1
மொட்டெ அக்கா வீட்டின் முன்ஜன்னலை உடைத்தபோது முகத்தில் அறைந்த, குடலைப் பிரட்டும் பிணநாற்றம் செள்ளியைப் பீடித்திருந்தது. அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு முற்றத்தின் மூலையில் முழங்காலிட்டு வாந்தியெடுத்த நினைவு அவளின் தலைக்கேறியிருந்தது. வாயை அகலத்திறந்து, நாக்கை நீட்டி நீட்டி, காற்றை இழுத்து இழுத்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கெல்லாம் சிக்காது, பிரட்டலாக அடிவயிற்றிலேயே நின்றெரிந்த அந்த நாளைவிட இந்தநாள் அதிகக் கனத்தது.
அன்று, மூக்கைத் துவாலையால் கட்டிக்கொண்டு, ஜன்னல்வழியே உள்ளிறங்கி கதவின் தாழ்பாள் அகற்றப்பட்டதும் எழுந்த புளித்த பிணவாடை அங்கிருந்த எவரையும் முகம் சுளிக்கவைக்காமல் விடவில்லை. உள்ளே மொட்டை அக்காவிற்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த மரணித்த நெடியே அறைகூவியது. யாரும் உள்ளே நுழையும் முன்னமே ஆங்காங்கே தொடக்கிய ஒப்பாரிக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை இந்த நெடியின் சுளிப்பு.
பல நாட்களாய் மூடியிருந்த அவ்வீட்டிலிருந்து எழுந்த நாற்றம் முப்புறமெரித்த நெற்றிக்கண்ணாய் எவரையும் அணுகவிடாது தாண்டவமாடியது. உள்ளே என்ன நிகழ்ந்தது என்பதை அறியும் ஆர்வத்தையும், மொட்டை அக்காவின்மீதான அக்கறையையும் தகர்த்துக்கொண்டிருந்த அந்த நெடியைத்தாண்டி, மூக்கை மூடாமல், முகத்தில் சிறு சுளிப்புமின்றி, பதற்றத்துடன் முதலில் நுழைந்த குப்பியின் முகம்தான் இன்று காற்றுப்புகாத நெகிழியால் மூடப்பட்டிருந்தது.
அந்தப் பழைய இரட்டையறை வீட்டின் எட்டாத உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டையாலான மின்விளக்கின் பொத்தானை அழுத்துவதற்கு முன்பாகவே குப்பி மொட்டையை எட்டியிருந்தாள். அவளின் உடலை சூழ்ந்திருந்த ஈக்கள் கலைந்து ரீங்காரமிட, ஒன்றிரண்டு ஈக்கள் ஆழமாக இறங்கி மொய்த்திருந்த, புழுத்துப்போன அவளின் கண்களை தன் வலக்கரத்தால் மூடினாள். அடுப்படியில் அகன்று படுத்துக்கிடந்த அவளின் விலகிய ஆடையை சரிசெய்தாள். அவளைத் தாண்டிச்சென்று பின்கட்டு ஜன்னலைத் திறந்தாள். சடலத்தை தாண்டுவது மரபல்ல என்று அவளுக்கு நன்கு தெரியும். இருந்தும் நிலைப்பிற்கு மரபை மீறுவது தவறல்லவே. மொட்டையைவிட வயதில் மூத்திருந்தும் அவளைத் தாண்டியதற்காக அவளது காலில் விழுந்து வணங்கினாள். மரபு மீறல்கள் எல்லாமே மனம் ஒப்பினால் பிரயாசித்தத்திற்கு உட்பட்டதுதானே.
“ஏய் செள்ளி, வீட்டிலிருக்குற தண்ணியெல்லாத்தையும் கொட்றதுக்கு முன்னே இவள கழுவிடலாதானே?”
“இல்லே… இல்லே.. வேணா…
எனக்கென்னமோ இந்த நாத்தத்த பாத்தா இவ முதுகெல்லா ‘ஈபிளிக்கெ’ ஆயிருக்குனு தோணுது….
தொட்டா, விரல் நொழையுனு நெனக்கிறே.. எப்படி தூக்கி கழுவுறது…
துணிய விரிச்சு அவள தூக்கிக் கடத்துறதே பெரும்பாடுதா.. இதுலே, கழுவுறது கஷ்டந்தா…”
“ஏய்… பாரேன்… கழுவாம எப்படி?.... அதுக்குனு குண்டிலே ஒட்டியிருக்கிற பீயோடவா இந்த மகாராணிய அனுப்புறது… அய்யோ… இது பெரும்பாவமாச்சே…”
“அரெபெட்டு மலையிலிருந்து மொளெ ஜாமத்திலே, அந்தப் புலிகாட்டிலே, ஒத்தையா ஓடோடிவந்து பால்கொடுத்து உம் மக்கள ஆளாக்குனெயே.. என் மொட்டே…”
“உம் வீட்டத்தாண்டி தெருவெல்லா சாணம்போட்டு மெழுகிய சுத்தக்காரியே! உனக்கா இந்த நெலெ? எங்க சுத்தக்காரியே!”
என்று குப்பியிட்ட ஓலம் இன்று செள்ளியின் காதுகளை நிறைத்திருந்தது.
பலபேர் வலிந்து மறுத்தும், கேளாது, அந்தச் சுத்தக்காரியைச் சுத்தம் செய்து, அங்கம் குலையாது, அவளின் அடக்கம்வரை அர்த்தப்படுத்திய குப்பியின் அந்தக் கடைசிச்சந்திப்பு செள்ளியின் நினைவைத் தின்றுக்கொண்டிருந்தது.
மொட்டையின் உடலைக் கண்டதுமுதல் கொண்ட கெண்டைக்கால் நடுக்கத்திற்கான ‘காய்கல்’ மருந்தையும் குப்பிதான் செள்ளிக்குத் தந்துபோயிருந்தாள். கண்ட கடும் ஜூரத்திலிருந்து மீண்டு, குப்பியைக் காண சென்றிருந்த செள்ளிக்கு அங்கு நிகழ்ந்திருந்தது சற்றும் எதிர்பாராதவொன்று.
2
‘குப்பி’ என்றழைத்ததும் செள்ளி வா.. வா..’ என்று முன்வந்து அழைக்கும் குப்பி அன்று அப்படியில்லை.
“செள்ளி உள்ளெ வரவேணாம்… போயிடு… உடனே போயிடு” என்றாள்.
வீட்டிற்கு வருவது யாராக இருந்தாலும் வெறும்வயிற்றோடு அனுப்பக்கூடாது எனும் தம் முன்னோர்களின் மரபினைத் தவறாது பின்பற்றுபவள் குப்பி. வந்தவர்களோடு பேச்சுக் கொடுப்பதற்கு முன்பே விருந்தோம்பலுக்குரிய வெண்கலக்கோப்பை நிறைய மோருடன் முந்திநிற்கும் அவளின் வழக்கிலிருந்து இவ்வழக்கு செள்ளிக்கு விசித்திரமாய்ப்பட்டது.
“ஏய்……. பாரேன்…..
என்ன ஆச்சு உனக்கு?”
கேட்காமல் உள்நுழைந்த செள்ளியை மாதன் தடுத்தான்.
“ஒளவெ… ஒளவெ.. நில்லுங்க… உள்ள போகாதிங்க… அம்மாவுக்கு கொரனா…”
என்றான். அதைக்கேட்டு முகத்தை முண்டால் மூடிக்கொண்டு மீண்டும் உரக்கச் சிரித்த குப்பியின் சிரிப்போடு செள்ளியின் சிரிப்பும் சேர்ந்திருந்தது.
“ஏய் பாரேன்… கொரனாவா?...
அது என்ன கரோனா?
அது என்னவிட என்ன ‘கரோனவா’ “
என்று தன் கருப்பு நிறத்தைச் சுட்டிக்காட்டி, இன்னும் ஒருபல்லையும் இழக்காத, தவறாது மொரந்தக்கோலினால் அழுத்தித்தேய்து விளக்கிய, சற்று மஞ்சள்படிந்த வெண்மைப் பற்கள் அனைத்தும் வெளியே தெரிய சிரித்தாள் செள்ளி.
“சும்மா இரு.. மொதலெ என்ன விடு… ” என்று எதையும் பொருட்படுத்தாமல் உள்ளே முன்னேறினாள்.
“பாட்டி நில்லுங்க… இப்படியெல்லா செய்யகூடாது… அது உனக்கும் பரவிடும்… தெரியாதா?... உங்க மாஸ்க் எங்கே?... மாஸ்க் போடனும் பாட்டி… முதலே நீங்க உடனே இங்கிருந்து வெளியபோங்க….”
என்ற வெள்ளைக் கையுறை அணிந்த மருத்துவச்சியின் வார்த்தைக்கு, அடங்காத கோபத்தோடு சபிப்பதைப்போல அவளின் முகம்நோக்கி கையுயர்த்தி, பின்னகர்ந்து, குப்பியை மருத்துவமனைக்கு வழியனுப்பிய நினைவு அவளைக் குடைந்தெடுத்தது.
“ஏய் செள்ளிக்கா.. அன்னிக்கு மொட்டையக்கா சாவுல குப்பியோடு நீங்களும்தானே இருந்தீங்க? உங்களுக்கு டெஸ்ட் எடுத்து பாக்குறது நல்லது. இன்னும் கொஞ்சநேரத்லே ஊர்த்திடலுக்கு வந்துடுங்க…. எல்லோருக்கு டெஸ்ட் எடுக்க ஆளுங்க வர்ராங்க… மறக்கமா வந்துடுனும்..”
என்ற மலக்கனின் வார்த்தையைக் காதில் வாங்காமல்,
“ஏய் நீ அந்தப்பக்க போ…”
என்று அவனை விலக்கிக்கொண்டு குப்பியை ஏற்றிச்சென்ற அந்த வெள்ளை வாகனத்தை வெறித்தப்படியே சற்றுதூரம் தள்ளாடி நடந்த தாளாதநட்பு தகித்துக்கொண்டிருந்தது.
3
“செள்ளி ஒளவெ, மூனேநாளுதா… ஒளெவெ வந்துருவாங்க”
எனும் ஆறுதல் வார்த்தையை அவளுக்குப் பலமுறை சொல்லிச் சலித்தான் மாதன். தகரத்தடுப்பால் அடைக்கப்பட்டு, கிருமிநாசினி பரப்பப்பட்ட குப்பியின் தெருக்குள் அடிக்கடிப் பதிந்த ஒரே வெளியாளின் பாதம் செள்ளியது மட்டுமே.
மூப்பால் உடல் ஒடுங்கி, இறுதி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்த மேல்கேரி கல்லனுக்கு, உயிரை உடலிலிருந்து கடத்தும் ‘பெரண கடுசோது’ நிகழ்வில் செள்ளி பொன் பணத்தைக் கல்லனின் வாயிலிட்டுப் பாலுற்றிய சூழல் குப்பியின் அருமையை உரக்க உணர்த்தியது.
சிறிய பொன்துகளை வலதுகையில் எடுத்து, வெண்ணெயில் நனைத்து, வாயை இடக்கரத்தால் பக்குவமாய் வலியின்றி திறந்து, ‘ஹெத்தெ’ என்று தன் குலதெய்வத்தை அழைத்து, அதை வாயிலிட்டு, இறப்பவரின் உடல்நிறைக்க பாலுற்றி, மற்றவர்களையும் ஊற்றச்செய்து, நெஞ்சு மற்றும் முதுகுத்தண்டின் வழியே அங்கும் இங்கும் அலைந்தோடும் உயிரைப் பக்குவமாக வெளியேற்றும் ‘பெரண’ நிகழ்வை நிகழ்த்துவதில், குப்பிக்கு எவரும் நிகரில்லை.
“என்னானாலும் குப்பிக்கா பெரண கடத்துர பக்குவமே தனிதான்” என்று எப்போதும் எழும் புகழ்ச்சொல் செள்ளிக்கும் பெருமிதத்தைக் கூட்டும். அன்றும் இச்சொல் எழாமலில்லை.
ஒரே ஊரில் வசிக்கும் ஆகச்சிறந்த மருத்துவச்சிகள் இருவரிடையே லோசன பொறாமை இருப்பது இயல்பு. ஆனால், இவர்கள் விசித்திரமானவர்கள். பிறந்ததும் தாயை இழந்த செள்ளியும் அவளும் ஒரே பால்முலைகளை பகிர்ந்தவர்கள்.
கல்லனுக்குத் தொண்டைக்குழியில் நின்றுக்கொண்ட உயிர் வெளியேறும்வரை படாதபாடாகிவிட்டது. “ஏய் குப்பி நாசமாய் போனவளே… எப்போ வருவே… என்ன மட்டும் தனியா தவிக்க விட்டுட்டு… ஏய் போ..” என்று முணுமுணுத்துக்கொண்டே பெரிதும் சிரமமுற்று கல்லனின் உயிர் கடக்க செள்ளி துணைநின்ற அன்று இரவுமுழுதும் எல்லோரின் கருத்திலும் குப்பியின்றி எவருமில்லை.
அடுத்தநாள் கல்லனின் சடங்கிற்குரிய கீரையை வறுக்க ‘உரியோடு’ வைக்கும்போதும்,
“குப்பிக்கா பாங்குலே நம்மாலே வறுக்க முடியாதப்போ… எப்படிதான் கண்டுபிடிப்பாளோ? தெரியலே… கீரைவாசம் வர்ரதுக்கு முன்னாடியே அடுப்பிலேந்து எறக்கி, ஓட்டு சூட்டுலேயே கீரைய பொரிச்சுடுவ..”
என்று எங்கும் குப்பியின் பேச்சுதான்…
“அண்ணா கல்லா… தங்கச்சி குப்பியின் வாய்கரிசியில்லாமே ‘மல்லாடு’ போறேயோ?” என்று குப்பியின் பிரிவை அன்று ஒப்பாரியில் ஏற்றழுதது இன்று செள்ளியின் தொண்டைக்குழியை அடைத்ததுக்கொண்டு வந்தது.
4
இறப்பின்போது சடலத்தைக் கண்டதும் ஊரிலேயே முதலாளாக கதைக்கட்டி அழவதில் ஒப்பில்லாத செள்ளியின் வாயிலிருந்து இன்று வார்த்தைகள் எழவில்லை. வெறித்து அகலத்திறந்த அவளின் கண்களிலிருந்து ஓயாமல் கண்ணீர் வழிந்தது. மரபுபடி வீட்டிற்குக் கொண்டுச்செல்ல மறுத்து ஊரின் நடுத்திடலில் இரும்புத்தடுப்பிட்டு அதன் நடுவில் குப்பியின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. துருவும் சேறும் கலந்த முன்தடுப்பில் சாய்ந்தபடி செள்ளி வெறித்திருந்தாள்.
குப்பியின் இழப்பை இவள் எப்படி தாங்கிக் கொள்வாளோ? என்று அஞ்சிய ஊராருக்கு அவளின் ஓயாத கண்ணீர் ஆறுதலளித்தது. எங்கே அவள் அழுது அரற்றாமல் கல்லென கிடந்து, பேச்சை இழந்து கட்டையாய் திரியும் ‘நடுகேரி’ ‘திப்பெயை' போல ஆகிவிடுவாளோ என்று எல்லோரும் அஞ்சினர்.
தீடீரென்று கால்நீட்டி அமர்ந்திருந்த நிலையிலேயே தன் கரங்களை தலைக்குமேலே தூக்கி நிலத்தை ஓயாமல் அறைந்தாள்.
“அய்யோ… அய்யோ…”
“எவ்வே.. ஏய் கள்ளே… ஏய் கள்ளே… என்ன தனியா விட்டுட்டு எங்கே போனே.. ஆ… ஆ…”
“பொட்டி… பொட்டி… உன் கள்ளச்சிரிப்ப இனி ஒருதடவ பாப்பேனா? ஒருதடவ ஒரே ஒருதடவ…”
“நெலெய காத்தியே… இனி பூமிய தோண்டினாலும், வானத்த பொளந்தாலும் உன்ன காண முடியுமா..”
“அய்யோ…. அய்யோ…. யார் செத்தாலும், எப்படி செத்தாலும் முகம் சுளிக்காமே கழுவிய உன் கையகூட கழுவமுடியாத பாவியாயிட்டேனே…”
“ஏய் குப்பி… ஏய் குப்பி… ஏய் கள்ளெ… குப்பி…”
“இனிபோதும் செள்ளிக்கா… உங் கையி என்னத்துக்காகுறது… இப்படியா தரைய அடிப்பே… போது.. நீ போ… நேரமாயிருச்சு… ஒடம்ப எடுக்கனு” என்றார் ஊர் கவுடர் மலக்கன்.
“ஏய் மலக்கா… அவளபத்தி உனக்கு என்ன தெரியும்? அவள எடுத்துருவயா? ஆ… ஆ…. அவள தொடேன் பார்க்கலாம்… இவ ஊருக்கெல்லாம் பெரண கடத்தியவள்… அடங்குன உசிர பாத்து பாத்து பக்குவமா பிரிச்சவ…
அய்யோ, இவ உசுரு எப்படி அடங்கிச்சோ? தெரியலேயே…
கடைசியிலே முதுகுலெ நின்னுச்சோ…
மாருலே நின்னுச்சோ?
இல்லே… இல்லே… தொண்டே குழியிலே நின்னுச்சோ? தெரியலேயே… அய்யோ.. தெரியலேயே….
கடைசியிலே அவ உசிர கடத்த கைகொடுக்காத பாவியாகிட்டேனே…
ஏய் மலக்கா… உனக்குத் தெரியுமா? இதெல்லாம் உனக்குத் தெரியுமா?
அவ உள்ளங்கையோட கடைசி வெக்கைய என் ரேகையிலே ஏத்தமுடியாத கொடும் பாவியாகிட்டேனே..
அது உனக்குத் தெரியுமா.. ஆ.. ஆ..
ஐயோ.. ஐயோ…. மேல் ‘ஒலாவுல’ வெதச்ச முத்திய கருப்புக் கீரைய வெள்ளே துணியிலே கட்டி பக்குவப்படுத்தி, புது உரியோட்லே பக்குவமா வறுத்து, எல்லா சாவுக்கும் சீர் செய்தவளே.. ஒரு வா சாமைக்கி வழியில்லாம போறேயே…
ஐயோ குப்பி… நான் என்ன செய்வே… என்ன செய்வேனோ… என்ன விடுங்க… என்ன விடுங்க… நா செத்தாலு பரவாயில்லே…. ஒரே ஒருவாட்டி அவ முகத்த பார்த்துடுறேனே…. ஒரே ஒருவாட்டி….
முத்துக்கல் பதித்த பதக்கச் சங்கிலியிலே தங்கமாட்ட ஜொலிப்பாளே… அவ வாயிலே இந்தத் தங்கத்தயாவது போடுறேனே…”
“ஏய் செள்ளி.. நில்லு… பொறு…
ஏய் தம்பி அவள பிடிங்க…”
“ஏய் செள்ளி… செள்ளி… தொடாதே… பொணத்த தொடாதே… அதுல கிருமி இருக்கும்.. பரவிவிடும்….”
என்றவாறு செள்ளியைப் பற்றியிழுத்துக்கொண்டு நகர்த்தினான் மலக்கன்.
“சரி.. சரியே சரி.. என்னவிடு… மலக்கா என்னவிடு… விடு.. அவள தொடமாட்டே… சத்தியமா அவள விடமாட்டே…. என்ன விடு…
ஓ… இவள நெனச்சு நா நிம்மதியா அழக்கூடாதா??? அந்தக் கள்ளெய நெனச்சி அழுதாகூட அந்தத் தொத்து பட்டுடுமோ?
என்னை விடுங்க… என்னை விடுங்க…”
தலையைப் பிய்த்துக்கொண்டு அரற்றினாள்.
“ஒளவெ நேரமாச்சி. அம்மாவின் ஒடம்ப எடுத்துவந்தவங்க போகனும்… இதுமாதிரி பல சாவுகளுக்கு அவங்க போகணும்… அம்மாவ பொதைக்க முடியாது. குன்னூர்க்கு கொண்டுபோயி எரிக்கனும்.. 3.00 மணிக்குள்ளேவேறே போகனும். இப்பவே நேரமாச்சி…. நீங்க கொஞ்ச அமைதியாகனும்…” என்றான் மாதன்.
“ஐயோ… ஐயோ… என் பொட்டி…. எரிக்கனுமா? எரிக்கனுமா?... ஐயோ.. ஐயோ… இல்லே.. இல்லே…
கன்னுகுட்டியாட்ட அன்பு வழியுற, அவ பால்மொகத்த நெருப்புக்குத் தர்ரதா… இல்லே.. இல்லே…
சதா பால்லேயே நனஞ்சு விறைக்கும் அவ தங்கக்கை நெருப்புக்கா…
ஏய் குப்பி… இப்போ உனக்கு சந்தோஷமா… ‘எல்லோருக்கு பெரண கடத்துறேனே, எனக்கு யார் செய்வா?.. செள்ளி, என்ன மறந்துடாதே? ஒருவேளே என் உசிரு தொண்டையிலே நின்ன ஒருபிடி சாமைய எடுத்து முற்றத்து நெலத்துல தூவ மறந்துடாதே’ என்னு சொன்னேயே…. உன் உசிரு கடையிலே எங்கே நின்னுச்சோ? எங்க நிலமே! எங்க மூதாதையரே… இதோ உங்க குப்பியின் உசுர வெதெக்குறே… எடுத்துக்கோ…. எடுத்துக்கோ…”
தான் அணிந்துள்ள முண்டின்மேல் வயிற்றிலும் இடுப்பிலும் சுற்றிய துணி சட்டங்களுக்கு இடையிலுள்ள இடத்தில் நிரப்பியிருந்த சாமையை எடுத்து, கையில் சிதறாமல் பற்றிக்கொண்டு நிலத்தைநோக்கி ஓடினாள்.
“தம்பி.. தம்பி… அவள பிடிங்க… விழுந்துடுவா…. பாத்து.. பாத்து… ஏய்…. தங்கைகளே தயவுசெய்து அவகூட போங்களே..”
என்று உரக்கக் கத்திய கவுடரின் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் பெருகியது. வழிந்து அவரின் வாய்க்குள் கலந்த கண்ணீரின் கரிப்பு குப்பியின் நினைவை மென்மேலும் அடர்த்தியாக்கியது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மேய்ச்சலில் தவறிபோன எருமையைத்தேடி ‘அரெபெட்டு’ மலையின்வழி ‘பெத்து தோ’ ஊரிற்குச் செல்லும்போது பிடித்துக்கொண்ட அடைமழையில் சிக்கி, ‘கிருதீவிகெ’ மாதத்து குளிரில் ஜன்னிகண்டு விறைத்துபோக, நீண்ட நேரமாகியும் சென்றவன் திரும்பாமையால் தேடிச்சென்றவர்கள் குளிர்ந்த அவனின் உடலைக் கொண்டுவந்து, இறந்ததாக எண்ணி சடங்குசெய்ய ஆயத்தமானபோது, விரைந்துவந்து சோதித்த குப்பியோ அவனது கண் இடுக்கிலிருந்த உயிர்ப்பினைக் கண்ணுற்று, உடனே ‘முட்டடுப்பு’ இலையினை வேகவேகமாக அரைத்து களிம்பாக்கி, அதோடு மோரைக் கலந்து, கதிர் அரிவாளின் முனையை ‘நேரிமரத்தின்’ விறகில் நன்குக்காய்ச்சி, அவனின் வாயை அகலத்திறந்து சூடான கத்தியின்வழி அந்த மூலிகைக் களிம்பினை ஊற்றி, உடனே, மூலிகைக் களிம்பு ஒட்டிய அக்கத்தியை மேலும் காய்ச்சி, அடிப்பாதத்தைச் சுட்டு அவனின் நினைவை மீட்டுக்கொடுத்த நினைவை அவனின் பெருகிய கண்ணீர் அக்களமெங்கும் விதைத்தது.
“ஏய்… எல்லோரும் கொஞ்சம் விலகுங்க… ஏய்… கோலி போதும்.. அவனவிடு… அவனுக்கு ஒன்னும் ஆகலெ…. ஏய்… கொஞ்ச தள்ளிதா போங்க…” என்ற, உயிர் உற்றும் அற்றுமிருந்த அவ்வேளையில் அவன் கேட்டிருந்த குப்பியின் வார்த்தைகள் அவனது நெஞ்சைப் பிளந்தன. நினைவற்ற நிலையில் அவனது நினைவை நம்பிக்கையால் ஆட்கொண்டிருந்த குப்பியின் நினைவைக் கொணர்ந்துமீள அவனது கண்ணீரின் கரிப்பு கங்கணம் கட்டிக்கொண்டிருந்தது.
‘குப்பிக்கு முறைப்படி இறப்புச்சடங்கினை நிகழ்த்த இயலவில்லையே. இந்த ஊரில் இதுதானே முதல்முறை. அதுவும் என் பொறுப்பிலா இது நடப்பது…’ என்ற அவனின் குற்றவுணர்வினை ‘உயிரை மீட்டுத்தர நானென்ன குப்பியா… என்னால் கண்ணீரைத்தவிர வேறென்ன தரமுடியும்..’ என்ற அவனது எண்ணம் சற்று மட்டுப்படுத்தியது. அவனும் செள்ளியை நோக்கி ஓடினான்.
கண்ணீர்வழிய, ஊருபெட்டு மலையை நோக்கி “குப்பி… குப்பி…” என்று கத்திக்கொண்டே, விரக்தியோடு நிலத்தில் சாமையைத் தூவினாள். கைகளைத் தாழ்த்திக் குனிந்து கைகளில் ஒட்டியுள்ள சாமையைத் தட்டியவாறே சுற்றி நின்றவர்களை நோக்கி,
“அவ்வளவுதான்… அவ்வளவுதான்… அந்தப் பொட்டி போய்ட்ட… போயே போய்ட்ட..
ஏய் காங்கி, நீ சாகரப்போ உனக்கு யாரு 'பெரண' கடத்துவா? ஆ….
போயிட்டா… போயே போயிட்டா…”
என்று தன் இரு கைகளையும் தன் தலைமேல் வைத்தவாறு கால்களைப் பரப்பி, நிலத்தைத் தேய்த்து தேய்த்து நடந்துகொண்டே குப்பியை அணுகினாள். தன் சுருக்குப்பையில் வைத்திருந்த சில்லறைக் காசுகளை வலதுகையில் எடுத்து குப்பியின் உடல்மீது எறிந்தாள்.
“அடே… இங்கே பாரும்மா… நீ ரொம்ப ஓவர பண்ணுர…. இப்படி காசெல்லாம் வீசக்கூடாது… எரிக்கும்போது மிஷன் போயிடும்” திட்டிக்கொண்டே தன் கையுறையைச் சரிசெய்து சடலத்தின்மேல் விழுந்த காசுகளைத் தட்டிவிட்டார் கவசயுடையணிந்தவர்.
தன் கால்களை அகலப்பரப்பி முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே “ஏய் கள்ளெ… குப்பி… உனக்கு ஒத்த ரூபா காசுபோடகூட நாதியத்து போயிட்டேனே… ஐயோ.. ஐயோ…” என்றவள் கீழேஅமர்ந்து நிலத்தை வெறிகொண்டு மீண்டும் மீண்டும் அறைந்தாள்.
“எல்லாரும் தள்ளி நில்லுங்க. நேரமாச்சு. கொஞ்சம் ஒத்துழைக்குனும்” என்றவாறு குப்பியின் உடலை எடுத்துச்செல்ல ஆயத்தமாயினர்.
செள்ளியின் கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. ஆனாலும், குப்பிக்காக இன்னும் கண்ணீர் மிச்சமிருந்தன.
குப்பிக்கு ஒருபிடி வாய்க்கரியிடுகிறோம் என்று ஊரார் எவ்வளவோ கெஞ்சிகேட்டும் சுகாதாரத் துறையினர் ஒப்புக்கொள்ளவில்லை. சடலத்தை ஊருக்கு கொண்டுவர ஒப்பியபோது அவர்கள் முன்வைத்த முதல் கோரிக்கையே இதுதான். அது முகத்தை எக்காரணம்கொண்டும் திறக்கக்கூடாது என்பதுதான்.
செள்ளிக்கு மட்டுமல்ல ஊராருக்கும் கழுத்துவரை துக்கம் அடைத்திருந்தது. தெருவழியே யார் சென்றாலும் வலிந்து மோர்தரும் அந்தத் தாயின் முகத்தை ஒருமுறை காணமாட்டோமா, அவளுக்கு ஒருபிடி வாய்க்கரிசி போடமாட்டோமா என்று ஊரே ஏங்கியது.
5
வானம் சிவந்திருந்தது. இது பனிப்பொழிவிற்கான அறிகுறி. கெட்டன் இரட்டை மாஸ்க்குடன் பாவம்போக்கும் சடங்கினை ஆரம்பித்தான். ஊர்த்திடலிலுள்ள பிக்கெ மரம் சிலிர்த்தாடியது.
“தாய் குப்பி இறந்தது ஒரு இறப்பு…
இம்மை உலகிலிருந்து மறுமை உலகிற்கு ஓர் பயணம்…
அவர்தம் மூதாதையர்களுக்குச் செய்த பாவம்…
பாட்டன், பாட்டிக்குச் செய்த பாவம்..
தாய், தந்தைக்குச் செய்த பாவம்..”
என்று கெட்டன் முன்மொழிய சுற்றியிருந்தவர்கள் “பாவம்… பாவம்” என்று அதை வழிமொழிந்தனர். இச்சடங்கின்போது பெண்கள் அருகில் இருக்கக்கூடாதாகையால் எவ்வளவு சொல்லியும் பித்துப்பிடித்ததுபோல் துளியும் நகராது தரையில் அமர்ந்திருந்த செள்ளி, வேறுவழியின்றி இழுத்து ஓரத்திற்கு நகர்த்தப்பட்டாள். செள்ளியின் விசும்பல் மீண்டும் தொடங்கியது.
“யாரது… செள்ளியா… நிறுத்து… இப்ப அழக்கூடாதூனு உனக்கு தெரியாதா? நீயே இப்படி செஞ்சேனா எப்படி? அவ நிம்மதியா போயி சேரவேண்டாமா?”
என்றார் கவுடர். செள்ளி கண்ணீரும் சளியும் வழிந்துநின்ற தன் உதடுகளை மாற்றி மாற்றி கடித்து கோபத்தை மட்டுப்படுத்தினாள். மும்முறை தொடர்ந்து பிறழாமல் சொல்லப்படும் அச்சடங்கின் இறுதி முறைக்காகக் காத்திருந்தாள். துக்கம்தாளாது உள்ளங்கைகளை இறுகமூடி தரையை ஓங்கி குத்திக்கொண்டிருந்தாள். சடங்கின் இறுதிச்சொல் முடியுமுன்னமே,
“ஏய் மதா… உனக்கு வெக்கமாயில்லே…
நொந்து வளத்த உன் 'ஒளவெக்கு' இப்படியா சாவுசெய்வே…
அவளுக்கு வாய்க்கரிசி எங்கே?
அவளுக்கு 'கீரே' எங்கே?
அவளுக்கு தரப்போற கடைசி சீர் எங்கே?
'ஏகிக்கூடே' எங்கே?
அவளுக்கான 'ஒலக்கே' எங்கே?
அவளுக்கான 'கச்சுத்தட்டு' எங்கே?
எல்லா சாவுலேயு கொட்டாங்குச்சி கரண்டிய வலதுகையிலேயும் மொறத்த இடது கையிலேயும் தூக்கிட்டு தேரசுத்தி ஆடுவாளே… இவளுக்கு ஆட ஒருத்தரு இல்லையே?... அய்யோ… ஒருத்தரும் இல்லையே…
அய்யோ… கையில கட்ட 'கைக்கட்டு மணிகூட' இல்லையே..
பாசத்துக்காக அவளுக்குப் போடும்; 'பூகாசுக்கூட' இல்லையே…
அய்யோ, பொறந்தவீட்டு கோடிகூட இல்லாம போறாளே… ஐயோ… ஐயோ..
என்னலே முடியலேயே…. சத்தியமா என்னலே முடியலேயே…
ஏய்… பொறுப்புகெட்ட மாதா… உன் 'ஒளெவெய' இப்படியா வழியனுப்புவே?
ஏய்… பொல்லாத ஊரே... என் பொல்லாத மக்களே… அய்யோ…”
மாரில் அடித்து அழுது அரற்றினாள் செள்ளி.
அதே வெள்ளை வண்டி. அது பார்வையிலிருந்து மறையும்வரை செள்ளியின் கதறல் தொடர்ந்தது.
“ஐயோ… இதே வண்டிதா…
போனவாட்டி ஜன்னல தொறந்து கைகாட்டுனாளே.. ஐயோ… ஐயோ…. அவளுக்குப் ‘பெரண’ கடத்தாம போனேனே..
ஐயோ… ஐயோ… ‘பெரண’ கடத்தாம போனேனே…”
இதோடு சரி… இனிமேலே யாருக்குமே நா ‘பெரண’ கடத்தமாட்டே… இது சத்தியம்… இது சத்தியம்…
ஏய் மாசி… இனி எதுக்குமே எனெ கூப்டாதே….”
என்று திமிரி திமிரி குதித்தாள்… ஓயாமல் தலையிலும் மாரிலும் அடித்துக்கொண்டாள்… மாசியும் பண்ணெயும் அவளின் இருகரங்களை இறுகப்பற்றி சமாதானம்செய்தும் அவள் அடங்குவதாயில்லை. பொறுக்கவியலாது அவளின் தோள்களை இறுகப்பற்றி “இனி போதும்” என்றாள் மாசி. கைகளைக் கோர்த்து தலையில் வைத்துக்கொண்டு தரையில் அமர்ந்தவள் விசும்பிக்கொண்டே,
“ஏய் மாசி.. ஊரிலே செத்தவங்க யாரும் பீயோட போயிடக்கூடாதுனு பாத்து பாத்து செய்தளே, அவ இப்போ பீயோட போறாளே… ஐயோ… தெரிந்தே அழுக்கோடு அனுப்புறோமே… இந்த அழுக்க எங்குபோயி கழுவறதோ…”
என்று தொடர்ந்து வலுத்த அவளது சொற்கள் அவ்வூரைப் பொருந்தொற்றினும் கூடுதலாய் பீடித்திருந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.