- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் தமிழ்ப் பேராசிரியருமான சு. வித்தியானந்தன் அவர்களின் நினைவாக 17.11.2022 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நிகழ்த்திய நினைவுப் பேருரையின் எழுத்துவடிவமே இக்கட்டுரை. இக்கட்டுரையாசிரியர் முனைவர் செல்லத்துரை சுதர்சன் - சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். -   * நாவில்லா உபதேசிகள்: காலனிய யாழ்ப்பாணத்தில் சிறுபுத்தகக் கலாசாரமும் சமயக் கருத்தாடலும்! (பகுதி ஒன்று)


யாழ்ப்பாணத்தில் சமயக் காலனியம்    

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னரேயே போர்துக்கீசரும், ஒல்லாந்தரும் தங்களது ஆட்சியை நிலைநிறுத்தவும் கிறிஸ்தவத்தினைப் பரப்பவும் சைவாலயங்களை அழிப்பதிலும் சைவ வழிபாடுகளை மறுப்பதிலும் ஈடுபட்டனர். ஆலயத்தை அழித்தல் என்பது, அதை மையமாகக்கொண்டியங்கிய உள்@ர் நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை அகற்றும் தன்மையையும் கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் வந்த ஐரோப்பிய மிஷனரிகள் தாம் எழுதிய குறிப்புக்களில், தம் வருகைக்கு முன்னரான சைவாலய அழிவுகளைப் பதிவுசெய்தனர். மிஷனரிமார்களில் ஒருவரான ஹரியற் எல். வின்சிலோ (Harriet L. Winslow) என்பார் தமது நாட்குறிப்பில் பதிவுசெய்யும் பின்வரும் பகுதியை நோக்கலாம்.

“போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்திலே தமது வர்த்தக மையங்களை நிறுவியவேளை, றோமன் கத்தோலிக்க மதத்தை நிறுவினார்கள். கடவுள் நம்பிக்கையற்ற மக்களின் கோயில்களை அழித்தனர். தமது வழிபாட்டி டங்களையும் ஆலயங்களையும் கட்டினார்கள். உள்@ர்வாசிகளிற் பலரைத் திருமுழுக்கு எடுக்கும்படி வற்புறுத்தினர். ஆனால், 1656ஆம் ஆண்டு, ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் தமது ஆட்சி பலத்தையும் அதனூடான செல்வாக்கையும் பயன்படுத்தி, போர்த்துக்கேயரைப் போலவே புரட்டஸ்தாந்து மதத்தின் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். அவர்கள், கடவுள் நம்பிக்கையற்றோரின் இடிக்கப்பட்ட ஆலயங்க ளைப் புனர்நிர்மாணம் செய்யவும் சமய வழிபாடுகளைப் பகிரங்கமாக நிகழ்த்தவும் இடமளிக்கவில்லை” (ஹரியட் வின்சிலோ., 1835:182- 183)

மேற்குறித்த பதிவிலிருந்து சைவர்களின் ஆலயங்கள் அழிக்கப்பட்டமையும் சைவ வழிபாடுகள் மறுக்கப்பட்டமையும் மத மாற்றத்துக்கு வற்புறுத்தப்பட்டமையும் புலனாகின்றது. ‘கடவுள் நம்பிக்கையற்ற மக்களின் கோயில்களை அழித்தனர்’ என்னும் குறிப்பு, சுதேசிகளின் சமயத்தினை அவர்கள் சமயமாகக் கருதவில்லை என்பதையே புலப்படுத்துகிறது.

ஆங்கிலேயர் காலக் கிறிஸ்தவக் காலனியம் மிகவும் தந்திரோபாயமான முறையில் அமைந்திருந்தது. சலுகைகளை வழங்குவதன் மூலம் சைவர்களின் மனதை வெல்லுதல் மட்டுமன்றி சமயத் தத்துவார்த்த அடிப்படையிலான போரையும் அது நிகழ்த்தியது. சுதேசிகளின் சைவம்சார் மன அமைப்பைத் தகர்த்து, அதற்குப் பதிலாக அவர்களைக் கிறிஸ்தவம்சார் மன அமைப்புக்கு ஏற்புடையதாக்குவதே அவர்களின் செயற்றிட்டமாக இருந்தது. சுதேசிகள் கட்டிய ஆலயங்களை அழிப்பதைவிடவும், சுதேசிகளை நெருங்கி, அவர்களின் சைவ மன அமைப்பை அழித்து, அத்தகைய மன அழிபாடுகளின்மேல் கிறிஸ்தவக் கருத்தியலைத் தேவாலயமாகக் கட்டுவது மிஷனறிகளின் இலக்காக இருந்தது. இந்த நோக்கத்தோடு தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஒருவரான ஹரியற் வின்சிலோ அவர்கள் 09.08.1821 அன்று, தமது நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதினார்.

“தவறான சித்தாந்தக் கருத்துக்களையும் குருட்டு நம்பிக்கைகளையும் நீக்குவதற்கு உண்மையான அறிவியலைக் கற்பிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப் பட்டது. இங்கு நடைபெறும் விக்கிரக வழிபாட்டின் முழுஅமைப்பும் - ஏற்கமுடியாத புவியியல், வானியல் அமைப்புக்கள், இயற்கை அறிவியலில் காணப்படும் உதவாத கற்பனைக் கதைகள் - ஆகியன இவற்றின் அடிப்படையில் தங்கியிருப்பதைக் காண்கிறோம். இக் கொள்கைகள் பரிசோதனை மூலமும் தவறானவையென நிரூபித்துக் காட்டலாம். ஆம், உண்மையான அறிவியலைப் பரப்பும்போது, சாத்தானின் கோட்டை தகர்க்கப்படும். இந்த இடிபாடுகளின்மேல் கடவுளின் ஆலயத்தைக் கட்டியெழுப்பலாம்.” (ஹரியற் வின்சிலோ நாட்குறிப்பு. 09.08.1821)

மேற்குறித்த கூற்றிலிருந்து, சுதேசிகள் கொண்டிருந்த சமயம் சார் மன அமைப்பைக் கவனத்திற்கொண்ட கிறிஸ்தவக் காலனியத்தின் யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ளலாம். இதற்காக அவர்கள் மேற்கொண்ட செயல்திட்டங்களில் இரு அம்சங்கள் முக்கியமானவை. அவற்றில் ஒன்று, சைவர்களைத் தூய ஆவியானவரால் ஒளிரச்செய்தல். மற்றையது, நற்செய்திக்கு ஒவ்வாத விக்கிரக வழிபாட்டினைக் கடிதல்.

சைவர்களைத் தூய ஆவியானவரால் ஒளிரச்செய்யும் அணுகு முறையானது, அக்காலத்துச் சைவ நிலவரங்களைக் கேலியோடு விமர்சிப்பதும் கேள்விக்குள்ளாக்குவதுமாய் அமைந்தது. பயில்நிலையிலிருந்த சைவப்பிரதிகள், வழிபாடுகள், நம்பிக்கைகள் குறித்த மிஷனரிமாரின் பதிவுகள் யாவுமே கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் அவர்கள் கொண்டிருந்த தீவிர நிலையைக் காட்டுகின்றன. இவ்விடத்தில், ஹரியற் எல். வின்சிலோ அவர்கள் 05.11.1820 திகதி எழுதிய நாட்குறிப்பு ஒன்றைக் குறிப்பிடுவது பொருத்தமானது.

“ஒரு மனிதன் செய்த பாவத்தை இல்லாமல் செய்யும் சமயக் கிரியைகள் என்றும் இவற்றைத் தகுந்தமுறையில் அனுசரித்தால் இறப்பின் பின்னர் மகிழ்ச்சியான வாழ்வை அடையலாம் என்றும் நம்புகின்றனர். எனவே பாவத்தின் விளைவைப் பற்றிய பயத்தை இவர்கள் மனதில் உண்டாக்குவது, இவர்கள் மனச்சாட்சியை விழிப்படையப் பண்ணுவது, எந்தமுறையிலும் முடியாத செயலாகத் தோன்றுகிறது. ஆனால், தூய ஆவியானவரினாலேயே இவர்களின் இருளடைந்த உள்ளத்தை ஒளிரச் செய்ய முடியும்.” (ஹரியற் வின்சிலோ., 05.11.1820)

கிறிஸ்தவ மிஷனரிகள் சைவர்களின் விக்கிரக வழிபாட்டை, பைபிளின் நற்செய்திக்கு ஒவ்வாமை எனக் கண்டனர். அவர்கள் விக்கிரக வழிபாட்டின்மேல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

“நாங்கள் கூறும் நற்செய்தியை, தங்கள் நித்தியானந்தத்தை இழக்கும் தறுவாயிலுள்ள இம்மக்கள், ஏளனமாகக் கருதுவதைக் கண்டு வேதனையடைந்தோம். கிறிஸ்துவின் நாமத்தை நிந்தித்து, கேலி செய்து, அக்கிரமங்களினால் மாசடைந்த மக்களின் பாவக்கறை நீங்க அவரின் திருஇரத்தம் வழங்கப்பட்டது என்பதை இவர்கள் ஏற்காதிருக்கின்றனர். மேலும், இவர்கள் மரம், கற்கள், பொன், வெள்ளி ஆகியவற்றினால் செய்யப்பட்ட ஜீவனற்ற விக்கிரகங்களை வழிபடுவதைக் காண்பது மிக்க மனவருத்தத்தை அளிக்கிறது.” (ஹரியற் வின்சிலோ., 08.10.1821)

மேற்குறித்த பதிவு, ஆங்கிலேயர்கால மிஷனரிமார், சைவ வழிபாடுகள் மற்றும் விக்கிரக வணக்கம் முதலாயவற்றை விமர்சித்து, சைவத்தைச் சமயமல்ல எனப் புறமொதுக்கிய, மனிதனின் ஈடேற்றத்திற்குக் கிறிஸ்தவமே வழி என வலியுறுத்திய நிலையையே காட்டுகிறது.

கிறிஸ்தவக் காலனியத்தை யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்த மிஷனரிகள் மேற்கொண்ட முயற்சிகளும் அவற்றிற்கு எதிரான சைவ மதத்தினரின் செயற்பாடுகளுந்தான், இக்கால எழுத்துலகைத் தீர்மானித்தன. மிஷனரி ஊழியக்காரர் கிறிஸ்தவத்தைத் தவிர யாழ்ப்பாணத்தில் நிலவிய எந்தச் சைவங்களையும் சமயங்களாகக் கண்டுகொள்ளவில்லை. ‘சைவாகம உணர்ச்சி’ நிலையில் நின்ற சைவர்கள், அவ்வுணர்ச்சியால் விலத்தப்பட்ட சைவர்கள் எனும் இரு சாராரையுமே ‘குணப்படுத்த வேண்டியவர்கள்’, ‘அஞ்ஞானிகள்’, ‘ஆவி எழுப்புதல் வேண்டியவர்கள்’, ‘பாவத்தில் இருப்பவர்கள்’, ‘இரட்சிப்புப் பெறாதவர்கள்’, ‘இருண்ட மனத்தினர்’ என்றே மிஷனரி ஊழியக்காரர் பதிவுசெய்தனர். யாழ்ப்பாணச் சைவர்களின் உள்ளத்தை தூய ஆவியானவரால் ஒளியூட்டலாம் என நம்பி, யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவம் காலூன்றியதன் விளைவு, காலனிய காலத்து ஈழ - தமிழ்நாட்டுச் சூழலைச் சமயப் போர்க்களமாக்கியது. மிஷனரி ஊழியக்காரருக்கு எதிராகச் சைவமறுமலர்ச்சி இயக்கத்தினர் சைவ ஊழியம் புரியத் தொடங்கினர். கிறிஸ்தவக் காலனியம் முன்னெடுத்த கல்வி, தொழில், வணிகம், அச்சு முதலாய நவீனமயமாக்கல் செயல் திட்டங்கள், இலங்கையின் ஏனைய தமிழ்ப் பிரதேசங்களைவிடவும் யாழ்ப்பாணத்தை உயர் நவீன சமூக அந்தஸ்து நிலைக்கு உயர்த்தின.

சமயத்தில் சீர்திருத்தம் விரும்பிய சைவமறுமலர்ச்சி இயக்கத்தினர் சைவத்தின் பழைமையை அதேவடிவத்தில் உயிர்ப்பிக்கவில்லை. அதனை, தம்மை எதிர்க்கும், ஆதிக்கம் செலுத்தும் புரட்டஸ்தாந்துக் கருத்தியலின் வடிவுக்கு ஏற்ப உயிர்ப்பித்தனர். அதாவது புரட்டஸ்தாந்து மதத்தின் கட்டமைப்பைப் பெற்று உயிர்ப்பித்தனர். இதனால், மிஷனரிகளின் சமயஞ்சார் கருத்தியல், சைவமறுமலர்ச்சியாளர்களின் நவீன சைவத்திலும் புகுந்துகொண்டது. மேலைத்தேயச் சிந்தனை, கிறிஸ்தவம், காலனிய நலன் ஆகியவற்றின் பண்புகள் நவீன சைவத்தில் தெளிவாக வெளிப்பட்டன.

புதுச்சைவமும் சூத்திரப் பிரசங்கமும்’ என்ற தலைப்பில் மிஷனரிகள் வெளியிட்ட பிரசுரத்தின் பகுதி ஒன்றை இங்கு குறிப்பிடலாம்.

“தற்காலச் சைவர் இதிகாச புராணங்களில் சொல்லப்ப டுகிற தெய்வ வணக்கத்தையும் விட்டு, ஆகம சாஸ்திரங்களி லுள்ள வழிபாடுகளையும் ஒதுக்கிக் கொண்டு ஒருவகைக் கிறீஸ்தவ சைவம் ஒன்றை உண்டாக்கிக்கொண்டு வருகிறார்கள்.” (09.09.1913)

மேற்குறித்த கருத்தின் ஆய்வுசார் முடிவுகளாக, “வரலாற்று நிலைமைக்குள் சூழமைக்கப்பட்ட நாவலரது சைவம் தூய்மைவாத நிலைப்பாடுடையதாகவும் - குறிப்பாக ஒரு ‘புரட்டஸ்தாந்துச் சைவமாக’ மீள் ஒழுங்குபடுத்தப்பட்டது” (2009:65) என்று அகிலனும் “சைவ மறுமலர்ச்சி இயக்கம், புரட்டஸ்தாந்து மதக்கட்டமைப்பினுள் சைவத்தைத் தகவமைப்பதாகவும் ஆகமமயப்படலை ஊக்கப்படுத்துவதாயும் அமைந்திருந்தது” (2018:ஒஎi) என்று சானாதனனும் கூறுபவை அவதானிக்கத்தக்கவை.

முன்னெப்போதும் இல்லாதவாறு அச்சேறிப் பரவலடைந்த சைவப் புனித நூல்கள், அவற்றையொட்டி எழுந்த இலக்கியங்கள், அவற்றின் மீதான உரையாடல்கள் நவீன சைவத்தின் வடிவமைப்பில் முக்கியம் பெற்றதுடன் அதனை மேலும் வலுவுடையதாக்கின. கருத்தியல் ரீதியாக, யாழ்ப்பாணத்தின் சமூக அதிகாரப்படிநிலை வேறுபாடுகள் நவீன சைவத்தில் பிரதிபலிப்பினும், சமயக் காலனிய காலத்தில், அதனை எதிர்கொள்ளும் வகையிலான சைவம், சைவ மறுமலர்ச்சியாளர்களால் கட்டமைக்கப்பட்டது. இதுவரை காலமும் ஈழத்தில் பின்பற்றுநிலையில் இருந்த சைவம், இக்காலத்தில் இயக்கமாகப் பரிணமித்தது. ‘சைவ மறுமலர்;ச்சி இயக்கம்’ என்ற சமய அடையாளம் இயக்கமாகவும் அது தன்னை வரலாற்றில் நிலைநிறுத்தியது. இதற்கு ஆறுமுகநாவலர் என்ற புலமையாளர் தலைமையேற்றார். அவர் சமூகச் சிக்கல்களுக்குச் சமயத்தின் மூலம் தீர்வுகளை முன்வைத்தார். கிறிஸ்தவக் காலனிய யாழ்ப்பாணச் சைவத்தின் இயல்பை மிஷனரிகளிடமிருந்தும் வேதாகம நெறிக்குள் வராத பழைமைச் சைவர்களிடமிருந்தும், விடுதலையை அவாவுதலாக அவர் கட்டமைத்தார். காலனிய காலச் சமய நிலவரம் குறித்த இத்தகைய தெளிவோடு, கிறிஸ்தவத்திற்கும் சைவத்திற்கும் நிகழ்ந்த சமயக் கருத்தாடல்களை நோக்கலாம்.

காலனிய காலச் சமயக் கருத்தாடல்: கிறிஸ்தவமும் சைவமும்

யாழ்ப்பாணத்தில் சைவர்களும் கிறிஸ்தவர்களும் வெளியிட்ட சமயப் பிரசாரச் சிறுபுத்தகங்களும் பிரசுரங்களும் எண்ணிலடங்கா தவை. இந்நூல்களில், சைவவிரோதக் கருத்துக்களைக் குறிப்பிட்டு, அவை தொடர்பான தமது நிலைப்பாட்டினைச் சைவர்களும், கிறிஸ்தவ விரோதக் கருத்துக்களைக் குறிப்பிட்டு, அவை தொடர்பான தமது நிலைப்பாட்டினைக் கிறிஸ்தவர்களும் எழுதி வெளியிடும் நெடிய போக்கொன்றைக் காலனிய காலம் முழுவதி லும் காணலாம். கிறிஸ்தவப் பரப்புரைகளும் அதற்கெதிரான சைவ எதிர்வினைகளும் நடைபெற்ற இக்காலத்தில் சமயம் தொடர்பான வரையறைகள் எதிரும்புதிருமாக முன் வைக்கப்பட்டன. குறிப்பாக, மனிதனுக்கு நல்வழிகாட்டும் சமயம் எது என்பது பற்றிய விவாதம் காலனிய காலம் முழுவதுமே நடைபெற்றுவந்தது.

கிறிஸ்தவப் பிரசாரகர்கள் கூறும் நற்சமயம்

அமெரிக்க மிஷனரிகள் ‘நற்சமயம்’ எனும் பெயரிலான சிறுபுத்தகத்தை அச்சிட்டு யாழ்ப்பாணம் முழுவதும் பரப்புரை செய்தனர். இலவசமாக விநியோகித்தனர். 1820ஆம் ஆண்டு முதன்முதலாக இது அச்சிடப்பட்டது. இச்சிறுபுத்தகம் நான்குமுறை அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. 1842ஆம் ஆண்டு நான்காவது பதிப்பாக, 10,000 பிரதிகள் அச்சிடப்பட்டு யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டது. நற்சமயம் என்பதற்கு புழழன ழுppழசவரnவைல என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நல்ல சமயத்தை நாடுவதற்கான நல்ல சமயம் (நல்ல சந்தர்ப்பம்) என்ற வெளிப்படையையும், கிறிஸ்தவ சமயமே நற்சமயம் என்ற உட்கிடையையும் அது பெற்றிருந்தது. இச்சிறுபுத்தகத்தின் நோக்கத்தினை, மிஷனரிகள் பின்வருமாறு குறிப்பிட்டனர்.

“சனங்களே, சுவிஷேச போதகர்களாகிய நாங்கள், எங்கள் தேசத்தில் இருக்கும்பொழுது தமிழராகிய உங்களுடைய மார்க்கநிலையைக் கேள்விப்பட்டு, அது தவறென்று அறிந்து, உங்களுக்குச் சத்திய மார்க்கத்தை அறிவிக்கும் படி, இந்தத் தேசத்திலே வந்து, பள்ளிக்கூடங்களைவைத்து, சத்திய வேதங்களைக் கற்பிக்கிறதுமல்லாமல், அதின் சாரங்களை எடுத்துச் சிறு புத்தகங்களாக அச்சடிப்பித்துத் தந்தும் வருகிறோம். இவைகளையெல்லாம் உங்கள் ஆத்தும நன்மைக்காகச் செய்கிறதல்லாமல் வேறொன்றற்கல்ல என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்” (நற்சமயம் - 1842:1)

மேற்குறித்த பகுதியில், சைவ மார்க்கம் தவறு, கிறிஸ்தவமே சத்திய மார்க்கம், பாடசாலைகளைத் தாபித்த நோக்கம் மதப் பரப்புகையே என்பதெல்லாம் தெளிவாகிறது. சைவ வழிபாடுகளை விமர்சித்து, அவர்கள் நற்சமயம் எனக் கருதும் கிறிஸ்தவத்தை நிலைநிறுத்தும் நோக்கில், ‘அன்புடன் கூறும் புத்திமதிகள்’ இச்சிறு நூலில் வெளிப்படுகிறது.

“விக்கிரகங்களைப் பிரதிட்டை பண்ணிவைத்து, அவைகளை வணங்குவதே பரகதிக்கு வழியென்று சைவ சமயத்தார் சொல்லும் வார்த்தையைக் கேட்டு, அங்கே போய்ப் பொங்கல் பூசை பண்ணுவித்துத் திருநீறு சந்தனம் வாங்கி அணிந்து, திருவிழா முதலான வேடிக்கைகள் எல்லாம் பார்த்ததினாலே மனம் அலுத்து, சரீரமும் இளைத்து, பாவமும் அதிகப்பட்டதேயன்றி மனஞ் சுத்தமாகவில்லையென்பது நன்றாக விளங்கு கின்றது. இப்படியே காலம்போக மரணங்கிட்டி வருகின்றது... கிறிஸ்து மார்க்கத்தின் தன்மையைக் கேட்டறியாத வர்களுமாய் இருக்கிறவர்களே, அந்த மார்க்கத்தைப் போதிக்கிறவர்களாகிய நாங்கள் அன்புடனே சொல்லும் புத்தியைக் கேட்பீர்களாக.” (நற்சமயம்., 1842:14)

மனச் சுத்தியைத் தராததும் பாவத்தை அதிகரிப்பதுமான சைவத்தை நீங்கி, சைவத்தின் விக்கிரக வழிபாட்டை விடுத்து, சடங்காசாரங்களை விடுத்து, கிறிஸ்தவத்தை நாடவேண்டும் என்ற பரிவுடனாhன சமயப் பரப்புகையை மேற்குறித்த பகுதி காட்டிநிற்கிறது. கிறிஸ்து ஒருவரே பாவங்களைக் கழுவும் இரட்சகர் என்று கூறி, கிறிஸ்தவத்திற்கு வாருங்கள் என இச்சிறுபுத்தகம் அறைகூவல் விடுப்பதையும் அவதானிக்க முடிகிறது.

“கிறிஸ்துநாதரே இரட்சகர். மோட்சம் பெறுவது அவராலே யல்லாமல் வேறில்லை. இந்த மெய்மையான கிறிஸ்துமார்க்கத்தி லேயன்றி, வேறொருமார்க்கத்திலே பாவ வியாதிக்குத் தகுதியான நிவர்த்தி சொல்லியிருக்கவில்லை. அதிலேதானே அந்த இரட்சகர், போதகரான நீங்கள்போய்க் கெட்டுப்போன பாவிகளையும், பாவத்தை ஒரு பாரமாக எண்ணி அதை வெறுக்கிறவர்களையுந் தேடுங்களென்றும், பிரயாசப்பட்டுப் பாரஞ் சுமந்தவர்களாகிய எல்லாரும் நம்மிடத்தில் வந்தால் அவர்கள் பாரத்தை நீக்கி ஆறுதல் செய்வோமென்பதைச் சொல்லுங்களென்றும் கட்டளையிட்டி ருக்கிறார். ஆகையால் அவரிடத்திலே சேருங்கள்.” (நற்சமயம்., 1842:15)

சைவப் பிரசாரகர்கள் கூறும் நற்சமயம்

மிஷனரிகளின் கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கெதிராகச் சைவசமயிகளும் சிறுநூல்களை எழுதி வெளியிட்டனர். ஆறுமுகநாவலர் அதிக எண்ணிக்கை கொண்ட, உள்ளடக்கக் கனதி பெற்ற எழுத்துக்களை வெளியிட்டார். நாவலரது எழுத்துக்கள் ‘சைவமே மெய்ச் சமயம்’ என நிரூபிக்கும்வகையில் அமைந்தன. நாவலர் எழுதிய ‘சைவசமயம்’, ‘சைவசமயி’, ‘சைவவிரோதம்’ ஆகியவை இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. நாவலர், ‘சிவன் ஒருவரே இறப்பும் பிறப்பும் இல்லாத தலைவர்’ எனச் ‘சைவசமயம்’ என்ற சிறுபுத்தகத்தில் குறிப்பிட்டார்.

“பிறப்பும் இறப்பும் உடையவர்கள் பசுக்கள். பசுக்கள் எண்ணில்லாதவர்கள். பசுக்களாவார் தேவர்கள் முதலாகக் கிருமிகள் ஈறாக உள்ள சீவர்கள். பிறப்பும் இறப்பும் இல்லாதவர் பதி. பதி ஒருவரே. அந்தப் பதி சிவபெருமான். சிவபெருமானுக்குப் பசுக்கள் எல்லாம் என்றும் அடிமைகள். சிவபெருமான் அந்தப் பசுக்கள் தோறும் நிறைந்து நின்று அவர்களையெல்லாம் ஆளுந் தலைவர். ஆதலாற் சிவபெருமான் ஒருவரே பசுபதி” (ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு., 1996:99)

சிவனை வழிபடுகிற உண்மை மார்க்கமே சைவம் என்றும் சிவனுக்குச் சமத்துவம் செய்வது சிவத்துரோகம் என்றும் நாவலரது பிரசுரம் வெளிப்படுத்தியது.

“இந்த உண்மையை விசுவசித்துச் சிவபெருமானை வழிபடுகிற மார்க்கஞ் சைவ சமயம். பலரைப் பரம் என்று கொண்டு வணங்குகிற சமயம் சைவசமயம் ஆகாது. சிவபெருமானிலும் உயர்ந்தவர் உண்டு என்றாவது, சிவபெருமானுக்குச் சமத்துவம் உடையவர் உண்டு என்றாவது கொள்வது சிவத்துரோகம்.” (ஆ.பி.தி., 1996:99)

மேற்குறித்தவை மட்டுமல்லாது, ‘சைவசமயி’ எனும் சிறுபுத்தகத்தில் சைவசமயிகளுக்குரிய முக்கிய இலக்கணங்களாக 12 இலக்கணங்களை நாவலர் நிரற்படுத்திக் குறிப்பிட்டார். (ஆ.பி.தி., 1996:90-92) சைவசமயிகளை ‘அஞ்ஞானிகள்’ என்று மிஷனரிகள் விமர்சித்தமைக்கு மறுப்புரைக்கும் வகையில், பின்வருமாறு எழுதினார்.

“சைவசமயிகள் அஞ்ஞானிகள் என்று கிறிஸ்தவர்கள் வழங்குகின்றார்கள். அஞ்ஞானி என்ற சொல்லுக்குப் பொருள் மெய்க்கடவுளை அறிகிற அறிவில்லாதவன். கிறிஸ்தவர்கள் தங்கள் கருத்தின்படி தாங்கள் சைவ சமயிகளை அஞ்ஞானிகள் என்று வழங்கலாமென்றால், சைவசமயிகளுந்தங்கள் கருத்தின்படி, தாங்கள் கிறிஸ்தவர்களை அஞ்ஞானிகள் என்று வழங்கலாமே” (ஆ.பி.தி.1996:100)

சிறுபுத்தகங்கள் மற்றும் துண்டறிக்கைகள் மூலம் இருசமயத்தாரும் நிகழ்த்திய கருத்தியல் போரில் தமிழ், சைவம் ஆகிய இரண்டிற்கும் “சைவசமயத்தைத் தமிழ்ச் சமயம் என்றும் சைவசமயக் கோயிலைத் தமிழ்க் கோயில் என்றும் அறிவில்லாத சனங்கள் வழங்குகிறார்கள். தமிழ் என்பது ஒரு சமயத்தின் பெயரன்று. ஒரு பாஷையின் பெயர்” (ஆ.பி.தி. 1996:101) என நாவலர் தெளிவான பிரிகோடிட்டார்.

“சைவ உபதேசிகள் தங்கள் சமயக் கருத்தைப் பேசிய தமிழ் செந்தமிழாக இருந்தது. அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஐந்தில் நான்கு பங்கினருக்கு அவர்கள் என்ன பேசினார்கள் என்றே புரியவில்லை. இந்த உபதேசங்களினால் அவர்களை மிக உயர்ந்த மனிதராய் எண்ணிய கோயிலதிபதிகள், அவர்களுக்காக வாயில்களைத் திறந்து வைத்திருந்தனர்” (மேரி., மார்க்கிரட் லெஜ்ச். 1890:36)

என்று மிஷனரிகள் கருதிய காலத்திலேதான், “ஒரு புறம் சுத்தச் செந்தமிழ் என அறியப்பட்ட உரைநடை. மறுபுறம் கொச்சைத் தமிழ். அதாவது ஏற்றமும் இறக்கமும் மேடும் பள்ளமும். நாவலர் இவற்றைச் சமப்படுத்தினார். பூசி மெழுகி, சுவரை மினுக்கினார்.” என்று நாவலரின் பிரசங்கத் தமிழை, முத்துக்குமாரசுவாமி (மேற்கோள் - 1965:28) குறிப்பிடுகிறார். இது நாவலரின் சிறுபுத்தகங்களுக்கும் பொருந்தும்.

நாவலரது ‘சைவதூஷண பரிகாரம்’ கிறிஸ்தவ மிஷனரிகளைத் திணறச் செய்தது. 1855ஆம் ஆண்டு முக்கியமான கிறிஸ்தவ பிரசார சபைகளில் ஒன்றான வெஸ்லியன் மெதடிஸ் சபையின் அறிக்கையிலும் அத்திணறல் பிரதிபலித்தது. அவ்வறிக்கையில் சைவதூஷண பரிகாரம் பற்றி விரிவாகப் பதிவானது. அவ்வறிக்கையில் வரும் முக்கியமான பகுதி ஒன்றை இங்கு குறிப்பிடலாம்.

“இவ்வாண்டின் மகத்தான சம்பவம் சைவதூஷண பரிகாரம் என்ற தமிழ் நூல். அது, அசாதாரணமான இலக்கியம். கிறிஸ்து மதத்தை எதிர்த்து ஆணித்தரமாகச் சைவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் நூல். அது, முற்றிலும் புதிய தந்திரத்தைக் கையாண்டு நமது சமயத்தைத் தாக்குகின்றது. அது, கிறிஸ்தவ சமயம் முறையற்றது, பயனற்றது என்று சொல்லவில்லை. சைவத்தின் சடங்குகளையும் தூக்கிப்பேசவில்லை. கிறிஸ்து ஆகமத்துக்குச் சரியான ஆகமங்களைக் காட்டி சைவத்தைவிடக் கிறிஸ்துமதத்தில் என்ன விஷேடமிருக் கிறது என்பதை அறியத் தருகின்றது” (கனகரத்தினம், இரா.வை., மேற்கோள். 2013:81)

மிஷனரிகள் எழுதிய மேற்குறித்த பகுதி சைவச்சார்பான கண்டனங்களின் வலிமையைப் புலப்படுத்துகிறது.

கத்தோலிக்கரின் சைவர் ஆட்சேப சமாதானம்

புரட்டஸ்தாந்துச் சமயப் பிரசாரகர்கள் சைவத்தை விமர்சித்துச் சிறுபுத்தங்கள் எழுதிய இதேகாலத்தில் கத்தோலிக்க சமயப் பிரசாரகர்களும் தமது கருத்துக்களைச் சிறுபுத்தகங்களாக்கி வெளியிட்டனர். அவர்களது எழுத்துக்களில் புரட்டஸ்தாந்து சமயமும் சைவமும் ஒருங்கே விமர்சிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆயினும், காலனிய காலச் சமயக் கருத்தியல் முரண் குறித்த ஆய்வுகளில், கத்தோலிக்கப் பிரசாரகர்களின் சிறுபுத்தகங்களைக் கவனத்திற்கொள்ளாநிலையே நிலவுகிறது. கத்தோலிக்கப் பிரசாரகர்கள் வெளியிட்டவற்றுள், குருவுக்கும் சீடனுக்குமான உரையாடல் வடிவில் அமைந்த, ‘சைவர் ஆட்சேப சமாதானம்’ எனும் பெயரில் அமைந்த சிறுபுத்தகம் முக்கியமான ஒன்று. அதில், தேசாகாரப் பிரகரணம், சமயாசாரப் பிரகரணம், வேதாகமப் பிரகரணம் ஆகிய பகுதிகள் கவனிப்புக்குரியவை. இரண்டாவது பிரகரணத்தை மாத்திரம் இங்கு நோக்கலாம்.

“சமயாசாரப் பிரகரணம்:

ஆட்சேபம் - கிறீஸ்து சமயம் தலயாத்திரை, விக்கிரக வணக்கம், புண்ணிய தீர்த்தம் முதலியவைகளைக் கண்டிக்கின்றது. மனுஷனுடைய இயல்புக்கும் பக்குவா பக்குவங்களுக்கும் ஏற்றவைகளாய்த் தொன்றுதொட்டு உலகெங்கணும் வழங்கி வருகின்ற இத் தீங்கற்ற வழிபாடுகளைத் துவேஷிக்கும் சமயமும் மெய்ச்சமயமாகுமா?

சமாதானம் - கிறீஸ்து சமயம் மெய்யான கடவுட் சம்பந்தமான தலங்களையாதல் சுரூபங்களையாதல் தீர்த்தங்களையாதல் துவேசியாது. போலிக் கிறீஸ்து சமயமாகிய புறோட்டெஸ்தாந்து மதமே இவற்றைப் பகுப்பின்றிக் கண்டிக்கின்றது.” (சைவர் ஆட்சேப சமாதானம்., 1878:1)

மேற்குறித்த பகுதி, கத்தோலிக்கப் பரப்புகையையும் புரட்டஸ்தாந்துக் கண்டிப்பையும் வெளிப்படுத்துகிறது. ஆயினும், சைவம், கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து ஆகிய மூன்று சமயங்களுமே, தமிழ் மற்றும் ஐரோப்பியக் கலாசாரங்களைத் தம்மளவில் உள்வாங்கி, தம்மை நிலைநிறுத்திக்கொண்டமையை வரலாறு காட்டிநிற்கிறது.

சைவர்கள் செய்வது விக்கிரக வணக்கம் என்றும் அது தவறானது என்றும் கத்தோலிக்க சமயத்தினர் குறிப்பிட்டு, தாம் செய்யும் சொரூப வணக்கமே சரியென்று வாதிட்டனர். ‘விக்கிரகாராதனையும் சுரூப வணக்கமும்’ எனும் துண்டுப் பிரசுரத்தில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டனர்.

“விக்கிரகாராதனை என்னும் சொற்றொடரினால் நாங்கள் கருதுவது கடவுளல்லாத ஓர் வஸ்துவுக்குத் தேவாராதனை செலுத்தலாகிய பாபத்தையே... சுரூப வணக்கத்தையும் விக்கிரகாராதனையையும் நுட்பமாய்ப் பிரித்து அறிந்து கொள்ளுதல் வேண்டும். மெய்யான கடவுளைச் சார்ந்ததும் கிரமமுள்ளதுமான வழிபாட்டிற்குத் துணைக் கருவியாக உருவங்களை அமைத்துக்கொள்ளுதலே சுரூப வணக்கமாம். கத்தோலிக்கர், அவதரித்த மெய்யான கடவுளேயாகிய யேசுநாத சுவாமிக்கும் அவருடைய திருத்தொண்டர்களுக்கும் குறிப்பாக உருவங்களை அமைத்து வைக்கின்றனர். அவ்வுருவங்களின்முன் கிரமமான வணக்கத்தைச் செலுத்துகின்றனர். எங்ஙனமெனில், யேசுநாதசுவாமியுடைய சுரூபங்களின் முன் அவருக்குரிய தேவ ஆராதனை செய்யப்படும். தொண்டர்களுடைய சுரூபங்களின் முன்னோ அவர்களுக்குரிய கீழான வணக்கமே செய்யப்படும். இங்ஙனம், மெய்த்தேவ வழிபாட்டோடு சேர்ந்ததாய்க் கிரமமுள்ளதாய்க் கத்தோலிக்கர் பயிலுகின்ற இம்முறைமையே சுரூபவணக்கம் எனப்படும்.” (விக்கிரகாராதனையும் சுரூப வணக்கமும்., 1906)

மேற்குறித்த கருத்தானது தவறெனச் சுட்டிக்காட்டி, விக்கிரக வணக்கமும் சுரூப வணக்கமும் ஒன்றே என்பதைச் சைவப் பிரசாரகர்கள் தெளிவுறுத்தினர். அவர்களது வியாசத்தினை இந்துசாதனம் பத்திரிகை வெளியிட்டது. அவ்வியாசத்தின் ஒருபகுதி வருமாறு.

“சைவசமயிகள் கல்லையும் செம்பையும் வணங்கும் விக்கிரக வணக்கக்காரரெனக் கிறீஸ்தவர்களிகழ்ந்து பேசுவது வழக்கம். ஆனால், தாம் கடவுளை வணங்கும் போது ஏதோ ஒருவித ரூபத்தை மனதிலமைத்தே வணங்குகிறார்களென்பதை இவர்களறிந்திருந்தால் இங்ஙனம் இகழமாட்டார்கள். கிறீஸ்துவைக் கிறீஸ்தவர்கள் தியானிக்கும்போது அவர் சிலுவையிற் பாடுபட்டதை மனதில் ரூபித்தே வணங்குகிறார்கள். கல், செம்பு முதலிய லோகங்களால் விக்கிரகங்களை உண்டாக்கி அவைகள் மூலமாகக் கடவுளைத் தியானிப்பதற்கும் மனதில் ரூபித்து வணங்குவதற்குமுள்ள வித்தியாசமென்ன? இரண்டும் விக்கிரக வணக்கமேயாகும்.” (இந்துசாதனம்., 25.08.1906)

அமெரிக்கப் பண்டிதரின் உபந்நியாசம்

கிறிஸ்தவப் பிரசாரங்களை முறியடிக்கச் சைவமறுமலர்ச்சி இயக்கத்தினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டது மட்டுமன்றி, தமக்கு ஆதரவாக அமெரிக்காவின் நியூயோர்க்கைச் சேர்ந்த கிறிஸ்தவரும் பண்டிதருமான மைறோன் எச் பெல்ப்ஸ் (Myron H. Phelps) என்பாரை அழைத்துச் சைவசமய உண்மைகளையும் கிறிஸ்தவ மதத்தின் பொருத்தமின்மையையும் உரையாற்ற வைத்தனர். அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ‘Hindu Ideals And Their Preservation’ எனும் தலைப்பில் 28.02.1910 அன்று ஆற்றிய உரை சிறுபுத்தகமாக வெளிவந்த அதேவேளை, ‘அமெரிக்க பண்டிதர் அவர்கள் இந்து காலீஜிற் செய்த உபந்நியாசம்’ என்ற தலைப்பில் 06.04.1910 வெளிவந்த இந்துசாதனம் பத்திரிகையிலும் பிரசுரமாகியிருந்தது. மிஷனரிகள் வியாபாரம் செய்யத் தகுந்தவர்களேயன்றி சமய போதனைக்கு உகந்தவர்கள் அல்லர் என்றும் இந்துக்களின் கொள்கைகள் மேலானவை என்றும் ஆகையால் அவர்களைக் கப்பலேற்றுங்கள் என்றும் அவர் கூறினார்.

“நானோர் மேலைத்தேச வாசியாயிருந்தும் என் மேலைத் தேசத்தின் பெருமைக்குக் குறைவான காரியங்களை நான் சொல்கிறேனெனின், அவைகளை நீங்களறிய வேண்டிய உரித்து உங்கட்குண்டு.... உங்கள் பிள்ளைகளைச் சம்பளம் பெறாது கற்பிக்கிறோமெனச் சொல்லி உங்கள் மனதைக் கவர்ந்து உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் தம்மதத்துள் இழுத்துவிட எத்தனிக்கும் கிறிஸ்து பாதிரிமார், தங்கள் தேசத்தில் என்ன செய்து முடித்திருக்கின்றார் என வினவுங்கள். பிரபுக்காள்! மேலைத்தேசத்தவர் மார்க்க அறிவு ஊட்டத்தக்க வர்களல்லர். வியாபார காரியங்களைக் குறித்தும், றெயில்வே, மோட்டார் ரதம், ஆகாய ரதம் முதலியவற்றைக் குறித்தும் அவர்களிடம் கேட்டால், அவர்கள் நல்ல யோசனைகளைச் சொல்லுவார்கள். ஆனால், மார்க்கத்தைக் குறித்து அவர்களோடு யோசியாதேயுங்கள். இந்த விஷயத்தில் அவர்களது அறிவுரை சுத்தசூனியமே. இங்குள்ள கிறிஸ்தவ பாதிரிமாரைக் கப்பலேற்றுங்கள்.... இந்துக்களின் கொள்கைகளோ மிகமேலானவை. உலகத்திலுள்ள எச்சாகியத்தாரின் கொள்கைகளிலும் அவர்களது கொள்கைகளே சிறந்தன. அவைகள் ஆன்ம ஞானத்துக்குரிய கொள்கைகள்… நீங்கள் விழிப்படைந்தாலன்றி இந்துச் சீர்திருத்தமும் இந்துமதமும் யாழ்ப்பாணத்தில் வேரற்றுப்போமென்பதற் காசேஷபமின்று.” (இந்துசாதனம்., 06.04.1910)

மைறோன் எச் பெல்ப்ஸ் அவர்களின் மேற்குறித்த உரையை விமர்சித்து சுவாமி ஞானப்பிரகாசர் ‘இந்து சமயத்தில் ஓர் அமெரிக்க இந்து’ (An American Hindu in Hinduism) ‘திருவாளர் பெல்ப்ஸின் வியாசத்துக்கான ஒரு விமர்சனம்’ (யு உசவைஙைரந ழக ஆச. Phநடி'ள டநவவநச) எனும் இரு சிறுபுத்தகங்களை எழுதினார்.

சிறைச்சாலையுள் நுழைந்த சிறுபுத்தகங்கள்

காலனிய ஆட்சியாளர் நிறுவிய சிறைச்சாலைகளில் சிறையகப்படுத்தப்பட்ட சைவர்களுக்கு, கிறிஸ்தவப் பிரசாரம் வாரந்தோறும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காகச் ‘சிறைச்சாலைப் போதகர்’ என்ற பதவிநிலை ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதை எதிர்த்துப் பிரசாரம் செய்ய, சைவசமயிகள் சார்பில், ‘சிறைச்சாலைப் பிரசாரகர்’ சிலரும் நியமிக்கப்பட்டிருந்தனர். இருசமயத்தாரும் தமது சிறுபுத்தகங்களையும் பிரசுரங்களையும் சிறைச்சாலையுள் விநியோகித்தனர். சிறைச்சாலையுள் இடம்பெற்ற மதமாற்ற முயற்சிகள் குறித்து 09.04.1902 அன்று வெளியான இந்துசாதனம் பத்திரிகை பலமுறை விசனித்திருந்தது, உதாரணமாக, ‘கொழும்பு - யாழ்ப்பாண சைவபரிபாலன சபையார்க்கிடும் அபயம்’ எனும் தலைப்பில் ‘சைவச் சிறைச்சாலைப் பிரசாரகர்’ வை. சுப்பிரமணியபிள்ளை எழுதும் நீண்ட வியாசத்தின் முக்கியமான இரு பகுதிகளை இங்கு குறிப்பிடலாம்.

“ஒருவன் குற்றஞ்செய்தானென்று சிறையிருப்புத் தீர்ப்புப் பெற்றது பற்றி அவன் தனது சமய சுயாதீனங்களை ஒருங்கே இழத்தல் நீதியாகாது... ஒரு குற்றத்தாற் சிறைப்பட்ட ஒரு கிறிஸ்தவனை ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியஞ் செய்யுமாறு கற்பிப்பார்களா? கற்பிப்பார்க ளாயின் தேவ விரோதிகளாவார்களன்றோ? சமய இடர் செய்யுமென்று சத்தியஞ் செய்துதந்த ஆங்கிலராசாங்கத் துக்கு இதுவோர் பேரிழிவாகுமன்றோ.” (இந்துசாதனம்., 09.04.1902)

“சிறைப்பட்டானொருவன் மறுமைப்பலனையடையுமாறு அவனுக்குரிய சமயகுருவை அவனுக்குப் போதிக்கும்படி அரசினர் இடங்கொடுத்திருப்பதனாலேயே, சிறைச் சாலையிலே சமயசுயாதீனம் விலக்கன்று என்பது நன்கு புலப்படுகின்றது. சிறைச்சாலையிலே எல்லோரையும் அவரவர் சமயநெறிக்குத் தக்கவாறு நடாத்துதல் அரசியல் நெறியாம்.” (இந்துசாதனம்., 09.04.1902)

சமயப்பிரசாரம் பொதுமேடைகளிலும் நடைபெற்றதை இக்காலப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரியைச் சேர்ந்த சங்கத்தானைச் சைவவித்தியாசாலையிலே சைவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே மறுபிறப்பின் உண்மைகளைப் பற்றிய சமயவாதம் நிகழ்ந்தமை பற்றிய செய்தி 09.04.1902,ல் இந்து சாதனம் பத்திரிகையில் வெளியாகியது. இத்தகைய இடங்களிலும் சிறுபுத்தகங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

மணச் சடங்கும் மரணச் சடங்கும்

உடுவில் பெண்கள் பாடசாலையின் தோற்றம் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந் நோக்கங்களை சி.டி.வேலுப்பிள்ளை என்பார் தமது அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திரம் (1984) என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அந் நோக்கங்களில் இரண்டாவது நோக்கம் “இத்தேசத்தில் கிறிஸ்தவக் குடும்பங்களையும் உத்தம கிறிஸ்தவ மனைவியரையும் கிறிஸ்தவத் தாய்மாரையும் உண்டாக்கவும்” (வேலுப்பிள்ளை,சி.டி. 1984:79) என அமைகிறது.

கிறிஸ்தவத்திற்கு மாறிய ஆண்களுக்கு மணமகளை வழங்குவதற்கு அக்காலச் சைவச் சமூகம் உடன்படவில்லை. இதனால் அவர்கள் மறுபடியும் சைவத்;திற்கு வரவேண்டிய தேவை உண்டாயிற்று. வராதவர்களும் சைவப் பெண்களைத் திருமணம் முடிக்கும்நிலை ஏற்பட்டது. சைவத்தை மறுபடி ஏற்றவர்கள் சைவம்சார் திருமணச் சடங்குகளையும் ஏற்கவேண்டியதாயிற்று. இச்சூழலில், மிஷனரிகள் ‘விவாக சம்பந்தம்’ எனும் சிறு புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டனர். இப்புத்தகம் 1844ஆம் ஆண்டு இரண்டாவது பதிப்பாக மூவாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன. இப்புத்தகத்தில் “மெய்க் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களல்லா தவர்களுடனே விவாக சம்பந்தம் பண்ணிக்கொள்வதினாற் பெரிய தீமை உண்டாகும்” (விவாக சம்பந்தம்., 1844:1) எனக் குறிப்பிடப்படுகிறது.

“அக்கிரமக்காரராயும், இருளுள்ளவர்களாயும், அவிசுவாசிகளாயும், பசாசுக்கு இருப்பிடமாயும் இருக்கிற விக்கிரக பக்திக்காரருடனே, கிறிஸ்துவின் புண்ணிய பலத்தைக் கொண்டு நீதிமான்களாயும் ஞான வெளிச்சம் உள்ளவர்க ளாயும் பராபரனுக்கு ஆலயமாயுமிருக்கிற நீங்கள், அவர்களோடே ஐக்கியப்பட்டிருக்கிறது சரியல்லவென்று அறிந்து, மோட்சஞ் சேருகிற வழியிலே நடக்கிற சகோதரருடனே கூடி ஒருமித்து நடக்கப் பார்ப்பீர்களாக” (விவாக சம்பந்தம். 1844:9)

திருமணத்திற்காக மறுபடியும் சைவத்துக்கு மாறுவோரைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை மேற்படி கூற்றுப் புலப்படுத்துகிறது. கிறிஸ்தவத்திலிருந்து சைவத்திற்கு மதம்மாறுவதற்கு, யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் திருமணத்தை நிர்ணயிக்கும் சீதனமும் முக்கியமானதாய் அமைந்தது. இதனால் மிஷனரிகள், ‘நற்கொடை - சீதனத்தினாலாகுந் தீமைகள்” (1869) என்ற ஒரு சிறு புத்தகத்தை யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு விநியோகித்தனர்.

“ஒரு பெண்பிள்ளைக்கு ஒரு புருஷனைச் சம்பாதிக்கும்படி பெற்றார் சீவிய காலத்தில் அவர்கள் ஆஸ்தி முதலியவைகளைப் பங்கிட்டுத் தருவதே சீதனம். இது யாழ்ப்பாணத்தாரின் பொதுப்பழக்கம். இது மகா பெரிய தீமை. இந்தத் தீமை கிறிஸ்தவ சபையையுங்கெடுக்க ஏதுவாயிருக்கிறது” (நற்கொடை - சீதனத்தினாலாகுந் தீமைகள்., 1869:1)

மேற்படி கூற்றிலிருந்து, கிறிஸ்தவ மிஷனரிச் சபையினைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு, யாழ்ப்பாணச் சீதனமுறை இருந்ததை அறியமுடிகிறது. 23.10.1905 அன்று வெளியான இந்து சாதனத்தில் ‘ஆத்மசம்ரசஷிணீ’ என்னும் பெயரில் ஒருவர் எழுதிய ‘இந்து சமயிகளும் கிறிஸ்தவப் பாடசாலைகளும்’ என்னும் கட்டுரையில் மிஷனரிகளின் மேற்குறித்த நிலைப்பாடு விமர்சிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

“பாதிரிமார்… இந்து சமயப் பெண்களையும் அவ் விதமாய்க் கிறிஸ்தவ மார்க்கத்தில் சேர்;த்துவிட யோசித்து பெண் பாடசாலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆண் பிள்ளைகளுக்கு மாத்திரங் கிறிஸ்தவ மதத்தைப் போதித்திருந்தால் அவன் இந்து சமயப் பற்றுடைய பெண்ணைக் கலியாணம் செய்யும்போது அவளாலிவனிடத்துள்ள பற்று ஒழிந்துவிடுமென்று யோசித்தார்கள் போலும்” (இந்துசாதனம்., 23.10. 1905)

காலனிய யாழ்ப்பாணத்தில், அபரக்கிரியையின் சமூக முக்கியத்துவத்தைச் சிறிது நோக்குவது பயனுடையது. சமயமாற்றம் நிறைந்த யாழ்ப்பாணத்தில் சமயம் மாறியவரது இறப்பின் பின்னான கிரியைகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. கிறிஸ்தவத்துக்கு மாறிய ஒருவர் இறந்த பின்னர், அவரது சிரார்த்தக் கிரியைகளை எந்தச் சமயமுறையின் பிரகாரம் நிகழ்த்துவது? சைவ முறையிலா? கிறிஸ்தவ முறையிலா? சிரார்த்தக் கடனை மேற்கொள்பவர் யார்? இறந்தவரின் பிள்ளைகள் சைவராயின் அதனைச் சைவமுறையில் மேற்கொள்வது சரியானதா? இவ்வகையிலான வினாக்கள் எழுப்பப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன.

யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் எழுதிய ‘சிரார்த்த தீபிகை’, ‘சைவ சிரார்த்த விதி’ ஆகிய நூல்களும் நீர்வேலிச் சங்கரபண்டிதர் எழுதிய ‘சபிண்டீகரணச் சிரார்த்த விதி’ என்ற நூலும் இத்தகையதொரு விவாதச்சூழலில் பெரும் செல்வாக்குப்பெற்றன. இன்னும், இத்தகைய நூல்களின் எழுச்சியை, மதமாற்றச் சூழலில் சைவத்தமிழ்ப் புலமையாளர்களின் சடங்குசார் விதிவகுப்பு எதிர்வினையாகவும் கொள்ளல் தகும். அபரக் கிரியையைத் தீர்மானிப்பதில் கிறிஸ்தவ எதிர்ப்பு மனோபாவம் முதன்மை வகித்தது. இதற்கு, நாவலரது ‘சைவவிரோதம்’ எனும் சிறு புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைச் சான்று காட்டலாம்.

“தீஷை பெற்றபின் மரண பரியந்தம் அனுட்டிக்கப்பட்ட சமயாசாரத்தில் விளைந்த குறைவுபாட்டுக்குச் செய்யப்படும் பிராயச்சித்தமன்றோ அந்தியேட்டி! சமய தீஷைதானும் பெறாது, சமயாசாரம் ஒரு சற்றும் சாராது, விபூதி சிறிதுமிடாது, பாதிரிமாரைப் பிரீதிப்படுத்திக் கொண்டு, கிறிஸ்தவர்கள் பந்தியிலே கலந்து போசனஞ் செய்துகொண்டு திரியும் மனிதப் பதர்களுக்குத் தருப்பையிலும் அந்தியேட்டி செய்யத்தகாதே! இப்படியாகவும், வேதாரணியத்துச் சைவகுருமார்களும் வரணி கரணவாயிற் சைவக் குருமார்களும் இவர்களுக்குப் பிரேதத்தில் அந்தியேட்டி செய்யத்தலைப்பட்டுக் கொண்டார்களே! இவையெல்லாங் கண்டித்தவர் யாவர்!” (ஆ.பி.தி. 1996:23)

கிறிஸ்தவ மத மாற்றச் சூழலில் அந்தியேட்டி, சபிண்டீகரண விதிகளின் பிரயோக நிலவரத்தை அறிவதற்கு நாவலரது பல பதிவுகள் உதவுகின்றன. அபரக்கிரியைகள் தொடர்பாகச் சைவமறுமலர்ச்சி இயக்கத்தாரின் அதீத கரிசனை எதற்கானது என்ற வினா இங்கு முக்கியமானது. இதற்குரிய விடைகளாக மூன்று அம்சங்களைக் குறிப்பிட முடியும்.

முதலாவது, கிறிஸ்தவத்துக்கு மாறியோரின் ‘இருநிலைச் சமய வாழ்வு’ இது முக்கியமானதொரு அம்சம். அதாவது, சைவராயிருந்து கிறிஸ்தவராக மாறியவரின் ‘இருநிலைச் சமய வாழ்வு’ அல்லது ‘வெளியில் கிறிஸ்தவம் உள்ளே சைவம்’ என்னும் நிலைப்பாடு. இந்தநிலை இறுதிக் கிரியையிலும் இரட்டைநிலையை உருவாக்கியது. அதவாவது, இறந்த ஒருவரின் உடல் இருமதக் கிரியைகளுக்கும் (சைவம் - சைவச்சிரார்த்தக் கிரியை - ஆன்ம ஈடேற்றத்திற்கானது, கிறிஸ்தவம் - இறந்தவரின் வாழ்வுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் திருப்பலி) இடங்கொடுக்கும் நிலையை உருவாக்கியது.

இரண்டாவது, ‘சைவ உடல்’ பற்றிய கரிசனை. சைவ உடலைக் கட்டமைப்பதற்காக நாவலர் சரியை, கிரியை ஆகியவற்றை அதிகம் கவனப்படுத்தினார். அவரது செயற்பாடுகளும் எழுத்துகளும் இதனை நிரூபிக்க வல்லவை. காலனியகாலச் சமயவெளியில் ‘சைவ உடல்’ என்பதை அவர் அதிகம் முதன்மைப்படுத்தினார். அதற்காக, தீட்சை, திருநீறு முதலாய சிவசின்னங்களைக்கொண்டு ‘சைவ உடல்’ என்பதைக் கருத்தாக்கமாக உருவாக்கினார். சமய அடையாள இயக்கத்தில் உடல்சார் அரசியலின் முக்கியத்துவம் இதனூடு புலனாகின்றது.

மூன்றாவது, சமயம் மாறியவர்களுக்கான தண்டனை. சைவத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களுக்கு அபரக்கிரியை செய்யக்கூடாது என்ற நிலைப்பாடு, சமயம் மாறியவர்களுக்கான தண்டனையாகவே பின்பற்றப்பட்டது. அதாவது, பிறப்பது சைவனாக எனில் இறப்பது எவ்வாறு கிறிஸ்தவனாக அமையும் என்பதையொட்டிய நிலைப்பாடாகும். கிறிஸ்தவத்திற்கு மாறியவர்கள் இறந்த பின்னர், அவர்களின் உடல்களுக்குக் கிரியை செய்ய மறுப்பதும், அவ்வுடல்களுக்கு இறந்தவரின் சைவ உறவினர்கள் கிரியை செய்விப்பதைக் கண்டிப்பதும், கிறிஸ்தவராக இறந்தவரது சைவ உறவினரின் வேண்டுதலின்பேரில் கிரியை நிகழ்த்திய குருக்களைக் கண்டிப்பதும் இதன்பாற்பட்டவை. இதன்மூலம், சமயம்மாற எத்தனிப்போரைத் தடுப்பதும், மாறியோருக்குச் சிரார்த்தம் செய்யாது தடுத்துத் தண்டனை வழங்குவதன்மூலம் சமயம்மாற இருப்போரை எச்சரிப்பதும் சைவ மறுமலர்ச்சி இயக்கத்தின் உத்திகளாக இருந்திருக்கலாம்.

இம்மூன்று அம்சங்கள் காரணமாகவும் அபரக்கிரியை பற்றிய அதீதகரிசனை நிலவியது. அபரக் கிரியையின் சமூக நிலவரத்தைக் காட்டும் வகையிலும் சிறுபுத்தகங்கள் எழுந்தன. சிவசம்புப் புலவரின் ‘சபிண்டி நாடக சங்காரம்’ என்ற சிறுபுத்தகம் அவ்வகையில் முக்கியமானது. ‘சபிண்டி நாடக சங்காரம்’ என்று அறியப்பட்ட சிவசம்புப் புலவரின் கண்டனச் சிறுபுத்தகம் ‘வல்வைச் சிவன் கோயிற் சபிண்டி நாடக சங்காரம்’ என்ற தலைப்பில் 1900ஆம் ஆண்டு வெளியாகியது. ஆறுமுகநாவலர் சைவதூஷண பரிகாரத்தை ‘சைவப்பிரகாச சமாசீயர்’ எனும் பெயரில் எழுதியதுபோல, புலவர் சபிண்டி நாடக சங்காரத்தை, ‘வடமராட்சி சுத்த சித்தாந்த சைவர் தோழர்’ என்ற பெயரில் எழுதினார்.

புலவரது சிறுபுத்தகம் அவரது காலச் சமூகத்தில் நடைபெற்ற சபிண்டிக் கிரியை ஒன்றைக் கண்டிக்கிறது. ‘உண்மைக்குப் புறம்பானது’ என்ற அர்த்தத்தில் அதனை ‘நாடகம்’ எனக்குறிக்கிறார், புலவர். அதனைப் புலவர் தமது எழுத்து மூலம் ‘சங்காரம்’ செய்கிறார். அதுவே சபிண்டி நாடக சங்காரம். யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த சைவரான இராமுப்பிள்ளை கிறிஸ்தவத்திற்கு மாறி நதானியேல் றசல் எனும் பெயரோடு கிறிஸ்தவராய் விளங்கினார். சைவராக இருந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய றசல் இறந்தார். இவருக்கு மருமகன் நொத்தாரிசு வ.சின்னத்தம்பிப்பிள்ளை. றசல் இறந்தபோது அவரது மருமகனாகிய சின்னத்தம்பிப்பிள்ளையே அந்தியேட்டி, சபிண்டி ஆகியவற்றைச் செய்து முடித்தார். சபிண்டிக்கிரியை செய்த குருக்கள், வல்வெட்டித்துறைச் சிவன் கோயில் அர்ச்சகர்களுள் ஒருவரான சிவஸ்ரீ சண்முகக் குருக்கள்.

சபிண்டிக் கிரியை செய்த சண்முகக்குருக்கள் தொடர்பாகப் பல சர்ச்சைகள் எழுந்தன. வல்வைச் சைவாபிமானிகள் கொதித்தெழுந்தனர். சண்முகக் குருக்களுக்கு எதிராக கோயிலிலும் ஊரின் பிற இடங்களிலும் கூட்டங்கள் நடைபெற்றன. குருக்கள் எனும் தகுதியை அவர் இழந்துவிட்டார் என்ற அளவில் சர்ச்சைகள் நீண்டு சென்றன. சண்முகக் குருக்கள் நீர்வேலிச் சிவப்பிரகாச பண்டிதரைத் தனக்குத் துணையாக்கினார். வல்வைப் பிரமுகர்களும் பிரபுக்களும் சைவமக்களும் சிவசம்புப் புலவரைத் தமக்குத் துணையாக்கினர். இச்சர்ச்சை தொடர்பான பிரசுரங்கள் இருசாராராலும் வெளியிடப்பட்டன. பத்திரிகைகள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளைப் பிரசுரித்தன. குருக்கள் சார்பாகச் ‘சிவப்படை’ என்னும் சிறு கண்டனப் பிரசுரம் சிவப்பிரகாச பண்டிதரால் எழுதி வெளியிடப்பட்டது. அதற்கு மறுப்பாகவே ‘சபிண்டி நாடக சங்காரம்’ புலவரால் எழுதப்பட்டது. புலவர் இக்கண்டன நூலை எழுதி வெளியிடுவதற்கு முன்னர், வல்வெட்டித்துறையில் ஒரு கூட்டம் சிவப்பிரகாச பண்டிதர் தலைமையில் நடைபெற்றது.

“றசல் கிறீஸ்தவரல்லவா எனப் பண்டிதர் சாதிக்க முற்பட்டார். ‘சண்முகக் குருக்கள் குற்றமுடையாரோ? அல்லரோ? என்று முடிபு சொல்லுகிறீர்கள்?’ எனச் சந்தேகம் நிகழ வினாவினர் கோவிலதிபதிகள். இராமப்பிள்ளை கிறீஸ்தவரல்லர் என நிச்சயிக்கிறோம். அவர் கிறிஸ்தவராயினும் ஆங்கிலப் பேர் மாத்திரம் பூண்ட இராமப்பிள்ளை பேரிற் சபிண்டியேற்ற குருக்கள் குற்றமுற்றவர் ஆவது எப்படியோ? அயோக்கியரிடத்துத் தானமேற்றதால் வரும் குற்றமும் பிராயச்சித்த மந்திர செபற்றாற்றானே நீங்கத்தக்கது என்று வாதித்தார் சிவப்பிரகாச பண்டிதர் இதற்குப் பிரமாணங்களும் காட்டினார்.” (தேவகி, நீலகண்டன். 1972:32)

முன்னர் கிறிஸ்தவர் அல்லர் என்று நிச்சயித்து, பின் அவர் கிறிஸ்தவரேயானாலும் எனவைத்து, ஆங்கிலப் பெயர் மாத்திரம் பூண்ட இராமப்பிள்ளை என ஒன்றோடொன்று முரண்பாடாகக் கூறி, தாம் எடுத்துக்கொண்ட விடயத்தை நிலைநிறுத்த முடியாது போனார், பண்டிதர்.

“புலவர் சார்பினராகிய கோவிலதிபதிகளும் வல்வைப் பிரமுகர்களும் குறித்த இராமப்பிள்ளை கிறிஸ்தவ மதத்திற் பிரவேசித்ததையும், நதானியல் றசலாக மாறியதையும் கிறிஸ்தவராக வாழ்ந்து, கிறிஸ்தவராக மரித்தவர் என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களுடன் நிரூபித்து நிலைநாட்டினர். எதிர்ப்பகுதி குதர்க்கத்தில் இறங்கவே கூட்டம் குழப்பமுற்றது. சண்முகக் குருக்கள் தருக்கொழியாதவராகவேயிருந்தார்.” (தேவகி, நீலகண்டன். 1972:33)

கோயிலிற் கூடிய கூட்டம் குழம்பியமையும், எதிர்த்தரப்பிடம் பதிலின்மையும், தருக்க முறையற்ற விவாதமும் சிவசம்புப் புலவரைச் சபிண்டி நாடக சங்காரம் எழுதத் தூண்டின. இதுவே இந்தச் சிறுபுத்தகம் தோன்றிய பின்னணி.

இதன் அமைப்பு வழக்கறிஞரின் எழுத்துப் பத்திர அமைப்பை ஒத்தது. இக்காலத்தில் வழக்கறிஞரின் எழுத்துப் பத்திர அமைப்பில் வெளிவந்த சிறுபுத்தகம் புலவரது நூல் ஒன்றே எனத் துணிந்து கூறலாம். நூலின் புதுமையான அமைப்பு ஆறு பகுதிகளைக் கொண்டது. அவற்றைச் சுருக்கமாக நோக்கலாம்.

1. நதானியேல் றசல் என்பவரைக் கிறிஸ்தவர் எனக்கருதி நற்சான்றுப் பத்திரங்களை எழுதிய பத்து நபர்களின் விபரம் - பத்து நபர்களில் சேட்சுமிஷனில் ஒருவரும் அமரிக்க மிஷனில் ஒன்பது பேரும் அடங்குகின்றனர். அவர்களில் போதகர் மூவர், உபாத்தியாயர் மூவர், மிஷனரி ஒருவர், உபதேசியார் ஒருவர். இருவரது தொழில்நிலை குறிக்கப்படாததால் அவர்கள் கிறிஸ்தவத்தைத் தழுவிய சைவர்களாக இருக்கலாம். குறித்த பத்து நபர்களும் நல்லூர், காரைதீவு, உடுவில், உடுப்பிட்டி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் எழுவர் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர்கள்.

2. பாதிரிமார்கள் அனைவரும் நதானியேல் றசல் குறித்து எழுதிய நீண்ட அபிப்பிராயங்களின் சாராம்சம் - மேற்குறித்த பத்து நபர்களிடமிருந்தும் புலவர் விரிவான எழுத்துமூல ஆவணங்களைப் பெற்றிருக்கிறார் என்பது, “இவர்கள் நதானியேல் றசல் என்பவரைக் குறித்து நமக்கெழுதித்தந்த சாட்சிப் பத்திரங்களின் விரிவைச் சுருக்கிய சாரம்” (1900:1) எனும் வாசகத்தால் தெளிவாகிறது.

3. கிறிஸ்தவரான றசலைச் சுத்த சைவரெனக் கருதி வெளியிட்ட கருத்துக்களும் மறுப்பும் கொண்ட பகுதி - இது ஐந்து பிரிவுகளை உடையது. குறித்த விடயம் தொடர்பாக வே.கனகசபாபதி ஐயர், சு.சரவணமுத்துப்பிள்ளை, அ.குமாரசுவாமிப் புலவர், செ.இராமலிங்கக் குருக்கள், ச.சுப்பிரமணியக் குருக்கள் ஆகிய ஐவரது கருத்துக்களும் ஆட்சேபங்களும் ஐந்து பிரிவுகளில் அமைந்துள்ளன. இது புலவருக்குச் சார்பான சைவத்தமிழ்ப் புலமையாளர்களின் கருத்துக்கள் அடங்கிய பகுதியாக அமைகிறது. “இவ்வித உறுதியைக் கொண்ட கிறிஸ்தவரைச் சுத்த சைவரென்று நடித்த நாடகமும் மறுப்பும்” என்று தலைப்பில் இப்பகுதி அமைந்துள்ளது.

4. புலவரது தீர்ப்பு - இப் பகுதி ‘தீர்ப்பு’ எனும் தலைப்பிலேயே அமைந்துள்ளது. பாதிரிமார் றசல் பற்றிக் கூறியவற்றையும் சைவப்புலமையாளர்கள் றசலின் விவகாரம் குறித்துக் கூறியவற்றையும் ஆராய்ந்து புலவர் தமது தீர்ப்புக் கூறும் பகுதியாக இது அமைந்துள்ளது.

5. ‘சிவப்படையின் மறைந்துநின்ற சில கட்டிவசனச் செல்வரே’ என்ற பகுதி - இது சிவப்பிரகாச பண்டிதரையும் அவரைச் சார்ந்தோரையும் விமர்சனம் செய்து கண்டிப்பதாயும், பண்டிதரதும் குருக்களதும் செயல் பிழையென்று வலியுறுத்து வதாயும், ‘சிவப்படை’ எனும் பெயரிலான கண்டனப் பிரசுரத்தில் தருக்கம் அற்ற தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாயும் அமைந்துள்ளது.

6. முடிவு - சிவப்படையின் கையொப்பம் பற்றிய விமர்சனமும், இப் பிரச்சினை தொடர்பாக மேலும் தமது பிரசுரங்கள் வெளிவரும் என்பது தொடர்பான ‘பாயிரம் ஒரு வகையான் முடிந்தது. இனி பாயிரவிருத்தியும் ஒழிந்தவும் 200 செய்யுளமைந்த குலமுறைப் புராணமும் வரும்’ எச்சரிக்கையும் இப்பகுதியில் அமைந்துள்ளன.

இவைதொடர்பான பல செய்திகள் இக்கட்டுரையின் விரிவஞ்சித் தவிர்க்கப்படுகின்றன. இவ்வாறு காரசாரமான சமயக் கருத்தாடல் நடைபெற்ற சூழலில்தான், சைவ மறுமலர்ச்சியினரின் காலனிய அதிகார ஓம்புதலும் சமனாகப் பயணித்து வந்தது.

சைவச் சுதேசிகளின் காலனிய ஓம்புதல்    

ஆங்கிலேய ‘ஏகாதிபத்திய நாள்’ யாழ்ப்பாணச் சைவப் பாடசாலைகளில் பெருமகிழ்வோடு கொண்டாடப்பட்டது. சைவமறுமலர்ச்சி இயக்கத்தின் பிரசார ஊடகமாக உருவாகி, சைவத்தை நிலைநாட்ட இந்துசாதனம் பத்திரிகையை வெளியிட்ட, சைவத்தமிழ்ப் பாடசாலை ஒன்றை உருவாக்க வேண்டும் எனும் நாவலரின் நோக்கத்திற்கமையச் செயற்பட்ட, சைவபரிபாலன சபையால் ‘இந்து உயர் பாடசாலை’ என்ற பெயரில் பொறுப்பேற்று நடாத்தப்பெற்ற, இன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்று அறியப்படும் சைவத்தமிழ்ப் பாடசாலையில் ‘ஏகாதிபத்தி நாள்’ கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவப் பரப்புகைக்கு எதிர்நிலையி லிருந்த, அக்கல்லூரியை மேலாண்மை செய்த சைவபரிபாலன சபையின் இந்துசாதனம் பத்திரிகை, அக்கொண்டாட்டச் செய்தியைப் பெருமகிழ்வோடு பிரசுரித்தது. ‘ஏகாதிபத்திய நாள்’ எனும் தலைப்பில் அமையும் அச்செய்தியை இங்கு குறிப்பிடலாம்.

“மகிமை தங்கிய எங்கள் எட்வேட் மகாராஜா அவர்களின் நற்றாபராகிய இராணி விக்தோறியாப் பெருமாட்டியையும், அவரது காலத்தில் ஆங்கில அரசானது பருத்தோர் பெரிய இராச்சியமானதையும் நினைவு கூர்தற்கும் ஆங்கிலவரசின் கீழுள்ள பிரசைகளாகிய நம்முள் இராசவிசுவாசமானது ஓங்கி வளர்தற்பொருட்டுமாகக் கொண்டாடப்பட்டு வரும் ஏகாதிபத்தியநாள் ¨ இராணியாரவர்களின் ஜெனன நாளாகும். சென்ற உச (24) யாழ்ப்பாணத்தில் உள்ள சகல கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் மிக்க விமரிசையோடும் கொண்டாடப்பட்டது. நமது ஏசன்றர் மெஸ் பிறைஸ் அவர்கள் அன்று காலை பட்டினப் பகுதிலுள்ள பல கல்லூரிகளைத் தரிசித்து, மாணவர்க்கு ஏகாதிபத்திய நாட்கொண்டாட்டத்தின் நோக்கத்தைப் பற்றியும் இராச பக்தி விசுவாசத்தைப்பற்றியும் உபந்நியாசித்தனர். நமது யாழ்ப்பாணம் இந்துகாலீஜில் இது வெகு கொண்டாட்டமாக வழமைபோல் நடைபெற்றது. ஏசன்றவர்கள், உதவி ஏசன்றர் மெஸ், ஹியூஸ் அவர்களுடன் ச (4) மணியளவில் காலீஜைத் தரிசித்த போது, பிரதம ஆசிரியர் ஸ்ரீ நெ.செல்வத்துரைப்பிள்ளை அவர்கள், அவர்களை நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த மேன்மண்டபத்திற் கழைத்துச் சென்று பூமாலையிட்டாசனத்தமரச் செய்தனர். இவர்களு டன், தமிழ்ப்பிரதிநிதி கௌரவ ஸ்ரீ அ. கனகசபையவர்களும், பிறக்கிராசியார் ஸ்ரீ. வி. காசிப்பிள்ளையவர்களும், கச்சேரி முதலியார் ஸ்ரீ. ம. இராமலிங்கமவர்களும், யாழ்ப்பாணம் மணியகாரன் ஸ்ரீ. சின்னையா அவர்களும் சமுகமளித்தி ருந்தனர். ஏசன்றரவர்கள் பிள்ளைகள் காட்டிய இராச பக்தி விசுவாசத்தைக் குறித்து வியந்து பேசியபின், பிரதம ஆசிரியர் ஸ்ரீ. செல்லத்துரையவர்கள், மெஸ்.பிறைஸ் அவர்களுக்கு ஸ்துதி கூறினர். பின் மாணவர்களும் உபாத்தியாயர்களும் பலவித பலகார வகைகளும் பழவகைகளும் அருந்திக் கொண்டாடினர்.” (இதுசாதனம். 12.05.1909)

ஏகாதிபத்திய ஆட்சியாளர் ‘எட்வேட் மகாராஜா’ அவர்கள் மரணித்தபோது யாழ்ப்பாணத்தில் பெரும் சோகம் நிலவியதையும் கடைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டதையும் முக்கியமாக ஆலயங்களில் துக்கமணி ஒலிக்கப்பட்டதையும் அறியமுடிகிறது. இதுதொடர்பாக இந்துசாதனம் பத்திரிகையில் வெளியாகிய இன்னொரு செய்தியையும் இங்கு குறிப்பிடலாம்.

“மகத்துவந் தங்கிய எம். எட்வேட் மகாராஜா அவர்களின் தேகவியோகம் - ஆங்கில அரசின் செங்கோலோச்சித் தன்னுயிர்போல் மன்னுயிரனைத்தையுங்காத்து அரசாண்டுவந்த எங்களரசரேறாகும் எம். எட்வேட் மகாராசா அவர்கள் மின்னாது முழங்காது இடி விழுந்தவாறாய் காத்திராப்பிரகாரம் சென்ற சா (6) இரவு கக (11) மணியளவில் தேகவியோகமாகிவிட்டனர். இவரது மாதாவாகும் இராணிவிக்தோறியாப் பெருமாட்டியார் இறந்தபோது எவ்வளவு துக்கமிங்கு உண்டாயிற்றோ அவ்வளவுதுக்க மிங்கு இப்பொழுது உண்டாயிற்று. இத்துக்க அறிகுறியாக, சனிக்கிழமை க0 (10) மணியளவில் இச்செய்தி இங்கெட்டியவுடன், சகல ஆபிசுகளும் பூட்டப்பட்டன. கறுப்புத்துவசங்கள் பலவிடங்களிலும் ஆரோகணிக்கப்பட்டன. ஆலயங்கள் துக்க ஒலி ஒலித்தன. சனி ஞாயிற்றுக்கிழமைகள் பள்ளிக்கூட நாட்களல்லாமையால் திங்கட்கிழமை பள்ளிக்கூடங்கள் யாவும் பூட்டப்பட்டன.” (இந்து சாதனம்., 11.05.1910)

முடிவுரை

இதுவரை நோக்கிய காலனியகால உரையாடல்களின் வழிநின்று சிந்தித்தால், காலனிய காலத்தில் கிறிஸ்தவத்திற்கு எதிராகச் ‘சைவமே மெய்ச் சமயம்’ என யாழ்ப்பாணச் சைவச் சுதேசிகள் சிறுபுத்தகங்கள், பிரசுரங்கள், நூல்கள் மற்றும் பத்திரிகைகளின்வழி நிகழ்த்திய சமயக் காப்புப் போர், காலனியச் சமய வெளியில் பெரும் விஸ்வரூபமாக, வரலாற்றின் நெடிய பாதையில் தெரிவதற்குப் பின்னால், காலனிய ஓம்புதலும் நிகழ்ந்தமை என்பது ஆச்சரியமான ஒன்றுதான். காலனியச் சமயமான கிறிஸ்தவத்தையும் அதன் செயற்பாடுகளையும் வெறுப்பது ஒருபுறமும், காலனிய ஆட்சியைப் போற்றுவது மறுபுறமும் என நிலவிய இவ்விருபோக்குகளும், காலனிய காலம் முழுவதும் சமாந்தரமாகவே பயணித்து வந்துள்ளதைத் தெளிவாக அறியமுடியும். காலனிய ஆட்சியின் சலுகைகளைப் பெற்று யாழ்ப்பாணத்தை உய்விப்பதற்கு இந்த இரட்டைத் தன்மை யாழ்ப்பாணச் சைவர்களுக்கு அவசியமாக இருந்தது. இன்னும், காலனியகால யாழ்ப்பாணச் சைவத்தமிழ் உயர்குழாத்தினரின் காலனிய எதிர்ப்பு என்பது, அவர்கள் தமது செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த காலனிய ஆட்சியாளருடன் சமரசம் செய்வதும், உடன்படுவதும், விட்டுக்கொடுப்பதும், வளைந்து போவதும், தாம்சார்ந்த வர்க்க சமூக நலன்களில் ஊறித்திளைப்பது மாகவே அமைந்திருந்தது. நிறைவாகச் சொல்வதானால், யாழ்ப்பாணச் சைவச் சுதேசிகளின் காலனிய எதிர்ப்பு என்பது சமய நலனும் காலனியச் சலுகை நலனும் ஒன்றிக்கலந்த முரணும் நெகிழ்வும் மிக்க கூடாரமாக அமைந்தது என்பதே பொருத்தமானது.

உசாத்துணைகள்

ஆங்கில நூல்கள்


Bhabha, Homi k., The Location of Culture, London and New York: Routledge, 2013.

Chandasiri, Ven. Olaganwatte., Nineteenth Century Poetical Works and Social Institutions of
Sri Lanka, Colombo: Vijitha Yapa Publications, 2018.

Eagleton, Terry., The Idea of Culture, UK: Blackwell publishers, 2000.

Ebeling, Sascha., Colonizing the Realm of Words, New Delhi: Dev Publication and Distributers,
2013.

Jayasekera, P.V.J., Confrontations with Colonialism, Resistance, Revivalism and Reform
Under British Rule in Sri Lanka 1796 - 1920, Colombo: Vijitha Yapa Publications, 2017.

Kafka., Toward a Minor Literature, London: University of Minnesota Press, 2016.

Mary & Margaret W. Leitch, Seven Years in Ceylon – Stories of Mission Life, New Delhi: Asian
Educational Services, 1999.

K.N., Colonialism, Culture and Resistance, India: Oxford university press, 2009.

Partha Chatterjee., The Partha Chatterjee - Omnibus, New Delhi: Oxford University press, 2013
Pramod, k. Nayar., post colonial Literature - An Introduction, India: Pearson India Education
Services, 2013.

Said,W. Edward., Orientalism - Western Conceptions of the Orient, India: Penguin Random
House, 2001.Shulman, David., Tamil A Biography, London, England: The Belknap Press of
Harvard University press, 2016.Winslow, Miron (Edit.) Memoir of Mrs. Harriet L. Winslow,
New Delhi: Asian Educational Services, 2003


தமிழ் நூல்கள்

அண்ணாமலை, இ., தமிழில் புத்தகக் கலாசாரம் - க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள்,சென்னை: க்ரியா, 2021.

அரசு, வீ., தமிழ்ச் செந்நெறிப் பிரதிகளைச் சைவமரபு எதிர்கொண்ட கதை, சென்னை: நிய10செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், 2017.

அருமைநாயகம், எஸ்., வரலாற்றுச் சிந்தனைத் தடம், கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம், 2014.

ஆறுமுகநாவலர்., சைவ தூஷண பரிகாரம், யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை, 1852.

இரகுபரன், க., (ப.ஆ.) ஆறுமுகநாவலர் பிரபந்தத்திரட்டு, கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 1996.

இராசநாயகம், செ., யாழ்ப்பாணச் சரித்திரம் - ஆங்கிலேயர் காலம், கொழும்பு: விவேகானந்தா புத்தக நிலையம், 1934.

இராமமூர்த்தி, எல்., மொழியும் அதிகாரமும், தஞ்சாவூர்: அகரம், 2005.

ஈசுவரப்பிள்ளை, தா., பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமுதாய மாற்றங்களும் தமிழ் இலக்கியப் போக்குகளும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், 2006.

ஏலியா, கனெட்டி., அதிகாரத்தின் மூலக்கூறுகள் (மொ.பெ: ரவிக்குமார்) சென்னை: மணற்கேணி பதிப்பகம், 2016.

கணேசலிங்கம், ப., (தொ.ஆ.) இலங்கையில் இந்து சமயம் (கி.பி 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில்), கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம், 2017.

கதிரைவேற்பிள்ளை, நா., சுப்பிரமணிய பராக்கிரமம், கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 1960.

கப்ரால், அமில்கர்., விடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம் (மொ.பெ: எஸ். பாலச்சந்திரன்), சென்னை: பாரதி புத்தகாலயம், 2012.

கலையரசி, அ., தன்னிலைக் கட்டமைப்பும் தகர்ப்பும், மதுரை: கருத்துப் பட்டறை, 2013.

கனகரத்தினம், இரா.வை., நாவலர் ஆளுமையும் புலமைத்துவமும், கொழும்பு: ஐ. இரத்தினம் ஞாபகார்த்த வெளியீடு, 2007.

குலரத்தினம், க.சி., இந்து சமயத்தின் சீர்திருத்த இயக்கங்கள், கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம், 2010.

கோவிந்தராஜன், ந., மொழியாகிய தமிழ் - காலனியம் நிகழ்த்திய உரையாடல்கள், சென்னை: க்ரியா, 2021.

கோவிந்தராஜன், நா., நதானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்ஸி - அதிகாரமும் தமிழ்ப் புலமையும், சென்னை: க்ரியா, 2016.

கைலாசபதி, க., ஈழத்து இலக்கிய முன்னோடிகள், சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ், 2001.

சண்முகதாஸ், அ., கிறிஸ்தவத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, யாழ் பல்கலைக்கழகம்: கிறிஸ்தவ நாகரிகத்துறை, 1986.

சந்திரகாந்தன், ஏ.ஜே.வி.,(தொ.ஆ) தமிழ்ப் பண்பாட்டில் கிறிஸ்தவம், யாழ். பல்கலைக்கழகம்: கிறிஸ்தவ மன்றம், 1993.

சரவணன், ப., (ப.ஆ.) அருட்பா மருட்பாக் கண்டனத் திரட்டு, நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம், 2019.

சனாதனன், தா., அகிலன், பா., (தொ.ஆ.) இலங்கைச் சமூகத்தையும் பண்பாட்டையும் வாசித்தல்: தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள், மூன்றாவது தொகுதி (2000-2005), கொழும்பு: சமூகப் பண்பாட்டு: உயர் கற்கைகளுக்கான நிறுவனம், 2005.

சனாதனன், தா., நவீனத்துவமும் யாழ்ப்பாணத்தில் காண்பியப் பயில்வும் (1920-1990), கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம், 2018.

சிவசம்புப் புலவர்., வல்வைச் சிவன்கோயில் சபிண்டி நாடக சங்காரம், யாழ்ப்பாணம்: அச்சுவேலி யந்திரசாலை, 1900.

சிவத்தம்பி, கா., தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும், வல்வெட்டித்துறை: நடராஜ கோட்டம், 1989.

……………… யாழ்ப்பாணம்: சமூகம் - பண்பாடு - கருத்துநிலை, கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம், 2000.

……………… இலக்கியமும் கருத்துநிலையும், சென்னை: மக்கள் வெளியீடு, 2002.

சிவலிங்கராஜா, எஸ்., சரஸ்வதி சிவலிங்கராஜா., பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி, கொழும்பு சென்னை: குமரன் புத்தக இல்லம், 2008.

தியாங்கோ, கூகி வா., அடையாள மீட்பு - காலனிய ஓர்மை அகற்றல் (மொ.பெ: அ. மங்கை), புதுவை: வல்லினம், 2004.

நித்தியானந்தன், மு., கூலித்தமிழ், சென்னை: க்ரியா, 2014.

நீலகண்டன், கா., சுதர்சன், செ., (ப.ஆ) உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும் மானுடபாகமும், உடுப்பிட்டி: புலவரில்லம், 2014.

பூலோகசிங்கம், பொ., தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெரு முயற்சிகள், கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம், 2002.

மயில்வாகனம், நா., ஐரோப்பியர் பார்வையில் இலங்கை, யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 1974.

மனோகரன், துரை., இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி, யாழ்ப்பாணம் - கண்: கலைவாணி புத்தக நிலையம், 1997.

முத்துமோகன், ந., தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல் சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 2015.

மெம்மி, ஆல்பெர்., காலனிய ஆண்டைகளும் காலனிய அடிமைகளும் - இருபுறம் அழிக்கும் உறவுகள், (மொ.பெ:

நோயல் ஜோசப் இருதயராஜ்) புத்தாநத்தம்: அடையாளம், 2012.

வேலுப்பிள்ளை, க., யாழ்ப்பாண வைபவ கௌமுதி, வசாவிளான்: ஜயஸ்ரீ சாரதா பீடேந்திர சாலை, 1918.

வேலுப்பிள்ளை, சி,டி., அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திரம், வட்டுக்கோட்டை: யாழ்ப்பாணக் கல்லூரி, 1984.

வையாபுரி, மு., (தொ.ஆ.) காலனியகால மதப்பிரசாரத்தில் கிருத்துவர்கள் - இந்துக்கள், சென்னை: அலைகள் வெளியீட்டகம், 2011.

ஜயவர்த்தன, குமாரி., அநாமதேயங்களாக இருந்தோர்அறியப்பட்டவர்களானமை – இலங்கையில் காலனித்துவ முதலாளித்துவ வகுப்பின் தோற்றம் (மொ.பெ: க. சண்முகலிங்கம்) கொழும்பு-சென்னை: குமரன் புத்தக இல்லம், 2015.

ஜெபநேசன், எஸ்., இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்கமிஷனும், கொழும்பு- சென்னை: குமரன் புத்தக இல்லம், 2007.

…………… தமிழின் நவீனமயமாக்கலும் அமெரிக்க மிஷனும், கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம், 2007.

…………... இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன், கொழும்புசென்னை: குமரன் புத்தக இல்லம், 2009.

ஜெயசீல ஸ்டீபன், எஸ்., தமிழ் இலக்கியப் பயணம் (1543-1887) – ஐரோப்பியர் மொழிபெயர்ப்புகளின் வழியே (மொ.பெ: கி. இளங்கொவன்), சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2021.

ஸெய்த், எட்வர்ட்., அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல், (மொ.பெ: ரவிக்குமார்), புதுச்சேரி: மணற்கேணி, 2010.


பிரசுரங்கள்

சிறுபுத்தகம் - 1877., சைவர்ஆட்சேப சமாதானம் - 1878., நற்கொடை - சீதனத்தால் ஆகும் கொடுமைகள் - 1869., நற்சமயம் - 1842., விவாக சம்பந்தம் - 1844., யாழ்ப்பாணம்: கிறிஸ்தவ மிஷன் பிறஸ். புதுச்சைவமும் சூத்திரப் பிரசங்கமும் - 1842., விக்கிரகாராதனையும் சுரூப வணக்கமும் - 1906., யாழ்ப்பாணம்: கத்தோலிக்க மிஷன் பிறஸ்.


பத்திரிகைகள்

இந்து சாதனம்., 12.03.1901., 12.08.1901., 15.08.1901., 09.04.1902., 11.03.1903., 23.12.1903., 23.10.1905., 25.08.1906., 12.05.1909., 21.07.1909., 06.04.1910., 11.05.1910., 02.12.1911. யாழ்ப்பாணம்.


மலர்கள்

தேவகீயம் - பண்டிதை தேவகியம்மா நீலகண்டன் நினைவு மலர்., உடுப்பிட்டி: புலவரில்லம், 2004.    

நாவலர் நூற்றாண்டு மலர்., யாழ்ப்பாணம்: ஆறுமுகநாவலர் சபை, 1979.

நாவலர் மாநாட்டு விழா மலர்., கொழும்பு: ஆறுமுகநாவலர் சபை, 1969.

பனுவல்., கொழும்பு: சமூக பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான நிறுவனம், 2009.

மாற்றுவெளி - தமிழ் அச்சுப் பண்பாடுச் சிறப்பிதழ்., சென்னை: மாற்று வெளியீடு, 2014


அகராதிகள்

வின்சிலோ., தமிழ் - ஆங்கில அகராதி, சென்னை: ஏசியன் எடிடுகேஷனல் சேவிஸ், 1992.

சந்திரசேகர பண்டிதர்., மானிப்பாய் அகராதி, யாழ்ப்பாணம்: அமெரிக்க மிஷன் பிறஸ், 1842.

Tamil Lexicon - Vol. 2., Vol. 3., Vol. 5., Madras: University of Madras, 1982.   


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R