலில் சிறைப்பிடிக்கப்பட்டு , வடக்கில் பல்வேறு இடங்களில் விடுதலைப் புலிகளின் சிறையிலும், கிடக்கின்ற தருணங்களில் பொது வெளியிலும் வாழ்ந்த 8 வருட வாழ்வின் பதிவுகளை மிக நேர்மையாக சொல்லி இருக்கிறார் என.. இந்த நூலை வாசித்த பலர் உணர்ந்திருக்க கூடும் என்பதே, இந்தப் பிரதியின் பலமாகும்.
தான் விடுவிக்கப்பட்டு குடும்பத்துடன் இணைந்த பின், மன அமைதியிழந்து , சிங்களை இனவாதத்தால் மோசமான அவதூறுகளை எதிர் கொண்ட பின்னும், தான் இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் சொல்ல வேண்டியதை , துணிச்சலுடன் சொல்லியே உள்ளார். அவர் இலங்கை அரசாங்கத்தினை, விடுதலைப்புலிகளை கேள்விக்குற்படுத்தும் சமகாலத்தில், தமிழ் மக்களின் ”நீண்டகாலத் துயரை” உணர்ந்து கொள்கிறார். தமிழ் மக்களை இலங்கை அரசாங்கங்கள் ஒடுக்கியதை கண்டிக்கிறார்.
தமிழீழத்தை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை, விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் , உறுப்பினர்களுடன், ஆதரவாளர்களுடன் உரையாடும் போது தெரிவிக்கும் அவர், தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கி, அவர்களுக்கு நியாயம் செய்யப்படல் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுடன், இந்த யுத்தத்தினை , அழிவை தொடக்கி வைத்ததில் சிங்கள இனவாதத்தினதும், அதன் ஆட்சியாளர்களினதும் வழியை முற்றாக எதிர்க்கிறார். ( இந்த பிரதியின் ஒவ்வொரு அத்தியாயம் பற்றியும் விரிவாக எழுதலாம் ) .
இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய பார்வையை, இனவாத நோக்கில் கேட்டுள்ளோம், இடதுசாரிகளின் பார்வையில் கேட்டுள்ளோம், முதன் முதலில் போர்க்களத்தில் நின்ற , அதன் வழியாக முழுவதுமாக பாதிக்கப்பட்ட ஒரு சிங்கள படை அதிகாரியின் வாயிலாக கேட்கும் வாய்ப்பே இப் பிரதியின் அடுத்த முக்கிய அம்சமாகும்.
ஒவ்வொருவரைப் பொறுத்தவரை, அவரவருடைய அரசியல் பார்வையில் இருந்து , ஒரு பிரதியின் மீதான வாசிப்பு வேறுபடலாம், இது தவிர்க்க முடியாததது என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் எந்த பார்வை, கருத்து நிலை உள்ளோரும் நிச்சயமாக முதலில் இந்த பிரதியை வாசிக்க வேண்டும் என்பதே என் வேண்டுதல். நீங்கள் வாசித்த பின், இலங்கையின் இன மோதல், சிக்கல் குறித்த வித்தியாசமான ஒரு பதிவுப் பிரதி இது என்பதை நீங்கள் உணர்வீர்கள். தமிழில் இதே தளத்தில் இப்படியான ஒரு பிரதி முன்பு இல்லை என உங்களால் சொல்லவும் முடியும்.
தேவாவின் பணியில் மிகத் தலையாய பங்களிப்பு - நீண்ட காத்திருப்பு -Long Watch ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கொண்டு வந்ததது என்பது என் மதிப்பீடு. வாசிக்காதவர்கள் இந்த நூலை தேடிப் பெற்று வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எதிர்வரும் 2ம் திகதி, ஞாயிறு ZOOM நிகழ்வில் சந்திப்போம்!
கலந்து கொண்டு , தோழர் தேவாவைப் பற்றிப் பேச ஆர்வமானோர் தொடர்பு கொள்ளுங்கள்! முகநூல் லைக்குகளிலும் முகநூல் அஞ்சலிக்குறிப்புகளையும் தாண்டிய பங்களிப்பும் முக்கியமானது! ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்!