- எனது மாஸ்டர் சிவலிங்கம் பற்றிய கட்டுரை ஜீவநதி சஞ்சிகையின் மாசி 2023 வெளியான அதன் ஆவணச் சிறப்பிதழில் வெளியாகியுள்ளது.  ஜீவநதி சஞ்சிகையை வாங்க, வாசிக்க  ஆசிரியர் பரணீதரனுடன் +94 77 599 1949 என்னும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள். அவரது முகநூல் அடையாளம் - Bharaneetharan Kalamany. மின்னஞ்சல் முகவரி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


நான் முதன் முதலில் எழுத்தாளர் மாஸ்டர் சிவலிங்கத்தை  அறிந்து கொண்டது எழுபதுகளில் அவர் சிந்தாமணியின் வாரவெளியீட்டில் வெளியான சிறுவர் சிந்தாமணியில் எழுதிய சிறுவர் புனைகதைகள் மூலம்தான். அழகான ஓவியங்களுடன் பிரசுரமான் அக்கதைகள் மூலம் என்னை மிகவும் கவர்ந்து விட்டார் மாஸ்டர் சிவலிங்கம்.  அவரது எழுத்து நடையும், உலகின் பல பாகங்களிலிருந்தும் பெற்ற கதைகளை அவர் சிறுவர்களுக்காக எழுதிய பாங்கும் எனக்கு அவரைத் தமிழகத்தின் சிறுவர் இலக்கியத்துக்கு மிகப்பெரும் பங்களிப்பு செய்தவரான வாண்டுமாமாவுடன் ஒப்பிட  வைத்தன். உண்மையில் அவர் என்னைப்பொறுத்தவரையில் ஈழத்து வாண்டுமாமாதான்.

'தாய்வீடு' பத்திரிகையின் ஓகஸ்ட் 2014 பதிப்பில் வெளியான 'மாஸ்டர் சிவலிங்கம்' என்னும் அதிரதனின் கட்டுரையும் நல்லதொரு கட்டுரை. அதில் மாஸ்டர் சிவலிங்கம் பற்றி பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:

"மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் மட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் எனும் கிராமத்தில் 28.03.1933 அன்று பிறந்தார். தந்தையார் திரு.ந.இரத்தினம் ஆசிரியர். தாயார் திருமதி செல்லத்தங்கம். மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்திலும் மஞ்சந்தொடுவாய் சென்மேரிஸ் பாடசாலையில் கல்வியைத் தொடங்கி (1ம் 2ம் வகுப்புக்கள்) பின் கல்லடி உப்போடை இராமகிருஸ்ண மிஷன் மகளிர் பாடசாலையில் 3ம் 4ம் 5ம் வகுப்புக்களைக் கற்றார். தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி சிவானந்த வித்தியாலத்திலும் (6ம் 7ம் வகுப்புக்கள் – 1946/47) பின் மட்டக்களப்பு அரசினர் கல்லூரியிலும் (தற்போது இந்துக்கல்லூரி -1948/52) கல்வி கற்றார். புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை, பண்டிதர் வி.சி.கந்தையா ஆகியோர் இவரது ஆசான்களாக விளங்கினார். பள்ளிப்பருவத்திலேயே நல்ல ‘பகடிகள்’ சொல்லி மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். .... பண்டிதர் செ.பூபாலப்பிள்ளை அவர்களின் புதல்வியார் மங்கையற்கரசி அவர்களே இவரது வாழ்க்கைத் துணை. காலஞ்சென்ற எஸ்.டி.சிவநாயகம் அவர்களே இவரது இலக்கியத்துறை வழிகாட்டி. 1966ம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டு எஸ். டி.சிவநாயம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தினபதி (தினசரி), சிந்தாமணி(வாரமலர்) ஆகிய பத்திரிகைகளில் அவை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பணிபுரிந்தார். இப்பத்திரிகைகளின் ‘சிறுவர் பகுதி’க்கு இவரே பொறுப்பேற்றிருந்தார். இப்பத்திரிகைகளின் ஆசிரியபீடத்தில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்த சுமார் பதினேழு ஆண்டுகள் சிறுவர் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பு பாரியது. இவரது ஆசிரியரான புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை இவரை இலங்கை வானொலியில் ‘சிறுவர் மலர்’ நிகழ்சியை நடாத்திக்கொண்டிருந்த முதலாவது ‘வானொலி மாமா’வான சரவணமுத்து அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்த பின்னர், இலங்கை வானொலியில் கதை சொல்ல ஆரம்பித்தார். 1983 ஆடிக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு, குடும்பத்தினருடன் கொழும்பிலிருந்து வெறுங்கையுடன் மட்டக்களப்பு மீண்டார். "

இவ்விதம் மட்டக்களப்பு திரும்பிய மாஸ்டர் சிவலிங்கம் . மட்டக்களப்பு மாநகர சபை பொது நூல் நிலையத்தில் கதை சொல்லும் கலைஞனாகத் தன் பணியினை  1984 செப்டம்பர் 15ந் திகதி ஆரம்பித்து 2003 மார்ச் 31ந் திகதி ஓய்வு பெறும் வரையில் பணி புரிந்தார். இதனைப்பற்றியும் மேற்படி கட்டுரை பின்வருமாறு விபரிக்கின்றது:

"மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் இயங்கும் மூன்று நூலகங்களுக்கும் சென்று கதை சொல்வார். மேல்நாடுகளில் கதை சொல்லுதல் ஒரு கலையாகவே வளர்ந்துள்ளது. பாடசாலைச் சிறுவர்கள் இவரது கதை சொல்லலில் நல்ல பயன்பெற்றனர். சிறுவர்களுக்கு மகாபாரதம், இராமாயணம் கதைகளை 1984 இல் தொடங்கித் தொடர்ச்சியாகச் சொல்லி வந்தார். வானொலி, தொலைக்காட்சி (ரூபவாகினி –வண்ணச்சோலை) ஆகிய ஊடகங்களிலும் சிறுவர் நிகழ்ச்சிகளை வழங்கினார். இவர் கதை சொல்லும் பாணி மிகவும் கவரக்கூடியது. நகைச்சுவை, நடிப்பு கலந்து கதை சொல்லும்போது கதாப்பாத்திரமாகவே மாறிவிடும் தன்மையர். மகாபாரதக் கதை சொல்லும் போது துரியோதனனின் ஆணவச் சிரிப்பையும் சகுனியின் வஞ்சகச் சிரிப்பையும் நடித்துக் காட்டுவார். சிறுவர்களுக்குக் கதை சொல்லும்போது கிழவிபோல் நடந்தும், சிறுவன்போல் ஓடியும், குரங்குபோல் பாய்ந்தும், யானைபோல் பிளிறியும், முயல்போல் துள்ளியும், மான்போல் வெருண்டும், பாம்புபோல் நெளிந்தும் சீறியும் இப்படி அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறிப் பல்வகை நடிப்புக்களையும் தனிநபர் அரங்கிலே சிறப்பாகச் செய்வார். மாஸ்டர் சிவலிங்கம் கதை சொல்ல வருகிறார் என்றால் மட்டக்களப்பிலே சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியாது."

'அரங்கம் நியூஸ்' தளத்தில் செங்கதிரோன் என்பவரின்  'கிழக்கின்  முதுசொம்மை இழந்தோம்! ' என்னும் கட்டுரை மே 28, 2022 பிரசுரமாகியுள்ளது. அதில் தாய்வீடு பத்திரிகையில் வெளியான அதிரதனின் கட்டுரையிலுள்ள பல பகுதிகள் வரிக்கு வரி அப்படியே பிரசுரமாகியுள்ளன. இது அதிரதனும் , செங்கதிரோனும் ஒருவரா அல்லது செங்கதிரோன் அதிரதனின் கட்டுரையை வெட்டி, ஒட்டினாரா என்னும் சந்தேகத்தை எழுப்புகிறது. இது ஆய்வுக்குரியது. அதிரதனின் கட்டுரை மாஸ்டர் சிவலிங்கம் உயிருடன் இருக்கையில் வெளியானது என்பதும்,  செங்கதிரோனின் கட்டுரை மாஸ்டர் சிவலிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் வெளியானது என்பதும் நோக்கத்தக்கது.

- ஜீவநதி மாசி 2023 இதழில் வெளியான கட்டுரை -

ஊடகவியலாளர் ஐங்கரன் விக்கினேஸ்வ்ரா 'வானொலிமாமா மாஸ்டர் சிவலிங்கம் ஈழத்தின் சிறுவர் இலக்கிய முன்னோடி' என்னும் தனது தினக்குரல் கட்டுரையில்  'இலங்கை, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வானொலி, தொலைக்காட்சிகளில் 50 வருடக் கதைசொல்லல் அனுபவம்' மிக்க ஒருவராக இவரை இனங்காண்பார்.  அத்துடன் 'சிறுவர் எழுத்தாளர் 144 மேடைகள் கண்ட மிகச் சிறந்த வில்லுப் பாட்டுக் கலைஞர்; நகைச்சுவைப் பேச்சாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர், சிறந்த நடிகர், ஓவியர், பத்திரிகையாளர், எனப் பல்வேறு திறன்களைப் பெற்றவர் மறைந்த மாஸ்டர் சிவலிங்கம்' என்றும்  குறிப்ப்பிடுவார்.

இவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் பேராசிரியர் மெளனகுரு அவர்கள் 'மிமிக்கிறி  கலைஞனாக,  நகைச்சுவைப்பேச்சாளனாக , பகுத்தறிவு  வாதியாக,   அரசியல் செயற்பாட்டாளனாக, சத்தியாக்கிரகியாக,  நாடக  நடிகனாக, ’கூத்துக்கலைஞனாக , வில்லுப்ப்பாட்டுக் கலைஞனாக,  சிறுவர்கட்கான எழுத்தாளனாக, கதைசொல்லியாக, கார்ட்டூனிஸ்டாக, பன்முகம்  காட்டியவர்  மாஸ்டர் சிவலிங்கம் . அவரது இழப்பு  துயரத்திற்குரியதன்று.   அவர்  வாழ்வு கொண்டாட்டத்திற்குரியது, அவர்  வாழ்வைக் கொண்டாடுவோம்.' என்று குறிப்பிட்டுள்ளதை இத்தருணத்தில் இங்கு மீண்டுமொரு தடவை நினைவுகூர்வோம். இந்தக்  கூற்று ஒன்று போதும் மாஸ்டர் சிவலிங்கத்தின் பன்முக ஆற்றலைப் புரிந்துகொள்வதற்கு.

மேலும் பேராசிரியர் மெளனகுரு மேற்படி கட்டுரையில் மாஸ்டர் சிவலிங்கத்துடன் இணைந்து மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியில் கூத்துக்கலையினைப் பழக்கிய தகவலை '1960 களின்  நடுப்பகுதியில்  திரவியம்  இராமச்சந்திரன்  நான் மாஸட்ர்  சிவலிங்கம்  ஆகியோர் இணைந்து  வின்சன்ட்  மகளிர்  கல்லூரியில்   சில கூத்துகள் பழக்கியுமுள்ளோம்,  கூத்து  ஆடல் பாடல்களைசிறு வயதிலிருந்தே  கேட்டு வளர்ந்த  ஓர் கூத்துக்கலைஞரும் அவர்'  என்று எடுத்துக்காட்டியுள்ளார். அதிரதன் தனது 'தாய்வீடு' கட்டுரையில் இலங்கையில் வில்லுப்பாட்டினை அறிமுகப்படுத்தியவர் இவர் என்று குறிப்பிடுவார். இது ஆய்வுக்குரியது.  “நமக்கு மேலே ஒருவன்டா” என்னும் வில்லுப்பாட்டு நிகழ்வே இவரது முதலாவது வில்லுப்பாட்டு நிகழ்வாக அறியப்படுகின்றது. இது 1960இல் கல்லடி உப்போடையில் நடைபெற்ற நிகழ்வு.

வில்லுப்பாட்டு, கூத்து இவற்றுடன் நாடகங்களை இயக்கித் தயாரித்ததுடன் , அவற்றில் நடித்துமிருக்கின்றார்.  “யமலோகத்தில் வீசு கதிர்காமத்தம்பி ”, “சுடுசாம்பலாப் போச்சு போடியாரே”, “நாஸ்த்திகன் நல்லதம்பி ” ஆகிய நாடகங்களை இவர் இயக்கி, தயாரித்ததுடன் அவற்றில் நடித்துமிருக்கின்றார். 'சங்கிலியன்' என்னும் நாடகத்தில் இவர் நடித்திருந்த விடயத்தைப் பேராசிரியர் மெளனகுருவின் கட்டுரை மூலம் அறிய முடிகின்றது.  இவரது கூத்துக்கலைப் பங்களிப்பு, நாடகக்கலைப் பங்களிப்பு ஆகியவை முறையாக, விரிவாக ஆராயப்பட வேண்டியவை.

மாஸ்டர் சிவலிங்கம் பற்றிய நல்லதோர் ஆவணக் காணொளியை பட்டி நியூஸ் (BattiNews.Com) வெளியிட்டுள்ளது. அதனைத் தயாரித்திருப்பவர் வி.ரவீந்திரமூர்த்தி  இக்காணொளி மாஸ்டர் சிவலிங்கத்துடனான் நேர்காணலையும் உள்ளடக்கியுள்ளது. அவரது சிறுவர்களுக்கான கதை சொல்லல் நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாகக் காணொளி அமைந்திருப்பது அவரது குழந்தைகளுக்கான கதை சொல்லல் ஆற்றலை அனைவரும் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தைத் தருகின்றது.

மாஸ்டர் சிவலிங்கம்  பல்கலை வல்லுநராக விளங்கியபோதும், அவரது மிக  முக்கிய கலை,இலக்கியப் பங்களிப்பு சிறுவர் இலக்கியத்துக்காக அவராற்றிய பங்களிப்பே என்று  கூறலாம்.  எழுபதுகளிலிருந்து அவர் எழுதிய சிறுவர் கதைகள், புதினங்களில் எண்ணிக்கையை யாரும் இதுவரையில் முறையாகப் பட்டியலிட்டதாகத் தெரியவில்லை. அவற்றை முறையாக ஆய்வு செய்து பட்டியலிடுவதன் மூலம் அவரது சிறுவர் இலக்கியத்துக்கான பங்களிப்பை நாம் அறிய முடியும். இலங்கையில் சிறுவர் இலக்கியத்துக்குப் பங்களித்தவர்களில் முதலிடத்தில் இருப்பவராக இவரையே கருதலாம். ஆனால் இவ்விடயத்தில் முதலிடத்திலிருக்கும் இவரது சிறுவர் புதினங்கள் இதுவரையில் முறையாகத் தொகுக்கப்பட்டு நூலுருப்பெறவில்லையென்பது வருந்தத்தக்கது.

மாஸ்டர் சிவலிங்கத்தின் சிறுவர் கதைகள் ஏன் மிகுந்த வரவேற்பைச் சிறுவர்கள் மத்தியில் பெற்றன? அதற்குக் காரணம் அவர் சிறுவர்களுக்கு எப்படி எழுத வேண்டுமென்பதைப் புரிந்து வைத்திருந்ததுதான். 20.10.2001  வெளியான ' கதை மூலம் மாணவருக்கு கல்வியை இலகுவில் ஊட்டலாம்' என்னும் தலைப்பிலான   தினக்கதிர் செய்தியொன்று அவரது கூற்றினை உள்ளடக்கியிருந்தது. அதிலவர் பின்வருமாறு கூறியிருக்கிறார்:

"மாணவர்களுக்கு குறிப்பாகவும் சிறப்பாகவும் பாலர்களுக்கு இலகுவில் அறிவூட்டுவதற்கு கதை சிறந்த ஊடகம் கதை சொல்லும் கலையாகும். கதை மூலம் கடமை, உணர்ச்சி, கண்ணியம்,கட்டுப்பாடு ஆகியவற்றைச் சிறுவர்களுக்கு இலகுவில் ஊட்டலாம்...... சிறுவர்களுக்குக் கதை கூறும்போது சுருக்கமாகவும், எளிமையான சொற்கள் மூலமாகவும் கூறவேண்டும். அவர்களுக்குக் கதை கூறும் வேளையில் நாம் அவர்களின்  நிலைக்கு மனத்தளவில் நம்மைத் தாழ்த்துக்கொள்ள வேண்டும்."

சிறுவர்களின் உளவியலுக்கேற்ப, அவர்களை நிலைக்கு மனத்தளவில் இறங்கி, சுருக்கமான , எளிய சொற்கள் மூலம் கதை சொல்ல வேண்டும் என்பதை அவர் நன்கு புரிந்து, உணர்ந்திருந்தார்.  அதனாலேயே சிறுவர்களுக்காக எழுதியபோதும், வானொலியில் கதை சொல்லியபோதும் அவரால் ஒளிர முடிந்தது. மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற முடிந்தது.

மாஸ்டர் சிவலிங்கம் சிறுவர்களுக்கான கலை, இலக்கியப் பங்களிப்பில் எவ்விதம் இவ்விதம் சிறப்பாகச் செயற்பட முடிந்தது என்றால் அதற்குரிய முக்கிய காரணம் அவரது பன்முகத் திற்மை மிக்க ஆளுமைதான்.  நடிப்பு, கூத்துக்கலை, வில்லுப்பாட்டு, 'மிமிக்றி' , குரல் வளம் போன்றவற்றில் அவருக்கிருந்த திறமை அவருக்குச் சிறுவருக்கான கதை சொல்லலுக்கு மிகுந்த உதவி புரிந்தது. அத்துடன் அவருக்குச் சிறுவரின் உளவியல் பற்றியும் தெளிவான எண்ணம் இருந்தது. அதனால்தான் அவர்களுக்கேற்ப எழுத முடிந்தது. கதை சொல்ல முடிந்தது.  உதாரணத்துக்குக் குறிப்பேட்டில் தட்டுவதன் மூலம் அவர் குதிரையொன்றின் ஓட்டத்தினைச் சிறப்பாக வெளிப்படுத்துவதைப் பலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அவருடனான யு டியூப் காணொளி  நேர் காணலிலும் (மேலே குறிப்பிட்டுள்ள) அதனை  அவர் செய்து காட்டியுள்ளதை அவதானித்து அதிலுள்ள அவரது திறமை கண்டு மகிழ்ந்தேன்.

நூலகம் தளத்திலுள்ள சிந்தாமணி வாரவெளியீட்டுப் பிரதிகளைத் தேடியபோது இவர் எழுதிய பின்வரும் புனைகதை விபரங்கள் கிடைத்தன. இவை 83-84 காலகட்டத்தில் வெளியான சிந்தாமணிப்பிரதிகள்.

மந்திர அப்பிள் மரங்கள் - இங்கிலாந்து நாட்டுக் கதை - தொடர் - 6.2.83 சிந்தாமணி
பாழடைந்த குடிசை தொடர் - 17.7.1983 சிந்தாமணி
கரடி இளவரசன் - அமெரிக்க நாட்டுக் அதை  = 24.6.1984
விசித்திர ஆசை - அரபு நாட்டுக் கதை - 8.4.1990
பொறாமைக்குப் பரிசு - சிறுகதை - 10.6.90
எருமைத்தீவின் மர்மம் - 4 அத்தியாயத் தொடர். - 3.6.84

 83-84 காலகட்டத்தில் நூலகத்தில் கிடைக்கப்பெறும் சிந்தாமணிப் பிரதிகள்  முழுமையான  பட்டியல் அல்ல. இப்பட்டியலை முழுமையாக்க வேண்டுமானால் எழுபதுகளிலிருந்து சிந்தாமணி வாரவெளியீடுகளைத் தேடியெடுக்க வேண்டும். இவை தவிர  'அரிச்சந்திர மகாராஜன்' என்னும் தொடர் மட்டக்களப்பிலிருந்து வெளியான தினக்கதிர் பத்திரிகையில் 2000ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் வெளியாகியுள்ளது. வீரகேசரியில் மாணவர்களுக்காக மஹாபாரதம் தொடரை எழுதி நூலாக வெளியிட்டுள்ளார்.

எனது  தேடலில் கிடைக்கப்பெற்ற கட்டுரைகள், காணொளிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இதுவரை வெளியான இவரது நூல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. பயங்கர இரவு
2. தந்த பரிசு
3. உறைபனித் தாத்தா
4. சிறுவர் கதை மலர் 2(கொழும்பு அஷ்டலக்சுமி பதிப்பகம்) - சிந்தாமணி வாரவெளியீட்டின் சிறுவர் சிந்தாமணியில் வெளியான சில கதைகளின் தொகுப்பு.
5. மாணவர்களுக்கான மஹாபாரதக்கதை
6. இளமை நினைவுகள்  

'நூலகம்' தளத்தில் இவரது படைப்புகள் எவற்றையும் காண முடியவில்லை. சிறுவர் கதை மலரில் சிறுவர் சிந்தாமணியில் வெளியான இவரது கதைகள் தொகுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியான இவரது நூல்களில் எத்தனை கதைகள் சிறுவர் சிந்தாமணியில் வெளியானவை என்பது கண்டறியப்பட  வேண்டும்.  மேலும் இலங்கையில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான இவரது எழுத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட  வேண்டும்.  இவரது சிறுவருக்கான கலை, இலக்கியப் பங்களிப்பினை முழுமையாகக் கண்டறிவதற்கு இவ்விதம் இவரது அனைத்துப் படைப்புகளும் தொகுக்கப்படுவது மிகவும் முக்கியமானது. அத்துடன் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் தமிழ்த்துறை மாணவர்கள் மாஸ்டர் சிவலிங்கம் போன்ற கலை, இலக்கிய ஆளுமைகளைப் பற்றி ஆய்வுகள் செய்வதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். பேராசிரியர்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

மாஸ்டர் சிவலிங்கத்தின் சமூக, அரசியற் பங்களிப்பு

மாஸ்டர் சிவலிங்கம் கலை, இலக்கியப்பங்களிப்பு செய்த எழுத்தாளர் மட்டுமல்லர், சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் கூட.  ஐம்பதுகளின் ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகளால் தமிழர்கள் பலர் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் மாஸ்டர் சிவலிங்கமும் ஒருவர். இது பற்றிப் பேராசிரியர் மெளனகுரு அவர்கள் மாஸ்டர் சிவலிங்கத்தின் மறைவையொட்டித் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய  கட்டுரையில் பின்வருமாறு கூறுவார்:

"1950 கள் மட்டக்களப்பில்  திராவிட  திராவிட முனேற்றக் கருத்துகள் இளைஞரை தீவிரமாக வசீகரித்த காலங்களாகும்.  வெலிங்டன் புத்தகசாலை  இந்நூல்களை விற்கும்  மத்திய நிலையமாக  இருந்த்து. இந்நுல்களும்  பகுத்தறிவுக்  கருத்துகளும்  அன்றைய துடிப்பான இளைஞர்களைப் பற்றிகொண்டன. இவர்கள்  தம்மை  சுமரியாதைக்காரர்  என அழைத்துகொண்டனர்   மக்கள்  அவர்களைச்  சுனாமானா  என அழைத்தனர்"

இதன் மூலம் மாஸ்டர் சிவலிங்கம் சமுதாயப் பிரக்ஞை மிக்க ஒருவராக  , மூட நம்பிக்கைகளுக்கெதிரான ஒருவராக, பகுத்தறிவுவாதியாக அரசியல்ரீதியில் செயற்பட்டதை அறிய முடிகின்றது.  இலங்கையில் அறுபதில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டங்களிலும் இவர் பங்குபற்றி, பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகினார் என்றும் அறியப்படுகின்றது.

விருதுகளும், பட்டங்களும்!

சிறுவர் இலக்கியத்திற்கான வடகிழக்கு மாகாண சபையின்  சாகித்திய மண்டலப் பரிசு (1984-1991),   அன்பு தந்த பரிசு என்ற சிறுவர் இலக்கியத்துக்காக மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2013 தமிழியல் விருதும் ரூ.15,000 பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ள மாஸ்டர் சிவலிங்கம் பல பட்டங்களுக்கும்  சொந்தக்காரர்;

 நகைச்சுவைக் குமரன் - புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை வழங்கிய பட்டம்
 வில்லிசைச் செல்வன் - வித்துவான் பண்டிதமணி வி. சீ. கந்தையா வழங்கிய பட்டம்
அருட்கலைத் திலகம் - திருமுருக கிருபானந்த வாரியார் வழங்கியது
வில்லிசைச் செல்வர் - அமைச்சர் செ. இராசதுரை வழங்கியது
கலாபூஷணம் - இலங்கைக்  கலாசார அமைச்சு வழங்கியது.
சிறுவர் இலக்கியச் செம்மல் - கொழும்பு தமிழ்ச் சங்கம் வழங்கியது.

மாஸ்டர் சிவலிங்கத்துக்குச் சிலை!

மாஸ்டர் சிவலிங்கத்துக்கு அவர் பிறந்த ஊரான மஞ்சஞ்தொடுவாயில் அவரிடம் கல்வி கற்ற சிவானந்த கல்லூரி மாணவர்களினால் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வேறு எழுத்தாளர்கள் அல்லது கலை, இலக்கிய ஆளுமைகள் எவருக்காவது அவர்களை நினைவு கூரும் வகையில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளனவா? மானுட சமுதாயத்துக்கு மிகுந்த பயனை விளைவிப்பவை கலை, இலக்கிய ஆளுமைகளின் செயற்பாடுகள், படைப்புகள். நிச்சயம் அவர்களது கலை, இலக்கியப் பங்களிப்பை நினைவு கூரும் வகையில் சிலைகள் போன்ற நினைவுச்சின்னங்கள் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது.
 
இவற்றிலிருந்து மாஸ்டர் சிவலிங்கத்தின் கலை, இலக்கியத்துறையிலான  பன்முக ஆளுமையையும், சமூக, அரசியற் செயற்பாடுகளையும் அறிய  முடிகின்றது. இவர் எழுதிய ஆக்கங்கள் அனைத்தும் முறையாகத் தொகுக்கப்படவில்லையென்பதும் தெரிகின்றது. இலங்கைத் தமிழ்க் கலை,  இலக்கியத்துக்கு, குறிப்பாகச் சிறுவர்தம் கலை,  இலக்கியத்துக்கு இவராற்றிய பங்கு முக்கியமானது. நினைவில் எப்பொழுதும் வைக்கப்பட வேண்டியதொன்று. இவரது அச்சூடகங்களில், இலங்கை வானொலியின் சிறுவர் நிகழ்ச்சியில் வெளியான படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு , நூலுருப்பெற வேண்டியது அவசியம். அதன் மூலம் வரலாற்றில் இவர் நினைவு கூரப்படும் அதே சமயம் சிறுவர்கள் மிகுந்த பயனை அடையும் நிலையும் ஏற்படும்.


உசாத்துணைப்பட்டியல்:

1. கிழக்கின் ‘முதுசொம்’மை இழந்தோம்!  —செங்கதிரோன் (அரங்கம்நியூஸ் , ArangamNews, மே 28, 20220 -
2. இரத்தினம் சிவலிங்கம் - விக்கிபீடியா -  ta.wikipedia.org
3. வானொலிமாமா மாஸ்டர் சிவலிங்கம் ஈழத்தின் சிறுவர் இலக்கிய முன்னோடி -  ஐங்கரன் விக்கினேஸ்வரா (தினக்குரல்) - https://thinakkural.lk/article/177926
4. வானொலிமாமா மாஸ்டர் சிவலிங்கம் ஐயாவுடன் ஒரு சந்திப்பு (மதன் மனத்தில் வலைப்பதிவு) - https://mathanmanathil.blogspot.com
5. மாஸ்டர் சிவலிங்கம்; சில மனப்பதிவுகள் - பேராசிரியர் சி.மெளனகுரு (தினகரன் வாரமஞ்சரி மே 15, 2022) -
6.  அஞ்சலிக்குறிப்பு: கதைசொல்லிக் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் மறைந்தார்! - முருகபூபதி (பதிவுகள்.காம்)
7. மாஸ்டர் சிவலிங்கம் - அதிரதன் (தாய்வீடு, ஓகஸ்ட் 2014)

மாஸ்டர் சிவலிங்கம் பற்றிய யு டியூப் காணொளிகள்:

1. மாஸ்டர் சிவலிங்கத்தின் கதை சொல்லல் - https://www.youtube.com/watch?v=P0rS4Y6fkrE
2.  மாஸ்டர் சிவலிங்கம் பற்றிய ஆவணம் ( Battinews.com)  - https://www.youtube.com/watch?v=nHhNlel0F7Q
3.  மாஸ்டர் சிவலிங்கம் பற்றிய ஆவணம் - https://www.youtube.com/watch?v=RuNTeWod6rU
4. - அவரது சிலை பற்றிய தகவல் -  https://www.youtube.com/watch?v=YtdhKP2fnVA

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R