பதிப்பு விபரம் நாடகம் நான்கு. சி.மௌனகுரு, இ.முருகையன், இ.சிவானந்தன், நா.சுந்தரலிங்கம். கொழும்பு: நடிகர் ஒன்றியம் வெளியீடு, 1வது பதிப்பு, மே 1980. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம். மட்டுவில்) xxiv + 182 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 21*14 சமீ.
முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் ஈழத்துக் கவிதையுலகில் முக்கியமானதொரு நாடகம். 'நாடகம் நான்கு' என்னும் நூலில் இடம் பெற்றுள்ள நாடகங்களிலொன்று. இதனை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி.
இந்நாடகத்தின் முதல் மேடையேற்றம் 01-04-1969 அன்று கொழும்பு ஹவ்லொக் நகர் லும்பினி அரங்கில் , மெளனகுருவின் இயக்கத்தில் மேடையேறியது.
இந்நாடகத்தின் முக்கியமான கரு: மானுட வரலாற்றில், ஆதிச்சமுதாய அமைப்பில் பொதுவுடமை சமுதாய அமைப்பு முறை நிலவியது. ஆனால் காலப்போக்கில் அவ்விதம் நிலவிய அமைப்பு வர்க்கம், சாதி, இனபேதம் மற்றும் நிறபேதம் போன்ற பிரிவுகளாகப் பிளவுண்டுவிடுகின்றது. இவ்விதம் பிளவுண்டு கிடக்கும் மானுட சமுதாயத்தை மீண்டும் அந்தப்பொதுவுடமை சமுதாய அமைப்பு நோக்கி, உழைக்கும் மானுடர் வழி நடத்திச்செல்வர் என்பதை மையமாக வைத்துப்பின்னப்பட்ட நாடகமே 'சங்காரம்'.
இந்நாடகத்தின் முக்கியமான இன்னுமொரு அம்சமொன்று நாடகத்தின் முக்கிய பாத்திரங்களான சமுதாயம், சாதி அரக்கன், வர்க்க அரக்கன், இனபேத அரக்கன், நிறபேத அரக்கன் ஆகியவற்றைச் சமுதாயப்பிளவுகளைச் சுட்டிக்காட்டும் குறியீடுகளாகப் படைத்திருக்கின்றார் மெளனகுரு.
இந்த நாடகத்தின் முக்கிய குறைபாடாக நான் கருதுவது பாத்திரங்களில் பெரும்பாலானவை ஆண்களாகப் படைக்கப்பட்டிருப்பதுதான். வர்க்க அரக்கன், சாதி அரக்கன், இனபேத அரக்கன், நிறபேத அரக்கன், உழவன், மூட்டை சுமப்பவன், பணக்காரன் இவ்விதம் ஆண்பாலில் பாத்திரங்கள் வருவது அக்காலகட்டத்தைப் பொறுத்தவரையில் ஏற்கத்தக்கது. ஆனால் பெண்ணியக்கருத்துகள் விரிவடைந்துள்ள இக்காலகட்டத்தில் பொருந்தாதென்பதென் கருத்து. இப்பிரச்சினையை மிகவும் இலகுவாகத்தீர்க்கலாம். வர்க்க அரக்கர், சாதி அரக்கர், இனபேத அரக்கர், நிறபேத அரக்கர், உழவர், மூட்டை சுமப்பவர், பணக்காரர், தலைவர் என இருபாலாருக்கும் பொதுவான பெயரில் பாத்திரங்களை அழைப்பதன் மூலம் இக்குறைபாட்டினை மிகவும் இலகுவாகத்தீர்க்கலாம். எனவே இனிவரும் மேடையேற்றங்களில், பதிப்புகளில் இவ்விதமான மாற்றத்தைச்செய்வதன் மூலம் இப்பிரச்னை தீர்க்கப்படுமென்று எதிர்பார்ப்போம். இல்லாவிட்டால் மெளனகுருவின் ஆணாதிக்கச்சிந்தனையின் வெளிப்பாடிது என்று விமர்சனங்கள் எழக்கூடும்.
இலங்கைத்தமிழ்க் கவிதையுலகில் வெளியான முக்கியமான கவிதை நாடகங்களிலொன்று மெளனகுருவின் 'சங்காரம்' என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்துகளிருக்காது.
இது பற்றிய முகநூற் குறிப்பு பற்றி முனைவர் சி.மெளனகுரு அவர்கள் செய்தியொன்றினை அனுப்பியிருந்தார். அதனை ஒரு தகவலுக்காகப் பதிவு செய்வதும் முக்கியமென்பதால் அதனைக் கீழே தந்துள்ளேன்:
'தங்கள் முகநூலில் சங்காரம் பற்றியகுறிப்பு பார்த்தேன் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன அந்த நாடகம் எழுந்தமைக்கு அக்காலச் சூழல் காரணம். அப்போது எனக்கு 25 வயது இருக்கும் மார்க்சிசம் அறிமுகமான காலம் கூத்து மரபில் பழைய உள்ளடக்கங்களை வைத்து எழுதிய என்னை புதிது நோக்கி திருப்பி விட்டவர் கைலாசபதி இந்த நாடகம் மீண்டும் திருத்தி எழுதப்பட்டது. மேடையும் கண்டது அப்போது நான் இன்னும் சற்று அகன்று இருந்தேன் அதற்கான ஒரு பிரதியும் உண்டு. அதனை வாசித்தீர்களா அது பல தகவல்கள் கூறும் இப்போது எனக்கு வயது 82 திரும்பவும் சங்காரத்தை இன்றைய எனது பார்வையில் எழுதலாம் என யோசிக்கிறேன் 69 விட இன்று சிந்தனைகளும் உலக ஒழுங்குகளும் வெகுவாக மாறிவிட்ட நான் அல்லவா நான் அதனை எழுதிய காலம் பெண்ணிய சிந்தனைகள் என்ற வாசனை அடிக்காத காலம் - என்றும் அன்புடன் மௌனகுரு'
'நான் அதனை எழுதிய காலம் பெண்ணிய சிந்தனைகள் என்ற வாசனை அடிக்காத காலம்' என்று முனைவர் மெளனகுரு கூறியிருப்பது மிகவும் உண்மை. நாம் அனைவருமே இவ்விதம் சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப பரிணாமம் அடைபவர்கள்தாமே. மகாகவி பாரதியாரும் பெண் உரிமைக்காகத் தீவிரமாகக் குரல் கொடுத்தவர்தானே. அவரும் 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ' என்றுதானே பாடியிருக்கின்றார். இன்று அவர் இருந்திருந்தால் , மீண்டும் அக்கவிதையை எழுதியிருந்தால் நிச்சயமாக இயல்பாக எழும் ஆணாதிக்கச் சிந்தனையின் விளைவாக எழும் சொற்களைத் தவிர்த்திருப்பார்.
'சங்காரம்' நாடகத்தை உள்ளடக்கிய நாடகம் நான்கு நூலை வாசிப்பதற்கான இணைப்பு இத்தொகுப்பு சுந்தரலிங்கத்தின் 'அபசுரம்', முருகையனின் 'கடூழியம்', சிவானந்தனின் 'காலம் சிவக்கிறது' ஆகிய நாடகங்களையும் உள்ளடக்கியுள்ளது.
மௌனகுருவின் சங்காரம் வடமோடி நாடகம்
முதல் மேடையேற்றம்
காலம் - 1969-04-01
இடம் - கொழும்பு, ஹவ்லொக் நகர் லும்பின் அரங்கு
தயாரிப்பு - மட்டக்களப்பு நாடக சபா
நெறியாட்சி - சி. மௌனகுரு
நடிகர்: சமுதாயம் வி.வத்சலாதேவி
வர்க்க அரக்கன் எஸ்.பற்குணம்
சாதி அரக்கன் எஸ்.புத்திரசிகாமணி
இனபேத அரக்கன் க.இன்பம்
நிறபேத அரக்கன் சி.வடிவேல்
தொழிலாளர் தலைவன் சி.மௌனகுரு
தொழிலாளி என்.யே. அமிர்தநாயகம்
உழவன் செ.வசந்தராசன்
மூட்டை சுமப்பவன் சி.இராஜேந்திரன்
பணக்காரன் க.சிவராசா
எடுத்துரைஞர் எம்.மயில்வாகனம்
க.தர்மகுலசிங்கம்
சங்காரம்
குறிப்புகள் சில
இந்நாடகத்தில் வரும் எடுத்துரைஞர்கள், பிரதானமானவர்கள், நாடகத்தை இவர்களே அறிமுகஞ்செய்கிறார்கள்; நடத்துகிறார்கள்; முடித்து வைக்கிறார்கள். நமது மரபுவழி நாடகத்தில் வரும் கட்டியக்காரன் பாகத்தை இவர்கள் இங்கு பெரிய அளவில் மேற்கொள்கிறார்கள். நாடகம் தொடங்கி முடியுமட்டும் இவர்கள் மேடையிலேயே நிற்பர். எனவே மேடையில் வலது பக்க மூலை இவர்களுக்கெனத் தனியாக ஒதுக்கப்படவேண்டும்.
சமுதாயம் இரண்டு இறக்கைகளுடனும் வெள்ளையுடையுடனும் காட்சிதரவேண்டும்.
அரக்கர்கள் மரபு ரீதியாக அரக்கத் தோற்றத்துடன் (கொம்புகள், கடைவாய்ப்பற்கள், பரட்டைத்தலை) தோற்றவேண்டும். ஒரு வகையில் பட்டாக்கத்தியும், மறுகையில் முட்சவுக்கும் இவர்களின் ஆயுதங்களாகும். நான்கு அரக்கர்களையும் வித்தியாசமாகக் காட்டும் வகையில் ஒப்பனை அமையவேண்டும்.
தொழிலாளர்களின் இருவர் தம்மிடம் நீண்ட பெரிய சுத்தியல்கள் வைத்திருக்க வேண்டும். உழவன் அரிவாள் வைத்திருக்கலாம், மூட்டை சுமப்பவன் அபிநயித்தல் போதுமானது.
பணக்காரன் சரிகை வேட்டி, பட்டுச்சட்டை, சரிகைச் சால்வை போட்டு, காதிற் கடுக்கன் மின்ன, பண்ணையார் தோற்றத்தில் காட்சிதரவேண்டும்.
காட்சி - 1
மண்டபத்தில் விளக்குகள் அணையுமுன்னர் மேடையின் வலது பக்கப் படிக்கட்டினால் ஏறிவந்து எடுத்துரைஞர்தலைவர் திரைக்கு முன்னால் மேடையின் மத்தியில் நின்று சபையோருக்கு வணக்கம் சொல்கிறார்.
எடுத்துரைஞர் தலைவன் வசனம்
அமைதியாயிருங்கள். அனைவருக்கும் வணக்கம், நாங்கள் உங்களுக்கு ஒரு நாடகத்தை நடித்துக்காட்ட வந்திருக்கிறோம்: மனித வரலாறுதான் நாடகத்தின் கருப்பொருள். குறியீடுகளின் துணைகொண்டு மனித வளர்ச்சியினையும் முரண்பாடுகளையும் சித்தரிக்க எண்ணியுள்ளோம். ஆயத்தமாகுங்கள். இதோ! திரை விலகப்போகிறது. சூரியன் வருவன் ; துண்டுகள் சிதறும். பூமிதோன்றும். புத்துயிர் அரும்பும் மனிதன் வருவான். வாழ்க்கைக்காகப் போராடுவான். தடைகளைச் சங்காரம் செய்வாம். ஆம் நாடகத்தின் பெயரும் அதுதான் சங்காரம். அந்த மானிடனைச் சந்திப்போமா?
(எடுத்துரைஞர் தலைவன் வசனம் பேசத் தொடங்கும்போது மெல்ல மெல்ல மண்டப விளக்குகள் அணைகின்றன. இறுதி வசனம் பேசும்போது எடுத்துரைஞர் தலைவன் ஒளிப் பொட்டினுள் நிற்கிறான். மண்டபம் எங்கணும் இருள்.)
எடுத்துரைஞர் தலைவன்
(கவிதை நடையில் கூறுகிறான்)
மானிடம் வளர்ந்த வாற்றை
மக்களுக் குரைக்க வந்தோம்
மானிடன் வரலா றிங்கே
மாபெரும் வரலாறாகும்.
(திரை மெல்ல மெல்லத் திறக்கின்றது)
மேடையின் வலது பக்க மூலையில் மெல்லிய ஒளிப்பொட்டு பாய்ச்சப்படுகிறது. அங்கு மூன்று எடுத்துரைஞன் நிற்கிறார்கள். மேடையின் நடுவில் ஏழுபேர் ஆதிகால மனிதர் போல் உடுப்பணிந்து, வெற்று மேலுடன் ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி வலது முழங்கால் மீது முழங்கையை வைத்து இடது கையைத் தரையில் ஊன்றியவாறு நிலத்தை வெறித்துப் பார்த்த வண்ணம் வட்டவடிவமாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் நடுவில் அவர்களைப்போன்று தோற்றமுஐடய ஒருவன் சுற்றியிருப்பவர்களைப்போல அமர்ந்திருக்கிறான். இவர்கள் மேடையில் இருப்பது ஆரம்பத்தில் தெரியாத விதத்தில் மேடை இருளாக இருக்கிறது.
பின்வரும் பாடலின் முதலடியைப் பாடிய வண்ணம் எடுத்துரைஞர் மேடையின் வலது பக்க மூலையில் நின்ற எடுத்துரைஞர்களுடன் கலந்து கொள்கிறான். மீதிப் பாடல்களை மந்திர உச்சாடனம் போல நான்கு எடுத்துரைஞர்களும் கூறுகின்றனர்.
மானிடம் வளர்ந்த வாற்றை
மக்களுக் குரைக்க வந்தோம்
மானிடன் வரலா றிங்கே
மாபெரும் வரலாறாகும்.
அண்டத்தின் வெளிப்பரப்பில்
அலைந்த பல் அணுக் கூட்டங்கள்
ஒன்றாகத் திரண்டு ருண்டு
ஒனியுடை ஞாயிறாய்ச்சு
அண்டத்தின் வெளிப்பரப்பில்
ஆகாய வெளியில் நின்று
வெந்தழல் பரிதி தானும்
வேகமாய்ச் சுழலானான்
[பின் திரையில் சூரியன் அல்லது சிவந்த ஒளிப் பொட்டு விழுகிறது. அது சுழல்வது போன்று தோன்றுகிறது.]
ஞாயிறு ஒளியோன் வெய்யோன்
பகலவன் பரிதி பாஸ்கர்
சூரியன் ரவி அருணன்
சுடரவன், சோதீ என்ற
பல்வேறு பெயர்கள் பெற்ற
பகலவன் சுழலலானான்
அண்டத்தின் வெளிப் பரப்பில்
ஆகாய வெளியில் நின்று
பிண்டமாய் ஒளிப்பிழம்பாய்
சூரியன் சுழலலானான்.
(சூரியன் சுழலானான் என்ற வரிகள் மூன்று முறை பாடப்பட்டு மெல்லிதாகி மங்கிச் செல்ல எடுத்துரைஞர் தலைவன் குரல் அமைதியைக் கிழித்த வண்ணம் எழுகிறது)
எடுத்துரைஞர் தலைவன்
சுழன்று வந்த சூரியனின்
துண்டு பறந்ததுவே
(பின் திரையில் சூரியனிலிருந்து இன்னொரு சிவப்பு ஒளிப்பொட்டு பிரிந்து இன்னொரு இடத்துக்குச் செல்கின்றது)
துண்டு சுழற்சியிலே
தொடர்ந்து குளிர்ந்ததுவே
குளிர்ந்து குளிர்ந்து அது
குவலயமாய் ஆனதுவே
('குவலயமாய் ஆனதுவே' அழுத்தமாக மும்முறை கூறப்பட்டு மெல்லிதாகக் குரல்கள் மங்கிச் செல்ல அடுத்த வரிகள் வேகமாக எழல் வேண்டும். குவலயமாய் ஆனதுமே என்ற வரிக்கு சிவப்பு ஒளிப்பொட்டு மெல்லியதாக மாறி மஞ்சள் நிறமடைகிறது.)
பூமிகுளிர அதில்
புல்பூண்டெழும்பினவே
(பின் திரையில் சூரியனையும் பூமியையும் குறித்த ஒளிப்பொட்டு மறைய, பின் திரைமுழுவதும் பச்சைநிறம் மெல்லியதாகப் பரவும். அதே வேளையில்- இதுவரையும் அசையாது மேடைமீதிருந்தவர்கள்மீது ஒளிப்பொட்டுப் பிரகாசமாக விழுகிறது. அவர்கள் அனைவரும் இருந்தபடியே தம் கைகளை மேலேயுயர்த்தி விரல்களை நெளித்து நெளித்து புல்பூண்டு வளர்வது போல அபிநயிக்கின்றார்கள்)
புல்பூண்டெழும்பியபின்
புத்துயிர்கள் தோன்றினவே
(மனிதர்கூட்டம் இருந்தபடியே மூச்சைப் பலமாக விட்டு விட்டு விட்டு இழுத்து அதன் மூலம் உடம்பை மேலும் கீழுமாக அசைத்து உயிர் அசைவைப் புலப்படுத்துகின்றனர்.)
உயிரினத்தின் இறுதியிலே
உம்முன்னோன் தோன்றினான்.
(பலத்த ஓசையுடன் மனிதக்கூட்டத்தின் மத்தியில் இருந்தவன் ஆதிமனிதனைப் போல, கூனிய முதுகுடன் மெல்ல மெல்ல எழுகிறான். எடுத்துரைஞர்கள் பாடும் அடுத்த பாடல்களுக்குத்தக எழுந்திருந்த மனிதன் முதலில் மெல்ல மெல்ல அசைவுகளைச் செய்யத் தொடங்க மனிதக்கூட்டமும் மெல்ல மெல்ல எழுந்து கூனிய முகத்துடன் ஆடத்தொடங்குகின்றனர். ஆட்டத்திற்குரிய தாளம் தகிட தகிட திம்: தகிட தகிட திம்.
ஆட்டத்தின நடுவே மெல்ல மெல்லக் கூனலை நிமிர்த்தி மனிதர் போல ஆடுகின்றனர். பாடல் முடிந்த பின்னரும் ஒளிப்பொட்டு அணையும்வரை ஆடல் தொடர்கிறது.)
பாடல்
அந்த நாளிலே இந்த மனிதர்கள்
அனைவரும் சமமுடன் வாழ்ந்தனரே
அப்பொருள் எனது இப்பொருள் உனது
சண்டைகள் ஏதும் தோன்றவில்லை
பெரியவன் சிறியவன் வறியவன் உள்ளவன்
உரியவன் இல்லான் பேதம் இல்லை
இது புராதன காலம்-
ஆதியில் மனிதன் பொதுமையாய் வாழ்ந்த
புராதன காலம்- ஆம்
புராதன காலம்
(மனிதக் கூட்டத்தைச் சுட்டி நின்ற ஒளிப்பொட்டு அகலுகின்றது. இப்போது மேடைமீது எடுத்துரைஞர்கள் மாத்திரம் வெளிச்சத்துள் நிற்கிறார்கள். எடுத்துரைஞருள் ஒருவன் தொடர்ந்து பாடுகின்றான். மனிதக்கூட்டம் நின்ற இடத்தில் இப்போது ஒர் உருவம் நிற்கிறது. தூய வெண்மையுடன், இரண்டு இறக்கைகளுடனும் பார்த்தவுடன் மனதில் மதிப்பினைத் தோற்றுவிக்கும் தோற்றத்துடனும் நிற்கும் அவ்வுருவமே ஆதிமனித சமுதாயம்)
எடுத்துரைஞன்
இப்பொருள் என்னது அப்பொருள் உன்னது
என்றவோர் பேதம் அற்று
பொது இந்த உலகம் உலகத்துப் பொருள் யாவும்
யாவர்க்கும் உரிமை என்றே
வர்க்க பேதங்கள் அதிலே முளைத்திட்ட
வர்ண, இன மத பேதங்கள்
இவை யாவும் இல்லாது எம்முடைய முன்னோர்கள்
இருந்த ஓர் காலம் உண்டு.
(எல்லா எடுத்துரைஞர்களும் ஓரடி முன்னால் வந்து சபையைப் பார்த்து, தலைவாய்த்து ஒரே குரலில் கூறுகிறார்கள்)
அக்காலம் வாழ்ந்திட்ட சமுதாயம் வருகிறது
அமைதியாய் இருந்து பாரீர்!
(கடைசி இரண்டடிகளையும் இரண்டு தடவைகள் எல்லோரும் சேர்ந்து கூறிய பின்னர் எடுத்துரைஞர் தலைவன் அந்த அடிகளைப் பாடியவண்ணம் சமுதாயத்தினருகே சென்று அதை வரவேற்று அழைத்துவந்து மேடையின் நடுவிலே விடுகின்றான்.
எடுத்துரைஞர்கள் அனைவரும் இப்போது தமது பழைய இடத்துக்குச் சென்றுவிடுகின்றனர். சமுதாயத்தின் மீது மட்டுமே ஒளி விழுகின்றது)
சமுதாயப் பாடல்
மனித சமுதாயம் நானேதான்-சபைக்கு வந்தேன்
மனித சமுதாயம் நானேதான்
மனித சமுதாயம் நானே மக்கள் எல்லாம் இங்கு சமமே
புனிதன் நான் எந்தனிடையே போட்டி பூசல் ஏதும் இல்லை
விருத்தம்
என்னுளே வாழும் மாந்தர்கள் யாரும்
இரத்த உறவினர் ஆவர்
இவர்களுக்குள்ளே ஏற்றமோ- இறக்கமோ
எள்ளளவேனும் இங்கில்லை.
பாடல்
சாதிபோதம் இங்கு கிடையாதே - தாழ்ந்தோர் உயர்ந்தோர்
சண்டைகூட என்னிடம் கிடையாதே
நீதியுண்டு தேர்மையுண்டு நேசமாயிங்க மக்களுண்டு
ஆதிச்சமுதாயம் நானே ஆஹா ஹா! இன்பவாழ்வு.
விருத்தம்
எல்லோரும் சேர்ந்தே உழைக்கிறார் உழைப்பினில்
ஏற்படும் ஊதியம் முழுதும்
எல்லோரும் சேர்ந்தே எடுக்கிறார் இங்கே
எவருக்கும் தனி உடைமை இல்லை.
பாடல்
வர்க்க பேதம் இங்கு கிடையாதே- மனிதரையே வாட்டும்
வர்ண பேதம் கூடக் கிடையாதே
சொர்க்கமான வாழ்க்கை ஈதே சோம்பலற்ற வாழ்வு மீதே
இப்படியாய் வாழும் நானே இவ்வுலகின் ஜ“வஜோதி.
விருத்தம்
உயர்ந்தவர் இல்லை தாழ்ந்தவர் இல்லை
உழைக்கின்றார் அனைவரும் சமமாய்
உன்னதமான இச்சமுதாயம்
உலவிற்கோர் புதுமையே புதுமை!
பாடல்
வானத்தில் ஏறிவலம் வருவேன்-சுதந்திரமாய் இவ்
வையகம் எல்லாம் சுற்றிப் பறந்திடுவேன்.
நானே தனியாள் எனக்கிங் காரும் எஜமானகளில்லை
வானே என்வீடு இந்த வையகம் என் முற்றம், இன்பம்.
மனித சமுதாயம் நானே தான்
(சமுதாயம் ஆடிக்கொண்டே செல்கிறது)
காட்சி - 2
(எடுத்துரைஞர்கள் மேடையின் மூலையில் ஒளிப்பொட்டில் நிற்கிறார்கள். பின்திரையின் பின்னணியில் நீல வெளிச்சம் சமுதாயம் நிழலுருவமாக மேடையின் நடுவே நிற்கிறது. சமுதாயத்தின் பின்னால் அரக்கர்கள் 4 பேரும் பணக்காரன் ஒருவனும், மக்கள் 4 பேரும் சபையில் இருப்பவர்களுக்குத் தெரியாத விதத்தில் மறைந்தபடி நிற்கிறார்கள். கவிஞனின் பாடலுக்குத்தக சமுதாயத்திலிருந்து அரக்கர்களும் பணக்காரனும் ஒருபக்கமாகவும், மக்கள் ஒருபக்கமாகவும் பிரிந்து மெல்லிய அசைவுகளுடன் ஆடுகின்றனர். இடையே ஒளிப்பொட்டுச் சுழன்று சுழன்று வந்து இடையிடையே உருவங்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியதாக பிரகாசித்துச் செல்கிறது.)
எடுத்துரைஞன்
வேட்டையாடி வேட்டையாடிச் சமூகம் வாழ்ந்தது - அன்று
வேறு எண்ணம் ஏதும் இன்றிச் சமூகம் வாழ்ந்தது
கொண்டுவந்த பொருள்கள் யாவும் பொதுமையானது-
அவற்றைக் கூடியிருந்து உண்டு வாழ்ந்து சமூகம் வாழ்ந்தது
கருவியாவும் பொதுமையாக அன்றிருந்தது- எனவே
கவலையற்று பயங்களற்றுச் சமூகம் வாழ்ந்தது
வர்க்க பேதம் ஏதும் அற்றுச் சமூகம் வாழ்ந்தது - மற்றும்
வருணபேதம் ஏதும் இன்றிச் சமூகம் வாழ்ந்தது.
குரல் மாறுகின்றது
எடுத்துரைஞர் அனைவரும்
ஞாலம் சுழன்றது ஞாலம் சுழன்றது
நாட்கள் பல சென்றன
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றங்கள் உண்டாயின.
எடுத்துரைஞன்
எடுத்துரைஞன்
உற்பத்தி செய்கின்ற கருவிகள் தொகையாக
உருவாக லான தாங்கே
உழைக்கின்ற சக்தியால் பொருள்களும் மீந்துமே
உபரியாய் ஆனதங்கே
மற்றவர் கூட்டத்தை இக் கூட்டம் தாக்கியதால்
மனிதர் பலர் அடிமையானார்
அடிமைகள் உழைப்பிலே பொருள் பண்டபம் பெருகின
ஆள்பவர்கள் அதிகரித்தார்.
எடுத்துரைஞர் அனைவரும்
ஞாலம் சுழன்றது ஞாலம் சுழன்றது
நாட்கள் பல சென்றன
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றங்கள் உண்டாயின.
எடுத்துரைஞன்
(முன்னுக்கு வந்து ஆவேசத்துடன் கூறுகிறான்)
ஒன்றாக வாழ்ந்திட்ட உரிமைப் பிணைப்பாங்கே
ஓ கொடுமை சிதறுகிறதே
வர்க்கப் பிரிவினைகள் வரலாற்றில் முதலாக சமூகத்தில்
தோன்றலாச்சே
உழைக்கின்ற பலபேர்கள் உறிஞ்சுகிற சில பேர்கள்
என வர்க்கப் பிரிவுமாச்சு
உறிஞ்சுகிற சில பேர்கள் பல பேதம் உண்டாக்கி
தொடர்ந்துமே உறிஞ்சலானார்.
எடுத்துரைஞர் எல்லோரும்
ஞாலம் சுழன்றது ஞானம் சுழன்றது
நாட்கள் பல சென்றன
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றங்கள் உண்டாயின.
(ஆட்டம் தொடர்கிறது. சிறிது நேரத்தால் சமுதாயத்திலிருந்து பிரிந்தவர்களின் உழைக்கும் வர்க்கத்தினர் தமது ஆட்டத்தை மெதுவாகக் குறைத்து அசையாத நிலைப் பாவனையில் நிற்க, பணக்காரனும், அரக்கர்களும் தமக்குள் ஏதோ ஒரு விடயத்தைக் கதைக்கும் பாவனையுடன் தொடர்ந்து மெல்லிய அசைவுடன் ஆடுகின்றனர்.
பணக்காரன் சமுதாயத்தைச் சுட்டிக்காட்டிக் கட்டளையிடுகிறான். அரக்கர்கள் நால்வரும் சமுதாயத்தை உற்றுப் பார்த்த வண்ணம் அதைப் பிடிக்கப் போகும் பாவனையில் அசையா நிலையில் நிற்கின்றனர். அனைவரும் அசையாநிலையில் நிற்க வெளிச்சம் அணைகிறது.)
காட்சி - 3
(மேடையின் வலதுபுற மூலையில் நின்றபடி எடுத்துரைஞர்கள் பாடுகிறார்கள்)
ஆதியிற் சமுதாயம் வர்க்கபேதம் என்ற
அநியாயத்துட்படாது
நீதியாய் அனைவரும் சமமென்ற நோக்கிலே
நேர்மையாய் வாழும்போது
ஆதியாம் சமுதாய எண்ணங்கள் தம்மையே
அகிலத்தை விட்டு ஓட்டி
பாதியிற் சமுதாயம் தன்னையே தேடியே
பறக்கப் பிடித்திழுத்து
(அடுத்து வரும் ஒவ்வொரு 2 வரிகளையும் ஒவ்வொரு அரக்கரும் சொல்லிய வண்ணம் மேடை நடுவே வருகிறார்கள்)
வர்க்க அரக்கன்
வர்க்க நிற சாதி, இன பேதமேனும் விலங்கினை
வசையாக மாட்டவென்று
சாதி அரக்கன்
ஒதவே எம்முடைய பணம் படைத் தெஜமானார்
உத்தரவு தலைமேற்கொண்டு
இன அரக்கன்
சுதந்திரமும் பெற்றதாய்ச் சொல்லித் திரிகின்ற
சமுதாயம் தன்னைத்தேடி
நிற அரக்கன்;
வர்க்கமொரு சாதி நிறபேத அரக்கர்தாம்
வருகின்றார் வருகின்றாரே
(எடுத்துரைஞன் முன்னால் வந்து ஒவ்வொரு அரக்கரையும் தனித்தனியாகச் சபையிலுள்ளோருக்குச் சுட்டிக்காட்டிப் பாடுகிறான்)
எடுத்துரைஞன்:
வர்க்கமொடு சாதி, இன, நிற பேத அரக்கர் தாம் வருகின்றார் வருகின்றாரே.
(எடுத்துரைஞர்கள் தாளம் கூற அதற்குத்தக அரக்கர்களின் ஆட்டம்)
எடுத்துரைஞர்கள் தாளம்
தந்தத் தகிர்தத் தகிர்தத் தாம்
திந்தத் திகிர்தத் திகிர்தத் தெய்வக
தந்தத் தகிர்தக் தகிர்தத்தாம்
திந்தத் திகிர்தத் திகிர்தத்தெய்
வர்க்க அரக்கன் பாட்டு
ஆதிமனித சமுதாயம் கையில்
அடிமை விலங்கு பூட்டவே
வர்க்க பேத அரக்கர் நாங்கள்
வருகின்றோமே உலகுக்கு
சாதி அரக்கன்
பேதம் இல்லை எமக்குள் என்று
பிதற்றித் திரியும் சமுகத்தை
நாசம் ஆக்க விலங்கு கொண்டு
நாடி ஓடி வருகின்றோம்.
இனபேத அரக்கன்
எம்மை ஆட்டும் எஜமானர்களின்
இதயம் குளிர வைக்கும்
நம்மை கொடுக்கும் சமுதாயத்தினை
நாசம் செய்ய வருகின்றோம்.
நிறபேத அரக்கன்
தேடிப்பிடித்து அதனின் காலில்
சிறந்த விலங்கு பூட்டுவோம்
ஓடிவாரும் நண்பர்கள் இவ்
உலகம் இனிமேல் நம்கையில்
(நான்கு அரக்கர்களும் சமுதாயத்தைத் தேடும் பாவனையில் மேடையை ஒரு தடவை சுற்றி வருகிறார்கள். நாற்புறமும் தேடிப் பார்க்கிறார்கள் என்பதற்கு அறிகுறியாகத் தலையாட்டுகிறார்கள்)
வர்க்க அரக்கன் பாட்டு
தேடி வருவோம் வாருங்கள் - சமுதாயத்தைத்
தேடி வருவோம் வாருங்கள்
தேடித் தேடியதனைத் தேடிப்பிடித்திழுத்து
நாடி விலங்குபூட்டி நம்பக்கம் சேர்போமே
சாதி அரக்கன்
வர்க்க அரக்கனே கேள்-சமுதாயம்
வளமாக வாழுதப்பா
மோதியதையுடைத்து முழுச்சாதி பேதமூட்டி
பேதித் துயர்ந்தோர் தாழ்ந்தோர் பேத முண்டாக்கிடுவோம்.
இன அரக்கன்
அடிமை விலங்குபூட்டுவோம் சமுதாயத்தில்
ஆண்டான் அடிமை நாட்டுவோம்
இனபேதச் சமம் இன்மை எங்குமே தூவுவோம்
என்னவரும் நண்பர்கள் எங்கே சமுதாயம்?
நிறபேத அரக்கன்
வெள்ளை கறுப்பன் என்ற விலங்கினைச்
சமுதாயம் கையிலிடுவோம்
கொள்ளையடிப்போம், குழப்பம் விளைப்போம்
பிள்ளைச் சமூகத்தைப் பிடித்தே அடிமைகொள்வோம்.
(ஆடிக்கொண்டே தேடிய பாவனையுடன் அரக்கர்கள் மேடையை விட்டுச் செல்கின்றார்கள்)
காட்சி - 4
(மேடையின் நடுவில் சமுதாயம் பாடிக்கொண்டு சுதந்திரமாய் ஆடுகின்றது.)
சமுதாயப் பாட்டு
வானத்தில் ஏறி வல வருவேன், சுதுந்திரமாய்
வையகம் எல்லாம் சுற்றிப் பறந்திடுவேன்.
நானே தனியாள் எனக்கு யாரும் எஜமானர்களில்லை
வானே என் வீடு வையகம் என் முற்றம் இன்பம்.
மனித சமுதாயம் நானேதான்
(மேடையில் வலது மூலையில் ஒளிப்பொட்டியில் எடுத்துரைஞர்கள் நிற்கிறார்கள். தூரத்திலிருந்து வருவது போல நான்கு அரக்கர்களும் வருகிறார்கள். ஆடிப்பாடி மகிழும் சமுதாயத்தினை அரக்கர்கள் காண்கிறார்கள். அதனருகில் வந்து அதனைச் சுற்றி வளைத்து நடந்து மேலும் கீழும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். சமுதாயத்தை இனம் கண்டு கொண்ட தெளிவு அவர்கள் முகத்திற் பிறக்கிறது. சாதி அரக்கன் ஏனையோரைப் பார்த்துப் கூறுகிறான்)
சாதி அரக்கன்
என்னரும் வர்க்க பேதம் எனப்பெயர் கொண்டு வாழும்
நண்பனே சாற்றக் கேளாய் நாம் இதோ தேடி வந்த
பண்ணரும் சமுதாயம்தான் பார் அதோ ஓடி ஆடி
மண்ணிலே வாழுதேடா வா அதைப் பிடித்துச் செல்வோம்
(வர்க்க அரக்கன் முன்னான் வந்து இறுமாப்புடன் சமுதாயத்தை மேலும் கீழும் அலட்சியமாகப் பார்க்கிறான். சமுதாயம் பயந்தபடி அரக்கர்களை நோக்குகின்றது.)
வர்க்க அரக்கன்
வர்க்க பேதங்கள் மற்றும் வர்ண பேதங்கள் அற்றுச்
சொர்க்கமாய் மக்கள் வாழ்ந்து சுகம் காண வைத்திருக்கும்
ஆதிச் சமுதாயம் என்ற அவ்வுரு நீதானா சொல்
தேடி நாம் இங்க வந்தோம் நாடியே விலங்குமாட்ட
சமுதாயப் பாட்டு
என்ன குற்றம் நான் செய்தேன்
எனக்கு விலங்கு மாட்ட - ஐயா.
வண்ண உலகில் இங்க பேதமின்றி
வாழ்வதும் தீதோ....
வர்க்க அரக்கன்.
வர்க்கப் பிரிவினைகள் இன்னும்
வளரவே இலையே - அடா
வர்க்கம் தனை வளர்த்து-
வர்க்கம் தனை வளர்த்து இரு
வர்க்கமாகப் பிரித்திட
வந்தோம்--நாங்கள்
வந்தோம்
சமுதாயப் பாட்டு
வர்க்கப் பிரிவினைகள் வளர்ந்தாலே
தீமைகள் சேரும் - இந்தச்
சொர்க்கத்தைக் கெடுக்காதீர்
வர்க்கத்தை ஆக்காதீர் ஐயா
சாதி அரக்கன்
சாதிச் சண்டை உன்னிடத்தில்
சற்றேனும் இல்லையே போபோ!-அடா
மோதியுனையுடைத்துச்
சாதிச்சண்டை பரப்ப
வந்தோம் - நாங்கள்
வந்தோம்.
சமுதாயப் பாட்டு
இனபேதம் சிறிதேனும்
இல்லாமல் வாழ்வதிங்க - தீதோ
ஏனழித்திட வந்தீர் இது பிழை
ஏகுவீர்கள் ஐயா
நிறபேத அரக்கன்
நிறபேதம் இல்லாமல்
நீயிங்கிருப்பது பிழையே-அடா
நிறபேதம் உண்டாக்கி
நிறபேதம் உண்டாக்கி
உன் அடிமை நான்
கொள்வாம் - விலங்கிடுவோம்.
வர்க்க பேத அரக்கன்
என்னரும் நண்பர்மார்களே இனி
என்ன பேச்சடா இதனுடன்
இன்னமும் கதை தேவையோ நமக்கு
இட்ட கட்டளை உண்டல்லோ
நம்மை ஆக்கியே விட்டவர் மனம்
நாளும் மகிழ்ந்திட விலங்கினை
நண்பணே எடு! நான் பிடித்ததை
நாழிகை தனிற் தருகிறேன்.
(எடுத்துரைஞர்கள் தாளக் கட்டுக் கூற அதற்குத் தகசமுதாயம் அங்குமிங்கும்ம் பாய்ந்து ஓடுகின்றது. அரக்கர்கள் அதனைத் துரத்துகிறார்கள். வெளிச்சம் மங்கிப் பிரகாசிக்கிறது).
எடுத்துரைஞர்கள்
தாகிட தரிகிட தத்திமி தரிகிட
தாகிட தரிகிட தத்திமி தரிகிட
தாகிட தரிகிட தத்திமி தரிகிட
தாகிட தரிகிட தத்திமி தரிகிட
எடுத்துரைஞன்
அடிமையாக்கிடச் சமுதாயத்தினை
அரக்கர்கள் துரத்தினர் துரத்தினரே
ஐயோ என்று அலறியபடியே
அருமைச் சமுதாயம் ஓடியதே
விட்டோமா பார் சமுதாயத்திலே
விதைப்போம் பிடித்தே பிரிவுகளை
கட்டுவோம் என்று கையில் விலங்குடன்
கனவேகமாகத் துரத்தினரே.
எடுத்துரைஞர்கள்
ஞாலம் சுழன்றது ஞாலம் சுழன்றது
நாட்களும் ஓடிச் சென்றனவே
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றம் பல உண்டாயினவே
தாகிட தரிகிட தத்திமி தரிகிட
தாகிட தரிகிட தத்திமி தரிகிட
எடுத்துரைஞன்
சமூக வளர்ச்சியில் சமுதாயத்தின்
தனித்துவம் பேண முடியவில்லை
ஓடிய சமூகம் இளைத்தது; நின்றது
உறுதி குலைந்து வீழ்ந்ததுவே
அரக்கர் பிடித்தனர் சமுதாயத்தினை
அடடா விலங்கினை மாட்டினரே
அடடா விலங்கினை மாட்டினரே
(வீழ்ந்து கிடந்த சமுதாயத்திற்கு விலங்கிட்டு இழுத்தபடி மேசையின் முன்பக்கமாக அரக்கர் நால்வரும் சமுதாயத்தினைக் கொண்டு வருகின்றனர்.)
சமுதாயம் பாட்டு (புலம்பல்)
என்ன செய்வேன் ஏது செய்வேன்
என் தலை விதி இதுவோ?
சாதி பேத வர்க்க அரக்கர்
தந்திரமாய் எனைப் பிடித்து
மோதி வீழ்த்தி அடிமையாக்கி
மூழ்கடித்து விட்டனரே.
பேதம் ஏதும் இன்றி வாழ்ந்தேன்
பேதம் இன்று பிளைத்ததையோ
உழைத்து வாழும் மக்காள் உங்கள்
உருக்குப் போன்ற கரந்தான் எங்கே?
அடிமைச் சின்னம் விலங்கறுக்க
அருமை மக்காள் எழுவீர் இன்றே.
(சமுதாயத்தை இழுத்துக்கொண்டு அரக்கர்கள் செல்கிறார்கள் மேடை இரண்டாக இருக்கிறது.)
எடுத்துரைஞர்கள்
சோகக்குரலுடன்-
வர்க்க அரக்கர்கள் சமுதாயத்தின்
காலில் விலங்கினை மாட்டினரே!
சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள்
சரமாரியாகப் பெருகியதே
அடிமையானதே சமுதாயம்
ஐயோ! கொடுமை நிகழ்ந்ததுவே
என்று மாறுமோ? இந்த நிலை
என்று விடுதலை ஈதாகுமோ.
ஞாலம் சுழன்றது ஞாலம் சுழன்றது
நாட்களும் ஓடிச் சென்றனவே
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றங்கள் பல உண்டாயினவே.
(பாடியபடியே ஒருவர் பின் ஒருவராக மேடைக்குப் பின் புறம் சென்று மறைகிறார்கள் திரை மூடப்படுதல்)
இடைவேளை
காட்சி - 5
(திரை திறக்கப்படும்போது மேடை இரண்டாக இருக்கிறது சிவப்பு வெளி மேடையில் இருக்கிறது. வலது பக்க மூலையில் உள்ள ஒளிப்பொட்டில் எடுத்துரைஞர்கள் நிற்கிறார்கள். மேடை மீது மூலைக்கு ஒருவராக நான்கு தொழிலாளர்கள் நிற்கிறார்கள். சுத்தியல் எடுத்து இரும்பை ஓங்கி அடிக்கும் பாவனையில் இரண்டு தொழிலாளர்களும் ஏரைக் கொண்டு நிலத்தை உழும் பாவனையில் ஏர் பிடிக்கும் ஒரு தொழிலாளியும், மூட்டை சுமந்து வேதனைப்படும் பாவனையில் மூட்டை சுமக்கும் ஒரு தொழிலாளியும் அசையா நிலையில் தத்தம் பாவனைகளில் நிற்கின்றனர். பார்வையாளர்களுக்குத் தொழிலாளர்கள் நிழல் உருவங்களாகவே தென்படுகின்றனர். திரை மெல்ல மெல்லத் திறக்க எடுத்துரைஞர் பாடுகின்றனர்)
எடுத்துரைஞர்கள் அனைவரும்
ஞாலம் சுழன்றது ஞாலம் சுழன்றது
நாட்களும் ஓடிச் சென்றனவே
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றங்கள் பல உண்டாயினவே
(எடுத்துரைஞர் தலைவன் முன் வந்து பாடுகிறான்)
எடுத்துரைஞன் தலைவன்
காலம் காலம் சென்றது சமூகம்
கண்ர் வடித்து நிற்னதுவே
அடிமைப்பட்டது சமுதாயம், அதன்
விலங்கினை அறுப்பவர் ஆருமிலை
எடுத்துரைஞன் அனைவரும்
ஞாலம் சுழன்றது ஞாலம் சுழன்றது
நாட்களும் ஓடிச சென்றனவே
காலம் சுழன்றது காலம் சுழன்றது
மாற்றங்கள் பல உண்டாயினவே.
எடுத்துரைஞன் தலைவன்
உழைப்பினை உறிஞ்சிக்கொளுத்தவர் பலவே
உண்மையை மறைத்தனர் மக்களிடம்
உழைக்கும் மக்கள் உலகம் புரியாது
உழைத்து உழைத்து மாய்ந்தனரே.
எடுத்துரைஞன் அனைவரும்
உழைப்போர் அனைவரும் ஒன்றாய் நிற்கும்
ஒருகாலம் உருவானதுவே
ஒருவரை ஒருவன் கண்டே கொண்ட
ஒருகாலம் உருவானதே
அது இக்காலம்-ஆம்
அது இக்காலம்.
(எடுத்துரைஞர்களின் குரல் உச்ச ஸ்தாயிக்குச் சென்று படாரென்று நின்றுவிட, எடுத்துரைஞர் தலைவன் மிகச்சோகத்துடன் காலம் காலம் சென்றது சமூகம் கண்ர் வடித்து நின்றதுவே என்று வசனமாக அழுத்தி உச்சரித்து முடிய சமுதாயத்தின் குரல் பின்னணியில் மெதுவாக ஒலிக்கின்றது.)
சமுதாயம்
பேதம் ஏதும் இன்றி வாழ்ந்தேன்
பேதம் இன்று பிளைத்ததையோ
உழைத்து வாழும் மக்காள் உங்கள்
உருக்குப் போன்ற கரம்தான் எங்கே
அடிமைச் சின்னம் விலங்கொடிக்க
அருமை மக்காள் எழுவீர் இன்றே.
(சமுதாயத்தின் குரல் தொடங்கியதும் அசையா நிலைப் பாவனையில் நின்ற தொழிலாளர்கள் தாளத்திற்கேற்ப நின்ற இடத்திலேயே அசைவோடு தத்தம் வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். அவர்களுள் சுத்தியல் பிடித்து வேலை செய்த ஒருவன் மாத்திரம் மற்றவர்களை விடக் கூடுதலாகச் சமுதாயத்தின் குரலினால் தாக்கப்படுகிறான். ஏனையவர் தம்பாட்டில் வேலை செய்ய இவன் பாவனையில் மாத்திரம் சமுதாயத்தின் குரலைக் கவனிக்கும் ஆர்வமும் பரபரப்பும் காணப்படுகின்றது. தலைவனின் பரபரப்புடன் தொழிலாளர்கள் மீது மெலிலியதாகப் பாய்ச்சப்படுகிறது.
"உழைத்து வாழும் மக்காள் உங்கள்
உருக்குப்போன்ற கரம்தான் எங்கே"
என்ற குரலுக்கு ஒரு தரம் திருப்பி நோக்கிவிட்டு தம்கைகளையும் பார்த்துவிட்டு விரக்தியுடனும், அக்கறை இன்றியும் தலைவனைத் தவிர ஏனைய தொழிலாளிகள் வேலையைத் தொடர்ந்து செய்கின்றனர்.
சமுதாயத்தின் குரல் தொடர்ந்து ஒலிக்கின்றது. அதன் குரலைக் கவனித்த தொழிலாளி-இடையில் சமுதாயத்தின் குரலைக் கிழித்துக்கொண்டு தொழிலாளர்களை நோக்கிப் பாடுகிறான்.
தலைவன் விருத்தம்
சாதியுடன் வர்க்க மத நிறபேத அரக்கர்தாம்
தாவியே ஓடிவந்து
சமுதாயம் கைகாலில் விலங்குதனை மாட்டியே
தான் கொண்டு செல்கின்றாரே
ஆவியே துடித்ததோ சமுதாயம் கூறுகிற
அவலமாம் குரல் நும் காதில்
மோதவோ இல்லையா? மக்களே விழியுங்கள்
முறிப்போமே அடிமை விலங்கை
(அவன் குரலைக் கவனியாதோர் போல் அவர்கள் வேலை செய்கின்றனர். மேடையைச் சுற்றித் தாளத்திற்கு எற்ப ஆடிவந்து ஒவ்வொரு தொழிலாளியின் அருகிலும் சென்று அவனைத் தொட்டுப் பாடுகிறான் தலைவன்)
தலைவன்
உழவனைப் பார்த்து
ஏரைக் கொண்டு நிலத்தை உழுதிடும்
என்னரும் தோழனே கேள்
எம்முடை சமூக ஏக்கக் குரல்தான்
இன்னமும் விழவில்லையா?
கொல்லனைப் பார்த்து
இரும்பை உருக்கிக் காய்ச்சிப் புதுப்பொருள்
ஏற்றிடும் தொழிலாளி
ஏனோ உந்தன் கரங்கள் இன்னும்
இப்படி இருக்கிறதே
மூட்டை சுமப்பவனைப் பார்த்து
மூட்டை சுமந்து முதுகை உடைத்திடும்
முதுபெரும் தோழனே கேள்
வாட்டம் தீர்க்க வல்லமை கொள்வாய்
வாடா நீ வெளியே
(தலைவன் பேச்சைக் கவனியாத பாவனையில் அனைவரும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர். தலைவன் பல பக்கங்களிலும் திரும்பிப் பார்த்துவிட்டு ஆவேசத்துடன் வேகமாக ஆடி அனைவருக்கும் முன்னால் வந்து குரலில் பாடுகிறான்)
அனைவரையும் பார்த்து
மக்கள் உலகம் மாழுதடா பார்
வர்க்க அரக்கரினால்
மாய்ப்போல் வர்க்கப் பேயை மக்கான்
எழுவீர் இன்றெழுவீர்
(தொழிலாளர் உற்சாகத்துடன் திரும்புகிறார்கள். அனைவர் முகத்திலும் புதிய ஆவேசமும், ஒளியும் தென்படுகின்றன. தலைவன் பின்னால் ஒன்று திரள்கிறார்கள். எடுத்துரைஞர் பாடுகின்றனர்)
எடுத்துரைஞர்கள்
தத்தித்தாம் தெய்யத் தித்தித் தெய்யா தெய்ய
தத்தித்தாம் தெய்யத் தித்தித் தெய்யா தெய்ய
தத்தித்தாம் தெய்யத் தித்தித் தெய்யா தெய்ய
தத்தித்தாம் தெய்யத் தித்தித் தெய்யா தெய்ய
தலைவன் பாடல்
பேத அரக்கரைச் சாய்த்திடவே இங்கு
வீரர் பலர் எழுந்தோமே இன்று
சாதி நிற வர்க்க அரக்கரைச் சாய்த்திட
நீதி வழியில் ஒன்றாயினோம் நாமுமே
மோதி அவரை விரட்டித் துருத்தி
விலங்கொடித்துச் சமுதாயம் காப்பாற்றிட
தொழிலாளி ஒருவன் விருத்தம்
இது நாளும் அறியாத சமுதாய எண்ணத்தை
எங்களுக் கூட்டி விட்ட
மதிப்பான எங்களது தலைவரே ஒரு வார்த்தை
மன்னிக்க வேண்டுமையா
எங்களின் எஜமானன் எங்களுக்குதவுவான்
இது உண்மை உமக்குச் சொன்னேன்
அங்கு அவர் வீட்டுக்குச் சென்று நாம் தெரிவித்தால்
அவர் உதவி கிடைக்குமையா..........
தலைவன் பாடல்
எஜமானன் நமக்குத்தான் எப்படி உதவுவான்
இதனை நீ அறியாயா எனது தோழா
எம்மை நசுக்கியே எழிலாக வாழ்பவர்
எம்குறை தீர்ப்பாரோ
ஒரு தொழிலாளி பாடல்
என்றாலும் ஒருதரம் எஜமானனிடம் சென்று
எம்குறை சொல்வோமே வருவீர்கள்
நன்றாகச் சொல்கிறேன் நம்பக்கம் நின்றுமே
நல்லது செய்வாரப்பா.
தலைவன் பாடல்
உழைப்பவர்க் கெதிரிகள் உறிஞ்சுபவரே என்ற
உண்மையை உணர்ந்து கொள் நீ எனது தோழா
உறிஞ்சும் கூட்டத்தோடு உடன்பாடு காணுதல்
ஒரு நாளும் நடக்காது.
மறு தொழிலாளி பாடல்
சேர்ந்து வாழ்வதுதான் சிறந்த மனிதப் பண்பிச்
சிறப்பினை அறியாயா எனது தோழா!
சேர்ந்துதான் பார்ப்போமே சேராவிட்டால் உந்தன்
சிந்தனைப்படி நாம் சொல்லுவோம்.
தலைவன் விருத்தம்
என்னரும் தோழர்களே! இனி எங்கள் விழிப்புக்கு
இடையூறாய் எவர் இங்கு வரினும்
அன்னவர் தோல்வி அடைவது நிஜமே
ஆட்சேபம் எனக்கில்லை செல்வோம்.
(போகிறார்கள்)
காட்சி- 6
(மேடையின் வலது மூலையில் ஒளிப்பொட்டின் உள்ளே எடுத்துரைஞர்கள் நின்று பாடுகிறார்கள். பாட்டுக்குத்தக்க ராஜ நடையுடன், மதுப்பட்டியுடனும் தள்ளாடியபடி எஜமான் சபைக்கு வருகிறான்)
எடுத்துரைஞர்
அன்று தொட்டின்று வரை சமுதாயம் கை காலில்
விலங்குதனை மாட்டி வைத்து
தங்களுடைய பொருள் பண்டம் தம்மையே பெருக்கி வாழ்
தனியுடைமைக் கூட்டத்தாரின்
தொன்று தொட்டே வந்த சுகமான வாரிசிவர்
தோற்றத்தைச் சிறிது பாரீர்
நன்று ! இவர் பெருமைதனை நாவால் உரைத்திடுவர்
நாங்கள் இதை இருந்து பார்ப்போம்
(எஜமான் தள்ளாடியபடி ஒரு தடவை சபையை அலட்சியமாகப் பார்த்தபடி கையிலிருக்கும் சாராயப் போத்தலைக் கவிழ்த்து மட மட என்று வாய்க்குள் வார்த்த பின்னர் பாடுகிறார்.)
எஜமான் விருத்தம்
சிறந்த நற் சாராயந்தான்
தினம் தினம் போட்டுக்கொண்டு
நிறைந்ததோர் பணத்தையெல்லாம்
நிதம் நிதம் தேடி வைத்துப்
புவியினில் பேர் தானோங்கப்
புகழோடு வாழுகின்ற
நனிமிகச் சிறந்த எஜமான்
நான் இதோ சபைக்கு வந்தேன்.
எடுத்துரைஞர் தாளக்கட்டு
தா, தெய்ய தெய் தெய்ய
தா தெய்யத் தோம் தகதிக
தா தெய்யா தெய் தெய்ய
தா செய்யத்தோம் தகதிக
எஜமான் பாட்டு
வந்தான் பாரீர் எஜமானன் வாறான் பாரீர்
வந்தான் எஜமானன் வண்டி தடவிக்கொண்டு
சிந்தை மகிழ்ந்திட மண்டை இறங்கிட
பணம் மிகப் படைத்தோன் உலகில் இணையாவார் எவரோ?
நானே கடவுளடா, நாய்கள் அடிமைகள்தான்
தானே தனிமுதல்வன் சபையிலிதோ வந்தோம்.
(மேடையில் எஜமான் போதையுடன் நிற்கிறான். மக்கள் பாடிக் கொண்டு வருகிறார்கள்)
உழவன் பாட்டு
ஐயா நமஸ்காரம் எங்களுடைய
ஆண்டவா நமஸ்காரம்
மெய்யனே உம்முதவி எங்களுக்கு
வேண்டுமய்யா வேண்டும்.
எஜமான் பாட்டு
என்ன உதவியடா வேண்டும் உமக்கு
எடுத்துச் சொல்வீர் எம்முன்னே
தின்னச் சோறா சிலையா அடிமைகளே
செப்பிடுவீர் கெதியில்
கொல்லன் பாட்டு
எமது சமுதாயத்தைப் பேத அரக்கர்
இழுத்துக் கொண்டோடுகிறார்
விடுதலை தரவேண்டும் சமுதாயத்தின்
விலங்கொடித்திட வேண்டும்
எஜமானன் பாட்டு
சமுதாயம் போனாலென்ன சாதி சனங்கள்
தானாய்ப் பிரிந்தாலென்ன
அமைவாக வேலை செய்வீர் அடிமைகளே
அதைப்பற்றி ஏன் கவலை?
எஜமானன் விருத்தம்
சாதி நிற இன வர்க்க அரக்கர் தாம் சமூகத்தை
தான் கொண்டு சென்றாலென்ன
நீதான் போய் என்ன நீசர்காள் அடிமைகாள்
நீங்கள் ஏன் பதறுகின்றீர்
ஓடுவீர் உம்வேலை செய்யுங்கள் சமூகத்தில்
உங்களுக்கேன் அக்கறை
மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன் செல்லுங்கள்
வேலையைப் பார்க்கப் போங்கள்.
(தலைவன் அர்த்தபுஷ்டியோடு தன் தோழர்களைப் பார்கிறான். அனைவரும் மெதுவாகத் தலை அசைக்கின்றனர்)
தலைவன் விருத்தம்
சாதி நிற வர்க்க இன அரக்கரின் விலங்குதனைத்
தான் ஓடித்தெறிந்து இங்கே
நீதியை நிலைநாட்ட எஜமான் வரமாட்டான்
நீங்கள் இதை அறிந்து கொள்வீர்
உழைக்கின்ற கரம் உண்டு உரம் பெற்ற நெஞ்சுண்டு
உருக்கான கொள்கையுண்டு
அழைக்கின்றேன் மக்களே வருவீர்கள் நாமேதான்
அறுப்போமே அடிமை விலங்கை
(விருத்தம் முடிய அனைவரும் கை முஷ்டிகளை மடக்கியபடி அசையா நிலையில் நிற்கிறார்கள். எடுத்துரைஞர்கள் மந்திர உச்சாடனம் செய்வது போல உச்சரிக்கின்றனர். முணுமுணுப்புடன் மந்திர உச்சரிப்பினைத் தெளிவாக ஆரம்பித்து மெதுமெதுவாக வேகம் ஏறிக் கடைசிவரிகள் உச்சஸ்தாயியில் ஒலிக்கின்றன.)
எடுத்துரைஞர்கள் மந்திர உச்சரிப்பு
1. உழைக்கின்ற மக்களே உலகில் இனிமேல்
எவரையும் நம்பவேண்டாம்
2. இழப்பதற் கிங்குமக் கெதுவுமே இல்லை
பெறுவதற் குலகமுண்டு
3. உலகத்தில் வாழும் உழைக்கின்ற மக்களே
ஒற்றுமையாகுவீர்கள்
4. இதுநாள் வரையும் இவ்வுலகில் நீர்பட்ட
துயரத்தின் மீது ஆணை
5. ஏழைகள் உங்கள் பெருமூச்சு மீதாணை
இல்லாமை மீது ஆணை
6. உழைக்கின்ற சுரமுண்டு உரம்பெற்ற நெஞ்சுண்டு
உருக்கான கொள்கையுண்டு.
7. எழுவீர்கள் எழுவீர்கள் தொழிலாளி வர்க்கமே!
எழுவீர்கள் வேகமாக.
(இரண்டு தடவைகள் கடைசி அடிகளை விட்டுவிட்டுச் சொல்லி எழுவீர்கள் வேகமாக என்ற கடைசி வரி இரண்டு தடவை உச்சஸ்தாயியில் அழுத்தமாக உச்சரிக்கப்படுகின்றது. அசையா நிலையில் நின்ற மக்கள் யாவரும் வேகமாகத் திரும்புகின்றனர்.
'ஹோ' என்ற ஓங்கார சப்தத்துடன் மேடை முழுகக் மாறி மாறி ஓடித் தலைவனின் பின்னால், ஒன்று திரண்டு அணி வகுத்து நிற்கின்றனர். எல்லோர் முகத்திலும் ஆவேசமும் கோபமும் தெரிகிறது. தலைவன் பாடுகிறான்)
தலைவன் பாட்டு
சாதி நிற இன அரக்கரைச் சாய்த்திடுவோம்
சங்காரம் செய்வோம்
சாதி நிற இன அரக்கரைச் சாய்த்திடுவோம்
மோதி அவருடன் அடிமை விலங்கறுப்போம்
வாரீர் வாரீர் வாரீர் எம் தோழர்காள்.
சமுதாயம் தன்னைக் காத்திடவே
சகலரும் எழுவோம்
சமுதாயம் தன்னைக் காத்திடவே
எம் சமுதாயத்தின் விலங்கினை ஒடித்திட
எழுவீர்! எழுவீர்! எழுவீர் எம் தோழர்காள்...
பழையதோர் சிந்தனை செயல்களையே
பாரை விட்டோட்டிடப்
பழையதோர் சிந்தனை செயல்களையே
புதியதோர் உலகினை புவியினில் நாட்டப்
புறப்படு! புறப்படு! புறப்படு தோழனே...
(வேகமாக ஆடிக்கெண்டே செல்கிறார்கள்)
காட்சி 7
(காட்சி ஆரம்பமாகும்போது மேடையின் இடது பக்கமூலையில் உள்ள ஒளிப்பொட்டுள் வழக்கம்போல கவிஞர்கள் நிற்கிறார்கள். மேடையின் நடுவே சமுதாயம் நிற்த நான்கு அரக்கர்களும் வளைத்து நின்று அதனைச் சவுக்காலடிக்கிறார்கள்.
இக்காட்சி நிழலுருவமாகத் தெரிகிறது. எடுத்துரைஞர் அறிமுகம் முடிந்ததும் பிரகாசமான ஒளி அரக்கர் மீது பாய்ச்சப்படுகின்றது.)
எடுத்துரைஞர் விருத்தம்
சாதியொடு வர்க்க நிற இனமென்ற பேதமுடை
அரக்கர்கள் சமுதாயத்தை
வீதியில் நிறுத்தியே சவுக்கெடுத்ததன் மீது
வீசினர் வீசும்போது
ஆவியே உருகியே சமுதாயம் ஐயையோ
அலறியே துடிதுடித்து
மேனியே எனைக்காரும் மக்களே என்றுமே
மேதினியைப் பார்த்தழுதாள்.
(நாலா பக்கமும் அரக்கர்கள் நின்று இடையிடையே அடித்தபடி ஆடுகிறார்கள்)
சமுதாயப்பாட்டு
என்ன செய்வேன் எந்தன் மக்காள்
என் தலைவிதியிதுவோ
முன்னே என்னைப் பிடித்தோர் தாமும்
முட் சவுக்கால் அடிக்கின்றாரே
என்னுடலில் இரத்தம் தன்னை
இவர் உறிஞ்சிக் குடிக்கின்றாரே
என்னைக் காக்கும் கரமே இந்த
இகத்தில் தானும் இலையோ ஐயோ
(அடித்துக்கொண்டிருந்தவர்களுள் வர்க்க அரக்கன் தனியாகப் பிரிந்து நின்று பின் பெரியதொரு கத்தியைக்கையில் ஏந்தி சமுதாயத்தின் முன் வருகிறான். மூன்று அரக்கர்களும் சமுதாயத்தை முழங்காலில் நிறுத்தி தலையைக் கவிர்த்துப் பிடிக்கின்றனர். வர்க்க அரக்கன் அதன் தலையை வெட்டக் கத்தியை ஓங்குகிறான்)
எடுத்துலைஞர் விருத்தம்
சமுதாயம், வர்க்க, நிற இன சாதிபேதச்
சளக்கர்கள் கையிற் பட்டு
தலைகொய்யப்படப் போகும் போதிலே மக்கள் தம்
தனிநிகர் தலைவன் பாய்ந்தான்
(தலைவன் மேடையின்மீது பாய்கிறான் சமுதாயத்தின் கழுத்தை வெட்ட ஓங்கிய வர்க்க அரக்கனின் கத்தியை தொழிலாளர் தலைவனின் நீண்ட பெரிய சுத்தியல் தடுக்கிறது)
உருக்கான கரம் பெற்ற தொழிலாள மக்கள் நாம்
ஒருகோடிப் பேர் எழுந்தார்
தடுக்கவே சமுதாயம் காக்கவே கைகோர்த்துத்
தானெழுந்தோடி வந்தார்
(ஏனைய மக்களும் பின்னால் பாய்ந்து வந்து தலைவனுக்குப் பின்னால் அணிவகுத்து அரக்கதைக் கோபத்துடன் பார்த்தவாறு நிற்கின்றனர்)
தலைவன் விருத்தம்
நிறுத்தடா நிறுத்தடா வர்க்கமெனும் அரக்கனே
நீசனே எம்மை நீபார்
அறுக்கவே அடிமை எனும் விலங்கினை இங்கு நாம்
ஆயிரவர் கூடிவிட்டோம்
பொறுத்திட்டோம் இது நாளும் இனிமேலும் முடியாது
பொங்கி நாம் இங்கு வந்தோம்
நொறுக்குவோம் எலும்பெல்லாம் நம்முடைய கூட்டத்தை.
தொழிலாளர் அனைவரும் பாட்டு
அழித்திடவே வந்தோம் பாரடா
அடடா அரக்கா
ஓழித்திட நாம் திரண்டோம் கேளடா
வர்க்க அரக்கனைவதை செய்ய வந்திட்டோம்
வதைபடுமுனமே கதை கூறாதோடுவீர்.
வர்க்க அரக்கன் விருத்தம்
பொதுமக்கள் நீங்களா போங்கடா கேளுங்கள்
புத்திநான் ஒன்று சொல்லுவேன்
இது என்ன புதினம் நீர் எம்மையே அழித்திட
இயலுமாஓடிப் போங்கள்
உழைக்கின்ற மக்கள்தாம் ஒன்றாகக் கூடியே
உலகத்தின் விவங்கொடித்த
சரித்திரம் எங்காலும் கேட்டதுண்டோ
போ! போ!
அரக்கர் அனைவரும் பாராட்டு
தர்மத்தை நாங்கள் அழிப்போம்
தலைவனே கேள்
கர்மத்தை நாங்கள் முடிப்போம்
எங்களை வென்றிட வந்த எலும்புகளே
உங்களுக்கிறுதி உண்டின்று அறிகுவீர்
சாதி பேத அரக்கர் பாட்டு
சாதி பேதம் என்பவன் நானடா-இங்கு
சரிநிகர் சமம் எனக்காரடா
சாதி பேதம் சமுதாயத்தில் சரியடா
ஓதுகிறேன் இதை ஓடுவீர்! ஓடுவீர்
கொல்வத் தொழிலாளி
சாதியே! உனை இங்கு மாய்த்திட நாங்கள்
சாதி பேதம் இன்றித் திரண்டிட்டோம்
நீதி நிறை உலகை உருவாக்கிட
சாதியே! உன் சிரம் சங்காரம் செய்கிறோம்
(சாதிபேத அரக்கனை மக்கள் கலைக்கின்றனர்)
இனபேத அரக்கன்
இனபேதம் எண்டவன் நானடா-அடா
இங்கெனக் கெதிரியும் யாரடா.
அனைவரும் சமம் இல்லை ஆகவும் முடியாது
அனைவரும் ஓடுங்கள் அடித்து நான் கொல்லுவேன்
உழவன்
இனபேத அரக்கனை மாய்த்திட-இங்கு
எழுந்தோமே உழைக்கின்ற மக்கள் நாம்
இனபேத அரக்கனே இதோ உந்தன் உயிரது
ஏகுது ஏகுது ஏகுது அறிகுவாய்
(இனபேத அரக்கனை மக்கள் கலைக்கின்றனர்)
நிறபேத அரக்கன்
நிறபேதம் என்பவன் நானடா-இங்கு
நிகரெனக் குள்ளவர் யாரடா
நிறவெறி என்றுதான் நிலத்திலே நல்லது
நீசர்கள் அறிந்துமே நிற்காது ஓடுவீர்
மூட்டை து‘க்குவோன் பாட்டு
நிறபேத அரக்கனை மாய்த்திட இங்து
நேரிலே பொதுமக்கள் வந்தோமே
அறுத்திட விலங்கினை அறுப்போம் உனது சிரம்
அறுத்திட்டோம் உன் ஆவி போகுது அறிகுவாய்
(நிறபேத அரக்கனை மக்கள் கலைக்கிறார்கள்)
(வர்க்க அரக்கன் அனைவரையும் பார்த்து உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு "ஹோ... ஹோ" என்று பயங்கரமாகச் சிரிப்புச் சிரித்தபடி கூறுகிறான்)
வர்க்க அரக்கன் விருத்தம்
எவரை நீர் வென்றாலும் எனை வெல்ல முடியாது
இதை நீவில் அறியமாட்டீர்
உமையெல்லாம் பொடியாக்கி ஊதுவன் ஜாக்கிரதை
உயிர் தப்பிப் பிழைத்துப் போங்கள்
இதுவரையும் எனைக்கொல்ல இவ்வுலகில் எத்தனை பேர்
எதிர்த்தார்கள் தெரியுமோடா?
எதிர்த்தவர்கள் அழிந்தார்கள் அழியாத சக்தி நான்
இன்றும்மை நான் அழிப்பேன்.
தலைவன் பாட்டு
வர்க்க விலங்கினை ஒடிக்க நாம் வந்தோம்
அரக்கனே நீ
வாவடா! வெளியே அழிய
இனிமேல் இங்கு
சமுதாய விலங்கினைத் தானொடித் திடுவது
எமது கடமையடா இதனை நீ அறிகுவாய்
பொல்ல வர்க்க இன பேதங்கள் போக்கியே
பூமியை விடுதலை செய்யப் புறப்பட்டோம்
அடிமை விலங்கறுத்து அதை நாம் காப்போம்
துடிக்கும் கரமே துணை நீ அறிவாய்
வர்க்க அரக்கன் பாட்டு
என்ன வார்த்தைகள் இங்கு பேச வந்தீர்
பொது மக்களே
ஏகுவீர் உமை ஏங்க வைத்திடுவேன்
சமுதாயந்தான்
எமது கையிலின்று என்னடா செய்குவீர்
உம்மால் முடியுமோ ஒடிக்கவும் விலங்கினை
வெகு ஜனங்களே நீர் வீரர்போல் வருகிறீர்
அருமை அருமையடா அழிப்பேன் உங்களை
திறமைகள் அறியீரே இன்னும்
சிரமது அறுமுனம் சீக்கிரம் செல்வீர்
(கடுமையான சண்டை நடக்கிறது. பின்னணி வாத்தியங்கள் உச்சஸ்தாயியில் ஒலிக்கின்றன. வர்க்க அரக்கனை எல்லா மக்களும் சூழ்ந்து நின்று தாக்குகின்றார்கள். இறுதியில் வர்க்க அரக்கன் கீழே விழுகிறான். மக்கள் சந்தோஷ ஆரவாரம் செய்கிறார்கள்)
எடுத்துரைஞன் விருத்தம்
வர்க்கமென வரலாற்றில் தகாததோர் பேர்பெற்ற
வலிமை மிக உடையரக்கன்
அக்கணம் மக்களினம் தாக்கவே துடிதுடித்துயிர்போக
வீழ்ந்து மாண்டான்
ஓடியே அடிமை எனும் விலங்கறுத்திட வந்த
உழைப்பாளர் கூட்டமெல்லாம்
நாடியே சமுதாயம் கைகால் விலங்கினை
நறுக்கென்று அறுத்து நிற்பார்.
(தொழிலாளர் சமுதாயத்தைச் சூழ்ந்து நின்று தம் கை ஆயுதங்களினால் அதன் கையிலுள்ள விலங்கினைத் தகர்க்கிறார்கள். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. அனைவரையும் சுற்றி வந்து தலைவன் பாடுகிறான்)
தலைவன் பாட்டு
அடிமை விலங்கறுப்போம் - சமுதாயத்தின்
அடிமை விலங்கறுப்போம்
சாதி மதபேதச் சமமின்மை தகர்ப்போமே
ஓதுவோம் இது மக்கள் உலகென்று நாமுமே
புதிய உலகமடா- எமது கையில்
புதிய உலகமடா
பொன் கொழித்திடச் செய்வோம் புதுவாழ்வு காணுவோம்
எம் சமுதாயம் இனி இங்கு பாரடா
சமுதாயமே வருக- எங்களின் பின்னே
சரியாய் வழி நடத்துவோம்
எழிலாக வாழுவாய் இது உண்மை அறிகுவாய்
இனி உலகெம் கையில் எஜமானர் நாங்களே
(சமுதாயத்தைத் தம்பின்னால் அழைத்துக்கொண்டு உழைக்கும்மக்கள் தலைமை ஊர்வலமாகச் செல்கிறார்கள். மேடை மீது வெளிச்சம் குறைந்து நிழலுருவங்களாக அவர்கள் துரத்திச் செல்வது தெரிகிறது. அவர்கள் செல்லும்போது எடுத்துரைஞன் பாடுகிறான்)
எடுத்துரைஞன்
உழைப்பவர்கள் வெற்றி பெற்றார்
உலகம் அவர் பக்கம் இன்று
ஒன்றானார் ஒன்றானார் உலகத்தை வென்றார்
இழப்பதற்கு ஏதுமற்ற ஏழைகளின் கூட்டம் இன்று
பெற்றதடா பெற்றதடா பேதமற்ற நல்லுலகம்
உழைப்பவன் தலைமை தாங்க
ஓடுதே சமூகம் பின்னால்
அதர்மம் அழிந்தது அநீதி ஒழிந்தது
தர்மம் தழைத்தது. சமாதானம் வென்றது
சமாதானம் வென்றது.
முற்றும்