தேவா! சற்றும் எதிர்பாராத மரணம் உன்னுடையது. நிகழ்ந்திருக்க கூடாத மரணம் என்று நினைவுகளின் சுவர்களில் தலையடித்து கதறுகிறது மனம். எந்தத் தேசத்தில் வாழ்ந்தாலும் தாய் மண்ணை அளவுக்கதிகமாகவே நேசித்தாய். அந்த மண்ணிலேயே நான் கலக்கப்பட வேண்டும் என விடப்பிடியாக நின்றாய். உனது இலட்சியமாகவே அது இருந்தது. இலட்சியத்தை நீ அடைந்தாய். உனது மக்களையும், உனது மண்ணையும் தலையிலும், மனத்திலும் சுமந்தபடி அலைந்த நாடோடி நீ. எந்தச் சொகுசுகளையும் உனக்காக விரும்பியவனில்லை. அப்படி வாழும் மக்களை ஆதரித்தவனுமில்லை.
உனது கனவும், இலட்சியமும் உனது சமூகத்திற்கானது. அதை எந்த சந்தர்பத்திலும் விட்டு விலகிச் செல்ல நீ விரும்பியிருக்கவில்லை. அதற்காக, உனது சமூகத்தின் பெருமைகளை மட்டுமே பேசி பீற்றித்திரிந்தவனில்லை. அந்த சமூகத்தின் போதாமைகளை, மனித விரோதச் செயல்களை, துணிவோடு எதிர்த்துக்கொண்டிருந்தவன். தனது மக்களோடு வாழும் வாய்ப்புக்கிடைக்கும் வரை உலகெங்கும் அலைந்து திரிந்தவன். வாய்ப்புக் கிடைத்தபோது, செயலாகவும் அதை மாற்றிக் காட்டியவன். வாழ்ந்த தேசமெங்கும் துயரோடு அல்லலுறும் மக்களின் பக்கமே நின்று சிந்தித்தவன். ஒரு சிறிய வாழ்வை இலட்சியத்தோடும், சமூக நீதியோடும் வாழ்ந்து பார்த்தவன். வாய்ச்சொல் வீரர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவன். அதனால்தான் உனது வாழ்வும், மரணமும் மகத்தானதாக மாறிப்போய்விட்டது. நீ சென்றுவிட்டாய் தேவா!. நீ சென்ற இடம் எதுவோ அங்குதான் வரவேண்டும் என ஆவலுறும் மனிதர்களில் நானுமொருத்தி. வழுதலங்காய் குழம்பின் விதம் விதமான ரெசிப்பிகளோடு உன்னைச் சந்திப்பேன். அப்போதாவது மட்டக்களப்புத் தமிழை உனக்கு கற்றுத்தருவேன். அந்தத் தமிழின் ருசியை, அதில் இழைந்தோடும் அன்பை, அதில் நிறைந்து கிடக்கும் வலிகளை, அதிகாரத்தால் நசிந்து தொண்டை இறுகிக்கிடக்கும் அதன் குரலை இருவருமாகச் சேர்ந்து மொழிபெயர்ப்போம்.
எனது 'தாயைத் தின்னி' நாவலை, அதில் துடித்துக்கொண்டெழும் வாதைகளை, அதிகாரத்திற்கெதிரான கூக்குரல்களை வாசிக்காமலே போய்விட்டாய் என்பதை நினைக்கும்போது மட்டுமே மரணத்தின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. மற்றப்படி, உனது நேர்மையும் மனிதர்கள் மீதான கரிசனையும், பெருக்ககெடுத்துக்கொண்டிருக்கும் அன்பும் அனைவரையும் உன்னோடு பின்னிப் பிணைந்து வைத்திருக்கும். நீ என்றும் நேசிக்கப்படுவாய் தேவா.
துயரங்களை நிரப்பி நிரப்பி
என் பிஞ்சுமனம்
அவன் நினைவுகளைச்
சுமந்து செல்கிறது
கனன்றெரியும் வலிகளை
அவிழ்க்க முடியாது
தவிக்கின்றேன்.
தனிமையாக நீண்ட
பகலொன்றில்
தொலைபேசி
தட்டியெழுப்ப
அந்த அனாயசம்
என்னைச் சாறாகப்பிழிந்தது.
இரு நாட்களுக்கு முன்புதான்
கனவில் அவனைத் தரிசித்த
நொடியிலிருந்து
என்னைக் கொத்திக் கொத்தி
மரங்கொத்திப் பறவையாய்
திகிலூட்டியபடியே இருந்தது
மரணப்பொறி
அழுக்கடைந்த கனவுகளுடன்
நான் நாட்டைத் துறந்து
ஏற்றுக்கொள்ளப்பட்ட
அகதியாக செங்காலன் வந்தபோது
யார் எனக்குறவு?
யார் எனக்கு நண்பர்கள்?
திக்குத்தெரியாத காட்டில்
சில்லூறானேன்
நான் நிறங்களின் காட்டில்
நிர்க்கதியானேன்.
தப்பி வந்த தரிப்பிடத்திலிருந்து
கைமாறப்பட்ட தரிப்பிடத்தில்
நான் அனாதரவாக நின்றபோது
முகமறியாத ஒரு கொடூரனின்
கைகளில் சிக்கிவிட்டதைப்போலத்
தவித்து நின்றேன்
Dolmetscher தேவா!
ஓம் அவன்தான் எனது துயரங்களைப்
புன்னகைக்கு மொழி பெயர்த்தான்
உடைந்து சிதறிப்போன
கண்ணாடித் துண்டுகளை
எழுத்துக்கூட்டிப் படிக்கும்
ஒரு மொழியாக மாற்றியதை
எப்படி மறப்பேன் தேவா ?
“குழந்தைப் போராளியை”
எனது கைகளில் தந்தபோது
அவன் ரசம் தட்டித் தட்டி
சாப்பிட்ட கத்தரிக்காய் குழம்பைப்
பரிமாறிக்கொண்டிருந்தேன்
எத்தனையோ மொழிகளை
ஆழ்ந்து கற்ற போதும்,
மட்டக்களப்பு தமிழை
உச்சுக்கொட்டி பயில வேண்டும் என
அவன் ஆவலாய் இருந்தான்
எந்த மொழியையும் பெயர்க்கக் கூடாது
நமது மொழியில்
உயிர்ப்பிக்க வேண்டும் என
அடிக்கடி அவன் சொல்லும் வார்த்தைகள்
மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன
எப்படி மறப்பேன் தேவா?
என்றும் இல்லாததுபோல்
செங்காலனில் நேற்று
பனி உருகி வழிந்தோடத்
தொடங்கிற்று
தீப்பிடித்த மனிதனைப்போல்
வெயில்
நகரத்தின் மூலை முடுக்கெங்கும்
அலையத்தொடங்கிற்று
ஏதோவொரு துயரச் செய்தியை
பெரும் அச்சத்தை
எதிர்பாராத ஆபத்தொன்றை
செங்காலனெங்கும் அறிவிக்கத்
துடித்துத் திரியும் வேதனையோடு
மரக்கிளைகளை உலுக்கி உலுக்கி
ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது
காற்று
அவனிடமிருந்து பிரிந்தாலும்
செங்காலன் நகரத்தைச்
சுழன்றடித்துவிட்டுத்தான்
அவன் உயிர் விடைபெற்றிருக்கும்
இல்லை இல்லை
துவண்டு கிடக்கும் மனிதர்களின்
துயரங்களை மொழிபெயர்க்க
இந்த நகரமெங்கும்
அலைந்து கொண்டிருப்பான்
எதிர்பாராத கணங்களில்
புன்னகையோடு உங்கள்முன் தோன்றுவான்.